Thursday, March 11, 2010

கொள்ளையிட்டுஅரசாங்கம் நடத்தும் நாடு (கலந்துரையாடல்)

("வாழ்க்கைப்பயணம்" வலைப்பூ ஆசிரியருடனான அரசியல் கலந்துரையாடல். விக்னேஷ்வரனும், நண்பர்களும் தொடுத்த வினாக் கனிகளும், அவற்றிற்கான கலையகம் கலையரசனின் பதில்களும்.)


1) சமீபத்திய உலக அரசியல் மக்கள் மத்தியில் மிகப் பெரும் மன உளைச்சளை ஏற்படுத்தி இருக்கிறதென்பதை மறுக்க இயலாது. புரிந்தும் புரியாமலும் கூட மக்கள் அதில் உழன்று போய் இருப்பதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

எத்தகைய மக்கள் என்பது இங்கே பார்க்கப்பட வேண்டும். மக்கள் எல்லோரும் ஒன்றல்ல. பல வகையினர். அவர்களது அரசியல் சார்புத்தன்மையும் வேறுபடுகின்றது. உலக அரசியலில் சாதகமான பக்கத்திலும்,
பாதகமான பக்கத்தில் மக்கள் பிரிந்து வாழ்கின்றனர். பாதிக்கப்படும் தரப்பை சேர்ந்த மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவது இயற்கை. அதற்கு அவர்களது எதிர்பார்ப்புகள் கைகூடி வராமையும் ஒரு காரணம். குறிப்பாக பனிப்போரின் முடிவில் இருந்து புதிய சகாப்தம் ஆரம்பமாகியது. எதிர்க்க ஆளில்லாத ஒரேயொரு வல்லரசாக அமெரிக்கா அறிவிக்கப்பட்ட போது, பலர் அதை தேவதூதனின் நற்செய்தியாக புரிந்து கொண்டார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் சாமானிய மக்களின் கருத்தியலை தீர்மானிப்பது, அந்நாட்டின் படித்த மத்தியதர வர்க்கம். அவர்களது வர்க்க அடிப்படையில் இருந்து கணித்து, அமெரிக்கா பல அற்புதங்களை நிகழ்த்த வல்லது என தீர்மானித்தார்கள். ஆனால் அமெரிக்கா தனது சுயநலன் சார்ந்து மட்டுமே சிந்திக்கின்றது என காலந்தாழ்த்தி புரிந்து கொண்டார்கள். மக்கள் அதில் உழல்வது மக்களின் தவறல்ல. அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஆளும் வர்க்கம் சர்வதேச மூலதனத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டே செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம்.

2) குறிப்பிட்ட மதத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரசியல், குறிப்பிட்ட இனத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரசியல் என இவ்விரண்டிற்கும் உள்ள பாகுபாடுகளை பற்றிய உங்கள் பார்வை?

இரண்டுமே மக்களின் குழுவாத உணர்வுகளை தட்டி எழுப்பி அரசியல் ஆதாயம் தேடுகின்றன. பாகுபாடுகள் எனப் பார்க்கும் போது, மதம் என்பது உலகளாவிய நிறுவனமயப்பட்ட சித்தாந்தம். இனம் என்பது குறிப்பிட்ட பிரதேசத்திற்குரிய பண்டைய இனக் குழும சமுதாயத்தின் தொடர்ச்சி. இந்த அடிப்படையில் இருந்தே அவர்கள் முன்னெடுக்கும் அரசியலும் வேறுபடுகின்றது. நவீன உலகில், தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி காரணமாக, "மத சர்வதேசியம்", "இன சர்வதேசியம்" என்று பரணாம வளர்ச்சியை கண்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட பிரதேசத்தில் எந்த மதத்தை சேர்ந்தவர்கள், அல்லது எந்த இனத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதைப் பொறுத்து, இத்தகைய அரசியல் இயக்கங்கள் எழுச்சியுறுகின்றன. இன அரசியல் பேசுவோருக்கு தமது இன அடையாளம் முக்கியம். மதம் இரண்டாம் பட்சம் தான். அதே போல, மத அரசியலில் மத அடையாளம் அனைத்தையும் மேவிநிற்கிறது. ஏற்கனவே வழிபாட்டுத் ஸ்தலங்கள் மக்களை நிறுவனமயப்படுத்தி வைத்துள்ளமை, மத அரசியலுக்கு சாதகமானது. இன அரசியல் அதற்கு மாறாக வழமையான அரசியல் செயல்பாடுகள், ஊடகங்கள் மூலம் மக்களை அணிதிரட்ட வேண்டியுள்ளது.

3) ஜனநாயகத்தைப் போற்றி புகழ்ந்து மார்தட்டிக் கொள்ளும் நிலைபாடுகள் பற்றி?

ஜனநாயகம் என்பதன் அர்த்தம் மக்கள் ஆட்சி என்பதாகும். அதாவது மக்கள் அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக பங்கெடுப்பது. வாக்குப் போடுவது ஏன் என்று தெரியாத வாக்காளர் இருப்பதற்குப் பெயர் ஜனநாயகமல்ல. மன்னர் காலத்தில், மக்களிடம் எந்த அதிகாரமும் இருக்கவில்லை. கடவுளுக்கு கட்டுப்படுவதைப் போல, மக்கள் மன்னனின அதிகாரத்தை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார்கள். பிற்காலத்தில் மன்னனை அகற்றி விட்டு, மக்களின் பெயரால் குடியரசு முறை வந்தது. இருப்பினும் ஜனநாயகம் என்பது தேர்தலில் கட்சிக்கு வாக்குப் போடும் முறை என்பதோடு மட்டுப்படுத்தப்பட்டது. இது பிரதிநிதித்துவ ஜனநாயகம். அதாவது ஒரு பிரதிநிதி (அல்லது கட்சி) மக்களின் குறையை அதிகார தளத்தில் பேசித் தீர்க்க முனைவார். அது சரி, ஆசிய நாடுகளில் ஏன் ஜனநாயகம் சரியாக செயல்படுவதில்லை? அதற்கு காரணம், ஆசிய நாடுகளின் மக்கள் இன்னமும் சாதி, இன, மத, தனிநபர் வழிபாடு போன்ற குழுவாத சிந்தனையில் இருந்து விடுபடவில்லை. அரசியல் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த வேறுபாடுகளை மேலும் விரிவுபடுத்தவே பார்க்கின்றனர். இதனால் ஆதாயம் பெற்றவர்கள் ஜனநாயகத்தை போற்றிப் புகழத் தானே செய்வார்கள்? இங்கே எந்த அரசியல் அலகு யாருக்கு நன்மை பயக்கின்றது எனப் பார்ப்பது அவசியம். ஈராக்கில் சதாம் காலத்தில் ஆதாயம் பெற்றவர்கள், இப்போதும் சதாமின் சர்வாதிகாரத்தை போற்றுகின்றனர்.

4) பழுதடைந்த ஜனநாயகத்திற்கு முன்னுதாரணமாக நீங்கள் எடுத்துரைக்க விரும்புவது?

இதற்குப் பதில் முந்திய கேள்வியிலேயே வந்து விட்டது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் நிலவுவது ஜனநாயகமல்ல. நவீனமயப்பட்ட இனக்குழுவாதம். இந்த நாடுகள் சமுதாய மாற்றத்தின் ஊடாக தாமே ஜனநாயகத்தை கண்டறிந்திருக்க வேண்டும். மாறாக அவசர அவசரமாக காலானியாதிக்கவாதிகளால் திணிக்கப்பட்டது. அதற்கு காரணம் அன்று மேற்கத்திய பாணி நிர்வாகத்தை ஏற்றுமதி செய்வதையே முக்கியமாக கருதினார்கள். அவர்கள் இப்போதும் "ஜனநாயக வளர்ச்சியடையாத " நாடுகள் ஆட்சி நடத்துவது எப்படி என்று இப்போதும் ஆலோசகர்களை அனுப்பி கற்றுக் கொடுக்கிறார்கள். அல்லாவிட்டால் நாமே அவர்களது பல்கலைக்கழகங்களுக்கு சென்று கற்றுக் கொண்டு வருகிறோம். இதை நான் பழுதடைந்த ஜனநாயகம் என அழைக்க விரும்பவில்லை. ஜனநாயகம் அதன் ஆரம்பக்கட்டத்தில் சிறுபிள்ளைக் கோளாறுகளுடன் உள்ளது.

5) மார்க்ஸிசம் மற்றும் சோஷலிசம் பற்றிய இன்றய மக்களின் புரிதல்கள் பிசகிக் கிடக்கின்றன. போர் புரிவதிலும், எதிர் தீர்மானங்களின் வழியிலும் மட்டுமே தீர்வுக்கு வழி நாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களே போற்றிப் புகழப் படுகிறார்கள். இம்மாற்றத்தின் காரணம் எதனால் வந்திருக்கக்கூடும்?

மக்களின் புரிதல்கள் எப்போதும் பிசகித் தான் கிடக்கின்றன. அதற்குக் காரணம் சாதி, இனம், மதம் போன்ற உணர்வுகளைக் கொண்டு அரசியல் நடத்தும் ஆதிக்கவாதிகள், அல்லது ஊடகங்களை கையில் வைத்திருக்கும் முதலாளிகள். மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் தங்களது இருப்பிற்கு ஆபத்து என கருதுகிறார்கள். போர் என்பது வன்முறை கொண்டு சாதிக்க நினைக்கும் அரசியல். பேசித் தீர்க்க முடியாத விஷயத்தை போராடித் தீர்க்கும் போது புகழப்படுவது இயற்கை. இருப்பினும் யாரின் நலன்களுக்காக யுத்தம் நடத்தப்படுகின்றது? போரினால் நன்மையடைபவர்கள் யார்? போர் நடப்பதால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்கள் போற்ற மாட்டார்கள். மறுபக்கம் போரினால் லாபமடைந்தவர்கள் நிறையைப் பேர். பணவருவாயை ஈட்டித் தருவதால் அவர்கள் போரை தொடர்ந்து நடத்த விரும்பலாம்.

6) போர் நிறுத்தம் வேண்டி குளிரூட்டியின் பக்கத்தில் கண்ணாடியை மாட்டிக் கொண்டு படுத்துக் கிடந்தவரை இன்னமும் மக்கள் நம்பிக் கொண்டிருக்க செய்கிறார்களே. இது ஒரு தனிமனிதனின் 'ஜனநாயக' வீரியத்தை குறிக்கிறதா?

இல்லை, வாக்காளருக்கு வேறு தெரிவுகள் கிட்டவில்லை என்பதைக் காட்டுகின்றது. காலங்காலமாக பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் நான் முன்பு குறிப்பிட்டது போல, இந்திய ஜனநாயகத்தில் தனிநபர் வழிபாடு, சாதியம், இனவாதம், மூலதனம் இவற்றின் செல்வாக்கு அதிகம்.

7) அல்கயிதா பற்றிய உங்களின் பார்வை வாசகர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. அல்கயிதா சம்பந்தமாக எல்லோரும் அறியப்பட்ட எழுதாளர் ஒருவர் எழுதிய புத்தகத்தோடு அது முற்றிலும் முரணாக இருந்தது. புத்தகச் சந்தையில் பேசப்பட்ட அந்த புத்தகத்தை பலரும் விரும்பி இருக்கிறார்கள். மக்கள் அவர்களுக்கு தோதாகவே அரசியல் பார்வையை விரும்புகிறார்கள் என இதை சொல்ல முடியுமா?

ஆவிகள் இருக்கின்றன என்று நம்புகிறவர்கள் இருப்பதால் தான் ஆவிகளின் அட்டகாசம் பற்றிய நூல்களும் சந்தையில் விற்பனையாகின்றன. அல்கைதா இல்லை. ஆனால் இருக்கென்று நம்புகிறவர்கள் அதிகம். இதனால் தான் எனது கட்டுரை ஒன்றிற்கு "அல்கைதா என்ற ஆவி" என்று தலைப்பிட்டேன். ஏற்கனவே ஊடகங்கள் செய்தியாக வழங்கிய அல்கைதா பற்றிய கதைகளை தொகுத்து எழுத்தாளர்கள் புத்தகமாக வெளியிடுகின்றனர். மக்களால் பரபரப்பாக பேசப்படும் விஷயத்தை புத்தகமாக்கி சந்தைக்கு கொண்டுவர நினைக்கும் அளவிற்கு, தகவல்களின் உண்மைத் தன்மை அலசப்படுவதில்லை. அல்லது அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லைப் போல தெரிகின்றது.

8) உலக அமைதிக்காக போராடுகிறோம் என சொல்லிக் கொள்ளும் இயக்கங்கள் பற்றிய உங்கள் பார்வை என்ன?

உலகம் அணுவாயுதப் போரின் விளிம்பில் இருந்த காலத்தில் சமாதான இயக்கம் தோன்றியது. மதம் போதிக்கும் அனைத்து ஜீவராசிகளுடனும் அன்பு காட்டும் தத்துவம், உலக அமைதிக்கான அரசியல் இயக்கமாக பரிணமித்துள்ளது. போர் வேண்டாம், அனைத்துப் பிரச்சினையையும் அன்பு காட்டுவதன் மூலம் தீர்க்கலாம் என்பது ஒரு உயரிய நோக்கம் தான். ஆயினும் உழைப்புச் சுரண்டலால் உருவாக்கப்பட்ட உலகில் தோன்றும் முரண்பாடுகளை இவர்கள் பார்ப்பதில்லை. மதங்களை, இனங்களை பிரித்து வைப்பதால் ஆதாயமடையும் நபர்கள், எந்தவொரு அமைதி இயக்கத்தையும் எதிரிகளாகவே பார்ப்பார்கள்.

9) வினவு பக்கத்தில் நீங்கள் எழுதுவது குறித்து நீங்கள் இன்ன சாரரை சேர்ந்தவர் என முத்திரையிடப்பட்டு எதிர்வினைகளை சந்திக்க நேர்ந்ததா?

சில நேரம் இருக்கலாம். எதிர்வினைகளை எதிர்பார்த்து அல்லது எதிர்பார்க்காமல் கட்டுரை எழுத முடியாது. நான் வினவில் மட்டும் எழுதவில்லை. உயிர்நிழல், உன்னதம் போன்ற சிற்றிதழ்களிலும் எழுதி வருகிறேன். வேறு சில இணையத்தளங்களும், சிற்றிதழ்களும் எனது கட்டுரைகளை பிரசுரித்துள்ளன. இவையெல்லாம் அரசியல் தளத்தில் ஒன்றுக்கொன்று முரணானவை. அந்தந்த அரசியல் பின்னணியை கொண்டவர்களுக்கு, அது சம்பந்தமான கட்டுரை பிடிக்கின்றது. அதே நேரம் அவர்களின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் போது விரும்பமாட்டார்கள். "இன்னொரு அ.மார்க்ஸ் உருவாகிறார்." "தாலிபான் ஆதரவாளர்" என்றெல்லாம் கூட முத்திரை குத்தினார்கள்.

10) எல்லோரையும் எல்லோராலும் திருப்தி அடையச் செய்து விட முடியாது. சில விடயங்களை பேசும் போது நியாயம் அற்ற பெரும்பான்மை கருத்தைக் கொண்டிருப்போர், நியாயம் உள்ள சிறுபான்மையினரை சிறுமைபடுத்தவும், சமுதாய துரோகி எனவும் அடையாளப் படுத்திவிடுகிறார்கள். இது ஊடகங்களின் போக்கினால் எற்பட்ட ஒன்றா?

நான் அப்படி கருதவில்லை. இது மனிதனின் கூடப்பிறந்த குணம். ஒவ்வொருவரும் தங்களது கருத்தை நியாயம் என்று தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட அரசியல் கருத்துகளை கொண்டவர்கள் ஒன்று சேரும் போது, எதிர்க்கருத்து கூறுபவர்களை துரோகி என்று ஒதுக்குகின்றனர். அவர்கள் தங்களது குழுவை மட்டுமே முழு சமுதாயமாக கற்பிதம் செய்து கொள்கின்றனர். யாருடைய கை ஓங்குகிறதோ, சமுதாயத்தில் யார் பலமாக இருக்கின்றனரோ, அவர்களின் கருத்து பொதுக் கருத்தாக மாறி விடுகின்றது. ஊடகம் என்பது யாரின் கையில் இருக்கிறதோ அவரின் ஊதுகுழலாக மாறிவிடுவதைப் பார்க்கலாம்.

11) இன்றைய நிலையில் இணைய தளம் மாற்று ஊடகமாக அமைந்திருக்கிறதென்பதை மறுக்க இயலாது. இதன் வீச்சு மக்களின் அரசியல் சிந்தனைக்கும் மாற்றங்களுக்கும் தகுந்த ஒன்றுதானா?

பெரும்பான்மை மக்கள் தகவல் அறிவதற்காக இன்றும் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளையே நம்பி இருக்கின்றனர். இணையத்தளத்தை ஊடகமாக பாவிப்பது ஓரளவு படித்த மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். வேறோருவிதமாக சொன்னால், மத்தியதர வர்க்கத்தின் எண்ணவோட்டத்தை இணையம் பிரதிபலிக்கின்றது. இவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் மிகக் குறைவு. 5% இருந்தாலே அபூர்வம். இணையத்தில் பலரது வரவேற்பை பெற்று அமர்க்களமாக முன்வைக்கப்படும் எதிர்வுகூறல்கள் பின்னர் பொய்த்துப் போவதை அனுபவத்தில் கண்டு கொள்ளலாம். இவர்களது இணைய உலகம், பெரும்பான்மை மக்களின் நிஜ உலகில் இருந்து அந்நியப்பட்டிருப்பதே இதற்கு காரணம். சனத்தொகையில் முக்கால்வாசிப்பேர் இணையத்தை பயன்படுத்தும் மேலை நாடுகளில் அது ஓரளவு மாற்றத்தை கொண்டு வரலாம். இருப்பினும் அங்கேயும் ஏற்கனவே அறிமுகமான வெகுஜன ஊடக கலாச்சாரம் ஆட்டிப்படைக்கின்றது. நாம் நேரில் காணும் சமுதாயத்தின் கண்ணாடியாகத் தான் இணையமும் அமைந்துள்ளது.

12) ஒஸ்திரியோடொவிஸ்க்கிய் போன்ற நாவல்கள் புரட்சிகளைப் பற்றிய பார்வையை மக்களிடம் எடுத்துரைக்க பங்காற்றியவற்றுள் ஒன்று. தற்சமயம் அது அவ்வளவாக பேசப்படும் ஒன்றல்லாமல் போய்விட்டது. அது ஏன்?

ஒரு காலம் இருந்தது. சோவியத் ஒன்றியம் என்ற வல்லரசின் செல்வாக்கு காரணமாக பல்வேறு மூன்றாம் உலக நாடுகளிலும் சோஷலிசக் கருத்துகள் பரவியிருந்தன. பல நாடுகளில் வெகுஜன அரசியல்வாதிகள் சோஷலிசம் பேசினார்கள். உதாரணத்திற்கு, இந்தியாவில் நேரு. அந்தக்காலங்களில் சோவியத் தனது நட்புனாடுகளில் புரட்சிகர நாவல்களை பரப்ப முடிந்தது. இன்று காலம் மாறிவிட்டது. அமெரிக்காவை முன்னுதாரணமாக கொண்டு பின்பற்றும் நாடுகள் அதிகரித்து வருகின்றன. அரசு எவ்வழியோ, குடிமக்களும் மாறி விட்டார்கள்.

13) உங்களைக் கவர்ந்த அரசியல் புத்தகங்கள் அல்லது நிச்சயம் படிக்க வேண்டியவற்றுள் எதை குறிப்பிடுவீர்கள்?

மார்க்சிம் கார்கி எழுதிய "யான் பயின்ற பல்கலைக்கழகங்கள்". ஒரு மனிதன் தனது சொந்த அனுபவங்களில் இருந்து எவ்வளவு விஷயத்தை கற்றுக் கொள்ளலாம் எனக் கூறும் அவரது சுயசரிதை. லாஹிர சாங்கிருத்தையர் எழுதிய "வால்காவில் இருந்து கங்கை வரை". மனித இனம் எவ்வாறு தோன்றி பரிணமித்தது என்பதை சுவையாக கதை போல சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மேற்குறிப்பிட்ட நாவல்களை சிறுவயதில் வாசித்திருந்த போதிலும், இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.

14) கடற் கொள்ளையிட்டு அரசாங்கம் நடத்தும் நாடுகளென சிங்கபூர் போன்றவற்றை நீங்கள் குறிப்பிட்டு எழுதியது சர்ச்சயை ஏற்படுத்திய ஒன்று. இது பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். உங்கள் நிலைபாடு என்ன?

உலகில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் உண்மை என்ற ஒன்று எங்காவது இருக்கிறதா? ஒவ்வொரு பணக்கார நாட்டிற்கும் இருண்ட பக்கம் ஒன்றுண்டு. சாதாரண கிரிமினல் குறுக்கு வழயில் பணம் சம்பாதித்து சமூகத்தில் பெரும்புள்ளியாக வருவது போலத் தான் நாடுகளும். மேன் நிலைக்கு வந்த பிறகு எல்லோரும் தமது கசப்பான கடந்த காலத்தை மறைப்பது இயற்கை தானே? இதிலே சிங்கப்பூர் மட்டும் விதிவிலக்கா?

15) மலேசியாவில் வெகுண்டெழுந்த ஹிண்ட்டிராஃப் இயக்கம் தற்சமயம் ஒரு அரசியல் கட்சியென மாறிவிட்டிருக்கிறது. அதற்குள் சில பிரிவினைகள் வேறு. இவ்வியகத்தினால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை மறுக்க இயலாது. நெடுநாளைய அரசியல் மாற்றத்துக்கு இது போன்ற இயக்கங்களின் நடவடிக்கை சரியான ஒன்றென கருதுகிறீர்களா?

பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் இந்திய வம்சாவழியினரின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். அரசு மலாய் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் இனப் பாகுபாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து பிரஜைகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்த கோரிக்கைகள் நியாயமானவை. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, மலாய் பெரும்பான்மையினர் அரசு பக்கம் நிற்பதை மறுக்க முடியாது. (அரசு வழங்கும் சலுகைகள் முக்கிய காரணம்) இதிலே கவனிக்கப்பட வேண்டியது, பெரும்பான்மை மக்களிடையே எமக்கான ஆதரவு சக்திகளை திரட்டிக் கொள்வது முக்கியம். ஹிண்ட்ராப் அப்படியான செயல் திட்டம் வைத்திருந்ததா? இவர்களது ஆரம்ப கட்ட போராட்டமே பிரிட்டிஷ் தூதுவராலயத்தை நோக்கியதாக, பிரிட்டிஷ் அரசிடம் நஷ்ட ஈடு கோருவதாகத் தான் அமைந்திருந்தது. தங்கள் கோரிக்கைக்கு கனவான்களின் தேசமான பிரிட்டன் செவி கொடுக்கும் என்ற வெகுளித்தனம் தான் காரணம். அது தான் போகட்டும், பெயரிலேயே "இந்து" அடையாளத்தை புகுத்தியதன் மூலம், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை சேர்ந்த இந்திய வம்சாவளியினரை எட்டி நிற்க வைத்தார்கள். ஹிண்ட்ராப் அறிக்கையில் பிற மலேசிய சிறுபான்மை மக்களான சீனர்கள், மற்றும் சாராவாக் பிரதேசத்தில் வாழும் பழங்குடியினருடன் ஒன்றிணைந்த போராட்டம் பற்றிய குறிப்புகள் இல்லை. இந்தியவம்சாவளி சமூகத்தின் பொதுப் பிரச்சினை, இந்து மதத்தின் பிரச்சினையாக திசைதிருப்பி விடப்பட்டது. தனது அதிகாரத்தை நிலை நிறுத்த, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரித்து வரும் அரசின் நோக்கமும் அது தான்.

16) பொருளாதார நிவர்த்திக்காக வளர்ச்சியடைந்த நாடுகள் பல திட்டங்களில் முன்னோக்கியிருக்கும் இவ்வேளையில் அவற்றிக்கு பலிக் கடாவாக மூன்றாம் உலக நாடுகள் சில பாதிப்படைவதை அந்நாடுகளின் அரசியல் தலைவர்கள் உணராமல் தான் இருக்கிறார்களோ?

அரசியல் தலைவர்களில் பல பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்கள். சாமானிய மக்களுக்கு சிக்கலான விஷயமெல்லாம் அவர்களுக்கு நன்றாகவே புரியும். இதிலே கவனிக்கப்பட வேண்டியது, அரசியல் என்பது என்ன தான் பொதுநலம் சார்ந்த துறையாக இருப்பினும், அதை நடத்துபவர்கள் தமது சுயநலம் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர். சனத்தொகையில் அரைவாசி வறுமையில் உழன்றாலும் தனது குடும்பம் நன்றாக வாழ்கிறது என்று திருப்திப்படும் தலைவர்களே அதிகம். அவர்களுக்கு அடுத்ததாக இந்தப் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக் கூடியவர்கள், உயர்கல்வி கற்கும் வாய்ப்பை பெற்ற நடுத்தர வர்க்கம். அவர்களுக்கும் அதிகம் உடலுழைப்பைக் கோராத தொழில், அதற்கேற்ற ஊதியம் போன்றன கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாய் திறக்க மாட்டார்கள். கிராமத்தில் இருக்கும் சாதாரண குப்பனும், சுப்பனும், ஆண்டவரின் சாபத்திற்கு ஆளாகி விட்டோமா, என்று தான் புரிந்து கொள்வார்கள்.

17) ஒரு பக்க பார்வையைக் கொண்ட உலக அரசியலை பின் நவீனதுவம் மறுக்கிறது. பல திறப்பட்ட சிந்தனைகளையும் மாற்றுக் கருத்தையும் அது ஆதரிப்பதாக இருப்பதால் ஒரு நிலை கலாச்சார பிடியில் இருப்பவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் போகும் நிலை அல்லது கலாச்சார குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கருதுகிறீர்களா?

இருண்ட காலம், மீளுயிர்ப்புக் காலம், நவீன காலம் என்று மக்களின் பண்பாடு சார்ந்த வளர்ச்சியை வகைப்படுத்துகிறார்கள். அந்த வகையில் இப்போது நடப்பது பின் நவீனத்துவக் காலம். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சித்தாந்தம் தேடி தவித்துக் கொண்டிருந்த புத்திஜீவிகள் பின் நவீனத்துவ கருத்தியலை தோற்றுவித்தார்கள். கலாச்சாரக் குழப்பம் ஏற்பட்டதாக ஒரு மாயை நிலவியது உண்மை தான். ஆனால் பின் நவீனத்துவமே ஒரு கலாச்சாரமாகிப் போனதைக் காண்கிறேன். எப்போதும் உலக வரலாற்றில் குறிப்பிட்ட சில காலம் வெற்றிடம் ஏற்படும். முன்பு இருந்த ஆதிக்க கலாச்சாரத்திற்கும், பின்னர் வரப்போகும் புதிய கலாச்சாரத்திற்கும் இடையில் தோன்றும் சிறிது கால இடைவெளியில் பல திறப்பட்ட சிந்தனையையும் ஏற்றுக் கொள்ளும் கலாச்சாரம் நிலவும்.

18) ஏகப்பட்ட சமரசங்களுக்கிடையே தன்னை அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு ஒபாமா தகுதியாக்கிக் கொண்டார். உலக மக்களுக்கு இவரிடம் இருக்கும் எதிர்ப்பார்ப்புகள் அதிகமான ஒன்றே. தனி மனிதராக ஒபாமா விரும்பினாலும் அவர் இருக்கும் அமைப்பின் செல்வாக்கை மீறி அவர் செயல்படுவது சாத்தியம் தானா?

அவர் எதை சாதிக்க விரும்பினார்? ஒபாமா வருவதற்கு முன்னரே அதிகார மட்டத்தில் சில மாற்றங்கள் தேவை என உணரப்பட்டது. அதற்கேற்ற ஆளாக ஒபாமா தெரிவு செய்யப்பட்டார். ஜனாதிபதியாக யார் வந்தாலும், அரச இயந்திரம் எப்போதும் போல இயங்கிக் கொண்டு தான் இருக்கும். கொள்கை வகுக்கும் அரசாங்க உயர் அதிகாரிகளை மக்கள் தெரிவு செய்வதில்லை. உலக மக்களின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பு, ஊடகங்கள் கிளப்பி விட்ட வெப்பத்தின் வெளிப்பாடு.

19) இன்றய அரசியலில் உணவு தட்டுப்பாடு சம்பந்தமான வாதங்கள் அதிகமாகவே இருக்கிறது. மக்களின் 'லிவிங் கோஸ்ட்' அதிகமாகியிருக்கும் அதே வேலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மந்தகர நிலையில் இருக்கிறதே?

பல நாடுகளில் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், சில நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்தன. அதே போல உணவுத் தட்டுபாடு நிலவுவது, உணவு உற்பத்தி, விநியோகத் துறையில் முதலீடு செய்திருக்கலாம் நிறுவனங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதப்படுகின்றது. எப்போதும் லாபத்தை குறிக்கோளாக கொண்ட வர்த்தக நிறுவனங்கள், மக்கள் நலன் குறித்து சிந்திப்பதில்லை. பண வீக்கத்தால் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது. இருப்பினும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்கள் என்ன விலை கொடுத்தேனும் வாங்கியாக வேண்டும். அதே நேரம் பன்முகப் பட்ட நுகர்வுப் பொருளாதாரம் பாதிக்கப்படுவது உண்மை தான். ஆனால் தற்போது நடப்பது பொருளாதார மறுசீரமைப்பு. இதன் விளைவுகளை சில வருடங்கள் கழித்து உணரலாம்.

20) புத்தகம் ஒன்று எழுதி வருவதாக அறிகிறேன். அதைப் பற்றிய மோலோட்ட தகவல்களை அல்லது எதை சார்ந்தது என்பதையோ குறிப்பிட முடியுமா?

ஐரோப்பிய அகதி வாழ்வின் அவலங்களைப் பற்றிய நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஈழப்போர் காரணமாக, ஒரு அகதி எவ்வாறு புலம்பெயர நிர்ப்பந்திக்கப்படுகிறார். ஐரோப்பிய நாடொன்றில் அடைக்கலம் கோரும் வரை இடையறாத பயணத்தில் ஏற்படும் இன்னல்கள். புகலிடம் கோரிய நாட்டில் அதிகாரிகளின் திமிரான மெத்தனப் போக்கு. ஐரோப்பிய அரசுகளின் உள் நோக்கம் கொண்ட அகதி அரசியல். இவை போன்ற பல தகவல்களை விரிவாக வழங்க முயற்சித்துள்ளேன். இந்த நூலில் குறிப்பிடப்படும் பல சம்பவங்கள் சொந்த அனுபவத்தினூடாக பெறப்பட்டவை. நூல் வெளிவந்த பின்னர், அதனை பிற மொழிகளில் மொழிபெயர்க்க சில நண்பர்கள் விரும்புகின்றனர். இதை விட நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளையும் நூலாக வெளியிட இரண்டு பதிப்பகங்கள் முன்வந்துள்ளன. அனேகமாக மூன்று நூல்களையும் அடுத்த வருட தொடக்கத்தில் சந்தையில் வாங்கலாம்.

21) இந்தியா வல்லரசாகுமா?

அயலில் இருக்கும் குட்டி நாடுகளான இலங்கை, நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளைப் பொறுத்த வரை இந்தியா எப்போதும் வல்லரசு தான். அமெரிக்காவின் நிழலின் கீழ் பிராந்திய வல்லரசாக இருக்கின்றது. இதைத் தவிர உலக வல்லரசாவது நடக்கக் கூடிய விஷயமல்ல. அணு குண்டு வைத்திருப்பதற்காக ஒரு நாடு வல்லரசாகி விடுமானால், பாகிஸ்தான், வட-கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளும் வல்லரசுகள் தான்.

22) நீங்கள் பார்த்து வியந்த நாடு?

என்னைக் கவர்ந்த நாடு எகிப்து. ஆப்பிரிக்கக் கண்டத்தில், ஐந்தாயிரம் ஆண்டிற்கு முந்திய நாகரீகம் இன்றைக்கும் சிதைவுறாமல் பார்த்து வியக்கும் வண்ணம் நிலைத்து நிற்கின்றது. இன்றும் புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

23) வலையில் எழுதும் கட்டுரைகளுக்கு மாட்டி விடுவதற்கென்றே சில கேள்விகள் கேட்கப்படும் போது கோபப் பட்டதுண்டா?

ஒன்றுமே தெரியாதவர்களுக்கு எதையும் சொல்லிப் புரிய வைக்கலாம். ஆனால் சில பேர் புரிந்தாலும் புரியாத மாதிரி பிடிவாதமாக இருப்பார்கள். அப்படியானவர்கள் எரிச்சலூட்டுகின்றனர். இது வலையில் வருபவர்கள் மட்டுமல்ல, சில நண்பர்கள், உறவினர்கள் கூட அப்படி நடந்து கொள்ளகின்றனர்.

24) வளர்ந்த நாடுகளின் இன்றய பொருளாதார வளர்ச்சி திட்டத்தில் மூன்றாம் உலக நாடு ஒன்றும் அதீத வளர்ச்சியடையும் என குறிப்பிட்டிருந்தீர்கள். எந்த நாடாக இருக்கக் கூடும்?

எந்த நாட்டையும் குறிப்பிட்டு எதிர்வு கூற விரும்பவில்லை. தென் அமெரிக்காவில் வெனிசுவேலா, ஆப்பிரிக்காவில் லிபியா, ஆசியாவில் சீனா ஆகிய நாடுகள் தற்போது உள்ள உலக பொருளாதார ஒழுங்கிற்கு நிகரான மாற்றுத் திட்டங்களை முன்வைத்து, செயல்படுத்தி வருகின்றன. அனேகமாக எல்லோரும் டாலர் வீழ்ச்சியடையும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இன்றிருக்கும் உலகம் நாளை இருக்கப் போவதில்லை.

25) மூன்றாம் உலக யுத்தம் பற்றிய உங்கள் பார்வை?

முதலில் உலக யுத்தம் என்றால் என்ன? ஐரோப்பிய நாடுகள் அதிகாரப் போட்டிக்காக அணி பிரிந்து போரிட்டார்கள். பின்னர் போரினால் ஆன பயன் எதுவுமில்லை என்று உணர்ந்து, ஒன்று சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை அமைத்தார்கள். ஐரோப்பியர்கள் போரின்றி சமாதானமாக வாழ்வதால், அதை உலக சமாதானமாக அர்த்தப் படுத்திக் கொள்ளக் கூடாது. அவர்கள் தங்களது போர்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். மூன்றாம் உலக யுத்தம் எப்போதோ தொடங்கி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் தான் அவற்றை ஒன்று சேர்த்துப் பார்த்து புரிந்து கொள்வதில்லை.

(குறிப்பு: இது ஒரு மறுபதிவு.)

No comments: