Wednesday, November 30, 2011

பரமக் குடி படுகொலைகளுக்குப் பின்

 அ.மார்க்ஸ்

 பரமக்குடியில் சென்ற செப்டம்பர் 13 அன்று ஆறு தேவேந்திர குல வேளாளர்களின் உயிர்களைப் பலிவாங்கிய துப்பாக்கிச் சூடு, தொடர்ந்து அம்மக்கள் மீது  மேற்கொண்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகள் ஆகியன முழுக்க முழுக்கக் காவல் துறையினர் அரசு ஆதரவுடன் மேற்கொண்ட ஒரு வன்முறை என்பதை இது தொடர்பான பல்வேறு ஆய்வு அறிக்கைகளும் உறுதி செய்துள்ளன. அ.இ.அ.தி.மு.க தவிர அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இது குறித்து அரசைக் கண்டித்துள்ளன. எதிர்க்கட்சித் தகுதியைச் சட்டமன்றத்தில் பெற்றுள்ள தே.தி.மு.க முதலில் துப்பாக்கிச் சூட்டை ஆதரித்தபோதும் விரைவில் அதுவும் தன் நிலையை மாற்றிக் கொண்டது.
தமிழக அரசு முழுக்க முழுக்கக் காவல் துறை நடவடிக்கையை ஆதரித்தது. வழக்கமாக இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு முதல்வர் காவல்துறையை விட்டுக் கொடுக்காமல் பேசுவது என்கிற நிலையைத் தாண்டி இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் ஆங்காரமாகத் துப்பாக்கிச் சூட்டை அதரித்தார். தேவர் சாதி வெறியர்களால் பழனிக்குமார் என்கிற அப்பாவிச் சிறுவன் கொலை செய்யப்பட்டதையும் கூட அவர் சட்டமன்றத்தில் ஆதரித்துப் பேசினார். முத்துராமலிங்கத் தேவரை இழிவு செய்து எழுதினான், எனவே கொலை செய்யப்பட்டான் என ஒரு முதல்வர் சட்ட மன்றத்தில் பேசுகிறார்
என்றால் வேறு எப்படி நாம் அதைப் புரிந்து கொள்வது?
துக்கம் விசாரிக்கும் பெயரில் பழனிக்குமாரின் கிராமத்திற்கு ஜான் பாண்டியன் படைஎடுத்துச் சென்றார், நாங்கள் அதைத் தடுக்க வேண்டியிருந்தது எனச் சொல்லி அவரைக் கைது செய்ததை நியாயப் படுத்தினார். தேவரை இழிவு செய்து பழனிக்குமார் எழுதினான் என்பதும் பொய், ஜான் பாண்டியன் படை எடுத்துச் சென்றார் என்பதும் பொய். எங்களது அறிக்கை அதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது. அப்புறம் சாலை மறியல், போக்குவரத்திற்கு இடைஞ்சல், போலீஸ் அதிகாரிகளைக் கொலை செய்ய முயன்றது, பொலீஸ் வாகனங்களுக்குத் தீ வைத்தது என ஆறு படுகொலைகளும் நியாயப்படுத்தப்பட்டன. இப்படியான நியாயப் படுத்தல்கள் வழக்கமாகச் செய்யப்படுவதுதான். உண்மை என்னவென்பது அன்று அங்கிருந்தவர்களுக்கும், அத்தகையோரைச் சந்தித்து, விரிவாகப் பேசி எழுதப்பட்ட எங்களின் அறிக்கையைப் படித்தோருக்கும் தெரியும். கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கண்டமேனிக்கு அலைக்கழிக்கப்பட்ட பின்னரே அவர்களிடம்  உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தோருக்கு மதுரை அரசு மருத்துவ மனையில் கட்டணம் பெற்றுச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ம.தி.மு.க தலைவர் வைகோ தலையிட்டு காயம்பட்ட ஒருவரது சிகிச்சைக்குத் தானே பொறுப்பேற்றார். வழக்குரைஞர்கள் ரத்தினம் அவர்களும் ரஜினி அவர்களும் தனித்தனியே நீதிமன்றத்தை அணுகிக் காயம்பட்டவர்களுக்கு அப்பொலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
இதற்கிடையில் பரமக்குடி நகரில் எராளமாகக் காவற் படையினர் குவிக்கப்பட்டனர். 1000 பேர்கள் மீது வழக்கு என ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டு தேவேந்திரகுல மக்கள் மத்தியில் பீதியூட்டப் பட்டது. இரவு நேரங்களில் ரோந்துப் படைகள் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு மக்கள் மத்தியில் பேரளவில் அச்சமூட்டப்பட்டது. ஆண்கள் இரவு நேரங்களில் காடுகளுக்குள் ஓடிப் பதுங்க நேரிட்டது. பரமக்குடி காவல் நிலையம் அருகே செல்பவர்கள் எல்லோரும் வீடியோப் பதிவுக்குள்ளாயினர்..
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு வெறும் ஒரு இலட்சம் ரூபாய் மட்டுமே கொடுக்கப் பட்டதை கண்டிக்காதார் யாருமில்லை. அடுத்த சில நாட்களில் ரயில் விபத்தில் மாண்டவர்களுக்குக்கூட மூன்று இலட்ச ரூபாய் கொடுக்கப்பட்டது.  அநியாயமாக அரச வன்முறையால் உயிர் நீத்த இந்த அறுவர் குடும்பத்திற்கும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என அனைத்துக் கட்சியினரும், மனித உரிமை ஆர்வலர்களும் வற்புறுத்தினர்.
ஆனால் இன்றுவரை ஜெயா அரசு இது குறித்து இரக்கம் காட்டத் தயாராக இல்லை. கண்துடைப்பு நடவடிக்கையாக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் ஆணையத்தை எல்லோரும் எதிர்க்க நேரிட்டது. வரலாறு காணாத வகையில் மக்கள் அதைப் புறக்கணித்தனர். வேறு வழியின்றி சம்பத்  வீடு திரும்பினார்.
அ.தி.மு.க ஆட்சிக்கு இரண்டு அடையாளங்கள் உண்டு. முதலாவது அது ஒரு போலீஸ் ஆட்சியாக இருக்கும். காவல் துறைக்கு முழுச் சுதந்திரமும் அளிக்கப்படும். எத்தகைய அத்துமீறல்களுக்காகவும் காவல்துறையை அது விட்டுக் கொடுக்காது. இரண்டாவது, அது முக்குலத்தோருக்குச் சாதகமான ஆட்சியாக இருக்கும். அப்படியாகக் குற்றஞ் சாட்டப்படுவது பற்றிய கவலை அதற்கு இருக்காது. இந்த அம்சங்களில் ஜெயா எந்த வகையிலும் மாறவில்லை என்பதற்கு அவர் பரமக்குடி பிரச்சினையில் நடந்து கொள்வதே சாட்சி.
துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியுள்ளது, எக்காரணம் கொண்டும் இழப்பீட்டுத் தொகையைக் கூட்ட மறுப்பது தவிர, சென்ற வாரத்தில் நடை பெற்ற ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் தமது ஆட்சியில் காவல் துறைக்கு முழுச் சுதந்திரமும் உண்டு என்று மீண்டும் ஒருமுறை பிரகடனப் படுத்தியுள்ளதைப் பத்திரிக்கைகளில் பார்த்தோம். அடுத்த நாள் (நவ 19, 2011) போலீஸ் கான்டீனுக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த அவர், எப்படிப் படைவீரர்கள் அந்நிய நாட்டு ஆக்ரமிப்புகளிலிருந்து நாட்டைக் காக்கிறார்களோ அப்படிப் போலீஸ்காரர்கள் உள்நாட்டுச் சமூக விரோதிகளிடமிருந்து மக்களைக் காக்கிறார்கள் என்றார். தமது ஆட்சியில் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்குக் காவல் துறையே காரணம் எனப் பராட்டினார். இந்தப் போலீஸ் கான்டீன்களில்  காவல் துறையினர் பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
ஆக ஆறு பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்றால் அதெல்லாம் நாட்டை அமைதிப் பூங்காவாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று. சமூக அமைதியைக் குலைக்க முற்பட்டவர்களுக்கு எப்படி இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க முடியும்? சமூக அமைதியை நிலை நாடியவர்களுக்குத்தான் பரிசளிக்க முடியும்.
இங்கொன்றைச் சொல்லியாக வேண்டும். அ.தி.மு.க ஆட்சி முக்குலத்தோருக்கு ஆதரவானது, போலீஸ் அதிகாரம் கொடிகட்டிப் பறப்பது என்பதன் பொருள் தி.மு.க ஆட்சி இதற்கு நேரெதிரானது என்பதல்ல. அப்படியான பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் அது ரொம்பக் கவனமாக இருக்கும். சென்ற முறை தி.மு.க பதவி ஏறியவுடன் அடுத்தடுத்து நான்கு என்கவுன்டர் கொலைகள் நடத்தப்பட்டன. தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தளர்ந்து விடும் என்கிற பிம்பத்தை உடைக்க வேண்டுமென்பதற்காகவே இப்படி என்கவுன்டர்கள் செய்யப்பட்டன எனப் பத்திரிக்கைகள் எழுதின. ஆக தலித் மக்களுக்கு ஆதரவான ஆட்சி என்பது இன்றைய  சாதீயச் சமூகத்தில் சாத்தியமே இல்லை என்கிற உண்மையே மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.
இன்று எதிர்க்கட்சித் தகுதி பெற்று சட்டமன்றத்தில் உல்ள தே.தி.மு.க துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் துப்பாக்கிச்சூட்டை ஆதரித்துப் பேசினார். துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை எல்லாம் தேவையில்லை என்றார். ராமச்சந்திரன் கட்சியை உடைத்துக் கொண்டு அ.தி.மு.க பக்கம் சாயப் போகிறார் என்று ஒரு பேச்சு உலவுவது குறிப்பிடத்தக்கது. கடும் விமர்சனம் வந்த பின் சற்றே சுதாரித்துக் கொண்ட விஜயகாந்த் பரமக்குடிக்கு ஓடி வந்தபோது பாதிக்கப்பட்ட மக்கள் சமாதானம் அடைந்துவிடவில்லை.
இரண்டு பொதுவுடைமைக் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க எல்லோரும் கண்டன அறிக்கைகள் விட்டார்கள். வந்து போனார்கள். சட்ட மன்றத்தில் கண்டித்தார்கள். கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தினார்கள். பரமக்குடி அல்லது இராமநாதபுரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் மதுரை, சென்னை என தூர நகரங்களில் இதைச் செய்தனர்.  சம்பத் ஆணையம் அறிவிக்கப்பட்ட போது மார்க்சிஸ்ட் கட்சியினர் கைதட்டி ஆரவாரித்தனர். யாரும் தடையை மீறி பரமக்குடியில் தமது எதிர்ப்பைக் காட்டவோ, சம்பத் ஆணையம் ஒரு கண்துடைப்பு எனக் கூறி, தேவையற்ற துப்பாக்கிச் சூட்டை நடத்தி உயிர்ப் பலி கொண்ட காவல் துறையினரைப் பணிநீக்கம் செய்யக் கோரியும், சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் தீவிரமான போராட்டம் எதையும் எடுக்கவில்லை. ஏதோ கடமைக்குத் தம் கண்டனங்களைத் தெரிவித்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சு வார்த்தைகளில் இறங்கினர்.
தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குத்தான் இதில் மிகப் பெரிய நெருக்கடி. ராஜபக்சே மீதான நடவடிக்கைகள், கச்சத்தீவு, மூவரது மரண தண்டனை ரத்து முதலான அம்சங்களில் சாதகமான தீர்மானங்களை இயற்றி தமிழ்த் தேசியர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருந்தார் ஜெயா. சீமான் பொன்றவர்கள் வெளிப்படையாகவே பாராட்டு விழா நடத்தினார்கள். மற்றவர்கள் விழா நடத்தாவிட்டாலும் அம்மாவை நம்பினர். அவர் மூலம் சில காரியங்களைச் செய்ய முடியும் என்ற நிலையில் அவரைப் பகைத்துக் கொள்ள வேண்டாமென்பது அவர்களது பொதுக் கருத்தாக இருந்தது. எனவே பரமக்குடி படுகொலையை அதற்குரிய வன்மையுடன் கண்டிப்பதில் அவர்களுக்கு நியாயமான தயக்கமிருந்தது. இளம் பத்திரிக்கையாளர்கள் அமைப்பு ஒன்று  கூடங்குளம், மூவர் மரண தண்டனை, பரமக்குடி ஆகிய மூன்றையும் இணைத்து ஒரு கருத்தரங்கம் நடத்த முயன்றபோது அதில் மூவர் மரண தண்டனை ரத்து பற்றிப் பேச இருந்த தமிழ்த் தேசியர் ஒருவர், பரமக்குடி பற்றிப் பேசுபவர் நிச்சயம் ஜெயாவை விமர்சிப்பார், எனவே நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை என வெளிப்படையாகச் சொல்லி மறுத்து, அந்தக் கருத்தரங்கே ரத்தாவதற்குக் காரணமாக இருந்தது சமீபத்திய நிகழ்வு.
தலித் மக்களிடமிருந்து தாம் அந்நியப்பட்டுவிடக் கூடாது எனக் கருதி தமிழ்த் தேசியர்கள் பிற அரசியலாரைப்போல பரமக்குடிக்காகக் கண்டன நிகழ்வுகளை நடத்தியபோது அதை தலித் போராளிகள் நம்பவில்லை. அத்தகைய கூட்டங்களில் அவர்கள் கண்டன அறிக்கைகளை வினியோகித்தனர்.
பாதிக்கப்பட்ட தேவேந்திர குல வேளாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியான டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் சட்ட மன்றத்தில் இப்பிரச்சினையை முன்னெடுத்தது. கூட்டணிக் கட்சியினராக இருந்தபோதிலும் டாக்டர் கிருஷ்ணசாமி இருமுறை வெளிநடப்புச் செய்தார். எனினும் புதிய தமிழகமும் கூடப் பெரிய அளவில் இராமநாதபுரம் மாவட்டத்தில்  மக்கள் இயக்கம் எதையும் நடத்திவிட முடியவில்லை. வரும் டிசம்பர் 6ம் தேதி   உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தப் போவதாக டாக்டர் அறிவித்துள்ள செய்தி இன்று வந்துள்ளது (தினமணி, நவ 23). அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்தல், மூவர் மரண தண்டனையை ஒழித்தல், பள்ளர் முதலான சாதிகளை தேவேந்திர குல வேளாளர் பிரிவில் சேர்த்தல் இன்ன பிற கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பரமக்குடி முக்கியத்துவம் பெறவில்லை, அல்லது இன்ன பிறவற்றுள் ஒன்றாகிவிட்டது.
ஜான்பாண்டியனே இந்தப் பிரச்சினைக்குக் காரணமாகச் சுட்டப்பட்டு அரசால் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவராலும் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியவில்லை. பரமக்குடியிலேயே இருந்து, துப்பாக்கிச் சூடு அளவிற்குப் பிரச்சினையைக் கொண்டு செல்லாமல் தடுக்க முயன்று, அது இயலாமற் போனபின்பு தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டவர்களோடு நின்று, உண்மைகளை வெளிக் கொணர்வதில் முக்கிய பங்காற்றி வருகிற தியாகி இம்மானுவேல் பேரவையின் நிறுவனர் சந்திர போஸ் அவர்கள், இதே காரணங்களுக்காக இன்று அரசு மற்றும் ஆதிக்க சாதியினரின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். அவரைக் கைது செய்ய வேண்டுமென்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவரை மிகவும் இழிவான சொற்களால் தாக்கி பரமக்குடி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஊடகங்களைப் பொருத்த மட்டில் துப்பாக்கிச் சூடு குறித்த தகவல்களை உடனடியாக வெளிக் கொணர்ந்தன. அரசுத் தரப்பு மறைக்க முயன்ற செய்திகளையும் கூட ஜூனியர் விகடன், சத்தியம் தொலைக்காட்சி முதலியன அம்பலப்படுத்தின. கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள ஊடகப் பெருக்கத்தின் ஒரு வரவேற்கத்தக்க அம்சமென்னவெனில் இது போன்ற பிரச்சினைகளில் உண்மைகளைப் பெரிய அளவில் யாராலும் மறைத்துவிட முடிவதில்லை.
இன்னொரு பக்கம் ஏகப்பட்ட உன்மை அறியும் குழுக்கள், எங்களையும் சேர்த்துத்தான், களத்தில் இறங்கின. ஒரு தொண்டு நிறுவனம் இரு உண்மை அறியும் குழுக்களுக்கு ‘ஸ்பான்சர்’ செய்தது. இப்படியான ஆர்வம் வரவேற்கத் தக்க அம்சந்தான் என்றபோதிலும், இது மாதிரியான பிரச்சினைகளில் எளிதில் தமது மனித உரிமை ஆர்வத்தையும், பாதிக்கப் பட்டவர்களுக்காகத் தாம் நிற்பதையும் காட்டிக் கொள்ளும் வழிமுறையாக இது ஆகிவிடக் கூடாது. ஏதோ ஒரு சுற்றுலாப் பயணம் போல இது ஆகிவிட்டதோ என்கிற குற்ற உணர்ச்சி எனக்குமே ஏற்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக அளவில் அ.தி.மு.க விற்குச் சாதகமாக அமைந்தன. கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி பெருவாரியான இடங்களை அது கைப்பற்றியது. பொதுத் தேர்தலை ஒட்டிய உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது எதிர்பார்க்கக் கூடியதுதான் என்ற போதிலும், இந்த வெற்றி கொஞ்சம் அதிகப்படியானதே. சமச்சீர்க் கல்வி குளறுபடிகளோ, பரமக்குடிப் படுகொலைகளோ எதுவும் ஜெயா அரசுக்கான ஆதரவைப் பெரிய அளவில் பாதித்துவிடவில்லை. பரமக்குடி நகரிலேயே அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது.
ஏன் பரமக்குடிப் படுகொலைகளுக்கான எதிர்ப்பு அதற்குரிய வீச்சைத் தமிழகத்தில் பெற இயலவில்லை? ஈழப் பிரச்சினை அல்லது மூவர் மரண தண்டனை எதிர்ப்பு அளவிற்குக் கூட பரமக்குடிப் பிரச்சினையைக் கொண்டு செல்ல இயலவில்லை? நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றத் தேர்தல்களில் காங்கிரசைத் தனிமைப்படுத்த முயன்றது போல இப்போது ஏன் நம்மால் செய்ய முடியவில்லை? ப.சிதம்பரம் தொகுதிக்கு ஒரு குழு சென்று எதிர்ப் பிரச்சாரம் செய்ததைப்போல ஏன் உள்ளாட்சித் தேர்தலின்போது பரமகுடிக்கு நம்மால் சென்று பிரச்சாரம் செய்ய இயலவில்லை? குறைந்த பட்சம் கூடங்குளப் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள நாடு தழுவிய ஆதரவு கூட இந்தப் பிரச்சினைக்குக் கிடைக்கவில்லை? தலித் எழுச்சி பர்றிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் நம்மால் ஏன் ஒன்றும் செய்ய இயலாமற் போயிற்று?
இது ஒரு சாதீயச் சமூகம். இதில் இந்த அளவுதான் முடியும் எனச் சொல்லி நாம் திருப்தியடைந்து விடக்கூடாது. ஏன் நம் தரப்பில் இதை எல்லாம் செய்துவிட முடியவில்லை என்கிற கேள்விக்கு நாம் பதில் கண்டாக வேண்டும்.  கூடங்குளத்திற்கும், மூவர் மரண தண்டனைக்கும் பெரிய அளவில் இயக்கம் நடத்தமுடியும்போது ஏன் பரமக்குடிக்கு ஒரு அடையாள ஆர்பாட்டம் அல்லது கருத்தரங்கு நடத்தி விட்டு ஓய்ந்து போகிறோம்? அன்னா ஹஸாரேக்குப் பின் திரளும் ‘சிவில் சமூகம்’ ஏன் தலித் பிரச்சினைகளில் அணி திரள மறுக்கிறது?
ஜெயா மீதுள்ள நம்பிக்கைதான் தமிழ் உணர்வாளர்களைத் தடுக்கிறது என்றால், அத்தகைய நம்பிக்கைக்குத் தகுதியானவரா அவர்? ஈழ விடுதலை, மரண தண்டனையை அறவே ஒழித்தல், அணு ஆற்றலை மறுத்தல் ஆகியவற்றில் நம்பிக்கை உடையவரா ஜெயா? என்றைக்காவது கொள்கை அளவில் இவற்றை ஆதரித்து அவர் பேசியுள்ளாரா? முதல் நாள் வரை எதிர்க் கருத்துக்களச் சொல்லிக் கொண்டிருந்தவர் அடுத்த நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, பிரச்சினையை மத்திய அரசின்பாற் தள்ளிவிட்டு மக்கள் போராட்டங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதன் பொருளென்ன? மரண தண்டனைப் பிரச்சினையில் கேரள அரசையும் கருணாநிதி அரசையும் போல அமைச்சரவையைக் கூட்டித் தீர்மானம் இயற்றாமலும், அணு உலைப் பிரச்சினையில் மம்தா பானர்ஜியைப் போல எங்கள் மாநிலத்தில் அணு உலை கூடவே கூடாது எனச் சொல்லத் தயாராக இல்லாததையும் ஜெயாவை எதிர்க்கக் கூடாது என்பவர்கள் கவனிக்கவில்லையா?
பிரச்சினை அதுவல்ல. பெனெடிக்ட் ஆன்டர்சன் சொல்வது போல தேசம், மொழி, இனம், சிவில் சமூகம், வளர்ச்சி, பாதுகாப்பு முதலான    அனைத்துயிர் தழுவிய பிரபஞ்ச விகாசச் (universal)   சொல்லாடல்களின் கீழ் திரட்டப்படும் மக்கட் சமூகத்தினர் எதார்த்ததில் நிலவும் உட் சமூகப் பிரிவுகளின் பிரச்சினையைக் கணக்கில் கொள்ள மாட்டார்கள். சொல்லப்போனால் அறிந்தே இருக்க மாட்டார்கள். அனைத்து மக்கள் தழுவிய சொல்லாடல்களின் கீழ் திரட்டப்படும் மக்களை ‘unbound serialities’ அதாவது உள்கட்டுகளுக்கு அப்பாற்பட்ட சமூக நிலையினர் (எ.டு: ‘தமிழர்கள்’, ‘இந்தியர்’ ) எனவும், எதார்த்தத்தில் நிலவுகிற உட் சமூகப் பிரிவுகளை ‘bound serialities’ எனவும் குறிப்பார் ஆன்டர்சன்.  ஆன்டர்சன் தேசியக் கற்பிதம் பற்றிச் சொல்ல வருவதை ஏதோ அவர் தேசிய உணர்வைக் குறைத்துச் சொல்வதாகக் கருதக் கூடாது. ஒரு இனம் அல்லது மொழி என்கிற அடிப்படையின் கீழ் வரையறுக்கப்படும் அனைத்துயிர்களும் வேறு எந்தத் தனித் தனிப் பிரச்சினைகளும் இல்லாத, ஒரே பிரச்சினையை எதிர் கொண்டுள்ள ஒருபடித்தான ஒரே சமூகக் குழுமமாகத் தம்மைக் கற்பிதம் (imagine) பண்ணிக் கொள்வதுதான் அது. இத்தகைய கற்பிதத்தை ஆன்டர்சன் உயர்வாகவே மதிப்பிடுவார்.
இப்படியான அனைத்துயிர் தழுவிய கற்பிதங்களின் அடிப்படையில் திரட்டப்படும் மக்கள் திரளை நீங்கள் ஒரு உட்பிரிவின் பிரச்சினைகளுக்காக நிறுத்த இயலாது. ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, ஊழலற்ற ஆட்சி, சிவில் சமூகம்  என்கிற அடிப்படையில் தன் கீழ் திரட்டப்படும் மக்களை கேர்லாஞ்சி படுகொலைகளுக்கு எதிராகவோ, தனியார் துறையில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு என்கிற கோரிக்கையை முன்வைத்தோ அன்னா ஹஸாரேயால் நிறுத்தி விட முடியாது. அனைத்திந்தியம், அகண்ட பாரதம், ஒருமைப்பாடு, வளர்ச்சி, வல்லரசு இந்தியா முதலான முழக்கங்களை முன் வைக்கும் காங்கிரஸ்காரர்களும், இந்துத்துவவாதிகளும் கூட அதைச் செய்துவிட முடியாது.
தேசியக் கதையாடல்களும் முதலாளியக் கதையாடல்களும் எல்லா மக்களும் சமூகநிலையைப் பொருத்தமட்டில் கற்பனையான ஒரே காலகட்டத்தில் (homogeneous empty time) வாழ்வதாகக் கற்பிதம் செய்கின்றன. ஆனால் எதார்த்த வெளியோ பல்வேறு வாழ்நிலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேறுபட்ட உண்மையான பல கால கட்டங்களைக் (heterogeneous real times) கொண்டதாக உள்ளது. நவீனத்துவ வெளிப்பாடுகளில் ஒன்றான இன்றைய ஆளுகைமுறை (governance) இத்தகைய வெவ்வேறு காலகட்ட வாழ்நிலை குறித்த பிரக்ஞையை உட் பிரிவினர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. தேவேந்திர குல வெளாளர்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள உரிமை வேட்கையை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக ஏற்று நடத்த  வேண்டும் என்கிற கோரிக்கை இத்தகையதே. ம.நடராசனின் தோள்களில் கைபோட்டுக் கொண்டு ஈழ ஆதரவு இயக்கம் நடத்துவோரால் எப்படி  மனமுவந்து இக் கோரிக்கைக்காக மக்களைத் திரட்டிவிட முடியும்? அவர்கள் மனமுவந்தாலுங்கூட இந்தக் கோரிகைக்காக அவர்கள் திரட்டி வைத்துள்ள மக்கள் வந்து நின்று விடுவார்களா? கூடங்குளம் பிரச்சினையைக்கூட “தமிழர்களைக் கொல்வதற்கான சதி” என்றவாரு கதையாடி கையிலெடுத்துவிட முடிகிறது. ஆனால் பரமக்குடிப் பிரச்சினையைக் கையால் தொட இயலவில்லை என்பது கவனத்திற்குரியது.
இன்றைய நமது மிகப் பெரிய சிக்கல் எப்படி இந்த இரு நிலைகளையும் புரிந்து ஏற்றுக் கொண்டு இணைத்துச் செயல்படுவது என்பதுதான். எல்லோரையும் சம குடிமக்களாக ஏற்றுக்கொள்ளும் ‘சுயராஜ்யமும்’ வேண்டும், அதே நேரத்தில் அந்த சுயராஜ்யத்திற்குள் எங்களுக்குத் தனித்துவமான உரிமைகளும் வேண்டும் என அம்பேத்கர் முன்வைத்த அரசியல் இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு. ஆனால் தேசிய அரசியல் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அம்பேத்கரின் இந்த அணுகல்முறையைப் புரிந்துகொள்ளாததன் விளைவே இன்று டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பரமக்குடிப் பிரச்சினையைப் பின்னுக்குத் தள்ளி, அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான கோரிக்கையை முன்னுக்குக் கொண்டு வருகிறார்.
எப்படி இந்தப் பிரபஞ்ச விகாச அணுகல் முறையையும், உட்பிரிவினரின் பிரச்சினைகளையும் ஒன்றிணைப்பது என்பதற்கு எளிதான பதிலேதும் என்னிடமில்லை. ஆனால் இதற்கொரு முன் நிபந்தனையை என்னால் சுட்டிக்காட முடியும். அது, அனைத்து மக்கள் தழுவிய சொல்லாடல்களை உதிர்ப்போர் தாங்கள் ஒரு கற்பனையான ஒருபடித்தான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வதுதான். ஆனால் எதார்த்தம் அப்படியிருக்கவில்லை, எதார்த்த உலகம் பல்வேறு காலகட்டங்களை உள்ளடக்கியதாகவே உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதுதான். இதை ஏற்றுக்கொள்ள இயலாததன் மோசமான விளைவுகளை நாம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களால் பரமக்குடி படு கொலைகளுக்கு எதிராக அடையாளமான போராட்டங்களை மட்டுமே நடத்த முடியும்.  அதற்குரிய வீச்சுடன் மக்களைத் திரட்டிவிட முடியாது. இப்படி உட்பிரிவுகளின் பிரச்சினைகளைப் புறக்கணித்துவிட்டு தேசியச் சொல்லாடல்களையோ, ஜனநயக, முற்போக்குச் சொலாடல்களையோ வெற்றிகரமாக முன்நகர்த்திச் சென்றுவிடவும் முடியாது.

No comments: