Wednesday, December 08, 2010

மஹிந்தவின் மந்தைமேய்ப்பு

மஹிந்தவின் மந்தைமேய்ப்பு மார்தட்டுகிறது.
-வ .அழகலிங்கம் -


 புலியின் பொங்குதமிழ்  மந்தைமேய்ப்பால் பட்டது போதுமென்றிருந்தால் இப்பொழுது மஹிந்தவின் மந்தைமேய்ப்பு மார்தட்டுகிறது. கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் இந்த மந்தைமேய்ப்பு, நடந்ததாகச் செய்திகளும் படங்களும், உதைச்ச காலை முத்தமிடுவதில் இன்பங்காணும் ஊடகவியலாளர்களால் உலகுக்கு வந்திருக்கிறது.
யாழ்பாணத்தில் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் அங்கயன் இராமநாதன் என்பான் மேய்பானாகச் செயற்பட்டார். மேய்ச்சுத் தண்ணிக்கு விட்டார். கிளிநொச்சியில் அருவத்திருமேனியர்களான அரச உளவுபடை, பொத்துவாய் சொன்தைச் செய்  என்ற தோறணையில் எல்லாமாறத் தம்மையிழந்த தெய்வம் பகைத்த அந்த ஏதிலித் தமிழர்களை மேய்த்துள்ளது.   

கிளிநொச்சியில்  ஊர்வலம்.     புலிப் பினாமிகளுக்கு எதிராக வடக்கிலே ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் சண்டே ஓப்சேவர் என்ற அரச ஊடகம் பின்வரும் செய்தியை வெளியிட்டுள்ளது. 
கிளிநொச்சி முல்லைத்தீவு, மற்றும் ஒட்டிசுட்டான் வாழ் தமிழ்மக்கள் 4.12.2010 இல் ஐக்கிய ராச்சியத்தில் உள்ள புலிமூலங்கள் சிறீலங்காவிரோத ஆர்ப்பாட்டங்கள் செய்ததற்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டத்தையும் பிரபாகரன் பொட்டு அம்மானது கொடும்பாவிகளையும் எரித்தார்கள். விசுவமடு வல்லிபுரத்திலுள்ள மக்களும் அதிலே அடங்குவர், எண்ணிலடங்காத மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள் என்றும் அவர்களுள் பெண்களும் பிள்ளைகளும் கூட அடங்குவர் என்றும் அவர்கள் புலிக்கெதிரான பதாகைகளைத் தாங்கிச் சென்றனர் என்று ஒப்சேவர் எழுதியுள்ளது.
அந்த மக்கள் கூட்டம் பிரபாகரனதும் பொட்டம்மானதும் கொடும்பாவிகளை எரித்தனர். அவர்கள் மிஞ்சியுள்ள வெளிநாடுகளில் வாழும் புலி உறுப்பினர்களை திட்டித் தீர்த்துச் சபித்தனர். வர்த்தகர்களும் தமது கடைகளைப் பூட்டிவிட்டு கறுத்தக் கொடிகளை உயர்த்திப் பிடித்தனர்.
    பலபதாகைகளில் தங்களது சுதந்திரத்தைப் பறித்து தம்மை அடிமையாக்கிய, தங்களுக்குச் சொல்லவொண்ணா துன்பங்களைத் தந்த, புலியை அழித்தொழித்து ஜனாதிபதி ராஜபக்ஸ்ச தமக்குச் சமாதானத்தை எடுத்துத் தந்ததாக எழுதப்பட்டிருந்தது. ஜனாதிபதியால் நாம் இப்பொழுது சமாதானமாக வாழ்கிறோம் என்று ஆர்ப்பாட்டக் காரர்கள் சொன்னார்கள். 'ஜனானாதிபதி அவர்களே! உங்களாலேயே நாம் இப்பொழுது நிம்மதியாக நித்திரை கொள்கின்றோம்.' என்று என்னொரு சுலோகத்தில் இருக்கிறது. வடக்கிலே மீள்குடியேற்றம் அதிகாமாக நடந்து முடிந்து விட்டது.
    முதலில் கொடும்பாவை எரித்தல் உயிரோடு வாழும் ஒடுக்குமுறையாளருக்கு எதிராகத்தான் எரிப்பது வழக்கம். ஏன் கொல்லப்பட்ட பிரபாகரனது கொடும்பாவியை எரிக்க வேண்டும். அதை விட்டுவிடுவோம்.
       எப்பொழுதோ நடந்திருக்க வேண்டிய ஊர்வலம் காலங்கடந்து நடக்கிறது. 2009 மே நடுப்பகுதில் முள்ளிவாய்க்கால் சரணாகதி நாடகத்தினதும் சர்வதேச சதியின் பின் 19 மாதங்கள் உருண்டோடி விட்டன. தமிழ் மக்களை, ராஜபக்ஸ்சவை ஜனாதிபதியாகக் கொண்ட இலங்கை அரசாங்கம் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கி சிறைசெய்யாமல் விட்டிருந்தால் தமிழ் மக்கள் புலிப்பாசிவாதிகளையும் ஏன் பிரபாகரனையும் கூட றோடு றோடாக இழுத்துக் கொண்டு திரிந்து முசோலினியினது உடலைத் தலைகீழாகத் தூக்கி ஊனம்வடிய நாறவிட்டது போல விட்டிருப்பார்கள். அவர்களும் சிங்கள முஸ்லீம் மக்களோடு சோந்து றோடு றோடாகக் குதூகலித்துக் கொண்டாடி புலியும் அவனியில் இல்லாமற்  போவதோடு சிங்கள,  தமிழ் மக்களின் மத்தியில்  புதிய ஒரு அன்னியோன்னியம் வளர்ந்திருக்கும். அது சிலவேளை நாடுதழுவிய எழுச்சியாக மாறி இலங்கை அரசையும் எமலோகம் அனுப்பியிருக்கும்.
 ஜேர்மனியில் கிட்லர் தோற்கடிக்கப் பட்டதன் பின்பு கிட்லரின் 2500 வதை முகாங்களும் மக்கள் பார்வைக்குத் திறந்த விடப் பட்டன. அந்தச் சித்திரவதை முகாங்களை இன்றும் பார்வையிடலாம். அதன் தலைமை முகாமாக இருந்த டாகவ்வுக்கு வருடாவருடம்  800000 யிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிடுகின்றனர். இதைப் பார்வையிட்டதால் மிகப் பெரும்பான்மை ஜேர்மானிய மக்கள் இன்றுங்கூடக் கிட்லருக்கும் மற்றும் அத்தனை பாசிசவாதிவாதிகளையும் வெறுப்பவர்களாக இருக்கிறார்கள்.  நாசிகளால் கொல்லப் பட்ட யூதர்களுக்கு இப்பவும் நினைவாலயங்கள் வைக்கப்பட்டுள்ளன. பெர்ளினில் இந்த ஜனவரியிற் கூட ஓர் உலகப் பிரசித்தி பெற்ற கட்டிடக் கலைஞரால் ஓர் நினைவாலயம் வைக்கப் பட்டுள்ளது. அதற்குள் போபவர்கள் மனவியாகூலமடைந்து திக்குத் திசை தெரியாமற் போகும் உணர்வைப்பெறும் வகையில் அவை ஒரே மட்டத்தில் இல்லாமல் மேலுங்கீழும் அலைபோன்ற பீடத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இப்பொழுதும் பெர்ளினில் நாசிபற்றிய புதிய நூதனசாலையொன்று திறக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெரியாததல்ல.
இலங்கை அரசுக்கு என்னுமொரு தடவை புலிப்பாசிசத்தின் உதவி தேவைப்படும். அவர்கள் விரும்பிய நேரத்தில் அது மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். இதுவே புலியின் எந்த இரகசியத்தையும் அரசாங்கம் வெளியிடாமல் மறைத்ததற்கான காரணமாகும். புலியோடும் ஏகாதிபத்திய எஜமானர்களோடும் இலங்கை ஒடுக்குமுறை அரசோடும் தரகுபோன அத்தனை பேரும் மறைக்கப்பட்டு விட்டார்கள். புலியின் நாணயக் கொடியைப் பிடித்து வைத்திருந்தவர்கள் இன்றும் நமக்கு மத்தியில் வெள்ளை வேட்டிக் கனவான்களாக நடமிடுகிறார்கள்.
என்ன செப்படி வித்தை. அரசாங்கமே இன்றும் புலியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அரச ஒட்டுண்ணிகள் புலியால் கொழுக்கிறார்கள். மேற்கு நாடுகள் முழுவதும் ஆயிரக்கணக்கில் பிடிபட்ட புலிகள் 30 தொடக்கம் 40 லட்சம் காசை உச்சியிலுள்ள இராணுவத்தினருக்குக் கட்டி  வந்து அரசியற் தஞ்சம் கோருகிறார்கள். தூதரகங்களுக்கு அடிக்கடி போகும் சில தமிழர்களது வேலை இந்த பயணங்களை ஒழுங்குபடுத்திக் கொடுப்பது. தெரிந்த இடமெல்லாம் தொலைபேசி செய்து ஆரும் காம்பிலிருந்தால் சொல்லுங்கள் எடுத்துவிடாலம் என்று அவர்களே ஒழுங்படுத்துபவர்களாகும். அவர்களோடு சேர்ந்து வேலைசெய்வதற்காக தூதரகம் எங்கும் இராணுவ இணைப்பு அதிகாரிகள் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார்கள். இப்படிக் காசுகட்டி வந்த புலிகளில் அனேகர் ஆர்ப்பாட்டத்திற்குச் சென்றவர்களாகும். ராஜபக்ஸ்ச அரசு இதையும் செய்கிறது. தமிழர்களையும் மேய்க்கிறது. பகிடி என்னவென்றால் ஜேர்மனியிலுள்ள பிறாங்போர்ட் தூதரகத்தில் இரண்டுதடவை தனிப் புலிகளுக்கென்றே கூட்டம் நாடத்தி பிஸ்சினெஸ் முதலீடு செய்ய உதவும் வழிகளை ஆராய்ந்திருக்கிறார்கள.  அதிலே மிகக் கவனமாக முன்பு புலிக்கெதிராக வேலைசெய்த எவருக்கும் சொல்லாமல் அழைப்புகளை விடுத்து இப்படிக் கூட்டத்தை நடாத்தியிருக்கிறார்கள். இதையும் அரசாங்கம் செய்து கொண்டு புலிக்கெதிராகப் போராடிற சுமையை வன்னி யாழ்ப்பாண மக்கள் தலையிற் திணிக்கும் அனாகரீகச் சம்பவங்கள்  நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் புதிய தமிழ் தரகர்களைப் பற்றியும் இவர்களோடு இணைந்து இலங்கையில் கொள்ளையடித்துவாழும் புதிய தமிழ் குழக்களைப் பற்றியும் வாய்ப்பிருந்தால் இன்னுமொருதடைவை எழுத முயற்சிக்கிறோம்.
             உண்மையில் ஆளும்வர்க்கம் எம்மைவிட எவ்வளவு தூரதிருஷ்டியோடு செயற்படுகிறது  என்பது இப்பொழுதுதான் மெல்ல மெல்லத் தெரியவருகிறது. முள்ளிவாய்க்கால்  சரணாகதியை அடுத்துப் புலியின் இரகசியங்களையும் அம்பலப் படுத்தி அதன் வதை முகாங்களையும் தமிழ் மக்களுக்குக் காட்டியிருந்தால் இன்று அவனியில் புலி என்ற பேச்சுக்கே இடமில்லை. புலி கொன்று விட்டு அரசாங்கத்தின் மேல் போட்ட பொய்ப் பழிகளும் அரசாங்கம் கொன்று தள்ளிவிட்டு புலியின் மேல் சுமத்திய பழிகளும்  அவர்களின் சர்வதேச எஜமானர்கள் யார் என்பதையும் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் கண்டிருப்பர்.

இன்றய உலக வங்கி நெருக்கடிகளும் யுத்தச் சூழ்நிலைகளும் இலங்கையில் மீண்டும் சோஷலிச இயக்கங்கள் வளர ஏதுவானதாகும். 1929 உலக பொருளாதார நெருக்கடியையும் இரண்டாம் உலகயுத்த நெருக்கடியையும் அடுத்தே இலங்கையில் சமசமாயக் கட்சி தோன்றியது. இலங்கையில் மாத்திரம்தான் ரொக்ஸ்சியக் கட்சியொன்று எதிர்க்கட்சி மட்டத்திற்குப் பலம் வாய்ந்ததாக இருந்தது. அதற்கு ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான அரிய சந்தர்ப்பங்களும் கிடைத்தன. அதுவே இலங்கையில் அதி கூடிய ஜனநாயகமும்  சமூகசேவைகளும் வெல்லப் பட்டதற்கான ஒரே காரணமாகும். இந்த சமூகநலத் திட்டங்களைப் பிரேரித்து அமுல்நடத்தியதற்காகவே 1959 இல் பிலிப் குணவர்த்தனா பண்டார நாயக்கா மந்திரிசபையிருந்து நீக்கப்டார். வெல்லப்பட்ட இந்த சமூகக் காப்புறதிகளைப் பறிக்க விடாது தடுத்தத்றகாக 1976ல் சீறீமா பண்டாரநாயக்கா மந்திரி சபையிலிருந்து என்.எம்.பெரேரா கொல்வின் ஆர்.டீ.சில்வாக்கள் துரத்தப் பட்டனர்.
ஏதோ சிறீமா பண்டாரனாயக்கா வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாதவரென்று அடுத்த பொய்யையும் புழுகையும் இன்று ராஜபக்ஸ்ச சொல்லியிருக்கிறார் . உண்மை என்னவென்றால் 1976 இல் என்.எம்.பெரேராவை நிதிமந்திரி பதவியிருந்து தட்டும்பொழுது பீலிக்ஸ் டயஸ் பண்டாரனாயக்கா அமெரிக்காவிலிருந்தே சத்தியப் பிரமாணம் எடுத்தார். அமெரிக்க ஏகாதிபத்தியன் நெருக்குவாரத்திற்கு அடிபணிந்ததாலேயே அது நடைபெற்றது. உண்மையான இடதுசாரி இயக்கம் வளரவிடாமல் தடுப்பதற்காகவே சிறிலங்கா சுதந்திரக்கட்சியை ஏகாதிபத்தியங்கள் நடாத்துகின்றன.

    கிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களுக்கு ஜேர்மன் அரசாங்கம் எண்ணற்ற நினைவாலயங்களைக் கட்டியுள்ளது. இலங்கை அரசாங்கமோ ஏன் புலியால் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு சின்ன அடையாளத்தைக் கூட வைக்கவில்லை. பொல்பொட் கொன்றவர்களின் மண்டையோடுகளைக் குவித்துக் காட்டியது போல் ஏன் புலியாற் கொல்லப்பட்ட லட்சக் கணக்கான தமிழ் மக்களின் மண்டையோடுகளைக் குவித்துக் காட்டாதது, மாத்திரமல்ல அவைகளை மறைத்தும் வைத்தார்கள். ஜேர்மனியில் அமெரிக்க றைஸ்சிய பிரித்தானிய பிரெஞ்சுப்படைகள் ஆக்கிரமித்த பகுதிகளிலும் அவர்கள் ஏதும் ஒரு வெற்றிச் சின்னத்தை நாட்டவில்லை.
யுத்தம் முடிந்ததுதான் தாமதம் ஒரு அவுன்சு தங்கம் அதாவது 32 கிறாம் தங்கம் 35 அமெரிக்க டொலர் பெறுமதியான காலத்தில் 40000 பிலியன் அமெரிக்க டொலர்களை மார்சல் திட்டத்தின் கீழ் முதலிட்டு ஜேர்மனியை மீள ஒரு நவீன நாடாகத் திட்டமிட்டுக் கட்டிக்கொடுத்தார்கள்.
    தமிழர் பிரதேசத்தில் என்ன நடக்கிறது. ராஜபக்ஸ்ச, ராஜபக்ஸ்ச என்று ஒரு நாளைக்கு ஆயிரம்தடவை உச்சாடனம் செய்யும் தமிழ் கோமளிகளுக்கு இது ஏன் விளங்கவில்லை.
    இன்று முதன் முதலாக தமிழ் மக்கள் வன்னியில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்திவிட்டார்கள். எதிர்காலத்தில் ஏன் இரண்டொரு கிழமைகளில் அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஓர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தைச் செய்யப் புறப்பட்டால் நிலமை என்னவாகும். இருந்த போதும் இது ஒரு வெகுஜனப் போராட்ட வடிவை எடுத்தது நல்ல சகுனமே. எதிரி தனது தேவைக்கு இதைப் பயன்படுத்த முயன்றாலும் இது 2009 மேயின் பின் முதன் முதல் ஒரு வெகுஜன ஆர்பாட்ட வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளது. ஜனனாயகம் தனது பாஷையில் அதைப் பேசுகிறது. அது தனது இரும்பாலும் நெருப்பாலும் அமைத்து கண்ணீரல் கழுவி மானிட ஆவிகளால் செப்பனிட்ட தனது வழியில் வரலாற்றை முன்னோக்கி நகர்த்தும்.

ஏன் அவசரகாலச் சட்டத்தை எடுக்கும்படி சிங்கள மக்கள் ஓர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் செய்ய விடுவார்களா? இலங்கை ஓர் இராணுவ பொனப்பாட்டிச சர்வாதிகாரத்தை நோக்கி நகருகிறது. இன்றய உலக பொருளாதார அரசியல் நெருக்கடியில் இலங்கை மக்களே முதலில் இந்தப் பூகோளத்தில் பட்டினியாலும் நோயாலும் சாவார்கள் என்பதை எச்சரிக்கின்றோம். கட்டுக்கடங்காக் கடனில் மூழ்கியுள்ள இலங்கை இறக்குமதிக்கே வெளிநாட்டுச் செலவாணி இல்லாமல் தத்தளிக்கிறது. அண்மையில் கொழும்பு ஊடகமொன்றில் வரவு செலவுத் திட்டம்  பற்றிய ஒரு கட்டுரையில் கொழும்பில் வாழும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்திற்கு மாதாந்தம் ரூபா100000 வேண்டும் என்று கணித்திருக்கிறார்கள். சராசரி ரூபா 20000 உழைக்கும் வலு இல்லாத மக்கள் எப்படி வாழ்வது. நாட்டில் 30 வருட யுத்த நெருக்கடியின் பின்பு வரியாகப் பெறப்படும் நிதி ஆயுதப் படைகளைப் பராமரிக்கக் கூடப் போதாது.
    ஏறத்தாள மீளக் குடியேறிய வன்னி மக்கள் 10 சதுர மீற்றர் விஸ்தீரணமுள்ள கிடுகுக் கொடில்களில் அல்லது பொலித்தீன் போர்த்த கொட்டில்களில் வாழ்கிறார்கள். இரணைமடுக் குளத்தில் அவர்களை  மீன் பிடிக்க இராணுவம் விடுவதில்லை. நீர்ப்பாசன இலாகாவின் கட்டிடத்துள் இராணுவம் குடி கொண்டதோடு அங்கே ஓரு புதிய புத்த விகாரையும் கட்டப் பட்டுள்ளது. புத்த கோயில் எழும்பினால் அந்த முகாம் நிரந்தர முகாம் என்பதே அர்த்தம். இந்தக் குடிசைகள் காற்றடித்தால் பறந்துவிடும். வன்னியில் 6 மாதங்களுக்கு முன்புதான் மக்கள் குடிறேற்றப் பட்டார்கள். அவர்கள் உழைப்பதற்கு ஏதும் வழியில்லை.
    இங்கே ஒரேயொரு டிஸ்பென்சரியே உண்டு. அதுவும் ஒரு நாளைக்கு 3மணித்தியாலமே திறக்கும். வட்டக் கைச்சி இராமநாதபுரம் கல்மடுவுக்கும் இதுதான் டிஸ்பென்சரி. கிளிநொச்சிக்கும் வட்டக்கைச்சிகும் இடையில் ஒரேயொரு பஸ் ஓடுது. அதிலே நோயாளிகளை எடுத்துச் செல்லவே இடம் இல்லை. இங்குள்ள மாயவனூர் கிராம மக்கள் தண்ணி அள்ள  ஒரு கில்லோ மீற்றர் போக வேண்டும். 3 கில்லோ மீற்றர் நடந்து போனால்தான் பஸ் ஓடும் பாதைக்குப் போகலாம். முன்பு சைகிளில் பயணம் செய்வார்கள். இன்று அதுவும் இல்லை.
 முன்பு இந்த மக்களுக்கு ரூபா 3000 மானியமாகக் கொடுத்தார்கள். இன்று அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது அல்லது வினியோகிக்கும் அதிகாரிகள் அதைக் கொள்ளையடிக்கிறார்கள். அரசாங்கம் சொல்கிற பொய்களைக் கேட்டுக் கேட்டே  சலித்துபோய் இருக்கிறார்கள் இம் மக்கள். இந்த மக்கள் சொல்வார்கள், முன்பு புலி அடக்கி ஓடக்குவதனால் கதைப்பதில்லை. இப்பொழுது இராணுவத்திற்குப் பயத்தில் ஓம் என்ற ஒரு வார்த்தையைச் சொல்வதைத்  தவிர வேறு ஒன்றும் சொல்வதில்லை. யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத் தண்ணிதான்.
    அண்மையில் சனல்-4 ஒளிபரப்பில் புலிப்பெண் பேராளிகளும் மற்றும் அனேக தமிழ்பெண்களும் கொடூர பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப் பட்டு நூற்றுக்கணக்கில் நிர்வாணமாக வீசியெறியப்பட்ட காட்சி காட்டப்பட்டது. என்ன மாதிரி கருணா பிரிந்த போது கிழக்குமாகாணப் பெண் பேராளிகள் பாலியல் வல்லுறவால் சீரழிக்கப்பட்ட காட்சியைப் பாசிசப் புலியின் ஊடகங்கள் காட்டி கிழக்குமாகாண சமூகத்தை மானபங்கப் படுத்தி வடகீழ் மாகாணங்களை நிரந்தரமாகப் பிரித்ததோ அதே போன்றே இலங்கை இராணுவமும் புலிபாசிசத்திலிருந்து தாம் வித்தியாசப் படவில்லை என்பதை நிரூபித்து சிங்கள தமிழ் பாட்டாளிகளது ஐக்கியத்திற்காககசு; சளைக்காது போராடுபவர்க்கு மேலும் ஒரு மாபெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் ஒளிப்படங்களின் தரிசனமானது, சரணடைந்த 600 போலீசைப் புலி கொன்றது என்று கூப்பாடு போடுவதற்கு இலங்கை அரசுக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லாது போய்விட்டது என்பதைப் பறைசாற்றுகிறது. இந்தத் தமிழ் பெண்களை நூற்றுக்கணக்கில் மசவாசு பண்ணிக் கொலைசெய்து அதைப் பெருமையாகக் காட்டப் படமெடுத்த இந்த இராணுவம்தான் தமிழர் பிரதேசம் எங்கும் ஆக்கிரமித்துள்ளது என்பதை குறிப்பாகச் சிங்கள தொழிவர்கத்திற்கும் உலகதொழிலாளர்கட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் மற்றய மனிதமானபங்கங்களைச் சகிக்காத மனித நேய விரும்பிகளுக்கும் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
மகிந்தா ராஜபக்ஸ்சவின் ஆட்சி பொனப்பாட்டிச சர்வாதிகாரத்திலிருந்து பாசிசமாகப் பரிணாமம் அடைவதை ருசுப் படுத்தும் காட்சி இது. 2009 மேயில் யுத்தம் முடிந்த போது அன்றய இராணுவ ஜெனரலான சரத்பொன்சேகா உச்சியிலுள்ள புலித் தலைவர்கள் எல்லாம் கொல்லப் பட்டு விட்டார்கள் என்றும் நடுநிலைப் புலிகளுக்குமேல் இலங்கைச்; சட்டத்திற்கு அமைய நீதிவிசாரணை செய்யப் பட்டு தண்டிக்கப் பட்டோ அன்றேல் விடுவிக்கப் படுவர்ர்கள் என்றும் மற்றையோருக்குப் புனர் வாழ்வு அளிக்கப்படுமென்றும் கூறினார். அண்மைய சனல்-4 ஒளிப்படங்கள் அந்தக் கூற்று நிதர்சனமறற்தென்பதை நிரூபிக்கிறது.
    தமிழ் மக்களுக்கு துர் அதிஷ்டத்தில் ஓர் அதிஷ்டமாக சரத்பொன்சேகாவுக்கும் ராஜபக்ஸ்ச குறுங்குழு குடும்ப அதிகாரத்திற்குமிடையே ஒரு  பிளவு ஏற்பட்டதானது தமிழ் மக்கள் மூச்சுவிடுவதற்கு ஒரு  சின்ன அவகாசத்தைக் கொடுத்தது. அதைக்கூட சம்பந்தன் சிவாஜிலிங்கம் போன்ற அரசியல் அயோக்கியர்கள் சமியோதமாகப் பாவிக்க விடாது தடுத்துவிட்டார்கள்.
    2004 சுனாமியின் போதும் 2009 முள்ளிவாய்க்கால் வெகுஜனக் கொலையை அடுத்துத் தமிழ்மக்கள் முட்கம்பி வேலிகளுள் மந்தைகளிலும் கேவலமாக அடைக்கப்பட்ட போதும் சிங்கள முஸ்லீம் மக்கள் பெருமளவில் தமிழ் மக்களுக்கு உதவினார்கள் என்பதை தமிழ் சமுதாயம் வாழையடி வாழையாக மறக்கவே கூடாது. அந்தச் சம்பவங்கள் எமது எதிர்காலச் சந்ததியின் பாடவிதானங்களிலே பதிப்பிக்கப்பட்டு எமது எதிர்கால சந்ததியினரை அதற்கான பிரதிஉபகாரம் செய்யக் கடமைப்பட்டவர்களாகப் பயிற்றிப் பண்படுத்த வேண்டும்.
'செய்யாமற் செய்த உதவிக்கு  வையகமும்
வானகமும் மாணப் பெரிது' என்பான் வள்ளுவன்.

சீரோடு வாழ்ந்தோம். வேரோடு சாய்ந்தோம்.
    இன்று இலங்கைத்தமிழ் மக்கள் நிர்க்கதியாகிக் கையறு நிலையிற்தான் உள்ளார்கள். வரலாறு முன்னுரையை அப்படியே எழுதியிருந்தது. அப்படியே நடந்தும் விட்டது. தவிர்க்க முடியாதவற்றைத் தலைதாழ்த்தி வரவேற்றுத்தான் தீரவேண்டியிருக்கிறது. ஊர் உலகமெல்லாம் பகைத்து சூரிய சந்திர கோள்களெல்லாம்  பகைத்து தெய்வங்கள் எல்லாம் பகைத்தால் உய்வுண்டோ என்று புகழேந்தி கூறுகிறார்.
இந்த நிலையிற்தான் எமது வைராக்கியத்தையும் நிர்ணயத்தையும் எந்த மட்டத்திற்கு உயர்த்திப்பிடிக்க முடியுமோ அந்த மட்டத்திற்கு உயர்த்திப் பிடிக்க வேண்டும்  இலங்கை இனவாத அரசங்கத்தில் எந்த நம்பிக்கையும் வைக்காமல் எமது சொந்த முயற்சியால் எவ்வளவு அந்தச் சுமூகத்தை உயர்த்த முடியுமோ அந்த மட்டத்திற்கு உயர்த்த வேண்டும்.
பைபிளிலே உள்ள ஒரு கூற்றை நினைவு படுத்துகிறேன். ஒரு  தனி மனிதன் மற்ற எல்லோருக்குமாக வாழ வேண்டும். எல்லோருமே ஒரு தனிமனிதனுக்காக வாழ வேண்டும். எல்லோரும் எல்லாருக்காகவும் வாழவேண்டும். இன்று வெளிநாடுகளிலுள்ள நாம் இலங்கையிலுள்ள தமிழர்களுக்காக வாழ வேண்டும். தனக்கெனவாழாப் பிறர்க்குரியாளனாக வாழ்வதுதான் சிலப்பதிகாரத்தின் கடைந்தெடுத்த ரசமாகும். பரோபகாரத்தில் சமூகவாழ்வில் அரசியலில் இதுவே தாரக மந்திரமாகவேண்டும்.
    ஒன்றைமட்டும் தமிழ் மக்கள் மறக்கக் கூடாது. முள்ளி வாய்க்கால் சரணாகதியை அடுத்து முள்ளி வேலிக்குள் தமிழ்மக்கள் மந்தைகளிலும் கேவலமாக அடைக்கப்பட்ட பொழுது புனர் நிர்மாணத்திற்கென்று ராஜபக்ஸ்ச இருபது முப்பது பேர்கொண்ட ஒரு குழுவைக் கூட்டினார். அதிலே ஒரு தமிழர் பிரதிநிதி கூட அங்கம் வகிக்க விடவில்லை. ஏன்? தமிழ் மக்கள் விரோதத்திற் காகவல்ல. புனருத்தாரணத்திற்கென்று கிடைக்கும் நிதிகளைக் தமக்குள்ளே கொள்ளையடிக்கும் பொழுது ஒரு தமிழருக்கும் தெரியக் கூடாது என்பதுதான். எடுத்தியம்ப முடியாத துன்பத்தில் அந்த மக்கள் வதைபடும்பொழுது அந்தமக்களுக்கென்று வந்த பணத்தை தகாத முறையில் அகரிப்பதை புத்திபேதலிப்பு அற்ற எந்தத் தமிழனும் ஒத்துக்கொண்டிருக்க மாட்டான்.
பிரச்சனையோ தமிழர் புனர்வாழ்வு. தமிழர் பிரதிநித்தித்தவம் இருந்தால் பொல்லாங்கு. அப்படியான ஒரு தமிழரில்லாத குழுவால் அந்தப் புனர்நிர்மாணம் செவ்வனே நடந்திருந்தால் தமிழினமே வெட்கித் தலை குனிந்திருக்கும்.
 அடுத்தது இலங்கையில் ஏற்படும் ராஜபக்ஸ்ச முதலாளித்துவ இனவாத அரசுக்கெதிரான ஒவ்வொரு சம்பவத்தையும் அரசாங்கத்தைத் தோற்கடிக்கும் திசையில் எமது செயற்பாடுகள் மிகத் திட்டவட்டமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
    தமிழ் அரசியல் வாதிகளை ராஜபக்ஸவோடு இரகசியப் பேச்சுவார்த்தைக்குப் போகவிடாமற் தடுக்க அத்தனை முயற்சிகளையும் செய்ய வேண்டும். றைஸ்சியப் புரட்சி முடிந்த வுடன் லெனின் சார் மன்னள் செய்த எல்லா இரகசிய ராஜதந்திர ஒப்பந்தங்களையும் அம்பலப் படுத்தினார். அப்பெழுது லெனின் ஓர் அற்புதமான கூற்றைக் கூறினார். ஜனனாயகத்தின் முதற் தடைக்கல் இரகசிய ராஜ தந்திரமும் இரகசிய பேச்சவார்த்தைகளுமாகும். தமிழினம் அழிந்ததே செல்வனாயகம் அமிர்தலிங்கம் மற்றும் புலிகளின் இரகசியப் பேச்சுவார்த்தைகளாலும் இரகசிய ஒப்பந்தங்களாலுமென்பதை மறந்து போகக் கூடாது.
    ராஜபக்ஸ்சவோடு இரகசிய பேச்சுக்குப் போபவர்கள் திண்டு குடிச்சுப் பெட்டிவாங்கி வெளியில் வந்து தாம் தமிழ் மக்களுக்கு ஆனைசேனையை அள்ளி வந்து விட்டோம் என்பதும் அதைப்பாவித்து ராஜபக்ஸ்ச தான் தமிழரோடு தொடக்கமும் முடிவுமில்லாமல் பேசுகிறேன் என்பதும் தேவைதானா? இதே தொடர்கதைதான் இந்திய வியாபாரமும்
     இரண்டாம் உலக  யுத்தம் முடிந்த பிறகு ஸ்டாலின், றூஸ்வல்ற், வின்சன் சேர்ச்சில் போஸ்டாம்  யால்டா இரகசிய ஒப்பந்தத்தின் போது வின்சன் சேர்ச்சில் கூறினார்:'நடந்து முடிந்த போர்தான் இனிமேல் உலகத்தில் வரப்போகும் எல்லாப் போரையும் முடிவுக்குக் கொண்ட வந்த போராகும்'.
வர்க்கப் போராட்டம் யூகோஸ்லாவிய மற்றும் சீனத் தொழிலாளர்களை றோட்டுக்கு இறக்கியதுதான் தாமதம் அவரது கூற்று நீர்க்குமிழி ஆகியது.
ராஜப்பக்ஸ்சவும் முள்ளிவாய்கால் வரலாற்றுக்கருச்சிதைவோடு இனிமேல் தமிழ் தேசியப் போராட்டம் தலை தூக்கவே முடியாது. அந்த இறுமாப்போடுதான் ; இன்றுவரை செயற்படுகிறார்கள். தமிழ்மக்கள் இன்றாவது வர்க்கப் போராட்டத்தை அங்கீகரித்தால், வரலாறு வர்க்கப் போராட்த்தின் மூலம்தான் முன்னேறும் என்பதை விளங்கிக் கொண்டால் நடந்து முடிந்தவையெல்லாம் தற்காலிகத் துர்அதிஷ்டம்தான். அது நிரந்தரமாகாது. நீர்க்குமிழி வயதை எட்டிவிடும்
    என்னமாதிரி சந்திரிகா குமாரத்துங்கா சிங்கள மக்களிடம்போய் இலங்கையிலே தமிழ்மக்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கின்றது என்று வெளிப்படையாகக்கூறித் தமிழ்மக்களுக்கான தீர்வையும் பாராளுமன்றதில் எழுத்துமூலம் வைத்தார். அந்த சாசன வரைபில் தமிழர் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்தார்.
    ராஜபக்ஸ்ச இனப்பிரச்சனைக்கு இதுதான் தீர்வு என்று இலங்கை மக்களுக்கு வெளிப்படையாக என்று சொல்கிறாரோ அன்றே அவரது அரசியல் வரலாறு முற்றுப் புள்ளி வைத்ததாகிவிடம். அது தமிழ் மக்களது உரிமையின் வெறும் அற்பமாகவும் இருந்தாலும் பரவாயில்லை. இதுதான் அவரின் அரசியல் தலைவிதி. ஒரு  கடைகெட்ட தமிழினவிரோதியின் அரசியற் சாணக்கியம் அதுதான். தீர்வு வைக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டார். ஒருகாலமும் எந்தப் பிரேரணையையும் மக்களுக்கு முன் வைக்க மாட்டார் என்பது மிகமிக நிர்ணயமானது.
    ஆதலால் தமிழ் மக்களைப் பாதுகாக்க ஒரேயொரு மார்க்கம்தான் உண்டு. ராஜபக்ஸ்சவோடு அல்லது எந்த அரசியற் கனவான்களோடோ ஒரு நாளும் இரகசியப் பேச்சுவார்த்தைக்குப் போகக் கூடாது. இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போமென்று இந்தச் சபதத்தை எடுக்க வேண்டும்.
    ராஜபக்ஸசவின் முழு அரசியல் வரலாறும் பவுத்த சிங்கள தேசிய வெறியைத் தூக்கிப் பிடித்த அரசியற் போராட்ட வரலாறாகும். ராஜபக்ஸ்சவின் ஆட்சியின் கீழ் தமிழ்மக்கள் எந்த அற்ப முன்னேற்றத்தைக்கூட அடைய மாட்டார்கள் என்பது டக்ளஸ் தேவானந்தா கருணா உட்பட அரசின் மந்திரிசபையில் உள்ளவர்களுக்குக் கூடத் தெரியும். தமிழ் நடுத்தரவர்க்கம் இரண்டு கருத்தியல்களை மிகப் பிடிவாமதமாகச் சொல்லுவார்கள். ஒன்று  சோஷலிசம் ஜன்மத்தில் வராது. அடுத்தது இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும் தமிழ் மக்களது பிரச்சனை தீராது. அறுபது வருட முதலாளித்துவ ஆட்சி மீண்டும் மீண்டும் நிறுவிக் காட்டியுள்ளது. இருந்தபோதும் முதலாளித்துவ அரசாட்சியில் தமிழர்களது சாணக்கியத்தைப் பாவித்து மெல்ல மெல்ல ஏதோவிதத்தில் உரிமையை வெல்லப் பார்க்கவேணுமேயொளிய வேறு வழியில்லை. நாப்பது ஐம்பது வருட இலங்கைத் தமிழரது அரசியல் வரலாற்றில் இதை ஆயிரம் லட்சம் முறை நாம் கேட்டிருக்கிறோம்.
    சில வருடங்களுக்கு முன்பு பிபாகரனையும் புலிப் பாசிசத்தையும் உலகமே பிரண்டாலும் தோற்கடிக்க முடியாது என்றார்கள். இது புலிகள் சொல்லவில்லை. புலியல்லாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களது நிரந்தர நித்திய உச்சானடனங்கள். இன்று இதே கும்பல் ராஜபக்ஸ்சவை உலகமே பிரண்டாலும் தோற்கடிக்க முடியாது என்று  சொல்கிறார்கள். அமெரிக்காவுக்குப் 13 றில்லியன் கடன். கிரேக்கம் அயர்லாந்து ஸ்பானியா என்று திவாலுக்குமேல் திவாலகிப் போகும் வேளையிலும் இவைகள் எல்லாம் இலங்கை அரசியலில் எந்தத்தாக்கத்தையும் விளைவிக்காது. இப்படிப் பட்டவர்களிடமிருந்து நாற்பது ஐம்பது வருடமாக வேண்டிக்கட்டிச் சுதாகரித்த வைராக்கியத்தோடுதான் சொல்கிறோம். ராஜபக்ஸ்சவின் அரசியல் ஆயுள் மிக மிக அற்பமானது. அவரது பொய் புரட்டு ஏமாற்று வித்தையெல்லாம் சிங்கள மக்களுக்கே அலுத்துப் போய் விட்டது. அதன் ஒருபாகமாகவே அண்மய சனால் -4 ஒளிப்படமும் ஒக்ஸ்போர்ட் ஒடிசியும் மேடையேறியது.
ஒரு வரலாற்று உண்மையை மட்டும் சொல்லி வைக்க விரும்புகின்றோம். எந்த ஒடுக்குமுறைச் சட்டமோ அரசாணையோ  மக்கள் ஆழமாகக் கொண்ட நம்பிக்கையை நிறுத்த முடியாது. அது கனன்று கொண்டிருக்கும். அதற்குச் சாதகாமான வரலாற்றுச் சூழ்நிலமைகள் ஏற்படும் பொழுது அது மீண்டும் சுவாலை விட்டு எரியும்.

No comments: