Wednesday, July 06, 2011

இயல் விருது வாங்க கனடா வந்திருந்த எஸ்.பொ விடம் ஒரு இடைமறிப்பு.

-கற்சுறா-

கற்சுறா:  2011 ஜனவரிமாதம்  நடந்த கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டினை எதிர்த்து முதற் கொள்ளி வைத்தவர் நீங்கள். கலை இலக்கிய ரீதியாக இலங்கைத் தமிழினத்தை அடிமைப் படுத்தும் ராஜபக்சேவின் திட்டம் தான் உலக எழுத்தாளர் மாநாடு என்றும் சிங்கள மொழி மேலாண்மையை தமிழர்களை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளச் செய்வதுதான் மாநாட்டின் ஒட்டுமொத்த நோக்கம் என்றும் சொல்லி அறிக்கை விட்டு மாநாட்டைப் புறக்கணித்தவர் நீங்கள். தற்போது மாநாடு முடிந்து இவ்வளவுகாலத்தின் பின் மாநாடு நடத்திவிட்டு தற்போது ஐந்து லட்சம் நட்டம் என்கிறார்கள். இவ்வளவு நட்டப்பட்டு ஏன் மாநாடு நடாத்துவான் என்று கிண்டலடிக்கிறீர்கள்.  மாநாடு நடத்தியவர்கள் அரசிடம் பணம் பெற்றார்கள் பதவி பெற்றார்கள் என்றும் அரசுதான் பின் நின்று நடாத்துகிறது என்றும் ஆரம்பத்தில் சொன்ன நீங்கள் தற்போது அதை மறந்து அவர்கள் பட்ட நட்டம் குறித்து பேசுகிறீர்கள். அண்மையில் அஸ்ரப் சிகாப்தீன் அவர்கள் மாநாட்டின் செயற்பாடுகள் குறித்து கொடுத்த பேட்டி பற்றி மிக மோசமாகக் கிண்டலடிக்கிறீர்கள். முஸ்லீம்களும் தமிழ்தானே பேசுகிறார்கள் பின் என்ன முஸ்லீம் மாநாடு என்று சொல்கிறார்கள் என குசும்பு பேசுகிறீர்கள்? தற்காலத்தில் உங்களைப் பிடித்து ஆட்டும் தமிழ்த் தேசிய வெறியும் புலித்தேசிய விருப்பும் தானே மாநாட்டை கண்மூடித்தனமாக எதிர்க்கவைத்தது?
எஸ்.பொ:  இதற்கு மிக இலகுவாகப் பதில் சொல்ல முடியும். ஆனால் அது நீண்ட பதிலாக அமையும். முருகபூபதி சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை செய்வதற்கு ஆரம்பித்த பொழுது அதற்கு ஆதரவாக முன்னோடியாக முன்னுக்கு நின்றவர்கள் இரண்டுபேர். ஒன்று லண்டனில் இருந்து ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் மற்றது அவுஸ்ரேலியாவிலிருந்து டாக்டர் நோயல் நடேசன். இந்த இருவரும் முள்ளிவாய்க்கால் போரின் பொழுது அரச சார்பாக கொழும்பில் செயற்பட்டவர்கள் என்பதற்கு முழு ஆதாரங்களும் என்னிடம் உண்டு. அதற்கு மேல் பிற் கட்டத்திலே ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ராஜபக்சே அரசாங்கத்தினுடைய நம்பிக்கைக்குரிய உளவாளி என்பதை “த கார்டியன்” பத்திரிகை நிரூபித்திருக்கிறது. முருகபூபதி இலங்கையில் வாழ்ந்த காலத்திலேயே தமிழ்த் தேசியத்தை நிராகரித்த ஒரு அரசியல் நிலைப்பாட்டுடன் வாழ்ந்தவர். அத்துடன் அவர் எக்காரணம் கொண்டும் தமிழீழப் பகுதிகளின் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள, பிறப்பாலும் உரிமையற்றவராவார். அடுத்து நான் இந்த மநாட்டினை எதிர்த்ததற்கு ஒரேயொரு காரணம் இந்த இரத்த வெடில் இன்னமும் மாறவில்லை. இந்த இரத்த வெடில் மாறாத நிலையில் இந்த மாநாட்டை அவசர அவசரமாகக் கூட்ட வேண்டாம் என்றுதான் என்னுடைய வேண்டுகோள் இருந்தது. நாம் ஊகித்தது நிச்சயமாக இராஜபக்ச அதற்கு உதவி செய்வார் என்று. ஏனென்றால் அவர்களுக்குச் சாதகமாக இந்த மாநாடு இருந்தது. மாநாட்டுக்குப் போய் வந்தவர்களிடமிருந்து அறிந்து கொண்டேன் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடைய ஆசீர்வாதக் கைகள் பின்னால் இருந்துகொண்டே இருந்ததை. ராஜபக்ஸவினுடைய பணபலத்துடன் நடைபெறுகின்றது என்ற குற்றச்சாட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காகச் சிலசமயங்களில் அந்த உதவியைப் புறக்கணித்துவிட்டு தங்களுடைய நேர்மையை நிலைநாட்டியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு.
அடுத்து இந்த முஸ்லிம்களது விடையம். நான் நம்புறன் இலங்கையில் முஸ்லீம்களுடைய எழுத்து வல்லபங்களை முன்னெடுப்பதிலே என்னைப் போன்ற வேறு எந்தத் தமிழனும் உயிர்ப்புடன் பங்களிப்புச் செய்ததில்லை. இதற்கு பாணந்துறை முகைன் சமீமைக் கேட்கலாம் அல்லது ஓட்டமாவடி எஸ். எல். எம். ஹனீபாவைக் கேட்கலாம். குச்சவெளி தொடக்கம் பாணும வரையிலே பரந்து வாழ்ந்துகொண்டிருக்கும் முஸ்லீம்கள் மத்தியில் வாழுகின்ற இலக்கியச் சுவைஞர்களைக் கேட்கலாம் எல்லோரும் இதனைச் சொல்வார்கள். “இஸ்லாமும் தமிழும்” என்று- நான் நினைக்கிறன் 1970களிலே எழுதியவன் நான். அதுதான் முதல் முதலாக இலங்கையிலேயே- ஈழநாட்டிலே முஸ்லீம்களுடைய தமிழ் நேசிப்பும் பங்களிப்பும் காத்திரமானதென்று. இந்த முறை கனடாவுக்கு வந்தபொழுது கூட அதில் இரண்டுபிரதிகள் கொண்டு வந்து விற்கப்பட்டுள்ளது. எனவே நான் முஸ்லீம் விரோதியாக இலட்சியத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொண்டவன் கிடையாது. நான் பெருமைப்பட்டு என்னால் வளர்க்கப்பட்ட இலக்கியகாரர்கள் முஸ்லீம்கள் மத்தியிலே இருக்கிறார்கள். ஆனால் இந்த ஒன்று கூடலுக்குக் குரல் கொடுத்து அந்தப் பணியிலே முன்னணியில் நின்ற எந்த முஸ்லீம் எழுத்தாளர்களாவது ராஜபக்சேவினுடைய புதிய தந்திரங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.
என்னவென்றால் இலங்கையில் இரண்டு மொழி. சிங்களம் அல்லது தமிழ். ஒரு முஸ்லீம் சிங்களத்திலே எழுதினால் அவன் சிங்கள எழுத்தாளன். ஒரு முஸ்லீம் தமிழிலே எழுதினால் அவன் தமிழ் எழுத்தாளன். ஆனால் ராஜபக்சே இதே முருகபூபதி எல்லோரையும் வைத்துக் கொண்டு சிங்கள தமிழ் முஸ்லீம் என்ற மூன்று பிரிவை உண்டாக்கி வைத்துக் கொண்டு மாநாட்டை நடாத்தியிருக்கிறார்கள். இந்த மூன்று பிரிவை தலை நிமிர்ந்து ஏற்று ஆமாம் சாமி போட்ட இந்த முஸ்லீம்கள் மேற்கொண்டும் தமிழர்களுடைய இலக்கிய நலன்களையும் இலக்கிய வீறுகளையும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய தார்மீக உரிமையை இழந்துவிட்டார்கள்.
மற்றது இந்த ஒன்று கூடலை இனிய உறவுகளின் ஒன்று கூடல் என்று ஒரு சொல்லாடலை முருகபூபதி அவர்கள் திரும்பத் திரும்பக் கையாண்டார். இனிநான் சொல்லப் போவதை நீங்கள் வெட்டலாம். வெட்டாமல் விடலாம். ஆனால் உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். முருகபூபதி என்னுடன் குழாயடிச்சண்டையில் ஈடுபட்டிருந்தபொழுது நான் ஏதோ யாருமேயில்லாது – சிட்னியிலே எனக்குத் தலமை தாங்க யாரும் இல்லாது செல்வாக்கிழந்திருந்த எஸ்.பொவினுடைய நூலை தான் வந்து அபயகரம் நீட்டி வெளியிட்டு வைத்ததாக எழுதியிருக்கிறார். நீ எவ்வளவு ஒரு அயோக்கியன். ஏனென்றால் அந்தக் கட்டத்திலேதான் நீ உன்னுடைய குடும்பத்தில் நடைபெற்ற சிக்கல்கள் மூலம் முடங்கி மூலையிலே இருந்தபொழுது என்னுடை மகன் என்னிடம் வந்து அப்பா முருகபூபதி அண்ணைக்கு நடந்தது very unfortunate. அவர் முடங்கிப்போய் மூலையிலே கிடக்கிறார்.அவரை எப்படியாவது வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும். அந்த வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது உங்கள் நூல் வெளியீட்டுடன் இருக்கட்டும். நீங்கள் ஏன் அவரைச் செய்யச் சொல்லிக் கேட்கக்கூடாது என்று சொன்னான். அதற்காக சிட்னியிலே என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஏதாவது ஒரு தலைவர் கிடைக்கவில்லை என்று சொல்லி உன்னை இரவல் விடுத்தேன் என்று நீ எழுதலாமா? இப்படிமகா அயோக்கித்தனமான பொய்யையும் பித்தலாட்டத்தையும் நேர்மையான எந்தவொரு எழுத்தாளனும் செய்யமாட்டான். இரண்டாவதாக தமிழை நேசிக்கிறேன் தமிழுடைய விழுமியங்களைப் பாதுகாத்துக் கொள்கிறேன் என்று சொல்லும் நீ இன்று அதிலே கூடத் தோல்வியடைந்து நீ உன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு இப்பவந்து, புலிகள் இல்லாத ஒரு கட்டத்திலே சர்வதேச தலமைத்துவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரேயொரு ஆசைக்காகத்தான் இந்த மாநாட்டிலே நீ முன்னின்று உழைத்ததாக நான் நினைக்கின்றேன்.
இன்னொன்று இந்த மகாநாடு நடந்ததிற்குப் பிற்பாடு அதில் பங்கு பற்றிவிட்டு இந்தியாவுக்கு வந்தவர்களில் ஓங்கி அந்த மாநாடு வெற்றியளித்துவிட்டது என்று சொன்னவர் என்னுடைய நண்பர் தோப்பில் முகம்மது மீரான் அவர்கள். இன்றுகூட இந்தியாவிலே பேசப்படுகிறது அங்கு அற்புதமான முஸ்லீம்களுடைய எழுத்தாளர் மாநாடு அங்கு நடந்தது என்று. அதற்கு மேல் அங்கு இந்திய சமூக எழுத்தாளர்கள் சார்பாக வந்தவர்களில் கொஞ்சம் பிரபலமாக இருந்தது சின்னப்பாபாரதி. அவர் வந்து விட்ட அறிக்கையைப் பாருங்கள். எந்த விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று சொன்னார்.
அடுத்ததாக என்னவென்றால் நான் புலி ஆதரவாளன் என்றவகையில் நிச்சயமாக நான் அதனை எதிர்க்கவில்லை. நான் எதிர்த்தது இலக்கியவாதி என்ற அதே கோதாவிலேதான். ஏனென்றால் இலக்கியவாதிகளுடைய அக்கறைகள் அரசியல் சார்ந்த அக்கறைகளாக மாறிவிடக்கூடாது. அரசியல் பேசுவது வேறு அரசியல் சார்புகொண்டிருப்பது வேறு. ஆனால் இலக்கியம் செய்யும் எழுத்தையும் அரசியல் ஆக்கிக் கொள்ளக்கூடாது. ஆனால் முருகபூபதி போன்றவர்கள் அதை அரசியலாக்கியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனை எதிர்த்தேன். முதற்தடவை கூடவேண்டாம் என்று சொன்ன பிறகு எந்தக் கட்டத்திலும் அதனை எதிர்த்து எந்தவித அறிக்கைகளும் நான் விடவில்லை. ஒதுங்கியிருந்தேன். மற்றவர்களுக்குத் தில் இல்லை. உண்மையாக கல் எறியமுடியாதவர்களாக திராணியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று முதல் கல் எறிந்தவன் நான். அதன் பிறகு இதை நடாத்து – நடத்தவேண்டாம் என்று பிரசாரம் செய்ததே கிடையாது. அதற்குப் பிறகு அந்தக் கூட்டத்திலே ஒவ்வொரு பேச்சாளனாக எழுந்து என்னை ஏசியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை விளங்கவேண்டும் நான் ஏச்சிலே பிறந்து ஏச்சிலே வளர்ந்து ஏச்சிலேயே வாழ்ந்து கொண்ருப்பவன். உங்களுடைய ஏச்சு என்னை ஒன்றும் செய்யமுடியாது. இங்கே மொன்றியலில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறீஸ்கந்தராசா என்னுடைய நல்ல நண்பன். இந்த முறை என்னை வந்து சந்திக்கவில்லை என்பது எனக்கு மகாதுக்கம். இல்லை எனில் இந்த சனிக்கிழமை மொன்றியலுக்குச் சென்றிருப்பேன். அவர் வந்து சொன்னார் ‘evrry speaker literally cruciffied you’  என்று. எவ்வளவு மகிழ்ச்சி. என்னத்துக்கு என்னைச் சிலுவையில் அறைய வேண்டும்? ஏன் நான் கடந்த 65ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருப்பது குற்றமா? இந்த 65 ஆண்டுகளில் இன்றும் ஈழத் தமிழர்களுடைய இலக்கியம் Archive இல்அழிக்கப்பட்டவிடும், அதைப் பாதுகாத்து நாளைய சந்ததிக்குக் கொடுக்கவேண்டும் என்று சொல்லி கடந்த நான்கு வருடங்களாக ஆறாயிரம் பக்கங்களை எடிற் செய்து கொண்டிருப்பது ஈழத் தமிழர்களுக்கு நான் செய்யும் துரோகமா?
அல்லது, இலத்தீன் அமெரிக்க இலக்கியம் தான் மூன்றவது உலக இலக்கியம் என்று இன்றும் நீங்கள் மயங்கிக்கொண்டிருக்கிறீர்கள். ஸ்பானிஸ் மொழியில் எழுதப்படும் இலக்கியம்தான் மூன்றாம் உலக இலக்கியம் என்று சொல்கிறீர்கள். ஆனால் ஆபிரிக்கக் கண்டத்தையும் தமிழ்நாட்டையும் இந்து சமுத்திரம் பிணைத்து வைத்திருக்கிறது. இந்திய நாட்டினுடைய தாக்கங்களும் கலாசாரங்களும் அங்கு இருக்கிறது. என்றைக்காவது இந்த ஆபிரிக்க நாட்டினுடைய இலக்கியங்களை தமிழ்படுத்த யோசித்திருக்கிறிர்களா? சிலசமயம் என்.கே. மகாலிங்கம் அவர்கள் இங்கிருந்து Things Fall Apart ஐ “சிதைவுகள்” என்று மொழிபெயர்த்திருக்கிறார்.Things Fall Apart என்றால் சிதைவுகள் அல்ல.
இவ்வளவும் நான் செய்ததற்கு நீங்கள் என்னைச் சிலுவையில் அறையத்தான் வேண்டும். ஆனால் தம்பிமாரே உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், சிலுவையில் அறைந்தால்தான் மீள உயிர்ததெழும் அற்புதம் நிகழும். இன்று அந்த அற்புதத்தைக் கனடாவில் நீங்களே பார்த்துக் கொண்டு அதன் சாட்சியமாக இருக்கிறீர்கள். எனக்கு மகிழ்சியாக இருக்கிறது.
எஸ்.பொ: நல்ல கேள்வி. அற்புதமான கேள்வி. இயல் விருதில் எனக்கு இரண்டு நிர்ப்பந்தங்கள் இருந்தது. ஒன்று அரசியல்ரீதியான நிர்ப்பந்தம். அந்த நிர்ப்பந்தம் என்னவென்றால் யூத இனம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக நாட்டுக்குநாடு அலைந்து, எத்தனையோ மில்லியன் மக்கள் இறந்து மொழியே இறந்த மொழியாகிப் போய் 2000வருடங்களுக்கப் பிறகு அமெரிக்காவில் வாழ்ந்த யூதர்களுடைய பணம், சாதுரியம் என்பனதான் ஒரு யூதநாடு இஸ்ரேல் தோன்றுவதற்கு சகாயித்தது. நான் வீராப்பாக இந்த இயல்விருதை வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். சொல்லியிருக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். நான் வேண்டாம் என்று சொல்லாததற்குக் காரணம் இந்த இயல் விருதை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு இன்று கனடாவில் வாழும் தமிழ் ஈழர்களுடைய உணர்வுகளையும் போக்குகளையும் நேரடியாக அறிந்து கொள்ள ஆசைப்பட்டேன். இரண்டாவது எனக்கு வேறு எந்த நாட்டிலும் உள்ளதிலும் பார்க்க கனடிய நாட்டிலே உறவுகள் அதிகம். இந்த உறவுகளின் பண உதவியுடன் 6000 பக்கங்களில் நீடிக்கக் கூடிய தமிழ் ஈழர்களுடைய இலக்கியங்களை பொக்கிசங்களை பிரசுரிக்க இருக்கிறேன்.
நான் கலகக்காரனாகவே வாழ்ந்து கொண்டிருப்பதனால் விருது வேண்டாம் என்று புறக்கணித்ததாக அர்த்தப்படுத்தி- இதற்காகத்தன் இவருக்கு சாகித்தியமண்டலப்பரிசு கொடுக்கவில்லை. இவர் கலகக்காரன் எந்தப் பரிசைக் கொடுத்தாலும் நிராகரித்து விடுவார் என்ற ஒரு அவச்சொல் வரக்கூடாது என்பதும் ஒரு காரணம்.
அடுத்து இதுவரை இந்த இயல்விருது கொடுக்கப்பட்டவர்களைப் பார்க்கிறேன். சுந்தரராமசாமி என்ன சாதித்தார்? வெங்கட் சாமிநாதன் என்ன சாதித்தார்? வெங்கட் சாமிநாதனது பங்களிப்பு என்ன? அவர் விமர்சனம் மட்டும் செய்தார். ஆனால் அது அல்லாத ஒன்றே ஒன்றுமட்டும், அந்தக்காலத்திலே அருமையான வலிமையான விமர்சன போசகத்தை கைலாசபதிக்கு எதிராக ‘மார்க்ஸின் கல்லறையிலிருந்து…’ என்று எழுதினார்.அதன்பிறகு இல்லை. சரி எங்களுடைய தாசிசியஸ் என்ன சாதித்தார்? இல்லாவிட்டால் இந்தப் பத்மநாபஐயருடைய சாதனைதான் என்ன? அவ்வளவும் எனக்குத் தெரியும். ஒரேயொருவர் இதற்கு முற்றிலும் தகுதியானவர் என்றால் அது கோவை ஞானி மட்டுந்தான். இந்தமாதிரியான கேவலங்களில் இருந்து கனடாவாழும் இலக்கிய சம்பந்தமான உயிர்ப்புக்கள் இன்னும் கொஞ்சம் சேட்டமாக வளரட்டும். இந்தக் கலகக்காரனுக்கு பரிசு கொடுத்து ஏற்று இங்கு வந்து கனடாவில் வாழக்கூடிய தமிழ் இலக்கிய முனைப்புகள் அனைத்தையும் கண்டு அளவளாவிச் செய்த பிறகு வேறும் என்னைப்போன்ற கலகக்காரர்களுக்கும் தகுதியுள்ளவர்களுக்கும் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை இந்த நபுஞ்சகர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதனைச்செய்துவிட்டேன். நீங்கள் ஆதங்கப்பட்டது நியாயம். பொன்னுத்துரையும் எஸ்.பொவும் விலை போட்டானோ என்று நீங்கள் ஆதங்கப்பட்டது நியாயம்.there are own Agenda .i have my agenda.   உங்களுக்குத் தெரியாது இயல் விருதில் பேச நான் தயார் செய்து கொண்டுவந்தது ‘கனடாவில் கதைத்தது’ என்று சொல்லி ஒரு பேச்சு. அதில் இரண்டு வரிகூட நான் அங்கு பேசவில்லை. எதையாவது இவன் உளறிவிடுவானோ என்று அவர்கள் எல்லோரும் பயந்து போயிருந்தார்கள்.  என்ர பயறு எல்லா இடமும் அவியும் தம்பி.
அடுத்தது உங்கள் ஒருதருக்கும் புரியாது… என்னுடைய புலிசார்பு நிலைப்பாடுஎன்பது , அவர்களது இயக்கத்திலே அவர்களுடைய செயற்பாட்டிலே நான் கொண்டிருந்த பற்றுதல் அல்ல. நான் உணர்வு பூர்வமாக எழுதுபவன். அநேகமாக கோட்பாடுகளை வைத்துக் கொண்டு எழுதியவனே அல்ல. கூடுதலாக உள்ளுணர்வுகளை வைத்துக் கொண்டு எழுதுபவன். அந்த உள்ளுணர்வு மிக மென்மையான மனித உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. என்னுடைய ஒரேயொரு வாரிசு மித்ராதான் அவன் ஒரு கவிஞனாகவே இருந்து என்னுடன் வாழ்ந்தவன். அவனை நான் இழந்த தவிப்பு உங்கள் ஒருவருக்கும் தெரியாது. என்னுடைய அந்த ஆதரவு நிலைப்பாடு என்னுடைய மகன் மீது கொண்டுள்ள பாசம் மட்டுந்தான். இது உண்மை.   நான் ஒருபோதும் பொய் சொல்பவனல்ல. பொய்யைத் தலைக்கள் கொண்டு திரிந்தால் என்னால் எழுதமடியாது.

No comments: