Wednesday, April 22, 2015

தீண்டாமை ஒழிப்பு செயலர் சி.புலேந்திரன் அவர்கள் நினைவு

சி.புலேந்திரன் அவர்கள் அண்ணன் அல்ல தோழர்
-கரவைதாசன்-
தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு அமரர் கம்பர்மலை தங்கவடிவேல் மாஸ்ரருடன் இணைச்செயலாளர் நாயகம் பொறுப்பேற்று மக்களைத் தீண்டாமைக்கெதிராக பாசறை அமைத்துச் செயற்பட்டு வந்தார்.

கருப்பாகிக் கிடந்த ஈழ மண்ணில் எழுந்து பழுத்து விழுந்த மற்றொரு விதை தோழர் சி.புலேந்திரன் அவர்கள். தொடர்ச்சியான போராட்ட குணமும் சமத்துவத்துக்கான முன் ஏற்பாடுகளையும் கொண்ட கன்பொல்லைக் கிராமத்தில் ஒரு தலை முறையின்  பழுதற்ற விதையாக வந்தவர். 

இனத்துவப் புனைவுகளின்  தொடர் முரண்பாடுகளுக்கிடையேயும் சரியான அரசியல் திசை நோக்கிய பயணம் அவரிடம் இருந்தது. 

மதம் ஒன்று, மொழி ஒன்று, கடவுள் ஒன்று என்ற பம்மாத்துக்கிடையே பலம் தின்று கொட்டை போட்ட மூத்தசந்ததி பட்ட அவலங்கள். சிறை வதைக் கொடுமைகள் இவர் போன்ற தோழர்கள் சரியான அரசியல் தெரிவினைக் கொள்ளும் வாய்ப்பினை இவர்களுக்கு வழங்கிற்று. இடதுசாரிய பாரம்பரியம் மிக்க குடும்பப் பின்புலம் இவருக்கு ஏற்பாக அமைந்திருந்தது. இவரது தந்தையாரும் சிறிய தகப்பனார் ஆ.சிவகுருவும் மூத்த தோழர்களின் வரிசையில் இன்றும் நினைவுகொள்ளத்தக்கவர்கள்.

பழைய உலகம் மறைத்து புது  உலகின் இக்காலத்தின் குறியீடாக இவர் வந்தார்.

தனது இடை நிலைக் கல்வியினை கரவெட்டி திரு இருதயக் கல்லூரியல் பெற்ற இவர் இலங்கை அரச கட்டடத்தினைகளத்தில் ஊழியராக கடமை புரிந்தார். பொருளாதார மேம்பாட்டுக்காக ஈராக் சென்று பொருளீட்டி நாடு திரும்பியவர். தனது வழி நடத்தலில் தனது பிள்ளைகளையும் சகோதரியின் பிள்ளை களையும் எமது கிராமத்தில் பட்டதாரிகளின் வரிசையில் நிரல்ப்படுத்தியவர்.

தொடர்ச்சியான சமூக அக்கறை கொண்டவராகத் தனது செயல்த் திறனை நெறிப்படுத்திக் கொண்டே வாழ்ந்து வந்தார். ஒரு பொதுவுடைமைக் கட்சியாளராக தமிழ்ப்பண்பாட்டுத் தளத்தினிலே சமத்துவத்துக்கான விடுதலைப் போராளியாக பிறழ்  தவறாத போக்கினை இவரிடையே  நாம் காணலாம்.  கோட்பாட்டுரீதியாக பொதுவுடைமைக் கட்சியானது சர்வதேசியரீதியில் பிளவு பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தோழர் நா.சண்முகதாசனின் சரியான பாதையினை தன்கைப்பைடுத்திக் கொண்டு அவரது அரசியல்ப் பயணத்தில் பயணித்து வந்தவர்.

கன்பொல்லைக் கிராமத்தில் கனுவில் சனசமூக நிலையம் கிராம முன்னேற்றச் சங்கம் போன்ற நிறுவனங்களிலும் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களிலும் ஒரு வழிநடத்துனராக  களப்பணியாளராக  இருந்து செயற்பட்டவர். அதுவன்றி இடதுசாரிய கட்சியாளர்களின் தேசிய கலை இலக்கியப்பேரவை, நெல்லியடி அம்பலத்தாடிகள் போன்ற அரசியல் கலை இலக்கிய மன்றங்களிலும் கன்பொல்லை கலைமகள் கலாமன்றத்திலும் கலை இலக்கிய செயற்பாடுகளில் தன் பங்காற்றியவர்.

தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் போன்ற வெகுசன அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு அமரர் கம்பர்மலை தங்கவடிவேல் மாஸ்ரருடன் இணைச்செயலாளர் நாயகம் பொறுப்பேற்று மக்களைத் தீண்டாமைக்கெதிராக பாசறை அமைத்துச் செயற்பட்டு வந்தார்.

எமது கிராமத்தில் நான் மாக்சிய வழியில் எனது அரசியல்ப் பயணத்தினைத் தொடர வேண்டும் என்பதில் விருப்புக் கொண்டவர்களாக  இருந்தவர்களில் இவரும் ஒருவர். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது இவரும்  நெல்லியடி சிவம் (தேடகம் கனடா) அவர்களும் இயங்கியல் பொருள்முதல் வாதம் (தமிழ்ப் பிரதி) நூலினை எனக்கு அன்பளிப்பாகத் தந்து நான் அவ்வழியில் தெளிந்த சிந்தனை பெற வேண்டும் என்பதில் விருப்போடும் அக்கறையோடும் அரசியல் உரையாடல்களை மேற்கொண்டவர்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக நான் இலங்கை வந்திருந்தபோது என்னைச் சந்தித்துக் கொண்டு..... நான்கைந்து மணித்தியாலங்களாக அன்றைய அரசியல் நிலை பற்றியும் கிராமத்தின் முன்னேற்றம் பற்றியும் உரையாடினார்.

நாம் உறவினர்களாக இருந்தபோதும் உறவு பற்றி சாட்டுக்குக் கூட அவர் பேச்சினை எடுக்காது பொது விடயங்களில் அவர் பேச்சு அமைந்தது. அஃது அவர் தொடர்ச்சியான அரசியல் செயற்பாட்டுடன் இருக்கிறார் என என்னை எண்ண வைத்தது. அரசியல் மதிப்பீடுகளுக்குள்ளேயே நின்று திளைக்கும் அவரின் பேச்சும் செயற்பாடும் முதலாளித்துவ அமைப்பில் அதன் அசைவின் இயங்குதலில் சங்கிலிப் பின்னலாக கொழுவி வைக்கப் பட்டிருக்கும் மதம், சாதி, பால், நிறம் தொடரின் அடிப்படை மூடத்தனத்தினை  கண்டறிந்து அதனைத்  தவிர்க்க வல்ல அரசியலையும் அதன் தொடர்ச்சியினையும் தொடர்ந்த தோழருக்கு என் செவ்வணக்கம்.

அவரது 31ம் நாள் நினைவு மலருக்கு எழுதப்பட்டது 

No comments: