Saturday, February 27, 2016

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 15 -16)

-விஜய பாஸ்கரன்-

அச்சுவேலியில் ஏற்பட்ட சம்பவத்தில் அரியரத்தினம் கொல்லப்பட்டார்.இது தொடர்பாக யாரும் எந்த தகவலும் பொலிசாருக்கு கொடுக்கவில்லை.உண்மை விபரங்களை வெளியிடவும் இல்லை.எனக்குத் தெரிந்த விசயங்களை பகிரவிரும்பவில்லை.இறப்பதற்கு முதல்நாள் எங்கள் வீட்டுக்கு வந்து தன் தோட்டத்துக்கு பனை ஓலை வாங்கிக்கொண்டு போனார். மறுநாள் இந்த தகவல் கிடைத்தது.அவர் பிரபாகரன் பாணியில் செயற்பட முனைந்தார்.புரிந்தவரகள் விளங்கிக் கொள்ளவும்

இரத்தினம் கொலை செய்யப்பட்டபின் கொடிகாம்ம் அய்யா எமது ஊர் தொடர்புகளை விட்டுவிட்டார்.தவராசன் கொல்லப்பட்ட சில மாதங்களின் பின் எமது எதிரிகள் அய்யாவை கொடிகாம்ம் பஸ் நிலையத்தில் வைத்து சுட்டுக்கொன்றனர்.1956ம் ஆண்டு தேர்தலோடு தொடங்கிய மோதல் 1969இல் அய்யா கொல்லப்பட்டார்.இந்த மோதல் காங்கிரஸ் கட்சியால் ஆரம்பிக்கப்பட்டது .
அய்யா கொலையை தமிழரசுக்கட்சி கண்டித்தது.அவரது மரணச் சடங்கில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.இதைவிட அதிக பங்களிப்பை அவர்களுக்கு கொடுத்தவர் இரத்தினம்.யாருமே கண்டு கொள்ளவில்லை .எமது எதிரிகள் காங்கிஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.எமது ஊரவர்கள் தமிழரசுக்கட்சியின் கட்சி ஆதரவாளர்கள்.சாதி காரணமாக எதிரிகளுக்கே கை கொடுத்தனர்.

அய்யா இறந்தபோது ஒரு நோட்டீஸ்.அதில் உள்ள வாசகம்
தமிழுக்காக வாழ்ந்த உயிர் ஓய்ந்ததம்மா- கடமை வீரன் கதறுகிறான்
இப்படி ஒரு வாசகம் எழுதி நவரத்தினம் அழுகிற படம் போட்டு வாரக் கணக்காக ஊரெங்கும் விநியோகித்தார்கள்.

இந்த போராட்ட காலங் களில் சில மனித நாகரீகங்கள் இருபகுதிகளாலும் காக்கப்பட்டன.உண்மையில் பெருமைக்குரிய விசயம்.எம்மோடு பிரச்சினைக்கு உரியவர்கள் தவிர யாருடனும் பகை பாராட்டவில்லை.எமது ஊருக்கால் அவர்கள் தாராளமாக போய்வர அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் அவர் பகுதியால் வந்த எமது ஊரவர்களை தாக்கினார்கள்.ஆனாலும் மூன்று குடும்பங்கள் அவர்கள் வாழும் மையப்பகுதியில் வாழ்ந்தனர்.ஒரு குடும்பம் பிரபல நெரிவு முறிவு வைத்தியர் புத்தூர்சந்தி கிருஸ்ணர்.அவர் வீட்டுக்கு அருகில் இன்னொரு குடும்பம்.இவரகளுக்கு எதிரிகள் எந்த கெடுதலும் செய்யவில்லை.நடராசாவின் மாமா குடும்பம் ஒன்றும் அப்பகுதியில் தனியாக இருந்தது. அவர்களுக்கும் எந்த தூங்கும் செய்யவில்லை.ஆனாலும் அவர்கள் பயந்தே வாழ்ந்தார்கள்.அது இயல்பானதே.
இம்மாதிரியான மோதல்கள் புன்னாலைக்கட்டுவன் .எழுதுமட்டுவாளில் நடைபெற்றபோது ஊரையே காலிபண்ண வைத்தார்கள்.
அய்யா கொலையை தொடர்ந்து மோதல்கள் மறுபக்கம் திரும்பின.அவரகளின் உள் சாதி மோதல்கள் ஆரம்பமாகின.

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி16)
------------------------------------------------------------
எமது ஊரில் 1921 இல் றோ.க.பாடசாலை சுவாமி ஞானப்பிரகாசர் என்பவரால் உருவாக்கப்பட்டது.ஆனாலும் மதம் மாற விரும்பாத காரணங்களால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை .நீண்ட காலங்களுக்கு பின் நடராசா,சின்னத்தம்பி,சிங்கபாகு ஆகிய மூவரும் மட்டுவில் மகாவித்தியாலயத்தில் உயர்தர கல்வி படிக்க புறப்பட்டனர்.நடராசா 9 வது வகுப்புடன் நிறுத்திவிட்டார்.பின்னர் சில காலத்தின்பின் சங்கத்தானையில் படித்தார்.

இவர்களைத் தொடர்ந்து என் அண்ணன்மாரகள் மட்டுவில் பின் புதிய பாடசாலையான வரணி மகாவித்தியாலயத்தில் படித்து சித்தியடைந்தனர்.என் பெரிய அண்ணன் உயர்தரம் தொடர விரும்பவில்லை .பொருளாதார காரணங்களால் அய்யாவும் வலியுறுத்தவில்லை.எமது ஊரில் எனது அய்யாவும் சின்னத்துரை என்பவரும் சிறுபான்மைத் தமிழர் மகாசபை உறுப்பினர்கள்.
1960 தேர்தலில் எமது ஊரில் இரத்தினம்,நடராசா ,சின்னத்துரை ,அப்பையா என்பவர்கள் தமிழரசு ஆதரவாளர்கள் .இதில் நடராசாவும் சின்னத்துரையும் த்ம்மை முன்னிலைப் படுத்துவதில் அக்கறை கொண்டனர்.
நமது ஊரில் நிறைய அரச காணிகள் இருந்தன.இதை சுருட்ட நினைத்தவர்கள் சின்னத்துரை துணையுடன் பல காணிகளை தமதாக்கிக் கொண்டனர்.இதில் ஒரு சில துண்டுகள் சின்னத்துரைக்கும் அவரது சகோதர்ருக்கும் கிடைத்தது.
மறுபுறத்தில் அன்றைய அக்கராயன் குடியேற்றத்தில் நடராசாவின் தந்தை கணபதிக்கும் எனது உறவினரான வேலர் என்பவரகளுக்கும் காணிகள் கிடைத்தன.அதனைத் தொடர்ந்து வ்வுனிக்குளம் குடியேற்றத்தில் நடராசாவின் நெருங்கிய உறவினர்களுக்கு காணி கிடைத்தது.இதில் விதி விலக்காக இரத்தினத்தின் சிறிய தகப்பனுக்கும் கிடைத்தது.
சின்னத்துரையும் நடராசாவும் ஒவ்வொரு பக்கமாக தலைமை வகித்தனர்.எமது ஊரில் நடராசா ஒரு வாசிகசாலையை உருவாக்கினார்.
இக் காலத்தில் எமது ஊரில் சன்னியர் செல்லையா என்ற கிராம சபை உறுப்பினர் இருந்தார் .அந்த காலங்களில் எமது கிராமசபை எமது ஊரில் நில உடமையாளரான நல்ல மாப்பாண உடையாரின் கட்டுப்பாட்டில் இருந்தது.இவர் காங்கிரஸ் ஆதரவாளர்.அப்போது எமது பகுதிகளில் அவரை யாரும் எதிரப்பதில்லை.அவர் ஒருவர் பெயரை தெரிவு செய்து கிராம சபை உறுப்பினருக்கும் விடுவார்.அவரகள் கூட்டம் நடக்கும்போது போய் வெளியே நின்று விட்டு வருவார்கள் .ஆனாலும் அந்த கிராம சபை எமது ஊரில் பல இடங்களில் குடிநீர் கிணறுகளைக் கட்டிக் கொடுத்தது.
இப்படியே சன்னியர் செல்லையாவும் தெரிவு செய்யப்பட்டார்.ஆனால் அவர் வெளியே நின்றுவர தயாராக இல்லை.உள்ளே அழைத்தார்கள்.கதிரை கொடுக்கவில்லை .அவர் வாதாடி கதிரையில் அமர்ந்தார்.
இவர் கிணற்றைக் கண்டு திருப்தி கொள்ளவில்லை.கிராம சபை மூலமாக காணி வாங்கி பனை வெல்ல தொழிற்சாலை ஒன்றை அந்த நாட்களில் உருவாக்கினார்.இது நடந்தது 60களில்.இதனால் இவருக்கு செல்வாக்கு தானாக வளர்ந்தது.இது நடராசா,சின்னத்துரை தமிழரசுக்கட்சி ஆகியவற்றுக்கும் பொறுக்க முடியவில்லை.
சின்னத்துரை நடராசா ஆகியோர் இணைந்தனர்.

No comments: