Wednesday, June 16, 2010

எதிராடல்

சாதி,மொழி,அரசியல் தொடர்பான விவாதத்தில் ஆதவன் தீட்சண்யாவின் கருத்துக்கள் குறித்து

- ராஜன் குறை -


ஆதவன் தீட்சண்யாவின் கோபமும், “கபடம்” பற்றிய ஐய உணர்வும் எனக்குப் புரிகிறது. என் கருத்துக்களை அவர் மறுத்துள்ளார். சாதி வேறு சாதீயம் வேறு என்று பார்க்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளார். பார்ப்பனச் சொற்களை புழக்கத்தில் விடுவது தவறுதான் என்று நினைக்கிறார். இந்த மாறுபாடுகள் குறித்து தொடர்ந்து விவாதிப்பது அவசியம் என நினைக்கிறேன். மேலும் இது தொடர்பான சிந்தனைப் புலம் மிகவும் விரிந்தது. பிரம்மாண்டமானது. எழுத எழுதத்தான் என் கருத்துக்களை தெளிவாகச் சொல்ல முடியும். ஆனால் என் கருத்துக்களை எப்படியாவது பிறர் ஏற்கச்செய்யவேண்டும் என்று நான் நினைப்பதில்லை. அவர் சொல்வது சரியாக இருக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன. எனினும் விவாதத்தை தொடரும் விதமாக அவருக்கு மதிப்பளித்து ஒரு சில எண்ணங்களை இங்கு பதிக்கிறேன்.

நான் சமூக ரீதியாகப் பார்ப்பனர்களை ஆதரித்து எந்தச் சந்தர்ப்பத்திலும் எழுதியதோ, பேசியதோ கிடையாது. அவர்களுடன் சேர்ந்து இயங்கியதும் கிடையாது. ஏனென்றால் ஆதவன் சுட்டிக்காட்டியுள்ளபடி வரலாற்றில் பார்ப்பனர்கள் இழைத்துள்ள பல்வேறு கொடுமைகளைப்பற்றி உணர்வு எனக்கும் தீவிரமாக உண்டு. அதனால் சமூகத்தின் பிற பகுதியினர் அவர்கள் மேல் கோபம் கொள்வதற்கான எல்லாவித நியாயங்களும் உண்டு என்பதை நான் முழுமையாக அங்கீகரிப்பவன். நான் பிறப்பால் பார்ப்பனன் என்பதால் அதிகமாகவே எனக்கு பார்ப்பனர்களின் வரலாற்றின் மீது கடுமையான கோபமும், என் பிறப்பு பற்றிய குற்றவுணர்ச்சியும் உண்டு. கடந்த முப்பது ஆண்டுகளில் எத்தனையோ அனுபவங்கள், எத்தனையோ தோழர்கள் – அனைத்தையும் கடந்த பிறகு என்னைப் பற்றி அனைவருக்கும் தெரியும் என்ற தவறான நம்பிக்கையினால் நானே நான் பார்ப்பனன் என்பதை சுட்டிக்கொள்வதும் சமீபத்தில் நேர்கிறது. அதன் பொருள் எனக்கு அது பெருமையாக இருக்கிறது என்பதல்ல; அது சமூக யதார்த்தம் எனத் தோன்றுவதுதான். ஒரு நெருங்கிய நண்பர் ஒரு பின்னிரவில் நான் பெருமை கொள்வதாகத் திரித்துப் பேச நேர்ந்தால் நான் வருந்துவதுமில்லை. எல்லோருக்கும் அவரவர் உண்மையை நிறுவுவதில் ஒரு அவசரம்தானே? அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் நான் நல்லவன், நல்லவன் என்று வாதிடுவதும் மிகவும் அலுப்பான விஷயம்தான். தீர்ப்பை சமூகத்துக்கு விட்டுவிட்டு நாம் எழுத்தைப் பார்க்க வேண்டியதுதான்.

சமீப காலங்களில் நான் அரசியலின் பல்வேறு பரிமாணங்களையும் ஒருசேர கணக்கில் எடுத்துக்கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். அப்படி பார்க்கும்போது ஒருபுறம் முதலீட்டியம் அனைத்து மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் செயல்பாடுகள் தீவிரமடைவது, குடியுரிமை என்பது பற்றிய பிரக்ஞையே வளராத அரசியல் சமூகம், அரசியல் விவாதங்களை முன்னெடுத்துச் செல்ல சாத்தியமில்லாமல் பிளவுண்டிருக்கும் அறிவுலகம் போன்றவற்றையெல்லாம் கணக்கில் கொள்ள நேர்கிறது. இதில் சாதி என்பது இன்றைய அரசியலில் எவ்வாறு இடம்பெறுகிறது என்பதையும் ஊன்றிப்பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே, எந்தவொரு விவாதக்களமானாலும் புதிய சிந்தனைகளை அனுமதிக்கத்தான் வேண்டும் என்ற உறுதியும் எனக்கு ஏற்பட்டுள்ளது. என் பிறப்புசார்ந்த குற்றவுணர்ச்சிக்காக என் சிந்தனைகளை எழுதாமலேயே இருப்பது சரியென்று எனக்குப் படவில்லை. ஆனால் நான் அவற்றை எழுதத்துவங்கிய விதமும், நேரமும் ஈஷிக்கொண்ட பிரச்சினையால் திடீரென்று நேர்ந்துவிட்டது. அவ்வளவுதான்.

சாதி ஒழிப்பைத்தான் இறுதி இலட்சியமாக எல்லா நாகரிக மனிதர்களும் கொள்ள முடியும். ஏனெனில் பிறப்பு கடந்த சுய உருவாக்கமே மானுட நாகரிகத்தின் இலட்சியமாக இருக்க முடியும். ஆனால், உடனடியாக சாதி ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுப்பதா, சாதி சமத்துவத்திற்கு முன்னுரிமை கொடுப்பதா என்பதுதான் கேள்வி. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திலிருந்து தொடங்கிய பெரியார் சாதி சமத்துவத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அரசியலை பெரிதும் மேற்கொண்டார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் சாதி ஒழிப்பை ஒரு இலட்சியமாகத் தொடர்ந்து வலியுறுத்தினார் என்பதிலும் சந்தேகமில்லை. சாதி ஒழிப்பை உடனடி வேலைத்திட்டமாக அவர் சொன்னது அரசியல் நிர்ணய சட்டம் உருவானதை ஒட்டி என்று கருதுகிறேன். அப்போதுதான் இந்த சட்டமியற்றுவது பற்றிய மேற்கோள் என்று நினைக்கிறேன். நான் பெரியாரை ஆனைமுத்து தொகுப்புகளில் படித்து முன் அனுமானங்களை கட்டுரையாக எழுதி பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் பின்னர் மீண்டும் விரிவாகப் படிக்க வாய்ப்பு அமையவில்லை. என் கருத்துக்களில் தவறிருந்தால், பெரியார் ஆய்வாளர்கள் கூறினால் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். என் சிந்தனையை மீண்டும் தெளிவாகக் கூறுகிறேன்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அதன் பிறகு இட ஒதுக்கீடு போன்ற இரண்டு முறைகளுமே சாதிகளை அங்கீகரித்து சம வாய்ப்பு, சமத்துவம் ஏற்படுத்தும் களங்கள் என்று கூறலாம். ஒரு நவீன சமூகத்தின் அங்கங்களாக சம வாய்ப்புகளுடன் அனைத்து சாதியினரும் இடம் பெரும்போது பழைய நிலவுடமைச் சமூக சாதி ஏற்றத்தாழ்வு முதலில் நீங்கி பிறகு சாதியும் கலைந்துவிடும் என்பது ஒரு எதிர்பார்ப்பு. எனவே இரட்டைக் குழல் துப்பாக்கி போல சாதி சமத்துவம், சாதி ஒழிப்பு இரண்டையுமே வேலைத்திட்டங்களாகக் கொண்டாலும் முதலில் சாதி சமத்துவத்திற்கே அழுத்தம் கொடுக்க நேரும். ஒரு குழாயில்தான் ஒரு நேரத்தில் சுட முடியும். அப்போது சாதிகளைப் பற்றி உரக்கப் பேசத்தான் வேண்டும். அந்தப் போக்கிலேயே இன்று சாதி மக்களாட்சி அரசியலின் தவிர்க்கவியலாத அலகாகியிருக்கிறது. இது நாம் விரும்பாவிட்டாலும் சந்திக்கும் யதார்த்தம். நானும் வரலாறு, யதார்த்தம் பற்றியெல்லாம் என் கட்டுரையில் குறிப்புட்டுள்ளேன். சாதியின் இயங்கியல் பற்றி விரிவாக எழுதும் முயற்சியும் இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் உண்மையிலேயே பார்ப்பன நலன் எங்கெல்லாம் பேணப்படுகிறது, எப்படி வரலாற்றில் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கான முன்னேற்றத்தை உறுதி செய்வது என்பது பற்றியெல்லாம் தொடர்ந்து உரையாட வேண்டியுள்ளது. பார்ப்பனீயம் என்றால் இன்றைய நிலையில் என்ன பொருள், அது எந்தெந்த தளங்களில் எப்படி செயல்படுகிறது என்பதை நாம் பொறுமையாக விவாதிக்க வேண்டும். வார்த்தைகள் அவையளவிலேயே பார்ப்பனீயம், தனிப்பட்ட நம்பிக்கைகள், பூணூல், சடங்கு போன்றவைதான் பார்ப்பனீயம் என்பது போன்ற கருத்துக்கள் இன்றைக்கு பொருந்தாது என்பது என் கருத்து. ஒரு புறம் அது பெரிய நிறுவனங்களை அவர்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க உதவுகிறது. இரண்டாவது மிகவும் பலவீனமான தனிமனத உலகைப் போய்த் தாக்குகிறது. உலகமெங்கிலும் நவீன காலம் ஏற்படுத்தும் அடையாளப் பசியிலிருந்து தனி மனிதர்கள் தப்ப முடியாது தத்தளிப்பது கண்கூடு. மத அடிப்படைவாதங்கள் இலட்சக்கணக்கான மக்களை காவு கொள்கின்றன. மென்மையான கலாசார சுய உருவாக்கத்திலிருந்து பிய்த்தெறியப்படும் நவீன மனிதர்கள் பேரடையாள வெறியர்களாக மாறுகிறார்கள். அ.மார்க்ஸ் கூறியிருக்கும் உள்-புறம் என்ற அடையாள உருவாக்கத்தின் இரண்டு பரிமாணங்கள் பற்றியும் உலக அளவில் இன்று நடந்து வரும் விவாதங்கள் மிக முக்கியமானவை. தமிழில் அறிமுகப்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் அவற்றில் நாம் தமிழில் இதுவரை சந்திக்காத நவீன காலம், செக்யூலரிஸம் பற்றிய விமர்சனங்கள் அடங்கியுள்ளன. உண்மையில் இந்துத்துவ ஆபத்தை முழுதும் களையவேண்டுமென்றால் அத்தகு சிந்தனைகள் அவசியம் என நான் நினைக்கிறேன். ஆதவன் தீட்சண்யா, லீனா மணிமேகலை உள்ளிட்டவர்கள் புதிய சிந்தனைகளை நோக்கி நகரவில்லையென்றால் மேலும் மேலும் எதிரிகள்தான் வலுவடைவார்கள் என்பதே என் கவலை. அது தவறாகவும் இருக்கலாம். ஆனால் என்னத்தான் கூறுகிறேன் என்று பேசிப்பார்ப்பதில் தவறில்லையே? ஆதவன் தீட்சண்யாவோ, லீனா மணிமேகலையோ அவர்கள் போன்ற பிற முற்போக்கு வர்க்க சாதி ஒழிப்பு போராளிகளோ எவ்வளவு கோபமாகத் தாக்கினாலும், என் அணைப்பை சந்தேகப்பட்டாலும் அவர்கள் என் தோழர்கள்தான். அவர்களிடம் அவர்கள் அனுமதிக்கும் வரை நான் பேசித்தானாகவேண்டும். நான் என்ன கூறுகிறேன் என்பதை மேலும் தெளிவுபடக் கூற இன்னம் கொஞ்சம் காலமாகும்; அவ்வளவுதான். அப்போதும் அவர்கள் என் சிந்தனைகளை மறுத்தாலும் அதை நான் மனதார வரவேற்பேன். ஏனெனில் நான் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளேனே தவிர, தவறில்லாமல் சிந்திப்பேன் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

இவறையெல்லாம் ஒட்டியே நவீனத்துவ இலக்கிய தளத்தில் சமீப காலமாக உருவாகியிருக்கும் பிறப்படிப்படையிலான பார்ப்பன விரோத மனோபாவம் மேலும் முற்போக்கு சக்திகளுக்குள் பிளவைத்தான் ஏற்படுத்தும் என்பது என் கருத்து. ஏனென்றால் அது பார்ப்பனர்களுடன் நிற்பதில்லை. லீனா புதிதாக தனிப்பட்ட வார்த்தைகளுக்கே கருத்தியல் முக்கியத்துவத்தை கொடுத்தார். எனக்கு அத்தகைய போக்கு நம்மை சரியான அரசியலுக்கு இட்டுச்செல்லாது என்று தோன்றுகிறது. இந்த எனது கருத்து தவறு என்றால் விட்டு விடுங்கள். சரி என்றால் எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் எத்தனை காலம்தான் ஆத்துக்குப் போவதை கிண்டல் செய்வது? வீட்டை அகம் என்று அழைப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது என கவனித்தால் நம் அரசியல் தடம் புரண்டுவிடுமா? பார்ப்பனர்கள் அதிகாரக் களங்களில் செயல்படுவதை விமர்சிக்காமல் இப்படி அன்றாடப் பேச்சையும், நடவடிக்கைகளையும் இகழ்வதாலும், அதிருப்திக்களங்களில் நவீனத்துவ இலக்கியம் படைப்பவர்களை சாடுவதாலும் எப்படி ஒடுக்கப்படும் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்?

நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவனல்ல. என்னால் நிரம்பவும் எழுதிவிட முடியாது. அதனால் சமூகத்திற்கு பெரிய ஆபத்து எதையும் என்னால் ஏற்படுத்தி விட முடியாது என நம்புகிறேன். எனவே என் சிந்தனைகளை சந்தர்ப்பம் கிடைக்கும்போது தொடர்ந்து பகிர்ந்துகொள்வேன். நிறப்பிரிகை பத்திரிகையின் முதல் மூன்றாண்டுகளில் கடுமையான கருத்து மாறுபாடு கொண்டவர்களெல்லாம் நட்புணர்வுடன் கலந்து பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அப்படிப்பட்ட காலம் மீண்டும் சாத்தியமானால் சாதீயம், பார்ப்பனீயம் பற்றிய கருத்தரங்கொன்றில் சந்திப்போம். தனியாகவும் நான் உரையாடலுக்கு எங்கும் வரத் தயாராக இருக்கிறேன். என் சிந்தனையில் பிழையிருக்கலாம்; நோக்கத்தில் சூழ்ச்சியில்லை என்பதை யாரும் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மடியில் கனமிருந்தால்தானே, வழியில் பயம்? (பார்பனீயப் பழமொழியோ? ஒரு நகைச்சுவைக்காக கேட்கிறேன் - கோபப்படவேண்டாம்). சாதி அடையாளத்தைப் பற்றி கும்பகோணத்தில் கி.ராஜநாராயணனனின் பாலியல் எழுத்துக்கள் தொடர்பான கூட்டத்தில் அன்றைய நிறப்பிரிகை தோழர்களுடன் வெளிப்படையாகப் பேசி சிரித்து மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. நமக்கு நகைச்சுவையும் சாத்தியம்தான்.

நன்றி:லும்பினி


No comments: