Sunday, September 30, 2012

சிவாஜி கணேசனுக்கு பிரியாவிடை கூறல்

ஒரு பண்பாட்டாய்வியற் குறிப்பு 

-கார்த்திகேசு  சிவத்தம்பி -

சிவாஜிகணேசன் மறைந்து விட்டார் என்ற செய்தி தொலைக்காட்சி வழியாக வந்தபொழுது (21.07.2001) அது தமிழகத்தின் கடந்த மாத காலத்தின் அசாதாரண நிகழ்வுகள் பற்றிய நினைப்புகளுக்குள் அமிழ்ந்து விடும் போலவே இருந்தது.

ஆனால், வந்த நிகழ்ச்சிகள் அப்படி அமையவில்லை. மரணம் இயற்கை மரணம் என்றாலும், இழப்பு திடீரென வந்தது போலவும், அந்த இழப்பு சின்னதொன்றல்ல, மிகப் பெரியது, முழுத் தமிழகம் தழுவியது என்ற தொனியில் ஊடகங்கள் எடுத்துரைக்கத் தொடங்க அந்த எடுத்துரைப்பு தமிழுணர்வில் படியத் தொடங்க, அந்த மனிதன் மறைவுக்குள் தமிழ்ப் பண்பாட்டின் 'இனங்காணல்கள்' சில தொக்கி நிற்கின்றன என்பது புரியத் தொடங்கியது.

அரசியல் தன்னை ஒதுக்கியது கண்டு ஒதுங்கிப் போய் தன் நடிப்பும் தானும் என்றிருந்த சிவாஜிகணேசனுக்கு இறுதி மரியாதையாக வீரர்களுக்கு வழங்கப்படும் இறுதி கெளரவம் (துவக்குவேட்டு மரியாதை, 'லாஸ்ற்போஸற்' இசைப்பு) வழங்கப்பட்டது. சோகம் தமிழகத்தையும் தமிழ் பேசும் உலகத்தையும் தாண்டியது. அனைத்திந்திய சோகம் ஆயிற்று.

Saturday, September 29, 2012

இப்பெல்லாம் எவண்டா சாதி பார்க்கிறான் ?

Aadhavan Dheetchanya, one of the astonishing writers for reformative thoughts in Tamil, has composed this thoughtful song sung by Vaikarai Govindan troup. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளரும் புதுவிசை கலாசாரக் காலாண்டிதழின் சிறப்பாசிரியருமான ஆதவன் தீட்சண்யா அவர்களின் ஆக்கங்கள் மலையாளம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. In his blogs, books, speeches and videos, there are practical views on social inequalities. ஆதவன் தீட்சண்யா அவர்கள் இயற்றி உள்ள "இப்பல்லாம் எவன்டா சாதி பாக்குரான்னு அப்பாவி போலவே கேட்கிறான்' எனும் இந்த அருமையான பாடல் தமிழகத்தில் சமூக நீதிக்கும், பகுத்தறிவுக்கும் எள்ளளவும் இடமில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது! பாட்டின் நடுவில் வரும் "அம்பேத்கர் பெயரை பிள்ளைக்கு சூட்டி ஆனந்தம் கொள்பவர் எத்தனை பேர்?" என்ற கேள்விக்கு என்ன பதில் கூறலாம்? மிக முக்கியமான இந்த படலை அழகாகப் பாடியுள்ள வைகறை கோவிந்தன் குழுவினர் மிகவும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்! தமிழ் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையை இந்த பாடலின் வரிகள் வி படம் பிடித்துக் காட்டுகின்றன! An inspiration to numerous youth belonging to the Scheduled Communities, Aadhavan Dheetchanya continues his dynamism in creativity for social change! Let us wish him all success!

Saturday, September 22, 2012

டேனிஸ் தலைவர்கள்… தமிழ் தலைவர்கள் இணைந்து நடாத்தும் வெற்றிப் பிரகடனம்..



டென்மார்க் மண்ணில் நின்று கடந்த 25 வருடங்களாக கலைப்பணியாற்றி வரும் அத்தனை கலைஞர்களும் பாராட்டப்படும் பெருவிழா.
அனைத்துக் கலைஞர்களும், படைப்பாளிகளும், சமுதாய சிற்பிகளும் மக்களால் கௌரவிக்கப்படும் பொன்னாள்.
ஒருவர் வெள்ளிவிழா கொண்டாடினால் அது அவருக்கு பெருமை ஆனால் அனைவரும் இணைந்து கொண்டாடினால் நம் அனைவருக்கும் பெருமை.
கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்.. alaikal@gmail.com
மேலதிக விபரங்கள் வெகு விரைவில்…
காலம் : 22.09.2012 சனிக்கிழமை மாலை
இடம் : கேர்னிங் கலாச்சார இல்லம் Kulturallen – Herning

Wednesday, September 12, 2012

கூடங்குளம் நிகழ்வுகள் தொடர்பாக கூட்டறிக்கை


 கூடங்குளம் நிகழ்வுகள் தொடர்பாக  எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் கலைஞர்கள் செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை.
’’கடந்த ஓராண்டாக அறவழியில் நடந்துகொண்டிருக்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. சுதந்திர இந்தியா சந்தித்த மக்கள் திரள் போராட்டங்களில் முக்கியமான ஒன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்திய தேசத்தின் ஆன்மாவை நோக்கி வலிமையான கேள்விகளை எழுப்பிய இந்தப் போராட்டம் இன்று அதிகாரத்தின் வன்கரங்களால் நசுக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் விடுதலையில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் போராடும் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது தார்மீக கடமை என்று நம்புகிறோம்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்களாகிய நாங்கள் இடிந்தகரை மக்களுடன் நிற்கிறோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்.  மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் அரசாங்கம் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் ஜனநாயக விழுமியங்களை காற்றில் பறக்கவிட்டு, அறவழியில் நின்று போராடிய  இடிந்தகரை மக்கள் மீது இன்று மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் சர்வாதிகார அடக்குமுறையை ஏவியிருப்பதும் , கடந்த செப்டம்பர் 10 அன்று நடந்த முற்றுகைப் போராட்டத்தில் அந்த மக்கள் மீது கண்ணீர்ப் புகைகுண்டு வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்திய காவல்துறையினரின் அராஜகமும், குலசேகரப்பட்டினத்தில் அந்தோணி என்கிற மீனவர் பலியாகக் காரணமான துப்பாக்கிச்சூடும்  கடும் கண்டனத்துக்குரியது.

Tuesday, September 04, 2012

கட்டியகாரனைத் தொலைத்த தென்மோடி

-மெலிஞ்சி முத்தன் -


ஈழத்தமிழரின் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்று. கூத்துக் கலை ஆகும்.   கிராமியக் கலை, அல்லது நாட்டார் கலைவடிவம் என்ற சொற்களால் புரிதலுக்கு உட்படுத்தப்படும் இக்கலை/ வளர்ச்சிகுன்றிப் போனமைக்கான காரணங்களில் ‘நாட்டார்’ என்ற சொல்லுக்குப் பின்னால் இருந்த மனோநிலையும் ஒருவகைக்காரணம் எனலாம். முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர் என்றும், கூத்து என்கின்ற சொல்லே குதித்தல் என்ற சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் சிலர் சொல்வதுண்டு. அதுவே நாளடைவில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று பின்னர் வளர்த்தெடுக்கப்பட்ட வடிவங்களாகவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.




ஈழத்துக் கூத்தில் தென்மோடி,வடமோடி,காத்தவராயன், பேய்க்கூத்து, வசந்தன் கூத்து என்று பலவகைக் கூத்துகள்  இருந்தாலும். நான் இங்கு பேசுபொருளாகக் கொண்டிருப்பது ‘தென்மோடிக் கூத்து’ என்ற வகையிலான கூத்தையும், அக்கூத்தின் சமூகப் பின்னணி பற்றியுமேயாகும்.
 தென்மோடிக் கூத்தினை இன்று பெரும்பாலும் கடலோரப் பகுதிகளிலேயே  காணக்கூடியதாக இருக்கின்றது மாதகல், மெலிஞ்சிமுனை, பாசையூர், குருநகர், நாவாந்துறை, சில்லாலை, போன்ற இடங்களில் ஆடப்படும் இக்கூத்து ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசமான பாங்கினைக் கொண்டதாகவே இருக்கின்றது,


Saturday, August 25, 2012

கவிதாவின் கறுத்தப்பெண்

“கறுத்தபெண் - நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள்"
 பேராசிரியர் சண்முகரட்ணம் அணிந்துரை:-
"இந்தக் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் கூர்மையான சமூக விமர்சனங்கள் பொதிந்துள்ளன. இக்கவிதைகளை வரையும் போது கவிதா என்ன நோக்கத்தைக் கொண்டிருந்தார் என அவரிடம் கேட்பதைவிட அவர் எழுதிய வரிகள் எத்தகைய சிந்தனைகளை நம்முள்ளே தூண்டுகின்றன என்பதே முக்கியமெனலாம்."

தாழ் உடைக்கும் கவிதைகள்
கவித்துவமின்றிக் கவிதை தோன்ற முடியாது. ஆனால் கவித்துவமாகக் கவிஞர் எதைச் சொல்கிறார் என்ன சேதிகளைத் தர முயற்சிக்கிறார் என்பது முக்கியமென்பதை அழுத்திக் கூறத்தேவையில்லை. கவிதாவின் கவிதைகள் அழகானவை, அவற்றில் பெரும்பாலானவை ஆழமானவை. அழகும் ஆழமும் மிக்க கவிதைகள் நிறைந்த இந்தத் தொகுப்பினைப் படித்து மகிழும் சந்தர்ப்பத்தினைக் கொடுத்தமைக்காகக் கவிதாவிற்கு எனது நன்றிகள். ”கறுத்தபெண்”  கவிதைகளை இயற்றிய கவிதாவிற்கு எனது பாராட்டுக்கள்.
தன் கனவுகளுக்குக் கதவடைப்புகள் போடப்படும் தருணங்களில் கவிதைகள் தாழ் உடைக்கின்றன என்கிறார் கவிதா. இவரது கவியாற்றல் ஒரு கதவற்ற பிரபஞ்சத்தின் திறவுகோலாகிறது. அங்கே தங்குதடையின்றி கவிதைமழை பொழிகிறார் கவிஞர்.
இந்தத் தொகுப்பில் உள்ளடங்கிய கவிதைகள் மனித உறவுகளின் முக்கிய அம்சங்களைக் கருப்பொருட்களாகக் கொண்டுள்ளன. தனி மனிதரின் அனுபவங்கள், உணர்வுகள் இயற்கையாகவும் தெளிவாகவும் அவற்றின் சமூகத் தன்மைகளுடன் வெளிப்படுகின்றன. ஆண்- பெண் உறவு, பெண்களின் சமூக இருப்பு, காதலின் பல்வேறு அர்த்தங்கள் பல கவிதைகளின் பொருட்களாகின்றன.
’நான் பெய்யெனப் பெய்யும் மழை’ எனும் தலைப்பினைக் கொண்ட முதலாவது கவிதை பல்லாண்டு காலமாகத் தமிழராய் புனித கோபுரத்தில் வைத்துப் பூசிக்கப்படும் திருக்குறள் மீது ஒரு போர் பிரகடனத்தை வீசுகிறது.
வள்ளுவா!
உன்னுடன் கொண்ட
முரண் பாடொன்று
முறிந்து விட்டது
உண்மைதான்
ஓம்
நான் பெய்யெனப் பெய்யும்
மழை!
என ஆரம்பிக்கும் கவிதை தொடர்கிறது
கலைந்த கூந்தலோடு
உம்மையும்
பெண் கற்பைப்பாடும்
உம்மொத்த புலவர்களையும்
பிடுங்கியெறிய
என் மழை எழுகிறது
எனச் சவால்விட்டுப்; பின் வருமாறு முடிகிறது இந்தக் கவித்துவப்போர் பிரகடனம்
நான் பெய்யெனப் பெய்யும்
மழையாய்
கட்டுக்கடங்பாதென் கவிதை
நான் பாயெனப் பாயும்
இந்தக்கவிதையின் நோக்கம் திருக்குறளை அவமதிப்பதெனப் பார்ப்பதைவிட அது நியாயப்படுத்தும் ஆண்-பெண் அசமத்துவ விழுமியத்தினைக் கேள்விக்குள்ளாக்கி நிராகரிக்கிறது எனக் கொள்வதே பொருத்தமானதாகும். ஆணாதிக்கம் நமது சமூகத்தில் நிறுவன ரீதியில் தொடர்வதை மறுக்க முடியாது.
புனிதப்படுத்தப்பட்ட தொன்மைமிகு ஒழுக்கவியல் நூல்களும் மதத்தின் பெயராலும் மரபின் பெயராலும் பெண்கள் மீது திணிக்கப்படும் சடங்குகளும் கட்டுப்பாடுகளும் விமர்சிக்கப்படுதல் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் வலுப்படுத்தும் விழுமியங்களின் பரிணமிப்புக்கும் முற்போக்கான சமூக மாற்றத்தின் நகர்ச்சிக்கும் அவசியமான செயற்பாடாகும். இந்தச் சிந்தனைப்போக்கு இந்தத் தொகுப்பின் பல கவிதைகளில் இழையோடக் காணலாம். இது ஒரு அரசியல் சுலோகமாகவோ அல்லது அறிக்கை ரீதியான வாசகமாகவோ வரவில்லை. கவிதைகளைப் படித்து சற்று ஆழச் சிந்தித்தால் இந்தக் கருத்துக்கள் தோன்றலாம். இது எனது வாசிப்பு.
பெண்ணின் சமூக நிலை, காதல், கற்பு நிலைபற்றி மீண்டும் அதே கருத்துக்களை வலியுறுத்துவது போல் அமைந்துள்ளது ”சொன்ன சொல் மாறாமல்” என்ற கவிதை. இதன் இறுதி வார்த்தைகளைப் பாருங்கள்
தயவுசெய்து
காலாகாலமாய் கட்டிவரும்
கற்பு என்றால் என்ன, என்பதை
கறுத்தபெண் என்ற
என் முகவரிக்கு
வந்து சொல்லுங்கள்
இந்தக் கவிதைத் தொகுப்பின் தலைப்பு கறுத்தபெண் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள் எனக் கூறுகிறது. அதே நேரம் கறுத்தபெண்ணாயிருந்தால் மட்டுமல்ல இந்த மறுப்பு அவள் அவள் சிவப்புப் பெண்ணாக மாறினாலும் கட்டுப்பாடுகள் மாறுவதில்லை எனும் உண்மையையும் காட்டுகிறது.
இதை மேலும் ஆழப் புலப்படுத்துகிறது “நாங்கள் காவும் பெட்டகம்” எனும் கவிதை. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என ஆணாதிக்கம் வரித்த நாற்குணங்களும் பெண்மையின் ஒருமித்த இலக்கணமென்று அவளை அதன் பெட்டகமாக்கிப் பொன்விலங்கு பூட்டியுள்ளது சமூகம். காதலாக ஆரம்பிக்கும் உறவும்
படிப்படியாக ஆக்கிரமிப்பாக மாறலாம் என்பதை நயம்படக் கூறுகிறது இன்னொரு கவிதை.
இந்தத் தொகுப்பில் வேறு விடயங்களும் கையாளப்படுகின்றன. உதாரணத்திற்கு ‘சித்தப்பாவும் சில கேள்விகளும்’ எனும் கவிதை வாசகரை தாயகத்தின் போர்க் கொடூரங்கள் மிகுந்த காலகட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. சித்தப்பாவிற்கு நடந்தது என்ன.
..
ஈரம் சொட்ட சொட்ட
அரைக்குளியலுடன்
யார் யாரோ துரத்த
ஓடிய ஒருநாள்…
பின் கோடி மதிற்சுவரை
தாண்டிய பின்
தகவல் எதுமில்லை
இந்தக் கவிதையின் முடிவு மனதை
மிகவும் தொடுவதாயுள்ளது
எந்த மதிலையும்
பழஞ் சுவரென்று இடித்துவிடாதீர்
அத்துவாரங்களினூடு பார்க்கவேண்டும்
ஏதாவது தகவல் வரலாம்
என்னைக் கவர்ந்த வேறு பல கவிதைகளும் இங்கே உண்டு. இந்தக் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் கூர்மையான சமூக விமர்சனங்கள் பொதிந்துள்ளன. இக்கவிதைகளை வரையும் போது கவிதா என்ன நோக்கத்தைக் கொண்டிருந்தார் என அவரிடம் கேட்பதைவிட அவர் எழுதிய வரிகள் எத்தகைய சிந்தனைகளை நம்முள்ளே தூண்டுகின்றன என்பதே முக்கியமெனலாம். இந்த வகையில் ஒருவரின் ஆக்கம் சமூகத்தில் வெளிவந்ததும் அது தனக்கென ஒருவாழ்வைப் பெற்றுக் கொள்கிறது என்பதை மறந்திடலாகாது. அதன் பிரசுரம் அதை ஆக்கியவரிடமிருந்து விடுவித்து விடுகிறது என்றும்
அர்த்தப்படுத்தலாம்.
கவிதாவின் கவிதைகள் வாசகர்களுக்கூடாக ஒரு திறந்த அரங்கிற்குள் வந்துவிட்டது. அங்கே அவை பற்றிய விளக்கங்களும் விவாதங்களும் தொடர வேண்டும் என வாழ்த்தி கவிதாவுக்கு மீண்டும் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன்.
நன்றி:பேராசிரியர் ந. சண்முகரத்தினம்

Thursday, August 23, 2012

நூல் அறிமுகம்

தோழர் MC லோகன் இன் கவிதை தொகுப்பு வெளியீடும் - அரசியல் நிகழ்வும் டென்மார்க் இல் நடக்கவிருக்கிறது .
 

Wednesday, August 08, 2012

உயிர் நிழல் 35வது இதழ் வெளிவந்துள்ளது

, சுல்பிகா இஸ்மாயில், பா. துவாரகன், சேரன், இராகவன், ஆழியாள், றியாஸ் குரானா, லஷ்மி, வி. சிவலிங்கம், ரிஷான் ஷெரீப், ஜிஃப்ரி ஹாசன், ரதன், எம்.பௌசர், ஸர்மிளா செய்யித், சு. குணேஸ்வரன், அஜாதிகா, ஆகியோரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.

Wednesday, August 01, 2012

விடியல் சிவா நினைவுகள்

-ந.சுசீந்திரன்-
தோழர் விடியல் சிவா அவர்கள் எனக்கு 1990 களின் நடுவாக்கில் அறிமுகமாகியிருக்கலாம். அவரைத் தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் வீட்டில் தான் முதன்முதலில் பார்த்த ஞாபகம். அப்போதெலாம் அதிகாலையிலேயே யாராவது இளந்தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை அவர்களது வீட்டுக்கு வந்து விடுவார்கள். தலைகுனிந்து கண்களை அரைப்பங்கு மூடியபடி எஸ்.வி. ஆர் பேசத்தொடங்கினால் அது மடைவிட்ட வெள்ளம் போல் ஓடியபடியிருக்கும். அப்படியொரு காலையில் தான் விடியல் சிவா அவர்களைக் கண்டேன். பெரியார் :சுயமரியாதை சமதர்மம் நூலின் பதிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தகாலம் அது. அப்பொழுது அவர் அறியப்பட்ட முற்போக்குப் பதிப்பாளராக இருந்தார். வெற்றிலை போடுவதும், வியர்க்கும் போது அவர் கையில் வைத்திருக்கும் பையொன்றினுள் இருக்கும் துண்டை எடுத்து முகம் துடைத்துக் கொள்வதும், எப்பொழுதும் குமிண்சிரிப்பொன்றைத் தாங்கி நிற்பதும் சிவாவின் அடையாளங்கள்.

அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற தமிழினி மகாநாட்டில் அவரைக் காணும்போது எங்கள் உறவும் நெருக்கமும் அதிகரித்திருந்தது. காரணம் தோழர் தண்டபாணி, தோழ
ர் கல்யாணி ஆகியோரின் ஒரே மகள் சுமித்திரா பெர்லினில் எங்கள் பவானி அக்காவின் மகன் கிருபாவை மணம்புரிந்திருந்திருந்தார். தமிழினியின் தொடக்க நாளில் பாண்டிச்சேரி எம். கண்ணன், வ. கீதா, விடியல் சிவா, நான் மற்றும் கவிஞர் சு.வில்வரத்தினம் ஆகியோர் காலைப்பொழுதொன்றின் மரநீழல் தந்த தரையிலமர்ந்து ஈழ நிலைமைகளை சு.வி அவர்கள் தன் பாணியில் தெளிவுபட விவரித்துக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்தோம். பின்னர் நிலாந்தனின் „முல்லைக் காடே, முல்லைக் காடே…“; மு.பொன்னம்பலத்தின் „மார்கழிக்குமரி…; “நீலாவணனின் „ஓ..ஓ..வண்டிக்காரா…“ போன்ற பாடல்களை சு.வியின் அதிசய உணர்குரலிசையில் கேட்டு லயித்திருந்ததையும் விடியல் சிவா அவற்றுக்குத் தலையசைத்து நின்றதையும் இப்பொழுது எண்ணிப்பார்க்கின்றேன்.

Tuesday, July 24, 2012

நகைச்சுவைச் சிங்கம் நினைவுகளை எழுதித்தான் கடக்க வேண்டும் ...

- கரவைதாசன் -

யாழ் புங்கங்குளம்வீதி பாண்டியந்தாழ்வை பிறப்பிடமாக கொண்டு  நெதர்லாந்தில் வாழ்ந்து வந்த "நகைச்சுவை சிங்கம்" தம்பிமுத்து தவரத்தினம் அவர்கள் பிரான்சில் 24.06.2012 இறப்பெய்தினார்.  சிறந்த நாடகநடிகர், நாடக கதாசிரியர் வசனகர்த்தா, நாடக இயக்குநர், சிலைவடிக்கும் சிற்பி, பயிற்றப்பட்ட கடச்சல் தொழில் நிபுணர், முகாமைத்துவப் பொறுப்பாளர்  எனப் பல்வேறு பரிமாணங்களையும் ஆளுமைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு உன்னத கலைஞன் அந்நிய தேசமொன்றில் யாருமறியாச் சக மனிதனாய் மரிணித்து போவது போலோரு கொடுமை, வேறெந்த மொழிச் சூழலிலுமில்லை. 
காட்டுவிளைச்சலாய் வியாபித்துப் போயிருக்கும் தமிழ்பேசும்  பெரும் ஊடகங்களுக்கு இச்செய்திகள் எட்டுவதில்லைதான். பல்வேறுபட்ட அரசியல் காரணிகளினால்  இவரைப்போன்ற பலரின் சுவடுகள் புகலிடச் சூழலில் அறியாப் பொருளாய் அற்ப மனிதர்களாய் மறைந்து போதல்  உண்மையில் கொடுமை!  வரலாற்றின் சில பக்கங்களைத்தன்னும் நம்மால் முயன்று  பதிதல் வேண்டும். இல்லையேல்   அஃது இவர்களது  சாவின் கொடுமையிலும்  கொடுமையாய் அமைந்துவிடும்.
ஈழத்தில் அளவெட்டியில் தம்பிமுத்து கனகம்மா தம்பதிகளின் தலை மகனாக   நண்பர் தவரத்தினம் அவர்கள் 05.10.1950ம்  ஆண்டு பிறந்தார். அவரது ஆரம்பக் கல்வியை பாசையூர் சென்யோசாப் கல்லூரியில் ஆரம்பித்த அவர், தொடர்ந்து கொழும்புத்துறை  இந்துமகா வித்தியாலயத்தில் தனது இடைநிலை கல்வியினை கற்றார். முத்திரைச் சந்தி புரோ மோட்டார் கொம்பனியில் தொழில்  கல்வியை கற்றுக் கொண்டு அங்கேயே முகாமைத்துவப்  பொறுப்பாளராக  கடமையாற்றினார். இடையே யாழ் அத்தியடியில் இயங்கி வந்த  ஸ்கைலாக் என்ஜினியரிங் கொம்பனியிலும் அதே தொழிலில் இருந்தார். யாழ் பாண்டியந்தாழ்வை சேர்ந்த லில்லி மலர் என்ற பெண்ணை காதல்மணம் புரிந்து இனிய காதலின் பேறாக சேர்ஜன், ஷர்மிலி, தமிழினி, மதீபன் என நான்கு பிள்ளைகளை பெற்றார்கள்.

சிறுவயதினிலேயே யாழ் கொழும்புத்துறையைச் சேர்ந்த நாடக இயக்குநர் தலைவர் அருளானந்தம் அவர்களின் "இறுதிவார்த்தை" எனும் சமூகநாடகத்தில் நடித்து,  தனது கலைப் பயணத்தினை தொடர்ந்த இவர். முடிவில் ஓர் ஆரம்பம், பரந்தர் பத்தாயிரம், அன்பின் பெருமை,பரிவும் பிரிவும், சிட்டுக்குருவி,  நான் ஒரு பெக்கோ, மாலிக்கபூர், பிஞ்சகடகம் என பல்வேறுபட்ட நாடகங்களில்  சிறுவன், பெரியவன், அரசன், ஆண்டி ,கோமாளி என வேறுபட்ட பாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார்.

Wednesday, July 18, 2012

மலேசியஇலக்கியம் பீர் முஹம்மது

மலாயா நாட்டின் தொடக்ககால வரலாற்றை ஆராயும் எவரும் யாழ்பாணத் திலிருந்து குடிபெயர்ந்து போன தமிழர்கள், மலாயாவின் எல்லாப் பகுதிக்கும் பரந்து சென்று அங்கிருந்த நிர்வாகத்திற்கும், அடிமட்ட தொழிலளர்களுக்கும் இடையில் மேலாளராக பணியாற்றினார்கள், என்பதற்கப்பால் தேடுவதில்லை.  அவங்கள் என்ன பண்ணினாங்கள்? என்பதற்கு பல தகவல்கள்  இக் காணொளியில்............

Monday, July 16, 2012

விம்பம் 7வது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா


ஆளும்வர்க்க அதிகாரத்தின் ருசி நன்கு தெரிந்தவர்களாக முஸ்லீம் அரசியல் பிரதிநிதிகள்

Fauzer
-எம் .பௌசர்-
கிழக்கில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆளும் அரசாங்க கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என அக்கட்சித் தலைமை எடுத்துள்ள அரசியல் தீர்மானம் முஸ்லீம்,தமிழ் அரசியல் வெளியில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளதனை காணக் கூடியதாக உள்ளது.

முஸ்லீம் மக்களின் அரசியல் உரிமைக்காகவும்,சமூக பாதுகாப்பினை வலுப்படுத்தி உறுதிப்படுத்துவதற்காகவும் ஸ்தாபன மயமான இவ்வியக்கம், மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இக்கட்சியை வழிப்படுத்தும் வரை,முஸ்லிம்களின் தேசிய அரசியல் இயக்கத்தின் இடத்தினை இலங்கை முஸ்லிம்களுக்குள் ஓரளவு பூர்த்தி செய்கின்ற அரசியல்பண்புகளுடனும் தனது அரசியல் போக்கினை முன்னெடுத்து வந்திருக்கிறது.


அஷ்ரப் அவர்களின் அகால மறைவின்பின் நீடித்த உட்கட்சி அரசியல் முரண்பாடுகளினால், காலத்திற்கு காலம் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சிதறுண்டு பல்வேறு குட்டிகுட்டி தலைமைகளின் கீழும்,பிராந்தியத் தலைமைகளின் கீழும் பல அரசியல் கட்சிகளாக மாறின. பேரியல் அஷ்ரப் தலைமையில் தேசிய ஐக்கிய முன்னணி,அதாஉல்லா தலமையிலான தேசிய காங்கிரஸ், ரிசாத் தலைமையிலான அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என கட்சிகளின் அடையாளங்களும் தலைவர்களின் பெயர்களும் அதிகரித்தன.என்னதான் கட்சி பல்வேறு அணிகளாகப் பிரிந்தாலும், முஸ்லிம்களுக்கான தேசிய அரசியல் தலைமையாக முஸ்லிம் காங்கிரஸ் நீடித்ததற்கு அதனுடைய ஸ்தாபன பெறுமானமும்,அக்கட்சி உருவானதன் தேவையும் நோக்கமும் பின்புலமாக இருந்து வந்துள்ளன.

Wednesday, July 11, 2012

உலகின் புதிய ஒழுங்கில் மண் மீட்ப்புப் போராட்டங்கள்

-இதயச்சந்திரன்-
உலகின் புதிய ஒழுங்கில், நிலத்திற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மூலவளச் சுரண்டலிற்காக, வர்த்தகச் சந்தைக்காக வல்லரசுகளும் முட்டி மோதிக் கொண்டிக்கின்றன.
பெருந் தேசிய இனவாத ஆட்சியாளர்களும் தமது இறைமையை  நிலை நிறுத்திக் கொள்ள, பூர்வீக தேசிய இனங்களின் நிலங்களை ஆக்கிரமிக்கின்றார்கள்.

அகண்ட பார்வையில், உலகப் பொருளாதாரத்தின் எண்பது சத வீதத்தைக் கொண்ட முதலாளித்துவ முறைமை, நில ஆக்கிரமிப்பின் பின் புலத்தில் நின்று செயற்படுவது தெரிகிறது.
 தேசிய பாதுகாப்பிற்கும் மூலவளச் சுரண்டலிற்கும் தென் சீனக் கடலில் தீவுகளுக்கு உரிமை கோரும் சீனா, வியட்னாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளைக் காணலாம்.
மலை வாழ் மக்களை அவர்களது பிரதேசங்களிலிருந்து விரட்டி அடித்து கனிம வள சுரண்டிலிற்காக அரசோடு கைகோர்க்கும் பன்னாட்டு கம்பனிகளை இந்தியாவின் மத்திய பகுதியில் பார்க்கலாம்.திருமலைத் துறை முகத்தில் முதலீடு செய்யும் பல் தேசியக் கம்பனிகளின் நகர்வு, சம்பூர் மண்ணை ஆக்கிரமிக்கிறது என்கிற செய்தியை கடந்த வாரம் கண்டோம்.


முதலீட்டு ஆதிக்கம் நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் அதேவேளை, ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் தேசிய இனங்களின் நிலங்களையும் கபளீகரம் செய்கிறது.
மனித உரிமை மீறல் குறித்துப் பேசும் வல்லரசாளர்கள், நில ஆக்கிரமிப்புக் குறித்து வாய் திறப்பதில்லை.

வல்வை கடலோடிகள் நூல் வெளியீட்டு விழா

இந்த நூலை கனடாவில் வாழ்ந்து காலஞ்சென்ற ஈழத்து பூராடனார் எழுதியுள்ளார்..
இங்கிலாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை வல்வை நலன்புரிச் சங்கம் பிரித்தானிய ஆதரவில் வல்வை கடலோடிகள் என்ற வரலாற்று ஆவண நூல் வெளியீடு செய்யப்பட்டது. இந்த நூலை கனடாவில் வாழ்ந்து காலஞ்சென்ற ஈழத்து பூராடனார் எழுதியுள்ளார். ஈழத்து பூராடனார் வல்வையைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தன்னால் திரட்ட முடிந்த தகவல்களை எல்லாம் ஒன்று திரட்டி ஆவணப்படுத்தியுள்ளார். இவரோடு மேலும் பலர் துணை நின்றுள்ளனர்.
கனடாவில் வல்வை தொடர்பாக நடைபெறும் பல்வேறு ஆவணப்படுத்தல் முயற்சிகளில் காலம் சென்ற அ.சி.விஷ்ணுசுந்தரம் நினைவு மையமூடாக அவர்கள் நினைவாக தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் அவருடைய புதல்வர் வி. அருட்செல்வம் ( விஷ்ணு ) இதை வெளியீடு செய்துள்ளார்.
இந்த வெளியீட்டு நிகழ்வில் வல்வையின் கடலோடிகள், கேப்டன் பணியாற்றிய பலர் பங்கேற்று சிறப்பித்தது கவனத்தைத் தொட்டது. கேப்டன் துரைலிங்கம் அவர்களுடைய பாரியார் விளக்கேற்றி நூல் வெளியீட்டு விழாவை ஆரம்பித்து வைத்தார். வல்வையின் அன்னபூரணி அமெரிக்கக் கரையை தொட்ட சாதனையை நூல்வடிவாக்கிய திரு. ரீ. இராஜகோபாலும் கலந்து சிறப்பித்தார். மேற்கண்ட நூலின் முதல் வெளியீட்டு நிகழ்வு கனடாவில் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.
புலம் பெயர்ந்து வந்தாலும் தாய் மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவலில் எடுக்கப்பட்ட இந்த முயற்சி மிகவும் பாரமானது, அதை சிறப்பாக செய்த விஷ்ணு அவர்கள் தமிழ் சங்கத்தால் பாராட்டி கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

நன்றி: அலைகள்

Sunday, June 10, 2012

தேசவழமைச்சட்டமும் சாதியமும்

- ராகவன்- 

சாதியம் தென்னாசிய சமூகங்களிற்கான தனித்துவமான பண்பாகயிருக்கிறது.  சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் இச்சமூகங்களில் சாதி கலந்திருக்கிறது.  யாழ்ப்பாணச் சாதிய அமைப்பின் அரசியல் பண்பாட்டுக் கூறுகள் பற்றி ஒரளவுக்கு எழுதப்பட்டிருக்கின்றன.எனினும்  சாதியத்திற்கும் நில உரிமைக்கும்  உள்ள சட்டரீதியான முண்டுகொடுத்தலை பற்றிய ஆழமான ஆய்வு எதுவும் வந்ததாகதெரியவில்லை.சட்டத்தின் முன் எல்லோரும் சமம் எனற மாயக்கண்ணாடியின் பின் சாதிய மேலாதிக்கமும் சனாதனமும் தேசவழமைச் சட்டத்தைஎவ்வாறு வடிவமைத்திருக்கின்றன என்பது ஆய்வுக்குரிய பொருள். இக்கட்டுரை ஒரு முழுமையான ஆய்வு அல்ல. ஆனாலும் ஒரு ஆரம்ப விவாதத்திற்கான கருப்பொருளாக இக்கட்டுரை இருக்குமென நம்புகிறேன்.

Wednesday, May 30, 2012

இலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழகம் ஏன் புறக்கணிக்கிறது?

International Tamil Writers Forum
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
 P.O.BOX 350,Craigieburn,Vic-3064 ,AUSTRALIA T.Ph: 00 61 3 9308 1484
                            E.Mail:international.twfes@yahoo.com.au
ஊடக அறிக்கை:

இலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழகம் ஏன் புறக்கணிக்கிறது?
  
போருக்குப்பின்னர் ஈழத்தமிழ் இலக்கியம் உயிர்ப்புப்பெறவேண்டாமா?
இலக்கிய உறவுக்கு நீட்டும் கரத்தை துண்டிக்கவேண்டாம் !
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பாளர் முருகபூபதி அறிக்கையூடாக வேண்டுகோள்.
murugapoobathyஇலங்கையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் சார்ந்த எந்தவொரு விழாவோ ஆய்வரங்கோ அல்லது மாநாடோ நடைபெற்று அவற்றுக்கு தமிழக எழுத்தாளர்களை தமிழ் அறிஞர்களை அழைத்தால்  முதலில் தமிழ்நாட்டிலிருந்தே  எதிர்ப்புக்குரல் வந்துவிடுகிறது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைந்ததைத்தொடர்ந்து போர்க்குற்றம் நிகழ்ந்த இலங்கையில்; தமிழ்மொழி சார்ந்த ஒன்றுகூடல்களை தமிழ்நாட்டில் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது வழக்கமாகிவிட்டது.இலங்கையில் கொழும்பில் நடக்கும் எந்தவொரு பொது நிகழ்ச்சியும் இலங்கை அரசின் ஆதரவுடனும் ஆசியுடனும்தான் நடப்பதாக கற்பனைசெய்துகொண்டு அறிக்கை விடுவதும் வழக்கமாகிவிட்டது.
2011 ஆம் ஆண்டு சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தவிருந்தவேளையிலும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புக்குரல் ஓங்கி ஒலித்தது.எனினும் குறிப்பிட்ட மாநாட்டில் சில எழுத்தாளர்கள் உட்பட சில  சிற்றிதழ் ஆசிரியர்களுமாக  சுமார் ஐம்பதுபேரளவில் தமிழ்நாட்டிலருந்து வந்து கலந்து சிறப்பித்தனர்.
குறிப்பிட்ட மாநாடு தொடர்பான முதலாவது ஆலோசனைக்கூட்டம் கொழும்பு தமிழச்சங்கத்தில் 2010 ஜனவரி முதல் வாரம் நடந்தது. தமிழக சிற்றிதழ்கள் சிலவற்றிலும் நடைபெறவிருக்கும் மாநாடு பற்றிய செய்திகள் வந்தபின்பு, சுமார் ஆறுமாதங்கள் கடந்த நிலையில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

Friday, May 25, 2012

கசகறணம் நாவலுக்கு விருது!

நண்பர் விமல் குழந்தைவேலுவின் கசகறணம் நாவலுக்கு 2011ம் ஆண்டுக்கான நாவல் விருது கிடைத்துள்ளது!

-எம் .பௌசர்-
 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்( தமுஎகச) ஆண்டுதோறும் அந்தந்த வருடத்தில் வெளியான கலை இலக்கிய படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது.

கவிதை,சிறுகதை, நாவல்,தமிழ் வளர்ச்சிக்கான ஆய்வு, மொழிபெயர்ப்பு, விளிம்புநிலை மக்களுக்கான எழுத்துகள் ,மற்றும் படங்கள்,குறும்படங்களுக்கு துறைசார் விருதுகள் வழங்கப்படுகிறது.

நாவலுக்கான சிறந்த விருது , விமல் குழந்தைவேலுவின் கசகறணம் நாவலுக்கு கிடைத்துள்ள செய்தியினை சற்றுமுன்தான் அறிந்து கொண்டேன். எனது மகிழ்ச்சியினை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். விமலுக்கு எனது வாழ்த்துக்கள்!

விரிந்த கதை வெளியில் ,போருக்குள் சிக்குண்டு சிதைந்தழிந்த தமிழ் முஸ்லீம் மக்களின் வாழ்வை அம்மக்களின் மொழியில், அதன்கலை அனுபவத்தோடு , கண்ணீரோடு ,ஆவேசத்தோடு தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த வாழ்வை நேசிக்கின்ற ஒரு நேர்மையான கலைஞனின் உளத்துயரத்தோடு விமல் குழந்தைவேல் எழுதியிருந்தார்.

Sunday, May 20, 2012

தொலைக்காட்சி விவாதத்தில் பொறுமை இழந்தார் / மேற்கு வங்க முதல்வர்

கொல்கத்தாவில் நடைபெற்ற CNN-IBN இன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, பல்கலைக்கழக மாணவிகளின் கேள்விகளில் அதிருப்தி அடைந்து நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து சென்ற நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தார் மமதா பானர்ஜி. அப்போது ஜாதாவ்பூர் பல்கலைக்கழக மாணவி ஒருவர், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கிறதே என கேள்வி எழுப்பினார்.


மற்றொருவர் கார்டூன் வரைந்தற்காக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபாத்ராவை கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். அது கார்டூன் அல்ல. சைபர் கிரைம். என்னை கொலை செய்வதற்கான சதி முயற்சி. குறித்த பேராசிரியர் மார்க்சிஸ்ட் கட்சியின் ஏஜெண்டுக்களில் ஒருவர்.



அவர் அதை 60 பேருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார். கடந்த தேர்தலின் பின்னர் மார்க்ஸிஸ்ட் கட்சி, 1000 ற்கு மேற்பட்ட சீ.டி க்களை வெளியிட்டு என்னை அவமானப்படுத்தியது. மாவோயிஸ்டுக்களும் - மார்க்ஸிட் கட்சியும் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றன என மமதா பதில் அளித்தார்.


அத்துடன் திடீரென கோபமடைந்த அவர், ஏன் எல்லோரும் மாவோயிஸ்டுக்கள் தொடர்பான கேள்விகளையே எழுப்புகிறீர்கள். மாநிலத்தில் பேசுவதற்கு வேறு எந்த விடயமும் இல்லையா? வேறு பல்கலைக்கழக மாணவர்களை இந்நிகழ்வுக்கு அழைக்கவில்லையா? என்றார்.


நீங்கள் மாவோயிஸ்டு இயக்கத்தை சேந்தவரா என குறித்த மாணவியை பார்த்து பதில் கேள்வி எழுப்பினார். என்னால் மாவோயிஸ்டுக்கள் - மற்றும் மார்க்சிஸ்ட் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. நீங்கள் மாவோயிஸ்டு மாணவர்கள்.


இங்கு மாவோயிஸ்டுக்கள் பலர் உள்ளனர். என்னால் மவோயிஸ்டுக்களுகு பதில் கூறமுடியாது என சொல்லிவிட்டு நிகழ்ச்சியின் பாதியிலேயே கோபத்தில் வெளியேறிவிட்டார்.


முதன்முறையாக மமதா பானர்ஜி ஊடகம் ஒன்றின் முன்னிலையில் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு வெடுவெடுப்பாக பேசிவிட்டு நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறியது மேற்குவங்க மூத்த அரசியல் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 கொல்கத்தாவில் நடைபெற்ற CNN-IBN இன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, பல்கலைக்கழக மாணவிகளின் கேள்விகளில் அதிருப்தி அடைந்து நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து சென்ற நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தார் மமதா பானர்ஜி. அப்போது ஜாதாவ்பூர் பல்கலைக்கழக மாணவி ஒருவர், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கிறதே என கேள்வி எழுப்பினார்.


மற்றொருவர் கார்டூன் வரைந்தற்காக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபாத்ராவை கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். அது கார்டூன் அல்ல. சைபர் கிரைம். என்னை கொலை செய்வதற்கான சதி முயற்சி. குறித்த பேராசிரியர் மார்க்சிஸ்ட் கட்சியின் ஏஜெண்டுக்களில் ஒருவர்.



அவர் அதை 60 பேருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார். கடந்த தேர்தலின் பின்னர் மார்க்ஸிஸ்ட் கட்சி, 1000 ற்கு மேற்பட்ட சீ.டி க்களை வெளியிட்டு என்னை அவமானப்படுத்தியது. மாவோயிஸ்டுக்களும் - மார்க்ஸிட் கட்சியும் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றன என மமதா பதில் அளித்தார்.


அத்துடன் திடீரென கோபமடைந்த அவர், ஏன் எல்லோரும் மாவோயிஸ்டுக்கள் தொடர்பான கேள்விகளையே எழுப்புகிறீர்கள். மாநிலத்தில் பேசுவதற்கு வேறு எந்த விடயமும் இல்லையா? வேறு பல்கலைக்கழக மாணவர்களை இந்நிகழ்வுக்கு அழைக்கவில்லையா? என்றார்.


நீங்கள் மாவோயிஸ்டு இயக்கத்தை சேந்தவரா என குறித்த மாணவியை பார்த்து பதில் கேள்வி எழுப்பினார். என்னால் மாவோயிஸ்டுக்கள் - மற்றும் மார்க்சிஸ்ட் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. நீங்கள் மாவோயிஸ்டு மாணவர்கள்.


இங்கு மாவோயிஸ்டுக்கள் பலர் உள்ளனர். என்னால் மவோயிஸ்டுக்களுகு பதில் கூறமுடியாது என சொல்லிவிட்டு நிகழ்ச்சியின் பாதியிலேயே கோபத்தில் வெளியேறிவிட்டார்.


முதன்முறையாக மமதா பானர்ஜி ஊடகம் ஒன்றின் முன்னிலையில் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு வெடுவெடுப்பாக பேசிவிட்டு நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறியது மேற்குவங்க மூத்த அரசியல் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


நன்றி:eutamilar.eu