Thursday, July 14, 2011

நூல்வெளியீடு

 தீண்டாமைக் கொடுமைகளும் தீமுண்ட நாட்களும்
-தோழர்.யோகரட்ணம்-

கடந்த 03-07-2011 ஞாயிறு மாலை 3மணியளவில் தோழர் யோகரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்டநாட்களும்‘ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வானது  பாரிசின் மையப்பகுதியான லாச்சப்பல் எனும் இடத்தில் நடைபெற்றது.  பிரான்சில் இயங்கிவரும் ‘இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் அமைப்பாளர்களாலும், அவ்வமைப்பின் ஆதரவாளர்களின் பாரிய ஒத்துழைப்பின் மூலமாகவே நூல்வெளியீட்டு நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பலர் வருகைதந்திருந்தனர். பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் 25 வருடத்திற்கும் மேலான புகழிடவாழ்வின் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை அரசாங்கத்தின் மந்திரி ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்வாகவும் இந்நிகழ்வு அமைந்தது. பல சிங்கள சகோதர, சகோதரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதானது வரும் காலங்களில் சிங்கள, தமிழ் சமூகங்களுக்கிடையேயான உறுவுகளின் நெருக்கத்தை பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் இதைக்கருதக்கூடியதாக இருக்கின்றது. அதற்கான  ஓர் தொடக்கப்புள்ளியை பாரிஸ் மையத்தில் பதியவைத்த சம்பவமானது  வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் நிகழ்வாகவே இலங்கைத் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினராகிய நாம் கருதுகின்றோம்.
இந்நிகழ்வின்  வரவேற்புரையை விஜி அவர்கள் மேற்கொண்டார். சாதியம் குறித்தும், சாதியப் பாகுபாடுகள், போராட்டங்கள் குறித்தும் பல நூல்கள்  முன்பு பலரால் எழுதப்பட்டிருப்பதை நாம் அறிவோம். இருப்பினும்  தோழர் யோகரட்ணத்தால் எழுதப்பட்ட ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்டநாட்களும்‘ எனும் நூலானது  இதுவரை எழுதப்பட்டவைகளிலிருந்து வேறுபட்ட தன்மைகளுடன் எழுதப்பட்டிருப்பதை வாசகர்கள் நிச்சயமாக அறிந்து கொள்வார்கள். அந்தவகையில் இந்நூல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். என விஜி அவர்கள் தனது உரையை ஆரம்பித்து, சிறப்புவிருந்தினராக வருகைதந்த  சமூக இணக்கத்திற்கும் தேசிய மொழி அமுலாக்கத்திற்குமான மதிப்பிற்குரிய அமைச்சர் வாசுதேவநாணயக்காரா அவர்களை வரவேற்றதுடன் இந்நிகழ்விற்காக பிரத்தியேகமான அவரது  சமூகமளிப்பிற்கு நன்றியையும் தெரிவித்தார். அத்தோடு இந்நிகழ்விற்காக பிறநாடுகளிலிருந்து வருகைதந்தவர்களையும், சிங்கள சகோதர, சகோதரிகைகளையும் வரவேற்றதுடன் மற்றும் வருகைதந்த அனைவரையும் வரவேற்று  நிகழ்வை தொடர்ந்து நடாத்துவதற்கான தலைமையை தேவதாசன் அவர்களிடம் ஒப்படைத்து தனதுரையை முடித்துக்கொண்டார்.
தேவதாசன் அவர்கள் தனது தலைமை உரையில் வட இலங்கையில் நிகழ்ந்த சாதியப்போராட்டங்களின் பின்னணிகளையும் அதற்கு இலங்கையின் இடதுசாரிகளின் பங்களிப்புகள் குறித்தும் பேசினார். அந்த வரலாற்று உண்மைகளை மனதில் கொண்டுதான் தோழர் வாசுதேவநாணயக்காரா அவர்கள் இங்கு அழைக்கப்பட்டுள்ளார். அத்தோடு தோழர் யோகரட்ணம் அவர்களின் நிண்ட கால நண்பராக வாசுதேவநாணயக்காரா இருந்துவந்துள்ளதும் அவரது வருகைக்கான முக்கியத்துவமாக இருந்துள்ளதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து தேவதாசன் அவர்கள் பேசும்போது எமது சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சாதியத்தின் தோற்றுவாய்க்கான இந்து மதத்தின் பின்னணிகள் குறித்தும் விரிவாகப் பேசினார். அம்பேத்கர்,பெரியார் போன்றவர்களின் சிந்தனைகள் குறித்துப் பேசியதோடு அதற்கான சமூக இயக்கங்களின் அவசியம் குறித்தும் உரையாற்றினார். தமிழத்தேசிய அரசியல் தலைமைகள் தலித் சமூகத்தின் மேம்பாட்டிற்கு விரோதமாகவே செயல்பட்டு வந்தவர்கள் எனவும் குறிப்பிட்டார். தமிழர்களின் தானைத் தலைவர் என புகழந்து போற்றப்பட்டவர் திரு.செல்வநாயகம் அவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. தலித்துக்கள் மாவட்டபுர கந்தசுவாமி கோவில் பிரவேச உரிமைக்காக  போராடியபோது பல்வேறு அனர்த்தங்கள் நிகழ்ந்தது. அது குறித்து தலித் மக்கள் தானைத் தலைவரிடம்  உதவிகோரி முறையிட்டபோது அதுவந்து பாருங்கோ நான் வந்து ஒரு கிறிஸ்தவனாக இருப்பதால் இந்து மத விவகாரத்தில் என்னால் தலையிட முடியாது என வாதம் புரிந்தவர். இது  ஓர் உதாரணம் மட்டுமே இதுபோல் தொடர்ச்சியாக தமிழ்த் ‘தேசியத்தலைமகள்’ தலித் மக்களுக்கும் அவர்களது சமூக மேம்பாட்டிற்கும் விரோதமாகவே செயல் பட்டு வந்தவர்கள் எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
அடுத்ததாக நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. அமைச்சர் வாசுதேவநாணயக்காராவிடமிருந்து முதலாவது பிரதியை திரு.திருமதி சிறீபாஸ்கரன் தொமா அவர்கள் பெற்றுக் கொண்டனர். இரண்டாவதாக ஞானவடிவேல் அவர்களும், அதைத்தொடர்ந்து குமாரகுலசிங்கம் அவாகளும் நூல்களைப் பெற்றுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து அனைவரும் வாசுதேவநாணயக்காராவிடமிருந்து  நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.
அடுத்ததாக உரையாற்றிய இராகவன் அவர்கள் இந்நூலில் எழுத்துப்பிழைகள் அதிகமாக இருக்கின்றது. அத்தோடு ஓர் தகவல் பிழையும் இருக்கின்றது என்றார். தகவல்பிழையானது யாழ்ப்பாணத்தில் றோகண விஜவீரா கலந்து கொண்ட கூட்டத்தில் திரு அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதனும்,அவரைச்சேர்ந்தவர்களும் கல்லால் எறிந்து றோகண விஜயவீர அவர்களை காயப்படுத்தியது சம்பந்தமாக கூறப்பட்டது தகவல் பிழை எனக் குறிப்பிட்டார். மற்றும்படி இந்நூலில் உள்ள சிறப்பம்சமாக தான் காண்பது இந்நூலானது எந்தஒரு அரசியல் பின்னணியையும் முன்வைக்காத தன்மை என்றார். தோழர்களான செந்தில்வேல் அவர்களும் ரவீந்திரன் அவர்களும் எழுதிய ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்‘ என்ற நூலானது படிக்கும்போதே அரசியல் சார்புடன் எழுதப்பட்டுள்ளதை உணர்ந்து கொள்ளமுடியும். ஆனால் தோழர் யோகரட்ணத்தால் எழுதப்பட்ட ‘தீணடாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும் என்ற நூல் எவ்வித அரசியல் பின்னணியும் அற்றதென்பது ஓர் சிறப்பம்சம் என்றே கூறவேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து எம்.ஆர்.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். எம்மத்தியில் பேசப்பட்டுவந்த, இன்றும்  தொடர்ந்து பேசப்பட்டுவரும் தமிழ் தேசிய அரசியலின் அபாயங்கள் குறித்துப் பேசினார். பேசப்பட்டுவரும் தமிழ்தேசிய அரசியலானது  தனக்குள் இருக்கும் பல்வேறு இனங்களை, குறிப்பாக முஸ்லிம் மக்கள், மலையக மக்கள்,தலித் மக்கள், கிழக்குமாகாணமக்கள் போன்ற பிரிவினர்களை தொடர்ந்தும் ஒடுக்குவதிலும் ,ஏமாற்றுவதிலுமே கருசனையாக இருந்து வருகின்றது. மேற்குறிப்பிட்ட அனைத்துப் பிரிவினர்களையும் அவர்களின் சமூக பொருளாதார அரசியலில் மேம்பாட்டிற்கும் விரோதமாகவே தமிழ்த் தேசிய அரசியல் செயல்பட்டு வருகின்றது. இது வந்து ஒரு பயங்கரவாத அரசியலாக உள்ளது  என்பது உண்மைதான். இதை தோழர் டானியல் அவர்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் வந்துள்ளார். தோழர் அ.மார்க்ஸ் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘கே.டானியலின் கடிதங்கள்‘ என்ற நூலை வாசித்தவர்கள் அந்த உண்மையை புரிந்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அடுத்ததாக பேசிய எஸ்.எம்.எம்.பசீர் அவர்கள் தனக்கு யாழ்ப்பாணத்து சாதிமுறைகள் பற்றியும்,அங்கு நிலவும் சாதியப்பாகுபாடுகள் குறித்தும் பெரிதாக தெரியாது எனக்கூறினார். கிழக்குமாகணத்திலும் சாதிப்பாகுபாடுகள் பெரிதாக இருப்பதில்லை எனக்குறிப்பிட்டார். முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் சாதியம் குறித்து பேசியபோது சிலபாகுபாடுகள்முஸ்லிம் மக்கள் மத்தியிலும்  நிலவுகின்றதுதான். இருந்தபோதும் முஸ்லிம் மதமானது சாதியப்பாகுபாடுகளுக்கு எதிரான மதமாக இருப்பதால் முஸ்லிம் பண்பாடு,கலாச்சாரத்துடன் சாதியம் செயல்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை எனக்குறிப்பிட்டார்.

அடுத்ததாக சுவிசில் இருந்து வருகைதந்த திருமதி. பிரபா லோலன் அவர்கள் உரையாற்றினார். ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்டநாட்களும்‘ நூலில் உள்ள விடயங்களை அறிகின்றபோது நாம் கேள்விப்படாத பலவிடயங்களை இந்நூலூடாக அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. உலகத்திலே நிலவுகின்ற ஆதிக்க அதிகாரங்கள் யாவும் பல்வேறு முயற்சிகளின் ஊடாக தளர்ந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் எம்மத்தியில் நிலவும் சாதியம் மட்டுமே தளர்ந்து போவதற்கான எவ்வித வாய்ப்புகளுமற்ற ஓர் சிந்தனை முறையாக உள்ளது. மதம் மாறிவிடுதாலும் சாதியத்தில் எவ்வித மாற்றங்களும் நிகழ்ந்து விடாது என்றே நான் கருதுகின்றேன். என்று கூறியதுடன் நூலில் தோழர் யோகரட்ணம் அவர்கள் பெளத்த மதம் மாறியதற்கான செய்திகளையும், காரணங்களையும் விபரித்திருந்தபோதும் பிற்பாடு அதை தொடர முடியாது போனதற்கான காரணங்களை நூல் ஆசிரியர் விபரிக்காதது ஓர் குறைபாடாக தான் கருதுவதாகவும் கூறினார்.
இந்த நிகழ்வை தலைமை தாங்கி நடத்துகின்ற தலைவர் தேவதாசன் அவர்களுக்கும் மற்றும் இந்நிகழ்விற்கு கலந்து கொள்ள வந்திருக்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வணக்கம். இன்று வெளியிட்டுள்ள தோழர் யோகரட்ணம் அவர்களால் எழுதப்பட்டுள்ள ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும் ‘ எனும் நூல் குறித்துப்பேசுவதற்கு முன்பாக இரண்டு நிமிடம் நான் வேறு சில விடயம் குறித்தும் பேசவேண்டியுள்ளது. எனக்கூறியவாறு சோபாசக்தி அவர்கள் தனது பேச்சை ஆரம்பித்தார். இந்த லாச்சப்பல் என்ற இடத்தில பாருங்கோ உருட்டி உருட்டி அடிச்சவர்கள் புலிகள். நான்,தங்கம்,கலைச்செல்வன் இன்னும் பலரும் புலிகளிடம் அடிவாங்கியவர்கள். அப்படிப்பட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமான இந்த லாச்சப்பலில்தான் நாம் இன்று ஒரு சிங்கள அரசாங்க அமைச்சரை அழைத்து இந்த நூல்வெளியீட்டு நிகழ்வை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.  எமது புகலிட வாழ்க்கை வரலாற்றில் என்றுமே நடைபெறாத ஓர் சம்பவம் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. என்று கூறி ஒடுக்குமுறை என்பது எங்கு நடந்தாலும் எப்படி நடந்தாலும் அதைகண்டித்தே ஆகவேண்டும். தலித்மேம்பாட்டு முன்னணியானது ராஜபக்சவிற்கு நன்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கமுடியாது மிக மோசமான ஒடுக்குமுறையை மேற்கொண்டு வரும் இலங்கை அரசைகண்டித்தே ஆகவேண்டும். என்று மிக விரிவாகப்பேசி நூல் குறித்த அபிப்பிராயத்தையும்  கூறத்தொடங்கினார். நான் ஒரு எழுத்தாளன் என்ற வகையில் இந்நூல் மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது. வாசிப்பிற்கு சுவையாகவும் எழுதப்பட்டுள்ளது.  சலிப்பின்றி தொடர்ந்து வாசிக்கக் கூடியவகையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் நூலின் உள்ளடக்கங்கள் குறித்து பேசும்போது தோழர் யோகரட்ணம் அவர்கள் இந்நூலில் வலியுறுத்துகிறார், இலங்கையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சிக்காலத்தில்தான் தலித் மக்கள் பல்வேறு நன்மைகளைப் பெற்றார்கள் என்று. அது மிகத் தவறானது. எந்தவொரு சிங்கள அரசும் தலித் மக்களுக்கு உதவவில்லை. தலித் மக்களுக்கு ஓரளவிற்காவது பயன்படக்கூடிய சமூக குறைபாட்டு ஓழிப்புச்சட்டமே தமிழ் அரசுக்கட்சியின் தயவால்தான் பெறப்பட்டது. எனவே சிங்கள அரசு எதுவுமே தலித் மக்களின் மேம்பாட்டிற்கு உதவவில்லை. தலித் மக்கள் பெற்ற உரி்மையெல்லாம் அவர்களது போராட்டத்தின் பயனாக கிடைத்தவை என்பதுதான் உண்மை என விரிவாகப் பேசினார்.
நீங்கள் நன்றி எல்லாம் சொல்லக்கூடாது என சோபாசக்தியால் தலித் சமூகமேம்பாட்டு முன்னணிக்கு  வழங்கிய ஆலோசனைக்கு தேவதாசன் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்: சோபாசக்தி அவர்களே தனது பேச்சின் ஆரம்பத்தில் கூறினார் லாச்சப்பலில் எவ்வாறு நிலமை இருந்தது என்று.(உருட்டி உருட்டி புலிகள் அடித்ததை) அப்படியான இடத்தில் இன்று ஒரு சிங்கள அமைச்சரை அழைத்து கூட்டம் நடத்தப்படுகின்றதென்றும், இதுவந்து இதுவரையான  புகலிட வராற்றில் நடைபெறாத சம்பவம் என்பதையும் அவரே கூறியிருந்தார். எனவே இதுபோன்ற ஓர் மாற்றம் நிகழ்ந்ததற்கும்,அச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததற்கும் தான் நாம் நன்றி சொல்லவேண்டும் என்று கருதுகின்றோம். இது வந்து ஒரு மனிதனுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகளில் ஒன்று என்பது எமது அபிப்பிராயமாகவும் உள்ளது. என சோபாசக்தியின் ஆலோசனைக்கு தேவதாசனால் பதிலளிக்கப்பட்டது.
அடுத்ததாக எமது அழைப்பை ஏற்று வருகைதந்து சிறப்பித்த அமைச்சர் வாசுதேவநாணயக்காரா அவர்கள் உரையாற்றினார். அவர் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் கலந்து மிக வேகமாகப் பேசப் பேசப்பேச அனைத்தையும் மிக நேர்த்தியாகவும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியாவாறும் தமிழில் மொழிமாற்றிக் கொண்டிருந்தார் நண்பர் சந்தோஸ் அவர்கள்.
15வருடத்திற்கு முன்பும் நான் இந்த லாச்சப்பலில் நடைபெற்ற ஓர் சந்திப்பில் தோழர் யோகரட்ணத்துடன் கலந்துகொண்டிருந்தது தற்போது ஞாபகத்திற்கு வருகின்றது. இங்கு பேசியவர்களிடமிருந்து அரசுமீதான பல்வேறு விமர்சனங்கள் உள்ளதை நான் உணருகின்றேன். நான் இந்தச் சந்திப்பில் பேசவேண்டும் என நினைத்திருந்த விடயத்தைவிட இங்கு பேசியவர்களின் பேச்சுக்களிலிருந்து பேசலாம் என ஆசைப்படுகின்றேன். என தனது உரையை அமைச்சர் அவர்கள் ஆரம்பித்தார். நாம்  இனவாதத்திற்கும், சாதியப் பாகுபாட்டிற்கும் எதிரானவர்கள். சாதியம் குறித்தெல்லாம் காலம் காலமாக பேசப்பட்டுத்தான் வருகின்றது. அம்பேத்கர் அவர்கள் சாதியத்திற்கு எதிராக எவ்வளவுதான் அரசியல் யாப்புகளை தாயரித்தபோதும் இந்தியாவில் சாதியத்தின் கொடுமை அகன்றுவிடவில்லை. இதுவந்து சட்டங்கள் இயற்றுவதன் ஊடாக மாற்றக்கூடியதல்ல. சாதியம் குறித்த இதயபூர்வமான மாற்றங்கள் மனிதர்களிடம் ஏற்படவேண்டும்.
இவ்வாறான மனமாற்றங்கள் இந்தியாவிலுள்ள கேரளத்தில்  பலவிதத்தில் சாத்தியப்பட்டுள்ளது.இதற்கு பின்னணியாக இடதுசாரிகளின் அரசியல்  நடவடிக்கைகள் தான் காரணம் எனக்கூறலாம். இலங்கையில் மொழி அடையாளமும் சாதியடையாளமும் இலங்கையில் பல்வேறு சிக்கல்களை தோற்றுவித்துக்கொண்டே இருக்கின்றது.மொழியுடனான அடையாளம் பேணப்படாது போனால் தமது இனம் அழிந்துவிடும் என்பதான கருத்தும் நிலவி வருகின்றது. இவ்வாறான உணர்வு சிங்கள மக்கள் மத்தியிலும் ஆழமாக பதிந்துள்ளது.
அனைத்து இன மக்களும் பிறமொழிகள் மீதான மதிப்பை உணர்ந்து கொள்ளவேண்டும். எதிர்காலத்தில் இலங்கைவாழ் மக்கள் அனைவரும் மூன்று மொழிகளையும் கற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு நாம் அரசை வற்புறுத்தி வருகின்றோம். இது குறித்து வாசுதேவ நாணயக்காரா அவர்கள் தொடர்ந்து பேசுகையில், தமிழை சிங்கள மாணவர்களும் சிங்களத்தை தமிழ் மாணவர்களும் கற்பதற்கு மிகவும் ஆவலாகவே உள்ளனர். அதற்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஆசிரியர்களுக்கான பயிற்சி அளிக்கப்படவேண்டும் இதுதான் எமக்கு மிக சிரமமாக உள்ளது. நானும் எமது அரசாங்கமும் இவ்வாறான முயற்சியை விரும்பினாலும் இதற்கு எதிரான அரசியல் சக்திகளும் செயல்படுகின்றது. சில சிங்கள் பெளத்தவாத  சக்திகளும் இதற்கான எதிர்ப்பை   தெரிவித்தே வருகின்றது
தமிழ் மக்கள் பகுதியிலும் இதற்கு எதிர்ப்புகள் இருக்கவே செய்கின்றது. இருந்தபோதும் அனைத்து எதிர்ப்புகளையும் கடந்து இப்பணியை நாம் மேற்கொள்வோம் என உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.
தொடர்ந்து அமைச்சர் பேசுகையில் தேவதாசன் பேசியதிலிருந்து தான் பல விசயங்களை தெரிந்து கொண்டதாக கூறினார். சமூகத்தில் அரசியல் பிரச்சனை ,சமூகப்பிரச்சனை என இரண்டு பிரச்சனைகள் இருந்து வருகின்றது. அரசியல் பிரச்சனையானது சமூகப்பிரச்சனைகளை கண்டுகொள்ளாது கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசியமானது சமூக இயக்கங்களை ஒடுக்கிச் சின்னாபின்னமாக்கியதை தேவதாசன் சுட்டிக்காட்டிப்  பேசினார். உண்மைதான் மீண்டும் விட்ட இடத்திலிருந்து சமூக இயக்கங்களை  கட்டி எழுப்பவேண்டும். வடக்குத் தமிழ்த் தேசியவாதிகள் சாதியப்பிரச்சனையை எவ்வாறு அலட்சியப் படுத்தினார்களோ அதேபோல் இடதுசாரிகளின் அரசியல் செயல்பாடுகளையும் தமது தமிழ்த் தேசிய அரசியலுக்கு விரோதமாகவே கருதினார்கள். அவர்கள் மூடி அணைக்க முயன்ற சமூக   இயக்கமானது மீண்டும் துளிர்விட்டு பிரான்சு தேசத்திலுள்ள லாச்சப்பல் நகரத்தில் ஒருங்கிணைந்திருப்பதைக்கண்டு நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். எனது பிரான்ஸ் பயணம் குறித்து ஜனாதிபதி ராஜபக்ச அவர்கள் வினாவியபோது நான் கூறினேன், காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான பிரதிநிதிகளின் அவசிம் குறித்து பேசுவதோடு சர்வதேச ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாடுகள் குறித்தும் அறிந்து வரப்போகின்றேன் எனக் கூறினேன். எனவே தான் இறுதியாக ஓர்விடயத்தைக் கூறி எனதுரையை முடித்துக்கொள்கின்றேன். அதாவது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்துடன் எமது சமூ இயக்கப்போராட்டங்களையும் இணைத்துச் செயல்படவேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்பதோடு உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் நீங்கள் கேட்கலாம்  எனக்கூறி அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா அவர்கள் தனதுரையை முடித்துக்கொண்டார்.
அடுத்ததாக ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்டநாட்களும்‘ எனும் நூலை எழுதிய தோழர் யோகரட்ணம் அவர்கள்  ஏற்புரையாற்றினார்.சபை வணக்கத்தைத் தொடர்ந்து இத்தருணத்தில் எனது பெற்றோர்களையும் கொல்லப்பட்ட எனது நண்பனும், சகோதரனுமான மனிதநேயன் விநோதனையும் நினைக்கும்போது எனது மனம் குலைந்து போகின்றது என சற்றுக் குரல் தளர்ந்த நிலையில் தனது உரையை ஆரம்பித்தார்.
இந்த மண்டபத்திலே நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் எனது நூலை அறிமுகம் செய்து வைத்த நண்பர் முரளி அவர்களுக்கு நான் இத்தருணத்தில் நன்றி சொல்ல ஆசைப்படுகின்றேன். முன்பு பேசிய ராகவனது கேள்விக்கும் திருமதி பிரபா லோலனது கேள்விக்கும் பதிலளித்ததன் பிற்பாடு எனது உரையை தொடரலாம் எனக் கருதுகின்றேன். நூலில் நான் குறிப்பிட்டுள்ள றோகணவிஜயவீரா சம்பந்தப்பட்ட விடயத்தில் ராகவன் தெரிவித்ததுபோல் எவ்வித தகவல் பிழையும் இல்லை. நான் அச்சந்தர்ப்பத்தில் அங்கு நின்றவன் அச்சம்பவம் முற்றிலும் உண்மையானது. அதற்கான சாட்சிகளாக குஞ்சன் என அழைக்கப்படுபவர் தற்போது லண்டனில் வாழ்ந்து வருகின்றார். சார்ஜன் குணரட்ணா அவர்களும் எனது அருகில் நின்றவர். இது நான் அருகில் இருந்து பார்த்த  உண்மைச் சம்பவம். பிரபா அவர்கள் கேட்டுக் கொண்டது பெளத்த மதத்தில் இணைந்ததற்கான தகவல்கள் அதிகமாக இருப்பதுபோல் பெளத்த மதத்தை தொடர முடியாமல் போனதற்கான காரணங்கள் கூறப்படவில்லை என்பது. உண்மை தான் என்னால் கூட அது குறித்த காரணங்களை விளக்கமுடியாமலேயே இருக்கின்றது என விமர்சனங்களுக்காகன  தனது பதிலை முன்வைத்தார்.
இந்நூல் வெளிவருவதற்கான பெரும்பங்கினை ஆற்றிய விஜிக்கும் அசுராவிற்கும்  நான் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். உண்மையில் இந்நூல் வெளியீட்டு வைபவத்திற்கு நான் எஸ்ரி.பண்டாரநாயக்கா அவர்களைத்தான் அழைப்பதற்கு பெரிதும் விரும்பினேன். காரணம் நிச்சமாத்தில் நடைபெற்ற சாதிக்கலவரத்தின்போது தெற்கிலிருந்து வருகைதந்து சம்பவத்தை நேரில் கேட்டு அறிந்ததோடு, தலித் சமூகத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டவர். ஆனால் முதுமை காரணமாக அவரால் பிரயாணம் செய்யமுடியாதா காரணத்தாலேயே நான் சகோதரன் வாசுவை அழைத்தேன். நிச்சாமக் கலவரம் குறித்து எவ்வித கருசனையும் அற்று செயல்பட்டவர் அத்தொகுதியின் எம்.பியான அமிர்தலிங்கம் அவர்கள் என்பதை வரலாறு அறியும்.  இந்த நூலில் நான் எந்தவித கற்பனைச் சம்பவங்களையும் பதிவுசெய்யவில்லை. அதுமட்டுமல்லாது எந்தவித அரசியல் பின்னணியும், அரசியல் நோக்கமும்  இல்லாத ஓர் பதிவு என்பதையும் வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம் என்பதோடு நூலில் எழுதப்பட்ட சில பகுதிகளையும் குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்தார். வழமையாகவே தோழர் யோகரட்ணம் அவர்கள் பேசத்தொடங்கினால் ஒரு மணித்தியாலத்துக்கு குறையாமல் பேசக்கூடிய ஆற்றல் உடையவர். ஆனால் இந்த நிகழ்வில்தான் அவர் மிக,மிகக் குறைந்த நேரத்தில்  பேசியது.
அடுத்ததாக நிகழ்விற்கு சமூக அளித்தவர்களுக்கும், நிகழ்விற்கு பல வகையிலும் உதவியவர்களுக்கும் சுந்தரலிங்கம் (தங்கம்) அவர்கள்  நன்றி கூறினார். அதைத்தொடர்ந்து உரையாடல் நிகழ்ந்தது. இடதுசாரிகளின் குறைபாடுகள் குறித்து சோபாசக்தி பேசியது தவறானது என்பதோடு இடதுசாரிகள் ஆற்றிய பணிகள் குறித்து தோழர் வி.ரி இளங்கோ அவர்கள் சில தகவல்களை குறிப்பிட்டு பேசினார்.
அரசை விமர்சித்து செயல்படும் இணையம் ஒன்றை அரசு தடைசெய்ததானது ஓர்  ஜனநாயக விரோதமாக இருக்காதா என   லக்சுமி (உயிர்நிழல்)அவர்கள் வாசுதேவநாணயக்காராவை நோக்கி கேள்வி எழுப்பினார். நீங்கள் குறிப்பிடும் இணையம் பற்றிய தகவல் தான் அறியவில்லை என்றும் இருந்தபோதும் தொடர்ந்தும் பல அரச எதிர்ப்பு இணையங்கள் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. நீங்கள் குறிப்பிடும் இணையத்திற்கு அவ்வாறு ஏதும் நடந்திருந்தால் அது பாதுகாப்பு இலாகாவுடன் சம்பந்தப்பட்ட நிகழ்வாக இருக்கலாம் என வாசுதேவநாணயக்காரா அவர்கள் பதிலளித்தார்.
அவசர கால நிலை தொடர்ந்தும் நீடிப்பதற்கான அவசியம் என்ன என்ற கேள்வியை ராகவன் அவர்கள் கேட்டார்.  அதற்கும் பாதுகாப்பு இலாகாவும்,வேறு அரசியல் பிரிவினரின் இணக்கப்பாடும் இல்லாததன் காரணமாகவே அவசரகால நீடிப்பிற்கு காரணம் எனவும் அமைச்சர் பதிலளித்தார்.
சினில் சாந்த என்ற சிங்கள பார்வையாளரும் உரையாடலில் பங்குபற்றினார். வாசுதேவநாணயக்காராவின் உடல் நிலை காரணமாகவும், நேரம் போதாமையாலும் உரையாடல் நீண்டநேரம் நடைபெற முடியாது போய்விட்டது.
இத்தருணத்தில் இந்நூல் வெளிவருவதற்கு சிரமம்பாராது பெரும் பங்களிப்பு நல்கிய தோழர் நீலகண்டனையும் ,அமுதாவையும் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.
-இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணி- 
நன்றி: தூ

No comments: