Tuesday, May 11, 2010


பிரகீத்திற்காக எழுப்பப்படும் சந்தியாவின் குரல்
-சுனந்ததேசப்பிரிய-
இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் ஆரம்பமாகிய கடந்த ஏப்ரல் 22ம் திகதி தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களை ஏற்றிய ஆடம்பர வாகனங்களை நோக்கி ஓடிய பெண் ஒருவரும், ஆண் பிள்ளை ஒருவரும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண் சந்தியா ஹெக்நேலியகொடவாகும். இவர்கள் இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன, அதாவது கடந்த ஜனவரி 24ம் திகதி கொழும்பில் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொடவைத் தேடித் தருமாறு கோரும் துண்டுப் பிரசுரங்களையே விநியோகித்தனர். சந்தியா, பிரகீத்தின் மனைவியாவார். அந்த ஆண் குழந்தை பிரகீத்தின் மூத்த புதல்வர். கணவனையும், தந்தையையும் தேடி மனைவியும், மகனும் மேற்கொள்ளும் இந்த முயற்சி இலங்கையின் மனித அனர்த்தம் மாத்திரமல்லாது எதிர்பார்ப்பின் அடையாளமாகும்.

திருமணத்திற்கு முன்னர் பெண் உரிமை செயற்பாட்டாளராக பணியாற்றிய சந்தியா, கடந்த மூன்று மாதங்களாக காவல்துறை நிலையங்களுக்கும், அரசியல் வாதிகளிடமும் சென்று காணாமல் போன தனது கணவரைத் தேடிக் கொள்வதற்காக பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தார்.

காணாமல் போன தனது கணவரைத் தேடி இந்தப் பெண் இரண்டு மகன்களுடன் முன்னெடுத்துவரும் இந்த முயற்சிகளுக்கு 100 நாட்கள் கடந்துள்ளன.

அதேபோல் மே மாதம் மூன்றாம் திகதி சர்வதேச ஊடக தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பிரகீத் குறித்து மறக்க இடமளிக்க முடியாது எனக் கூறும் சந்தியா, அவர் தற்போதும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் எனவும் அவரை விடுவித்துக் கொள்ள முடியும் எனவும் நம்பிக்கைக் கொண்டுள்ளார்.

இது சந்தியாவின் குரலாகும்! பிரகீத் இல்லாத வாழ்க்கை இருண்டு போயுள்ளது. பிரகீத் வெளியில் பேசாத பல விடயங்களை தனது குழந்தைகளுடன் பேசினார். இரண்டாவது மகன் தந்தை மீது அதிகம் அன்பு வைத்துள்ளார். அவர் மூத்த மகனுடன் அரசியல் பேசுவது போலவே கடந்த கால கதைகளையும் சொல்லிக் கொடுப்பார். அவர் இரவு நேரங்களில் தான் கணனியில் கட்டுரைகளை எழுதினார். கட்டுரைகளில் பிழையிருக்கிறதா எனப் பார்த்து திருத்துமாறு என்னிடம் அதிகாலையில் கூறுவார். பிரகீத் தகப்பன் போலவே கணவன் என்ற முறையில் மிகவும் சிறந்த நபராவார். பிரகீத் விரைவாக கேலிச் சித்திரங்களை வரைவார். அவர் கேலிச் சித்திரக் கண்காட்சியொன்றை நடத்த தயாராகி வந்தார். பிரகீத்தின் பெயரில் அந்தக் கண்காட்சியை நாம் விரைவில் நடத்துவோம். இதன்மூலம் மேலும் பலருக்கு பிரகீத்தை புரிந்துகொள்ள முடியும்.

எப்படி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரகீத் குறித்து கூறுவது என எண்ணிக் கொண்டிருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகிங்கள் என சிறிதுங்க சகோதரர் கூறினார். தனியாக சென்று விநியோகித்தால் காவல்துறையினர் இடையூறு செய்யமாட்டார்கள் என அவர் கூறினார். நான் சிறிய கோரிக்கையொன்றை எழுதினேன். எனது மூத்த புதல்வர் அதனை ஆங்கிலத்தில் எழுதி தந்தையின் புகைப்படத்தை இணைத்து இரண்டு மொழிகளில் அதனை அச்சிட்டோம். இதனைத்தான் நாங்கள் அன்று விநியோகித்தோம்.

பிரகீத் காணாமல் போன மறுதினமான ஜனவரி 25ம் திகதி கொட்டாவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றபோது, அவர்கள் முறைப்பாட்டை எழுதமாட்டோம் எனக் கூறினார்கள். எனினும், நான் எப்படியாவது முறைப்பாட்டை செய்தேன். அன்றைய தினம் இரவு கொஸ்வத்த காவல்நிலையத்திலும் முறைப்பாடு செய்தேன். ஜனவரி 30ம் திகதி எமது பிராந்தியத்திற்குப் பொறுப்பான உதவிக் காவல்துறை அத்தியட்சகர் தேசபந்து தெனுவரவை சந்தித்தேன். மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறையிடச் சென்றபோது அங்கிருந்த சமகி பெரேரா என்ற அதிகாரி இந்த ஆணைக்குழு காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளும் இடமல்ல எனக் கூறினார். என்னுடன் சென்ற சட்டத்தரணி காரணமாகவே முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவினால், கொட்டாவ, கொஸ்வத்த, மிரிஹான காவல்துறை நிலைய அதிகாரிகளிடம் தகவல்களைக் கோரப்பட்டது. அனைத்துக் காவல்துறை அதிகாரிகளுமே விசாரணைகள் இன்னமும் முடிவடையவில்லை எனவும், இதனால் தகவல்களை வழங்க முடியாது எனக் கூறினர். இதனிடையே நான் அறிந்த அரசியல் தலைவர்களைச் சந்தித்தேன். பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்தேன். பிரகீத்தை தேடிக் கண்டுபிடிக்க உதவுமாறு நான் கோரினேன். சிலர் தைரியம் கோரினார்கள். சிலர் மனம் உடையும் படியான கதைகளைக் கூறினர். ஆபத்தில் விழுந்தால் மாத்திரமே மனிதர்களை அறிந்துகொள்ள முடியுமென்பதை நான் புரிந்துகொண்டேன்.

இதன்பின்னர் மிரிஹான காவல்துறையினர் விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து கடந்த இரண்டாம் திகதி நான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்றபோது அங்கிருந்த காவல்துறையினர் சோதிடம் பார்க்கவில்லையா எனக் கேட்டார். நான் சோதிடம் பார்த்தேன். அனைவரும் பிரகீத் உயிருடன் இருப்பதாகக் கூறினார்கள் என அந்தக் காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்தேன். என்ன செய்வது நாங்களும் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகிறோம் என அந்த அதிகாரி தெரிவித்தார். காவல்துறை அதிகாரிகளைப் போலவே ஊடகவத்துறை அமைச்சரும் பிரகீத் ஓரிரு நாட்களில் வருவார் என ஆரம்பத்திலிருந்தே பகிரங்கமாக கூறிவந்தனர்.

ஏப்ரல் மாதத்தின் முதல்வாரத்தில் கருத்து தெரிவித்த காவல்துறைப் பேச்சாளர், பிரகீத் குறித்து இண்டு வாரங்களில் சிறந்த தகவல் கிடைக்குமெனக் கூறினார். இன்னும் அவ்வாறான தகவல்கள் கிடைக்கவில்லை. பிரகீத் தம்புள்ளையில் இருப்பதாகக் கூறி அரசாங்கத்தின் தினமினப் பத்திரிகை, முகவரியோடு செய்தியொன்றை வெளியிட்டது. இதன்பின்னர் அந்தச் செய்தி குறித்து விசாரணை நடத்துமாறு நான் மிரிஹான, ஹோமாகம காவல்நிலையங்களுக்கும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் கடிதம் மூலம் கோரினேன். எனினும், அந்த கடிதங்களுக்கு எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை. செய்தியை வெளியிட்ட நபரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை

. பிரகீத் காணாமல் போவதற்கு முன்னர் அவரை வெளியில் வருமாறு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணை நடத்தப்படுகிறதா? இல்லையா? என்பதை அறிய முடியவில்லை. அந்த கையடக்கத் தொலைபேசியின் சிம் அட்டையில் அன்றைய தினம் பிரகீத்துடன் மாத்திரமே உரையாடப்பட்டுள்ளது. இதன்மூலம் அது திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. நான் காவல்துறை நிலையங்களுக்குச் சென்ற போது விவசாயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எவரையாவது தெரியுமா என என்னிடம் கேட்டனர். குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரது செயலாளரே அவ்வாறு இருப்பதாக நான் கூறினேன். காணாமல் போவதற்கு நான்கு நாட்களுகு;கு முன்னர் பிரகீத் அவருடன் தொலைபேசியில் உரையாடியதாக நான் கூறினேன். அதன்பின்னர், பிரகீத் மிகவும் அச்சத்துடன் காணப்பட்டார்.

பிரகீத் காணாமல் போன பின்னர் அந்தச் செயலாளர் எமது தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளிப்பதில்லை. அவர் முன்னர் எமக்கு சிறந்த நண்பராக இருந்தார். தொலைபேசி அழைப்பு குறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணையையும் நடத்தவில்லை. பிரகீத் ஓகஸ்ட் மாதம் கடத்தப்பட்டபோது அவரது நண்பரான ஆங்கில மொழி ஊடகவியலாளர் ஒருவர் தலையிட்டே அவரை விடுதலை செய்ததாக அந்தச் செயலாளர் அண்மையில் கூறியிருந்தார். இந்தக் கதையை தமிழ் அரசியல் கட்சியொன்றில் பணியாற்றும் பிரகீத்தின் மற்றுமொரு நண்பரும் கூறினார். இதுகுறித்து நான் அந்த ஆங்கிலமொழி ஊடகவியலாளரிடம் கேட்டேன். அவர் மதுபோதையில் கூறும் கதைகளை கவனத்தில் எடுக்க வேண்டாம் எனக் கூறினார்.

ஓகஸ்ட் மாதம் தன்னைக் கடத்திச் சென்ற குழுவினர் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என பிரகீத் எண்ணினார், அவர் கடத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தன்னைக் குறித்து பாதுகாப்புப் பிரிவினர் அதிக மதிப்பீடுகளைக் கொண்டிருப்பதாகக் கூறினார். இதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதேபோல், கவனமாகவும் இருந்தார். அரசியல் காரணங்களின் அடிப்படையில் பிரகீத் போன்று காணாமல் போனவர்களின் மனைவிமாரை இணைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்த எண்ணியுள்ளேன். இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கையில் தற்போது எவரும் இல்லை. இதன்காரணமாக நாங்கள் புதிதாக மேற்கொள்ளவுள்ளோம்.

மனித உரிமை என்ற விடயம் நாட்டில் இல்லை. ஐந்து அல்லது ஆறு பேர் மாத்திரமே உதவுவதற்காக இருக்கின்றனர். எமக்கு பத்துபேர் இருந்தால் போதும். பிரகீத் அனைத்துக் குழந்தைகளையும் நேசித்த மனிதர். சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைவரும் சமமானவர்கள் என அவர் எப்போதும் கூறுவார். யுத்தத்தில் மக்கள் கொல்லப்படும்போது பிரகீத் மிகவும் கவலையடைவார். எழுதவேண்டியதை எழுதி முடிக்க வேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்பு அவரிடமிருந்தது. அதேபோல் கேலிச்சித்திர கண்காட்சியொன்றை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவரிடம் இருந்தது. இவற்றைத் தான் பிரகீத் குறித்து கூறமுடியும். இந்த எதிர்பார்ப்புக்களை நாங்கள் இன்னும் கொண்டிருக்கிறோம். அந்த எதிர்பார்ப்பில் தான் நாங்கள் மூவரும் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். பிரகீத் வருவார் என நாங்கள் இரவு பகலாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
நன்றி :gtn

No comments: