Thursday, January 26, 2006

ஆசிரியர் தலையங்கம்

நமக்கு வெளியில் நமது தலை விதி

அன்பும் தோழமையும் கொண்ட நண்பர்களே!நீண்டதொரு இடைவெளியின் பின், இனி¢, சமூக கலாசார இலக்கியத் தளத்தில் சந்தித்துக் கொள்கிறோம். கடந்த காலங்களில், கூடவே எங்களுடன் புலம்பெயர்ந்து வந்த இயக்க முரண்பாடுகள் பற்றியும் மிகப் பிழையான பழைய ஐதீகங்கள், மூடநம்பிக்கைகள், கலாசார முரண்பாடுகள், அதிகாரத்துவம் அதனையொட்டி எழும் வன்முறைகள் பற்றியும் நாம் நிறையவே எழுதியும் பேசியும் விவாதித்தும் வந்துள்ளோம். சமூகப் பொறுப்போடு எடுத்துக்கொண்ட அனைத்து விடயங்களையும் அதியுயர் ஜனநாயக கோட்பாட்டின் பன்முகத்தன்மையான மறு விசாரணை செய்தல், சுயவிமர்சனத்துள்ளாக்குதல், பிழைகளைக் கண்டறிதல், கண்டறிந்த பிழைகளை முடிவுக்கு கொண்டு வருதல் எனக் கருத்துரீதியில் எம்மை பலசந்தர்ப்பங்களில் சரி செய்தும், ஒற்றைச் சிந்தனையில் சில சந்தர்ப்பங்களில் வசதிக்குத் தக்கவாறு கணக்குத் தீர்த்தும் வந்துள்ளோம். இந்த வசதிக்குத் தக்கவாறு கணக்குத் தீர்த்தபோதுதான் எங்களிடமிருந்த சிற்றிலக்கிய ஏடுகள் பல காணாமல் போயின. எமது திசைவழியை நாம் தவறவிடல் தகுமா? “தோன்றி வளர்ந்து சிதைந்து அழிந்து, மறுபடியும் மறுபடியும் புதியன தோன்றும்” எனில் எமது சமூகக் கடமையை நாம் தவறவிடல் தான் தகுமா?எமது நிகழ்காலம் கொடூரங்களாலும் பயங்களாலும் நிறைந்துள்ளது. தாயகத்தில் தமிழ் தேசியத்தினை தொடர்ந்தும் அரைகுறைத் தீர்வுக்கதையாடல்கள் மூலமும் அல்லது வல்லரசுப் பின்னணிகளின் விளைவான சமரசங்கள் மூலமும் சமாதானத்துக்கான தீர்வானது தள்ளிக் கொண்டே செல்கிறது. புலம் பெயர்ந்த மண்ணில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதான பிரச்சினைகளை சந்திக்கிறோம். எமது இரண்டாம் தலைமுறையினருக்கும் எமக்குமான இடைவெளி கூடிக் கொண்டே செல்கிறது. இனி வரும் காலங்களில் அவர்கள் அந்தந்த நாட்டின் அடிக்குறிப்போடு தான் தங்களை அடையாளப்படுத்தப்போகிறார்கள். எனில் இணைவாக்கத்துக்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்துதல் இன்றைய காலத்தின் கட்டாய தேவை. இனி தொடரும்....-ஆர்-

No comments: