சாஷா எபெலிங் உணர்வால் தமிழர்
- வி.தேவராஜ்-
பிரெஞ்சைத் தாய் மொழியாகக் கொண்ட இவர் கணிதமும் மொழியியலும் பயின்றவர். தென்னிந்தியாவில் பேராசிரியர் முத்து சண்முகம்பிள்ளையிடம் இவர் தமிழ் கற்றார். தமிழ் இலக்கணப் பாரம்பரியத்தில் தனிக்கவனம் செலுத்திய இவர் சேனாவரையம் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதி அதை பண்டிட் டி.வி. கோபால அய்யரின் துணையுடன் திருத்தம் செய்து கொண்டார். பிரெஞ்சு கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்திலும் பின்னர் தேசிய அறிவியல் ஆய்வு மையத்திலும் பணிக்கமர்த்தப்பட்ட இவர் மொழித் தத்துவ வரலாற்றுக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.
இவர் பல நூல் பிரதியை வெளியிட்டுள்ளார். அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஒரு கணினி வட்டு (கணினித் தேவாரம்)முதலியவற்றை வெளியிட்டுள்ளார். வரலாறு அறிவாய்வியல் மொழி (History Epistemology Language-ISSN 0750-8069) என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் கட மையாற்றுகின்றார். தற்போது ஆசிரியத்துறை பிரெஞ்சுப் பள்ளி, பாண்டிச்சேரி மையத்தில் பணியாற்றும் இவர் அதன் ஏட்டுச் சுவடிச் சேகரிப்பைக் கணினி மயப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். „ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்'' என்ற பாடல் வரிகளை உச்சரிப்புப் பிசகாமல் பாடி அசத்தினார் என்று சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிகை அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளது. அத்துடன் பழம்பெரும் இலக்கியங்களான குறுந்தொகை, கலித்தொகை ஆகியவற்றின் பாடல்களைப் பிழையற வாசித்துக் காட்டியதுடன் தமிழில் மிகவும் பிடித்த நூல் சிலப்பதிகாரம் என்றும் கூறியுள்ளார். தொல்காப்பியத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து பெறப்பட்டு தற்போது பிரான்சின் கீழ்த்திசை ஆய்வுக் கல்விக் கூடத்தில் பாதுகாக்கப் பட்டு வரும் சுமார் 1600 ஓலைச் சுவடிகளையே அவர் கணினிமயப்படுத்தி வருகின்றார்.
தேவாரத்தில் உள்ள சுமார் 800 பதிகங்களையும் தொகுத்து அவற்றைச் சொற்கள் வாரியாகத் தேடக்கூடிய வசதியையும் கணினி வட்டின் மூலம் தமிழ் உலகுக்குத் தந்துள்ளார்.
நன்றி: வீரகேசரி
No comments:
Post a Comment