Thursday, January 26, 2006

முல்லையூரானும் அவர் தம் அருவுருவமும் என்னுள்...

-யூலியஸ் அன்ரனி-
1984இல் தாயகத்தை விட்டுப் பிரிந்து 1986 இலிருந்து டென்மார்க் நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் முல்லைய+ரான் புலம்பெயர்ந்ததும் சில காலங்கள் எழுத்துத்துறையில் தன்னை ஈடுபடுத்த முடியாமலிருந்து சிறிது சிறிதாய் தன் மனநிலையை மாற்றி 1993இல் நிர்வாண விழிகள் என்னும் கவிதைத் தொகுதியையும், காகம் என்ற பெயரில் ஒரு மாத சஞ்சிகையையும் வெளியிட்டு வந்தார். சில தடைகளினால் காகம் சஞ்சிகை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டார். கவிஞர் முல்லைய+ரானுக்கும் நோர்வே தேன்தமிழோசைக்கும் அல்லது எனக்குமான உறவு ஏற்பட்டது. அது இப்பொழுதும் என் நெஞ்சில் பசுமையாய் விரிந்து கிடக்கிறது. கவிச்சித்திரம், கவிதைக்கோடுகள், சிறுகதைகள், நாடகங்கள், உரைச்சித்திரம் என வானொலி நிகழ்ச்சிகள் தயாரித்துக் கொண்டிருந்த வேளை, ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்குப் பின்னாலும் பாடலொன்றையும் சேர்ப்போமென முடிவெடுத்து பாடல்களை எழுதி இசையமைக்கவும் தொடங்கிவிட்டார் கவிஞர் தமயந்தி அவர்கள். அவ்வேளை மழைதூறி நிலம் நனைந்துதெரு நீளம் சலசலக்கும்களைமீறி தாய்நாடங்குபுகை மூடி இருண்டிருக்கும்..என ஆரம்பிக்கும் கவிஞர் முல்லைய+ரானின் கவிதைக்கு இசையமைத்துவிட்டு என்னைபாடச் சொன்னார். பாடல் பதிவானது. 2 வருடங்களின் பின்பு கவிஞர் முல்லைய+ரானை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது அவர் அப்பாடலுக்கான இசை தொடர்பாகவும், பாடிய தன்மை தொடர்பாகவும் வைத்த விமர்சனம் எனக்கு உற்சாகத்தைத் தரவே, எனது வானொலி நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலிநாடாவை கேட்கும் படி கொடுத்தேன். சில நாட்களின் பின்னர் ஒரு நீண்ட கடிதமொன்றை எழுதி அனுப்பியிருந்தார். அதிலே எமது ஒவ்வொரு நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் தகுந்த விமர்சனத்துடன், தான் தமிழ் இலக்கியத்துள் புதிய வடிவமொன்றை எழுத எண்ணியுள்ளதாகவும்; அதை வானொலிக்கென எழுதுவதாகவும், வானொலித் தயாரிப்பை என்னையே செய்யும்படி கேட்டிருந்தார். அப்போது என்னுள் ஒரு பயம் ஏற்பட்டது. பொதுவாக சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வரும் கவிதைகள், சிறுகதைகளை வாசிக்கும் போது அவை என் மனதைத் தொட்டால், எம் சமூகத்துக்கு கொடுக்கப்பட வேண்டிய விடயங்கள் எனக் கண்டால் அவற்றை வானொலிக்குத் தயாரித்து ஒலிபரப்பியதே அதிகம் எனலாம்.ஆனால் இப்போது ஒரு கவிஞர், சிறுகதை எழுத்தாளன் தன்னுடைய படைப்புக்கள் எனது குரலிலே, எனது தயாரிப்பிலே வரவேண்டுமென கேட்கிறாரே. அதிலும் கவிஞர் முல்லைய+ரான் ஈழத்து இலக்கியப் பரப்பில் ஆழமாகப் பதிவானவர். ஆற்றல்மிக்க, கூர்மையான படைப்பாளி. முதிர்ந்த அனுபவம் வாய்ந்த எழுத்தாளன். இவரது எழுத்துக்கு எனது குரல் ஈடு கொடுக்குமா? தகுந்த முறையில் மக்களிடம் போய்ச்சேருமா? என்ற அச்சம் என்னுள் எழுந்தது. அதை அவருக்கு வெளிப்படுத்தினேன். அவரே எனக்குத் தைரியத்தைக் கொடுத்து வேலையைத் தொடங்கு முடிய முடிய ஆக்கங்கள் வந்து சேரும் என்றார்.மூன்று நாட்களுள் ~~யுத்த நாட்களில் நடத்தல் என்ற படைப்பு தபாலில் வந்தது. பார்த்ததும் அவசர அவசரமாக இசையைத் தேடினேன். ஒலிப்பதிவை ஆரம்பித்தேன். ஒவ்வொரு சொற்களும் என்னுள் தாக்கத்தைத் தந்தது. கதையுள் செல்லச் செல்ல நான் என்னை படைப்புக்குள் முழுமையாக இழப்பதை உணர்ந்தேன். நிகழ்ச்சி ஒலிப்பதிவு முடிந்ததும் சில நிமிடங்கள் என்னால் எதுவுமே செய்ய முடியாமலிருந்தது. எமது தாய்நாட்டிலே யுத்த நாட்களில் ஒரு குடும்பம் எதிர் கொள்ளும் இன்னலை மிகத் துல்லியமாக படைத்திருந்தார். ஈழத்திலே எமது மக்கள் அனுபவித்த, அனுபவித்துவரும் நிகழ்வுதான் இது. ஆனால் ஈழத்திலிருக்கும் எழுத்தாளர்களே இப்படி எழுதியிருப்பார்களா? என்று என்னுள் நானே கேட்டுக் கொண்டேன். இந்நிகழ்ச்சியைக் கவிஞருக்கு உடன் அனுப்பினேன். கேட்டுவிட்டு தொலைபேசியில் என்னை அழைத்து ஒரு குழந்தையைப் போல் விம்மி விம்மி அழுதார். கூடவே அவர் மனைவியும் அழுதார். சில நிமிடங்களின் பின் மீண்டும் என்னோடு பேச ஆரம்பித்தார். இந்நிகழ்ச்சி தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் இது சிறுகதையோ, கவிதையோ, கட்டுரையோ அல்ல இப்புதிய வடிவத்துக்கு புதிய பெயரொன்றை வைப்போமென அவரது மனைவியுடனும்;, நண்பர்களுடனும் கலந்துரையாடி ~~அருவுருவம் என்ற பெயரை சூட்டினார். இவ்வடிவத்திலேயே சில முக்கியமான விடயங்களை எழுதப் போவதாகக் கூறினார். சில நாட்களால் ~~அவர்களுடைய வாசல் எனும் தலைப்பில் அருவுருவம் ஒன்று வந்தது. வெலிக்கடை சிறையில் சித்திரவதை அனுபவித்துவரும் ஒரு நிரபராதி எழுதிய கடிதத்தினை வைத்தே அவர்களுடைய வாசலை எழுதியிருந்தார். ~~எனது புன்னகையைப் பறிப்பதில் அப்படி உனக்கென்ன இன்பமடாகட்டளை இடப்பட்ட இராணுவக் காரனே போ! போ! பொலநறுவையில் ஆள் துயிலடிக்கும் அந்த நீண்ட புத்தனை எழுப்பி வா வழக்கை விசாரிப்போம். நான் அடங்கினால் நீ வீரன் நீ அடங்கினால் நான் வீரன்.இவ்வரிகள் சோக வரிகளோடு உறவாடிக் கொண்டிருந்த என்னுள் வீரத்தைக் கொடுத்தது. கவிஞர் எழுதிய குங்குமம் ப+சப் படாத கோழிக்குஞ்சுகள், சாயிராப் ப+மி, உயிர் உள்ள சரித்திரம் போன்றவையும் என்னை மிகவும் பாதித்தது. ஒவ்வொன்றிலும் உயிரோட்டமும், பிரகாசமும் இருந்தது. இதுவரை ஐந்து அருவுருவங்களை எழுதியுள்ளார். அவற்றுள் சாயிராப்ப+மி மிகவும் வித்தியாசமானது. ஆப்கான் மக்களின் சமகாலப் பிரச்சனை, அவர்களது காதல், அந்த அரசின் தடைச்சட்டங்களால் மக்கள் படும் துன்பங்கள், அனைத்தையும் மிக அழகாக கவித்துவத்தோடு எழுதியிருந்தார். சாயிராப்ப+மியை படிப்போர் ஆப்கானிற்குள் நுளைந்து விடுவர்கள் என்பதில் ஐயமில்லை. எனவே அம்மண்ணுக்குரிய இசையைத் தேடுவதில் பல நாட்களை நான் செலவு செய்யவேண்டி இருந்தது.15 நிமிடங்கள் தொடர்ந்து நான் கண்ணீர்விட்டு அழுதுகொண்டே ஒரு நிகழ்ச்சி தயாரித்துக் குரல் கொடுத்தேன் என்றால் அது ~~உயிர் உள்ள சரித்திரம் என்ற அருவுருவத்துக்கே. என்னால் முடியாமல் பல தடவைகள் ஒலிப்பதிவை நிறுத்தி நிறுத்தித் தொடர்ந்தேன். எப்படி இவர் இதை எழுதி முடித்தார்? இந்த வார்த்தைகள் இவருடைய இதயத்திலிருந்து எப்படி விழுந்தன? இதை எழுதி முடிப்பதற்குள் என் அண்ணன் துடித்துப் போயிருப்பாரே என என் மனம் துடித்துக் கொண்டே இருந்தது.; ~~எப்படி எழுதினீங்கள்? என அவரிடம் கேட்டேன். ~~ஆ, எழுதி முடிக்கும் வரை கண்ணீர் வந்தபடிதான், ஆனால் ஒரு இடத்திலும் தடங்கல்ஏற்படவே இல்லை. சொற்கள் தடையின்றி வந்துகொண்டே இருந்தன என்றார். அருவுருவம் என்ற சித்திரத்துக்கப்பால் அவரது கவிதைகள், சிறுகதைகள், வானொலி நாடகம் போன்றவை பலவற்றையும் நான் தயாரித்திருக்கிறேன். ஒரு நாள் வானொலியில் மாவீரர் நிகழ்ச்சி செய்வதற்கு நாடகம் ஒன்று எழுதித் தரும்படி கேட்டேன். உடனே நாவற் பழங்கள் என்ற நாடகத்தை எழுதி அனுப்பினார். முல்லைத்தீவில் நடந்த உண்மைச்சம்பவம் ஒன்றை வடித்திருந்தார். 8 கதாபாத்திரங்கள் 2 பெண்கள் (தாய்மார்). அவ்விருவரும் ஒப்பாரி வைத்து அழவேண்டும். ஒலிப்பதிவின் போது கவிஞர் ஒப்பாரிக்கென எழுதிய வரிகளைப் பார்த்ததும் அவர்கள் அழுதுகொண்டே செய்தார்கள். மற்றைய ஆண்களும் மனம்கலங்கி குரல் வராது நின்ற காட்சி இப்பொழுதும் என் மனதை பிழிந்து கொண்டிருக்கிறது. கவிஞர் ஆட்கொள்ளும் சொற்களில் கூர்மையும், அழகும் நிறைந்திருக்கும். வேறு யாரும் பாவித்திராத, எழுதியிராத சொற்களை பிரயோகிப்பது இவரது சிறப்புத் தன்மை எனலாம். மனிதத்துக்காய் நேர்மையாக துணிச்சலாய் குரல் கொடுத்து வருபவர். துன்பத்தில் வாடும் உலக மக்களுக்காக எழுதுவதிலேயே திருப்தி காண்பவர். கவிஞரும் நானும் இணைந்து செய்த அனைத்து நிகழ்ச்சிகளும் நோர்வே தேன்தமிழோசையிலும், லண்டன் ஐ.பி.சி வானொலியிலும், தமிழ்நாதம் இணையத்தளத்திலும் ஒலிபரப்பப்பட்டன.

No comments: