Tuesday, July 24, 2012

நகைச்சுவைச் சிங்கம் நினைவுகளை எழுதித்தான் கடக்க வேண்டும் ...

- கரவைதாசன் -

யாழ் புங்கங்குளம்வீதி பாண்டியந்தாழ்வை பிறப்பிடமாக கொண்டு  நெதர்லாந்தில் வாழ்ந்து வந்த "நகைச்சுவை சிங்கம்" தம்பிமுத்து தவரத்தினம் அவர்கள் பிரான்சில் 24.06.2012 இறப்பெய்தினார்.  சிறந்த நாடகநடிகர், நாடக கதாசிரியர் வசனகர்த்தா, நாடக இயக்குநர், சிலைவடிக்கும் சிற்பி, பயிற்றப்பட்ட கடச்சல் தொழில் நிபுணர், முகாமைத்துவப் பொறுப்பாளர்  எனப் பல்வேறு பரிமாணங்களையும் ஆளுமைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு உன்னத கலைஞன் அந்நிய தேசமொன்றில் யாருமறியாச் சக மனிதனாய் மரிணித்து போவது போலோரு கொடுமை, வேறெந்த மொழிச் சூழலிலுமில்லை. 
காட்டுவிளைச்சலாய் வியாபித்துப் போயிருக்கும் தமிழ்பேசும்  பெரும் ஊடகங்களுக்கு இச்செய்திகள் எட்டுவதில்லைதான். பல்வேறுபட்ட அரசியல் காரணிகளினால்  இவரைப்போன்ற பலரின் சுவடுகள் புகலிடச் சூழலில் அறியாப் பொருளாய் அற்ப மனிதர்களாய் மறைந்து போதல்  உண்மையில் கொடுமை!  வரலாற்றின் சில பக்கங்களைத்தன்னும் நம்மால் முயன்று  பதிதல் வேண்டும். இல்லையேல்   அஃது இவர்களது  சாவின் கொடுமையிலும்  கொடுமையாய் அமைந்துவிடும்.
ஈழத்தில் அளவெட்டியில் தம்பிமுத்து கனகம்மா தம்பதிகளின் தலை மகனாக   நண்பர் தவரத்தினம் அவர்கள் 05.10.1950ம்  ஆண்டு பிறந்தார். அவரது ஆரம்பக் கல்வியை பாசையூர் சென்யோசாப் கல்லூரியில் ஆரம்பித்த அவர், தொடர்ந்து கொழும்புத்துறை  இந்துமகா வித்தியாலயத்தில் தனது இடைநிலை கல்வியினை கற்றார். முத்திரைச் சந்தி புரோ மோட்டார் கொம்பனியில் தொழில்  கல்வியை கற்றுக் கொண்டு அங்கேயே முகாமைத்துவப்  பொறுப்பாளராக  கடமையாற்றினார். இடையே யாழ் அத்தியடியில் இயங்கி வந்த  ஸ்கைலாக் என்ஜினியரிங் கொம்பனியிலும் அதே தொழிலில் இருந்தார். யாழ் பாண்டியந்தாழ்வை சேர்ந்த லில்லி மலர் என்ற பெண்ணை காதல்மணம் புரிந்து இனிய காதலின் பேறாக சேர்ஜன், ஷர்மிலி, தமிழினி, மதீபன் என நான்கு பிள்ளைகளை பெற்றார்கள்.

சிறுவயதினிலேயே யாழ் கொழும்புத்துறையைச் சேர்ந்த நாடக இயக்குநர் தலைவர் அருளானந்தம் அவர்களின் "இறுதிவார்த்தை" எனும் சமூகநாடகத்தில் நடித்து,  தனது கலைப் பயணத்தினை தொடர்ந்த இவர். முடிவில் ஓர் ஆரம்பம், பரந்தர் பத்தாயிரம், அன்பின் பெருமை,பரிவும் பிரிவும், சிட்டுக்குருவி,  நான் ஒரு பெக்கோ, மாலிக்கபூர், பிஞ்சகடகம் என பல்வேறுபட்ட நாடகங்களில்  சிறுவன், பெரியவன், அரசன், ஆண்டி ,கோமாளி என வேறுபட்ட பாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார்.
சிறிது காலம் சவூதி அரேபியாவில் வேலையில் அமர்ந்திருந்த வேளை தானே கதை வசனமெழுதி இயக்கி நடித்த நாடகங்கள் பரந்தர் பத்தாயிரம், அன்பின் பெருமை.  ஆகிய இரண்டு நடகங்களுமாகும். அநேகமான இவரது நாடகங்கள் யாழ்ப்பாணம் டியூஸ் மண்டபத்தில்தான் அரங்கேறின. வடபகுதியின் பல பகுதிகளிலும்  சென்ற இடமெல்லாம் இவருக்கு பெருமையை தேடிக் கொடுத்தவை நான் ஒரு பெக்கோ, மாலிக்கபூர் என்ற  இரண்டு நாடகங்களிலும் ஏற்று நடித்த நகைச்சுவைப்  பாத்திரங்களாகும்.
இவரது கலைப்பயணத்தில் சிறிது தூரம் நானும் சேர்ந்து பயணித்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்க்கின்றபோது இவரது பிரிவில் ஒரு புறம் சோகம் நெஞ்சினை அடைக்கின்றபோதும் மறுபுறம் பெருமையாக இருக்கிறது. நினைவுகள் என்னை பின்நோக்கி சொற்பமென முப்பது ஆண்டுகள் இழுத்துச்சென்று குத்தி நிக்கின்றது. தவரத்தினம் அண்ணர்  அவர்களின் வாழ்விடம்  யாழ்ப்பாணம். எனது வாழ்விடம் கரவெட்டியிலுள்ள கன்பொல்லைக்கிராமம் கலையரங்கில்  சேர்ந்து பயணிப்பது  எப்படி சார்த்திமாயிற்று? 
அந்நாட்களில் நான் வாழ்ந்த கன்பொல்லைக்கிராமம் அரசியல் மொழியில் சொல்வதனால் ஒரு இடதுசாரிக் கிராமமாகவே இருந்தது. இடதுசாரிக் கட்சி இரசியா, சீனா என இரண்டு பெரும் துருவங்களாய் பிரிந்திருந்த நேரம். எனது ஊரில் கலை,இலக்கியம், அரசியல் எல்லாமே இரண்டு பட்டுபோய் கிடந்தன. இரசியாப் பிரிவில்  மறைந்த முதுபெரும் தோழர் ஜெயசிங்கம் நினைவாக ஜெயசிங்கம் கலாமன்றம் இயங்கியது. சீனா சார்பில் கலைமகள் கலாமன்றம் இயங்கியது. ஒருகட்டத்தில் இரண்டுமே மந்தகதியில் இயங்கின.

அந்தவேளை தற்போது பிரான்ஸில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது மாமனார் ச.நவரத்தினமும் எனது துணைவியின் தகப்பனார் கே.எஸ். இரத்தினம் அவர்களும் சேர்ந்து ஊரில் உள்ள கலைஞர்களை ஒன்றிணைத்து கரவை நவரசக் கலாலய கலா மன்றத்தினை தொடக்கினார்கள். அதில் நானும் இணைந்து கொண்டேன். ஊரில் தொடக்கத்தில் ஆதரவு அருகலாகவே இருந்தது. எனவே அவர்கள் தங்கள் கலையுலகத் தொடர்பை வைத்துக்கொண்டு வெளியிலிருந்தும் கலைஞர்களை உள்வாங்கிக்  கொண்டார்கள்.  அச்சொட்டாக பெண்ணாக தோன்றி நடிக்கக் கூடிய  இணுவில் அற்றன்டர் நவரத்தினம், அச்சுவேலி தோமஸ், அல்வாய் பழம், யாழ்ப்பாணம் குருநகர் அன்ரன் டேவிட் ஆகியோர் பெண் வேடம் ஏற்று நடித்தார்கள். கூடவே நெல்லியடி அருமை, இடக்குறிச்சி ரவி ஆகியோரை இணைத்துக் கொண்டு சென்ற இடமெல்லாம் வெற்றிக் கொடிகட்டிப் பறந்த யாழ் எம் .எச் . செல்வம் அவர்களின் கதையிலும் கே.எஸ் . இரத்தினம் அவர்களின் இயக்கத்திலும் உருவான மாலிக்கபூர் எனும் அரச நாடகத்தினை அரங்கேற்றினார்கள். அந்த நாடகத்தில் நானும் "நகைச்சுவை சிங்கம்" தவரத்தினம் அவர்களும்  பாடை, வாடை என்னும் நகைச்சுவை பாத்திரம் ஏற்று நடிதிருந்தோம்.
ஒரு  தடவை காரைநகரில், கோண்டாவில் வாகீஸ்வரி நாடக மன்றத்தினரின்  தேவனின் "அலாவுதீன்"  நாடகத்திற்கு அடுத்தபடியாக எங்களது மாலிக்கபூர் நாடகம் நடந்து கொண்டிருந்தது. அப்போது நகைச்சுவை நேரம் அவர் சொல்லிவைத்தது போல், அவர் "என்ரசிங்கமடா" என குரல் கொடுக்க, நான் "ஐயோ சிங்கமடா, சிங்கமடா" என அலாரி அடித்துக்கொண்டு மேடை முழுவதும் ஓட வேண்டும் கடைசியில் அவர் "என்ர சிங்கம் பீடியடா" என மேடையிலிருந்து  பீடியை பொறுக்கி எடுப்பார் சனம் விழுந்து விழுந்து சிரிச்சுது. மேடையின் பின்புறம் வந்தபோது எங்களுக்கு ஒப்பனை செய்கிற பொலிகை மணி கேட்டார்   `அரச நாடகத்திலையும் உங்களுக்கு பீடி பகிடியோ?` என,  இயல்பாகவே நகைச்சுவையாக பேசும் ஆற்றலை கொண்டவர் நகைச்சுவை சிங்கம். "ஏன் மணி நீங்கள் ஒப்பனையில பாவிக்கிற ஜோர்செச் சாறி அந்தக்காலத்தில மாலிக்கபூர் கட்டியிருந்தவரோ?"என்று கேட்க, எங்களது நாடகக் குழுவே அல்லோல கல்லோலப்பட்டு விழுந்து விழுந்து சிரிச்சுது. எங்களுக்கான அடுத்த நகைச்சுவை காட்சி வந்தபோது எனது மாமனார் ச.நவரத்தினம் ஒலிவாங்கியில் இதோ பாடையாக நகைச்சுவை சிங்கம் தவரத்தினம், வாடையாக நகைச்சுவைசக்கரவர்த்தி ரீ.எஸ்.தாஸ் என அறிவிப்புச்செய்தார். அன்றிலிருந்து நகைச்சுவை சிங்கம் என்ற சொல் அவரது கலைவாழ்வில் ஒட்டிக்கொண்டது. அதற்கும் அரங்கின்  பின்புறம்  வந்து ஒரு பகிடி செய்தார். ஏன் நவம் மருமோன் சக்கரவர்த்தி, நான் சிங்கம், புலி, கரடியோ என, இப்படியாக நகைச்சுவையாக பேசும் ஆற்றல் அவருக்கு இயல்பாகவே வரும்.
யாழ்பாணம்  மாநகரசபை வரலாற்றில் ஒரு தடவை முஸ்லீம் பிரஜை ஒருவர் மேயராகவந்திருந்தார் மதிப்புக்குரிய  எம்.எம் . சுல்தான் அவர்கள். இன்னொரு தடவை கிறிஸ்தவரான அல்பிரெட் துரையப்பா அவர்கள்  மேயராக வந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் இந்த இரண்டு அதிசயங்களும் அன்றைய காலகட்டங்களில் இடதுசாரிகளின் கை ஓங்கியிருந்தபோதுதான் சாத்தியமானது. துரையப்பா அவர்கள்  யாழ்நகரினை நவீனமயப் படுத்தியதில் வரலாற்று நாயகரானார். அவர் காலத்தில் நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த  இடங்களை தேர்ந்தெடுத்து அவ்விடங்களில் அறிஞர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் சிலைகள் நிறுவினார். அதற்கு  நன்றிக்கடனாக அல்பிரெட் துரையப்பா அவர்கள்  காலமானபோது அவருக்கு  மாநகரசபை முன்றலில்  ஒரு சிலை நிறுவப்பட்டது. அவரது  திரு உருவச்சிலையினை யாழ் முதலாம் குறுக்குத்தெருவில் ஒரு ஆசியர் வீட்டில் வைத்து. யாழ் நல்லூர் மூத்தவிநாயகர் வீதியைச் சேர்ந்த சிற்பி இரத்தினம் இராசதுரை அவர்கள் வெண்கலத்தில்வார்த்தெடுக்க உதவியாக இருந்து உருவாக்கிய பெருமை நகைச்சுவைச் சிங்கம் தவரத்தினம் அவர்களுக்குரியது. இப்படியாக இவரின் ஆற்றல்கள் பல...

இவர்  பற்றிய இந்தப்  பதிவில் பார்த்தீர்களானால் ஒரு இடத்தில் அண்ணர் தவரத்தினம் இன்னோர் இடத்தில் நண்பர் தவரத்தினம்  இன்னோர் இடத்தில் சக நடிகர் தவரத்தினம் என விழித்திருப்பதை நீங்கள் நிச்சயகமாக   அவதானித்திருப்பீர்கள். சகா, சகோதரன், கூட்டாளி எங்கள் அக உலகில் வயதினக்கடந்து எங்களுக்குள் அப்படித்தான் உறவு இருந்தது. உலகமயமாக்கலின் எந்த தொடக்கமும் இல்லாத அந்த எண்பதுகளின் காலகட்டத்தில் இலங்கை வானொலியும் எங்களால் அரங்கேற்றப்படுகின்ற நாடகங்களும் தான் எங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனமாக அன்று  இருந்தன. எங்களைப் போன்ற கலைஞர்களையும்  யாழ்ப்பான மக்களையும் அன்றைய வாழ்க்கைமுறை ஒன்றாகவே கட்டிப்போட்டிருந்தது அதில் தன் போக்குக்கு நகைச்சுவச்  சிங்கம் அவர்கள் குடாநாட்டின் பட்டிதொட்டியெல்லாம் சூறாவளியாய் சுற்றி வந்தார். மேடையில் இவர் செய்த நகைச்சுவை பல பின்னாளில்  திரைப்படங்களில் வரும்போது நகைச்சுவை  மேடையிலிருந்து திரைக்கு சென்றிருப்பதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.

 சமகாலத்தில் இவரோடு பயணித்த கலைஞர்களும் சுகித்த ரசிகர்களும் இவரோடு கொண்ட நினைவுகளை எழுதிக் கடப்பார்களானால் அதுவே அவருக்கு செய்யும் மிகப் பெரிய அஞ்சலி ஆகும்.......