Friday, May 25, 2012

கசகறணம் நாவலுக்கு விருது!

நண்பர் விமல் குழந்தைவேலுவின் கசகறணம் நாவலுக்கு 2011ம் ஆண்டுக்கான நாவல் விருது கிடைத்துள்ளது!

-எம் .பௌசர்-
 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்( தமுஎகச) ஆண்டுதோறும் அந்தந்த வருடத்தில் வெளியான கலை இலக்கிய படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது.

கவிதை,சிறுகதை, நாவல்,தமிழ் வளர்ச்சிக்கான ஆய்வு, மொழிபெயர்ப்பு, விளிம்புநிலை மக்களுக்கான எழுத்துகள் ,மற்றும் படங்கள்,குறும்படங்களுக்கு துறைசார் விருதுகள் வழங்கப்படுகிறது.

நாவலுக்கான சிறந்த விருது , விமல் குழந்தைவேலுவின் கசகறணம் நாவலுக்கு கிடைத்துள்ள செய்தியினை சற்றுமுன்தான் அறிந்து கொண்டேன். எனது மகிழ்ச்சியினை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். விமலுக்கு எனது வாழ்த்துக்கள்!

விரிந்த கதை வெளியில் ,போருக்குள் சிக்குண்டு சிதைந்தழிந்த தமிழ் முஸ்லீம் மக்களின் வாழ்வை அம்மக்களின் மொழியில், அதன்கலை அனுபவத்தோடு , கண்ணீரோடு ,ஆவேசத்தோடு தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த வாழ்வை நேசிக்கின்ற ஒரு நேர்மையான கலைஞனின் உளத்துயரத்தோடு விமல் குழந்தைவேல் எழுதியிருந்தார்.

இலங்கை தமிழ் நாவல் கதைத் தளத்தில் இதுவரை யாருமே எழுதத் துணியாத அப்பிரதேச மக்களின் இழந்து போன வாழ்வின் வனப்பையும் ,மனித வாழ்வின் இணைப்பையும் நேசத்தையும், பின்வந்த காலங்கள் தந்த கசப்பான அனுபவங்களையும் விரோதத்தையும்,முரணையும், இவற்றினையும் தாண்டி இணைந்து வாழத் துடிக்கும் அம்மக்களின் உள்ளத்து வேட்கையை இந்த நாவலில் நாம் தரிசிக்கலாம். இந்த வாழ்வை கண்டு அனுபவித்தவர்களுக்கு இந்நாவலின் முக்கியத்துவம் மிகப் பெறுமதியானதாகவே இருக்கும்.

இந்த வாழ்வை காணாதவர்கள், இப்படியான காலமும் வாழ்வும் இருந்தது என கேள்விப்படுவோர், இந்த நாவலின் ஊடாக அதனை தரிசிக்கின்ற போது பெறுகின்ற உளக்கிளர்ச்சியும், மனிதர்களதும்,சமுகங்களதும் முரண்நிலைகளை தீர்ப்பதற்கான அவசிய வழிகளை தேடத்தூண்டும் உத்வேகத்தினையும் தேடலையும் தரும் பிரதியாக இந்நாவல் இருப்பது இதன் பெருவேற்றியாகும்.


2011ம் ஆண்டு வெளிவந்த படைப்புகள் ,படைப்பாளிகளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு ,கௌரவம் பெறுகின்ற கவிஞர் எச்.ஜி.ரசூல், எழுத்தாளர் ,அழகிய பெரியவன், சிறுகதை ஆசிரியர் ஜாகீர் ராசா, ஆய்வாளர் நா,மம்மது, மொழிபெயர்ப்பாளர் சுப்பாராவ், மற்றும் இயக்குனர்களான பாரதி கிருஸ்ணகுமார், விக்னேஸ்வரன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்!. இம்முறை நாவல் துறைக்கு தமிழகத்தின் பெரும் நாவல்படைப்புக் கள எல்லைக்கு வெளியே தேடி, மிகப்பெரும் மக்களின் வாழ்வுக்களத்தினை அம்மண்ணினதும் மக்களினதும் வாசத்தோடு பதிவு செய்த விமல் குழந்தைவேலுவின் படைப்புக்கு விருது வழங்கியுள்ளமைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திற்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்( இவ்விருதினை வழங்கியதன் மூலம் இம்மண்ணையும் மக்களையும் கௌரவித்துள்ளீர்கள். சமூக இணக்கமிகு வாழ்விற்கு உங்கள் தேர்வும் கௌரவமும் சமர்ப்பணமாகட்டும்!


No comments: