Saturday, July 23, 2011

பொன் .கந்தையா

 நினைவில் தோழர் பொன். கந்தையா  
-கரவைதாசன்-

வர்க்க உணர்ச்சியும், உண்மையான ஜனநாயகப் பிரியமும்புரட்சிகர உணர்ச்சியும் கொண்ட வர்களை எப்பொழுதும் கொம்யூனிஸ்டுகள் வசீகரிப்பதைப்போல் வேறெவரும் வசீகரிப்பதில்லை. ஐம்பதுகளில் இலங்கைத் தீவே வர்க்கத்துருவப்பட்டிருந்தபோது வடமராட்சியில் கம்யூனிஸ்ட்கள் தோழர் பொன் கந்தையா அவர்களை வசீகரித்திருந்ததில் வியப்பேதும் இல்லை!


அன்று தமிழ்மக்கள் பாராளுமன்ற அங்கத்தவராகத் தேர்ந்தெடுத்த ஒரேயொரு இடதுசாரி பாராளுமன்ற அங்கத்தவர் தோழர் பொன். கந்தையாதான்.
இல்லையேல் சரித்திரம் ஒட்டுமொத்த தமிழர்களையே பிற்போக்குவாதிகள் என்று நாமாகரணம் சூட்டியிருக்கும்.


தோழர் பொன்.கந்தையாஅவர்கள் 1956 இல் பருத்தித்¬துறைத்தொகுதியில்தான் வெற்றியீட்டினார். (அந்நாட்களில் உடுப்பிட்டித்தொகுதியென்று ஒன்று இருக்கவில்லை. பின்னாட்களில்த்தான் பருத்தித்துறைத் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு பருத்தித்துறைத் தொகுதி தனியாகவும் உடுப்பிட்டித்தொகுதி தனியாகவும் உருவாக்கப்பட்டது.) அது 1953 ஹர்த்தால் மூலம் அந்நாள் இலங்கைப் பிரதம மந்திரியாகவிருந்த டட்லி சேனனாயக்காவை கொழும்பு துறைமுகத்தில் நின்ற போர்க் கப்பலுக்குள் தஞ்சம் புகும்படி வெருட்டியடித்த தொழிலாளர் போராட்டத்தின் பின் நடந்த தேர்தலாகும். அன்று நூறு தொகுதிகளில் லங்கா சமசமாஜக்கட்சி தேர்தலில் நின்றது. முன்னீடாக தேர்தல் காலத்திலேயே அமைச்சரiவை அட்டவணையைத் தயாரித்து தேர்தல் விஞ்ஞாபனத்¬தில் சேர்த்திருந்த காலம் அது. அன்று ஆட்சியைக் கைப்பற்றும் முன்னோக்கு லங்காசமசமாஜக் கட்சிக்கோ அல்லது இலங்கைக் கம்யூனிசக்கட்சிக்கோ இருந்திருந்தால் தொழிலாளிவர்க்கம் ஒரு துளி இரத்தமும் சிந்தாமலே ஆட்சியைக் கைப்பற்றியிருக்¬கலாம். அந்த மட்டத்திற்கு வர்க்கத் துருவப்படுத்தல் இலங்கை முழுவதும் நடைபெற்றிருந்தது. அந்தப் புறநிலைச் சூழல்தான் கந்தையாவையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தது. தோழர் பொன் கந்தையா அவர்கள் இலங்கைக் கொம்யூனிசக் கட்சியின் சார்பிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அரசியலிலே புறநிலைக்காரணி மாத்திரமல்ல அகயவயக்காரணியும் தீர்க்கமான பாத்திரத்தை வகுப்பதாகும். இலங்கை முழுவதும் காணப்பட்ட வர்க்கத் துருவப்படுத்தலின் வீச்செறிவின் வெளிப்பாடாய் வடமராட்சியில் கந்தையாவும் அவரோடொத்த தோழர்களும் காணப்பட்-டார்கள். அந்தத் தேர்தலில் இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சிக்கும், லங்காக சமசமாஜக் கட்சிக்குமிடையே தேர்தலில் போட்டியில்லா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் கீழ் இடதுசாரிகள் ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால்1960 தேர்தலிலே இந்தக் கட்சிகளிடையே போட்டியில்லா ஒப்பந்தம் நிலவவில்லை. 1960 உடுப்பிட்டித் தொகுதியில் கொம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட பொன் கந்தையாவை எதிர்த்து சமசமாஜக் கட்சி வேட்பாளரான ஆர்.ஆர். தர்மரத்தினம் போட்டியிட்டார். இடதுசாரி வாக்குகள் இரண்டாகப் பிரிந்தன. ஆதலால்தான் பொன் கந்தையா அவர்கள் தோல்வியினைச் சந்திக்க நேர்ந்தது. அந்தத் தேர்தலில் கிடைத்த கொம்யூனிஸ்ட் வாக்குகளையும் லங்காசமசமாஜக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளையும் கூட்டினால் அன்று தேர்தலில் வெற்றிபெற்ற எம்.சிவசிதம்பரத்திற்குக் கிடைத்த வாக்குகளிலும் பார்க்க பல ஆயிரம் கூடியதாகும்.


எழுபத்தியேழு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு சிறுபான்மைத் தமிழரை வேட்பாளாராக நியமிப்பதென்று முடிவெடுத்தது. சிறுபான்மைத் தமிழரைப் பெரும்பான்மையாகக் கொண்ட கோப்பாய் தொகுதியிலேயே நியமிக்க வேண்டும் என்று பலரும் பிரேரித்திருந்தனர். அதற்குப் பதிலிறுத்த அமிர்தலிங்கம் ”நாம் கோப்பாயிற் போட்டியிட்டால் வெற்றியீட்டுவது உத்தரவா¬தமில்லை. ஒரு சிறுபான்மைத்தமிழர் வெற்றியீட்டக்கூடிய வாய்ப்பு உடுப்பிட்டியில்தான் இருக்கிறது. அந்தத் தொகுதி கொயூனிஸ்ட் கந்தையா வெற்றியீட்டின தொகுதியாகும்.” எனக் கூறினார். அதன் பின்பே உடுப்பிட்டித் தொகுதியில் ஒடுக்கப்பட்டவர்களுள் ஒருவரான திரு.த.இராசலிங்கம் தேர்தலிற் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.


உடுப்பிட்டி கிராமசபைத் தலைவராக வரலாறு முழுவதும் எண்பதுகளில் கிராமசபை கலைக்கப்படுமட்டும் சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த ஆர்.ஆர். தர்மரத்தினமே இருந்தார். வல்வெட்டித்துறையின் நகரசபைத் தலைவராக திருப்பதியென்ற கொம்யூனிஸ்டே அறுபதுகளின் பின்பகுதி மட்டும் இருந்தார். பருத்தித்துறை மாநகரசபைத் தலைவராக அறுபது மட்டும் கொம்யூனிஸ்டான சேனாதிராசாவே இருந்தார்.


1942 இல் கண்டியிலுள்ள போகம்பரைச் சிறையிலிருந்து தப்பியோடிய என்.எம் பெரேராவும் பிலிப் குணவர்த்தனாவும் வல்வெட்டித் துறையீனூடேயே தப்பிச் சென்றனர். அந்த மட்டத்திற்கு அந்தப் பிரதேசத்தில் இடதுசாரிச் சம்பிரதாயம் இருந்தது.


அந்த நாட்களில் அந்தப் பிரதேசத்திலுள்ள கற்சுவர்கள், மதில்கள், சுமைதாங்கிகள், கிணற்றுச் சுவர்கள், கிட்டங்கிகள், மதகுகள் என்று பார்த்த இடமெல்லாம் சிவப்புப் பெயிண்டால் கீறப்பட்ட அரிவாளும் சுத்தியலும் சின்னம் கண்கொள்ளாக் காட்சியாகத் தோன்றும். வீட்டு நிலைகளிலே கூட அரிவாளும் சுத்தியலும் பொறிக்கப்பட்ட நிலைகளைக் காணலாம். பெண்கள் அணிந்திருந்த தாலியின் குடத்தில்கூட அரிவாளும் சுத்தியலும் பொறித்திருந்ததாககச் சிலர் சொல்லக்கேள்விப்பட்டிருக்கின்றேன்.. பொன். கந்தையாவின் உருவப் படங்கள் ஏறத்தாள எல்லா வீடுகளிலும் வைக்கப்பட்டிருக்கும். கம்பர்மலையென்ற கிராமத்திலுள்ள இரண்டு வாசிகசாலைகளிலும் பொன். கந்தையாவின் உருவப் படங்கள் மாலை அணிவிக்கப்பட்டு அதன் உள் அறைகளில் இன்றுவரை வைக்கப்பட்டிருக்கிறது. கரவெட்டிகிழக்கு வளர்மதிக்கிராமத்தில் இன்றும் பொன்கந்தையா அவர்களின் நினைவுதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கன்பொல்லைக்கிராமத்தில் கனுவில் சனசமூகம் என்னும் பெயரினிலேயே அவர்களது வாசிகசாலை அமைந்திருந்தது. அதன்தலைவராக வ.தங்கமணி அவர்களும் அவரைத் தொடர்ந்து ஆசிரியர் க.இராசரத்¬தினம் அவர்களும் தலைவராக இருந்தபோது பொன்கந்தையா அவர்களது நினைவு தினம் தொடர்ச்சியாக நினைவுகூரப்பட்டு வந்திருக்கிறது. 1966க்குப் பின் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தில் கைக்குண்டு தயாரிக்கும்போது வெடிவிபத்து ஏற்பட்டு கன்பொல்லைக் கிராமத்தினைச்சேர்ந்த மூன்று போராளிகள் தோழர்கள் மாணிக்கம்.சீவரத்தினம், கந்தன்.செல்வராசா, கிட்டினர்.வேலும் மயிலும் (நாகேஸ்) ஆகியோரின் தியாகத்தின் பின் அக்கிராமத்தில் அத்தியாகிகளின் நினைவு தினம் முன்னிறுத்தப்பட்டு இன்றுவரை நினைவு கூரப்பட்டு வரும்பொழுது கந்தையாவை இன்றிருக்கும் சந்ததி மறந்துவிட்டதா? எனச் சந்தேகிக்கத் தோன்றுகிறது. கம்பர்மலை அரசினர் பாடசாலையில் இன்றுவரை பொன். கந்தையாவின் உருவப் படம் சரஸ்வதி போன்ற சாமிப் படங்களோடு வைக்கப்பட்டுள்ளது. இப்படி வடமராட்சியிலுள்ள ஏறத்தாள எல்லாக் குக்கிராமங்களிலும் அவருடைய உருவப்படத்தினை பொது இடங்களிலும் அவரது தோழமைக்குரியவர்களது வீடுகளிலும் காணலாம்.


கந்தையாவை விளங்கிக் கொள்ள வேண்டுமாக இருந்தால், அவர் அரசியலுக்கு வந்த காலத்தில் அமைந்திருந்த சமூகபொருளாதார அபிவிருத்திகளைக் கருத்தில் கொண்டால்த்தான் அது விளங்கும். பொன். கந்தையா பாராளுமன்றத்தில் ஒரு மாதிரி கிராமம் ஆக்கவேண்டும் என்று பேசிய கம்பர்மலைக் கிராமத்தின் வாழ்சூழல் நிலமைகளையும் கன்பொல்லை, கரவெட்டிகிழக்கு வளர்மதிகிராமம் போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் கிராமத்து மக்களுடன் இவர் வாழ்ந்த வகையை எடுத்துப் பார்ப்போம். முதலில் கம்பாமூலையென அந்நாட்களில் அழைத்துவரப்பட்ட கம்பர்மலை:- ’கம்பர்மலை’ உடுப்பிட்டிக்கும், வல்வெட்டித்துறைக்கும் இடையேயுள்ள குக்கிராமமாகும்.. இந்தக் கிராமத்திற்கு ஐம்பதுகளில் கந்தையா அரசியல் வேலைக்கு வந்தபொழுது அந்தக் கிராம சூழலையும் அந்த மக்களின் வாழ் நிலமைகளையும் கண்டு திடுக்கிட்டார். அந்தக் காலத்தில் அங்கே சேட்டுப்போடுகின்ற ஒரு ஆண்களும் அந்நாட்களில் கிடையாது. மேற்சட்டை அணிந்த பெண்களும் அருமையாகவே இருந்தார்கள். எஸ்..எஸ்.சி சித்தியெய்திய ஒரு மனிதர்கூட இருக்கவில்லை. உத்தியோகம் பார்க்கும் ஒரு மனிதர்கூட இருக்கவில்லை. ஒரு சரியான ஆளமான ரோட்டு இருந்திருக்வில்லை. மழைக்காலங்களில் வண்டில் சென்றால் வண்டில் சில்லு அச்சாணியளவுக்குப் புதைந்துவிடும். அங்கே மண்ணெண்ணை நெருப்புப்பெட்டி வாங்க ஒரு பெட்டிக் கடை கிடையாது. அங்கே ஏறத்தாள எல்லோருமே காணியற்ற குத்தகை விவசாயிகளும், கூலிவிவசாயிகளும், மரமேறுபவர்களும், மேசன் வேலைக்குப் போகும் அல்லது கல்லுடைக்க அல்லது கிணறு வெட்டப்போகும் கூலிகளுமே இருந்தனர். வயற்காணிகள், தோட்டக்காணிகள், பனங்காணிகள், குடியிருப்பு நிலங்கள், குளங்கள், கிணறுகள் எல்லாமே வல்வெட்டி, உடுப்பிட்டியைச் சேர்ந்த பெரிய வெள்ளாளர் என்று சொல்லப்படும் நிலக்கிழார்களுக்கே சொந்தமாக இருந்தது.


அந்நாளில் வல்வெட்டித்¬ துறையே வல்வெட்டியின் சின்னத்துறைமுகமாக இருந்தது: வல்வெட்டித்துறையின் முக்கால்வாசிக் காணிகள் இந்தப் பெரிய வெள்ளாளருக்கே சொந்தமாக இருந்தது. கந்தையா அந்தப் பின்தங்கின கிராமத்¬திற்கு அரசியல் வேலை செய்ய முதல்நாள் வந்தபொழுது இரவுகாலம் ஆனதால் மீண்டும் தனது சொந்த இடமான கரவெட்டிக்குப் போவதற்கு அப்பொழுது போக்குவரத்து வசதிகள் இருக்கவில்லை. அந்நாளில் அங்கிருந்த போக்குவரத்து வசதி திருக்கல் வண்டிதான். அந்நியனான கந்தையாவைத் துயிலவைப்பதற்கு அந்தக் குடிசைகள்கூட அனுமதிக்க மறுத்தன. அன்று கந்தையாவோடு சொற்ப அறிமுகமான வைத்திலிங்கம் என்ற ஒருவர் தனது வீட்டிற்குச் சொற்ப தூரத்தி¬லுள்ள செம்பாடு என்னுமிடத்திலுள்ள செம்மறிப் பட்டிக்கு நடுவேயுள்ள அட்டாளையில் துயில வைத்தாரென்று அந்தக் கிராமத்திலுள்ள வயதான கிராம வாசிகள் இன்றும் கூறுவர்கள். காடுமேடு சொந்தம். கல்லு முள்ளு இன்பம் என்றே அரசியல் வாழ்வைத் தொடங்கியவர். மணிக்கூடோ கலண்டரோ இல்லாத அந்தக் கிராமத்திற்கு அவர் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் கிரமமாக வரத் தொடங்கினார்.


அந்தப் பிரதேசத்து மக்கள் செறிவின் நூதனமென்னவென்றால் பெரிய வெள்ளாள¬ரின் அடிமை குடிமையாக வாழ்ந்த மக்களினங்களை நாட்டின் எல்லைப்புறங்களில் சுடலைக் கருகாமையில், முட்புதர்க்காட்டின் தொடக்கத்தில், பனங்கூடற் கரையில், வயல்வெளிக் கரையில் என்று குடியேற்றி வைத்திருந்தனர். நாட்டின் மையங்களில் ஒருவரையும் குடியிருக்க அனுமதிக்கவில்லை. இந்த உண்மையை முதலிற் கண்டுபிடித்து அம்பலப் படுத்தியவரும் பொன். கந்தையாதான்.


அந்தக் கிராமத்தில் பொன் கந்தையா அவர்கள் நடாத்திய முதலாவது போராட்டம்.-அந்தக் கிராமத்து எல்லையில் உள்ள வயல் நிலங்களை நிலக் கிளார்கள் வாரமுறையில் விவசாயம் செய்யும் படி விட்டிருந்தார்கள். வாரமுறையென்பது விளைச்சலில் மூன்றில் ஒன்றை நிலக்கிளாருக்குக் கொடுக்க வேண்டும். பருவ மழையை நம்பி விவசாயம் செய்பவர்கள் போகம் சரியான சாகுபடியைக் கொடுக்கவில்லையென்றால் நிலக்கிளார்கள் அப்பொழுது விவசாயம் செய்த விவசாயிடமிருந்த காணியைப் பறித்து வேறு விவசாயிகளிடம் கொடுத்து விடுவர். அதனால் அங்கே தொடர்ந்து விவசாயிகள் குத்துவெட்டுப் பட்டுக்கொண்டிருப்பர். பருத்தித்துறை நீதவான்கோட்டில் கம்பர்மலை விவசாயிகளின் வழக்குகள் நிறைந்திருக்கும். அதிகமான சந்தர்ப்பங்களில் விவசாயி மூன்றில் ஒன்று தானியம் கொடுக்க வேண்டியதற்குப் பதிலாக அரைவாசி நெல்லைக் கொடுப்¬பதன் மூலம் சமரசத்திற்கோ, இணக்கத்திற்கோ வந்து விடுவர். ஓற்றுமை இல்லாமையை வர்க்கக் குணாம்சமாகக் கொண்ட அந்த விவசாயிகளோடு பொன.; கந்தையா தொடர்ந்து கலந்துரையாடி, ஒரு சின்ன விழிப்புணர்வையும் விளக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தார். ஓருவர் செய்த வயற்காணியை இயற்கை வஞ்சித்ததால் ஏற்பட்ட துர்அதிஷ்டத்திற்காக நிலக்கிளார் பறித்து மற்றவரிடம் கொடுப்பதை அனுமதிப்-பதில்லை என்ற முடிவுக்கு வரப்பண்ணினார். இப்பேற்பட்ட இக்காட்டான பிரச்சனைகளை கூட்டுமுயற்சியால் தீர்ப்பதற்காக ஒரு ’கிராமமுன்னேற்றச் சங்கம்’ ஒன்றை ஏற்படுத்தினார்.


இந்தக் கிராம முன்னேற்றச் சங்கத்தின் துணையோடு 1953 அந்தக்கிராமத்தில் ஒரு சனசமூக நிலையத்தை ஏற்படுத்தி அதற்குப் ’பாரதிவாசிகசாலை’ என்ற பேரையும் சூட்டப்பண்ணினார். கம்பர்மலையென்று இன்று அழைக்கப்படும் அந்தக் கிராமத்தின் அக்காலப் பெயர் கம்பாமூலை என்பதாகும். ஓடுக்கப்பட்ட மக்களின் ஊர்பேர்களை அந்தக்காலத்து விதானைகளும் றிஜிஸ்டாரென்று சொல்லப்படும் பதிவுகாரர்களும் மணியகாரர்களும் கொச்சையாகப் பாவிப்பதை கந்தையா பலமுறை எதிர்த்திருந்தார். கந்தையா கம்பாமூலையைக் கம்பர்மலை என்று மாற்றும் படிக்கு கிராமச்சங்கத்திற்கு புத்திமதி கூறிமாற்றியதோடு இனிமேல்வரும் பதிவுகளை ’கம்பர்மலை’ என்று பதியும்படி கிராம முன்னேற்றச் சங்கத்தின் மூலம் அந்த விண்ணப்பத்தைத் தானே ஆங்கிலத்தில் எழுதி கிராம முன்னேற்றச்சங்க நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கி விண்ணப்பித்தார். அந்தக் கிராமத்தை ஊடறுத்தச் செல்லும் சேறும் புழுதியுமாக இருந்த ஒழுங்கைக்கு கிழக்குத்தெரு என்ற பெயரே அந்நாளில் இருந்தது: அந்தக் கிழக்குத்தெருவை பாரதிவீதியென்று அழைக்கும்படி புத்திமதி கூறினார். கிழக்குத்தெருவை பாரதிவீதியென்றழைத்தால் தபாலை விநியோகிக்க மாட்டோ¬மென்று தபால்காரர்களும், தபால்கந்தோரும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, கந்தையா போஸ்ட்மாடர் ஜெனறலுக்கு கிராமமுன்னேற்றச் சங்கத்தின்பேரால் கடிதமொன்றை எழுதினார். கிழக்குத்தெருவை பாரதி வீதியென்றழைப்பதால் அரசாங்கத்திற்கோ தாபால் இலாகாவிற்கோ எந்தவித நட்டமும் ஏற்பாடாதென்றும் அந்த ஒடுக்கப்பட்ட கிராமத்தைத் தலைநிமிர அனுமதிக்க வேண்டும் என்றும் எழுதி அதில் வெற்றியும் கண்டார்.


இன்னும் அந்தக் கிராமத்தில் ஒடுக்கப்¬டவர்களினுள்ளே ஒடுக்கப்பட்டவர்களாக ஒரு குறிச்சியிருந்தது. இரண்டு, மூன்று குளிநிலத்¬திலேயே மூன்று நான்கு குடும்பங்கள் வாழும் அந்தக் குறிச்சியில் பதினாறு பதினேழு வயதிலேயே கலியாணம்செய்திடுவர்கள். பிள்ளைச் செல்வங்களும் மின்னலுக்கொன்று முளக்கத்திற்கொன்றாய் கீரியும் நாரியுமாகப் பொரித்திருந்து எப்பொழுதும் கலகலப்பும் குய்யோ முறையோ ஐயோ என்ற ஒலியோடும் ஓலத்தோடும் விளங்கிய அந்தக் குறிச்சியை மல்லிகைத்தெரு என்று அழைக்கும்படி வேண்டியிருந்தார்.


கந்தையாவின் அடுத்த சாதனை.- கம்பர்மலைக் கிராமத்திலேயுள்ள விவசாயிகளும் கூலித்தொழிலாளர்களும் தங்களின் சொந்தப் பிள்ளைகளைத் தாங்களே சுரண்டி உழைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வர்ப் பிள்ளைகளில் சொற்ப வீதத்தினர் மாத்திரம் பக்கத்தூர்களிலுள்ள ஆரம்ப பாடசாலைக்குச் சென்றனர். அவர்களைக் கூட நாலாம் ஐந்தாம் தரத்தோடு மறித்து விவசாயத்தில் பயன் படுத்தவதோ கூலி வேலைக்கு அனுப்புவதோ வழக்கமாக இருந்தது. பால்மணம் மாறாத அந்தப் பிள்ளைகள் தமது தாய் தந்தையாரோடு தாமும் கோழியோடு எழும்பி, கோட்டானோடு உறங்குமளவுக்கு பன்னிரண்டு பதின்மூன்று மணித்தியாலங்கள் வேலை செய்வார்கள். இதிலே மாடு, ஆடுகளைப் பராமரிப்பதும் அடங்கும். அந்த ஊர்மக்களுக்கு கந்தையா துணிந்து சொல்லியிருந்தார்;. இந்த ஊர்மக்களை மாதிரிச் சொந்தப் பிள்ளைகளைச் சுரண்டுவதைத் தான் காணவில்லையென்று. அந்த ஊர்மக்களுக்குக் கந்தையா சொல்லியதோடு பள்ளிகூடத்திற்குப் போகாமல் மறிக்க வேண்டாமென்று தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தார். இவையெல்லாம் கந்தையா தேர்தலில் வெல்வதற்கு முன்பு நடந்த சம்பவங்கள். கந்தையாவின் போராட்டம் வீண்போகவில்லை. கந்தையா அறுபதுகளின் முற்பகுதியில் மரணிக்க முன்னரே இந்தக் ’கம்பர்மலைக்’ கிராமத்தில் பலர் எஸ்.எஸ்.சிசித்தியெய்தி, அரசாங்க எழுது
வினைஞர்களானதோடு ஏச்.எஸ்.சி சித்தியெய்தி சர்வகலாசாலைக்கும் போயினர். ஏன் அறுபதுகளின் பிற்பகுதியில் வல்வெட்டி வல்வெட்டித்துறை, உடுப்பிட்டியிலும் பார்க்கக் கூடியவர்கள் இக்கிராமத்திலிருந்து சர்வகலாசாலைக்குப் போனார்கள் என்றால் மிகையாகாது. கந்தையா இதனோடு நிற்கவில்லை. அந்தக்கிராமத்தில் ஓர் மாதர் முன்னேற்றச் சங்கத்தையும் ஏற்படுத்தியிருந்தார். தான் தேர்தலில் வெற்றியீட்டியதன் பின் அந்த மாதர் முன்னேற்றச் சங்கத்தை கச்சேரியிற் பதிவு செய்து அதற்கு அரசமானியம் பெறும் வழிகளையும் செய்திருந்தர்ர். அதிலே பெண்களுக்கான தையற் கலை, நெசவு வேலை போன்றவை கற்பிக்க வழிதுறைகள் ஏற்பட்டதோடு தாய்மைப்பேறு பெறுபவர்க¬ளுக்கு அறிவுரைவழங்க பயிற்றப்பட்ட தாதிகள் மாதந்தோறும் வரும் வழிகளையும் செய்திருந்தார்.


அதனோடு அவர் நிற்கவில்லை. அங்கேயொரு முதியோர் கல்விக்கூடத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சித்திருந்தார். அது அந்த ஊர்மக்களின் பழமையை உடைக்க முடியாமையால் நிதர்சனமாகவில்லை.


கந்தையா தேர்தலுக்காக அரசியலுகு;க வரவில்லை. கொம்யூனிச அரசியல் செய்பவர்களின் சம்பிரதாயமும் அதுவாகாது. லெனின் காத்துமழைக்குக் தாங்கக் கூடிய கொள்கையை வைத்திருந்தவர். கொண்ட கொள்கையை நிர்மாணிப்பதற்காக களைக்காமற் சளைக்காமற் பாடுபட்டவர். அதிலே அவர் பரிபூணர ஆனந்தைத்தைக் கண்டவர். லெனின் 1917 புரட்சிக்கு முன் கால்நூற்றாண்டுகாலம் அரசியல் வாழ்க்கை வாழ்ந்தவர். அவரது 30 வருடகால சுறுசுறுப்பான அரசியல் வாழ்வில் ஆறு வருடங்களே ஆட்சியதிகாரத்தில் இருந்தவர். அதற்கு முந்திய இருபத்தினாலு வருடத்தில் அவர் ஓர் சட்டவிரோதி, நாடுகாடற்ற நாய், ஒரு தலைமறைவுப் போராளி, ஒரு அரசியற் கைதி, ஓர் அகதி. இந்த இருபத்திநாலு வருடங்களும் அவர் உளத்திருப்தியைத் தவிர வேறு ஒரு லாபத்தையம் எதிபார்க்கவில்லை. புரட்சிக்குச் சில மாதங்கள் முன்னதாக 1917 ஜனவரியில் லெனின் ஒரு பிரசித்தமான கூட்டத்தில் கூறினார்:-தானும் தன்னோடு இணைந்துள்ள தோழர்களும் ரசியப் புரட்சிவரை உயிர்வாழ மாட்டோமென்று. இதுதான் பொன். கந்தையாவின் சம்பிரதாயம். மேற் சொல்லிய லெனின் பற்றிய வசனங்களை இந்தக் கட்டுரை எழுதுபவரின் முந்திய எழுத்தறிவில்லாத கொம்யூனிசப் பரம்பரை வாய்மொழி வாய் மொழியாகப் பரப்பியிருந்தனர். இதை எழுதும் எனக்கு இத்தகவல்க¬ளைத் தந்த அழகலிங்கம் அவர்கள் கூறினார். தனக்கு முதன் முதலாக ஏங்கல்ஸ்சின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கூறியவர் கற்கண்டன் என்ற கிணறு வெட்டும் தொழிலாளி. 1958 கிணறு வெட்டுவதை விடுப்புப்பார்க்கச் சென்ற பொழுது காலை உணவருந்தும் ஓய்வு நேரக் கலந்துரையாடலில் அவர் ஏங்கல்ஸ்சைப் பற்றிக் கூறியிருந்தர். அந்த ஊரிலுள்ள ஒரு நாளும் பள்ளி;க் கூடம்போகாத கூலிவேலைசெய்யும் தொழிலாளர்கள் லெனினைப் பற்றி ரசியப்புரட்சியைப் பற்றி ரசியாவின் வாழ்நிலமைகளைப் பற்றி தொழிற்சாலைச் சௌகரியங்களைப் பற்றி கதைகதையாகச் சொல்லியதாக. அந்தப் படிப்பறிவில்லாத மக்களுக்கு கற்பூரபுத்தியும் போட்டோகிராபிக் ஞாபகசக்தியும் இயற்கை தந்த பாதுகாப்புப் பரிசாக இருந்தது.. அவர்கள் வாய்மொழி மூலமாக அனேக விடயங்களைக் கற்றிருந்தனர். பலர் தங்களின் பிள்ளைக¬ளுக்கு லெனின் ஸ்டாலின் என்றெல்லாம் பேர் வைத்திருந்தனர். ரசியாபோன்று தமது நாடும் ஒருநாள் வாழ்வதற்கு அனுகூலமுள்ள நாடாக வரும் என்பதிலே அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் இவையெல்லாவற்றையும் கட்டாயம் கந்தையாவிடமிருந்துதான் கற்றிருக்க வேண்டும். ஏனினில் சண்முகதாசன் 1965 இன் ;பின்புதான் அவ்வருக்கு வந்தார். அல்லது வி.பொன்னம்பலம் ஏ.வைத்திலிங்கம்; டொமினிக் ஜீவா போன்றவர்களிடம் கற்றிருக்க வேண்டும். இவர்கள் எல்லோரும் அக்கிராமத்தின் வழமையான விருந்தாளிகள்.


கந்தையா 1956 இல் தேர்தலில் வென்று பாராளுமன்றம் போனது ஓர் அரசியற் சகாப்தமாகும். தென்னிலங்கையில் இடதுசாரிகள் அதிகம் பேர் தேர்தலில் வென்று பாராளுமன்றம் போன சகாப்தமாகும். பாராளுமன்ற முதற் கூட்டத்திலேயே கந்தையா தன்னை அமிலப் பரிசோதனையால் உரைத்துக்காட்ட வேண்டியிருந்தது. ”தனிச்சிங்களச் சட்ட மசோதா” பாராளுமன்ற விவாதத்தில் கொல்வின் ஆர். டி.சில்வாவின் விவாத மொழி நடையோ கர்ணகடூரமான பொறிப்பறக்கும் விவாதமாகும் . கொல்வின். ..தாய்மொழி எங்கே?  இந்த நாட்டில் இரண்டுமொழியும் ஒரு நாடும் தேவையோ? அன்றேல் ஒரு மொழியும் இரண்டு நாடுகளும் தேவையோ?... என்ற கோடையிடிபோன்றதே கொல்வினின் பேச்சு நடையாகும். கொல்வின் அந்நாளில் மாக்சியத்திலிருந்து சீரழியாமல் இருந்தார்.


கந்தையா, இங்கிதமாகவும் இதமாகவும்; பேசுவதற்குப் பழக்கப்பட்டவர். மிருதுவான மொழிநடையே மனதைக் கௌவக்கூடியவை என்ற எண்ணங்கொண்டவர். சிந்தனைச் செறிவும் மக்கள் விசுவாசமும் இல்லாதவர்கள் தான் மேடைகளிலே வார்த்தைமொங்கான்களைத் துணைக்கழைப்பவர்களாகும்.


பொன். கந்தையா தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்துவிட்டு பண்டாரநாயக்கா கொண்டு வந்த எல்லா முற்போக்கு நடவடிக்கைளையும் ஆதரித்து வாக்களித்தார். பொன். கந்தையா தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராக் உரையாற்றுகையில் இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் குடிமகன் ஒருவன், தனது மனைவியுடன் அல்லது தனது பிள்ளைக¬ளுடன் அல்லது தனது உறவினர்களுடன் எந்த மொழியில் உரையாடுவது? என்பதைத் தீர்மானிக்கும்படி கோர வரவில்லை எனவும், பதிலாக இந்த நாட்டின் தமிழ்ப் பிரஜை என்ற வகையில், தனது அரசாங்கத்துடன் எந்த மொழியில் உறவாடுவது? என்பதைத் தீர்மானிக்கும்படி கோருவதாக மிகவும் நறுக்காகவும் மிக இங்கிதமாகவும் தெரிவித்தார். தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி பின்னாளில் தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் விரோதச் சட்டங்களை எதிர்த்து வாக்களித்த அதே வேளை யூ.என்.பியோ சிறீலங்கா சுதந்திரக் கட்சியோ கொண்டு வந்த எல்லாப் பிற்போக்கு நடவடிக்கைளையும் ஆதரித்தே வாக்களித்து வந்தனர். இவற்றில் ஆகக் கேவலமானது இலங்கையிலிருந்து பிரித்தானியக் கடற்படைத் தளத்தை உடனே எடுக்கவேண்டு மென்ற தீர்மானத்தை கந்தையாவைத் தவிர்ந்த எல்லாத் தமிழ் பாராளுமன்ற அங்கத்¬தவர்களும் எதிர்த்தே வாக்களித்தனர். அதனோடு நில்லாமல் உடனே மகாராணியைத் தலையிடும்படி தந்தியும் அடித்தனர். இந்த வருந்தி அடிமையாகும் கேவலமான செயலுக்காகவாவது நான் இவர்களை எதிர்த்துத்தான் தீரவேண்டும் என்று கந்தையா பலமுறை பேசியிருக்கிறார்.


பொன். கந்தையா பாராளுமன்றம் சென்ற ஒரு மாதகாலத்தினுள்ளேயே கம்பர்மலைக் கிராமத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் பிள்ளைகளும் போய் கற்கக்கூடிய சாதிபேதம் பாராத ஒரு பாடசாலையை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அந்தப் பாடசாலை கிடுகுக் கொட்டிலில் தொடங்கப்பட்டு அவ்வரிலும் பாக்கத்தூரிலுமுள்ள சொற்ப படித்த இளைஞர்கள், யுவதிகளை ஆசிரியர்களாகக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது. பிள்ளைக¬ளைப் பள்ளிக்கனுப்பாத தாய் தந்தையர்களைத் தங்கள் பிள்ளைகளை புதிதாகத் தொடக்கப்பட்ட பாடசாலைக்கு அனுப்பும்படி வேண்டியதோடு அப்பாடசாலையை எப்பாடுபட்டும் ஒரு பாடசாலைக்குரிய அத்தனை தராதரமும் உள்ளதாக ஆக்கித் தருவேன் என்று அவர் உத்தரவாதமளித்தார்:


இந்தப்பாடசாலை தொடங்கப்பட்டதுதான் தாமதம் அவ்வரைச் சூழவுள்ள நிலக்கிளார்களும் சாதிவெறியர்களும் யாழ்பாணக் குடநாட்டிலுள்ள தனியார் இந்துப பாடசாலைகளின் சொந்தக்காரான இந்து போர்ட் இராசரத்தினத்தைப் பிடித்து அந்தப் புதிதாகத் தொடங்கப்பட்ட பாடசாலைக்குப் பக்கத்தில் துரிதகதியில் ஒரு பாடசாலைக் கட்டிடத்தை சீமெந்தால் கட்டி ஓடு போட்டு இந்துப் பாடசாலை ஒன்றைத் தொடங்கினார்கள். இந்தப் பிற்போக்குப் பாடசாலை கட்டத்தொடங்கிய செய்தியை ஊரவர்கள் போய் கந்தையாவுக்குச் சொன்னார்கள். சொன்னவுடன் அந்தக் கணமே கம்பர்மலைக்கு வந்து புதிதாகக் கட்டப்படும் பாடசாலைக் கட்டிடத்தைப் பார்வையிட்டார். அவர் மறுநாளே கொழும்புக்குப் பயணமாகி அப்பொழுது கல்வி மந்திரியாக இருந்த டபிளியூ.தகநாயக்காவோடு கதைத்து யாழ் குடாநாட்டில் கோரத் தாண்டவமாடும் சாதி ஒடுக்குமுறை சுரண்டல் போன்றவற்றை விளங்கப்படுத்தி கொட்டில் பாடசாலையை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப் பண்ணியதோடு அந்தப் பாடசாலையைச் சீமெந்தால் கட்டுவதற்கும் அதற்கான நிலத்தைக் கொள்வனவு செய்வதற்கும் தளபாடங்கள் வாங்குவதற்கும் வேண்டிய நிதியையும் ஒதுக்குவித்தார். கந்தையா அதனோடு நிற்கவில்லை. பக்கத்தில் சாதிவெறியர்களினால் தொடங்கப்பட்ட இந்துப் பாடசாலையை அங்கீகரிப்பதையும் தடைசெய்தார். சாதிவெறியர்கள் எப்படி முயன்றும் அந்தச் சாதிபேத இந்துப் பாடசாலையை அரசாங்கம் அங்கீகரிப்பதைக் கந்தையா தொடர்ந்து தடைசெய்தார். ஈற்றில் இந்தப் பிரச்சினை பாராளுமன்றத்திற்கு எடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் திரு.எஸ் ஜே.வி. செல்வநாயகத்திற்கும் பொன் கந்தை¬யாவிற்குமிடையே நீண்டவிவாதம் ஏற்பட்டது.


பாராளுமன்றத்தில் கந்தையா:- கம்பர்மலை ஒர் இருண்ட ஒடுக்கப்பட்டவபர்களும் வறியவர்களும் வாழும் பின்தங்கிய கிராமம். இந்தச் சமுதாய அமைப்பின் இருண்டகோடி அங்கேதான் அஸ்தமித்துள்ளது. அங்கேயுள்ள மக்கள் அனைவரும் குப்பையிற் பிறந்து குப்பையில் வளர்ந்து குப்பையில் மடிபவர்கள். அங்கே வீதியோ ஒரு பெட்டிக்கடையோ கிடையாது. அங்கே இன்றுவரை படித்தவர்கள் என்று சொல்லப்படுவதற்கு ஒருவருமில்லை. அங்குவாழும் அதிகமான மக்களுக்குக் குந்தியிருக்கக் குடிநிலம் இல்லையாகும். உயர்சாதி நிலச்சுவாந்தர்களால் அக்கிராம மக்கள் தலைநிமிரவிடாமல் காலங்காலமாக நசுக்கப்பட்டே வந்தார்கள். அந்த மக்களை நாகரீக உலகத்திற்கு அழைத்து வருவதற்காக ஏற்கனவே ஓர் அரசாங்க பாடசாலை தொடங்கப்பட்டுவிட்டது.

அப்பொழுது செல்வநாயகம் அங்கே இரண்டு பாடசாலை இருப்பது அந்த மக்களுக்கு இரண்டுமடங்கு வாய்ப்புகளை அளிக்கும்தானே. அக்கிராமத்திற்கு அது இன்னும் நல்லது தானே என்றார். அதை மறுதலித்த கந்தையா இந்த இந்துப்பாடசாலை வந்தால் அந்த அரசினர் பாடசாலையின் வளர்ச்சி குன்றிவிடும். அது மாத்திரமல்ல அங்கே இந்தப் பாடசாலையை அங்கீகரிப்பதென்பது சாதிவெறியை அங்கீகரிப்பதாகி விடும். இறுதியாக கந்தையா, தந்தை செல்வநாயகத்திற்கு தனிப்பட்ட முறையிற் சொன்னார். ”திரு. செல்வநாயகம் அவர்களே நீங்கள் உங்கள் தொகுதியான காங்கேசன்துறைத் தொகுதியின் பிரச்சனைகளைக் கவனியுங்கள்.” பருத்தித்துறை தொகுதி மக்கள் தங்கள் தொகுதியின் சுகதுக்கங்களைக் கவனிப்பதற்கும் அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்குமாக என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆதலால் என்னுடைய தொகுதிப் பிரச்சனை எனக்குத் தெரியும்.


கந்தையா இந்தப் பாடசாலை தொடங்கப்பட்ட அனுபவத்தை யாழ் குடாநாடு எங்கணும் விஸ்தரித்தார். அவர் அன்று சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்று சொல்லப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் ஸ்தாபனத்தோடு சேர்ந்து இருபத்தொன்பது பாடசாலைளை உருவாக்கியிருந்தார்.
கந்தையாஅன்று சிறுபான்மைத்தமிழர் மகாசபை என்று சொல்லப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் ஸ்தாபனத்தோடு சேர்ந்து இருபத்தொன்பது பாடசாலைளை உருவாக்கியிருந்தார்.


இந்த இருபத்திஒன்பது பாடசாலைகளில் கிட்டத்தட்ட பதினாறு பதினேழு பாடசாலைகள் சிறுபான்மைதமிழர் மகாசபையின் நேரடி முயற்சில் உருவானவை என்ற வரலாற்றுப் பதிவினை ஈழத்து இடதுசாரிகளின் வரலாறெங்கும் காணலாம். அதனோடு அவரது பருத்தித்துறைத் தொகுதில் உள்ள எல்லாப் பாடசாலைகளுக்கும் வேண்டிய தளபாடங்கள் ஆய்வுகூட உபகரணங்கள் வேண்டிய ஆசிரியர்கள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்ததோடு நின்றுவிடவில்லை. ஒரு அரசினர் மத்திய மகாவித்தியாலயத்தையும் ஏற்படுத்தினார்.


இந்த அரசினர் மத்திய மகாவித்தியாலயத்தை பருத்தித்துறைத் தொகுதியின் மத்தியில் ஏற்படுத்தி எல்லா மக்களுக்கும் பிரயோசனப்படும் வகையில் ஏற்படுத்த முயற்சி எடுத்தார். அதை வல்வெட்டி, பொலிகண்டி, நெல்லியடி, உடுப்பிட்டி போன்ற இடங்களின் மத்தியில், எள்ளங்குளச் சுடலைக்கு மேற்கேயிருந்த தரிசு நிலத்தில் அமைப்பதற்கு அத்தொகுதியிலுள்ள சமூகஅக்கறையாளர்களேடும் கட்சித்தோழர்களோடும் தீர்மானித்து அந்தக் காணியை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு விண்ணப்பித்து அதைச் செயற்படுத்த முயன்று கொண்­டிருந்தார். மத்தியமகாவித்தியாலயத்தை மாத்திரமல்ல அதற்குப் பக்கத்தில் ஓர் அரசினர் தள வைத்தியசாலையையும் ஏற்படுத்த இருந்தார்.

இதைக் கேள்விப்பட்ட வல்வெட்டியைச் சேர்ந்த நிலக்கிளார்கள் அந்தத் தரிசு நிலத்தில் துரிதகதியில் ஒரு கட்டிடத்தைக் கட்டி அதற்கு ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பேரால் பொன்னம்பல சைவவித்திய­சாலையென்று பெயர்வைத்து திரு.ஜீ.ஜீ. பொன்­னம்பலத்தின் துணையோடு அதை

அங்கீகரிக்கவும் செய்துவிட்டனர். அந்தப்பள்ளிக்கூடத்தை அரசினர் பாடசாலையாக்குவதை தடுக்க அவர் முயற்சிக்கவில்லை. எனில் இந்துக்களின் உணர்வுகளைப் அது புண்படுத்துவ­தாகிவிடும் என்பதால் கந்தையா அம்முயற்சியை வேறுவழியிற்செய்ய யோசித்தார்.

ஈற்றில் உடுப்பிட்டி இமையாணன் பொலிகண்டிப் பிரதேசத்திலுள்ள நிலக்கிளார்களிடம் இப்படி ஒரு அரசாங்க மத்தியமகாவித்தியாலயத்தினை உருவாக்குவதற்கு காணிகளை வழங்கும்படி கேட்டிருந்தார்.

ஒருவரும் நிலத்தினை வழங்க முன்வராததால் மாற்றுவழியேதுமின்றி நெல்லியடியில் இருந்த தனது சொந்தத் தோட்டக்காணி முழுவதையும் இனாமாக வழங்கி நெல்லியடியில் அரசாங்க மத்திய மகாவித்தியாலயம் உருவாகுவதற்கு வழிசமைத்தார்.


அதுவே வடமாகாணத்திற் தோன்றிய முதலாவது அரசினர் மத்திய மகாவித்தியாலயமாகும். அது விடுதியில் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதியோடு கட்டப்பட்டது. அவ்வழியில் அந்நாட்களில் வெளிமாவட்டங்ளிலிருந்து வந்து பல சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தார். இச்செயற்திட்டங்களில் தேசியஒற்றுமையினை பேணலாம் என அவர் தீர்க்கமாக நம்பிச்செயற்பட்டார்.


அந்த விடுதிகளில் வடமாகாணத்தி­லேயுள்ள பின்தங்கிய பிரதேசத்திலேயுள்ள மாணவர்களும் புலமைப்பரிசில்கள் மூலம் விடுதியில் தங்கிப்படிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தார். அந்த நெல்லியடி அரசினர் மத்தியமகாவித்தியாலயத்தில் தீவுப்பகுதிகளிலிருந்து புலமைப்பரிசில்கள் பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து தங்கியிருந்து கல்வி கற்றனர். இவையெல்லாம் பாடசாலை தேசியமய­மாக்கலுக்கு முன்பு நடந்தவையாகும். கந்தையா போட்ட அத்திவாரத்தின் பலாபலனாலேயே வடமராட்சிப் பிரதேசம் கல்வியில் முன்னேறியது.

உடுப்பிட்டியில் கட்டப்படவிருந்த தளவைத்தியாசாலை காணிகிடைக்காத காரணத்தினால் ஈற்றில் மந்திகையில் கட்டப்பட்டது. அதுவே இன்று மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை ஆதார­வைத்தியசாலை ஆகும். இவ்வாதார வைத்தியசாலை இன்று வடமராட்சியில் இயங்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய வைத்தியசாலையாகும். இங்கே அமைந்துள்ள மனநோயாளர் பிரிவு கூட அவர் வகுத்து வைத்த திட்டத்தின் தொடர்ச்சியினால் பின்பு உருவானதாகும்.

கந்தையா நாளாந்த வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அரசியலையும் இணைக்கத்தெரிந்த மனிதராகும். அதற்கோர் உதாரணம். ஐம்பதுகளில் சீவல்தொழிலாளர்கள் கள் இறக்கக் கூடாது. கள் இறக்குவது சட்டவிரோதமாகும். கருப்பணியே இறக்கவேண்டும்.


கள்ளை முட்டிகளிலும் போத்தல்களிலும் கொண்டுபோன சீவல் தொழிலாளர்கள் பொலிசாலும் எக்சசை இன்ஸ்பெக்டர் என்று சொல்லப்படும் பாழை வெட்டுபவர்களாலும் பிடிக்கப்பட்டு கோட்டில் வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். கோட்டுத் தண்டத்தினைக் கட்ட இயலாமல் சிறை சென்றவர்கள் அனேகம். கள்ளைக் காவிச்சென்ற சின்னஞ் சிறார்கள்கூட பொலிஸ் நிலையங்களிலுள்ள கூடுகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கள்ளைக் காவிச் செல்லும்பொழுது தற்செயலாகப் பொலிஸ் வந்தாலோ கள்ளுமுட்டியைப் போட்டு உடைத்துவிட்டு சீவல்தொழிலா­ளர்கள் ஓடுவார்கள். ஆனால் சாராயக் குதங்களோ அனுமதி வழங்கப்பட்டு சட்டபூர்வமாக மதுக்கடை வியாபாரத்தினை நடத்திக் கொண்டிருந்தன. கருப்பநீர்தயாரிப்­புக்காக சீவுவது மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது. கருப்பனீர் சீவினால் ஒன்றைவிட்ட ஒருநாள் கருப்பனீரை பனைச் சொந்தக்காரான நிலக்கிழார்களுக்குக் கொடுக்கவேண்டும்.. கருப்பனீர் சீவுவதானது கருப்பனீரைக் கொண்டு வந்து காய்ச்சிப் பாணியாக்கிப் பனங்கட்டியாக்கி பனங்கட்­டியை சந்தையில் விற்றபின்னரே அவர்க­ளின் கையில் காசுவரும். அன்றுழைத்து அன்று வாயில்போடும் வறுமையில் வாடும் அந்த மக்களுக்கு கள்ளுச்சீவி விற்பதானது நாளாந்த உணவுக்கான ஜீவனமாகும்.
இந்தத் துன்பத்தை விளங்கிக் கொண்ட கந்யைh அவர்கள். அவர் பாராளுமன்றத்­தில் இந்தப் பிரச்சனையையும் அந்த மக்கள் படும் துயரத்தையும் எடுத்துச் சொல்லி நாலுபோத்தில் கள்ளினை வீட்டில் வைத்திருக்கலாம் என்பதனைச் சட்டபூர்வமாக்கினார்.

கந்தையா பாராளுமன்றத்தில் கொண்டு வந்த இந்தப் பிரச்சினை அடுத்த நாள் பத்திரிகைகளில் செய்தியாக வந்திருந்தது. அன்றிரவே உடுப்பிட்டிச் சந்தியிலுள்ள பிள்ளையார் கோவில் மதிலில் நளக்கந்தையாவே வருக! என்று சிவத்தபெயிண்டால் எழுதி அதற்குப் பக்கத்தில் அரிவாளும் சுத்தியலும் சின்னத்தைக் கீறியிருந்தார்கள் சாதிவெறித் தமிழர்கள். கந்தையா அவற்றைச் சட்டைசெய்பவரல்லர்.

ஒருநாளும் மற்றவர்களை ஓடுக்காத, ஒருநாளும் மற்றவர்களைச் சுரண்டாத, ஒருநாளும் மற்ற மக்களைக் கீழாகப் பார்க்காத அந்த மக்களின் பெயரால் அழைப்பதை அவர் ஒரு பெரிய கௌரமாகவே ஏற்றுக்கொண்டார்.

அதனோடு கந்தையா நிற்கவில்லை. அவர் பொலிகண்டியென்­னுமிடத்தில் கருபனீரிலிருந்து சீனிசெய்யும் தொழிற்சாலையை உருவாக்கினார். அதற்கான இயந்திரமானது அந்நாள் சோவியத்நாட்டிலிருந்து இறக்கப்பட்டதாகும். இது கந்தளாய் சீனித்தொழிற்சாலை ஏற்படமுன்னரே ஏற்படுத்தப்பட்­டதாகும்.

கந்தையா பாராளுமன்றம் சென்றவுடன் வடமராட்சிப் பகுதிக்கு ஒரு கிராமிய விவசாய ஆலோசகரை நியமித்தார். அவர் விவசாயிகளுக்கு உரம் பாவிப்பதையும் கிருமிநாசினிகளைப் பாவிப்பதையும் அறிமுகப்படுத்தினார். காண்டாவனம் போல் வெய்யில் கொழுத்தியெறியும் கெந்தக பூமியான யாழ்குடாநாட்டில் விவசாயிகள் பட்டை துலா மூலம் நீர் இறைத்தே விவசாயம் செய்தனர். நீர் இறைக்கும் இயந்திரங்களின் பிரயோகத்தையும் அதானல் கிணத்துநீருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்பதனையும் பெருத்த சிரமங்களுக்கு மத்தியில் வடபுலத்து விவசாயிகளுக்கு விளங்கப் படுத்தினார். முதன் முதலில் அந்நாளில் கொம்யூனிஸ்டாக இருந்து தன் பிள்ளைகளுக்கு லெனின் என்றும் ஸ்டாலின் என்றும் பெயர் வைத்த ஈஸ்வரலிங்கப் பெருமாள் என்பவரே முதலில் நீர் இறைக்கும் இயந்திரத்தை வாங்கிப் பாவித்தார். இரண்டொரு வருடங்களில் அனேக விவசாயிகள் நீர் இறைக்கும் இயந்திரங்களை வாங்கி உபயோகப்­படுத்தினர். அதனோடு அவர் நிற்கவில்லை. சந்தைப் படுத்துவதற்காக ஒரு வெங்காயச் சங்கத்தை ஏற்படுத்தினார். இந்த வெங்காயச் சங்கம் வெங்காயத்தைக் கொள்வனவு செய்து கொழும்புக்கு ஏற்றுமதி செய்தது. வடமராட்சி விவசாயிகள் பயிர்ச்செய்கைக் காலத்தில் செல்வந்தர்களிடம் வட்டிக்குக் காசைக் கடனாகப் பெற்று அறுவடைகாலத்தில் கடனை இறுப்பதானது விவசாயத்தின் மூலம் புதுக்காசைப் பழங்காசாக்குவ­தாகவே இருந்தது. இந்தச் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதற்காக வெங்காயச் சங்கத்தை பலநோக்குக் கூட்டுறவுச்சங்கமாக மாற்றி இந்தப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் பயிர்ச்செய்கைக் காலங்களில் விவசாயி­களுக்கு விவசாய சிறுதெiகைக்கடனை வழங்கி அக்கடனை அறுவடைக்காலங்க­ளில் வெங்காயம், நெல் போன்ற அறுவ­டைப் பொருட்களை கொள்வனசெய்து கடனை மீளப் பெற்றுக்கொண்டது. கந்தையா பொருளாதாரத்தை இலண்டனில் படித்தது மாத்திரமல்ல தனது முதுமாண்­பரீட்சையின் ஆய்வுக் கட்டுரையாக கூட்டுறவு முறை பற்றி சமர்ப்பித்ததோடு பலமுறை சோவியத் நாட்டிற்குச் சென்று அந்நாள் சோவியத்நாட்டில் அங்கே நடைமுறையிலிருந்த கூட்டுறவு முறைகளைக் கற்று வந்து அதை வடமராட்சியில் பரீட்சித்தர்ர்.

கந்தையா கொழும்பில் இருக்கும் நாட்களெல்லாம் கொம்யூனிஸ்ட் கட்சியின் தோட்டத்தொழிலாளர்களின் தொழிற்சங்கமான யூபி.டபிளியூ வின் காரியாலயக் கட்டிடத்திலே தங்கிநின்று தொழிற்சங்கக் கணக்குவழக்குகளைக் கவனிப்பதோடு தொழிற்சங்கங்களைக் கட்டிவளர்ப்பதிலும் பெரும் பங்கு வகுத்தார். அவர் சோவியத்நாட்டுக்கு அழைத்துச்சென்ற பதின்னாங்கு தமிழர்களில் தோட்டத்தொழிலாளர் தொழிற்சங்கவாதியான நாவலப் பிட்டியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரும் ஒருவராவர்.

இந்தியக் கொம்யூனிஸ்டான ப.ஜீவனந்தம்,மலேசியாவிலிருந்து வந்திருந்த தெல்லிப்பழையைச் சேர்ந்த மலேசியக்கனகசிங்கம் போன்ற தோழர்கள் இலங்கைக்கு வந்து தலமறைவு வாழ்வு வாழ்ந்த காலங்களில் அவர்களை தொட்டத் தொழிலாளர்களின் இல்லங்களுக்கு அழைத்துச்சென்று தொழிற்சங்கங்களை மேலும் அணிவகுத்தார். பாராளுமன்றத்­திலே நெற்காணிச்சட்டம் வந்தபோது மிகுந்த குதூகலிப்போடு பேசி அதை ஆதரித்து வாக்களித்த ஒரேயொரு தமிழ் பாராளுமன்ற அங்கத்தவராவார். பாடசாலைகளைத் தேசியமயமாக்கும் விவாதத்தின் போது மேலும் உற்சாகத்தோடு ஆதரித்துப்பேசினார். அதை ஆதரித்து வாக்களித்த ஓரே தமிழர் அவராகும். அதை எதிர்த்து வாக்கழித்த திரு செல்வநாயகம் அடங்காலான குறுந்தமிழ்தேசிய பாராளுமன்றவாதிக­ளுக்கு எதிராக வடமாகாணம் முழுவதிலும் எண்ணற்ற கூட்டங்களை அணிவகுத்துப் பேசி அவர்களின் பிற்போக்குத்தனங்களை அம்பலப்படுத்தினார். பாடசாலைகள் தேசியமயமாவதால் திரு செல்வநாயகத்­திற்கோ தமிழ்மக்களுக்கோ என்ன நட்டம் ஏற்பட்டது என்ற கேள்வியை ஒவ்வொரு கூட்டங்களிலும் கேட்டார்.

மீண்டும் பஸ் கொம்பனிகளின் தேசியமயமாக்கல் போன்ற எல்லா முற்போக்கு நடவடிக்கைகளையும் ஆதரித்து வாக்களித்தார்.

கந்தையா மிகவும் துணிந்த மனிதர். அவர்பேசும் கூட்டங்களை எண்ணற்ற தடவை குறுந்தமிழ்த்தேசியவாதிகள் கல்லெறிந்து குழப்பியிருக்கிறார்கள். அவர் அணுவளவும் பின்வாங்கியது கிடையாது.

அவரை எவராலும் ஆத்திரமூட்ட முடியாது. கல்லெறி விழவிழ எந்தவித விகாரமும் இல்லாமல் நா தளதளக்காமல் தொடர்ந்து மேடையில் பேசிக்கொண்டேயி­ருப்­பார். அவர் பயிற்றியெடுத்த தோழர்களும் கூட்டத்திலே எந்த வித சலனமும் இல்லாமல் அமைதியாக இருப்பர். அவர் அடிவாங்கவும் திட்டல்வாங்கவும் தன்னை இழக்கவும் தயாரான மனிதர். அவர் ஏழைமக்களோடு சேர்ந்து ஒன்றாகக் கூழ்காய்ச்சி குடித்த சம்பவங்கள் அனேகம்.

அவர்கூலித்தொழலாளர்களோடு சேர்ந்து கைப்பந்து விளையாடின சம்பவங்கள் அனேகம். அவர் மக்களோடு மக்களாக தானும் வாழ்ந்த சம்பவங்கள் அதிகம். கந்தையா கிராமங்களுக்கு வரப்போகிறார் என்று ஒரு தடவை கன்பொல்லை கிராம கரப்பந்தாட்டக் குழுவுக்கும் தென்இலங்கையிலுள்ள கம்பகா கிராமத்து சிங்கள கரப்பந்தாட்டக் குழுவுக்கும் சிநேகபு+ர்வமான கரப்பந்தாட்டப் போட்டியினை ஏற்பாடு செய்து சிங்களத்தோழர்களை கன்பொல்லைக் கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தாராம். சிங்களத்தோழர்கள் தங்களது வேகமான சேவிஸால் முதல் சுற்றில் வென்றுவிட்­டார்களாம். அடுத்த சுற்றில் கன்பொல்லைக் கிராம கரப்பந்தாட்ட அணியைச் சேர்ந்த லிங்கம், சதாசிவம் என்ற இரண்டு வீரர்கள் அவர்களைப்போலவே வேகமான கம்பகா சேவிஸினைப்போட்டு வென்றார்களாம். இந்த கரப்பந்தாட்ட வீரர் சதாசிவம் அவர்கள் வாழும் காலத்தில் நானும் அவரைக் கண்டு கதைத்து பழகியிருக்­கின்றேன். அவாpன் வயதினை ஒத்தவர்கள் அவரை கம்பகா என்று அழைப்பதையும் என் செவி வழி கேட்டிருக்கின்றேன். ஆனால் அவரை கம்பகா என்று அழைப்பதற்கான காரணத்தினை இக்கட்டுரை எழுதுவதற்­கான தகவல்களை சேகரிக்கும்போதுதான் கேட்டறிந்துகொண்டேன்.

அக்காலத்தில் கந்தையா அவர்கள் பெயர் மாற்றும் இயக்கம் ஒன்றினை நடத்தி வந்தார். அதன் வழியில் முதலில் ஒடுக்கப்பட்ட கிராமங்களின் பெயர்களையும் இக்கிராமங்களில் அமைந்துள்ள கீழ்ப்படுத்தப்பட்ட தொனியில் அமைந்திருந்த வீதிகளின் பெயர்களையும் மாற்றினார் என்பதனை இக்கட்டுரையின் தொடக்கத்­திலேயே குறித்திருந்தேன். இதன் தொடர்ச்சியாகத்தான் கன்பொல்லைக் கிராமத்தில் மூத்தண்ண என இக்கிராமத்து மக்களால் அழைக்கப்படும் க.இராசரத்தினம் அதிபர் (யா.கரவெட்டி ஸ்ரீநாரதவித்தியாலய ஸ்தாபகர்) அவர்கள். கல்லோடை என்னும் இயற்பெயரை கனுவில் என்ற அரசபதிவுப்பெயரையும் கொண்ட சிறுபான்மைத்தமிழர்கள் வாழும் கிராமத்தினை சாதிவெறியர்கள் கல்லோலை என அழைத்து வந்தபோது 1966ம் தீண்டாமைக் கெதிரான போராட்டகாலத்தில் கன்பொல்லையென உத்தியோகபூர்வமாக மாற்றினார். க.இராசரத்தினம் அவர்கள் கந்தையாவின் பாசறையில் வளர்ந்து வந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏலவே கந்தையா அவர்கள் இக்கிராமத்தில் கந்தன்,பூதன் போன்ற பெயர்களையும் நாகன் என்ற பெயரைக் கொண்டவரை சிவபாதமெனவும் ஆழ்வான் என்ற பெயரைக் கொண்டவரை தவராசா எனவும் இப்படியாக சாதிய அடையாளத்தினைக் கொண்ட பலரின் பெயரை உத்தியோகபூர்­வமாக மாற்றிக் கொடுத்தார்.

கந்தைய அவர்கள் வந்து இறங்கிய­துதான் தாமதம் திடீரென்று தன்னிச்சையாக மக்கள் அவரைச் சூழ்ந்து விடுவார்கள். சன நெரிசலில் அவரால் நடக்க முடியாது போகவே அவரைத் தோழில்தூக்கிக்­கொண்டு போவார்கள். அவருக்காக மக்கள் தினைக்கொழுக்கட்டை பனங்காய்பணியாரம் குரக்கன்கழி போன்ற எண்ணற்ற உணவு வகைகளைச் சமைத்துக்கொணடு வருவார்கள். அவரது கலந்துரையாடல் கூட்டங்களுக்கு மனைவி மக்களையும் கூட்டிக்கொண்டுவருவார்கள். கந்தையா அவர்கள் சிதறி உதிரியாக இருந்த தொழிலாளர்களை ஒரு பெரிய காந்தம் கவர்வதுபோலக் கவர்ந்து கொம்யூனிசத்­தைச் சூழ அணிவகுத்தார். அவர் மேடைகளிலே மணிக்;கணக்காகப் பேசுவார்: அவர் ஒரே விடயத்தைப்பற்றி வெவ்வேறு மேடைகளிலே பேசும்போழுது ஒவ்வொன்றும் புதுமையான பேச்சு நடையாக இருக்கும். அந்தப் பேச்சானது நாளாந்த வாழ்வுப் பிரச்சனைகளுக்கும் அரசியலுக்கும் பாலம்போடுவதாக இருக்கும். அவர் தனிச்சிங்களச் சட்டம் வந்தபிறகும் அச்சட்டத்தினை எதிர்த்த போதும் சிங்களமக்களோடு ஐக்கியப் படவேண்டும் என்ற அரசியல் தேவையை உரக்கக் கத்திக் கூறிய மனிதராவார்.

அவர் காலனித்துவ நாடான இலங்­கையில் ஜனனாயகப் புரட்சியின் கடமைகளை சீர்திருத்தவாதம் மூலம் செய்யலாம் என்ற கொள்கையை உடையவர். இ;துவே அவரது பலவீன­மாகும். அவர் வெகுசன ஆதரவோடு கொம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றினால் சோஷலிசநாடுகளின் உதவியோடு தொழிற்துறைகளைப்போட்டு முன்னேறிவிடலாம் என்ற எண்ணங்­கொண்டவர். உலகம் பரந்த கொள்கையான கொம்யூனிசத்தை மக்கள் கட்டாயம் பின்பற்றுவர்ர்கள் என்ற நம்பிக்கையில் அசையாத நம்பிக்கை கொண்டவர். அவர் மரணமான சிலநாட்களுக்குப் பிறகு அவரோடு கொம்யு+னிஸ்டாக இ;ருந்த வைத்திலிங்கம் என்ற தோழர்,

இவர் தொடர்ந்து கிராமசபைத்தேர்தலில் கொம்யூனிச வேட்பாளாரகத் தொடர்ந்து போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர். தானும் தற்கொலைசெய்து கொண்டார். அவர் தற்கொலை செய்யமுன்பு அரிவாழும் சுத்தியலும் நட்சத்திரச் சின்னத்தை சேட்டில் குத்தி போட்டோ எடுத்து விட்டு தான் மறுபிறவியில் சோவியத்நாட்டில் பிறப்பேன் என்ற மரணசாசனம் எழுதி வைத்துவிட்டு பொலிடோல் குடித்து இறந்துவிட்டார். அந்தப்போட்டோவும் அந்தப் படத்தையும் இப்பொழுதும் நாம் பார்வையிடலாம். காந்தையாவின் ஆளுமையையும் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் இதைப்போன்ற பல உதாரணங்களால் காட்ட முடியம். கந்தையா ஒரு உதாரணம். கந்தையா ஒரு சகாப்தம். அவர் உரைத்துப்பார்க்க முடியாத பொன்.

தொழிற்சாலைகளோ தொழிற்துறைப் பாட்டாளிகளோ தொழிற்சங்களோ இல்லாத பிரதேசத்தில் கொம்யூனிசத்திற்காகப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டவர். காலனித்துவ நாடாக இலங்கை இருந்ததால் அங்கே தேச உருவாக்கம் நடைபெற­வில்லை. தொழிற்துறைப் புரட்சி தீர்க்க வேண்டிய எந்தக் கடமைகளும் நிறைவேறவில்லை. முதலாளித்துவமே வரலாற்றால் தேசிய எல்லைகளையும் தேசிய எல்லைகளால் கட்டுப்படுத்த முடியாத உற்பத்திச் சக்திகளையும் படைத்தது. தேசப் பற்றையும் தேசிய எல்லைகளையும் சிதறப்பண்ணுமளவுக்கு உற்பத்திச் சக்திகள் வளர்வதாலேயே கொம்யூனிசம் வரவிருந்தது. தேசம் கடந்த தேசிய எல்லைக்குள் கட்டுப்படாத கொம்யூனிசத்­திற்காக முன்முயற்சிசெய்த ஓர் உதாரணத் தலைவன் பொன் கந்தையா ஆகும். அவர் விட்டுச் சென்ற சம்பிரதாயங்கள் இன்னும் வெளிக்கொணரப் படவில்லை. வாழ்வின் ஈற்றின் கொடிய புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். தனது இறுதிக் கணத்தில் தன் துணையாக வாழந்தவரையும் தனது கடசித்தோழர் சண்முகதாசன் அவர்களையும் சேர்ந்து வாழவேண்டுமென்று கேட்டுக்கொண்டவர். பொதுவுடமைக் கூறுகளில் குடும்பம் உதிரும் என்பதினை தன் இயல்பான வாழ்வில் எமக்கெல்லாம் காட்டிச்சென்றவர். அவரோடு போராட்டத்தில் வாழ்ந்த இன்னும் சிந்தனைத் திறன் பலவீனப்பட்டுப் போகாத டொமினிக் ஜீவா போன்றோரிடம் கந்தையாபற்றிய நினைவுகளை எழுதும்படி நாம் கேட்டுக்கொண்டால் நாம் எமது வரலாற்றுக் கடமையைச் செய்தவராவோம்.

தகவல்: அழகலிங்கம், மு.தவராசா(தவம்)
நன்றி :பறை : இதழ் 3,4இரண்டிலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது

No comments: