Wednesday, February 27, 2013

என்றும் எதற்கும் விலைபோகாத மக்கள் தொண்டன் தோழர் சண்முகலிங்கம்


- கனேடிய ஜனநாயக தமிழர் கலாச்சார பேரவை (CDTCA)
008சண், சண் அண்ணா என அழைக்கப்படும் தோழர் பொன்னம்பலம்  சண்முகலிங்கம் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பின்னர் 22-02-2013 அன்று கனடாவில் காலமானார். அவரது  மரணம் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது அவரது உறவினர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவரையும் சொல்லணாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் இளம் பராயத்திலிருந்தே அரசியல் ,சமூக விடயங்களில் ஆர்வமுள்ளவராக  இருந்தார் .இடதுசாரி இயக்கம் அவரை இளம் பராயத்தில் ஈர்த்துக்கொண்டது .மலையகத்தில் தொழில் பார்த்தபோது  தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டதனால் அரசினால் கைதுசெய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்தார் .பின்னர் இவர்  வவுனியாவில் இயங்கிய காந்தீயம் அமைப்பில்  இணைந்து  அப்பகுதியிலுள்ள மிகவும் வசதி குறைந்த   மக்களுக்கு அளப்பரிய சேவை செய்தார் .
கனடாவிற்கு புலம்பெயர்ந்த தோழர் சண் அவர்கள் ,தானும் தன்பாடும் என்றிருக்காமல் தன்னலமற்ற தனது சமூக அரசியல் செயற்பாடுகளை  பற்றுறுதியுடன் தொடர்ந்தார்  .இவ்வகையில் ரொறன்ரோ தேடக அமைப்பு  தமிழ் சமூகத்தில் ஜனநாயகம், சமத்துவம், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் மற்றும் பன்முகத்தன்மை போன்ற நோக்கங்களுக்காக செயற்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்  தோழர் சண் அவர்கள் மிகுந்த அர்ப்பணத்துடன்     அவ்வமைப்பில் செயற்பட்டார் . கனேடிய  தமிழ் சமூகத்தில் மாற்றுக்கருத்துக்கான இடைவெளியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார் . சகல விதமான சமூக அநீதிகளுக்கெதிராக தர்மாவேசத்துடன் போராடிய சண்  சில சமயங்களில் தாக்குதல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டி இருந்தது . இப்படிப்பட்ட தாக்குதல்களை அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் எவ்வித குரோதமோ, சலனமோ, பயமோ இன்றி தனது பணியை தொடர்ந்தார் .

Sunday, February 24, 2013

அன்பும் மதிப்பும் மிக்க தோழர் சண் அண்ணா அவர்கள் காலமானார்

இலங்கை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம், காந்தீயம், தேடகம் போன்ற அமைப்புகளின் முன்னாள் உறுப்பினரான தோழர் சண்முகலிங்கம் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை 22-02-2013 இரவு 10:30 மணியளவில் காலமானர் என்ற தகவலை உங்கள் அனைவரோடும் தேடகம் பகிர்ந்து கொள்கிறது. தோழர் சண்முகலிங்கம் அவர்களின் மறைவையொட்டி இன்று ஞாயிறு 24-02-12013 நடக்கவிருந்த தோழர் சண்முகதாசன் 20வது ஆண்டு நினைவும் நூல் வெளியீடும் பின்போடப்பட்டுள்ளது. Tamil Resource Centre (Thedakam) Toronto, Ontario, Canada 416 840 7335 http://www.trcto.org/

Friday, February 08, 2013

காலம் சஞ்சிகை லண்டனில் அறிமுகம்


“காலம்” சஞ்சிகை லண்டனில் அறிமுகமும் கலந்துரையாடலும்.

09.02.2013 யன்று மாலை 3.30 மணிக்கு லண்டனில் ஈஸ்ட்காமில் “காலம்” சஞ்சிகை 40வது இதழ் அறிமுகமும் கலந்துரையாடலும் செய்யப்படுகிறது. “விம்பம்” ஏற்பாடு செய்துள்ளது. அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
“காலம்” சஞ்சிகை லண்டனில் அறிமுகமும் கலந்துரையாடலும்.

09.02.2013 யன்று மாலை 3.30 மணிக்கு லண்டனில் ஈஸ்ட்காமில் “காலம்” சஞ்சிகை 40வது இதழ் அறிமுகமும் கலந்துரையாடலும்  செய்யப்படுகிறது. “விம்பம்” ஏற்பாடு செய்துள்ளது. அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

Sunday, February 03, 2013

புகைப்படம் + கவிதை = புதிய அனுபவம்


 -ப்பிரஸ்த்தன்-
14, 15 நவம்பர் 1986ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமயந்தியின் புகப்படக் கண்காட்சி பற்றி 07.12.1986ம் ஆண்டு வெளியான ஈழமுரசு பத்திரிகையில்  ப்பிரஸ்த்தன் என்ற பெயரில் நிலாந்தன் எழுதிய விம்ர்சனம். ஒரு மீள் நினைத்தல்.

வெறுப்பு வளர்கிறது.
தோலுக்கு மேல் தோலொடு
ஒவ்வொரு அடி விழும் போதும்
தோல் மேல் தோலோடு
வெறுப்பு வளர்ந்து வருகிறது.
-பாப்லோ நெரூடா-

இந்த வரிகளினூடாக தமயந்தி எங்களிடம் சொல்ல முயலும் விசயம் என்ன...?
கரடு முரடான, முட்கள் மலிந்த எம்முடைய நாட்கள், வெறுமனே வெடிச் சத்தங்களுக்கும், வெற்று ரவைகளுக்கும் நடுவே நகர்ந்து கொண்டிருப்பவை மட்டும்தானா? இல்லை துயரங்களை மாற்றி எழுத நினைத்து, தூக்கிய துவக்குகளும் கழுத்தைத் திருகும் புதிய துயரங்களாய் மாறிய நிலைமை! இது தமயந்திக்கும் தெரிகிறது.

கடற்கரை வரையும் நடந்து பிறகு அலைகளுக்கிடையில் "காணாமல்" போய்விட்ட காலடித் தடங்களினூடாக- எமது போராட்டங்களுக்குள்ளேயே போராடி வெல்லப்பட வேண்டிய ஏதோ ஒன்றைப் பற்றி (மீண்டும் அவனைக் காணவில்லை என்று சொல்லி) எங்களையும் கவலைப்படச் செய்கிறார். அவரைப் பொறுத்தவரை எம்முடைய நாட்கள் அப்படித்தான் இருக்கின்றன.

Sunday, January 13, 2013

மத்திய கிழக்குநாடுகளில் பணிபுரியும் பணிப்பெண்களின் அவலம்


-உமா-(ஜேர்மனி) 


குருநாகலை மாவட்டத்தில அமைந்துள்ள பொல்கிறிகாகவைச் சேரந்த 35 வயதான ரோகினி ராஜபக்ச என்ற  சவுதி அரேபியாவிலிருந்த திரும்பிய பணிப்பெண்ணின் உடலிலிருந்து 7 ஆணிகள்  09.02.2011 அன்று குருநாகலை வைத்தியசாலையில் வைத்து அகற்றப்பட்டுள்ளன. தலைமுடி போலமைந்த இக்கம்பிகளில் ஆறு இவரது கைகளிலும் , ஒன்று இவரது காலிலும் ஏற்றப்பட்டிருந்தன. இவர் சென்ற ஆண்டு டிசம்பரில்  சவுதி அரேபியாவிற்கச் சென்றதாகவும், ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் மீண்டும் சென்ற கிழமை நாடு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.




11.12.2010 அன்று பேர்லினில் நடைபெற்ற 29வது பெண்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை, சில புதிய தகவல்களை உள்ளடக்கி இங்கே பதிவாகிறது.

Sunday, December 16, 2012

தேவதை ஆவணப்படத்தை முன்வைத்து இயக்குனர் மணிமேகலையுடன்-நேர்காணல்

-ஜெயச்சந்திரன் ஹஸ்மி-

தேவதைகள் – நமது கனவுலகத்திலும் கற்பனைகளிலும் சினிமாக்களிலும் வெள்ளை உடை உடுத்திக் கொண்டு, அழகாக, கவலைகள் இல்லாமல், பாடிச் சுற்றிக்கொண்டிருக்கும் தேவதைகளை பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்வின் தேவதைகளை அடையாளப்படுத்துகிறது ஒரு ஆவணப்படம். ஆம், இந்த தேவதைகள் உழைத்து உண்பவர்கள். வியர்வை சிந்தி சம்பாதிப்பவர்கள். ஆண் பெண் பேதங்களை உடைத்தவர்கள். உழைப்புக்கு ‘பால்’ ஒரு வரையறை இல்லை என்று உணர்த்தியவர்கள். எல்லாவற்றிற்கும் மேல் இவர்கள் பெண்ணைப் பற்றி சமூகம் கொண்டிருக்கும் உள்ளீடுகளை உடைத்தெறிந்தவர்கள். நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். கனவு காணும் கண்களை கசக்கி, நம் சமூகத்தை ஆழ்ந்து கவனித்தால், தெருவுக்குத் தெரு இதுபோன்ற தேவதைகளை காணலாம். இவர்கள் நிஜ தேவதைகள். லீனா மணிமேகலை இயக்கத்தில் வந்துள்ள ‘தேவதைகள்’ ஆவணப்படம் உலகத்தோடு நிமிடத்துக்கு நிமிடம் போராடும் மூன்று பெண்களைப் பற்றி பேசுகிறது. இயக்குனர் லீனா மணிமேகலையோடு கலந்துரையாடியதிலிருந்து....
1. முதலில் இந்த தேவதைகள் ஆவணப்படத்திற்கான அடிப்படைக் கரு எங்கிருந்து வந்தது?

தோழர் பவா செல்லதுரையின் வழி ஒப்பாரி கலைஞர் லஷ்மி அம்மாவின் தொடர்பு கிடைத்தது. வசியம் வைக்கப்பட்ட ஒரு ஆடு போல அவர் பின்னாடி சுற்றிக்கொண்டிருந்தேன். மணிமேகலை என்று அறிமுகம் செய்துக்கொண்ட அடுத்த நொடி, மணிமேகலைக்கு ஒரு பாடல் என்று இட்டுக்கட்டி பாடத்தொடங்கிவிட்டார். ஒரு முழுமையான மனுஷி அவர். அவரைப்பற்றி மேலும் பலர் தெரிந்துக்கொள்வதற்கு ஏதுவாக கேமிராவில் ஆவணப்படுத்தலாமா என்று கேட்டேன். உனக்கு எது மகிழ்ச்சியோ அதை செய்துக்கொள் என்றார். தேவதைகளின் விதை அந்த உரையாடல் தான்.
இவரைப்போன்றே அசாதாரணமான வாழ்க்கையை எந்த புகாருமில்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஆன்மாக்கள் யாரும் இருக்கிறார்களா என்ற தேடலில், விகடன் சரண் மூலம் சேதுராக்கம்மாவையும், பாண்டிச்சேரி சுகுமாரன் மூலம் கிருஷ்ணவேணியம்மாவையும் தொடர்பு கொண்டேன். தேவதைகள் சாத்தியமானது.

Friday, December 07, 2012

உடுப்பிட்டிமகளிர் கல்லூரியும் தீட்டும்

-வி.அப்பையா-
இனஅழிப்பு போருக்கு பிந்தைய காலங்களில் சமூக வாழ்க்கை இயல்பாகி விட்டதற்கான தோற்றப்பாட்டை அரசும், அதன் சிவில் சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக பிரச்சாரங்களினூடாகவும், பல்வேறு "நிகழ்ச்சிநிரல்" செயல்பாடுகள் மூலம் நிறுவ முயலுகிறார்கள்.
ஆனால், உண்மையில் மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக இராணுவ நிர்வாகத்திற்கு எதிராகவும், அதிகார வர்க்கத்தின் ஆதிக்க திமிருக்கு எதிராகவும் போராடுவது என்பது தொடர் போக்காகவே இருந்து வருகிறது.
சமீபத்தில் இணையங்களில் "பெரிதாக” அடிபடாத அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்ட செய்தி உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு தகுதியான அதிபரை நியமிக்கக்கோரி பாடசாலை முன்பு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது. ஒரு தகுதியான அதிபர் நியமனத்திற்கு கூட மக்கள் போராட வேண்டியுள்ளதையும், "நிர்வாக சீர்கேடு, தலையீடு" எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகவே இந்த செய்தி உணர்த்துகிறது.
மக்களின் போராட்டத்திற்கான அடிப்படை காரணம் என்ன? 04.10.2012இல் வடமராட்சி வலயத்தில், தரம் 1 ஏபி கொண்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு அண்மையில் புதிதாக நியமனம் பெற்ற 15 பேரில், தரம் 2-2 நிலையில் உள்ள ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டதை கண்டித்தே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகுதியான கல்வி தகுதி கொண்ட அதிபர் இருந்தும் ஏன் இந்த உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு அவர்கள் நியமிக்கப்படவில்லை என்பது நியாமான கேள்வியாகவே உள்ளது.
மேலும், முன்னைய காலங்களிலும் இதே போன்ற நிலமைதான் இக்கல்லூரிக்கு ஏற்பட்டுள்ளது. 12.11.2012ல் ஓய்வுபெற்ற இக்கல்லூரியின் அதிபரின் தேர்வும் கூட "விதிமுறைகளை£" மீறி "அதிகாரம்" படைத்தோரால் நியமிக்கப்பட்டது. இவரும் கூட அதிபர் தரம் அற்ற, ஆசிரியர் தரத்தை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போதைய அதிபர் நியமனத்தையும் கருத்தில் கொண்டால் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் "நிர்வாக செல்வாக்கை" புரிந்து கொள்ள இயலும். இக்கல்லூரிக்கான முதல் நிலை தகுதியுடைய அதிபர்கள், உடுப்பிட்டியில் இல்லையா? என்றால், உண்மை செய்தி அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.

Tuesday, November 27, 2012

கே.ஏ.சுப்பிரமணியம் சில நினைவுப் பதிவுகள்


- லெனின் மதிவானம் -
 தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பை வழங்கியர். மூத்த இடதுசாரி தோழர்களான மு கார்த்திகேசுஇ ந. சண்முகதாசன் என்ற வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவர். ஒருவகையில் முன்னவர்களின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த கட்ட பரிமாணமாகவும் திகழ்ந்தவர் கே.ஏ. சுப்பிரமணியம்.  ஆதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக ஓர் ஆர்பரிப்பில் உண்மையின்-உழைக்கும் மக்களின் பக்கத்தில் நின்று போராடிய இத்தோழரின் கருத்துக்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் என்பன இன்று வரை பல விதங்களில் தாக்கம் செலுத்தி வருகின்றன. இருப்பினும் இவர் பொறுத்த வெளிவந்த நினைவு மலரைத் தவிர அவர் பொறுத்து காத்திரமான ஆய்வுகள் ஏதும் வந்ததாக தெரியவில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அத் தோழரோடு நேரடியாக பழக கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் கிடைக்காத போதினும் அவரால் எழுதப்பட்டு இசெம்மைப்படுத்தப்பட்ட  'தாயகம்''இசெம்பதாகை'இ புதியபூமி' போன்றவற்றின் ஆசிரிய  தலையங்கங்களும் இசில கடிதங்களும் பார்வைக்கு கிட்டின. மேலும் அவரால் வளர் த்தெடுக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆளுமையின் செல்வாக்குட்பட்டவர்கள் என்போரின் கருத்துக்களை கொண்டு அவரை அறிய முடிந்நது. பழமைவாத சமூக புனிதங்களிலிருந்து வழியும் சீழினை நக்கி பிழைப்போட்டும் நிலைமைகளே யதார்த்தமாகிவிட்டதோர் சூழலில் அவற்றினை மீறி கலப்பு திருமணம் செய்துகொண்டமை அவரது நேர்மையையும் தன்முனைப்பற்ற நாகரிகத்தினையும் எடுத்துக் காட்டுகின்றது.    கூடவே  தனது இறுதி மூச்சு வரையிலும் அத்தகைய நாகரிகமான வாழ்வை தமதாக்கி கொண்ட அவர் மரண வாயிலில் நின்றுக் கொண்டு கூட தம் தோழர்களுக்கும் அடுத்த தலைமுறையிருக்கும்  'விடை பெறுகிறேன்' கூற முற்பட்ட அவரது செயல் நம்பிக்கையூட்டுவதாக மட்டுமன்று ஒர் உண்மையான இடதுசாரிக்கு இருக்க கூடிய ஆன்ம பலத்தை எடுத்துக் கூறுவதாக அமைத்துள்ளது. அவரது மரண சடங்கில் எந்த விதமான மத சம்பிரதாயங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார். இன்றுவரை அவரது துணைவியாரின் கழுத்தில் தொங்கும் 'அரிவாளும் இ சம்மட்டியும்' தான் அவர் கட்டிய தாலி.அவரது இல்லமானஅந்தச் சிறிய  'சத்தியமனை'  கதவுகள் அற்று 'அடையா நெடுங்கதவும்இ அஞ்சேல் என்ற சொல்லும் வேண்டும் ' என்று  சொல்லி திறந்தே இருந்திருகிறது.

Saturday, November 03, 2012

அன்புள்ள சின்மயிக்கு

 -ஞாநி-
அன்புள்ள சின்மயிக்கு வணக்கம்.
நாம் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறோம். எந்திரன் பட வெளியீடு சமயத்தில் ரஜினியின் பிம்பம் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் பங்கேற்றோம். எதிரெதிர் அணியில் இருந்தோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் எந்திரன் படத்தில் பங்கேற்றவர். நான் எப்போதும் விமர்சகன்.
பின்னர் அண்மையில் என் சிநேகிதி பத்மாவும் நீங்களும் பங்கேற்ற ஒரு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சியில், இளம் மாணவிகளுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படும் விதத்தில் நீங்கள் பேசியதாக அவர் எனக்குச் சொன்னார். சிறு வயதில் தந்தையால் கைவிடப்பட்டபோதும் தாயின் உறுதியான மனமும் கடும் உழைப்பும் உங்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்ததைப் பற்றி நீங்கள் பேசி அந்தச் சிறுமிகளுக்கு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுவதற்கான உத்வேகத்தை அளித்ததை அறிய. மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் இளமைக் காலக் கசப்புகளை பேசுவதோ ஒப்புக் கொள்வதோ அவற்றிலிருந்து கற்றுக் கொண்டதைப் பகிர்வதோ அரிது.
அதன்பின் இணைய உலகில் டிவிட்டர் தளத்தில்

Friday, November 02, 2012

நூல் அறிமுகம்

Præsentation af bogen
இலங்கை அரசியல் வரலாறு - இழப்புக்களும் பதிவுகளும்

Tid:
Lørdag, den 3. november 2012, kl. 15:00

Sted:
Overlundhallen
Toftegårdsvej 8
8800 Viborg
[Vedlagt er et kort, som viser placeringen]


Vært:
Selvakumar Thuraisingam

Programmet for dagen:
  • Velkomst
  • Anmeldelser:
    • Loganadan Chellathamby
    • Rajagopalan Sinnathambi
    • Sathyadas Thavarasa
    • Sri Kathirgamanathan Veeravagu
  • Svar fra forfatteren
  • Takketale
Programmet vil desuden indeholde lykønskninger.

Aftenen afsluttes med aftensmad.

Friday, October 19, 2012

ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்

தோழர் சண்முகதாசன் அவர்களின்
“ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்”
நூல் அறிமுக மற்றும் விமர்சன அரங்கு

காலம் - 20th October 2012 , 3.00 P.M

இடம் - Walthamstow Quaker Meeting House, 1a Jewel Road, London E17 4QU

 தலைமை – தோழர் வேலு அவர்கள்


மேலதிக விபரங்கட்கு :தோழர் பாலன் - 00447753465573
tholar2003@hotmail.com

----------------------------------------------------------------------

மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்

Thursday, October 18, 2012

இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்

-ந.இரவீந்திரன்-
பார்த்துப் பழகிய வடிவத்தில் மனமீடுபாடு கொள்ளூம் நிலை காரணமாக ,உண்மைத்தோற்றம் மறைந்து வேறுபட்ட மயங்கிய காட்சியில் தவறான புரிதல்களுக்கு ஆட்படுவது எப்போதும் நிகழக்கூடியதுதான்.நீண்டகாலமாக எம்மிடமுள்ள தோற்றமயக்கமாக இருப்பது சமூக மாற்றம்பற்றிய புரிதலும்,அத்தவறான புரிதலுடன் மார்க்சியத்தைப் பிரயோகிக்க முயன்று தோல்விகளைச் சந்தித்துப் பாரதூரமான பின்னடைவுகளைக் கண்டடைந்துள்ளமையுமாகும்.எமது சமூகத்தில் மார்க்சியத்தை திரிபுகளுக்குஆட்படுத்திக்கொண்டு இயங்குவதே முனேறவியலாத முட்டுக்கட்டைகளுக்கு காரணம் என்றமயக்கங்களும் உண்டு.
திரிபுகளின்றி அப்படியே விசுவாசமாக மிகுந்த அர்ப்பணிப்புகளுடன் இயங்கமுயன்றவர்களும் இடர்ப்பாடுகளுக்கு உள்ளாயினர் என்பதே உண்மை.மார்க்சியம் ஐரோப்பியச் சமூகத்தைப் பகுத்தாராய்ந்த அதே முறையில் நமது சாதியச்சமூகத்தைக் காண இயலாது என்ற புரிதல் நீண்ட காலமாய் எமக்கு இருந்ததில்லை.மார்க்சியம் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்திச் சமத்துவத்தை வென்றெடுப்பதற்கு வழிகாட்ட இயலும்;அதேவேளை மார்க்சியப் பிரயோகிப்பில் வேறுபட்ட வடிவம் இங்கு அவசியமாயுள்ளது.

Thursday, October 04, 2012

Why Socialism?..........

Why Socialism?
(Albert Einstein)
Translated By: Sivalingam M.

சோசலிஷம் எதற்காக?
(ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)
தமிழாக்கம்: சிவலிங்கம்.மு

பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.
விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். வானியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் சாராம்சமான நடைமுறை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம்: இரு துறைகளையும் சார்ந்த விஞ்ஞானிகள் ஒரு வரம்புக்குட்பட்ட தொகுப்பில் அடங்கிய நிகழ்வுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பினைக் கூடுமானவரைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அந்த நிகழ்வுகளின் தொகுதிக்குப் பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்க விதிகளைக் கண்டறிய முயல்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் அத்தகைய நடைமுறை ரீதியான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அனேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம் ஆகும். இத்தகைய சூழ்நிலை, பொருளாதாரத் துறையில் செயல்படும் பொதுவான விதிகளைக் கண்டறியும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது. அதோடுகூட, மனித வரலாற்றில், நன்கு அறியப்பட்ட நாகரிகக் காலப்பகுதி என்று சொல்லப்படுகின்ற காலந்தொட்டு இன்றுவரை நாம் சேர்த்து வைத்துள்ள அனுபவத்தின்மீது பெருமளவு செல்வாக்குச் செலுத்திய, கட்டுப்படுத்திய காரணிகள் முற்றாகப் பொருளாதார இயல்பு கொண்டவையே அன்றி வேறல்ல. எடுத்துக்காட்டாக, வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெரும் பேரரசுகளில் பெரும்பாலானவை போர் வெற்றிகளாலேயே நிலைபெற்றுள்ளன. வெற்றி பெற்ற மக்கள், வெற்றி கொள்ளப்பட்ட நாட்டின் சிறப்புரிமை பெற்ற வர்க்கமாக சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். அந்நாட்டு நிலங்களின் மீதான ஏகபோக உரிமையை தமக்கென அபகரித்துக் கொண்டனர். தங்களுடைய ஆட்களையே அந்நாட்டில் மதக் குருக்களாய் நியமித்தனர். அம்மதக் குருக்கள் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சமுதாயத்தில் நிலவிய வர்க்கப் பிரிவினைகளை நிரந்தர சமூக அமைப்புகளாக மாற்றிவிட்டனர். அந்நாட்டு மக்கள் தமது சமுதாய நடவடிக்கைகளில் பின்பற்றக்கூடிய சமூக மதிப்புகளின் கட்டமைப்பை உருவாக்கினர். மக்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலேயே அதன்படி வழிநடத்தப்பட்டனர். ஆனால், தார்ஸ்டெயின் வெப்லென் (Thorstein Veblen) அவர்கள், மனிதகுல வளர்ச்சியில் ”கொள்ளைசார்ந்த காலகட்டம்” (predatory phase) என்று அழைக்கிற நேற்றைய வரலாற்று மரபை நாம் எங்கேயும் உண்மையிலேயே விட்டொழித்ததாகத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்துக்குரிய அறியக்கூடிய பொருளாதார உண்மைகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் தருவிக்க முடிகிற விதிகளும்கூட வரலாற்றின் பிற காலகட்டங்களுக்குப் பொருந்தாதவை ஆகும். சோசலிஷத்தின் உண்மையான நோக்கம், துல்லியமாக, மனிதகுல வளர்ச்சியின் கொள்ளைசார்ந்த காலகட்டத்திலிருந்து விடுபடுவதும், அதனையும் தாண்டி முன்னேறுவதுமே ஆகும். பொருளாதார விஞ்ஞானம் இப்போதிருக்கும் நிலையில் வருங்கால சோசலிஷ சமுதாயம் பற்றி எதுவும் கூற இயலாத நிலைமையே உள்ளது.

Sunday, September 30, 2012

சிவாஜி கணேசனுக்கு பிரியாவிடை கூறல்

ஒரு பண்பாட்டாய்வியற் குறிப்பு 

-கார்த்திகேசு  சிவத்தம்பி -

சிவாஜிகணேசன் மறைந்து விட்டார் என்ற செய்தி தொலைக்காட்சி வழியாக வந்தபொழுது (21.07.2001) அது தமிழகத்தின் கடந்த மாத காலத்தின் அசாதாரண நிகழ்வுகள் பற்றிய நினைப்புகளுக்குள் அமிழ்ந்து விடும் போலவே இருந்தது.

ஆனால், வந்த நிகழ்ச்சிகள் அப்படி அமையவில்லை. மரணம் இயற்கை மரணம் என்றாலும், இழப்பு திடீரென வந்தது போலவும், அந்த இழப்பு சின்னதொன்றல்ல, மிகப் பெரியது, முழுத் தமிழகம் தழுவியது என்ற தொனியில் ஊடகங்கள் எடுத்துரைக்கத் தொடங்க அந்த எடுத்துரைப்பு தமிழுணர்வில் படியத் தொடங்க, அந்த மனிதன் மறைவுக்குள் தமிழ்ப் பண்பாட்டின் 'இனங்காணல்கள்' சில தொக்கி நிற்கின்றன என்பது புரியத் தொடங்கியது.

அரசியல் தன்னை ஒதுக்கியது கண்டு ஒதுங்கிப் போய் தன் நடிப்பும் தானும் என்றிருந்த சிவாஜிகணேசனுக்கு இறுதி மரியாதையாக வீரர்களுக்கு வழங்கப்படும் இறுதி கெளரவம் (துவக்குவேட்டு மரியாதை, 'லாஸ்ற்போஸற்' இசைப்பு) வழங்கப்பட்டது. சோகம் தமிழகத்தையும் தமிழ் பேசும் உலகத்தையும் தாண்டியது. அனைத்திந்திய சோகம் ஆயிற்று.

Saturday, September 29, 2012

இப்பெல்லாம் எவண்டா சாதி பார்க்கிறான் ?

Aadhavan Dheetchanya, one of the astonishing writers for reformative thoughts in Tamil, has composed this thoughtful song sung by Vaikarai Govindan troup. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளரும் புதுவிசை கலாசாரக் காலாண்டிதழின் சிறப்பாசிரியருமான ஆதவன் தீட்சண்யா அவர்களின் ஆக்கங்கள் மலையாளம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. In his blogs, books, speeches and videos, there are practical views on social inequalities. ஆதவன் தீட்சண்யா அவர்கள் இயற்றி உள்ள "இப்பல்லாம் எவன்டா சாதி பாக்குரான்னு அப்பாவி போலவே கேட்கிறான்' எனும் இந்த அருமையான பாடல் தமிழகத்தில் சமூக நீதிக்கும், பகுத்தறிவுக்கும் எள்ளளவும் இடமில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது! பாட்டின் நடுவில் வரும் "அம்பேத்கர் பெயரை பிள்ளைக்கு சூட்டி ஆனந்தம் கொள்பவர் எத்தனை பேர்?" என்ற கேள்விக்கு என்ன பதில் கூறலாம்? மிக முக்கியமான இந்த படலை அழகாகப் பாடியுள்ள வைகறை கோவிந்தன் குழுவினர் மிகவும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்! தமிழ் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையை இந்த பாடலின் வரிகள் வி படம் பிடித்துக் காட்டுகின்றன! An inspiration to numerous youth belonging to the Scheduled Communities, Aadhavan Dheetchanya continues his dynamism in creativity for social change! Let us wish him all success!

Saturday, September 22, 2012

டேனிஸ் தலைவர்கள்… தமிழ் தலைவர்கள் இணைந்து நடாத்தும் வெற்றிப் பிரகடனம்..



டென்மார்க் மண்ணில் நின்று கடந்த 25 வருடங்களாக கலைப்பணியாற்றி வரும் அத்தனை கலைஞர்களும் பாராட்டப்படும் பெருவிழா.
அனைத்துக் கலைஞர்களும், படைப்பாளிகளும், சமுதாய சிற்பிகளும் மக்களால் கௌரவிக்கப்படும் பொன்னாள்.
ஒருவர் வெள்ளிவிழா கொண்டாடினால் அது அவருக்கு பெருமை ஆனால் அனைவரும் இணைந்து கொண்டாடினால் நம் அனைவருக்கும் பெருமை.
கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்.. alaikal@gmail.com
மேலதிக விபரங்கள் வெகு விரைவில்…
காலம் : 22.09.2012 சனிக்கிழமை மாலை
இடம் : கேர்னிங் கலாச்சார இல்லம் Kulturallen – Herning

Wednesday, September 12, 2012

கூடங்குளம் நிகழ்வுகள் தொடர்பாக கூட்டறிக்கை


 கூடங்குளம் நிகழ்வுகள் தொடர்பாக  எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் கலைஞர்கள் செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை.
’’கடந்த ஓராண்டாக அறவழியில் நடந்துகொண்டிருக்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. சுதந்திர இந்தியா சந்தித்த மக்கள் திரள் போராட்டங்களில் முக்கியமான ஒன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்திய தேசத்தின் ஆன்மாவை நோக்கி வலிமையான கேள்விகளை எழுப்பிய இந்தப் போராட்டம் இன்று அதிகாரத்தின் வன்கரங்களால் நசுக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் விடுதலையில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் போராடும் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது தார்மீக கடமை என்று நம்புகிறோம்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்களாகிய நாங்கள் இடிந்தகரை மக்களுடன் நிற்கிறோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்.  மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் அரசாங்கம் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் ஜனநாயக விழுமியங்களை காற்றில் பறக்கவிட்டு, அறவழியில் நின்று போராடிய  இடிந்தகரை மக்கள் மீது இன்று மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் சர்வாதிகார அடக்குமுறையை ஏவியிருப்பதும் , கடந்த செப்டம்பர் 10 அன்று நடந்த முற்றுகைப் போராட்டத்தில் அந்த மக்கள் மீது கண்ணீர்ப் புகைகுண்டு வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்திய காவல்துறையினரின் அராஜகமும், குலசேகரப்பட்டினத்தில் அந்தோணி என்கிற மீனவர் பலியாகக் காரணமான துப்பாக்கிச்சூடும்  கடும் கண்டனத்துக்குரியது.

Tuesday, September 04, 2012

கட்டியகாரனைத் தொலைத்த தென்மோடி

-மெலிஞ்சி முத்தன் -


ஈழத்தமிழரின் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்று. கூத்துக் கலை ஆகும்.   கிராமியக் கலை, அல்லது நாட்டார் கலைவடிவம் என்ற சொற்களால் புரிதலுக்கு உட்படுத்தப்படும் இக்கலை/ வளர்ச்சிகுன்றிப் போனமைக்கான காரணங்களில் ‘நாட்டார்’ என்ற சொல்லுக்குப் பின்னால் இருந்த மனோநிலையும் ஒருவகைக்காரணம் எனலாம். முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர் என்றும், கூத்து என்கின்ற சொல்லே குதித்தல் என்ற சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் சிலர் சொல்வதுண்டு. அதுவே நாளடைவில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று பின்னர் வளர்த்தெடுக்கப்பட்ட வடிவங்களாகவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.




ஈழத்துக் கூத்தில் தென்மோடி,வடமோடி,காத்தவராயன், பேய்க்கூத்து, வசந்தன் கூத்து என்று பலவகைக் கூத்துகள்  இருந்தாலும். நான் இங்கு பேசுபொருளாகக் கொண்டிருப்பது ‘தென்மோடிக் கூத்து’ என்ற வகையிலான கூத்தையும், அக்கூத்தின் சமூகப் பின்னணி பற்றியுமேயாகும்.
 தென்மோடிக் கூத்தினை இன்று பெரும்பாலும் கடலோரப் பகுதிகளிலேயே  காணக்கூடியதாக இருக்கின்றது மாதகல், மெலிஞ்சிமுனை, பாசையூர், குருநகர், நாவாந்துறை, சில்லாலை, போன்ற இடங்களில் ஆடப்படும் இக்கூத்து ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசமான பாங்கினைக் கொண்டதாகவே இருக்கின்றது,