Sunday, February 03, 2013

புகைப்படம் + கவிதை = புதிய அனுபவம்


 -ப்பிரஸ்த்தன்-
14, 15 நவம்பர் 1986ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமயந்தியின் புகப்படக் கண்காட்சி பற்றி 07.12.1986ம் ஆண்டு வெளியான ஈழமுரசு பத்திரிகையில்  ப்பிரஸ்த்தன் என்ற பெயரில் நிலாந்தன் எழுதிய விம்ர்சனம். ஒரு மீள் நினைத்தல்.

வெறுப்பு வளர்கிறது.
தோலுக்கு மேல் தோலொடு
ஒவ்வொரு அடி விழும் போதும்
தோல் மேல் தோலோடு
வெறுப்பு வளர்ந்து வருகிறது.
-பாப்லோ நெரூடா-

இந்த வரிகளினூடாக தமயந்தி எங்களிடம் சொல்ல முயலும் விசயம் என்ன...?
கரடு முரடான, முட்கள் மலிந்த எம்முடைய நாட்கள், வெறுமனே வெடிச் சத்தங்களுக்கும், வெற்று ரவைகளுக்கும் நடுவே நகர்ந்து கொண்டிருப்பவை மட்டும்தானா? இல்லை துயரங்களை மாற்றி எழுத நினைத்து, தூக்கிய துவக்குகளும் கழுத்தைத் திருகும் புதிய துயரங்களாய் மாறிய நிலைமை! இது தமயந்திக்கும் தெரிகிறது.

கடற்கரை வரையும் நடந்து பிறகு அலைகளுக்கிடையில் "காணாமல்" போய்விட்ட காலடித் தடங்களினூடாக- எமது போராட்டங்களுக்குள்ளேயே போராடி வெல்லப்பட வேண்டிய ஏதோ ஒன்றைப் பற்றி (மீண்டும் அவனைக் காணவில்லை என்று சொல்லி) எங்களையும் கவலைப்படச் செய்கிறார். அவரைப் பொறுத்தவரை எம்முடைய நாட்கள் அப்படித்தான் இருக்கின்றன.

விழுந்து வெடிக்கும் குண்டுகளும், விழுந்து படுத்து; காயங்களுடன் எழுந்து; மருந்து கட்டிக்கொண்டு, ஓலமிடுகின்ற மானுடத்தையும் மட்டும் தமயந்தியின் கமரா கவனிக்கவில்லை. இவற்றையும் விட எமது தேச வனப்பைப் பற்றியும் நாலு வார்த்தை பேச அது விரும்புகின்றது. அதுவும் கவிதையாக....

கண்காட்சி என்றதும் வெறும் புகைப்படங்களை மட்டும் எதிர்பார்த்து வரும் எவரையும், கூட இருக்கும் கவிதைகள் நிறுத்திவைத்து விடுகின்றன.

நிறையப் படங்கள், நிறையக் கவிதைகள், நிறைவான தலைப்புக்கள். மனசும் நிறைகின்றது. 

இது ஒரு புது அனுபவம்.
இந்தப் பிரமிப்புகளையெல்லாம் பலரும் குறிப்புகளாக (புகைப்படக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த குறிப்புக்கொப்பியில்) எழுதியிருந்தார்கள். அந்தக் குறிப்புக்களில் இருந்து கூர்மையானவற்றை நியாயப் படுத்தியும், மறுத்தும் இந்தக் கட்டுரை எழுதப் படுகின்றது.

1. கவிதைகள் தேவைதானா?, தலைப்புகள் மட்டும் போதாதா? அல்லது வெறும் படங்களை மட்டுமே மாட்டியிருக்கலாம்தானே? பார்க்கிறவர்கள் சுயமாகச் சிந்திப்பதற்கு சந்தர்ப்பம் கொடுத்திருந்தால் என்ன? என்பது சிலருடைய விவாதம்- இருக்கலாம்தான், ஆனால்- படங்களை மட்டும் காட்டுவதற்குத் தமயந்தி விரும்பவில்லை. கூடவே, சில கருத்துக்களையும் எமுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்போலும்.

கவிதையும் படமும் கலந்து, ஒரு புதிய நிலைக்கு உயர்த்தப் படுவதை ஒரு பரிசோதனை முயற்சி என்று நாம் எடுத்துக் கொள்வோம். இம் முயற்சி வெற்றியா?, தோல்வியா? என்பதைப் பொறுத்தே, இப்படியும் தேவைதானா என்று கேட்டிருக்க வேண்டும். இத்தனைக்கும்- இப் பரிசோதனை முயற்சியில் தமயந்தி வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல முடியும்.

நான் தண்டனை கோருகிறேன்...., மீண்டும் அவனைக் காணவில்லை.... போன்ற கவிதைகளும் படங்களும் உதாரணங்களாகும். இப்படி நிறைய உண்டு.

2. கவிதைகள், படங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு திமிறிக்கொண்டு முன்னால் வருகின்றன. இது- படத்தின் மீதான கவனத்தைக் குலைத்து விடுகிறது என்பது சிலருடைய கருத்து. ஆனால் உண்மை அதுவல்ல. கவிதை எந்த நிலையிலும் படங்களைப் பாதித்திருக்கவில்லை. பதிலுக்கு, பல இடங்களில் நான் முந்தி, நீ முந்தி என்று கவிதையும் படமும் முன்னுக்கு வர முயல்வது ஒருவித பிரமிப்பைத்தான் உண்டாக்கியது.

கவிதைகள் படங்களை விழுங்கி விட்டதாயும் சொல்ல முடியாது. சில படங்களின் சாதாரணம் கவிதைகளின் அசாதாரணத்தால் பறிக்கப் பட்டிருப்பதாய் எடுத்துக் கொண்டாலும், இங்கும்கூட, கவிதை படத்தை இழுத்துக்கொண்டுதான் முன்னால் வருகிறது. தனியே வரவில்லை. இது- படத்திற்கு ஒரு புதுப் பொலிவைக் கொடுக்கிறது என்பதுதான் உண்மை.

இறந்துபோன போராளிகளின் நினைவாக எடுக்கப்பட்ட படங்களையும் இணைக்கப் பட்டிருந்த கவிதைகளையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லலாம்.

3. கவிதை படங்களுடன் பொருந்தாது துருத்திக் கொண்டிருப்பதாயும் சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். மேலும், படத்திலிருந்து பெறக்கூடிய அனுபவங்களுடன் இசைந்து இயல்பாக வரவேண்டிய கவிதைகள் சில இடங்களில் படத்துடன் ஒட்டிக்கொள்ளாது, தனித்துத் தொங்கிக் கொண்டிருப்பதாயும் சொல்லப் பட்டுள்ளது. இந்த விசயத்தில்தான் தமயந்தி என்ற கலைஞனின் சிறப்பான, அவருக்கே சாத்தியமான, வித்தியாசமான பார்வை பற்றியும் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கே சாத்தியமான ரசிக்கும் பரப்புகள் இருக்கும். இது அவர்களுடைய அனுபவம் வாயிலாகக் கிட்டுவது இந்த ரசிக்கும் பரப்பின் விரிவையும் குறுக்கத்தையும் பொறுத்து, அவரவர் பார்வையும் வேறுபடும். இந்த வகையில்.... வெறுப்பு வளர்கிறது..., ஒரு புனித பூமியை நோக்கி..., எரிந்துகொண்டிருக்கும் நேரம்..., எல்லாம் தெரிந்தவர்கள்... போன்ற கவிதைகளுக்கான படங்களை எடுத்துக் கொள்ளலாம். இவை ஒருவித அருவத் தன்மையை இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத மங்கல் தன்மையை சிறப்பம்சமாகக் கொண்டிருப்பவை. இந்தப் படங்களை ஒவ்வொருவரும் அவர்களுக்குச் சாத்தியமான நிலைகளில் இருந்துகொண்டு, பார்க்க முயலும்போது தமயந்தியின் பார்வையிலிருந்து மாறுபடக் கூடும். இது எந்த விதத்திலும் குறையாகக் கருதக்கூடியது அல்ல.

4. சமகால நிகழ்வுகள் நிறையச் சித்தரிக்கப் படவில்லை என்று சிலர் ஆதங்கப்பட, இன்னும் சிலர், சமகாலம் சிறப்பாகக் காட்சிப் படுத்தப் பட்டிருப்பதால் மட்டும்தான் கண்காட்சி முக்கியம் பெறுகிறது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இவர்கள் சமகாலம் என்று நினைத்துக்கொண்டிருப்பது எதனை...?

முன்னுக்குச் சொன்னதைப்போலவே,
கரடு முரடான, வரண்ட நிலையிலும்கூட, ஒருவித பசுமை ஒளித்துக்கொண்டிருக்க; எவ்வளவு முட்கள் அதிகமோ, அவ்வளவுக்கு நம்பிக்கைகளும் அதிகமாயிருக்கும்.
எம்முடைய நிகழ்காலம்- போதுமான அளவுக்கு வெளிக்கொணரப் பட்டிருக்கிறது. இப்படியிருக்க, கமராவுக்கே உரிய பெரிய விசாலமான உலகத்தை விடுத்து, சமகாலம் என்ற குறுகிய அளவீடுகளுக்குள் ஒரு சிறிய உலகத்துக்குள் கலைஞனை சுருங்கச் சொல்வது சரிதானா?

இத்தனைக்கும் கமரா ஒன்றும் புரட்சி செய்யப் போவதுமில்லை அது புரட்சி பற்றிய நிகழ்ச்சிகளை, மற்றும் தடயங்களைப் பதிவு செய்வது மட்டும்தான். பிந்திய நிலைமைகளில் குறித்த தடயங்கள் வரலாற்று ஆதாரங்களாய் நிலைத்துவிடவும் கூடும்.

கமரா காட்சிப் படுத்தும் கருவியே தவிர அதனால் சுட முடியுமா? அது ஒன்றும் துவக்கு இல்லையே...?

இந்த நிகழ்காலம் பற்றிய அளவுகோல்களுடன் கண்காட்சியைப் பார்க்க முயன்றதன் கோளாறோ என்னமோ- கண்காட்சி பற்றி வெளிவந்த ஒரு கட்டுரையில், "அம்மாவைக் காணேல்ல..." என்ற படத்தில்; தாயைக் காணாமல் அழுகின்ற சிறுசுகளை, ஏதோ குண்டுத் தாக்குதலுக்கு தாயைச் சாகக் கொடுத்துவிட்டு, அழுவதாய் நினைத்துக் கொண்டு கட்டுரை ஆசிரியர் உயிருடன் இருக்கும் அந்தத் தாயைக் கொலை செய்தும் விட்டார். இது மோசமாயில்லை?

5. "சூரியனும் கிளம்புகிறது"
"எமதகத்து இருள் நீக்க ஒளியே வா"
"நாங்கள் சேற்றில் இறங்குகிறோம் நீங்கள் சோற்றில் கை வைக்க..."
"இந்த அமைப்பை மாற்றுங்கள்"
போன்ற சில படங்களை, சிலர் உச்சியில் வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். அவர்களுக்கு இவைதானாம் உன்னதமானவை?
அவர்கள் பாவம்.

சுலோகங்கள் சூழ்ந்த உலகங்களில் இருந்துகொண்டு; சிவப்பாய் இருப்பதை எல்லாம் குருதியாய்க் கண்டு குழம்பி; எதிலும் ஒருவித பிரச்சாரத் தொனியை அதிகமாய் எதிர் பார்க்கும் இவர்களிடத்தில்- இந்த மாதிரியான கோளாறுகள் தவிர்க்க முடியாதவைதான். இவர்கள் தங்களுடைய சுலோகங்களும்- சுவரொட்டிகளும் சூழ்ந்த உலகங்களிலிருந்து, விடுபடும்வரையும் நாம் பொறுத்திருக்க முடியாது. எனவே விசயத்துக்கு வருவோம்...

இந்தப் படங்கள் மோசமானை அல்ல. ஆனால் உச்சம் என்றும் சொல்வதற்கில்லை. இவற்றின் தலைப்புக்களில் ஒரு "புரட்சிகர" பிரச்சார வாடை வீசுவதைவிட பிரமிக்கும்படியான விசயங்கள் மிகக் குறைவு. இவற்றை விடவும் நல்ல படங்கள் நிறைய உண்டு.

6. "கமராக் கோணங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்" என்று ஒருவர் குறைப் பட்டிருந்தார்.
ஒவ்வொரு கலைஞனுக்கும் அவனுக்கு சாத்தியமான, வித்தியாசமான கோணத்தில்தான் அவனுடைய படைப்பின் ரகசியமே தங்கிக் கிடக்கிறது.
இந் நிலையில் நாங்கள் சில முடிவுகளை எடுத்துக் கொண்டும்; சில அளவுகோல்களை வைத்துக் கொண்டும் படங்களில் இருந்து நாம் எதிர் பார்ப்பது கிட்டாதபோது ஏமாற்றமடைந்து குறிப்பிட்ட கோணங்களில் பிழை என்று சொல்லுவது எந்தளவுக்கு சாத்தியமாகும்?
இது ஒரு விதத்தில் கருத்தைத் திணிப்பதாகவோ, செருகுவதாகவோ அமைந்து விடாதா?

தமயந்தி சொல்ல வரும் சேதியுடன் எம்மிடம் கைவசம் இருக்கும் சேதி ஒத்துப்போக மறுத்து முட்டிக்கொள்ள நேரிடும்போது- கமராக் கோணங்களில் குறைபடுவது என்பது சரிதானா?

7. பல படங்களிலும் பதிவு செய்தலில் (பிறின்ரிங்க்) நிறையப் பலவீனங்கள் இருந்ததாகச் சொல்லப் பட்டது.
படங்கள் கழுவப்பட்ட விதங்களிலும் குறைபாடுகள் மலிந்திருந்தமை அவதானிக்கப் பட்டிருந்தது.
இது பல இடங்களில் காட்சியின் இயற்கைத் தன்மையை நிறையப் பாதித்திருந்ததாயும் சொல்லப் பட்டது-
உண்மை! முழுவதும் உண்மைதான்.
கறுப்பு வெள்ளைப் படங்களைவிட கலர்ப் படங்களில் ஒரு மறைமுக நீலம் பரவிக் கிடந்தது. சில படங்களில் இது மோசமான விளைவுகளையும் உண்டாக்கியிருந்தது.

"நான் தண்டனை கோருகிறேன்" கவிதைக்குரிய ஒரு படத்தில் குருதியின் நிறம் இந்த மெல்லிய நீலத்தால் செயர்க்கைத் தன்மை பெற்று, குறிப்பிட்ட காட்சி ஏன் "செற் அப்" ஆக இருக்கக்கூடாது? என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.
இப்படி இயற்கையின் இயல்பான நிறங்களை விட்டு செயற்கையான, இயற்கையுடன் ஒத்திசைய முடியாத- கற்பனைத் தன்மைகளை பல காட்சிகளில் பார்க்க முடிந்தது.

இது ஒரு முக்கிய குறைபாடு. இதனை கலைஞனின் ஆளுமையில் இருக்கக்கூடிய வறுமை என்பதிலும், "தேசத்தின் வறுமை" என்பதே பொருத்தம்.
ஏனென்றால் இந்தப் படங்கள் சாதாரண கமராவால்தான் (YASHICA FX-7) படமாக்கப் பட்டிருந்தனவே தவிர அவை பதிவு செய்யப்பட்டது, கழுவப் பட்டது எல்லாமும் யாழ் நகரில்தான். இந்த வகையில்; குறைவான தொழில்நுட்ப வசதிகளுடன் இப்படி ஒரு முயற்சி முதன் முதலாக எமது தேசத்தில் அறிமுகப் படுத்தப் பட்டது என்ற வகையில் நாம் சந்தோசப் படுவோம்.

8. மனம்- பலரையும் இந்தப் படம் கவர்ந்திருந்தது. வானத்தில் தேமலைப்போல பரவிக் கிடந்த முகிற் கூட்டத்திற்குத்தான் இப்படிப் பெயரிட்டிருந்தது. திட்டுத் திட்டாக முகில்கள் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. ஒரு குறிப்பில், வானில் முகில்கள் வரும் போகும் அப்படித்தான் மனசில் நினைவுகளும் வரும் போகும் என்று எழுதப் பட்டிருந்தது. மிகப் பொருத்தம்!

கடைசியாக-
ரசிப்பதற்கு நிறைய இருந்தது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே நாம் பிரமிப்படைகின்றோம்.
இதற்கு காட்சி அறைக்குள் நிரம்பியபடி இருந்த மெல்லிய இசை- (ஒரு நல்ல சந்தனக்குச்சியின் வாசனையைப்போல) ஒரு ஊடகமாகத் தொழிற்பட்டது.

அமைதியாக ஊர்ந்துபோன இசையில் தொற்றியபடி பரவசப் பட்டுக்கொண்டு படங்களை ரசிக்க முடிந்தது.
சந்தோசப்படாமல் இருக்க முடியவில்லை.
ஆனாலும், கமரா கடலை மட்டும் கூடுதலாய்க் கவனித்திருந்தது, இன்னும் மனித உருவங்களில் கவனம் செலுத்தினால் நல்லது.
விசேடமாக; சனம் மிகக் குறைவு. இரு தடவையும் ரசிக்கவென்று வந்த வழமையான, வித்தியாசமான முகங்களைவிட. சன ரஞ்சகமாக இல்லைத்தான்.
இருந்தாலும் எமது தேசத்தில் அதுதான் வழமை.

வருத்தப்படும் அளவுக்கு இல்லை. இனித்தான் வளரவேண்டி இருக்கிறது.
நெடுகவும் இப்படித்தான் இருக்குமென்று சொல்ல முடியாதுதானே?
தவிர- இது புது முயற்சி, பரிசோதனை முயற்சியும்கூட

நன்றி: பிறத்தியாள்

No comments: