Wednesday, March 24, 2010


டென்மார்க்கிலிருந்து வெளிவந்துள்ள இனி சஞ்சிகை
-அலைகள் விமர்சனக்குழு-

வெகு தூரம் சறுகலான பாதையில் போய்விட்ட புலம் பெயர் சமூகத்தை மறித்து ஞாபங்களை பரிமாறும் ஒரு சஞ்சிகை. வேண்டிப் படியுங்கள்

புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் மிகவும் சிரமமான பணிகள் இரண்டு ஒன்று பத்திரிகை நடாத்துவது அடுத்தது மாதாந்த சஞ்சிகைகள் நடாத்துவது. இவைகளை நடாத்தினாலும் வாசகர்களை படிக்க வைப்பது அதைவிட பெரும் கடினமான காரியம். திருப்பத் திருப்ப முதலாவது படியிலேயே ஏறுவதும் குதிப்பதுமாக இருக்க வேண்டும், இரண்டாவது படிக்கு போவது இயலாத காரியம். பல ஊடகங்கள் இரண்டாவது படிக்குப் போக பயந்து கடந்த கால் நூற்றாண்டுகளாக ஆனா, ஆவன்னா பாடம் படிப்பித்துக் கொண்டிருக்கின்றன. இந்த யதார்த்த நிலையில் காத்திரமாக எதையோ செய்ய வேண்டுமென்ற ஆவல்களும் சிலரிடம் இருந்துவருதையும் மறுக்க முடியாது. அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக வெளிவந்திருப்பது இனி என்ற இதழாகும். தமிழர்கள் இனியாவது ஆனா ஆவன்னா பாடத்தை விட்டு இனா ஈயன்னாவிற்குள் போக வேண்டுமென்பது இந்தச் சஞ்சிகையின் விருப்பமாக இருக்கிறது.

டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்துவரும் இலக்கியகர்த்தாவும் கவிஞருமான ரீ. சத்தியதாஸ் மற்றும் கேர்னிங் நகரில் வாழ்ந்துவரும் மார்க்சிய சிந்தனையாளர் எம்.எஸ். கந்தசாமி ஆகிய இருவரையும் ஆசிரியராகக் கொண்டு, ஒவியர் அமிர்தலிங்கத்தின் அட்டைப்படத்துடன் டேனிஸ், தமிழ் சமூக கலாச்சார இதழாக இது வெளி வந்துள்ளது. இந் நூலில் எஸ்.கோத்தாரி, கலையரசன், வி.ரி.இளங்கோவன், எஸ்.சந்திரபோஸ், சி.சிவசேகரம், சி.கா.செந்திவேல் , அரவிந்தன் சரவணன், கரவைதாசன், ஆதவன் தீட்சண்யா ஆகியோர் எழுதியுள்ளனர்.


நூலில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய விடயமாக ஈழத்தின் பிரபல எழுத்தாளர் கே.டானியலின் வாழ்க்கை, கருத்தியல்கள் பற்றிய விடயங்கள் அதிகம் பேசப்பட்டுள்ளன. கே. டானியலை தமிழகத்தில் பேசப்படுவதுபோல ஒரு தலித்தியவாதி என்ற கூட்டுக்குள் அடைத்துவிட முடியாது. அவர் மார்க்சிய சோசலிச சிந்தனைகளின் வழி சமுதாயத்தை நடாத்த முயன்ற போராளி என்று வாதிடுகிறது. இந்தியாவிற்குள் தலித்தியம் கண்டுள்ள சறுகல்களுக்குள் கே.டானியலும் அடிபட்டுப் போய்விடாதிருக்கும் வகையாக அவர் வாழ்வின் நிதர்சனங்களை பேசுகிறது. எனக்கு ஓர் அரசியல் பாதை உண்டு அதற்கு உந்துதலாகவே எனது படைப்புக்களை தருகிறேன் என்ற டானியலின் கருத்து, அவர் பொதுவுடைமைக்கட்சியூடாகவே பயணித்தவர் என்று வாதிட உதவியாக உள்ளது. கே. டானியலின் பஞ்சமர்கள் தொடர்பான நாவல்களில் அவர் வைத்த கருத்துக்களும் நூலில் மறுவாசிப்பிற்குள்ளாகிறது.

எவ்வாறாயினும் யாழ்ப்பாண சமுதாய ஒடுக்கு முறைகளுக்குள்ளால் நின்று கே.டானியலின் படைப்புக்களை வாசித்தால் ஏற்படும் கோபத்தையும், போர்க்குணத்தையும் தாங்கும் பலமுள்ள சித்தாந்த அமைப்பென எதுவும் இருக்குமா என்பது மனதை வாட்டும் முக்கிய கேள்வி. பஞ்சமர்களில் அவர் சுட்டிக்காட்டும் கொடுமைகளை இடி தாங்கி போலத் தாங்கினால் மார்க்சியம், பொதுவுடமை, ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் உட்பட அனைத்துக் கட்டமைப்புக்களுமே தவிடுபொடியாகும் என்பதே நிதர்சனமாகும். சாதியம் எந்தக் கட்டமைப்புக்குள்ளும் அடங்காத நாசகார செயல் என்ற எண்ணத்தையே நூல் ஏற்படுத்துகிறது.

இதே நூலில் 2001 ம் ஆண்டு ஆபிரிக்காவின் டர்பன் நகரில் கூடப்பட்ட இனவெறிக்கு எதிரான உச்சி மாநாடு பற்றிய செய்திகளை கலையரசன் எழுதியுள்ளார். இந்த மாநாடானது பங்கேற்ற 166 நாடுகளில் இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளையும் எதிரணிக்கு தள்ளியது என்று குறிப்பிடுகிறார். நிறவெறியில் வளர்ந்த அமெரிக்கா, இன, மத வெறியில் வளர்ந்த இஸ்ரேல், சாதி வெறியில் வளர்ந்த இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் பெரும் சங்கடத்தை சந்தித்தன. எல்லோரும்தான் கொலை செய்கிறார்கள். கொலை செய்தவன் எதிரியா நண்பனா என்பதைப் பொறுத்தே நீதி வழங்கப்படுகிறது என்ற தகவலை இக்கட்டுரை பதிவு செய்கிறது.


தீண்டாமை மனித உரிமையை மீறவும், வன்முறையை தூண்டவும் வழி செய்கிறது. மனித குலத்திற்கு விரேதமானது சாதிப்பாகுபாடு, இவற்றைத் தடுக்க போராடினால் அவர்கள் மீது கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் ஏவப்படும் என்று மாநாட்டு தீர்மானம் வரையறை செய்ததை சுட்டிக் காட்டுகிறது. இன்று புலம் பெயர் சமுதாயத்தில் வெள்ளைக்காரியை மண முடித்தால் ஏற்கும் சாதியம், அதேபோல தாழ்ந்த சமுதாயத்தில் உள்ள தன் தமிழ் இனத்தை ஏற்க மறுக்கிறது. கொழும்பில் உள்ள சிங்களத்தியை மணமுடித்தபோது மகிழ்ந்த யாழ்ப்பாண சாதியம், அதே நபர் சிங்களத்தி இறக்க ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை காதலித்தமைக்காக சாவுக்கும் வேண்டாமென தலைமுழுகி முருங்கையிலை கஞ்சி காய்ச்சியதாகக் கூறும் கே.டானியலின் கதையையும் சுட்டிக் காட்டுகிறது. சாதியத்திற்கு எதிரான போராட்டம் தொடர வேண்டிய போராட்டமென இன்னொரு கட்டுரையில் கலாநிதி. சி. சிவசேகரம் வாதிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சி.கா. செந்திவேலின் 1966 ஒக்டோபர் 21 எழுச்சியின் வரலாற்று முக்கியம் என்ற மறு பதிவு இடம் பெறுகிறது. இதில் கே.டானியல் மற்றும் எஸ்.ரி.என் நாகரத்தினம் போன்றோரின் பங்களிப்பும் சுட்டிக்காட்டப்படுகிறது. இவைதவிர இராணுவத்தை கொண்டாடும் தேசம் என்ற வடக்கின் இன்றைய நிலைகள், மார்க்ச் பிராய்ட் இருவருடைய சிந்தனை வேறுபாடுகள், கவிதைகள், டேனிஸ் பொதுவுடமைவாதிகள் பற்றிய தகவல்களும் நூலில் விரவியுள்ளன.

புதுமாத்தளனுக்குப் பின்னர் புலம் பெயர் தமிழினம் போகும் சறுகல் பாதையில் இந்தச் சஞ்சிகை அவர்களுக்கு சில உண்மைகளை எடுத்துரைக்கத் துடிக்கிறது. ஆனால் வரலாற்றை மறந்து வெகு தொலைவில் போய்விட்ட புலம் பெயர் தமிழினம் இதை எவ்வாறு புரியப்போகிறது என்பது முக்கிய கேள்வியாகும். ஓநாய்களின் கூட்டத்தில் வாழ்ந்த சிங்கமொன்று தனது முகத்தைக் காணும்வரை ஓநாய்போலவே ஊளையிட்டு திரிந்ததென ஒரு கதை உண்டு. என்றாவது அது தனது முகத்தை குளத்தில் பார்க்கும் பிடரி சிலிர்த்து எழும்பும் என்ற தளராத எண்ணத்துடன் இதன் ஆசிரியர் குழுவினர் பாடுபட்டுள்ளனர்.

வாசிப்புக்கலை அருகிவரும் சூழலில் இளையோரை சென்றடையுமாறு இதன் தயாரிப்புக்கள் செதுக்கப்பட வேண்டும். அழகு, பணம், அதிகாரம் ஆகிய மூன்றுக்கும் சாதியம் என்ற பேய் தலை வணங்குவதையும், கூனிக்குறுகி சமரசம் காண்பதையும், தலித்தியம் பிழைப்புவாதமாகப் போனது ஏன் என்பதையும் பிரித்தறிந்து மேலும் புதிய கோணத்தில் எடுத்துரைக்க வேண்டும். அதேவேளை கே.டானியல் போன்றோரின் நினைவுகளுக்கு அப்பால் இதற்கான நவீன வேலைத்திட்டம், அதன் வரைபு போன்றவற்றை உருவாக்கும் ஆய்வுகளையும் வரும் இதழ்களில் சேர்ப்பது அவசியம். இனி என்ற சஞ்சிகை நல்லதோர் முயற்சி.. பணி தொடர வேண்டும்.

நன்றி: அலைகள்


No comments: