Sunday, January 13, 2013

மத்திய கிழக்குநாடுகளில் பணிபுரியும் பணிப்பெண்களின் அவலம்


-உமா-(ஜேர்மனி) 


குருநாகலை மாவட்டத்தில அமைந்துள்ள பொல்கிறிகாகவைச் சேரந்த 35 வயதான ரோகினி ராஜபக்ச என்ற  சவுதி அரேபியாவிலிருந்த திரும்பிய பணிப்பெண்ணின் உடலிலிருந்து 7 ஆணிகள்  09.02.2011 அன்று குருநாகலை வைத்தியசாலையில் வைத்து அகற்றப்பட்டுள்ளன. தலைமுடி போலமைந்த இக்கம்பிகளில் ஆறு இவரது கைகளிலும் , ஒன்று இவரது காலிலும் ஏற்றப்பட்டிருந்தன. இவர் சென்ற ஆண்டு டிசம்பரில்  சவுதி அரேபியாவிற்கச் சென்றதாகவும், ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் மீண்டும் சென்ற கிழமை நாடு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
11.12.2010 அன்று பேர்லினில் நடைபெற்ற 29வது பெண்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை, சில புதிய தகவல்களை உள்ளடக்கி இங்கே பதிவாகிறது.

“எனது அப்பாவி மகள் மரணத்தின் காலடியில் இன்னும் சிறையில் வாடுகின்றாள் நான்  இதுவரைக்கும் பல செவ்விகளைக் கொடுத்திருக்கிறேன்.
அவள் எங்களை வறுமையிலிருந்து மீட்கவே வெளிநாடு செல்ல முடிவெடுத்தாள். அவளது கனவும் ஆசையும் எமக்கு வாழ்வதற்கு ஒரு அழகான வீடு கட்டுவதும், அவளது சகோதரர்களிற்கு நல்ல கல்வியைக் கொடுப்பதுவுமே.

2005ல் நாட்டை விட்டு வெளியேறிய தினங்களில் அவளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. தான் 10 குழந்தைகளை பராமறிக்கவேண்டியிருப்பதாகவும், தான் ஒவ்வொரு நாளும் காலை மூன்று மணிக்கு எழ வேண்டியிருப்பதாகவும், தனது எஜமானர்கள் மோசமானவர்கள் என்றும் தான் கூடுதலாக வேலை செய்வதாகவும் அவள் அதில் எழுதியிருந்தாள்.
அவளைச் சந்திப்பதற்காக ரியாத்தின் சிறைச்சாலைக்கு எம்மை அழைத்துச் சென்றபோது அவள் எம்மைக்கண்டதும் நான் கொலையாளி இல்லை எனக் கதறினாள்.”

மேலுள்ள வாக்கியங்கள் 2007 ம் ஆண்டு முதல் கொலை குற்றம் சாட்டப்பட்டு மரணதணடனை கைதியாக சவூதி அரேபியாவின் சிறையில் வாடும் ரிஸானா நாபிக்கின் தாய்  ஒரு பத்திரிகை நிருபருக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி.
1988 ம் ஆண்டு 4 ம் திகதி பிறந்த ரிசானா நாபிக், யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மூதூர் கிராமத்தில் அமைந்துள்ள   சப்ரி நகரைச் சேர்ந்தவர்.  இவரது தந்தை மரம் வெட்டியும், அவ்வப்போது நெல் பயிர் செய்கை, காய்கறி வளர்த்தல், மந்தை வளர்ப்பு எனப் பிழைப்பு நடத்துபவர். ரிஸானா தனது 17வது வயதில் வறுமையின் நிமித்தம் தனது பிறந்த திகதியை 2 பெப்ரவரி 1982 என மாற்றம் செய்து ஒரு ஏஜென்சி மூலமாக 2005 ம் ஆண்டு சவுதி புறப்பட்டார். குழந்தை  வளர்ப்பு பற்றிய எந்தவித அறிவுமற்ற ரிஸானாவின் பொறுப்பில் ஒரு கைக்குழந்தையைப் பராமறிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அவள் அக்குழந்தைக்குப் பால் கொடுத்து கொண்டிருக்கும் வேளையில்  குழந்தைக்கு மூச்சுத்திணறி, அதன் பிற்பாடு குழந்தை இறந்தது. வீட்டு எஜமானர்கள் அவளைப் பொலிஸாரிடம்  ஒப்படைத்தனர்.


குழந்தையைத் திருகிக் கொன்ற குற்றத்திற்காக ரிஸானாவிற்கு 16 யூன் 2007 அன்று மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.
இலங்கை அரசின் தலையீட்டின் பிற்பாடு ஒரு வக்கீல் ஏற்பாடு செய்யப்பட்டது. உடல் வதைக்குட்படுத்தப்பட்ட ரிஸானா தான் குற்றம் இழைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். சவூதிசட்டத்தின்படி அரசனின் ஆணையின் பிற்பாடே மரணதண்டனை அமுலாக்கப்படவேண்டும். ரிஸானாவின் உண்மை வயது தெரியவந்த நிலையில் ஆசிய மனித உரிமைகள் ஆணையகம், சர்வதேச மன்னிப்புச்சபை, கியூமன்  றைட்ஸ் வொட்ஜ் ஆகிய சர்வதேச அமைப்புகள் தலையிட்டு வழக்கை வாபஸ் பெறும்படி கேட்டுக் கொண்டன.
ஓக்டோபர் 26ம் திகதி டவிடமி நீதிமன்றத்தில் ரிஸானாவிற்கு  மரணதண்டனை வழங்குவதெனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

ரிஸானாவைப் போன்று   இலட்சக்கணக்கான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு வேலை வாய்ப்புத் தேடிப் படையெடுக்கின்றனர். இதில் பெரும்பான்மையினர் தங்கள் வறுமையின் நிமித்தம் ஒரு சுபீட்சமான வாழ்வை எதிர்பார்த்தே இந்நாடுகளிற்கு செல்கின்றனர். தென்னிலங்கையில் வறிய சிங்கள, முஸ்லீம் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும், யுத்தத்தால் பெரிதும் நிர்மூலமாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலிருந்தும்  பெருந் தொகையான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு செல்கின்றனர். இவர்களோடு  சமூக அமைப்பில்  கீழ்மத்தியதரவர்க்கத்தைச் சேர்ந்த பெண்களும் வேலைவாப்பின்மையால் மத்தியகிழக்குநாடுகளிற்குச் செல்கின்றனர். பெரும்பகுதியினர் கடன்பட்டு அல்லாத தமது உடமைகளை விற்று தமது பயணச் செலவிற்கான பணத்தைப் பெறுகின்றனர்.

வெளிநாடுகளிற்கு 1.8 மில்லியன் இலங்கையர்கள்  வேலை வாய்ப்பு தேடிச் சென்றுள்ளனர். அன்னளவாக 19 பிரஜைகளில் 1 பிரஜை எனக் கொள்ளலாம். இதில் 70 வீதமானவர்கள் பெண்கள். மொத்தச்சனத்தொகையில் 5 வீதமாகவும்,   சனத்தொகையில் பெண்களின் எண்ணிக்கையில் 10 வீதமாகவும் உள்ளது. இவர்கள் அதிகமாக சவூதி அரேபியா, குவைத், டொகா, சைப்பிரஸ், இத்தாலி ஆகிய நாடுகளிற்கு செல்கின்றனர் 1.6 மில்லியன் இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றனர். 600,000 பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள். சவுதியில் மாத்திரம் 5.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரிகிறார்கள். இதில் 4 இலட்சம் பேர் இலங்கையர்கள். இலங்கையிலிருந்து வருடாந்தம் 18 ஆயிரம் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு செல்கின்றனர்.


வரலாற்றுப் பின்னணி

1970 களில் தான் வெளிநாட்டவர்கள் கூடுதலாக மத்தியக் கிழக்கு நாடுகளிற்கு வரத் தொடங்கினர்.  தொழில் பயிற்சி பெற்றவர்களும், பெறாதவர்களும் மத்திய கிழக்கு நாடுகளிற்கு வரத்தொடங்கினர். பெற்றோல் உற்பத்தியின் வளர்ச்சியுடன்  சவுதிஆரேபியர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைகளில் சேர்விஸ் செக்டரில்( வீட்டுபணிகள், தோட்டத்தில் வேலை செய்தல், குழந்தை பராமறிப்பு, முதியோர் பராமறிப்பு) போன்ற துறைகளில் பெண்களிற்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. ஒபேக், பெற்யோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு பெற்றோலியத்தின் விலையை அதிகரித்தது.

பெற்றோலியத்தை இறக்குமதி செய்யும் நாடுகள் தமது  நாட்டவரை வேலைவாய்ப்பிற்காக வளைகுடா நாடுகளிற்கு அனுப்பத் தொடங்கினர். சவுதி அரேபியா அதிகளவான பணிப்பெண்களை  வேலையிலமர்தினார்கள்.
கூடுதலாக இந்தோனேசியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்   இந்கு செல்ல ஆரம்பித்தனர். கூடுதலாக கீழ்மத்தியதரவர்கத்தைச் சேர்ந்த பெண்கள் தான் தொழில் வாய்ப்புகளிற்காக இந்தாடுகளிற்கு செல்ல ஆரம்பித்தனர்.

மத்திய கிழக்கு நாடுகளிற்கு செல்வதற்காக  ஏஜெண்டுகளிடம் 7000 இலங்கை ரூபாய்கள் அளவில் கொடுக்கப்பட வேண்டுமென்பதோடு, அரசாங்கத்தினால் நடாத்தப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் 2000கூலியிலிருந்து  5000கூலிகள்   டிப்போசிட்டாக செலுத்தவேண்டும். இது அவர்கள் நாட்டிற்கு வரும் பட்சத்தில் தான் திருப்பிக் கொடுக்கப்படும். இவர்கள் நாட்டை விட்டு செல்வதற்கு முன் அரபு வீடுகளில் வேலை செய்வது பற்றி பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.

இவர்களிற்கு மாதச் சம்பளமாக  800கூலிகள் வழங்கப்படுமென  உறுதி மொழியளிக்கப்பட்டாலும் அவர்களிற்கு 100கூலிகள்  மாத்திரமே வழங்கப்படுகின்றது. பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதுமில்லை.


கப்லா முறை 

தற்காலத்தில்  அடிமைகளை வைத்திருப்பது சட்ட விரோதமென்றபடியால்  சவுதி அரேபியர்களும் ஏனேய அரபு நாடுகளும்  பணிப்பெண்களைத் தமது உடமைகளாக வைப்பதை சடட்ரீதியாகக் மாற்றுவதற்காக ஒப்பந்த முறைமையை வைத்துள்ளது. இந்நாடுகளிற்கு வரும் பெண்கள் கப்லா எனப்படும் sponsership  மூலம் தான் விசா பெறமுடியும். இம்முறையானது தொழிலாளியையும் எஜமானையும் சட்ட ரீதியாக இணைக்ககிறது. 

இந்த சட்ட ரீதியான ஒப்பந்தத்தை இருவரும் மீறப்படும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. தொழிலாளி  இவ்வொப்பந்தத்தை மீறின, அவள் திரும்பபிப் போகும் பயணத்திற்கான செலவை அவளே பொறுப்பேற்க வேண்டும். வேலைவாய்ப்பு பணியகத்திடம் தண்டனைப் பணம் செலுத்தவும் அவள் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். இவ்வொப்பந்தத்தின்படி எஜமான் கபீல்(kafel)என அழைக்கப்படுகிறார். இவ்வொப்பந்தத்தின்படி அவள் அவரது உடமையாவதுடன், அவரிடம் தங்கி வாழ நேரிடுகிறது.

அவர்கள் திருப்தியடையாத பட்சத்தில் நாட்டிற்கும் திருப்பியனுபப்படலாம். பணிப்பெண்கள் நாட்டிற்கு வந்தவுடன் தமது பாஸ்போர்ட்களை  எஜமானிடம் ஒப்படைக்கவேண்டும். அவள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமாயின் காபில் எழுத்து மூலம் உறுதிப்படுத்திய பின்னரே Exit visa வழங்கப்படும். இது இருந்தால் மாத்திரமே அவள்  சட்டரீதியான முறையில்  தனது சொந்த நாட்டிற்குச் செல்லலாம்.


இந்தப் பெண்கள் வேறொரு கபீலுக்கு விற்கப்படலாம். 1900அல்லது 2000 டொலர்களை அரபுநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புத்திணைக்களத்திற்கு வழங்குவதன் மூலம் அவள் இன்னொருவரின் உடமையாக்கப்படலாம்.
அவள் தனது  கபீலிடம் வந்ததுமே அவர்களின் அடிமை வாழ்வு ஆரம்பித்துவிடும். இப் பெண்கள் எஜமானர்களின் பொறுப்பில் தான்  இருக்கின்றார்கள். அரேபியர்கள் அதிகமாகக் கூட்டுக் குடும்பங்களில் வாழ்வதால் இப்பெண்கள் வீட்டில் உள்ள அனைவரதும் வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது.

இப்பெண்கள்  வீடு துப்பரவு செய்தல், உடுதுணிகளைத் துடைத்தல். சமைத்தல், ஆடைகளைத் தைத்தல், குழந்தைகளைப் பராமரித்தல், வயோதிபர்களை கவனித்துக் கொள்ளல். போன்ற வேலைகளைச் செய்ய வேண்டியவர்களாகவுள்ளனர்.  இவர்கள் வேலை செய்ய வேண்டிய நேரம் 11லிருந்து 20 மணித்தியாலங்களாகின்றன.

பத்மா  என்ற பெண் 28 பேரைக் கொண்ட ஒரு வீட்டில்  காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை ஓய்வின்றி வேலை செய்ய வேண்டியிருந்ததாகச் சொல்கிறார்.


பணிப் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள்

இப்பணிப்பெண்கள்  அவர்கள் வேலை செய்யும் வீட்டிற்கு வந்தவுடன் அவர்கள் சுதந்திரமாக நடமாடுவது கட்டுப்படுத்தப்படுகின்றது. வீட்டில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது வெளியில் செல்வது தடைசெய்யப்படுகின்றது. இவர்கள் சின்ன சின்னக் காரணங்களிற்காக உடல்வதை, பாலியல்பலாத்காரம் போன்றவற்றிற்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஆதிக நேர வேலை செய்ய வேண்டுமென்பதோடு மேலதிகமான வீடுகளிலும்; வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களிற்கு நாளாந்த ஓய்வும் வாரத்திற்கான ஓய்வும் மறுக்கப்படுகின்றது. அவர்கள் மேலும் சம்பள மறுப்பு, சம்பளக்குறைவு, உணவு மறுப்பு  போள்றவற்றிற்கு முகங் கொடுக்கிறார்கள். இச்சித்திரைவதைகளிற்கு பிற்பாடு அவள் மனரீதியாக மிகவும் பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றாள்.

இதிலிருந்து தப்பித்து பொலிஸிலல் முறைப்பாடு செய்தால்  பெரும்பாலும் வீட்டைவிட்டுச் சென்றமைக்காக கைது செய்யப்படுகிறார்கள். போய் சொன்னதற்காக தண்டிக்கப்படுகிறார்கள். அரசாங்கத்தால் நடாத்தபபடும் தப்பியோடிவர்களிற்கான காப்பகங்களில்தான் இப் பெண்கள் கூடுதலாக தஞ்சமடைகிறார்கள். இக்காப்பகங்களில் தற்காலிகமாக அவளது பிரச்சினை முடீயும் வரையில் தான் தங்கமுடீயும். அவள் தனது Sponserஇடம் அனுப்பப்படுகிறார்கள் அல்லது நாட்டிற்குத் திருப்பியனுப்படுகிறார்கள்.

ஆமெரிக்காவில் நிலவிய அடிமைச் சட்டங்களை நினைவபடுத்து முகமாக சவுதிப் பத்திரிகைகளிலும் தப்பித்துச் செல்பவர்களை பணிப்பெண்களாக அமர்த்த விளம்பரங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. அவர்களது எஜமான்கள் இவர்களது பாஸ்போர்டடை வைத்திருப்பதால் அவர்களது அனுமதியின்றி நஒவை எளைய இன்றி நாட்டை விட்டு செல்லமுடியாதலால் அவர்கள் வேறு வழியின்றி தொடர்ச்சியான சுரண்டலிற்குட்படுகிறார்கள்.


பணிப் பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் 

மத்திய கிழக்குநாடுகளிலிருந்து வரும் பெண்களில் 15லிருந்து 20 வீதமானவர்கள் கிட்டத்தட்ட 100 000 பேர் முகம் சிதைக்கப்பட்டு, அங்கவீனமாக்கப்பட்டு, சம்பளம் மறுக்கப்பட்டு,  விபச்சாரத்திற்குட்படுத்தப்பட்டுத் தான் இலங்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

100 பேரளவில் பாலியல் பலாத்காரத்திற்குட் படுத்தப்பட்டு வருகின்றார்கள். 100க்கு மேற்பட்ட சடலங்கள் ஒவ்வொரு வருடமும் வருகின்றன. மாதத்திற்கு 20 சடலங்களாவது வருகின்றன.  2009ல் 330 இலங்கைப் பணிப்பெண்களின் சடலங்கள் வந்திருக்கின்றன. 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் 3 நாட்களில் 9 இலங்கைப் பெண்களின் சடலங்கள் வந்திருக்கின்றன.

குவைத்தில் நிலந்தி குணதிலக்க என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். 2009 ம் ஆண்டு டிசம்பர்மாதம் மலையகத்தைச் சேர்ந்த 26 வயதுடைய தர்சினி பாலகிருஷ்ணன், அவள் நாட்டைவிட்டுச்  சென்று 7 வாரங்களிற்குள் உடலில் பல தீக்காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளாள்.

தனது நான்கு பிள்ளைகளிற்கும் நான்கு பெட்டிகளில் சொக்கலெட் கொண்டு வருவதாக கூறிச்சென்ற 36 வயதுடைய செல்லத்துரை புஸ்பவள்ளி 2010ம் ஆண்டு நவம்பர்மாதம் சவப்பெட்டியில் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
ஜெயந்தி தங்கராசா என்ற பெண் மணிக்கட்டு உடைக்கப்பட்டு, முகம் சிதைப்பட்டு நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

குசும் என்ற பெண் தனது சம்பளத்தை கேட்டதற்காக எஜமானியினால் பலமாகத் தாக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சோமா என்ற பெண் அந்த வீட்டு எஜமானியின் 18 வயது மகனினால் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்துடன் அவரது நான்கு நண்பர்களினாலும் பாலியல் பலாத்காரத்திற்கு  உட்படுத்தப்பட்டுள்ளார். அவள் இதை எஜமானியிடம் முறையிட்ட போது இதை கணக்கிலெடுக்காதே நான் உனக்கு கருத்தடை மாத்திரை தருகிறேன் எனக் கூறியுள்ளார்.


சவுதிக்கு வேலைக்குச் சென்ற உடதெனியவைச் சேர்ந்த 49வயதுடைய ஆரியவதி 23 ஆணிகளும் கம்பிகளும் ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளார். மார்ச் மாதம் ரியாத்திற்கு சென்ற ஆரியவத்தி 5 பிள்ளைகளை ஓய்வின்றி பராமறிக்க வேண்டி இருந்தது. சிறிய பிழைகளிற்கும் கட்டையினால் தாக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் கிளாஸ்  ஒன்றை உடைத்ததற்காக உனக்கு கண்ணில்ல்லையா? என பேசிவிட்டு எஜமான் இறுக்கி பிடித்திருக்க எஜமானி சூடாக்கின கம்பிகளை கண் புருவங்களுக்கிடையில் செருக்கியுள்ளார். இவரது உடலில் இருந்த காயங்களில் சீழ்பிடித்து மணக்கத் தொடங்கியதால் அருவருப்பின் காரணமாக நாட்டிற்குத் திருப்பியனுப்பி விட்டார்கள்.

ஜோர்தானுக்கு வேலைக்குச் சென்ற மன்னம்பிட்டியைச்சேர்ந்த சாந்திக்கு வலுக்கட்டாயமாக 6 ஆணிகள்  பருக்கப்பட்ட சம்பவம் 2010 ஒக்டபர்மாதம் நடந்திருக்கிறது,  சுகயீனமுற்ற சாந்தினி தன்னை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுள்ளார். அதற்கு வீட்டு எஜமானியால் தாக்கப்பட்டு கிளாசில் தண்ணிருககுள் ஆறுஆணிகளை  இட்டு  பலவந்தமாக விழுங்கச் செய்திருக்கிறார். 4 ஆணிகள் இன்னும்  சாந்தியின் வயிற்றிலேயே  இருக்கின்றன. சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் வெளியேறுவதாக அவரது தாயார்  தெரிவித்துள்ளார்.

இப்பகமுவவைச் சேர்ந்த 38 வயதுடைய  இரண்டு குழந்தைகளின் தாயான  வீரய்யா லெக்சுமி  நவம்பர் மாதம் 12 ம் திகதி உடலில் 9 கம்பிகளுடன் நாடு திரும்பினார்.  இவரது கணவர் கூலித் தொழிலாளி. வசிப்பதற்கு வீடு இல்லை. ஒரு வேளைச் சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் மே மாதம் 10ம்திகதி குவைத்திற்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். அவரது எஜமான ஒரு பொலிஸ் உத்தியோகத்தர். ஏஜமானி ஒரு பாடசாலை ஆசிரியை. இவர்கள் வீட்டில் நாலு பிள்ளைகள்.

வீட்டில் அனைத்து வேலைகளையும் இவரே கவனிக்க வேண்டியிருந்தது. காலை 3 மணிக்கு சாப்பிட்டு வேலை தொடங்கினால் நடுசாமம் தான் அடுத்த வேளை சாப்பிடக் கிடைக்கும் இவர் மாத இறுதியில் சம்பளம்  கேட்டிருக்கிருக்கிறார். ஒரு மாதச் சம்பளத்தை  அடுத்த மாதம் தான் கொடுப்பார்கள். ஆகஸ்ட் 23 ம்திகதி  தனது பிள்ளைகளுக்கு காசு அனுப்ப முடியாததையிட்டு அழுது கொண்டிருந்தததை கண்ட எஜமானும் எஜமானியும் ஏன் அழுவதாகக் கேட்டுவிட்டு எஜமான் பிடித்திருக்க எஜமானி கம்பிகளை உடலில் ஏற்றியுள்ளார். இதைக்கண்ட அவர்களது குழந்தை மயங்கி விழுந்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் அவர்களது தயார் வீட்டிற்குச் சென்று அவரின் உதவியுடன் ஏஜென்டிடம் சென்றுள்ளார். அவர்களிடம் தன்னை நாட்டிற்கு அனுப்பக் கேட்டதற்கு இலங்கையிலிருந்து மூன்று பேர் வந்தால் தான் அனுப்ப முடியுமென்று கூறிவிட்டார்கள். அவர்களின் பராமறிப்பில் இருந்து ஒக்டொபர் 18ம் திகதி தான் இலக்சுமி நாடு திரும்பியுள்ளார்.


இவ்வருடம், 25.01.2011 அன்று  17 வருட அடிமைவாழ்விற்குப் பின்  இரண்டு பணிப்பெண்கள் சவுதிஅரேபியாவில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்தால் மீட்டெடுக்கப்பட்டுள்ளார்கள். ரியாத்தில் பணிபுரிந்த மத்துகமவைச் சேர்ந்த 51வயதான குசுமா நந்தனவும்,கல்னேவாவைச் சேர்ந்த டி.பி. ஹேமலதாவுமே இவ்விரு பெண்களாவர்.


பணிப் பெண்களும் சட்டங்களும் 


சவுதி ஆரேபியாவில் 1950 ஆண்டு நடைபெற்ற வேலைநிறுத்தத்திற்கு பிற்பாடு வெளிநாட்டவர்களின் நலன் கருதும் சட்டங்கள் நிறுவப்பட்டிருந்தாலும், அங்கு பணிப் பெண்களின் நலன் கருதி எவ்வித சட்டங்களும் அமுலில் இல்லை. நடைமுறையில் உள்ள சட்டங்களில் கிழமைக்கான ஓய்வு, வேலை செய்யும் நேரம் ஆகியன வரையறுக்கப்பட்டிப்பதோடு அதிக நேர வேலை, ஒவர்டைம் என்பன தடைசெய்யப்பட்டிருக்கின்றன. ஆயினும் இப்பணிப்பெண்களிற்கு இச்சட்டங்களிற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது.
அதிகமான வீட்டுப் பணிப்பெண்களின் வழக்குகள்  நீதிபதியின்  விசாரணைக்கு வருமுன்பே, அவர்கள் நாட்டிற்குத் திருப்பியனுபப்படுகிறார்கள்.  சிலருக்கு சவுதி நீதிமன்றங்களிற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. கூடுதலான பெண்கள் சட்டவீரோதமான முறையில் வாழ நேரிடகிறது. அல்லது வேறு கபில்களால் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். பெரும்பான்மையான பெண்கள் விபச்சாரத்திற்குட் படுத்தப்படுகிறார்கள்.  ஒரு தொழிலாளி எக்ஸிட்விசாவின்றி நாட்டைவிட்டு வெளியேறி அகப்பட்டால் அபராதமாக 3000 அமெரிக்க டொலர்களைச் செலுத்தவேண்டும். அவர்கள் கபிலிடம் ஒப்படைக்கப்பட்டு, பல சந்தர்ப்பங்களில் அவர்கள் நாட்டிற்குத் திருப்பியனுப்பப்படுகிhர்கள். அத்துடன் அவர்கள் அந்த நாட்டிற்குத் திருப்பி  வருவதும் தடைசெய்யப்படும்.
சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டு கடத்தப்படுவதற்கு அவர்கள் 1500 லிருந்து 3000 டொலர்கள் வரை கடத்தல் காரர்களிற்கு வழங்கவேண்டும்.
அண்மையில் பதிவாகிய செய்தியொன்றில் ஐக்கிய ஆரேபிய எமிரேட்சில் 1094 பணிப் பெண்கள் தப்பித்துச் சென்றுள்ளனர். தப்பித்துச் சென்றவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களிற்கு 50 000 டிர்கம்சும், வேலைக்காக வைத்திருந்தால் 100 000 டிர்கம்சும் தடைப்பணமாக விதிக்கப்படுமெனவும்ஈ இத்துடன் சிறைத்தணடனை விதிக்கப்பட்டு நாடும் கடத்தப்படுவார்கள் என்றும்  டுபாய் அரசஅதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஜோர்தானில் கபில்களின் எக்ஸிட் விசாவை எதிர்பார்த்து அல்லது அரசாங்கத்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும்வரை பல்லாயிரக்கணக்கான பெண்கள் காத்திருக்கின்றனர் என இவ்வருடம் வெளியான செய்தியொன்று தெரிவிக்கின்றது.
Schura council
2009 யூலை மாதம் சவூதி அரேபியாவின் Schura councilவெளிநாட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் முகமாக அமைக்கப்பட்ட்  பிரேரணையொன்றை சமர்ப்பித்துள்ளனர். இது சவுதியில் பணிபுரியும் 1,5 மில்லியன் பணிப்பெண்களின் உரிமைகளை கவனத்தில் எடுக்கின்றது. இதில் 9 நேர ஓய்வு, வசதியான வதிவிடம், இடைவேளைகள் என்ற விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் இதிலும் இப்பணிப் பெண்களிற்கு சாதகமாகப் போகக் கூடிய விடயங்கள் இருப்பதாக கியூமன் றைட் வோட்ச் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது எஜமானுக்கு பணிந்து நடத்தல், சட்டவிரோதமான காரணங்களிற்காக வதிவிடங்களை விட்டு செல்வதற்கான தடை போன்ற மீண்டும் இப்பெண்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் சாரங்கள் இதில் காணப்படுகின்றன.
இப்பணிப் பெண்களை வேலைக்கு அனுப்பும்  நாடுகள்  இப் பெண்களிற்கு இழைக்கப்படும் அநீதிகள் தெரிந்தும் தமது இலாபங்களைக் கருத்திற் கொண்டு மெளனம் சாதிக்கின்றனர். பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் சனத் தொகை பெருக்கத்தாலும்,  அந்நாட்டின் பொருளாதார ஸ்திரமின்மையாலும் தொடர்ந்தும் இப்பெண்களை அரேபிய நாடுகளிற்கு அனுப்புகின்றனர். இந்நாடுகளில் வேலை வாய்ப்புக் குறைவாக இருப்பதால் அதனால் எழக்கூடிய சமூக எதிர்ப்பை திசை திருப்புவதற்காகவும் அவ்வரசாங்கங்கள் இக்கொள்கையைக் கடைப் பிடிக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் அப்பணிப்பெண்கள் பெருமளவில் அந்நிய செலவாணியை பெற்றுதருவதால்,  இவர்களை  அரசாங்கம் ஒரு ஏற்றுமதிப் பண்டமாகவே கருதுகிறது. ஒரு வருடத்திற்கு இவர்கள் இலங்கை அரசிற்கு 425 பில்லியன் ரூபாய்க்களை ( 3.8 பில்லியன் டொலர்கள்)     அந்நியச்செலவாணியாக ஈட்டித் தருகிறார்கள். தற்போது சவுதிக்கு ஒரு பணிப் பெண்ணை அனுப்புவதால் இலங்கைஅரசிற்கு தலா 7500 டொலர்கள் கிடைக்கின்றது. சவுதி அரசாங்கம் அதை 550 டொலர்களாக குறைக்க யோசித்துள்ளது. இதற்கு இலங்கையரசாங்கம் உடன்படாததால் சவுதிஅரேபியா  இலங்கையிலிருந்து  பணிப்பெண்களை எடுக்காது என பயமுறுத்தியுள்ளது.
இலங்கையிலிருந்து வேலைவாய்ப்பிற்குச் செல்லும் அப்பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைவதற்கான சமூகக்காரணிகள் சீர்படுத்தப்படுத்தப்பட்டு, ஸ்திரமான பொருளாதாரநிலைமை உருவாக்கப்படும்வரை அரசாங்கங்கள் இப்பெண்களை பலிகொடுத்துக் கொண்டேயிருக்கும் என்பதே கசப்பான உண்மை. 
நன்றி; http://thoomai.wordpress.com

No comments: