Thursday, January 26, 2006

சிங்கள சாதியமைப்பை விளங்கிக் கொள்ளுமுன்...


-சரா-
இந்தக் கட்டுரையானது தமிழ்த் தேசத்தின் மீதான சிங்கள சாதியத்தின் தலையீட்டைப் பற்றிப் பேசுவதை விட சிங்கள சாதிய கட்டமைப்பு குறித்த ஒரு அறிமுகத்தை செய்வதிலேயே அதிக அக்கறை கொண்டிருக்கும். சிங்கள சாதியமைப்பானது தமிழ்ச் சூழலில் ஒரு பேசுபொருளுக்குரிய விடயமாக இருப்பதில்லை. அது அவ்வப்போதைய கதையாடல்களுக்குள் வந்துபோகும் ஒரு விடயமாக மட்டுமே பெரும்பாலும் இருந்து வருகிறது. சிங்கள தேசமானது அதன் இனப் பெருமிதம் பேசி, சிங்களத் தேசியவாதம் பேரினவாத ஈடாக பாசிசப் பரிமாற்றம் வரையான அதன் பரிணாம வளர்ச்சியும், ஒவ்வொரு காலகட்டத்திலும் அது வெளிக்காட்டும் பரிமாணங்களையும் கண்டுகொள்ளாமல் இலங்கையில் இனப்பிரச்சினை பற்றியோ இலங்கையில் ஒரு சமூக மாற்றம் பற்றியோ முடிவுகளுக்கு வரமுடியாது.தமிழ்ச் சூழலில் இதன் தாக்கம் பற்றிய ஆய்வுகள் தொடர்;ந்து மேற்கொள்ளப்படவேண்டும். சிங்களத் தேச உருவாக்கம் பற்றிய பார்வைகளை கண்டடைவதற்கு அதன் உட்கட்டுமானத்தில் புரையோடிப்போயுள்ள சாதியத்தை அடையாளம் காண்பதுடன், சிங்களத் தேசத்தின் பாசிசக் கூறுகளுக்கு அதன் அகப்; பண்புகள் ஆற்றிய பாத்திரத்தையும் இனங்கண்டாக வேண்டும்.இதன் அடிப்படையில் சிங்கள சாதியம் பற்றிய அறிமுகத்தையே இந்தக் கட்டுரை வழங்கும்.தேசியவாதத்தை பிற்போக்கான திசையில் வழிநடத்துகின்ற மிக முக்கிய பண்புகளாக இருப்பவை அவ் இனக்குழுமம் பற்றிய புனிதத்துவம், தூய்மைவாதம், இனப்பெருமிதம் போன்றவையே. இதன் அடிப்படையில் கட்டமைக்கப்படும் கற்பிதங்கள், வரலாற்றுத் திரிபுகள், போலிப் பிரச்சாரங்கள், மூட நம்பிக்கைகளால் எழுப்பப்பட்ட மாயைகள் போன்றனவற்றைக் குறிப்பிடலாம். அது கொண்டிருக்கும் பலத்தை உயர்ந்தபட்சம் பயன்படுத்தி இவ்வகைப்பட்ட ஐதீகங்களை திரும்பத் திரும்ப பரப்புவதன் மூலம் அது நம்பவைக்க முயலும். இவ்வாறான நம்பிக்கைகளுக்கு மதம் என்கிற மிகப் பலம் பொருந்திய ஆயுதம் பிற்போக்கு திசையில் வழிநடத்தப்படும் சகல தேசியவாதங்களுக்கும் இலகுவாக கைகொடுக்கும்.அவ்வாறு கைகொடுக்கும் முக்கிய மரபுசார் காரணியாக இந்திய உபகண்டத்தில் பல நாடுகளில் இந்த சாதியம் திகழ்ந்து வருகிறது. இதைவிட இந்த சாதியத்துக்கென்றே தனித்துவமான போக்கும் அதன் உறுதியான பண்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆளும் குழுமங்கள் எப்போதும் தமது மூலோபாயங்களை அடைவதற்காக இந்த காரணிகளை இலகுவாக பயன்படுத்திவிட்டுப் போகின்றன. ஆளும்குழுமங்களின் இருப்புக்கு இவை தந்திரமாக சமூகத்தில் கையாளப்படும். இன்றைய பூலோகமயமாக்களுக்கு கூட ஏகாதிபத்தியத்துக்கு துணைபோகிற காரணிகளாக இவை இருக்கின்றன. இது போன்ற காரணிகளை ஆளுங்குழுமங்கள் தன்னகத்தே கொண்டிருப்பதானது ஏகாதிபத்திய நலன்களுக்கு இலகுவான ஒன்றாக ஆக்கிக்கொடுக்கப்பட்டிருக்கிறது.சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளையும், ஐதீகங்களையும் பரப்புவதிலும், அவற்றை நம்பவைப்பதையும் ஏன் இவ்வளவு இலகுவாக மேற்கொள்ள முடிகிறது?இந்த மலினத்துவ அரசியலை கொண்டு நடத்த எது இலகுவாக்கிக் கொடுத்துள்ளது.எப்போதும் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், கற்பனைகள், கனவுகள் போன்றவற்றிற்கு எல்லைகள் வகுக்க முடிவதில்லை. இந்த எல்லையற்ற இடைவெளிக்குள் எதனையும் போட்டுக்கொள்ளலாம். இந்த இடைவெளியைநம்பித் தான் விஞ்ஞானத்துக்குப் புறம்பான மூடநம்பிக்கைகள் ஆட்சிசெலுத்துகின்றன. இந்த இடைவெளியை நம்பித்தான் போலிகள் பல நிறுவனமயப்பட்டுள்ளன. இந்த இடைவெளியை நம்பித்தான் உலகில் அனைத்து அதிகாரத்துவமும் கோளோச்சுகின்றன. கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் இப்படித் தான் இருப்பார் என்றும் அதற்கு கண், காது, மூக்கு, எல்லாமே வைத்து நம்பவைத்தது மட்டுமல்லாமல், கண்ணுக்குத் தெரிவதில்லை என்றும், ஆதியும் அந்தமும் இல்லையென்றும், கேள்விக்குட்படுத்துவது பாவம் என்றும், பழித்தால் நரகம் என்றும் நரகம் பற்றிய கற்பிதங்களும், இவை எல்லாவற்றையும் தொடர்ந்து நிலைநிறுத்த மிரட்டுகின்ற கட்டுக்கதைகளை புனைந்து அவற்றை இலக்கியங்களாக்கி, அந்த இலக்கியங்களை உண்மையென்றாக்கி, பாடப்புத்தகங்கள் தொடக்கம் அரசு கையகப்படுத்தியிருக்கும் பிரச்சார சாதனங்கள் வரைக்கும் சகல வளங்களையும் பயன்;படுத்தி நிலைநிறுத்த எத்தனிக்கின்றன.அதிகார அலகை தக்க வைக்க இத்தகைய மாயைக்குள் மக்களை வைத்திருப்பதன் அதிகாரத்துவத்தை இலகுவாக கொண்டு நடத்த முடிகிறது. கேள்விக்குட்படுத்தும் அல்லது இதனை அம்பலப்படுத்தும் சக்திகள் மடையர்களாக்கப்பட்டு, துரோகிகளாக்கப்பட்டு, பாவப்பழி சுமத்தப்பட்டு வன்முறையால் பதிலளிக்கப்படும். மாற்றுக்கருத்துக்கள் பலங்கொண்டு நசுக்கப்படும். தமது பிரச்சினைகளை யதார்த்தமாக எதிர்கொள்ள திராணியற்றவர்களாக ஆக்கப்படும் மக்கள், இத்தகைய மரபுகளில் திளைத்திருக்கச் செய்வதன் மூலம் கடவுள்மாரிடம் பொறுப்பை விட்டுவிடுவார்கள்.சமூகத்தில் பொருண்மைகள் எல்லாவற்றுக்கும் உடனடி விளைவுகள் வேண்டும். மற்றவற்றிற்கெல்லாம் "தெய்வம் நின்றருக்கும்". இவ்வாறு பிழையான வழிகாட்டல்களுக்கு இலகுவாக பலியாகிவிடக்கூடிய முழு ஏற்பாடுகளும் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக அடக்கப்படும் மக்கள் இதற்கு பழக்கப்படுத்துகிறார்கள்.பொய்மைகளை ஏற்றும், உண்மைகளை மறுத்தும் வந்திருக்கிறோம். இந்த சமூக அமைப்பில் நாம் விரும்புகிற பொய்மைகளை விட நாம் வெறுக்கும் உண்மைகள் தான் அதிகம். மலினத்துவத்துக்கு அடிமைப்பட்டுக்கிடக்க வைத்திருக்கிறது. நாம் வெறுக்கும் "உண்மைகளை" புறந்தள்ளியே பழக்கப்பட்டு வந்திருக்கிறோம்.இந்த அடிப்படைகளை மறுத்து விட்டு புரட்சிகர சமூக மாற்றத்துக்கான திசைவழியை கண்டறிய முடியாது.தமிழ்த் தேசத்துக்குள் நிலவி வரும் சாதியம் பற்றி தமிழ்ச்சூழலில் பல ஆய்வுகள், அதனடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட வழிமுறைகளைச் சார்ந்த மூலோபாய தந்திரோபாயங்களை வகுத்தல் என்பவற்றை நாம் கண்டுள்ளோம். ஆனால் இன்று சிங்கள அரச பயங்கரவாதத்தை மட்டுமன்றி இன்று சிங்கள சிவில் சமூகத்தையும் வழிநடத்த தலைப்பட்டுள்ள சிங்கள பௌத்த பேரினவாதத்தினை எவ்வாறு புரிந்து கொள்ளப் போகிறோம்? இதற்கான ஊற்று மூலம் சிங்கள தேச உருவாக்கத்தில் எங்கிருந்து வந்திருக்கிறது?சாதியமைப்பினை எதிர்த்து முதன்முதலிலும், அதிகளவிலும் போதித்தவராக கொள்ளப்படுபவர் கௌதம புத்தர். அவரின் போதனை வழிகாட்டலில் இருக்கின்ற ஒரு இனக்குழுமம், இன்னொரு இனத்தையும் ஏன் தனது இனத்துக்குள்ளும் நரவேட்டை புரிய எங்கிருந்து கற்றுக் கொண்டது? இது கூர்ந்து அவதானிக்க வேண்டியவை.தமிழ்த் தேசம் தனக்குள் நிலவுகின்ற சாதியத்தை, தற்காலிகமாக ஒத்திவைத்திருப்பதாக மேலோட்டமாக நம்பவைக்கும் எத்தனிப்பைப் போலவே சிங்களத் தேசமும் மண்ணின் மைந்தர்களான சிங்கள பௌத்தர்கள் என்ற குடையின் கீழ் சாதியம், கட்சி அரசியல், பிரதேசவாதம், வர்க்கப் பகை என எல்லாவற்றையும் தற்காலிகமாக பின்போடக்கோருகிறது இப்போது. முதலில் தமிழ்த் தேசப் போராட்டம் ஒடுக்கப்பட வேண்டும் என பகிரங்கமாக பிரச்சாரிக்கிறது அது. இவை பெருங்கதையாடல்களாக ஆக்குவதற்குரிய அனைத்து வளங்களும் ஒன்றுகுவிக்கப்படுகின்றன. தமிழர்கள் வரலாற்று எதிரிகளாக சித்திரிக்கப்படுகிறார்கள்.இவ்வாறு அறைகூவுபவர்கள் எந்த சக்தியினர்? நிச்சயமாக ஆளும் குழுமத்தினர் தான். சிங்கள-பௌத்த-கொவிகம-ஆணாதிக்க-நகர்சார்-உயர் வர்க்க குழாமினரை மையமாகக் கொண்ட சக்திகளே இந்த அறைகூவலுக்கு தலைமை தாங்கி வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.இனி, அடுத்து...

No comments: