Friday, December 07, 2012

உடுப்பிட்டிமகளிர் கல்லூரியும் தீட்டும்

-வி.அப்பையா-
இனஅழிப்பு போருக்கு பிந்தைய காலங்களில் சமூக வாழ்க்கை இயல்பாகி விட்டதற்கான தோற்றப்பாட்டை அரசும், அதன் சிவில் சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக பிரச்சாரங்களினூடாகவும், பல்வேறு "நிகழ்ச்சிநிரல்" செயல்பாடுகள் மூலம் நிறுவ முயலுகிறார்கள்.
ஆனால், உண்மையில் மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக இராணுவ நிர்வாகத்திற்கு எதிராகவும், அதிகார வர்க்கத்தின் ஆதிக்க திமிருக்கு எதிராகவும் போராடுவது என்பது தொடர் போக்காகவே இருந்து வருகிறது.
சமீபத்தில் இணையங்களில் "பெரிதாக” அடிபடாத அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்ட செய்தி உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு தகுதியான அதிபரை நியமிக்கக்கோரி பாடசாலை முன்பு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது. ஒரு தகுதியான அதிபர் நியமனத்திற்கு கூட மக்கள் போராட வேண்டியுள்ளதையும், "நிர்வாக சீர்கேடு, தலையீடு" எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகவே இந்த செய்தி உணர்த்துகிறது.
மக்களின் போராட்டத்திற்கான அடிப்படை காரணம் என்ன? 04.10.2012இல் வடமராட்சி வலயத்தில், தரம் 1 ஏபி கொண்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு அண்மையில் புதிதாக நியமனம் பெற்ற 15 பேரில், தரம் 2-2 நிலையில் உள்ள ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டதை கண்டித்தே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகுதியான கல்வி தகுதி கொண்ட அதிபர் இருந்தும் ஏன் இந்த உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு அவர்கள் நியமிக்கப்படவில்லை என்பது நியாமான கேள்வியாகவே உள்ளது.
மேலும், முன்னைய காலங்களிலும் இதே போன்ற நிலமைதான் இக்கல்லூரிக்கு ஏற்பட்டுள்ளது. 12.11.2012ல் ஓய்வுபெற்ற இக்கல்லூரியின் அதிபரின் தேர்வும் கூட "விதிமுறைகளை£" மீறி "அதிகாரம்" படைத்தோரால் நியமிக்கப்பட்டது. இவரும் கூட அதிபர் தரம் அற்ற, ஆசிரியர் தரத்தை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போதைய அதிபர் நியமனத்தையும் கருத்தில் கொண்டால் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் "நிர்வாக செல்வாக்கை" புரிந்து கொள்ள இயலும். இக்கல்லூரிக்கான முதல் நிலை தகுதியுடைய அதிபர்கள், உடுப்பிட்டியில் இல்லையா? என்றால், உண்மை செய்தி அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.

உடுப்பிட்டியை சேர்ந்தவரும் இதே கல்லூரியின் பழைய மாணவியும், தற்போதைய இமையாணன் அரசினர் தமிழ்க்கலவன் வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றும் திருமதி நவமணி சந்திரசேகரம் 2004ஆம் ஆண்டில் இருந்தே தரம் 1 உடையவராக இருந்து வந்துள்ளார். இவரின் கல்வி தகுதிக்கு (கல்வியல் பட்டதாரி 01.03.2010) தரம் 1ஏபி உள்ள கல்லூரிக்கு நியமிக்க வேண்டியது அரசின் கடமை கூட. இருந்தும் அவ்வாறு நியமிக்கப்படாதது அவரின் "பின்புலம்" தான்.
திருமதி நவமணி சந்திரசேகரம் அவர்கள் 23.03.2010இல் வலயக் கல்வி பணிப்பாளர் மூலமாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் நிரப்பப்படாமல் இருக்கும் அதிபர் இடத்திற்கு முழுதகுதியுடைய தன்னை நியமிக்கும்படி விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், இவரின் விருப்ப இடமாற்றத்திற்கு மாறாக 22.04.2010 திகதியிட்ட மாகாண கல்வி செயலாளர் "அதிபர் ஓய்வுபெற்றுள்ள அடிப்படையில் இடமாற்றம்" என்ற தலைப்பில் வல்வை மகளிர் கல்லூரிக்கு இடமாற்றம் செய்து கடிதம் வந்துள்ளது.
தனது விருப்பமாற்றத்திற்கு எதிராக வந்த இடமாற்றத்தை ரத்து செய்யும்படியும், உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் அதிபர் நியமனத்திற்கு நேர்முக தேர்வு நடைபெறாத நிலையில், எனது விருப்பமாற்றத்திற்கு எதிரான இடமாற்றம் (வல்வை மகளிர் கல்லூரி) நியாயமற்றது எனவும் விளக்கி மேல்முறையீடு செய்திருந்தார்.
இவரது எதிர்ப்பின் நியாயத்தின் அடிப்படையில் மாகாண கல்வி செயலாளரால் வழங்கப்பட்ட வல்வை மகளிர் கல்லூரி இடமாற்றம் இரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் தனது விருப்ப அதிபர் இடமாற்றமான உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபருக்கான நேர்முக தேர்வை எதிர்பார்த்து காத்திருந்த திருமதி நவமணி சந்திரசேகரத்திற்கு அதிர்ச்சி செய்தி தான் வந்தது. காரணம் இரண்டரை ஆண்டுகளில் பணி ஓய்வுபெற இருந்த ஆசிரியர் தரம் 2-2ஐ சேர்ந்த ஒருவர் (அதிபர் தரமற்ற) அக்கல்லூரியின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதுதான். இதற்கு புலம்பெயர் பழைய மாணவர்கள் சங்கங்களின் முன்முயற்சி மிகமுக்கிய காரணமாக இருந்தது.
தற்போது இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகாவது இக்கல்லூரிக்கு நியமிக்கப்படுவேன் என காத்திருந்த (அனைத்து கல்வித்தகுதியும் இருந்தும்) திருமதி நவமணி சந்திரசேகரத்திற்கு மீண்டும் அதிர்ச்சி செய்திதான் வந்துள்ளது. இம்முறையும் அதேகல்லூரிக்கு திருமதி நவமணி சந்திரசேகரத்தைவிட கல்வி தரம் குறைந்த அதிபர், அதிபராக நியமிக்கப்பட்டுள்ளது தான்.
இந்நியமனத்தை பொறுத்துக்கொள்ள இயலாத பெற்றோர்களும், பொதுமக்களும் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஓய்வுபெற 20 மாதங்கள் இருக்கும் திருமதி நவமணி சந்திரசேகரம் 1989களில் இருந்து இமையாணன் அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலயத்தில் கணிதபாட ஆசிரியராகவும். பிரதி அதிபராக தொடர்ச்சியாக இருபத்திமூன்றரை ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். இச்சேவை காலத்தில் 17 வருடங்கள் இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றி வந்துள்ளார்.
இக்கல்வி பணிக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டவர் திருமதி நவமணி சந்திரசேகரம் என்பதை அவ்வூர் மக்கள் நன்கு அறிவர். ஓய்வுபெற 20 மாதங்கள் உள்ள நிலையில் அவருக்கான உரிய மரியாதையை தர தவறும் கேடுகெட்ட சமூகநிலையைக்கண்டு காறி உமிழத்தோன்றுகிறது.
கல்விக்கூடங்களை நடத்த வக்கற்ற இலங்கை அரசும், இதன் வெற்றிடத்தை நிரப்ப புலம்பெயர் "பழைய மாணவர்" சங்கங்களும், ஊர் சங்கங்களும், தற்போதைய சூழலில் பாடசாலைகளுக்கு பின்புலமான நிதி உதவிகளை செய்து வருகிறது. ஆனால் நிதியுதவியூடாக தனது அதிகார அரசியல் மனநிலையையும் உட்புகுத்துவதன் மூலம் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முயல்கின்றன.
இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அவர்கள் தெரிவிக்கையில்; வடமாகாணத்தில் சில பாடசாலைகளில் அதிபர் நியமனம் வழங்கப்படுவது, பொருமத்தமற்ற மோசமான நிலையிலேயே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு (தரம் 1 ஏபி) தகுதியாக அதிபரே நியமனம் செய்யப்படல் வேண்டும் எனவும் ஆனால் தரம்குறைந்த அதிபர் (தரம் 2-2) ஒருவரை நியமிக்க உள்ளதாக தாம் அறிவதாக அவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் பாகுபாடுகள் பொதுநியமனங்களில் இருத்தலாகாது. நியமனங்கள் தகுதி அடிப்படையில் ஒழுங்கு முறைப்படி செய்யப்படல் வேண்டும். கல்வி அதிகாரிகள் பக்கச்சார்பற்ற முறையில் பணியாற்ற வேண்டும். இது தொடர்பில் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடவுள்ளோம் எனவும் தேவையேற்படின் நீதிமன்றம் நாடுவது என்றும் ஆசிரியர் சங்க கூட்டமைப்பு இவருக்காக தொடர்ந்து போராடும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருமதி நவமணி சந்திரசேகரம் முழுக்கல்வி தகுதியுடையவராக இருந்தும் நியமிக்கப்படாதது உடுப்பிட்டி "மகளிர் கல்லூரிக்கு பின் இயங்கும் அரசியல் சக்தி படைத்த" ஆதிக்க சாதிகளே|.
நுண் அரசியல் தளங்களில் இருந்து விழிப்பு நிலை மக்களின் கருசனையாளர்கள் வரை இச்செய்தி கண்ணில்படாமலேயே இருந்து விட்டதுதான் ஆச்சரியம்!
அரசாங்கத்தின் மீது "களங்கம்" சுமத்தாமல் இச்செய்தியை கடந்து செல்லும் கூட்டங்களும், "கண்துடைப்பு" உத்தரவு என அறிந்தும் ஆளுநர் உத்தரவை, அரசு சார்பானதாக்க முயலும் "சாதிமகான்"களின் "தேசபக்தி" கபட நாடகத்திற்கு இடையில் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் சுயமரியாதைக்காகவும், உரிமைக்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பதும், சுரண்டப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
அவர்களின் நியாமான செய்திகளை கூட இரட்டடிப்பு செய்வதுமான நிலைதான் இன்று வரை தொடர்கிறது. இந்த அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதும், ஒடுக்கப்படுபவர்களுடன் ஒன்றிணைந்து போராடுவதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

No comments: