Wednesday, February 27, 2013

என்றும் எதற்கும் விலைபோகாத மக்கள் தொண்டன் தோழர் சண்முகலிங்கம்


- கனேடிய ஜனநாயக தமிழர் கலாச்சார பேரவை (CDTCA)
008சண், சண் அண்ணா என அழைக்கப்படும் தோழர் பொன்னம்பலம்  சண்முகலிங்கம் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பின்னர் 22-02-2013 அன்று கனடாவில் காலமானார். அவரது  மரணம் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது அவரது உறவினர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவரையும் சொல்லணாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் இளம் பராயத்திலிருந்தே அரசியல் ,சமூக விடயங்களில் ஆர்வமுள்ளவராக  இருந்தார் .இடதுசாரி இயக்கம் அவரை இளம் பராயத்தில் ஈர்த்துக்கொண்டது .மலையகத்தில் தொழில் பார்த்தபோது  தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டதனால் அரசினால் கைதுசெய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்தார் .பின்னர் இவர்  வவுனியாவில் இயங்கிய காந்தீயம் அமைப்பில்  இணைந்து  அப்பகுதியிலுள்ள மிகவும் வசதி குறைந்த   மக்களுக்கு அளப்பரிய சேவை செய்தார் .
கனடாவிற்கு புலம்பெயர்ந்த தோழர் சண் அவர்கள் ,தானும் தன்பாடும் என்றிருக்காமல் தன்னலமற்ற தனது சமூக அரசியல் செயற்பாடுகளை  பற்றுறுதியுடன் தொடர்ந்தார்  .இவ்வகையில் ரொறன்ரோ தேடக அமைப்பு  தமிழ் சமூகத்தில் ஜனநாயகம், சமத்துவம், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் மற்றும் பன்முகத்தன்மை போன்ற நோக்கங்களுக்காக செயற்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்  தோழர் சண் அவர்கள் மிகுந்த அர்ப்பணத்துடன்     அவ்வமைப்பில் செயற்பட்டார் . கனேடிய  தமிழ் சமூகத்தில் மாற்றுக்கருத்துக்கான இடைவெளியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார் . சகல விதமான சமூக அநீதிகளுக்கெதிராக தர்மாவேசத்துடன் போராடிய சண்  சில சமயங்களில் தாக்குதல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டி இருந்தது . இப்படிப்பட்ட தாக்குதல்களை அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் எவ்வித குரோதமோ, சலனமோ, பயமோ இன்றி தனது பணியை தொடர்ந்தார் .
இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டமானது தவறான முறையில் வழிநடத்தப்பட்டதனால் விளைந்த பாரிய அவலத்தை கண்டு தோழர் சண்  மனமுடைந்தார். யுத்தத்தை அறவே வெறுத்த சண்  சமாதான பாசறைகளை சிறுவர்கள் மத்தியில் நடாத்தியதன் மூலம் மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சித்தார் . சுயநல அரசியல்வாதிகளின் வெற்றுக்கோசங்களும் வீராப்பு அறிக்கைகளும் சாதாரண  தமிழ் மக்களுக்கு அழிவைத்தவிர வேறெதையும் பெற்றுத்தரப்போவதில்லை என்பதை அனுபவரீதியாக உணர்ந்திருந்தார்.இலங்கையில் சகல இன மக்களும் சமத்துவத்தின் அடிப்படையில் ஐக்கியம் அடைந்து உருவாக்கும் ஒரு ஜனநாயக சூழலில்   தான் தமிழ் மக்களின் பிரச்சினை தீரும் என்பதை உணர்ந்து  கனேடிய ஜனநாயக தமிழர் கலாச்சார பேரவை (CDTCA) என்ற அமைப்பை உருவாக்குவதற்கு முன்னின்று உழைத்தார் .இந்த அமைப்பின் செயற்பாடுகளை சாத்தியப்படுத்துவதற்காக ரொறன்ரோ  வாழ் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களை ஒன்று கூட்டுவதில் தனது ஆளுமை கவர்ச்சியினால் பெரும் வெற்றிகண்டார் . புலம்பெயர்ந்த நாடுகளில் முதன் முதலாக  சகல இலங்கையரையும் ஒன்று சேர்த்து தமிழ் சிங்கள புத்தாண்டு   விழாவை  நடாத்திய பெருமை தோழர் சண்ணையே சாரும் .
இந்த அரசியல் செயற்பாடுகளின்  மத்தியிலும் தனது நேரம் ,சிரமம் ,செலவு பாராது வயோதிபர்கள் ,நோயாளிகள் ,புது குடிவரவாளர்கள்  போன்றோர்க்கு பல உதவிகளை  எந்தவித ஆரவாரமுமின்றி செய்தார் .தனது அரசியல் சமூக செயற்பாடுகளில்  ஈடுபட்ட அனைவரும் நெருங்கிய உறவை பேணவேண்டும் என்பதற்காக பல ஒன்றுகூடல்களை சகலருக்கும் தோழராக இருந்த சண்  ஒழுங்கு படுத்துவதில் வெற்றி கண்டார் . பாசாங்கு இல்லாமல் பழகும் தன் அருமையான குணத்தால்  குழந்தைகள் முதியோர் உட்பட சகலரையும் அவர்  கவர்ந்தார்.
தனது மனதில் சரியென படுவதை யார் எவரென்று பார்க்காமல்  வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர்  தோழர் சண். பிழையான பாதை எமது மக்களை அழிவிற்கிட்டுச்செல்லும் என்பது அப்பட்டமாக  தெரிந்திருந்தும் தங்களது பிழைப்புக்காக, புகழுக்காக போலிவேஷம் போட்டிருக்கும் சந்தர்ப்பவாதிகள் மத்தியில் சண் அவர்கள் வித்தியாசமானவராக வாழ்ந்திருக்கிறார் . எப்படியாவது வாழ்ந்து பணமும் புகழும் கிடைத்தால் போதும் என்று எண்ணாது இப்படித்தான் வாழவேண்டும் என இறுதி மூச்சுவரை வாழ்ந்தவர் தோழர் சண் . காற்றடிக்கும் பக்கம் அள்ளுப்பட்டுச்செல்லும் சருகாக அவர் என்றும் இருந்ததில்லை .தமிழ் மக்களின் அவலத்தில் பிழைப்பு நடத்தும் போலிகளை போலல்லாது தமிழ் மக்கள் தொடர்பாக, குறிப்பாக விளிம்பு நிலை தமிழ் மக்கள்  தொடர்பாக மிகுந்த அக்கறையுள்ளவராக இருந்தார். தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அவர் மிகவும் தெளிவான பார்வையை கொண்டிருந்தார். புலிகளின் பாதை தமிழ் மக்களை அழிவிற்கிட்டு செல்லும் என்பதை நன்குணர்ந்திருந்த தோழர் சண், பல மேடைகளில் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்திருந்தார். அவர் எதை கூறினாரோ, அதுவே இன்று துரதிஷ்டவசமாக நடந்து முடிந்திருக்கிறது. அவரிடம் இனவெறி, மதவெறி, சாதிவெறி போன்றன இல்லாதது மட்டுமல்ல, அவற்றை  அவர் மூர்க்கத்தனமாக எதிர்த்தார். அவரது சிந்தனையும் செயற்பாடும் எப்பொழுதும் மக்கள் நலன் சார்ந்தே இருந்தது  .
மறைந்த சண்  அவர்கள் சிறந்த கலா ரசிகனாகவும் விமர்சகனாகவும் விளங்கினார் . இசை ,நுண்கலை கள் ,நாடகம் ,இலக்கியம், சினிமா  போன்ற துறைகளில் நிறைந்த ஈடுபாடு காட்டினார். கனடாவில் நடைபெற்ற முதலாவது தமிழ் குறுந்திரைப்பட விழாவை ஒழுங்கு செய்த பெருமை சண்ணையே சாரும்.
தோழர் சண் சுகவீனமுற்று படுக்கையில் படுக்கும் வரை ஒவ்வொரு வருடமும் சகல பண்டிகைகளுக்கும் தனது சகல நண்பர்களையும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கூற தவறுவதில்லை  . தனது குடும்பத்தினர் ,உறவினர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த தோழர் சண் அதேபோல் தன்னுடைய சமூக அரசியல் வாழ்வில் இணைந்து செயற்பட்டவர்கள் மீதும் அன்பு செலுத்தினார். இனிவரும் பண்டிகை காலங்களில் நாங்கள் தோழர் சண்ணின் தொலைபேசி அழைப்பை  கேட்க முடியாது .ஆனால் பண்டிகைகள் வரும்பொது அவரின் நினைவு எம்மை அழைத்துக்கொண்டே இருக்கும் .
கனேடிய ஜனநாயக தமிழர் கலாச்சார பேரவை (CDTCA)
ரொறன்ரோ கனடா  25-02-2013

No comments: