Saturday, October 08, 2011

Le Havre (துறைமுகம் ) ஒன்றுபட்டால் வெல்லமுடியும்!

தேவா - ஜெர்மனி
தற்போது ஜெர்மன் சினிமாத்திரைகளில், Le Havre (துறைமுகம்); படம் ஓடிக்கொண்டிருக்கிறது. பின்லாந்து, பிரான்ச்,ஜெர்மன் நாடுகளின் கூட்டுத்தயாரிப்பு இது. இச்சினிமாப்படம் ஒரு சிறந்த- சினிமாக் கலைஞரும் பின்லாந்துக்காரருமான Aki Kaurismäki யின் இயக்கத்தில் உருவாயிருக்கிறது. 1990இருந்தே இவரின் பல குறும்படங்களும், பெரும் திரைப்படங்களும் சர்வதேசதிசைப்பட விழாக்களில் பரிசுபெற்றிருக்கின்றன. பரிசுக்கு தேர்வானவையும்கூட. Cannes ல் நடைபெற்ற 64வது சர்வதேசவ திரைப்படவிழாவிலே இப்படத்துக்கு FIBPRESCI பரிசு கிடைத்தது. மேலும் இவரது மற்றொரு திரைப்படமான The man without a past, ஐரோப்பாவிலும், ஆர்ஐன்டீனாவிலும் நடைபெற்ற திரைப்படவிழாக்களிலே சிறந்த இயக்குனர், கதை, சிறந்த கமராவுக்காக 2002ல் பல பரிசுகள் பெற்றது. சில படைப்புக்கள் Oscar க்கும் தெரிவானவைகள்.
பொதுவாகவே இவரின் படைப்புக்களிலே கலைத்தன்மையோடு மனிதநேயம், நேர்மை, சோகங்கள் கலந்திருக்கும். பாத்திரங்கள் போராட்ட குணமுடையவர்களாய்; இருப்பார்கள். அவர்களது வெளிப்பாடு திரையில் கவித்துவமாய் வெளிப்பட்டிருக்கும். இதயத்தை நெருடிச்செல்லும் தன்மை கொண்டவை.மென்மையான மாந்தர்கள் அங்கு படைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கொள்கைபிடிப்பில் தீவிரமாய் இருப்பார்கள். அகி கருசிமாகி படம் பார்ப்போரை மிகவும் நெருங்கிவிடுவார்.
இந்தக் கலைஞனின் கைவண்ணத்தில் உருவான ,, துறைமுகம்,, கதை1950லே பிரான்சின் துறைமுககிராமம்; ஒன்றில்(Calais க்குஅண்மியது) நிகழ்கிறது. சமுககட்டுபாட்டை- அரசுஅதிகாரத்தை மீறுகிற ஒரு எழுத்தாளன்-மார்சல் (நடிகர்:Andre Wilms) வறுமையான இந்த துறைமுககிராமத்திலே குடியேறி சப்பாத்துதுடைக்கும் தொழிலாளியாக-இந்த வருமானத்தில் தன் மனைவியோடு வாழ்க்கை நடாத்துகின்றான். மனைவி (நடிகை:Kati Outinen )மிக சிறந்த இல்லாள் ஆகவும் நல்லவளாயும், தன் கடுமையான நோயை கணவனுக்கு காட்டிக்கொள்ளாமலும், அவனுக்கு சமைத்து, பணம் சேமித்து,அவனை; ஒரு குழந்தையாக நேசித்து ( இந்த பாத்திரம் தமிழ்பண்பாடு கோசம் போடுவோருக்கு ரொம்ப பிடிக்குமே!) வாழ்பவள். நோய் முற்றி இவள் வைத்தியசாலைக்கு கொண்டுபோகப்படுகின்றாள். இதேசமயம் இட்ரிசா எனப்படும் ஆபிரிக்க அகதிச்சிறுவன், மார்சலிடம் தஞ்சம் பெறுகின்றான். இவன் தாய் இங்கிலாந்தில் அகதியாய் வாழ்கிறாள். தாயிடம் போய்ச்சேரவேண்டி முயற்சித்த இவனின் கப்பல்-கொண்டெயினர் பயணம் (பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கு கடல்வழியாய் போவது) பிரான்சின் எல்லைத்துறைமுகத்தில் உடைகிறது. பிரான்சின் எல்லைகாவலரிடமிருந்து தப்பிவருபவனுக்கு மார்சல் உணவு தந்து, தன்வீட்டில் மறைத்துவைக்கின்றான். அகதிச்சிறுவனை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒரு உயர்அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது. மார்சலின் வறுமையை தெரிந்த அவனின் எல்லா நண்பர்களுமே அவனுக்கு, அகதிச்சிறுவன் விடயத்திலே எல்லாவிதமான உதவிகளையும் செய்கின்றனர். இட்ரிசாவை இங்கிலாந்திலே வாழும் அவன் தாயிடம் சட்டரீதியற்ற முறையில் அனுப்புவதற்கு பணம் தேவைப்படுகிறது. இசைக்கச்சேரிமூலம் நிதிதிரட்ட மார்சலின் அனைத்து நட்புகளும் கைகொடுக்கின்றன. ஒருதடவை பணம் சேகரித்தபின்னரும், மார்சலின் வீட்டில் உயர்அதிகாரியின்(நடிகர்:Jean-Pierre Darroussin) சோதனை நடைபெறுகின்றது. அந்த உயர் அதிகாரிக்கு வீட்டில் சிறுவன் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றான் என்பதை தெரிந்தும் தெரியாதமாதிரி நடந்துகொள்கின்றான். இறுதியிலே, மார்சலினதும், நண்பர்களினதும் பெரும் முயற்சியால் இட்ரிசா ஒரு மீன்பிடிபடகில் இரகசியமாக இங்கிலாந்துக்கு அனுப்பபடுகின்றான். இந்தசமயத்திலும் சிறுவன் காவல்அதிகாரிகளிடம் பிடிபடக்கூடிய சாத்தியநிலைமைகள் இருந்தும், அவன் உயர்அதிகாரியின் கருணையால் பிடிபடாமல்தப்பி ( இப்படித்தான் படத்தின் இறுதிக்கட்டம் அமைந்திருக்கின்றது) இங்கிலாந்துக்கான பயணத்தோடு படம் முடிகின்றது.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக இந்த அகதிக்கதையை இச்சினிமா கூறினாலும், இன்றும் அகதி சோகம் எவ்வளவு துயரங்களோடும்,மரணங்களோடும் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதே உண்மை. மனிதர்கள் தம் நிலங்களில் வாழ்வதற்கான உரிமைகள் எல்லா புறங்களிலுமிருந்து மறுக்கப்படும்போது, அங்கிருந்து துரத்தப்படும்போது, உயிரையும் பணயம் வைத்து இடம்பெயர்கின்றனர் அல்ல. பெயர வைக்கப்படுகின்றனர். இங்கே சிறுவர்கள் என்ன.சிறுகுழந்தைகள் என்ன. அகதிகளாக்கப்படும்போது உயிர்கள் வெறுக்கப்படுகின்றன. நாடெல்லைகளில், அகதிகள் ஆக்கிரமிப்பாளர்களாய் அரசுகளால்; தீர்மானிக்கப்படுகின்றனர். கைது,சிறைவாசம் குற்றம் செய்தால்தான் அரசுநீதிமன்றங்களால் கொடுக்கப்படுமா என்ன.எல்லை கடந்தாலும்,சிறியவர்,பெரியவர் பேதமின்றி சிறைக்குள் அடைக்கப்படுவர்.அகதியாகப்பட்டவன் இன,மத,அரசியல்ரீதியான் குற்றங்களை தனக்குமேல் பலாத்காரமாய் சுமத்தப்படவைத்து, ஒரு ஆயுள்தண்டனை குற்றவாளியாய் ஆக்கப்படுகின்றான்.
Le Havre திரைப்படத்திலே சிறுவன் இட்ரிகாவின் அகதிக்கதை மையம்பெறுகிறது.அவனுக்காக- அவனை தப்பவைப்பதற்காக மார்சலின் அனைத்துநண்பர்களுமே, அரசு சட்டங்களை மீறி கைக்கொள்ளும் தந்திரம் ஒரு கூட்டுணர்வின் உன்னதவெளிப்பாடு. மனிதங்களின் வாய்மை. ஒரு மௌனபுரட்சியாக வெற்றியடைகிறது.
நகர்மனிதர்களின் காற்றுபடாத வெளி அந்த கிராமம். கிராமத்து மனிதர்களின் அன்னியோந்நியம். ஓரு சிறுபிள்ளைக்கு உதவுவதில் முனைந்து செயலாற்றுகின்றன.;அன்பான மனிதர்கள் திரைக்கதையில் நடமாடுகின்றனர். ஆயினும் இவர்கள் ஒரு அகதி சிறுவனின் நன்மை கருதி சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதிகாரத்தை தூக்கியெறிந்து மனிதத்தை உறுதியாய் நம்புகிறார்கள். தங்களுக்கென்று ஒரு தர்மத்தை;  கடைப்பிடிக்கின்றனர்.
பசி என்று நம்மை யாராவது இரந்தால் ஒன்று காசை தந்துவிட்டு நகர்ந்துவிடுவோம் அல்லது உணவை கொடுத்து நம்மால் முடிந்தது இவ்வளவுதான் என்று திருப்திபட்டு:க்கொள்வோம். அத்தோடு தற்போதய பிரச்சினை இரு பக்கத்திலும் தற்போதைக்கான முடிவாக இருக்கும். பசி மறுபடியும் வரும். நாமில்லாவிட்டால... வேறு யாராவது தற்போதைக்கான பிரச்சினையை தீர்க்கலாம். அல்லது அது தீர்ககமுடியாத பிரச்சினையாகி; உயிர்கூட போகலாம். ஓருவருடைய வாழ்வாதார பிரச்சினைகளை இன்னொருவர்-கள்; முகம்கொடுத்து முடிந்தளவு கைகொடுக்கும்போது;(அது சிந்தனையோடு மட்டும் நில்லாது)மனிதங்கள் வாழும். வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை கூறுகிறது இச்சினிமா.
படத்தின் சில கட்டங்களிலே காட்சி மெதுவாய் நகர்கின்றது. இது விவரணப்படம் பார்க்கிறோமா என நினைக்கவைக்கிறது. கதை நடந்துகொண்டிருக்கும் காலத்தை அனுமானிக்கும்போது, நம் சிந்தனை வேகத்தை மட்டுப்படுத்திகொள்ளலாம்.
அகி கருசிமாகியின் இக்கதை ஒரு நயமான, நம்பமுடியாத,கற்பனைக்கதை எனவும் இத்திரைப்படம் பற்றி சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. இந்த இயக்குனர் ஒரு நேர்த்தியான கதைசொல்லி. அதனாலேயே இவருடைய படைப்பு கனமானதொரு கருவை கொண்டு ஆழமான சிந்தனையை தூண்டிவிடுகின்றது. என்னதான் அரசஇயந்திரங்கள் தம் அதிகாரத்தை முடுக்கிவிட்டாலும், மக்கள் ஒன்றுபட்டால்-அது எந்தவழிமுறையாய் இருந்தாலும் வெல்லமுடியும் என்பதை இவரின் படைப்பு நம்முன்னே உறுதியாய் கூறுகிறது.

No comments: