Thursday, January 26, 2006

நனவோடை - சிறுகதை


-மீரா
மனத்தை ஏதோ சூனியம் கவ்விக்கொண்டிருக்கிற மாதிரி ஒரு பிரமை. அப்படி ஏதும் நடந்து விடவில்லை. யாருடனும் எந்தக் கொடுக்கல் வாங்கலோ, வாக்குவாதமோ எதுவுமே இல்லை ஆனால் மனம் மட்டும் வெறுமையில் போன மாதிரி. கண்கள் மட்டும் ரீவியில் பதிந்திருக்க, கைகள் மட்டும் ஏனோ தானோ என்று ரிமோட் கொன்றோலில் சனல்களை மாற்றி மாற்றி அழுத்திக்கொண்டிருக்கிறது. றொஸ்கில் பெஸ்ரிவலில்; (Roskilde Festival) அப்படி என்னதான் இருக்கிறது. இவ்வளவு சனக் கூட்டம். ஆண்கள் தோள்களில் பெண்களும், பெண்கள் மடிகளில் ஆண்களுமாக..... ஏதோ அதில் இருக்க வேண்டும். எனக்குத்தான் அந்த இசையை சுவைக்கத் தெரியவில்லை. இவர்களால் மட்டும் வீ.வீ.வைரமுத்துவின் கூத்தை ரசிக்க முடியுமா என்ன.கை ஆபிரிக்காவுக்குத் தாவுகிறது. மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடுகிறார்கள். கண்முன்னே ஒரு குண்டனின் தடியடியில் ஓர் கறுப்பனின் தலையிலிருந்து இரத்தம் பீறுகிறது. கற்கள் எங்கேயோ எங்கேயோ இருந்து வந்து விழுகிறது. ஓர் பெண்ணை நாலு பேர்; தர தரவென்று பற்றை மறைவுக்குள் இழுத்துக் கொண்டு போகின்றார்கள். அந்தப் பெண்ணில் கதறலில் புதர்ச் செடிகள் குலுங்குகின்றது. மேல் அறையில் எனது மூன்றாவது பிள்ளை வயிற்றுக்குத்தால் அழுகிறது. மனைவி இரண்டு மணித்தியாலமாக சமாதானப்படுத்துவது கேட்கிறது. ஆனால் எனக்குத்தான் மேலேபோய் ஆறதல்ப்படுத்த மனம் ஏவுதில்லை. சோபாவின் சொகுசிலும் மனத்தின் மூட்டத்திலும் மேலும் அமிழ்கிறேன். அந்த அண்ணாமலைச் சித்தர் எனக்கு ஏதோ சொல்லுமாப் போல் இருக்கிறது. சிக்கடித்த முடியும், அரைத்துண்டுத் துணியும், கால் வயிற்றுக் கஞ்சியுடன் அந்த சித்தர் நிமிர்ந்து நிக்கிற மாதிரி ஏன் என்னால் சுதந்திரமாக திரியமுடியவில்லை. சுமைகள் பொறுப்புக்கள், கடமைகள் என்று எல்லாத்தையும் தூக்கிப்போட்டுக் கொண்டு ஏன் அமிழ்ந்து அமிழ்ந்து போகிறோம். சித்தருக்கு என்ன கவலை? எந்தச் சீட்டு, என்ன கழிவு, என்ன வட்டி, என்ன பில்... என்ன கவலைகள். ஒரு சோற்றுப் பருக்கையாவது எந்த யோசினையும் இல்லாமல் சாப்பிட முடிகிறதா? கையும் மனமும் ஒன்று சேரச் சாப்பிட்டு, கண்மூடி கவலையில்லாது தூங்கி எத்தனை நாள் ஆச்சு. ரெலிபோன் மணி பயங்கரமாக அலறுகிறது. செல்லத்துரையண்ணை தனது மகளின் 5வது பிறந்தநாளுக்;கு வரட்டாம். காலம் எவ்வளவு கெதியாக ஓடுகிறது. இப்போது தான் 4வது பிறந்தநாளுக்கு போனதுபோலை இருக்கிறது. 4வது பிறந்தநாளுக்கு 3வதுக்கு வந்ததில் அரைவாசிப் பேரும் இல்லை. இம்முறை அதிலும் அரைவாசியாகத்தான் இருக்கும் ஏன் பழகின்றோம், எதுக்காகப் பழகின்றோம,; எவருடன் பழகின்றோம்... எதுவும் .இல்லாமல் அண்ணா, அக்கா, அன்ரி, அங்கிள் உறவு முறை வேறு. ஆனால் அண்ணா அக்காவிடம் அறாவட்டி வேண்டுவார். அன்ரி அங்கிளுக்கு ஆயிரம் பொய் சொல்லி அடித்து சத்தியம் செய்வார். இந்த உறவுமுறைகளால் செல்லத்துரை யண்ணையின் சுற்றுவட்டாரம் வருசத்துக்கு ஓர் தடவை குறையும். ஏன் என்மனம் எந்தக் காரணமும் இல்லாமல் எல்லா இடமும் அலைகின்றது. உந்த ரீவியில இருந்தது காணும். ஓருக்கா வயித்தாலை போற மருந்தை வேண்டிக் கொண்டு வாங்கோ. அதைக் குடுத்தால் ஆவது சுகமாய் இருக்கும். மனசி மகளை ஆற்ற முடியாமல் என்மேல் கோபமாய்க் காட்டுகிறாள். நேரத்தைப் பார்க்கிறேன் இரவு 9.30 மணியாகிவிட்டது. மூலைத் தெருவிலுள்ள மருந்துக் கடைதான் இரவு முழுக்கத் திறந்திருக்கும். காரில் போவதைவிட நடந்து போனால் மனது நல்லாய் இருக்கும் போல இருக்கு. ஐhக்கட்டையும் கைப்போனையும் எடுத்துக் கொண்டு றோட்டில் இறங்கின்றேன். றோட் வெறிச்சோடிக் கிடக்கின்றது என் மனம் போல யாரையும் காணவில்லை. விடியவிடிய திருவிழாக்கள் நடந்த தெருக்கள் கேர்வியூ சட்டம் வந்தபோது இருட்ட வர முதலே இருட்டிவிட்டது போல இந்த டென்மார்க் தெருக்களும் இருக்கிறது. கைத்தொலைபேசி அடிக்கிறது. மாமாவுக்கு ஊரிலை கடுமையாம் ஒருதரம் அதிர்ந்து போனேன். ஏதோ ஒரு கொப்பூழ்கொடி உறவு அறுந்தது போலை@ திருவிழாவுக்கு, பள்ளிக்கூடத்துக்கு, படத்துக்கு... சைக்கிளில் முன்னால் இருத்திக் கொண்டு போய்விட்டது தொடக்கம், டென்மார்க் வர வெளிக்கிட, ரெயில் ஸ்ரேசன் வரை வந்து அழுது அழுது அனுப்பியது வரை ஒன்றன்மேல் ஒன்றாக வருகிறது. எனக்கு என் மாமா வேண்டும் நீ வேண்டும் கண்கள் கலங்கிறது. மிக அருகில் ஓர் கார் வந்து விலத்திப்போகிறது. அடுத்த ரெலிபோன் வருகிறது. நீங்களும் ஊருக்கு வருவியளாமோ? மனம் நிசத்தை நோக்கி திரும்புகிறது. பக்ரறியில் லீவு கிடைக்குமா? ஏக்ஸ்ராவாகச் செய்யும் கழுவுறவேலையை எப்படி சமாளிக்கிறது. களவாய் வேலை செய்யும் பிற்சாகாரன் என்னை விடுவானோ. நான் போட்டுவர வேறயாரையும் எடுத்திடுவானோ. என்ன இது? என்னை நினைக்க விசராய் இருக்கிறது. இப்படியா இஞ்ச டென்மார்க்குக்கு வர முதல் என்ர யோசினைகள் இருந்தது. நான் மாறிவிட்டேனா? இல்லை நிசத்தை யோசித்து இலங்கைக்கு போகாமல் இருப்பதுக்கு நியாயம் கற்பிக்கிறேனா? ஏன் நான் பயப்பட வேண்டும்? இலங்கை என் நாடு இல்லையா? எதுக்கு நான் பயப்பட வேண்டும்? நான் துரோகியா? இல்லை... இல்லை... இல்லை... ஆனாலும் மனம் பயப்படுகிறது. நான் வளர்ந்த இலங்கை அல்ல அது. காணி உறுதி மட்டும் என் பெயரில் ஆனால் யாரோ அளவெட்டி ஆட்களை இருத்தி இருக்கினமாம். போனாலும் வீட்டுத் தாவாரத்தில்த்தான் நான் படுக்க வேண்டும். அல்லது தங்கைச்சி வீட்டைபோய் நிற்கலாம். மருந்தை வேண்டிக் கொண்டு திரும்புகிறேன். சந்தின் மூலையில் 3,4 பேர் பியர்ப் போத்தலுடன் நிற்கிறார்கள். பொருட்படத்தாமல் தாண்டிக் கொண்டு போகின்றேன்.சோட்ட சுவீன கோ யெம் (கறுத்தப் பண்டியே வீட்டை போ) பின்னால் கத்திக் கேட்கிறது. உடல் உதறிப் போகிறது. இருப்பினும் துணிவினை வரவழைத்துக் கொண்டு அவர்களை நெருங்கிறன். உங்களுக்குத் தெரியுமா எனக்கு டென்மார்கில் பிரஐh உரிமை இருக்கிறது. நானும் இந்த நாட்டுப் பிரiஐதான் சொல்லி முடிக்கவில்லை ஓர் வெறும் போத்தல் என் கன்னத் தடியால் பறக்கிறது. கை, கால்கள் எல்லாம் மின்னுகிறது. எனது வலு எல்லாம் போய்விட்டது. அவங்களும் போய்விட்டாங்கள். கடைசியாக அவங்கள் சொன்ன வார்த்தை மட்டும் காதில் ஒலிக்கிறது. உந்த நியாயங்களை உன்ர நாட்டில போய்க் கதை. நாக்கு வரண்டு போய்க் கிடக்கிறது. எங்கே என் நாடு” ஐக்கற் பொக்கற்றில் இருந்த பிள்ளையின் மருந்துப் போத்தல் உடைந்து போய் இருக்கிறது.

No comments: