Showing posts with label -தமயந்தி-. Show all posts
Showing posts with label -தமயந்தி-. Show all posts

Saturday, June 13, 2020

பன்னிரண்டு இளநீல ரோஜாக்கள்

-தமயந்தி-

காலை பத்து மணி. படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. அடித்துப் போட்டாற்போல் அசதியாக இருந்தது. கடந்த பல வருடங்களாக இந்த தினத்தில் காலை ஏழுமணியிலிருந்து இரவு ஏழுமணிவரை தெருத்தெருவாக அலைவேன் கமெராவோடு. முந்நூறுக்கும் குறையாத படங்களைப் பிடித்துக் கமெராக் கூட்டுக்குள் அடைத்து வைத்திருப்பேன். பத்துப் பதினைந்து படங்களாவது மறுநாள் தினப்பத்திரிகையிலும் வெளியாகியிருக்கும். வழமையாகப் பிரசுரிக்கப்படும் எனது படங்கள் போலல்லாது, இந்தப் படங்கள் மட்டும் ஒருகணம் கன்னங்களை வருடிக் கொடுக்கும், மறுகணமே நகங்களால் நெஞ்சைக் கிழிக்கும். ஆனாலும் சற்றுநேரமாவது படங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்பேன்.
தேசத்தின் வான்பரப்பெங்கும் வியாபித்து ஒலிக்கும் எக்காளத்தொனிகளை அள்ளி முகங்களில் அப்பியபடி, வண்ணத்துப் பூச்சிகள்போல் சிறகடிக்கும் சிறுவர் பட்டாளங்கள் கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தியபடி பாடசாலை ஊர்வலங்கள், அமைப்புக்கள், அரசியற்கட்சிகள், படையணிகளின் அணிவகுப்புக்கள், இயல், இசை, நாடகப் பள்ளிகளின் வீதிநிகழ்வுகள்..... இப்படி குடிகள்பூராவும் தெருவில் இறங்கிக் கொண்டாடி மகிழ்வர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வர். ஆண்கள் பெண்கள் சிறுவர் முதியோர்களென தமது தேசிய உடைகளில் தெருக்களை நிறைத்து வலம்வருவதைப் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். நோர்வேயின் தேசியதினம் இன்று. எங்களுக்கென்றொரு நாட்டின் விடுதலைக்காகவும் யுத்தம் செய்தோம். மிக நீளமான யுத்தம். சுதந்திரமான எங்கள் தெருக்களிலும் இப்படி எமது சிறுவர்கள் கைகளில் தாங்கிய கொடிகளை அசைத்தபடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் சொல்லியபடியும் கொண்டாடித் திரிவர் என்ற கனவும் இருந்தது. தோற்றுப் போனவர்கள் ஆனோம். கைகள் வைத்துத் தைத்த சட்டைகளை, கைகளை இழந்த சிறுவர்களுக்கு அணிவித்து அழுபவரானோம்.
ஆனால், இன்று தூக்கம் கலையாதவோர் பட்சியைப்போல நள்ளிரவுச் சூரியதேசம் அடங்கிக் கிடக்கிறது.
-------------------
கொரோனா உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கி, நிலவறையில் சுயமுடக்கமாகி இன்றோடு எனக்கு எழுபத்தைந்தாவது நாள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பூக்கடைக்காரக் கிழவி மார்கிரத்தா என்ற எனது பூவாத்தாவின் தோட்டத்துக்குப் போகவேண்டும். பல வாரங்களாகப் பூக்கடை திறக்கவில்லை. இனியும் எப்போ திறக்கப்படும் என்பது கிழவிக்கும் தெளிவில்லை. நேற்றுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, நேராகவே தோட்டத்துக்கு இன்று பன்னிரண்டு மணிக்கு வரும்படி சொல்லியிருந்தாள் பூவாத்தா. இரண்டு கிலோமீற்றர் நடந்துதான் போக வேண்டும். ஒருவாறகப் படுக்கையை விட்டு எழுந்தாயிற்று.