Sunday, June 27, 2010

மட்டக்களப்புக்கூத்து

மட்டக்களப்புக்கூத்து ஒரு ஆய்வுக் கண்ணோட்டம்
-மு.கணபதிப்பிள்ளை (மூனாகானா)-
கூத்து என்றவுடன் எம் எண்ணத்தில் முதலில் வருவது ஆட்டமே. ஆட்டம்இல்லையென்றால் கூத்து, விலாச நாடகம் (Drama) ஆகிவிடும். கூத்தின் சிறப்புஆட்டத்திலே தங்கியிருக்கிறது.

ஏனைய இடங்களில் ஆடப்படும் கூத்துகளிலும் பார்க்க மட்டக்களப்பில்ஆடப்படும் கூத்துக்களில் ஆட்டம் சிறப்பாக அமைந்திருக்கும். ஆட்டத்தோடுமத்தள அடியும் இணைந்து போக வேண்டும். இல்லையென்றால் ஆட்டமேபிழைத்துவிடும்.

முதன் முதல் கூத்தாடியவன் தில்லைக் கூத்தன். இதற்கு மத்தளம் அடித்தவன்திருநந்திதேவன். இது தெய்வக்கூத்து இதன் பின்பு மனிதக் கூத்து ஆரம்பித்தது.

கற்காலத்து மனிதர்கள் தங்கள் உணவுக்காக காடுகளில் அலைந்து திரிந்து, கல்லாயுதங்களாலும், வில்லாயுதங்களாலும் மிருகங்களை வேட்டையாடும்போது மிருகங்கள் விழுந்துவிட்டால் ஓடிப்போய் அதைப் பார்த்ததும்மிகிழ்ச்சியினாலே துள்ளிக்குதித்து ஆடியிருப்பார்கள்.

பின்பு அம் மிருகத்தை பச்சையாகவோ, நெருப்பில் வாட்டியோ உண்டபின்பும்கூட்டமாகத் துள்ளிக்குதித்து ஆடியிருப்பார்கள்.

இது இரண்டாவது படிமுறைக் கூத்துமல்லாமல், மனிதனது முதலாவதுகூத்துமாகும். இதன் பின்னர் மக்கள் நாகரிகம் அடைய அடைய இக்கூத்து பலபரிணாம வளர்ச்சிகளைப் பெற்று சாஸ்திர ரீதியான கூத்தாக இன்றுவிளங்குகிறது.

நதி மூலம் ரிஷிமூலம் தேடுவது போல நமது கூத்தின் மூலத்தையும் தேடிய பலர்கூத்தின் பிறப்பிடம் தமிழ் நாடு என்றும் வேறு சிலர் மலையாளம் என்றும்கூறினாலும், மட்டக்களப்புக் கூத்தின் பிறப்பிடம் மட்டக்களப்புத்தான் என்பதைஇலகுவில் எவரும் ஒதுக்கிவிட முடியாது.

வட கேரளத்தில் கிருஷ்ணாட்டம் பிரபலமாக இருந்தபோது தென்கேரளத்துமன்னன் கொட்டாரக்காரத் தம்பிரான், இந்த ஆட்டத்தைப் பார்க்க விரும்பிஅக்கலைஞர்களை அனுப்பி வைக்கும்படி கேட்டபோது வடகேரள மன்னன்மறுத்தது மட்டுமல்லாமல் பரிகாசமும் பண்ணி அனுப்பினான்.

இதனால் கவலையடைந்த தம்பிரான் தனது நாட்டிலுள்ள அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், நாட்டியகாரர்கள் அனைவரையும் அழைத்து, ஒரு புதியஆட்டத்தை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டான்.

இதற்கு இராமனாட்டம் என்று பெயர். மட்டக்களப்பு மக்கள் மலையாளத்துப்பரம்பரையைச் சேர்ந்தவர்களாகையால் வடகேரளத்தில் ஆடிய கிருஷ்ணாட்டம்வடமோடியாகவும், தென் கேரளத்தில் ஆடிய இராமனாட்டம் தென்மோடியாகவும்ஆடப்படுவதாக சிலரின் அபிப்பிராயம்.

இவற்றின் மறுவடிவமாகிய கதகளியே மட்டக்களப்புக் கூத்தின் மூலம் எனவும்கூறுகிறார்கள். ஆனால் கதகளிக்கும் நமது கூத்துக்கும் பல வேறுபாடுகள்உள்ளன. கதகளியில் கர்நாடக சங்கீதம் பயன்படுகிறது.

தோல் வாத்தியமாக, நிலத்தில் நிலைக்குத்தாக வைத்து ஒருபக்கம் மட்டுமேஅடிக்கும் செண்டை வாத்தியம் பயன்படுத்தப்படுகிறது. இதில் கதாபாத்திரங்கள்பாடுவதில்லை. ஆனால் ஒப்பனையில் மட்டும் ஒரு சில ஒற்றுமைகள் உண்டு. எனவே கதகளிதான் நமது கூத்தின் மூலம் என்று எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்.

வேறு சிலர் தமிழ் நாட்டில் விந்திய மலைக்கு வடக்கேயும், தெற்கேயும்நடத்தப்பட்ட தெருக்கூத்துகளே இங்கு வடமோடி தென் மோடி எனஆடப்படுவதாகக் கூறுகிறார்கள்.

நேபாளத்தின் சாக்கியர் கூத்தும், ஆந்திராவின் குச்சுப்புடியும், வட இந்தியாவின்மணிப்புரியும், கேரளத்தின் கதகளியும் தமிழ் நாட்டின் பரத நாட்டியமும், இப்போதும் இலங்கையில் ஆடப்படும் போது அவற்றின் அமைப்பு சிறிதும்மாறுபடாமல் ஆடப்படுகிறது.

ஆனால் நமது கூத்தின் ஆடல், பாடல், இசை, வாத்தியம், உடையலங்காரம், ஒப்பனை எல்லாம் இந்தியாவிலிருந்து வந்த கூத்துக்களிலிருந்து மாறுபட்டுத்தனித்தன்மையுடன் காணப்படுகின்றது.

எனவே, நமது கூத்து எங்கிருந்தும் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதேஉறுதியான உண்மையாகும். அப்படியானால் நமது மட்டக்களப்புக் கூத்துக்களின்பிறப்பிடம் மட்டக்களப்புத்தானா என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்துவோம்.

புளியந்தீவை மையமாகக் கொண்ட பகுதியே மட்டக்களப்பு என்பதைதற்காலிகமாக மறந்து விட்டுப் படியுங்கள். தற்போது அம்பாறை எனப்படும்பிரதேசமே பண்டைய மட்டக்களப்பின் மையமாகும்.

ஒல்லாந்தர் கோட்டை கட்டி ஆட்சியை தொடங்கிய பின்னர் பலஇடங்களிலிருந்தும் மக்கள் குடியேறிய பின்னரே தற்போதய மட்டக்களப்புஉதயமானது.

பண்டைய மட்டக்களப்பில் பட்டிநகர், உகந்தை, திருக்கோயில் சங்கமான் கண்டி, பனங்காடு, அக்கரைப்பற்று, கோளாவில், வாகூரை, வீரமுனை, மணல்புட்டி, சலவை பாணமை, நாவலூர், நாகமுனை, வதன வெளி, தம்பட்டை, தளகைக்குடாஎன்பன பேரூர்களாகும். இங்கே பல புலவர்களும், பண்டிதர்களும், கலைஞர்களும், அறிஞர்களும், சோதிடர்களும், மந்திரவாதிகளும், பரிசாரிமார்களும் அண்ணாவிமார்களும் இருந்திருக்கிறார்கள். இப்போதும்இருக்கிறார்கள். இதை பின்வரும் பாடலால் அறியலாம்.

இயலிசை நாடகம் எங்கும் விளங்க

பல நூலாய்ந்த பண்டிதர் சிலரை

கவிபல விளங்கக் காசினியோர்க்கு

எனப் போடிகல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவர்கள் ஏன் நமதுகூத்துக்களை ஆக்கியிருக்கக்கூடாது என்ற கேள்வி எழுகிறது. இப்பொழுதும்கேரளாவில் என்ற ஊரில் பல அண்ணாவிமாரும் மந்திரவாதிகளும், சித்தவைத்தியர்களும் இருக்கிறார்கள்.

இங்கு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தாமோதரம் பிள்ளை என்றஅண்ணாவியார், சயிந்தவன் நாடகம், தரும்புத்திரர் நாடகம், அல்லி நாடகம்போன்ற பல வடமோடிக் கூத்துகளை தெற்கு ஆரையம் பதியில் பழக்கியுள்ளார்.

கல்முனையைச் சேர்ச்த கணபதிப் பிள்ளை என்னும் அண்ணாவியார், வாளபிமன்நாடகம், அலங்கார ரூபன நாடகம் போன்ற தென்மோடி நாடங்களை ஆரையம்பதிநடுத்தெருவில் பழக்கியுள்ளார்.

தாமோதரம் பிள்ளை அண்ணாவியார் பழக்கிய ஒரு கூத்துப் பாடலிலே,

ஆனாப் பானா கோவன்ன

ஊனாத் தாவன்னா சொன்ன

அன்பான செந்தமிழை

பண்பாய் உரைத்துக் கொண்டு

எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஆனாப் பானாஎன்றால் அக்கரைப்பற்றுஊனாத்தாவன்னன என்றால் உலகிப் போடி தாமோதரம் பிள்ளை எனப்பொருள்படும். இது மட்டுமல்லாமல் அலங்கார ரூபன் தென்மோடி கூத்திலேஉள்ள கடவுள் வணக்க விருத்தத்திலே

திருக்காரைப் பழித்த குழல் அலங்கார

ரூபிதனைச் செல்வம் போற்ற

பெருக்காரை அலங்கார ரூபனருள்

நாடகத்தைப் பெரிதுபாட

செருக்காரைக் கொழுப்படக்கி சிறியவர்க்கும்

நெடியவர்க்கும் சிறப்பாயீந்து

மருக்காரைப் பதிவளரும் காத்தவராசன்

பாதம் வணங்குவோமே

என கூத்து ஆக்கப்பட்ட ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்படும் ஊரை ஆரைப்பதி என்றும் காரைப்பதி என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு முந்திய விருத்தத்திலேகதிரை வரை மருவுமொருகுமரனிரு தாள் காப்புத்தானேஎன கடவுள் வாழ்த்துப் பாடியிருப்பதால்மருக்காரைப் பதிவளரும் காத்தவராசன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதுகுருவணக்கமாக இருக்கலாம்.

கூத்துகள் ஆடப்பட்டு வரும் பிரபலமான ஊர்களிலே ஆரையம்பதியும் ஒன்றாகஇருப்பதால் இவ்வூர் ஆரையம்பதியைக் குறிப்பிடுவதாக இருக்கலாம் என்பதுசிலரது அபிப்பிராயம் எந்த ஊராக இருந்தாலும் இது மட்டக்களப்பில் இருப்பதால்இக்கூத்தை ஆக்கிய புலவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்பது புலனாகிறது.

வேறு இடங்களிலிருந்தும் சில கூத்துகள் வந்திருக்கலாம். இதையும் நிராகரிக்கமுடியாது. எனவே மட்டக்களப்பில் ஆடப்படும் பெரும் பாலான கூத்துகளின்பிறப்பிடம் மட்டக்களப்பே என்ற முடிவுக்கு நாம் வரலாமென நினைக்கின்றேன். இந்த அபிப்பிராயத்தோடு ஒன்றுபட்டவர்களும் இருக்கலாம்.

வேறுபட்டவர்களும் இருக்கலாம். வேறுபட்டவர்கள் தங்கள் அபிப்பிராயங்களைவெளிப்படுத்தினால் இது பற்றிய ஆய்வாளர்களுக்கு உதவியாக இருக்குமெனஎண்ணுகிறேன்.

எவ்வாறாயினும், மட்டக்களப்புக் கூத்து யாழ்ப்பாணத்திலிருந்தோ, தமிழகத்திலிருந்தோ வந்தது என்பது மிகவும் அபத்தமான கூற்று. எவ்விதஆதாரமும் அற்றது என்பதை வாசகர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இக் கூத்து நாட்டுக்கூத்து அல்ல, நாட்டார் கூத்துமல்ல. அது பரத நாட்டியம் போன்று தனித்துவமான ஆட்ட இலக்கணங்களுக்கு அமைந்த செந்நெறிக்கலை எனப் பேராசிரியர் சி. மெளனகுரு அறுதியிட்டுக் கூறியிருப்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். நீண்டகால ஆராய்ச்சியின் பின் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.

இனி மட்டக்களப்புக் கூத்துக்களிலுள்ள ஒரு சில சிறப்பு அம்சங்களைக்கூறவிரும்புகிறேன். ஆட்டத்திலே சக்கரவர்த்திகள், கடவுளர்கள் வயதானபாத்திரங்களுக்கு, தாளக்கட்டு,

தகதிக தாம் தெய்யா தெய்தெய்

தாதெய்யத்தோம் தகதிகஎன சாந்தமானதாகவும், வீரர்களுக்கு,

தாம் தெயயத்தெய் தக்கச்சந்தரிகிடஎன வேகமானதாகவும் குதிரைவீரர்களுக்கு,

சேகணம் சேகணம் தத்தா

ததிந்தத்தா தெய்தெய்” – என வடமோடியிலும், தென் மோடியில் வீரர்களுக்கு,

தாதாம் தாதெய்ய தாதாம் தெய்ய எனவும், மற்றப்பாத்திரங்களுக்கு,

ததித்துளாதக ததிங்கிண கிடதக

தாதிமி தெத்தா தெய்யேஎன பொருத்தமான வரவுத் தாளக்கட்டுகள்அமைந்திருப்பது ஒரு சிறப்பாகும்.

பாடல்களை நோக்கும் போது மோனைகள், முன் எதுகை பின் எதுகைகளோடுகூடிய கவர்ச்சிகரமான பாடல்களும், சயங் கொண்டார், அருணகிரி நாதர்போன்றவர்களின் பாடல்களைப் போன்ற சந்தச் சிறப்பு மிக்க பாடல்களும்அமைந்துள்ளன.

அத்தோடு கர்நாடக சங்கீதத்தில் (விருத்தம்) தொகையறாவும் அதைத்தொடர்ந்துபாடலும் அமைந்துள்ளது போல கூத்துப் பாடல்களிலும் பல பாடல்கள் உள்ளன. வடமோடியில் இதற்கு கந்தார்த்தம் என்றும், தென்மோடியில் கொச்சகத்தருஎன்றும் குறிப்பிடுகிறார்கள்.

உடையலங்காரம் ஒப்பனைகளைப் பொறுத்தவரையில் கரப்புடுப்பு எனப்படும்நெட்டுடையும், கத்தாக்கு எனப்படும் வட்டுடையும், மன்னர்கள் அணியும்கிரீடங்களும், வேறுர் கூத்துகளில் காணப்படாத சிறப்பம்சமாகும்.

இத்தகைய ஆடை அலங்காரம் தென்மோடிக் கூத்துகளுக்கு சிறப்பாகஅமைந்தவை இனி கவிநயங்களைப் பார்ப்போம்.

கம்பர் போன்ற மகா கவிஞர்களின் பாடல்களிலே அமைந்துள்ள நயங்களையும்விட மேலான கவிநயங்கள் கூத்துப் பாடல்களிலும் உள்ளன என்பதைவிளக்குவதற்காக எடுத்துக் காட்டாக இரு பாடல்களைக் கூறவிரும்புகிறேன்.

வாளபிமன் நாடகம் தென்மோடிக் கூத்திலே ஒருபாடல். அர்ச்சுனன் தன்மகன்வாளபிமனுக்கு கிருஷ்ணரின் மகள் சுந்தரியை மணம் பேசி நிச்சயார்த்தம்செய்துவிட்டு வனம் போகிறான்.

இதை அறிந்த துரியோதனன் தன்மகன் இலக்கண குமரரனுக்கு சுந்தரியை மணம்முடிக்க பலபத்திரரோடு சென்று கிருஷ்ணரிடம் சம்மதம் பெற்று நாளும்குறிப்பிட்டாகிவிட்டது. இதை அறிந்த சுந்தரி, மனிதரால் இத்திருமணத்தைநிறுத்த முடியாதென உணர்ந்து இராமரிடம் முறையிடுவதாக ஒரு பாடல்,

இந்த மண்ணும் வெந்த மண்ணும்இதை

எடுத்தொருவர் அடுத்து வைத்தால்இது

சிந்தியே பேறாகமலே ஒன்றாய்

சேருமோ அரிராமா

இங்கு இப்பாடலிலே இருவகை மண்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்றுஈரலிப்பான களிமண், மற்றது உருவாக்கப்பட்டு சூளையிலே வெந்தமண்இவ்விரு மண்களையும் கைகளிலே வைத்துக் கொண்டு இவ்விரு மண்களும்ஒன்றாகுமா? சிந்தி வேறு வேறாகி விடுமல்லவா? என இராமனிடம் கேட்கிறாள். நான் உலக வாழ்வின் திருமண நியதிப் படி வாளபிமனுக்கு மனைவியாகஆக்கப்பட்டு விட்டேன்.

(வெந்த மண்ணாக) இனி இலக்கண குமாரனுக்கு மனைவியாக முடியுமா? எனக்கேட்கிறாள். அதுவும் யாரிடம் நீதி கேட்கிறாள் தெரியுமா? ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என வாழ்ந்து காட்டிய இராம பிரானிடம் கேட்பது எவ்வளவுபொருத்தமாக இருக்கிறதென்பதைக் கவனியுங்கள்.

அடுத்து வரும் பாடல் அலங்கார ரூபன் தென்மோடிக் கூத்திலுள்ளது. அலங்காரரூபியும் தோழிகளும் பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுகுளத்திலிருந்த மீன்கள் மேலே பாய்ந்து அலங்கார ரூபியின் மேல் விழுகின்றன. இதைக் கண்டதும் அலங்கார ரூபி தோழிமார்களிடம் பின்வருமாறு கேட்கிறாள்.

வேலன்றி வாளன்றி வேறொன்றில்லாமல்

விழி கொல்லும் பெண்ணாரே! – எந்தன்

காலுக்கும் மேலுக்கும் மேலுக்கொருமீன்

கதித்துக்குதிப்பதென்னஎன்தோழி

இந்த வினாவுக்கு தோழிகள் கூறும் பதில் வருமாறு

கோலக் குழையில் பொன்னோலையில் மாலையில் கூடித்திரும்பு கண்ணைஇனமென்று வாலப்பருவத்து வேல்கண்டு மேல் கொண்டு

வந்து குதித்த தம்மாஎன் அம்மா

என்று தோழி பதில் கூறுகிறாள். இனி இவற்றிலுள்ள நயங்களைப் பார்ப்போம். வேலாயுதத்தாலும், வாளா யுத்தாலும் வேறு எந்த விதமான ஆயுதத்தாலும்கொல்ல முடியாத வாலிபர்களின் உள்ளத்தமைதியை உங்களது விழியாகியகண்) ஆயுதத்தாலே பார்த்தவுடன் கொல்லுகின்ற பெண்களே! என்றுகூறியிருப்பது கற்பனையின் உச்சக் கட்டத்தைத் தொடுகிறதல்லவா? இந்தக்காலத்துக் கவிஞர்களும் இந்தக் கற்பனை கையாண்டிருக்கிறார்கள். இந்தக்கேள்விக்கு தோழிகள் கூறிய பதில் கற்பனைச் சிகரத்தையே தொட்டு நிற்கின்றது. (

அம்மா! பொற்றகட்டினாலே இழைக்கப்பட்ட உங்களது தோடுகளோடும், அணிந்துள்ள மாலைகளோடும், கயல்மீன் போன்ற உங்களது கண்கள் இருபக்கங்களிலும் அசைந்து சென்று பார்த்து கூடித் திரும்புவதை குளத்திலே உள்ளவாலிபப் பருவத்துச் கயல் மீன்கள், தங்களுடைய இனமென்று எண்ணி உங்களதுகண்களோடு கூடிக்குலாவுவதற்கு உங்கள் மேல் பாய்கின்றன என்று பதில்கூறுகிறாள்.

இப்படிப்பட்ட கற்பனைதயங்களை எங்களாலும் தர முடியுமெனகவிச்சக்கரவர்த்தி கம்பரைப் பார்த்தே சவால் விடுவது போல இப்பாடல்அமைந்திருக்கிறது. இவைபோல இன்னும் பல நயம்மிக்க பாடல்கள்விசேடமாகத் தென்மோடிக் கூத்துக்களிலே இருக்கின்றன.

இவை போன்ற காதல் சுவைமிக்க பாடல்கள் அமைந்திருப்பதாலும், காதல்கதைகளையே தென்மோடிக் கூத்துக்கள் கருவாகக் கொண்டிருப்பதாலும் தென்மோடிக் கூத்துகளெல்லாம் காமரசம் ததும்பும் அகப்பொருள் கூத்துகள் என்றும், வடமோடிக் கூத்துகள் வீரம் செறிந்த புறப்பொருள் கூத்துகளெனவும்கூறுகிறார்கள்.


கூத்தைப் பற்றிப் பேசுகிறவர்கள் எழுதுகிறவர்கள் எவரானாலும் மதிப்புக்குரிய பேராசிரியர் மெளன குருவின் பெயரைக் கூறாவிட்டால், நாம் நன்றி மறந்தவர்களாவோம்.

நமது கூத்துக்கு அவர் செய்த செய்து கொண்டு வருகின்ற பணிகள் பல .வே. சாமி நாதையாரைப் போல ஊர் ஊராகச் சென்று ஏடுகளைச் சேகரித்து அண்ணாவிமாரையும் சந்தித்து கூத்து பற்றி ஒரு பெரிய ஆய்வு நூலை எழுதியுள்ளார்.


ஆண்டுகள் தோறும் நாடக விழா நடத்தி கூத்தை அறிஞர்களும் ஏற்றுக்கொள்ளும்படி உயர்த்தினார். சினிமாவின் தாக்கத்தினாலே கோமா நிலையில் உறங்கிக் கிடந்த நமது கூத்தை சிங்களக் கலைஞர்களும் அறிஞர்களும் வியக்கும்படி மேடை ஏற்றியவர்.


ஒதுங்கிக் கிடந்த அண்ணாவிமார்களை அறிஞர்கள் மத்தியிலே சிம்மாசனத்தில் ஏற்றினார். ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில பிறந்திராவிட்டால் சைவம் அழிந்திருக்கும் என்பார்கள்

. நானோ, மட்டக்களப்பிலே பேராசிரியர்மெளனகுருபிறந்திருக்காவிட்டால் நமது கூத்து அழிந்திருக்குமெனக் கூறுகிறேன்.

கூத்துக்கள் அழியாமல் இருந்தாலும், அதன் மகத்துவம் மக்களுக்குத் தெரியாமல் போயிருக்கும். கிராமியக்கலை எனப் படித்தவர்களால் ஏளனக் கண்கொண்டு நோக்கப்பட்ட இக்கூத்துக்கலையைப் பல்கலைக்கழகத்தில் புகுத்த படித்தவர் மத்தியில் நற்பெயர் பெறச் செய்தது மட்டுமல்லாமல், முறையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கூத்துக்கலை நமது பொக்கிஷம். நமது முதுசம் என்று நிறுவியவர் பேராசிரியர் சி. மெளனகுரு அவர்களே.


No comments: