Wednesday, December 01, 2010

சந்திப்பு

பன்முகவெளியின் இரண்டாவது சந்திப்பு


பன்முகவெளியின் இரண்டாவது சந்திப்பு நவம்பர் மாதம் 20ம் 21ந் திகதிகளில் நடைபெற்றது. சந்திப்பின் முதல் நாள் அமர்வு காலை 11மணிக்கு சுய அறிமுகத்துடன் ஆரம்பமாகியது. நிகழ்வை பாரீசில் இருந்து வருகை தந்திருந்த அசுரா (தலித்மேம்பாட்டு முன்னணி) அவர்கள் தொடங்கிவைத்தார். நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மீதும் நிகழ்த்தப்படுவதற்காகத் தயார் நிலையில் திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகள் மீதும் நாம் தொடர்ந்து எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோம். நிறுவனமயப்பட்ட சமூக அதிகாரங்களுக்கெதிராக கதைகளாகவும் , கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும், நாடகங்கள் திரைப்படங் களாகவும் பதிவை முன்வைத்து தொடர்ந்து இயங்கிவரும் சகலரும் ஒன்றிணைந்து விவாதங்களை உருவாக்கும் ஒரு புள்ளியே இந்தப் பன்முகவெளி என்று பன்முகவெளியின் அவசியம். அதன் செயற்பாடுகள் குறித்து பேசிய அவர், என்னுடைய கருத்துத்தான் சரி. என்னுடைய கட்சிதான் சரி. என்னுடைய விடுதலை தான் சரி என்னுடைய கோட்பாடுதான் சரி என்று இருக்கின்ற சூழலில் பிறிதை நிர்மூலமாக்குகின்ற செயற்பாட்டிலிருந்து விலகி எல்லோருடைய கருத்தையும் உள்வாங்கி மற்றதை சொல்வதற்கான தளத்தை உருவாக்குகின்ற அதனுடன் கருத்து உறவாடும் சூழலைக் கொண்டுவருகின்ற செயற்பாடாக பன்முகவெளி இருக்கும். இதன் அவசியமும் இதுதான் என்று சொல்லி முடித்தார்.


அடுத்து தனது ஆரம்ப உரையில் சுசீந்திரன் அவர்கள், பன்முகவெளியின் அவசியம் பற்றி பேசுகையில் இன்று குடும்பத்திலும் சரி சமூகத்திலும் சரி அரசியலிலும் சரி நாம் பன்முகத்தன்மையைப் பேணுதல் என்பது மிகமுக்கியமானது என்று குறிப்பிட்டதோடு இந்தப் பன்முகத்தன்மையை நாம் கைவிட்டதால் தான் எங்களுடைய அழிவுகளையும் சகித்துக் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம். இதனூடாகத்தான் இந்தப் பன்முகவெளி என்ற சொல்லும் அதன் செயற்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது என்று சொன்னார்.

அடுத்து ஜோர்ஜ் குருசேவ் அவர்களது ஆரம்ப உரையில், நியாயமில்லாத எதையும் மௌனமாக இருந்து கொண்டு அங்கீகரிக்க முடியாது என்பது எனது சமூகத்திடமும் எனது குடும்பத்திடமும் இருந்து எனக்குக் கற்பிக்கப்பட்டடிருந்தது. ஏனெனில் நாங்கள் பின்தங்கிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் எங்களுக்கு ஒரு படிப்பினையாகதான் இருந்தது. நான் சமூகத்தில் ஒரு பிரதிநிதி என்பதை விட சமூகத்தின் அங்கத்தவன் என்ற முறையில் இதில் ஏற்படும் பாதிப்புக்கள் என்னையும் பாதிக்கிறது என்றவகையில் நான் மௌனமாக இருக்கக் கூடாது என்ற அக்கறை எனக்கும் இருக்கிறது. அந்தவகையில் தொடங்கப்பட்டதுதான் தாயகம் பத்திரிகை. ஆனால் அதனை வெறும் புலி எதிர்ப்பு என்ற முத்திரைக்குள் அடக்கப்பட்டுவிட்டது. மற்ற முகாமுக்குள் என்னை அடையாளம் முடியாதவர்கள் புலிஎதிர்ப்பு என்ற முகாமுக்குள் வைத்திருக்கிறார்கள். நீண்டகால அமைதியின் பின் இணையத்தில் வெளிக் கொண்டு வந்தேன். அதுவரை தாயகம் எப்போது வரும் என்று கேட்டுக்கொண்டிருந்த நண்பர்கள் பலர் தலைமறைவாகிவிட்டார்கள். காலாமோகனைத் தவிர. என்னைப் பொறுத்தரையில் கடந்தகால அழிவுகளுக்கு ஒரு சாட்சியமாக தாயகம் வந்திருக்கிறது. தற்போதும் அதற்கு புலி எதிர்ப்பு முத்திரைதான் குத்தப்படுகிறது. ஆனால் எனது நோக்கம் மக்கள் பற்றிய அக்கறை. அதை விளங்கிக் கொள்ளாதவர்கள் தான் புலி எதிர்ப்பு முத்திரை குத்துகிறார்கள். என்று சொல்லி முடித்தார்.

காலைஅமர்வின் முதல் நிகழ்வாக அகங்கிளறி அவர்கள் வன்னி பற்றிய கதை கூறலை வன்னியின் வளங்கள் சமகாலப்பார்வையாக முன்வைத்த்தார். அந்த நிகழ்விற்கு அசுரா அவர்கள் தலமை தாங்கினார். கடந்த 30 வருடங்களாக ஈழவிடுதலை என்றபெயரில் நிமிர்ந்து நின்ற துப்பாக்கிகள் மௌனித்துப் போன வன்னி பற்றிப் பேசப்படுவது தற்காலத்தில் மிகமுக்கியமானதுதான். வன்னியின் காடுபடுதிரவியங்கள், கடல்படுதிரவியங்கள், பறவைகள், வயல்கள், குளங்கள், ஆறுகள் போன்ற வளங்கள் குறித்த பார்வையாக விரிந்தது அவரது பேச்சு. பொதுவாக காடும் காடு சார்ந்த மக்களுமாக வன்னிமக்களைப் பார்க்கப்பட்ட விதம் குறித்து மிக விரிவாகச் சொல்லிப் போன அகங்கிளறி அவர்கள் வன்னி மக்கள் அறிவுசார்ந்து உழைப்புசார்ந்து உற்பத்தி சார்ந்து எவ்வளவு தூரம் தன்நிறைவோடு வாhழ்ந்தவர்கள் என்பதைச் சொல்லிக் கொண்டார். முல்லைத்தீவுக் கடலை மீன்வயல் என்றும் காடுகளில் நீண்டகால உற்பத்தித் திறனுள்ள மரங்களைக் கொண்ட காடுகள் அங்குள்ளன என்றும் இரும்புக்கு நிகரான பலமுள்ள நாகமரம் மற்றும் யாவறணை மரங்களுள்ள காடுகள் அவை என்றும் தனது கதைசொல்லலைக் கூறிக் கொண்டார். இவையனைத்தும் அரசாங்கத்தால் மட்டுமல்ல தமிழர்களின் பிரதிநிதிகள் என்று வந்த தமிழ்கட்சிகளோ இல்லது விடுதலை இயக்கங்களோ கவனிக்காமல் தொடர்ந்தும் அம்மக்களையும் வளங்களையும் அபகரிக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார். அவரது பேச்சின் முடிவில் சபையோர் கலந்துரையாடலில் பலர் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். அனைவருக்கும் வன்னி வளங்கள் மக்கள் குறித்த அக்கறை இருப்பது என்பது வரவேற்கப்படக்கூடியது. தொடர்ந்த விவாதங்களும், கலந்துரையாடல்களும் அதனை ஊக்குவிக்கும்.

அடுத்து ஒருபாலுறவு- வாழ்வும் அரசியலும் எனும் தலைப்பில் டன்ஸ்ரன் அவர்கள் உரைநிகழ்த்தினார். எமது தமிழ் சூழலில் செக்ஸ் பற்றி பேசப்படுவதே குற்றமாக இருக்கிறது. நாம் இதுகுறித்த சிக்கலை இங்கிருந்து தொடங்கவேண்டும். அதற்குள் எயிட்ஸ் பற்றிய உரையாடல், எயிட்சுடன் ஒருபாலுறவுகுறித்த கருத்துரைப்பு கவனம் கொள்ளப்படவேண்டும். என்று சொல்லப்பட்டது. ஹோமோ செக்சுவல் என்பதற்கான தமிழ்ச் சொல் எது என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து முதலாவது பன்முகவெளியிலும் டன்ஸரன் அவர்களால் ஒரு -வேர்க்சொப்-நடாத்தப்பட்டது. ஒருபாலுறவு, சமபாலுறவு, தற்பாலுறவு மகரந்தர் என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவ்வளவும் பாலுறவு சார்ந்தே பயன்படுத்தப்படுகிறது. என்றும் தனியே பாலுறவுக்குள்ளால் மட்டும் எங்களை அடையாளப்படுத்த முடியுமா என்றும் கேள்வி எழுந்தது? தமிழ் சமூகத்தில் இருக்கின்ற தற்பாலினர் வெறுப்புப் பற்றியும் கருத்துரைக்கப்பட்டது. டன்ஸ்ரனின் உரையுடன் காலை அமர்வு முடிவடைந்தது.

தொடர்ந்து மதிய உணவின் பின் மாலை அமர்வு.

மாலை அமர்வினை நண்பர் தர்சன் அவர்கள் தலைமைதாங்கி நடாத்தி வைத்தார். ஜோர்ஜ் குருசேவ் அவர்கள் அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம் என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். ஜோர்ஜின் கட்டுரை மிகவும் இறுக்கமான நேரிடையான கட்டுரை. யாழ்ப்பாணத்தின் சாதி வலைப்பின்னல், யாழ் தேசவழமைச்சட்டம், அதற்குள்ளால் ஊதிப்பெருப்பிக்கப்பட்ட தேசவிடுதலைப்போராட்டம் இவற்றை ஆதரித்து நின்ற யாழ் மேட்டுக்குடிசார் பத்திரிகை உலகங்களைப் பற்றி மிகக் கடுமையாகச் சாடிய கட்டுரை அது. (அதன் பிரதியை பார்க்க)



தொடர்ந்து அசுரா அவர்கள் இலங்கையில் தோன்றிய சாதியமும் அதன் பின்னணியும். எனும் தலைப்பில் பேசினார். தனது பேச்சில் சாதி இன்மையா சாதி மறைப்பா எனும் நூலை முன்வைத்து தலித் விடுதலை என்பது பண்பாட்டுத் தளங்களில் போராட்டங்களைச் செய்வதில் தான் சாத்தியம் என்று குறிப்பிட்டார். சாதி விடுதலை பற்றி பேசிய நூல்கள் எதுவும் நமது சூழலில் பண்பாட்டுத்தளங்களை கேள்விக்குள்ளாக்கவில்லை. இறுதியாக வெளிவந்த சாதி இன்மையா சாதி மறைப்பா எனும் நூல் கூட அதுபற்றிய பார்வை இல்லை என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் இந்துமதம் எவ்வாறு சாதியத்தை உள்ளாரக் கொண்டுள்ளது என்பதை குறிப்பிட்ட அசுரா அவர்கள் அது தகர்க்கப்படவேண்டும் என்றார். தமிழ்த்தேசியம் சாதியை எவ்வாறு உள்வாங்கியது என்பதையும் தனது பேச்சில் கட்டுடைத்தார்.( அவரது உரை விரைவில் வெளியிடப்படும்)

அசுராவின் பேச்சுடன் முதல்நாள் அமர்வு முடிவடைந்தது.

இரண்டாவது நாள் 21ந்திகதி மாலை 2மணிக்கு ஆரம்பமாகியது.

மனோரஞ்சன் அவர்கள் தமிழ்த் துரோகம் எனும் தலைப்பில் உரையாற்றினார். அதனை கற்சுறா தலைமை தாங்கி நடாத்தினார். துரோகி என்றும் சந்திரிகாவிற்கு பெட்டிகாவியவர் என்றும் அரசாங்கத்தின் ஆள் என்றும் அரசாங்களத்திடம் காசு வாங்குபவர் என்றும் உளவாளி என்றும் பலவித பெயர்களால் அழைக்கப்படும் மனோரஞ்சன் அவர்கள் தமிழர்களால் துரோகம் என அடையாளப்படுத்தப்பட்ட சொற்பதத்திற்கான விளக்கத்திற்கூடாக தனது கட்டுரையை முன்வைத்ததார். துரையப்பா தொடக்கம் கடைசி நமு பொன்னம்பலம் வரை துரோகியாக்கி அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டதை விரிவாகச் சொன்னார் கணவன் மனைவி உறவிலிருந்து தொடங்கி துரோகம் என்பது அரசர்களது காலத்திலிருந்து எட்டப்பர், காக்கைவன்னியர் பின் துரையப்பாக்கள் கதிர்காமர்கள், மனோரஞ்சன்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட கதையையும் கூறினார். இவரது உரையும் விரைவில் பதிவுசெய்யப்படும்.

அடுத்து சுசீந்திரன் பேசப்படாத ஈழத்து இலக்கியங்களும் பேசவேண்டிய ஐரோப்பிய இலக்கியங்களும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதற்கு நண்பர் ராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். வண்ணை வைத்தீசுவரன் கோவில் உருவான வரலாறும் கனகி புராணம் பற்றிய வரலாறும் பற்றிக் குறிப்பிட்டு பேசினார். கனகி புராணத்தில் நிகழ்ந்த இடைச்செருகல்கள் பற்றிக் குறிப்பிட்டாhர். ஐரோப்பிய நாவலான ஃபேர்பிய+ம் பற்றியும் அதன் மொழிப்பயன்பாடு குறித்தும் பேசினார்.

அடுத்து தலித் மேம்பாட்டு முன்னணியினரால் எடுக்கப்பட்ட புன்னாலைக்கட்டுவன் மற்றும் கைதடி தலித் மக்கள் ஆதிக்கசாதியால் சாதி ஒடுக்குதலுக்கள்ளான கதையின் வீடியோ ஆவணம் காண்பிக்கப்பட்டது.இந்த விவரணப்படம் புன்னாலைக் கட்டுவனில் 150 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த தலித் மக்களை
அவர்களின் காணிகளிலிருந்துவெறும் 5000ரூபா கொடுத்து யாழ் மேட்டுக் குடியினர் வெளியேற்றிய சம்பவத்தை தேவதாஸ் (தலித் மேம்பாட்டு முன்னணி)அவர்கள் அந்தமக்களிடம் சென்று ஊரையாடி உண்மைகளை அறிந்து கொண்டு தொகுக்கப்பட்டது. அதே போல் கைதடி தலித் மக்களை கோயிலுக்குள் அன்னதானம் செய்வதற்கு உயர்சாதியினரால் தடுக்கப்பட்டது பற்றிய விவரணம் மற்றது. யுத்தம் முடிந்த கையோடு ஓங்கி நிற்கும் சாதிவெறி பற்றிய சில சம்பவங்களே இவை.

அதனைத் தொடர்ந்து சுசீந்திரனது உதவியுடன் ஜேர்மன் மொழியில் எடுக்கப்பட்ட இந்தியத் திருநங்கைகள் குறித்த விவரணப்படம் திரையிடப்பட்டது. டானியல் அவர்களது சிறுகதை மற்றும் கடிதங்களது கையெழுத்துப் பிரதிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன

அதனுடன் பன்முகவெளியின் இரண்டாவது சந்திப்பு நிறைவுற்றது.

நன்றி: மற்றது

No comments: