-பி.சம்பத்-
இதுவரை உள்ள மனிதகுல வரலாறு
முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே (ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயம் தவிர)
என பிரகடனப்படுத்துகிறது மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை. இது இந்தியாவின்
வரலாறு மற்றும் சமூக அமைப்புக்கும் பொருந்தும். உலகின் பல்வேறு நாடுகளின் சமூக
அமைப்பும், வர்க்கப்
போராட்டங்களும் ஒரே மாதிரியானதாக இல்லை. இந்த அம்சங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும்
பிரத்யேகத்தன்மைகளும் பின்னணியும் உண்டு.
இந்தியாவின் பிரத்யேகத்
தன்மை:
ஒவ்வொரு நாட்டின்
பிரத்யேகத்தன்மையை சரிவர ஆய்வு செய்து புரிந்து கொண்டுதான் அந்நாடுகளின் நடைபெற
வேண்டிய வர்க்கப் புரட்சியையும், அதற்கான பாதையையும் அந்நாட்டின் புரட்சிகர இயக்கம்
தீர்மானிக்க வேண்டுமேயொழிய மார்க்சிய கோட்பாடுகளை இயந்திர பாணியில்
அமல்படுத்துவதன் மூலம் அல்ல.“திட்டவட்டமான நிலைமைகளை
திட்டவட்டமாக ஆய்வு செய்து திட்டவட்டமான முடிவுகளுக்கு வர வேண்டும்” என்றே மார்க்சியம் நமக்கு போதிக்கிறது.
இந்த அடிப்படையில் இந்தியச்
சமுதாயத்தை ஆய்வு செய்தால் அதன் பிரத்யேகத் தன்மைகளில் ஒன்றுதான் இங்கு நிலவும்
சாதியமைப்பு. இச்சாதியமைப்பையும் இதோடு இங்கு நிலவும் மூடப்பழக்க வழக்கங்கள்
மற்றும் பத்தாம்பசலித் தனமான சம்பிரதாயங்களையும் எதிர்த்துப் போராடாமல் – அவ்வாறு
போராடி முறியடிக்காமல் இங்கே புரட்சிகரமான சிந்தனைகள் மற்றும் இயக்கம் வளர்வதோ
அல்லது சமுதாய மாற்றத்திற்கான புரட்சி வெற்றிகரமாக நடைபெறுவதோ சாத்தியமல்ல
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
