Monday, December 12, 2011

வரலாற்றின் விளைபொருள்: ”கசகறணம்”

 விமல் குழந்தைவேலின் "நாவல்"
-ந.சுசீந்திரன்-

 ”வழி வழிவரும் ஏனைய இலக்கிய வடிவங்களைப் போலவே, நாவலும் வரலாற்றின் விளைபொருளாகும்…”
(க.கைலாசபதி, இலக்கியச் சிந்தனைகள், கொழும்பு 1983)

விமல் குழந்தைவேல் அவர்களின் மூன்றாவது  நாவல் கசகறணம், 2011 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியாகியிருக்கின்றது. நூலின் முன்னுரையின் குறிப்புக்களில் இருந்து  இந் நாவல் இலங்கையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட 2002 இற்குப் பின்னர் 2006 வரை நான்கு வருடங்கள் நிலவிய தற்காலிக அமைதியின் போது இலங்கையில் சுனாமிப் பேரலையின் அழிவுக் காலமான  2004 இன் இறுதி தொடக்கம் போர் முற்றாக முடிவுக்கு வந்த 2009 க்கும் இடைப்பட்ட 5 வருட காலத்தில்  எழுதப்பட்டிருக்கின்றது என்று கொள்ளலாம். காலம், ஆன்மா, நாடு, இனங்கள், உறவு போன்றவற்றை சிதைத்துச் சிதிலங்களாக்கி விட்டெறிந்த ஒரு களப்புலத்தில், அதிகாரம், வன்முறை, ஆயுதக் கலாசாரம், போரின் ஆரவாரம், சமாதானம், அனர்த்தனங்கள், போன்ற பெருங்கதைச் சமாச்சாரங்கள் மனிதர்களைப் பிடித்துக்கொள்ளும்போது, தெருத்தூசிகளாக மதிப்பிழந்து மறக்கடிக்கப்பட்ட  மிகச் சாதாரண மனிதர்களின் வாழ்வும் இருப்பும் மனோநிலையும் எப்படிச் சின்னாபின்னமாக்கப்பட்டது என்பதை அவர்களது அன்றன்றான சோலிகள், யோசனைகள், உணர்வுகள், பேச்சுக்கள், உறவாடல்கள் மூலம் ஒரு நல்ல நாவலாக உருமாற்றியிருக்கின்றர் விமல் குழந்தைவேல் அவர்கள். வரலாற்றின் விளைபொருளாக, காலத்தின் தவிர்க்க முடியாத அசலான அர்த்தம் மிக்க பதிவாகவும்  இந் நவீனம் இருக்கின்றது. 

கதையமைப்பு:
இந் நாவலின் கதையமைப்பு ஒரு  திரைப்பட உத்தியிலானது. முதற்பாகத்தில் கணங்களும் பொழுதுகளும் அதனதன் பாதைகளில் உடன்பாடுகளோடும், முரண்பாடுகளோடும், அல்லது எதுவுமற்ற பாடுகளோடும் நடக்கின்றன. இரண்டாவது பாகம்  ஒரு திரைப்படத்தில் இடைவேளைக்குப் பின்னர் போல, திருப்பங்களும் நிகழ்வுகளில் பாரிய மாற்றங்களும் ஏற்படுகின்றன. அக்கரைப்பற்றுச் சந்தை, அதிலிருந்து 5 கட்டை தொலைவிலுள்ள மொட்டையாபுரம், பத்தூடு, புதுக்குடியிருப்பு, புட்டம்பை போன்ற சில கிராமங்களின் எல்லைகளுக்குள்ளே இதில் வரும் சனங்களின் போக்கும் வாழ்வும் முடிந்துவிடுன்றன.   அவர்கள் சிந்திக்கின்ற, பேசகின்ற பிராந்திய மொழியும், மொழிப்பிரயோகம், நிலம், காலம், வாழ்வு போன்றவற்றுடன் பின்னிப்பிணைந்த அதன் உள்ளடக்கமும் இந்தக் கதைச் சனங்களை ஒரு ஓவியனுக்கு முன்னமரும் உயிர்ப்பொருளாக வார்த்துக்காட்டியிருகின்றார் நாவலாசிரியர்.
நாவலில் அடிக்கடி வந்து போகும் முக்கிய சனங்களின் மனோவிம்பங்கள் வாசகர்களின் மனங்களில் அழியாத நிரந்தரமான, அல்லது குறைந்தது ஒரு நீண்டகாலம் வாழும்   தன்மைத்தவையாக இருக்கின்றன. இதில் வரும்    அவர்களது கவலைகள் உலகின் சிறந்த கதாசிரியர்களின் பாத்திரங்களோடு ஒப்பிடுமளவுக்கு நன்றாகவே படைக்கப்படுள்ளனர். ஹெமிங்வேயின் கிழவனும் பாலமும் என்ற ஒரு சிறுகதையில் ஸ்பானியப் போரின்போது இடப்பெயர்வுக்குள் அகப்பட்டுக்கொள்ளும் கிழவனின் கவலைகள் யாவும் தான் வளர்த்த  ஆடு, பூனை பற்றியதாகவே இருந்தது போலவே இங்கேயும் மனிதர்கள் தத்தமது பிணைப்புக்கள் பற்றிய அக்கறைகளை வெளிப்படுத்துகின்றனர்.


இனமுரண்பாட்டின் குரூரவிளைவு 1983இல் நடந்த இனக்கலவரம். அதன் பின்னர் திடீர் வளர்ச்சியடந்த உணர்ச்சி மேலோங்கிய தமிழர் தேசிய வாதம் உள்முரண்பாடுகளையும்     கூர்மையடைய வைத்தது. கிழக்கில் ஒருதாய் பிள்ளைகளாக   தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான சமூகவாழ்வின் அதிக தளங்களில் பின்னிப்பிணைந்த உறவு  1983க்குப் பின்னர் சந்தேகங்களாகவும், குரோதங்கள், கடத்தல்கள் , கொலைகளாகவும் விரிசலடைகின்றது. இந்த விரிசல்களுக்குள் அகப்பட்டு தம்மியல்பிழந்து அரசியல் பேசும் இளைஞர்கள், நன்வழமையையும், நல்லுறவையும் கிழித்து வெளிப்படுத்தப்படும் இன, மத பேதங்களை, ஏன் என்று புரிந்துகொள்ளமுடியாது, அவற்றுக்குத் தத்தம் இயலுமைக்கு ஏற்ப எதிர்ப்புணர்வுகாட்டி நிற்கும் முதியவர்கள், இந்தப் பாழாய்ப்போன விரிசலுக்குள் அகப்பட்டுப் பாரிய விலைகொடுத்துப் போகும் பெண்கள், அன்பும் அறமும் கருணையும் தொலைத்துவிட்டு கொலைமுகங்காட்டும் ஒரு காலப் பிழையாக அமைந்துவிட்ட  கலாசாரம் போன்றவையே இந் நாவலின் கதாபாதிரங்கள். இலங்கையின் கிழக்கு மண்டலத்தின்  தமிழ் , முஸ்லிம் சமூகங்களின் பின்னிப் பிணைந்த சமூகவாழ்வின் இழைகளைக் குலைத்து நாசஞ்செய்யும் போது இரண்டு சமூகங்களும் அதற்குக் கொடுக்கின்ற காவு மீட்கப்படமுடியாதது. உறவின் வலுவை, கலப்பின் மகிமையை, பிரித்தலின் குரூரத்தை, வாழ்வின் அர்த்தத்தினை எடுத்து சொல்லும் பேச்சுமொழிப் பிரதி ஒன்று இலக்கிய அழகியலாக ஆகிவிட்டிருக்கின்றது.

பாத்திரங்கள்:
சந்தை, குடில், மலைப்பரப்பு, சுரப் பந்தல், மூன்று இடங்களில் வைக்கப்பப்டிருக்கும் திரைப்பட விளம்பரத் தட்டிகள், வம்மி மரங்கள், சந்தை நாய்கள் என்ற சேதனங்கள், அசேதனங்கள் எல்லாமே வாசகர்களின் மனதில் ஏற்படும் காட்சிகளில் இன்றியமையாதபடி  சேர்ந்து இயங்குகின்றன. மனிதர்களின் நிர்வாண மித்திரமான நேய இதயங்களே உரையாடலாக வெளிப்படுகின்றன. அன்பு நிரம்பி வழியும் சுரக்குடுவைகளாக அவர்களது அங்க அசைவும், பேச்சும் மூச்சும் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். `நினைவுகள் அழியும்போது` என்ற சிவானந்தனின் நாவலில் மூன்று தலைமுறைக் காலங்களும் மனிதர்களும் காட்டப்பட்டிருகின்றனர். அந்த . `நினைவுகள் அழியும்போது` என்ற நாவலில் கதா பாத்திரங்கள் பேசுகின்ற மொழியும் அதன் உள்ளடக்கமும் அறிவார்ந்த தளத்தில் இயங்குகின்றன. அதேவேளை, இங்கே கசகறணம் நாவலில்  பாத்திரங்கள் சாதாரண மக்களின் அன்றாட ‚கொப்பனோழி‘ மொழியையே பேசுகின்றனர். அவர்களது      குணங்கள், வெளிப்பாடுகள், உடல்மொழி யாவையும் பாசாங்கற்றவை, அறிவின் மெழுகுப்படையற்றவை. இந் நாவலில் வருகின்ற குறட்டைக்காக்காவின் அன்பின் இங்கித்தை அக்காலக் கிராம மனிதர்களிடம் கண்டிருப்போம். இங்கே நாம் பார்க்கின்ற  மனிதர்கள்  எமக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நாம் அவர்களைச் சின்னஞ்சிறிய வியாபாரிகளாக சந்தை மூலைகளிலும், பஸ் நிலையங்களிலும், கோவில்களின் வெளிவீதிகளிலும் கூறு பிரித்து வைத்திருக்கும், மூலிகைகள், புளியங்காய், இலந்தைப்பழம், பிஞ்சுமிளகாய் போன்றவற்றின் முன்னிருக்கக்  கண்டிருப்போம். இந்தக் கதை நீங்கள் விரும்பினால் மைலிப் பெத்தாவின் சோகக் கதையாகவோ அல்லது வீரம் விளையும் மனங்கள் என்ற பெண்விடுதலை நாவலாகவோகூடக் கொள்ளலாம். இன்னும் இங்கே கம்பீரம் நிறைந்த பெண்ணாக செதுக்கப்பட்டிருப்பவள் வெள்ளும்மா. இப் புதினத்தில் வருகின்ற வெள்ளும்மா போன்ற நிஜ மனிதர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருந்துகொண்டுதானிருக்கின்றனர். இவர்களிடம் காணப்படும் பண்புகள் வாழ்வின் அனுபவங்களாலும் ஊறுபடுத்தப்படாத மனித நேயத்தாலும் உருவானவை. அவர்களுக்குத் தோன்றுபவை இரத்தமும் சதையும் உணர்வும் கொண்ட மனிதர்களே தவிர அவர்களின் புறவழிப் பேதங்கள் அல்ல. அப்படித்தான் இக் கதையில் வரும் பெண்கள்    மைலிப் பெத்தா, வெள்ளும்மா, குலத்தழகி, மலர், பொன்னம்மை போன்ற இருக்கின்றனர். குலத்தழகி என்ற பெண் பாத்திரம் ஒரு சினிமாப் பைத்தியமாகினும், சினிமாவில் வரும் பெண்பாத்திரங்களின் பாடுகளை தன் சாயலில் உள்வாங்கி உறக்கமற்று இருப்பதுவும் தன் கதைபோல் வெளிப்படுத்துவதும் கிராமத்தின், பெண்ணின் மெல்லிதயங்களைச் சுட்டி நிற்கின்றது.
கிழக்கு மாகாணம் நாட்டார் வழக்காறுகளின் தோப்புக்காடு. நெய்தல் மற்றும் மருதத் திணை வாழ்வு இந்த வழக்காறுகளின் ஊற்று. அத்தோடு  முஸ்லிம் மக்களுக்குள் விரவிக்கிடக்கும் கவிப் பண்பாட்டை  கவிசொல்லுதல், ஏட்டிக்குப் போட்டியான பாட்டுக் கட்டுதல், நொடிபோடுதல் போன்றவை எவ்வாறு அவர்களின் வாழ்வுடனும் இரண்டறக் கலந்துள்ளதென்பதைப் பல ஆய்வாளர்கள் குறித்துள்ளனர். கசகறணம் நாவலில் மீரிசாக்காக்காவும் வெள்ளும்மாவும் சொல்லும் கவிகள் அனேகமானவை அகத்திணைக் கவிதைகள் என்று பிரிக்கப்படும் உள்ளுணர்வு,காதல் மற்றும் மென்ணுணர்வு கொண்டவை. இவை இந் நாவலில் கிராமியப் பண்பாட்டின் அழகுப்பரிமாணத்தைச் ஆர்ப்பாட்டமில்லாமல், வார்த்தை விபரிப்பு இல்லாமல் சொல்லிவிடப் பயன்பட்டிருக்கின்றன. ஆனாலும் „கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மத்தியில் வழங்கும் நாட்டார் இலக்கியத்தில் காதல் பாடல்கள் என்று வழங்கப்படுபவை உண்மை வாழ்க்கையில் காதலர்களால் பாடப்படுபவை அல்ல என்பதும் அவை வேளாண்மைத் தொழிலுடன் தொடர்புடையவை என்பதும், ஆண்களால் பாவனை முறையில் பாடப்படுபவை என்பதும், ஆண்களாலேயே படைக்கப்பட்ட புனைவியற் பாங்கான இலக்கியங்கள் என்பதும் தெளிவாகின்றது“ என்று இக் கவிகள் பற்றி எம். ஏ. நுஃமான் அவர்கள் சொல்வதை மனதில் கொள்ளவேண்டும். மேலும் முற்காலத்தில் குஜிலிப் பாடல்களில் சொல்லப்படும் அன்றன்றைய பரபரப்புச் செய்திகள் போலவும் நாவலில் பல இடங்களில் வெள்ளும்மா பாட்டுக்கட்டுகின்றாள்.
ஆறுமணி ஆகுதுகா
ஆமிக்காரன் வந்துட்டாங்கா
அண்ணாந்து பாருகா
அடமழையும் வருகுதுகா
கச்சான் சாக்கத் தூக்கிக்
கக்கத்துல வைடி மைலி
மிச்ச மீதீயெல்லாம்
நாளைக்குக் கதைப்போமடி

என்றும்
பட்டிமோடு தொட்டு
பனங்காட்டுப் பாலம்வரை
எட்டடிக்கு ஒரு ஆமி
ஒட்டியொட்டி நிண்டாண்டி
கிட்டவந்து அவன்
என்னுடம்பைத் தொட்டிருந்தா
ஒட்ட நறுக்கியிருப்பன்
அவன் உள்ளுறுப்பு அத்தினையும்.

இக் கதா பாத்திரங்கள் காணும் கெட்ட சகுனங்கள், சமிச்சைகள், மற்றும் அவர்கள் கொண்டிருக்கும் பக்தி, நம்பிக்கைகள், பயங்கள் போன்றவை எளிதாக நிராகரித்துவிட்டுப் போக முடியாதபடி நிகழ்வுகளும் அமைந்துவிடுகின்றன. ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் ஏற்படுகின்ற அவரவர் தலைவிதிகளும் கூட தெரிவுகளற்று இயல்பாகவே ஏற்படுகின்றன. குண்டுகள் எவர் உடலையும் துளைத்துவிடலாம்,  மரணங்கள் யார் தலைமீதும் கவியலாம், தீகருக்கிய நாதியற்ற பிணங்களாய் இவர்கள்  வீசப்பட்டுக் கிடக்கலாம். இப்படித்தானே இருந்தது எமது மக்களின் அண்மைய வாழ்வும் அவர் கண்ட காலங்களும்.
இந் நாவல் நிகழ்வுகளால் கதைநகர்த்திச் சொல்லப்படும் நாவல் என்று சொல்வதைவிட பாத்திரங்களின் சிந்தனைகளாலும் அதனையொட்டி அவர்களின் காரியங்களாலும் உருவாக்கப்படுகின்றது என்றும் கூறலாம். இந் நாவலில் கௌரவமாக உருவக்கப்பட்டுள்ள பாத்திரம் கனகவேல் என்ற திருநங்கை ஒருவரின் பாத்திரம். சு. சமுத்திரம் அவர்களின் வாடாமல்லி  என்ற புதினம், மற்றும் அண்மையில் வெளியாகிய லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களின் நான் வித்தியா என்ற தன்வரலாறு போன்ற நூல்கள் தமிழ் மொழிச் சமூகங்களில் திருநங்கையர்களின் அடையாளதிற்கான போராட்டதின் கடினங்களையும் நியாயங்களையும் சொல்லிச்செல்கின்றன. இந் நாவலில் கனகவேல் சமூக ஒடுக்குமுறைகளுக்குத் துணிசலாக  முகம் கொடுப்பதும் எதிர்த்துநிற்பதும் உற்சாகமளிக்கின்றது. ஏனெனில் சமூக முரண்பாடுகள், இன,மத வேறுபாடுகள், பெண்ணொடுக்குமுறை, ஜனநாயகமின்மை, இராணுவமயமாக்கம், பேணப்படவேண்டிய விழுமியங்கள், தொன்மங்கள்,மரபுகள் போன்றவற்றின் அழிவு, போன்றவை காணப்படும் நம் சமூகங்களில் இப் பாத்திரங்களின் வரவும், வகிபாகமும் குறிப்பிட்டுச் சொல்லபடவேண்டியவை  

மொழி
"தமிழைத் தம் உயிராக மதிப்பவர்கள் கிழக்கிலங்கை முஸ்லிம்கள்.  அவர்களது பேச்சு மொழியே கவிதைபோல் இனிக்கும். „அந்த மறுகால் போய்க் கிறுகுகா என்று சாதாரணன் ஒருவன் பேசும் தமிழில் உள்ள மறுகு, கிறுகு என்பன சங்கத் தமிழடா சங்கத் தமிழ்!“என்று பல தசாப்தங்களுக்கு முன் தமிழ் கற்பித்த ஆசிரியர் கூறிப் பெருமைப்பட்டது எனக்கு இன்றும் நினைவில் இருக்கின்றது…“ [1] என்று சொல்வார் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் அவர்கள். வண்ண நிலவனின் „கடல்புரத்தில்“ என்ற நல்ல நாவல் ஒன்றில் மணப்பாடு கிராமத்தின் மீனவ மக்கள் பேசுகின்ற மொழியே அந் நாவலின் பலம். கசகரணம் நாவலிலும் பாத்திரங்கள், தொழில், நிகழ்வுகள், பிரதேசம், காலம் என்பனவற்றோரு மிகுந்த ஒன்றிப்படைகின்றது பேசும் மொழியும், அதன் பிரயோகத்தில் வந்தடையும்  உவமானங்கள், பழமொழிகள், கவிகள் என்பனவும். இவ்வாறு ஏற்படுகின்ற பொருத்தம் வலிந்து புகுத்தப்படாததாய், மிக இயல்பாக அமைந்து விடுதல் இந் நாவலின் சிறப்புக்கான    இன்னுமொரு காரணி.
கசகறணம் நாவலில் குறியீடுகள் அதிகம் இல்லை. ஏனெனில் இது கடந்துபோன அண்மைக்காலத்தின் ஒரு தசாப்த காலத்து சமூக, அரசியல் வடிவமாற்றங்களைப் பேசுகின்ற வரலாற்றின் சுவடுகளையும் தடயங்களையும் தன்னகத்தே பெருமளவு கொண்டியங்குகின்றது. கிழக்கிலங்கையின் வாழ்வியலை பல படைப்பாளிகள் அருள் சுப்பிரமணியம், வ.அ.இராசரத்தினம், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ஜோண் ராஜன், ஜூனைதா செரீப், சண்முகம் சிவலிங்கம், வை.அஹமது, திக்குவல்லை கமால், எஸ்.முத்துமீரான், அ.ஸ.அம்துல் ஸமது, மருதூர்க் கொத்தன், யுவன் கபூர், அண்ணல், புரட்சிக் கமால், ஓட்டமாவடி அறபாத் போன்றவர்கள் எழுத்துக்களில் காண்கின்ற நாம் பட்டணத்தின் தோரணையும் கிராமத்தின் உள்ளுடலாகவும் இருக்கின்ற அக்கரைப்பற்றையும் அதன் சுற்றுப் பிரதேசங்களையுமே கதைப்புலங்களாக கொண்ட இந்த நாவலில்         அண்மைய வரலாறு, நிலவியல், இனமுரண்பாட்டின் குரூரமுகம், நேசங்கொண்ட மனிதர்களில் பட்டென்று பிறழும் மனங்கள் போன்றவற்றை தரிசிக்கின்றோம். பல்சமூகங்கள் வாழும் கீழைத்தேயங்களின் எந்த ஊருக்கும் இக் கதையைப் பொருத்திப் பார்க்கலாம். அந்நிய உணர்வற்று  எமது பாட்டிகள், எமது மனிதர்கள் தான் கதைமுழுவதும் நடமாடுகின்றனர். இன்றைய ஈழத்தின் நாவல்களில் மிக முக்கிய நாவலாக இதனைக் காண்கிறோம்.

No comments: