Showing posts with label kanpollai. Show all posts
Showing posts with label kanpollai. Show all posts

Monday, January 30, 2023

அன்று துரைராசா

-கரவைதாசன்-
அநுபவபகிர்வு....... 

அன்று துரைராசா சூட்டுக்கு இலக்காகி மறைந்திருந்தால் இன்று அவரின் நினைவுச் சிலையினையும் திசைமாறிய கிராமத்தின் ஒரு கிடுகுவேலி இடுக்கிநூடேதான் பார்க்க நேர்ந்திருக்கும்." என் தந்தைவழி உறவுக்காரத் தம்பி, துரை என நாமும் தான் வாழ்ந்த கொழும்புப் பகுதியில் குமார் என நன்கறியப்பட்ட அமரர் லிங்கம் துரைராசா அவர்களின் அமரத்துவச் செய்தியறிந்து என்னில் ஒரு துண்டம் இழந்ததாய் உணர்கிறேன். நானும் அவரும் எமது பகுதியில் அருகருகே வாழ்ந்து வந்தோம் என்பதை கடந்து வாழ்வின் அர்த்தங்களை புரிந்து கொண்டு எம்மை பொறுப்புடன் உருவாக்கி அசல் மனிதர்களாய் வாழ்வதற்கான முன்னெடுப்புகளை முன்செய்தோம் பாதியிலே படிப்பினை நிறுத்திய பல எமது கிராமத்து இளைஞர்களுக்கு மாலை நேர வகுப்புக்களை நடத்தினோம். திருக்கோணமலையிலிருந்து வந்திருந்த பொலிஸ் மார்க்கண்டு ராஜாஅண்ணாவிடம் மாலை நேரத்தில் ஆங்கில மொழியினை கற்றோம். இதன் தொடர்ச்சிதான் தனது பிள்ளைகளை ஆங்கில மொழிவழிக் கல்வியில் அவர் கற்பிக்கும் வழிக்கு அவரை இட்டுச் சென்றிருக்கலாம். மொத்தத்தில் கல்வியின் அவசியத்தினை உணர்ந்தவராக அவர் இருந்தார். எமது கிராமத்தின் மூத்த தலைமுறையினைச் சார்ந்த வ. தங்கமணி , க.இராசரத்தினம் , மு.தவராசா, வீ.எஸ். சிவபாதம், ஆ.சிவகுரு , ஆ.தங்கராசா இன்னும் சிலர் கிராமத்தின் கட்டுமானப் பணிகளான பாடசாலை , சனசமூகநிலையம் , கோவில்கள், சுடலை, தெருக்கள், சங்கக்கடை போன்றவற்றில் களப்பணியாற்றி அவற்றில் அபிவிருத்தியினையும் கண்டனர். இடதுசாரிகளான இவர்களிடையே ரசிய சார்பு ,சீன சார்பு எனத் துருவப்பட்ட நிலையும் இருந்து வந்தது . 1978ஆம் ஆண்டளவில் இத்துருவப்பாட்டு நிலையிலிருந்து விலகி அன்று இளைஞர்களாக இருந்த நாம் ஒரு நிலையில் நின்று உருவாக்கியதே கரவை செஞ்சுடர் விளையாட்டுக்கழகம். என்னிலும் மூன்று வயதுகள் குறைந்த துரைராசா என்னோடு வயதுகள் ஒத்த இளைஞர்களுடன் சேர்ந்து கழகத்தின் களப் பணியாற்றிய ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர் . விளையாட்டுத் துறை , மலை நேர வகுப்பு , கரவை சகாதேவன் குடியிருப்பு ஞான வைரவர் ஆலயத்துக்கு மின் இணைப்பு என பல்வேறு ஆக்கப்பணிகளில் தன்னையும் ஒருவராக இணைத்துக் கொண்டு செயற்பட்டார். வந்துபோன நாட்களில் 1982 ல் பாரதி நூற்றாண்டு விழாவினை மிகவும் சிறப்பாக செய்து முடித்தோம். குற்றப் புலனற்ற கிராமமாக அந் நாட்களில் நாம் கிராமத்தினை வழி நடத்தினோம். கிராமத்தின் வளர்ச்சி வலதுசாரிய அரசியல்காரர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அதன் உச்ச செயற்பாடாக ஆயுதாரி இயக்கங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் இரவோடு இரவாக வந்து கன்பொல்லைதியாகிகளின் சிலைகளை உடைக்க முற்பட்டனர். சத்தம் கேட்டு ஊரவர்கள் திருப்பத் தாக்கவே அவர்கள் மறைந்தோடினர். தீ.ஒ.வெகுசன அமைப்பின் ஆயுதத்துக்கு அப்போது பொறுப்பாக சி. புலேந்திரன் இருந்தார். அவர் அந்த கைத்துப்பாக்கியினை வெளிக்கொணர்ந்து சத்தவெடி வைத்தது அப்போது ஆயுதாரி இயக்கப் பொடியளை அந்நாளில் கிலிகொள்ள வைத்தது. மறு நாள் ஊரில் எதிர்ப்புக் கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது இதற்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் முடிவானது. ஆனால் எந்த நடவடிக்கையுமற்று நாட்கள் சென்றன. நானும் உலகனும் துரைராசவும் தோழர் சி.கா.செந்திவேலிடம் சென்று போராட ஆயுதம் கேட்டோம். செந்தில் தோழர் நாம் வந்த விடயம் எனது தந்தையார் தவத்துக்குத் தெரியுமா என என்னிடம் கேட்டார். தெரியாது எனச் சொல்லவே ,நீ போய் படியும் என அறிவு சொல்லி அனுப்பி வைத்தார். நல்லவேளை ஐயாவிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஆயுதத்தினை எப்படி கையாள்வதென எங்களுக்கு மூன்றுநாள் வகுப்புகள் எடுத்தார். இத்தனைக்கும் கட்சியில் நாம் அங்கத்தவர்கள் இல்லை. அவரின் பொறுப்பினை இன்றும் நினைத்து மெச்சுகிறேன். ஆனால் நாம் ஓயவில்லை எங்கள் கடைக்குள் யாருக்கும் தெரியாமல் நான், நேசன்,ரங்கன்,உலகன்,துரைராசா,ரவி, எனது மச்சான் செல்வா இவ்வளவு பேருமாக சேர்ந்து கண்டன சுவரொட்டிகளை தயார் செய்தோம். பருத்தித்துறை ,மந்திகை, வல்வெட்டித்துறை, நெல்லியடி நகரங்களில் ஒட்டிவைத்தோம். நெல்லியடி மத்தியசந்தை சுவரின் மேற்பகுதியில் நேசனும் துரைராசவும் பெரும் கண்டனப் பதாகையை ஒட்டிக்கொண்டு இருக்கும்போது நான் கீழிருந்து டோச் வெளிச்சத்தினை சுவருக்கு பாய்ச்சிக்கொண்டு இருந்தேன். நல்லவேளை ரங்கன் சந்தியிலிருந்து சமிக்கை தந்தான் ஆமியின் டிராக் வண்டி வருவதாக நான் திருமகள் ஸ்டோர்ஸ் முன் ஒழுங்கைக்குள் இறங்கினேன் செல்வா என்னை பின் தொடர்ந்தான் ஆளுக்கு ஒரு திசையாக ஓடி மறைந்தோம். வந்த டிராக் வண்டி துரைராசவையும் நேசனையும் நோக்கிச் சுடத் தொடங்கியது அவர்கள் இருவரும் கூரைக்கு தாவி பின்பக்கமாக மறைந்துவிட்டார்கள். அன்று துரைராசா சூட்டுக்கு இலக்காகி மறைந்திருந்தால் இன்று அவரின் நினைவுச் சிலையினையும் திசைமாறிய கிராமத்தின் ஒரு கிடுகுவேலி இடுக்கிநூடேதான் பார்க்க நேர்ந்திருக்கும். எங்களது கண்ணீர்ப் பூக்களை மலர்க் காணிக்கையாக சாத்தியப்படுத்திய நண்பர் திலகராஜ் உள்ளிட்ட தோழர்களுக்கு நன்றிகள்...

Saturday, January 18, 2020

புத்தாடையும் பொங்கலுமென..




14.01.2020 அன்றைய தினம் எமது கரவெட்டி மேற்கு j363 கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட எழுபது குடும்பங்களுடன் புத்தாடையும் பொங்கலுமென மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டோம் . இதனை சாத்தியப்படுத்திய கிராம அலுவலர் கணேசராசன் ரதீசன் அவர்களுக்கும் பல்வேறு கிராம நல அமைப்பைச் சேர்ந்த அ.சாளினி, வை.திலக், ந.நகுலேஸ்,ல.பமிலன், சி.குரு, யோ.பிரசீலன், கா.ஜெயரஞ்சி, இ.சாள்ஸ் இன்னும் உறுப்பினர்களுக்கும் மான்புடை நன்றி. நிகழ்வில் யாழ் நண்பர்கள் வட்டத்தின் தலைவர் . Dr.சிதம்பரம் மோகன் அவர்களும் அதிபர் க.இராசரத்தினம் தம்பதிகளும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஒருங்கமைப்பு அனுசரணை தவம் அறக்கட்டளையினர்.

Sunday, March 05, 2017

மக்கள் கலைஞர் கே.எஸ். இரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு


மக்கள் கலைஞர் கே.எஸ். இரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவில் நாம் நிற்கிறோம்.  இவ்வேளையில் அரசியல்  கலை இலக்கியத் தளங்களில் இவரோடு சேர்ந்து இயங்கிய இவரது சகா எஸ். தர்மன் (ஜெர்மனி)அவர்கள், கே.எஸ். இரத்தினம் அவர்கள் இறப்பெய்தியபோது அனுப்பி வைத்த பிரிவுச் செய்தியினை பதிவேற்றுகின்றேன். 

அம்மான் என நாம் அன்பாக அழைக்கும் கே.எஸ். இரத்தினம் அவர்கள் யாழ் கொக்குவிலைச் சேர்ந்தவர். பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் கன்பொல்லைக் கிராமத்தில் எனது கற்கண்டு சித்தப்பாவின் மகள் எனது சகோதரி முறையான இராசு அவர்களை திருமண பந்தத்தில் சேர்த்துக்கொண்டு பலரும் புகழ்ந்து போற்றும் வகையில் வாழ்ந்து வந்தார். திருமண பந்த வழியில் வந்தவர் நண்பனுக்கு நண்பன் போலும் மைத்துனருக்கு மைத்துனர் போலும் அன்பாக பண்பாக பழகினார். நாம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து எல்லாக் காரியங்களையும் ஒன்று சேர்ந்து செய்வோம். அச்சூழல் காரணமாக கே.எஸ். இரத்தினம் அவர்களின் மூலம் சீனசார்பு கம்யுனிஸ்ட் கட்சியில் இணைந்து வெகுஜன இயக்க மூலம் பல சாதியப் போராட்டங்களில் பங்காற்றினோம்.  இதில் முக்கியமாக கன்பொல்லையில் சாதிவெறியர்களுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். மேலும் நானும் கே.எஸ். இரத்தினம் அவர்களும் வேறு தோழர்களோடு இணைந்தும் பல முற்போக்கான வேலைகளை செய்தோம். மக்கள் சீனத்துக்கு எதிராக அமெரிக்க எடுத்த Shoes of the Fisher men  ஆங்கிலப் படத்தினை யாழ் றீகல்  தியேட்டரில் ஓடவிடாமல் தடுத்து ஓர் தாக்குதலை நடத்தினோம். படம் திரையிடப்பட்டபோது வெளியில் கைக்குண்டு வெடிக்கவைத்து கலகம் விளைவிக்கப்பட்டபோது நாம் தியேட்டரின் திரைக்கு உள்ளேயிருந்து  கோழிமுட்டைக் கோதுக்குள் கொண்டு சென்ற பெயின்ரினை அடிக்க வேண்டும் அத்தாக்குதலை வெற்றிகரமாகச் செய்தோம். இத்தாக்குதலுக்கு தோழர் இக்பால், சலீம்,   சி.கா.செந்திவேலும் , ஆத்திசூடி நவரத்தினம்  கிளிநொச்சியினை  சேர்ந்த  தோழரும் வெளியில் நின்று செயற்பட்டனர்.  மேலும் பல முற்போக்கான வேலைகளை செய்ததோடு பல நாடகங்களையும் நடித்து மேடைகள் பல ஏற்றினோம். இப்படியாக நண்பனுக்கு நண்பன் போலும் தோழனுக்கு தோழன் போலும் இணைந்து பல காரியங்களை செய்து வந்ததினை நினைக்கும்போது  அவர் ஞாபகம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது . அவரைப்போல் அன்பு காட்ட தோளோடு தோள்  கொடுக்க வேறு யாருமில்லை. இன்று என் கையை நழுவிப் போய்விட்டார். அவரின் சிரிப்பு, நகைச்சுவையான கதைகள், பண்பான பழக்க வழக்கங்கள். என் கண்முன் நிற்கின்றது . இனி அவரை எப்போது காண்பேன் என மனம் ஊசலாடும். தோழன் ச.தர்மன் (ஜெர்மனி).

Wednesday, December 28, 2016

குதித்த குதியும் ஆடியபாதங்களும்! நினைவில் நிற்கும் நாட்டுக்கூத்து கலைஞர்கள்

- கரவைதாசன் - 

தமிழிலே மேலைத்தேயவரின் வருகையும் அவர்களின் வருகைக்கு பிற்பட்ட புனைகதை (Fiction) முறையும் அறிமுகமாவதற்கு முன்பு வரலாறு, சோதிடம், வைத்தியம், இலக்கியம் என எல்லாம் கவி வடிவிலேயே இருந்திருக்கின்றன. முன்னெல்லாம் சபைகளிலே கவிதையிலேதான் கதைத்தார்கள் என்று  காணக்கிடக்கின்றது. அந்தவகையில் பாடற்கலையும் ஆடற்கலையும் இணைந்து கூத்து அல்லது நாடகம் என்ற வடிவம் மிகச் சிறப்பான ஓர் இடத்தில் அமைந்திருந்ததாக அறியக்கூடியதாக விருக்கின்றது. பழம்பெரும் நூல்களான சாத்தனாரின் கூத்த நூலிலும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும், பரதருடைய நாட்டியசாஸ்திரத்திலும் நாடகம் பற்றிய பல செய்திகள் காணக்கிடக்கின்றன. சிந்து, தரு, ஓடம் தண்டகம், விருத்தம், பத்யம், சுலோகம், ஓரடிதரு, ஓரடிபதம் எனப் பல்வேறு இசைவடிவங்களை இசைநாடகங்களில் கையாண்டதாகக் காணக்கிடக்கின்றது. 

கூத்து என்பது இசையோடு இணைந்த ஆட்டமாகும். ஈழத்திலே தமிழர் பாரம்பாரியமாக வாழ்ந்து வரும் பகுதிகளிலே கூத்து பல்நெடும் காலமாக ஆடப்பட்டு வந்திருக்கின்றது. இவை வடமோடி, தென்மோடி, வட்டக்களாரி, காத்தான்கூத்து, மகுடிக்கூத்து, வீரபத்திரா; ஆட்டம், காமன்கூத்து எனப்பல வகைப்படும். உண்மையில் கூத்து தமிழர்கள் வாழ்வில் எப்போதும் சிறப்பான ஓர் இடத்தில் அமைந்திருந்ததாக அறியக்கூடியதாகவிருக்கின்றது. 

ஆனால் கிராமங்கள் நகரங்களாகியபோதும், பார்சிய வடிவிலான ஸ்பெசல் நாடகமுறையின் வருகையாலும், சினிமாவின் வருகையாலும் கிராமத்தினிலேயே இக்கூத்து வடிவம் வித்தூண்டி நின்றபோது நகரத்து மக்களால் இக்கூத்து வடிவம் நாட்டுக்கூத்து என அழைக்கப்பட்டது.