-ந.
இரவீந்திரன்-
மனித சமூகம் பெற்று வந்த வளர்ச்சிச் செல்நெறியின்
வெளிப்பாடாக உற்பத்தியானது கலை. அதன் எழுத்து வடிவமாய்ப் பரிணமித்த இலக்கியம்
குறித்து பல்வேறு கோட்பாடுகள் உண்டு. மனிதப்படைப்பு என்பதைக் கடந்து உள்ளொளி
வாயிலாகக் கடவுள் வெளிப்படுத்தும் கொடையெனக் கொள்வோரும் உளர். மனுக்குலம்
எதிர்நோக்கிய பிரச்சனைகளை மக்கள் போராட்டங்கள் வாயிலாக தீர்க்கும் மார்க்கம்
கண்டறியப்பட்டபோது, அத்தகைய
இயங் காற்றல்களின் செயல்திறன் கலை - இலக்கியத்தின் பேசு பொருளான போது, இவை அருள் கொடைகளல்ல
சமூகம் உற்பத்திசெய்கின்ற இன்னொரு வடிவமே எனக்கண்டறிய இயலுமாயிற்று.
சமூக மாற்றத்துக்கான அந்த இயங்காற்றலில் பங்கேற்று
அதனைக் கோட்பாட்டுருவாக்கம் செய்த மார்க்ஸியத்தின் மூலவர்களான மார்க்சும்
ஏங்கெல்சும் இலக்கியம் குறித்தோ அதனைத் திறனாய்வு செய்யும் முறையியல்கள் பற்றியோ
தனியாக எழுதி வைக்கவில்லை. எரியும் பிரச்சனையாகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகள்
எழுச்சிகொண்டு இயங்கிய அனுபவங்கள் சார்ந்த எழுத்தாக்கங்களே அவர்களது
முழுமைப்பணியாக இருந்தன. அத்தகைய எழுத்துகளில் வெளிப்பட்ட கருத்துகள் பின்னால்
தொடர்ந்த மார்க்சியச் சிந்தனையாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தன. கலை -
இலக்கிய - சமூக விஞ்ஞான நூல்களைக் கற்றுத்தேறி மார்க்சிய இலக்கியத் திறனாய்வை
அறிவதென்பதை விட, மார்க்சையும்
ஏங்கெல்சையும் போன்றே சமூக மாற்றப் போராட்டங்களில் இணைந்து இயங்கியவாறே ஏனைய
மார்க்சியச் சிந்தனையாளர்களும் மார்க்சியத்தையும் அதன் இலக்கியக்கோட்பாடுகளையும்
செழுமைப்படுத்தினர்.
அந்த வகையில் பிளெக்கனோவ், லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின், மார்க்சிம்கோர்க்கி, பெஞ்சமின், ப்ரெக்ட், லூகாக்ஸ், அல்தூசர், ஜோர்ஜ் தாம்சன், ரேமன்ட் வில்லியம்ஸ், பியோமா ஷே, கிறிஸ்டோபர் காட்வெல், லூசியன் கோல்ட்மான்
ஆகியோரின் பங்களிப்புகள் கவனிப்புக்குரியன. இன்னும் லூசூன், மாஒசேதுங், கோசிமின், பிடெல் காஸ்ட்ரோ என
இந்தப்பட்டியல் மிக நீளமானது என்ற போதிலும் மேற்குறித்த செயற்பாட்டாளர்களும்
சிந்தனையாளர்களும் முன்வைத்த இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகளை அடியொற்றியுங்கூட
அடிப்படைத் தெளிவை எட்ட இயலும் என்பது மெய். அத்தகைய ஒரு முயற்சி டெரி ஈகிள்டன்
அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'மார்க்சியமும்
இலக்கியத் திறனாய்வும்' என்ற
டெரி ஈகிள்டனின் நூல் இலக்கியத் திறனாய்வு குறித்த மார்க்சியர்களின் கருத்தாடல்களை
அலசும் போக்கில் மார்க்சியத்தில் மேலும் தெளிவுபெற இயலும் என்பதையும்
எடுத்துக்காட்டுகின்றது.
