Sunday, October 30, 2011

ஏழாம் அறிவு -தமிழர் பெருமிதத்தின் பின்னுள்ள அபாயங்கள்

-சுகுணா திவாகர் -

 கி.பி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த மதத்தைச் சார்ந்த பல்லவ இளவரசன் போதிதர்மன் சீனா சென்று அரிய வகை மருத்துவத்தையும் நோக்குவர்மம் எனப்படும் மெஸ்மரிசத்தையும் தற்காப்புக்கலைகளையும் கற்றுத்தருகிறார். அதே விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு சீனா, இந்தியாவின் மீது உயிரியல் போர் தொடுக்க லாங்லீ என்பவரை அனுப்புகிறது. மரபணு அறிவியல் மாணவி சுபா, போதிதர்மரின் வாரிசான சர்க்கஸ் கலைஞர் அரவிந்தனின் மரபணு நினைவாற்றலை உசுப்பிவிட்டு சீன அபாயத்தை முறியடிக்கிறார். கதை குறித்தும் காட்சியமைப்புகள், தொழில்நுட்பங்கள் குறித்தும் விரிவான விமர்சனங்கள் வரக்கூடும். அதை நான் எழுதப்போவதில்லை.

படம் நெடுகிலும் தமிழரின் வீரம்,அறிவியல், கலைகள் குறித்த பெருமிதம் முன்வைத்து வியந்தோதப்படுகிறது.சீன தேசத்தில் கொண்டாடப்படும் மகத்தான ஞானியான போதிதர்மனை (இது போதிதர்மனா, போதிதம்மனா என்கிற அய்யம் எனக்குண்டு) தமிழகம் எப்படி மறந்துபோனது என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.ஞாயமான கேள்விதான். தமிழ்ப்பரப்பில் இலக்கியம்,
இலக்கணம் உள்ளிட்ட துறைகளில் பாரியப் பங்களிப்பு செய்து இன்றும் காதுகுத்துதல் முதலான சடங்குகளின்வழி மரபின் நினைவெச்சமாய் எஞ்சிப்போனவை சமண,பௌத்தக்கூறுகள். தமிழ் இலக்கியத்தின் அழகியல்,அறவியல் கூறுகளை வளப்படுத்தியதில் பௌத்த, சமண மரபுகளின் பங்கு அளப்பற்கரியது. பௌத்தமும் சமணமும் தமிழர்களின் வாழ்வியல் கூறுகளோடு எப்படி கலந்திருந்தன என்பதை அயோத்திதாசப் பண்டிதர், மயிலை சீனிவேங்கடசாமி நாட்டார் தொடங்கிச் சமகாலத்தில் அவைதீக மரபு பற்றிப் பேசும் பலரும் விளக்கியிருக்கின்றனர். போதிதர்மனைத் தமிழகம் எப்படி மறந்துபோனது என்கிற கேள்விக்கான பதில் பௌத்தம் என்னும் வாழ்வியல் நெறி தமிழகத்தில் எப்படி இல்லாது அழித்தொழிக்கப்பட்டது என்கிற கேள்வியில்தான் கிடைக்கும். ஆனால், இந்தப் படமோ பௌத்த மாந்தர் ஒருவரை அடிப்படையாகக்கொண்டு கட்டியெழுப்பும் தமிழ்ப்பெருமித உணர்வு எப்படி மத்தியதர வர்க்க உணர்வுகளோடும் பார்ப்பனியமும் இந்துத்துவமும் கட்டமைத்துள்ள பொதுப்புத்தியோடும் முடிந்துள்ளன என்பதற்கு இரண்டு காட்சிகள் உதாரணம்.

அதற்குமுன்பு தமிழரின் பெருமிதம் பேசும் இப்படத்தில் ஈழ ஆதரவுக் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. இறுதியில் படம் ‘அழிக்கப்பட்ட தமிழர்களுக்கும் அழிக்க முடியாத தமிழுக்கும்’ சமர்ப்பிக்கப்படுகிறது. இந்தத் தமிழ்ப்பெருமிதம் எப்படி நடைமுறை தர்க்கத்தை மீறிய அபத்தமாக மிஞ்சி நிற்கிறது என்பதற்கு உதாரணம், இறந்து பிறந்த குழந்தையை, போர்க்காயங்கள் ஏதும் இல்லையே என்று வாளால் காயமுண்டாக்கி புதைக்கும் வழக்கம் பற்றி, படிப்பறிவற்ற சர்க்கஸ் கலைஞரான அரவிந்தன் (சூர்யா) பேசும் காட்சி. கணைக்கால் இரும்பொறையின் பாடல் ஒரு சர்க்கஸ் கலைஞரின் கூற்றாக வருகிறது. இருக்கட்டும். ‘’வெறுமனே வீரம் மட்டும் போதாது. வெறும் வீரம் மட்டும் இருந்ததாலத்தான் பக்கத்துநாட்டில் தமிழர்களை அழித்துவிட்டார்கள்” என்கிறார் நாயகி. உடனே கோபத்துடன் அரவிந்தன், ‘’வீரத்துக்கும் கோபத்துக்கும் வித்தியாசம் இருக்கு. 9 நாடுகள் சேர்ந்து தமிழனை அழிச்சதுக்குப் பெயர் துரோகம்” என்கிறார். ஈழமக்களை அழிப்பதில் முன்நின்றது இந்தியா. ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு இந்தியாவின் மேலாதிக்க வெறி மிக முக்கியக் காரணம். அதை எதிர்க்காமல் ஈழ மக்கள் விடுதலை குறித்துப் பேச முடியாது.ஆனால், அதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு, தமிழுணர்வு பேசிக்கொண்டே ‘சீனப்பூச்சாண்டி’ காட்டுகிறது படம். இன்றும் ஈழ ஆதரவாளர்களில் ஒருசாராரின் நிலைப்பாடு இதுதான். ‘’இலங்கை அரசை இந்தியா கட்டுப்படுத்தாவிட்டால், அது சீனாவின் பிடிக்குள் வந்துவிடும்” என்பது இவர்களின் கருத்து. ஆனால் இந்தியாவோ ‘’நாம் இலங்கை அரசுக்கு உதவாவிட்டால் சீனா உதவி நண்பனாகி விடும்” என்று இன்றுவரை இலங்கை அரசின் போர்க்குற்றங்களை மூடிமறைக்க உதவுகிறது. உலகமயச் சூழல் குறித்த சமகாலப் புரிதல் எதுவுமற்ற தமிழர் பழம்பெருமை மற்றும் சீன எதிர்ப்பு என்ற பெயரில் இந்திய மேலாதிக்க எதிர்ப்பைக் கவனமாகத் தவிர்க்கும் மொண்ணைத்தனமான அப்பாவி அரசியலின் உச்சகட்டம்தான் டாங்லீயும் ஆபரேஷன் ரெட்டும்.

உயிரியல் போர் குறித்து பேசும் இந்தப் படத்தையும் ஜனநாதனின் ஈ படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ‘ஈ’, மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் அய்ரோப்பிய நாடுகளின் பெருமருந்து நிறுவனங்களின் சோதனைப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுவதையும் அதன்பின்னுள்ள அரசியலைச் சுட்டிக்காட்டுவதையும், ஆனால் இந்தப் படமோ அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகளின் சுரண்டலை மறைப்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்த அரசியலின் அடுத்தகட்ட ஆபத்தான பரிமாணங்களைப் பார்ப்போம்.

தமிழ் தெரிந்த, ஆனால் ஆங்கிலம் மட்டுமே பேசுகிற விஞ்ஞானிகளின் கூட்டத்தில் மாணவி சுபா, தமிழர்களின் பழங்காலக் கலாச்சாரம் பற்றிப் பேச வேண்டும் என்பதால் தமிழில் பேச அனுமதிக்குமாறு கோருகிறார். ஆனால் பேராசியர்கள் மறுக்க, ‘’800 வருஷத்துக்கு முன்னால வந்த ஆங்கிலத்தில் பேசினால் பெருமை. 25000 வருஷத்துக்கு முன்னால வந்த தமிழில் பேசுவது அவமானமா?” என்கிறார். ‘’மனிதனை விட குரங்கு முன்னால தோன்றியது. அந்தக்குரங்குதான் உன் தமிழ்” என்று அவமானப்படுத்துகிறார் பேராசியர். கோபமடைந்த சுபா ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டுகிறார். (ம்யூட் செய்யப்படுகிறது). தமிழுக்கு எதிராக ஆங்கிலத்தை நிறுத்துவது, மேட்டுக்குடி மனோபாவத்தோடு தமிழர்கூடுமிடங்களிலும் ஆங்கிலம் பேசுவது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் தமிழின் பெருமை பற்றி பேசும் சுபா இறுதியாகச் சொல்கிறார், ‘’ரிசர்வேஷன், ரெகமண்டேஷன், கரப்ஷன் இந்த மூன்றும்தான் தமிழ் இளைஞர்கள் முன்னேறாதற்கான காரணங்கள்”. இப்போது புரிகிறதா இந்த தமிழ்ப்பெருமிதம் எங்குபோய் முடிந்திருக்கிறது? அயோத்திதாசர் முன்வைத்த ‘தமிழன்’, பெரியார் முன்வைத்த ‘தமிழன்’, மறைமலையடிகளும் மனோன்மணியம் சுந்தரனாரும் முன்வைத்த ‘தமிழன்’, குணா முன்வைத்த ‘தமிழன்’, இந்துமக்கள் கட்சி முன்வைக்கும் ‘தமிழன்’ - இவையெல்லாம் ஒன்றல்ல. எந்த ‘தமிழ்-தமிழன்’ அடையாளம் நமக்குத் தேவை என்பதில்தான் நமக்கு விழிப்பு தேவை.

சீன அபாயத்தை வீழ்த்திய போதிதர்மரின் வாரிசு அரவிந்தன் இறுதிக்காட்சியில் நமது தமிழர்களின் அறிவியலையும் கலைகள், வீரத்தையும் எப்படி தொலைத்தோம் என்பதைப் பற்றி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சொல்கிறார். அப்போது அவர் உதிர்க்கும் வார்த்தைகள் இவை, ‘’மதமாற்றம், இனமாற்றம்,மொழிமாற்றம் இந்த மூன்றும்தான் நம் வாழ்வை அழிச்சுடுச்சு”.

மொழிமாற்றம், இனமாற்றம் என்கிற வார்த்தைப் பயன்பாடுகள் அபத்தம்.அனேகமாக மொழிக்கலப்பு, இனக்கலப்பைத்தான் இந்த இடத்தில் இயக்குனர் சுட்டிக்காட்ட விரும்புகிறார் என்று நினைக்கிறேன். இயக்குனர் எந்த ‘மதமாற்றத்தை’ ஆபத்தானதாக இங்கு குறிக்கிறார்? வள்ளுவமும் சிலம்பும் இலக்கண நூல்களும் தியானமும் யோகாவும் தந்த பௌத்தமும் சமணமும் இந்துமதமாக மதமாற்றம் செய்யப்பட்டதே, அதைக் குறிக்கிறாரா?

இல்லை,அவர் பல இடங்களில் தமிழர்களின் பெருமிதமாக இந்துமதம் சார்ந்த விஷயங்களைக் குறிப்பிடுவதில் இருந்து இஸ்லாமிய மதமாற்றத்தையும் கிறிஸ்தவ மதமாற்றத்தையுமே குறிப்பிடுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இனக்கலப்பையும் மொழிக்கலப்பையும் மறுத்து இனத்தூய்மையையும் மொழித்தூய்மையையும் வலியுறுத்துவது யாருடைய குரல்?

இட ஒதுக்கீடு எதிர்ப்பு, இந்திய மேலாதிக்க எதிர்ப்பைத் தவிர்த்த ஈழ ஆதரவு, சீனப் பூச்சாண்டி, மறைமுக அமெரிக்க ஆதரவு, தமிழர் பெருமிதம் என்ற பெயரில் இந்துமதம் சார்ந்த விஷயங்களைத் தூக்கிப் பிடிப்பது, மதமாற்ற எதிர்ப்பு,இனத்தூய்மை வலியுறுத்தல் - இந்த ‘ஏழாம் அறிவை’ வளர்த்துக்கொள்வதை விட தமிழர்கள் அறிவே இல்லாமல் இருப்பது மேல் என்பேன்.
நன்றி: சுகுணா திவாகர்

No comments: