Tuesday, October 11, 2011

இலங்கையின் பிரதான பிரச்சினையை இனங்காணத்தவறிய ஜே .வி.பி ஒரு மாக்சியக் கட்சியாக மிளிர முடியாது!

-எஸ் . அருளானந்தம் -
தேசிய மட்டத்தில் மூன்றாவது பலம் பொருந்திய கட்சியாக ஜே.வி.பி. கருதப்பட்டது. இன்று அது பிளவின் விளிம்பில் வந்து நிற்கிறது.
கடந்த நான்கு வருடங்களுக்குள் இடம்பெறும் இரண்டாவது பாரிய பிளவு என்று இதனைக் கொள்ள முடியும். 2008ஆம் ஆண்டு இன்றைய அமைச்சர் விமல் வீரவன்ச கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருடன் பத்து எம்.பீ.க்களும் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர். தற்போது ஜே.வி.பி. இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்கிறது. கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்கு எதிரான அதிருப்தியாளர் குழுவுக்கு ஆதரவு அதிகமாக இருப்பது போலத் தெரிகிறது.

கடந்த இரண்டு வருடங்களாகப் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் தற்போது வெடித்திருக்கிறது. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்கியமையும், ஜனநாயகத் தேசிய முன்னணியெனக் கூட்டணி அமைத்து ஜே.வி.பி. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டமையுமே பிரச்சினையின் ஆரம்பமெனக் கூறப்படுகின்றது. எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கக் கூடாதென்பது அதிருப்தியாளர் குழுவின் அடிநாதமாக இருக்கிறது. இதனால்தானோ என்னவோ இனிமேல் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைப்பதில்லையென்ற முடிவுக்கு சோமவன்ச அமரசிங்க தலைமையிலான ஜே.வி.பி. பிரிவு முடிவுக்கு வந்திருக்கிறது.


அதிருப்தியாளர் குழுவுக்குத் தலைமை தாங்குபவர் குணரட்ணம் பிரேமகுமார் என்று கூறப்படுகிறது. இவர் கட்சிக்குள் குமார மாத்தையா என்ற பெயரால் அறியப்பட்டவர். இவரது பெற்றோர்கள் தமிழர்கள். மாத்தளையில் பிறந்த இவருக்குத் தமிழில் பேச முடியாது என்றும் சொல்லப்படுகிறது. இவர் மருத்துவ தாதியொருவரை மணம் புரிந்து கேகாலையில் வசித்து வந்திருக்கின்றார். ரஞ்சிதம் என்ற இவரது சகோதரர் 1989ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்சசியின்போது படையினரால் கொல்லப்பட்டுவிட்டார். 1987ஆம் ஆண்டு பள்ளேகல இராணுவ முகாம் மீது ஜே.வி.பி.யினர் நடத்திய தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட பிரேம்குமார் பின்னர் வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார். போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவுக்குத் தப்பியோடிய இவர், கடந்த செப்டம்பர் நான்காம் திகதி இலங்கை திரும்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவரைக் கைது செய்வதற்காக இரகசியப்பொலிசார் தேடுதல் வேட்டைகளை ஆரம்பித்திருக்கின்றனர்.
1965ஆம்ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி ஜனதா விமுக்தி பெரமுன என்ற இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. ரோஹண விஜேவீர தலைமையில் காலியில் ஒரு குக்கிராமத்தில் இதன் முதல் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.

சர்வதேச கம்யூனிச முகாம் 1963ஆம் ஆண்டு சீன சார்பு, சோவியத் ரஷ்ய சார்பு என இரண்டு முகாம்களாகப் பிளவுபட்டது. தத்துவார்த்தப் பிரச்சினைகளே இந்தப் பிளவுக்கு மூலகாரணமாக அமைந்தது. அடக்கியொடுக்கப்பட்ட மக்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே ஆட்சி அதிகாரத்தைக கைப்பற்ற முடியும் என்ற மார்க்சிஸ சிந்தனையை மக்கள் சீனம் வலியுறுத்தியது. அப்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக விளங்கியவர் மாசேதுங். சோவியத் ரஷ்யாவின் ஆட்சி அதிகாரத்திலிருந்தவர் நிகிட்டா குருஷேவ். ‘அரசு என்பது ஒரு வர்க்கம், இன்னொரு வர்க்கத்தின் மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கான கருவி’ என்பதே மார்க்சிஸக் கோட்பாடு. அந்த அரசின் பாதுகாப்புக் கருவியாகவே ஆயுதப் படைகள் மற்றும் நீதிமன்றம் போன்ற நிர்வாகக் கட்டமைப்புகள் விளங்குகின்றன என்றும் கம்யூனிஸப் பிரகடனத்தில் கார்ல் மார்க்ஸ் தெரிவித்துள்ளார். இத்தகைய அரசு இயந்திரத்தைப் பலாத்காரமாக நொருக்காமல் தொழிலாளி வர்க்கம் சோஷலிசத்தை நோக்கி நகர முடியாது என்பதும் மார்க்சிஸ – லெனினிசக் கோட்பாடு.
இந்த அடித்தளத்தில்தான் உலகளாவிய அனைத்துப் புரட்சிகர இயக்கங்களும் உருவாகின. இலங்கையில் 1935இல் சமசமாஜக் கட்சி தோற்றம் பெற்றது. அதிலிருந்து 1943இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றம் பெற்றது.

1963இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. என்.சண்முகதாசன் தலைமையில் சீன சார்புக் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக இயங்கத் தொடங்கியது.
1960ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவிலுள்ள பட்ரிஸ் லுமும்பா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப் படிப்புக்கெனப் புலமைப் பரிசில் பெற்று ரோஹன விஜேவீர சென்றார். அப்போது அவருக்கு வயது பதினேழு. தங்காலையில் ரோஹனவின் குடும்பம் வசித்து வந்தது. ரோஹனவின் தந்தை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்பதால் ரோஹனவுக்கு புலமைப்பரிசில் பெறும் வாய்ப்புக் கிட்டியது.

ரஷ்யாவிலிருந்து விடுமுறையில் இலங்கைக்கு வந்த ரோஹன விஜேவீர மீண்டும் ரஷ்யா செல்வதற்கு ரஷ்ய அதிகாரிகள் விசா வழங்க மறுத்துவிட்டனர். சீன சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகளே இதற்குக் காரணமாக அமைந்தது. இலங்கையில் ஆயுதப் போராட்டத்துக்கான அடித்தளமிடும் பணிகளில் சீன சார்புக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டது.
சீன சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேகம் போதாது என்று அதிருப்தியுற்ற விஜேவீர, ஜே.வி.பி.க்கான அடித்தளத்தை இட்டார். தொழிலாளர்கள், விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இரகசியமாக ஆனால் தீவிரமாக இயங்கத் தொடங்கியது ஜே.வி.பி. ஆயுதப் போராட்டத்தின் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்குடன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆயுதப் போராட்டத்துக்கு மக்களைத் தயார்படுத்தும் நோக்கோடு ஐந்து அரசியல் வகுப்புகளை ஜே.வி.பி. நடத்தியது.

1. உழுபவனுக்கு நிலம் இல்லாத நிலைமை.
2. ஏழைகளுக்கு உதவாத சுதந்திரம்.
3. இந்திய விஸ்தரிப்புவாதம்.
4. இடதுசாரி இயக்கங்களின் தோல்வி.
5. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வழி புரட்சி.

இந்த ஐந்து தலைப்புகளிலேயே அரசியல் வகுப்புகள் நடத்தப்பட்டன.
1959ஆம் ஆண்டு கியூபாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய புரட்சிவாதிகள் இணைந்து துணிச்சல்வாத ரீதியில் தாக்குதல்களை நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். ஆர்ஜன்டீனாவின் ரொசாரியோ மாநிலத்தில் பிறந்த சேகுவரா இந்தத் தாக்குதலில் முக்கிய பங்கு வகித்ததால் இவ்வாறான பாணித் தாக்குதலில் ஈடுபட முனைந்த ஜே.வி.பி. யினர் சேகுவேராக்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி நள்ளிரவு நாட்டிலுள்ள 93 பொலிஸ் நிலையங்கள் ஜே.வி.பி.யினரின் தாக்குதல்களுக்கு இலக்காகின. கைக்குண்டுகள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளைக் கொண்டே இத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போது நாட்டில் 273 பொலிஸ் நிலையங்கள் இருந்தன. யாழ் பொலிஸ் நிலையமும் யாழ். கோட்டையும் கூடத் தாக்குதல்களுக்கு இலக்காகின. 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட ரோஹன விஜேவீரா யாழ் கோட்டையிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை மீட்டுக் கொண்டு செல்வதற்காகவே யாழ் கோட்டை மீது தாக்கதல் நடத்தப்பட்டது. 1971 மார்ச்சில் ஜே.வி.பி.யின் குண்டு தயாரிக்கும் இடமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தையடுத்து அரசாங்கம் உஷாராகியது. இதனாலேயே விஜேவீரா கைது செய்யப்பட்டார்.

ஏப்ரல் தாக்குதலில் 57 பொலிஸ் நிலையங்கள் சேதமுற்றன. ஐந்து பொலிஸ் நிலையங்களை ஜே.வி.பி. யினர் கைப்பற்றினர். மூன்று வாரங்களுக்குள் கிளர்ச்சி முற்றுமுழுதாக ஒடுக்கப்பட்டது. கிளர்ச்சிவாதிகள் தரப்பில் சுமார் 1200 பேர் கொல்லப்பட்டனரென்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இந்த எண்ணிக்கையை விட ஐந்து மடங்குக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாமென உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவித்தன. சுமார் 18000 கிளர்ச்சிவாதிகள் கைது செய்யப்பட்டனர். அல்லது சரணடைந்தனர். கைது செய்யப்பட்டவர்களைத் தடுத்து வைப்பதற்கு நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் போதிய இடவசதி இல்லாததால் வித்தியோதய, வித்தியாலங்கார பல்கலைக்கழகங்கள் தடுப்பு முகாம்களாக மாற்றப்பட்டன.
ஜே.வி.பி.க்குள் எழுந்திருக்கும் உட்கட்சி மோதல்கள் பிளவின் விளிம்பையும் கடந்துவிட்டது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. டி.எஸ்.சேனநாயக்காவுக்கு ஒரு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவைப் போல சண்முகதாசனுக்கு ஒரு ரோஹன விஜேவீராவைப் போல ரோஹன விஜேவீராவுக்க, நிமலசிறி ஜயசிங்க மற்றும் லயனல் போககோயைப் போல, பிரபாகரனுக்கு கருணா அம்மானைப் போல, சோமவன்ச அமரசிங்கவுக்கு குமார மாத்தையா என்றழைக்கப்படும் குணரட்ணம் பிரேமகுமார் சவாலாக உருவெடுத்துள்ளார்.

இடதுசாரி அதிதீவிரவாதம், வலதுசாரி சரணாகதிவாதத்துக்கு வழிசமைக்கும் என்பது மார்க்சிஸக் கோட்பாடு. அதேபோன்று குறுகிய தேசியவாதம் படுபிற்போக்கான நிலைமைக்குள் தள்ளிவிடும். இந்த இரண்டு அம்சங்களுடனும் பின்னிப் பிணைந்தே ஜே.வி.பி. தோற்றம் பெற்று, வளர்ச்சி கண்டு வந்திருக்கிறது. கால – தேசஸ்ரீ வர்த்தமான நிலைமைகளுக்கு ஏற்பவே மார்க்சிஸ சித்தாந்தம் பயன்படுத்தப்பட வேண்டும். கண்மூடித்தனமாகப் புத்தகவாதப் போக்கில் மார்க்சிஸக் கோட்பாடுகளைப் பயன்படுத்துவதில் அர்த்தமில்லை. ஜே.வி.பி.யின் ஆயுதப்போராட்ட அழிவுக்கு இதுவே அடிப்படைக் காரணம்.

ஜெர்மனியரான கார்ல் மார்க்ஸ் 1848இல் கம்யூனிசப் பிரகடனத்தை வெளியிட்டார். அரசும் அதன் அரச இயந்திரமும் ஒரு வர்க்கம், இன்னொரு வர்க்கத்தை அடக்குவதற்கான கருவி என்பது மார்க்சிய மூலக் கோட்பாடு. அந்தப் பிற்போக்கான அரசையும், அதன் காவல்நாயான அரசு இயந்திரத்தையும் புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் மூலம் உடைத்தெறியாவிட்டால் சோஷலிச சமூக அமைப்பை நோக்கி நகர முடியாதென்பதும் மார்க்சிஸ விதி. எதிரி யார்? நண்பன் யார்? புரட்சியின் இலக்கு சக்தி எது? இயக்கு சக்தி எது? என்பவை பற்றிய சரியான கணிப்பீடுகளை மேற்கொள்ளாமல், சிறுபிள்ளைத்தனமான முறையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவது அப்பாவி மக்களின் அழிவுக்கே வழிவகுக்கும். 1971இலும், 1988-89களிலும் ஜே.வி.பி. நடத்திய ஆயுதப் போராட்டம் இதற்கு நல்ல உதாரணமாகும்.

பாராளுமன்றம் கள்வர் குகை’, ‘துப்பாக்கிக் குழாயிலிருந்துதான் அரசியலதிகாரம் பிறக்கிறது’ என்ற முன்னோடிக் கோஷங்களை முன்வைத்துக் கொண்டே இலங்கையில் என்.சண்முகதாசன் ஆயுதப் போராட்டத்துக்கான முதல் அடிகளை எடுத்து வைத்தார். இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட பின்னர் சீன சார்புப் பிரிவுக்குத் தலைமை கொடுத்தவர் சண்முகதாசன்.
1963, 64ஆம் ஆண்டு காலப் பகுதியில் அவரோடு இணைந்து செயற்பட்டவரே ரோஹன விஜேவீரா. சிறுபிள்ளைத்தனமான துணிச்சல்வாதப் போராட்டம் என்றும் மக்களை அணிதிரட்டாத யுத்தம் என்றுமே அக்காலகட்டத்தில் சீனக் கம்யூனிஸ்டுகள் வர்ணித்தனர். சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்ற விரல்விட்டெண்ணக் கூடியவர்கள் ஒன்றிணைந்து தீடீர்த் தாக்குதலை நடத்தியே கியூபாவில் அரச அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

‘மக்களே தீர்க்கமான சக்தி, ஆயுதங்களல்ல’ என்பதும் மாசேதுங் சிந்தனை. பலம்வாய்ந்த இலங்கையின் அரசு இயந்திரத்தோடு வெறும் கைக்குண்டுகளுடனும், கல்கட்டாத் துப்பாக்கிகளுடனும் ஜே.வி.பி. நடத்திய இரண்டு கிளர்ச்சிகளும் பாரிய அழிவுகளோடு முடிவுக்கு வந்தன. 1989ஆம் ஆண்டுக் கிளர்ச்சியின்போது சோமவன்ச அமரசிங்கவைத் தவிர ஜே.வி.பி.யின் அனைத்து அரசியல் பீட உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். சோமவன்ச அமரசிங்க கடல் மார்க்கமாகக் களவாக இந்தியாவுக்கு தப்பிச் சென்று, அங்கிருந்து லண்டன் பயணமானார். மலையகத்தைச் சேர்ந்த, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய சில பிரமுகர்களே இவர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவினர் என்பதுதான் விந்தையானது.

ஏனென்றால் 1987இல் செய்து கொள்ளப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தும், இந்தியப் படையின் இலங்கை வருகையைக் கண்டித்தும் பல தாக்குதல்களை ஜே.வி.பி. நடத்தியிருக்கிறது. இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பருப்பு, உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை விற்கக் கூடாதென்றும் ஜே.வி.பி. தடை விதித்திருக்கிறது. இத் தடையை மீறிய பல சிறு வர்த்தகர்கள் கொல்லப்பட்டனர். தலையற்ற முண்டங்களாக, மனிதப் பிண்டங்கள் வீதியோரங்களில் வீசப்பட்டன. மோதலில் சம்பந்தப்பட்ட இரு தரப்புமே இந்தக் கொடூரங்களைப் புரிந்தன.

‘பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண்’ என்ற பயங்கரப் பழிவாங்கும் பாணியில் அரச படைகளும், ஜே.வி.பி. யினரும் ஈடுபட்டனர். உட்கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகளைக் கூட ஆயுதங்களால் தீர்க்கும் வேலைகளில் ஜே.வி.பி.யினர் ஈடுபட்டனர். ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சியின்போது சுமார் அறுபதாயிரம் பேர் கொல்லப்பட்டனரென்று உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவித்தன.
உட்கட்சி ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவம், மத்தியப்படுத்தப்பட்ட ஜனநாயகம், சொல்லுக்கும் செயலுக்குமிடையில் இடைவெளி இருக்கக்கூடாது என்பதெல்லாம் மார்க்கிஸப் பதப் பிரயோகங்கள். இவை எதுவுமே அன்றும் சரி, இன்றும் சரி ஜே.வி.பி. க்குள் இருந்ததே இல்லை. ரோஹண விஜேவீரா ஒரு சர்வாதிகாரியைப் போலத்தான் கட்சியை வழிநடத்திச் சென்றார். இதனால் கட்சிக்குள் முரண்பட்ட பலர் வெளியேறிச் சென்றார்கள்.

ஆயுதப் போராட்ட வழிமுறையிலிருந்து 1994இல் பாராளுமன்ற வழிமுறைக்கு ஜே.வி.பி. தாவியது. இதற்கு இரண்டு கிளர்ச்சிகளிலும் ஜே.வி.பி. சந்தித்த படுதோல்விகளும் இழப்புகளும் மட்டும் காரணமல்ல. கண்மூடித்தனமான படுகொலைகளை அது மேற்கொண்டதால் மக்கள் மத்தியிலான செல்வாக்கையும் இழந்தமை அதற்கு ஒரு காரணம். அதிதீவிரவாதம், வலதுசாரிச் சர்வாதிகாரத்துக்கு வழிசமைக்கும் என்பதற்கும் இது நல்ல உதாரணமாகும்.

குறுகிய தேசியவாதத்தின் ஒரு வெளிப்பாடுதான் 1956இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம். 1956இற்கு முன்னதாகவே இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளான ஐ.தே.க.வும், சுதந்திரக் கட்சியும் சிங்களத்தை மட்டும் அரச கரும மொழியாக்குவது பற்றிப் பேசத் தொடங்கிவிட்டன. அப்பட்டமான பாராளுமன்ற சந்தர்ப்பவாதமே இதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. ஜே.வி.பி.யும் தனது அரசியல் பணிகளைச் சிங்களக் கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்வதில் மட்டுமே அக்கறை செலுத்தியது.

நா.சண்முகதாசனின் சீனசார்புக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்றபோது ரோஹண விஜேவீரா இனரீதியில் பிரசாரங்களை முன்வைக்கத் தொடங்கினார். சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் சிறுபான்மை இனத்தவரொருவர் புரட்சிகரக் கட்சியொன்றுக்குத் தலைமை தாங்குவதும் அர்த்தமில்லையென்று அவர் வெளிப்படையாகவே சொன்னார். அதுமட்டுமல்ல, ‘இந்திய விஸ்தரிப்புவாதம்’ என்ற அவரது மூன்றாவது அரசியல் வகுப்பில் பச்சை இனவாதம் கக்கப்பட்டது. மலையகத்திலுள்ள இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களை இந்திய விஸ்தரிப்புவாதத்தின் ஓர் அங்கமென அவர் விளக்கினார். தமிழர்களுக்குச் சொந்தமான ‘மகாராஜா’ போன்ற தொழில் நிறுவனங்களையும் இந்திய விஸ்தரிப்புவாதமாகவே விஜேவீரா விளக்கினார்.

1970களின் முற்பகுதியில் ‘பெரதிக அலங்’ (கீழைக்காற்று) என்ற பெயரில் ஒரு சிறு புரட்சிகர ஆயுதக்குழுவொன்று தென்னிலங்கையில் இயங்கியது. இதன் தலைவராக காமினி யாப்பா என்பவர் விளங்கினார். இதற்கு ஜே.வி.பி.யைப் போன்று பெரிய அடித்தளம் இருக்கவில்லை. என்றபோதிலும் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் இளைஞர்கள் சிலர் இந்த அமைப்பில் இணைந்திருந்தனர்.

1970களில் இனப் பிரச்சினை கூர்மையடையத் தொடங்கிவிட்டது. பிரபாகரன், உமாமகேஸ்வரன், குட்டிமணி போன்ற பலர் ஆயுதங்களுடன் அரசியல் அரங்கிற்கு வரத் தொடங்கிவிட்டனர். 1971இல் ஜே.வி.பி.யை இராணுவ ரீதியில் ஒடுக்கிய சிறிமாவோ அரசாங்கம், அரசியல் ரீதியில் அதன் சித்தாந்தங்களை நொருக்கத் தலைப்பட்டது. இதன் வெளிப்பாடாக இளைஞர் ஆணைக்குழுக்களை அரசு நியமித்தது. சிறிமா அரசு கொண்டுவந்த பல்கலைக்கழக அனுமதிக்கான மொழிவாரித் தரப்படுத்தலும் அதன் ஒரு வெளிப்பாடுதான். இந்த மொழிவாரித் தரப்படுத்தல்தான் தமிழ் மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்த ‘தமிழ்மாணவர் பேரவை’ தோற்றம் பெற வழிவகுத்தது. இந்தத் தமிழ் மாணவர் பேரவையே தமிழீழ அரசுக்கான கோஷத்துக்கு உசுப்பேற்றியது. பின்னர் இந்த மொழிவாரித் தரப்படுத்தல், மாவட்டவாரித் தரப்படுத்தலாக மாற்றப்பட்டது.

ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி, கண்மூடித்தனமான இந்திய எதிர்ப்பை மையமாக வைத்தே ஆரம்பிக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு ஜூன் மாதம் கடைசி வாரத்தில் நடைபெற்ற ஜே.வி.பி.யின் அரசியல் பீடக் கூட்டத்தில் ஜூலை மாதம் 29ஆம் திகதி அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கான தாக்குதலை ஆரம்பிப்பதென முடிவெடுக்கப்பட்டது. அதாவது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் இரண்டாவது வருட பூர்த்தி தினத்தன்று புரட்சியை ஆரம்பிக்க ஜே.வி.பி. திட்டமிட்டது. நவம்பர் மாதத்துக்கு முன்னதாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதெனவும் காலக்கெடு விதிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் இருபதாம் திகதிக்கு முன்னர் படைகளில் பணிபுரிவோர் படைகளிலிருந்து விலக வேண்டுமென்றும் இல்லையேல் அவர்களின் குடும்பத்தவர்கள் கொல்லப்படுவார்களெனவும் ஜே.வி.பி. உத்தரவிட்டது. இந்த அரசியல் பீடக் கூட்டத்தில் ரோஹண விஜேவீராவும், சோமவன்ச அமரசிங்கவும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கிலும் கிழக்கிலும் இந்தியப் படைகள் புலிகள் இயக்கத்தைக் காடுகளுக்குள் முடக்கிவிட்டிருந்த நேரமது. சிறுபிள்ளைத்தனமான ஆயுதப் போராட்டத்தில் ஜே.வி.பி. ஈடுபட்டிருந்தாலும் அது இலங்கை அரசை அதிரவைத்தது என்பதை மறுக்கமுடியாது.
ஜே.வி.பி.யைப் போன்ற சிறுபிள்ளைத்தனமான துணிச்சல்வாத ஆயுதக் குழுக்கள் பல 1960களின் பிற்பகுதியிலும், 1970களின் முற்பகுதிகளிலும் தோற்றம் பெற்றிருக்கின்றன. இந்தியாவின் நக்சல்பாரிகள், இத்தாலியில் ‘ரெட்’ பிரிகேட்டுகள்., ஜெர்மனியில் ‘படர் மெயின்ஹொப் குழு’., ஜப்பானில் ‘றெட் ஆமி’., பெருவில் ‘irனிங் பாத்’ ஆகியவை மார்க்சிஸ அடித்தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட சில அமைப்புகளாகும். இவை எதுவுமே தத்தம் நாடுகளில் அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை.

ஜே.வி.பி.யின் கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்ட 1970களில் சுமார் நானூறுக்கு மேற்பட்ட சிறிய, பெரிய ஆயுதப் போராட்ட இயக்கங்கள் உலகளாவிய ரீதியில் இருந்ததாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸின் மோரோ கிளர்ச்சிவாதிகள், ரஷ்யாவின் செச்னியப் போராளிகள், இந்தோனேசியாவில் கிழக்குத் திமோர் மற்றும் ஆச்சே இயக்கத்தினர், இந்தியாவில் நாகலாந்து மற்றும் காஷ்மீர் இயக்கத்தவர்கள், ஸ்பெயினின் பாஸ்க் போராளிகள், இலங்கையின் புலிகள் இயக்கம் ஆகியவை தனிநாடு கோரிப் போராடியவை. ஜே.வி.பி. மார்க்சியப் பாணியிலான இயக்கமென்று தன்னை அழைத்துக் கொண்டாலும், இலங்கையில் மூவின மக்களையும் உள்ளடக்கிய தேசம் தழுவிய கட்சியாகத் தன்னை அடையாளப்படுத்தத் தவறிவிட்டது. இனம் சார்ந்த முரண்பாடுகளைச் சரிவரக் கையாளவும் அதனால் முடியாமல் போய்விட்டது. ‘இலங்கை சிங்களவர்களுக்குச் சொந்தமான நாடு. தமிழர்கள் அர்த்தமற்ற கோரிக்கைகளை முன்வைக்கக்கூடாது’ என்று கனடாவிலிருந்து வெளிவரும் ‘நஷனல் போஸ்ற்’ சஞ்சிகைக்குப் பேட்டியளித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் வாலில் தொங்கிய கட்சியே ஜே.வி.பி. ஆரம்ப காலங்களில் ஜே.வி.பி. உறுப்பினர்கள் சிலர் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசினார்கள் என்பது உண்மைதான். ஆனால் படுமோசமான குறுகிய சிங்களத் தேசியவாத நிலைப்பாட்டையே இன்றுவரை ஜே.வி.பி. எடுத்து வந்திருக்கிறது.

ஜே.வி.பி.க்குள் ஜனநாயகமும் இருக்கவில்லை. மத்தியத்துவமும் சரிவரச் செயற்படவில்லை. பிளவுக்கு இது ஒரு முக்கிய காரணம்.

கால-தேச-வர்த்தமானச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர் குழுவானது, நாட்டின் பிரதான முரண்பாடுகளைச் சரிவர இனங்கண்டு முன்செல்லத் தவறுமேயானால் சாதிக்கப் போவது எதுவுமில்லை.

No comments: