Thursday, April 08, 2010

கோயில் இல்லா லண்டனில் குடியிருக்க வேண்டாம்

-கலையரசன்-
("லண்டன் உங்களை வரவேற்கிறது!" - நான்காம் பகுதி)


லண்டனுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்னும் அங்கீகரிக்கப்படாத அகதியாக காலம் தள்ளும் அந்த வாலிபர் விரக்தியின் விளிம்பில் காணப்பட்டார். தனது வழக்கறிஞர் இலகுவாக வெல்ல வேண்டிய வழக்கில் குளறுபடி செய்து விட்டதாக குறைப்பட்டார். லண்டனில் அகதியாக பதிந்த நாளில் இருந்து அந்த வழக்கறிஞருக்கு ஆயிரக்கணக்கில் பணம் கட்டியும் ஒரு பயனும் இல்லை. இறுதியில் தஞ்ச மனு நிராகரிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறும் நிலை வந்த சோகத்தை எண்ணி வருந்தினார். இத்தனைக்கும் அந்த அப்பாவி தமிழ் அகதியின் வழக்கறிஞரும் ஒரு தமிழர்.

லண்டனில் நிறைய தமிழ் வழக்கறிஞர்கள் தமிழ் வாடிக்கையாளர்களை நம்பியே தொழில் செய்கின்றனர். இங்கிலாந்து வரும் அனைவருக்கும் ஆங்கிலம் தெரிவதில்லை. தெரிந்தாலும் ஒரு தமிழ் வழக்கறிஞர் தமக்கு சாதகமாக வாதாடுவார் என்று எதிர்பார்க்கின்றனர். பல தடவை அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போகின்றது. தம்மிடம் வரும் அப்பாவி தமிழர்களை பணம் கறக்கும் காராம்பசுவாகவே வக்கீல்கள் கருதுகின்றனர். ஒரு வழக்கு வென்றாலும், தோற்றாலும் தனக்கு வருமானம், என்பதே பல வழக்கறிஞர்களின் நிலைப்பாடு. கரிசனையுடன் வழக்காடும் ஒரு சிலரை தவிர, மற்றவர்கள் ஏனோ, தானோ என்றே நடந்து கொள்கின்றனர். இதயசுத்தியுடன் நேர்மையாக தொழில் செய்பவர்கள் பாடுபட்டாலும் பலன் கிடைக்காதது வேறு விஷயம்.

தஞ்சம் கோரும் அகதிகளின் வழக்குச் செலவுகளை அரசு பொறுப்பேற்கிறது. பிரிட்டிஷ் அகதிகள் தொடர்பான சட்டம் வழங்கும் மனிதாபிமான சலுகைகளை பல தமிழ் அகதிகள் பயன்படுத்துவதாக தெரியவில்லை. லண்டன் வந்தவுடன் உறவினர், நண்பர்களுடன் தங்கிக் கொள்வது காரணமாக இருக்கலாம். "முதலாவது தலைமுறையை" சேர்ந்த அவர்களது உறவினர்களும் வந்தவுடன் வேலை தேடுவதிலேயே குறியாக இருந்திருப்பார்கள். தமது சட்ட உரிமைகளை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்திருக்காது. பெரும்பாலான தமிழர்களின் அறியாமையை பல தமிழ் வக்கீல்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஒரு அகதியின் சார்பாக மேன்முறையீடு செய்வதற்கு ஆகும் செலவை அரசே கொடுக்கின்றது. பிரிட்டனில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கான அரச நிதியில் இருந்து அந்தப் பணம் வழங்கப்படுகின்றது. பொதுவாகவே பணக்கார வாடிக்கையாளரை வைத்துக் கொள்ளுமளவு அதிர்ஷ்டமற்ற வக்கீல்களும், புதிதாக தொழில் முனைவோருமே அகதிகளுக்காக ஆஜராகின்றனர். இதனால் அப்படியானவர்களை ஊக்குவிக்கவும் சட்ட செலவுகளுக்கான அரச மானியம் பயன்படுகின்றது. ஆனால் எனக்கு பல அகதிகள் கூறிய கதைகள் திடுக்கிட வைத்தன. ஒரு பக்கம் வழக்குக்கு அரச நிதியை பெற்றுக் கொண்டே, மறு பக்கம் அகதியிடம் இருந்தும் குறைந்தது ஆயிரம் பவுனாவது அறவிட்டுள்ளனர். எப்பாடு பட்டாவது பிரிட்டனில் தங்குவதற்கு விசா கிடைக்க வேண்டும் என்பதற்காக, அகதிகளும் இரவாய்ப், பகலாய் பாடுபட்டு உழைத்த பணத்தை வக்கீலிடம் கொட்டுகின்றனர். அப்படி பணத்தை வாரியிறைத்து, எதுவும் கிடைக்காது ஏமாந்த அகதிகள் பலர்.

பிரிட்டனில் பத்துக்கும் மேற்பட்ட பெரிய நகரங்கள் இருந்த போதிலும், தமிழர்கள் லண்டனை தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் உண்டு. நான் பார்த்த அளவில் பிரிட்டன் வரும் பன்னாட்டு அகதிகள், அரசு வழங்கும் சமூக நலன் கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டு, முகாம்களில் வாழ்கின்றனர். ஆப்கானிஸ்தான், ரஷ்யா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் அகதிகள் பிரிட்டன் முழுவதும் காணப்படும் அகதி முகாம்களில் வசிக்கின்றனர். எங்கேயோ தொலை தூரத்தில், ஸ்கொட்லாந்து மலைகளில் கூட இந்த முகாம்கள் இருக்கலாம். ஆனால் அந்தப் பிரதேசங்களில் எல்லாம் வேலை வாய்ப்பு அரிது. மேலும் லண்டனில் வசிக்கும் உறவினர்களிடம் வருவதென்றால் நீண்ட நேரம் பிரயாணம் செய்ய வேண்டும். இன்னோரன்ன காரணங்களால் தமிழ் அகதிகள் அரச செலவில் முகாம்களில் இருக்க விரும்புவதில்லை. லண்டனில் ஒரு முகவரியை எடுத்துக் கொடுத்து விட்டு அங்கேயே தங்கி விடுகின்றனர்.

லண்டனில் தங்க விரும்புவதற்கு வேலை வாய்ப்பு மட்டும் காரணமல்ல. லண்டனில் வாழ்வதற்கு ஆங்கில அறிவு அவசியமில்லை. தாய்மொழியான தமிழிலேயே அனைத்துக் கருமங்களையும் ஆற்ற முடியும். தமிழ்க் கடையில் வேலை செய்வதற்கு தமிழ் தெரிந்தால் போதும். சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு தமிழ் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். நோய் வாய்ப்பட்டால் தமிழ் வைத்தியர்கள் இருக்கிறார்கள். ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்க தமிழ் தொலைக்காட்சி இருக்கிறது. அரட்டை அடிக்க தமிழ் வீட்டுக்கு பக்கத்திலே தமிழ் நண்பர்கள் வசிக்கிறார்கள். அப்படியும் வாழ்க்கையில் நிம்மதி இல்லையா? தமிழ்க் கோயில்கள் இருக்கின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று முன்னோர்கள் கூறிவிட்டார்களாம். அதனால் கோயில் இல்லாத லண்டனுக்கு வந்த தமிழர்கள், தமது இஷ்ட தெய்வங்களையும் இறக்குமதி செய்து கொண்டனர். லண்டனில் ஏற்கனவே வட இந்தியர்கள் கட்டிய இந்துக் கோயில்கள் இருக்கின்றன. இந்து மதத்தை சேர்ந்த தமிழர்கள் அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபடலாம், என்று யாருக்கும் தோன்றவில்லை. தென்னிந்திய கட்டிடக்கலையில் கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்தால் மட்டுமே, தமிழ் இந்துக்கள் முக்தி பேறடைவார்கள் என்றொரு ஐதீகம் போலும். லண்டனில் தமிழர்கள் பெருமளவில் செறிந்து வாழும் டூட்டிங், ஈஸ்ட்ஹாம், வெம்பிளி போன்ற புற நகர்களில் பத்துக்கும் குறையாத இந்து-தமிழ் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கோயில் கட்டினால் மட்டும் போதுமா? அக்கம் பக்கம் இருக்கும் வெள்ளையருக்கும், பிற இனத்தவர்களுக்கும் நமது மத கலாச்சாரத்தை அறிமுகப் படுத்த வேண்டாமா? லண்டன் தெருக்களில் தேர் இழுக்கும் ஊர்வலம் அனைவரையும் ஈர்க்கும்.

ஒரு இடத்தில் ஒரு கோயில் மட்டும் இருந்தால் போதுமா? சிவன் கோயில் இருந்தால், அதற்குப் போட்டியாக அம்மன் கோயில் வரும். ஏற்கனவே இரண்டும் இருக்கிறதா? புதிதாக முருகன் கோயில் கட்டப்படும். நல்ல வேளை, இந்து மதத்தில் தெய்வங்களுக்கு குறைவில்லை. எந்தத் தெய்வத்திடம் போனால் கூடுதல் அருள் கிடைக்கும் என்று தெரியாமல் பக்தர்கள் திண்டாடுகிறார்கள். பக்தர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு, மூலஸ்தானத்தில் ஒரு குறிப்பிட்ட தெய்வம் இருந்தால், அதை சுற்றி பிற தெய்வ சிலைகளையும் பிரதிஷ்டை செய்து விடுகிறார்கள். மறக்காமல் எல்லா தெய்வங்களுக்கும் முன்னால் ஒரு உண்டியலையும் வைத்து விடுகிறார்கள். உண்டியலுக்கு பக்கத்திலேயே ஒரு சிறிய அறிவிப்பு. "நீங்கள் போடும் பணத்திற்கு அரசிடம் வரிச் சலுகை பெற வேண்டுமா? இந்தப் படிவத்தை நிரப்புங்கள்."

"லண்டன் உங்களை வரவேற்கிறது!" பகுதி-5)


"நாம் தமிழர், நமது மொழி

-ஆங்கிலம் "- லண்டன் தமிழர்


-
கலையரசன்-


முன்னொரு காலத்தில் இலங்கையில் இருந்து வந்து லண்டனில் குடியேறிய மூத்த குடி தமிழர்களில் பலர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். இவர்களது புலம்பெயர் வரலாறு இலங்கை இனப்பிரச்சினையுடன் நேரடித் தொடர்பு கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கத்தோலிக்க தமிழ் சமூகம் கொழும்பில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தது. இவர்களில் பலர் உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். முன்னாள் ஆங்கிலேய காலனிய விசுவாசிகள். இன்றைய அரசியலில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள். சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில், சிங்கள பௌத்த மேலாதிக்கம் விஸ்வரூபம் எடுத்தது. தமிழருக்கு எதிரான இனக்கலவரங்களில் தமிழ் மேட்டுக்குடியினர் பெருமளவு சொத்துக்களை இழந்தனர். அப்போதும் "ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட கிறிஸ்தவர்களான" தங்களை ஏன் தாக்கினார்கள், என்பது தெரியாமல் விழித்தனர். எப்படியோ கலவரத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் இங்கிலாந்து வந்து நிரந்தரமாக தங்கி விட்டனர்.

கொழும்பு நகரில் வாழும் தங்கள் உறவினர்கள், "ஆங்கிலம் பேசும் அழகைப் பார்த்து, பிரிட்டிஷ் தூதுவராலய அதிகாரிகளே அசந்து விட்டனர்," என்று லண்டன் மேட்டுக்குடி தமிழர்கள் பெருமையடிக்கின்றனர். குடியேறிய பிரிட்டனில் வளரும், இவர்களது பிள்ளைகளுக்கு தமிழ் வாசமே அண்ட விடாது வளர்க்கின்றனர். தமது பிள்ளை வெள்ளையின நண்பர்களைக் கொண்டிருப்பதை விரும்புகின்றனர். இரண்டாவது தலைமுறையை சேர்ந்த பிள்ளைகள், குழந்தைகளாக இருக்கும் போதே பெற்றோர் தமிழ் கலக்காமல் ஆங்கிலம் பேசுகின்றனர். (இதே பெற்றோர் பிற தமிழருடன் கதைத்தால் ஆங்கிலம் கலக்காமல் பேச மாட்டார்கள்.) ஒரு முறை நான் விஜயம் செய்த வீட்டில் இருந்த 16 வயதுப் பையன் தமிழ் கற்க விரும்பினான். உடனே அங்கிருந்த தாய், "நீ தமிழ் பேச கிளம்பினால் உலகம் அழிந்து விடும் (?)." என்று ஆவலை அடக்கினார்.

இலங்கைத் தமிழ் கிறிஸ்தவர்கள் எப்போதுமே இரண்டு பெயர்கள் வைத்திருப்பார்கள். (தமிழ் கலாச்சாரப் படி) சம்ஸ்கிருத பாணிப் பெயர் ஒன்றும், அதே நேரம் (ஞானஸ்நானத்திற்கு பின்னர்) ஆங்கிலப் பெயர் ஒன்றும் சூட்டிக் கொள்வார்கள். ஞானஸ்நானத்தின் போது வைப்பது கிறிஸ்தவ மதம் சார்ந்த பெயர். ஆனால் எப்போதும் அப்படி இருப்பதில்லை. புழக்கத்தில் உள்ள பல ஆங்கிலப் பெயர்களுக்கும், கிறிஸ்தவ சமயத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற விடயம், உண்மையிலேயே அவர்களுக்கு தெரியாது. லண்டனில் வசிக்கும் தமிழ்க் கிறிஸ்தவர்கள், சில இடங்களில் பிரிட்டிஷ் சமூகத்தில் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். லண்டனில் ஒரு தமிழ்ப் பெண்ணின் அனுபவம் இது. அலுவலக வேலை ஒன்றுக்கு விண்ணப்பித்த அவரை, நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த வெள்ளையின நிர்வாகி நம்ப முடியாமல் கேட்டார். "விண்ணப்பித்தது நீங்கள் தானா? நான் வேறு யாரையோ எதிர்பார்த்தேன்." ஆங்கிலப் பெயரை சூட்டிக் கொண்டாலும், வெள்ளை நிறவெறி எம்மை சமமானவர்களாக பார்ப்பதில்லை, என்பதை அன்று உணர்ந்து கொண்டார்.

கொழும்பு மேட்டுக்குடி தமிழர்கள், பிற்காலத்தில் வந்த வட-கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழர்களிடம் இருந்து மாறுபட்ட அரசியலைக் கொண்டுள்ளனர். வட-கிழக்கு தமிழரில் பலர் சிங்களவரோடு எந்தவித இணக்கப்பாட்டையும் கொண்டிராத தீவிர தமிழ் தேசியவாதிகள். கொழும்பு மேட்டுக்குடி தமிழர்கள் சிங்கள இனத்தவருடன் நல்லுறவைப் பேண விரும்புகின்றனர், ஆனால் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை அறவே வெறுக்கிறார்கள். அவர்களின் குடும்பங்களை சேர்ந்த பலர், கொழும்பில் இருந்த காலங்களில் சிங்கள வழிக் கல்வியை பெற்றிருந்தனர். நான் சந்தித்த நண்பர் ஒருவரின் தந்தை, கொழும்பில் தேயிலை வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தவர். 1983 கலவரத்தில் களஞ்சியத்தில் இருந்த தேயிலை மூட்டைகள் யாவும் எரிந்து நாசமாகின. இதனால் அவரது தந்தை மாரடைப்பால் காலமானார். இவ்வளவு இழப்புகளை சந்தித்த போதிலும், தான் சிங்களவர்களை வெறுக்கவில்லை, என்றார் அந்த நண்பர். ஒருவருடைய பொருளாதார பின்னணி தான் அவரது அரசியலை தீர்மானிக்கிறது.

லண்டன் வாழ் கிறிஸ்தவ நண்பர்களுடன், ஒரு ஈஸ்டர் பெருநாளில் கத்தோலிக்க தேவாலயத்திற்கு செல்ல நேர்ந்தது. இங்கிலாந்து வெள்ளையர்களில் பெரும்பான்மையானோர் அன்க்லிக்கன் திருச்சபையை சேர்ந்தவர்கள். கத்தோலிக்க மதத்தவர்கள் மிகச் சிறுபான்மையினர். லண்டனில் குடியேறிய ஐரிஷ்காரர்களும், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்த மக்களும் கத்தோலிக்க தேவாலயத்திற்கு சமூகமளிப்பவர்கள். அதனால் பாதிரியாரும் பிரசங்கத்தில் சியாரா லியோன், இலங்கை ஆகிய நாடுகளில் சமாதானத்தின் தேவை பற்றி கவலை தெரிவிக்க மறக்கவில்லை.

மூன்றாமுலக குடியேறிகள், அகதிகளின் வரவு இல்லாவிட்டால், தேவாலயங்கள் இயங்க முடியாமல் வருமானத்திற்கு திண்டாடியிருக்கும். லண்டனில் பல தேவாலயங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. அவற்றில் சில இன்று மசூதிகளாக, இந்துக் கோயில்களாக மாறியுள்ளன. புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வது மத்திய கால ஐரோப்பிய பண்பாடு. இங்கிலாந்தின் தெற்கே உள்ள கத்தோலிக்க புனித ஸ்தலம் ஒன்றுக்கு வருடா வருடம் கத்தோலிக்க தமிழர்கள் யாத்திரை செல்கின்றனர். இதனால் சில தமிழ் பிரயாண முகவர்கள் போட்டி போட்டுக் கொண்டு "யாத்திரை வியாபாரத்தில்" குதித்துள்ளனர்.

லண்டனில் வசதியாக வாழும் தமிழருடன் பழகுவது ஒரு சுவையான அதே நேரம் கசப்பான அனுபவம். மாற்றிக் கட்டுவதற்கு உடையில்லாத, காலில் போடுவதற்கு செருப்பில்லாத நாட்டில் இருந்து வந்தவர்களின் வீடுகளில், நவநாகரீக ஆடைகளும், விதம்விதமான பாதணிகளும் குவிந்து கிடக்கின்றன. திருமண வீடுகளில் பகட்டுக் காட்டுவது பலருக்கு கைவந்த கலை. குறிப்பாக கலாச்சாரக் காவலர்களான பெண்களின் ரசனையே வேறு. ஒரு திருமண வீட்டுக்கு உடுத்திய சேலையை அடுத்த மாதம் வேறொரு திருமண விழாவில் உடுக்க மாட்டார்கள். அதற்கென்று புதிதாக இன்னொரு சேலை வாங்குவார்கள். (வர்ணத்தை மாற்றிக் கொள்வது இன்னும் சிறப்பு.) தப்பித்தவறி யாராவது முன்னர் ஒரு தடவை உடுத்ததையே போட்டு வந்தால், பிற பெண்களின் பரிகாசத்திற்கு ஆளாக நேரிடும். "இதே நீலக் கலர் புடவையை எங்கேயோ பார்த்தேனே...." என்று கூட்டத்தில் ஒரு பெண் சொல்லத் தொடங்கினால் போதும். அந்தோ பரிதாபம்! உடுத்தி இருப்பதை அவிழ்த்துப் போட்டு விட்டு ஓட வேண்டும் போலிருக்கும்.

சேலை மட்டும் தான் என்றில்லை. சினிமா ஹீரோயின்கள் பாடல் காட்சிகளில் உடுத்தும் கண்ணைக் கவரும் பல வர்ண ஆடைகள் எல்லாம் லண்டனில் கிடைக்கிறது. விலையை மட்டும் கேட்காதீர்கள். அதற்காகவே இன்னொரு வேலை செய்து சம்பாதிக்க வேண்டும். இருந்தாலும் என்ன? ஒவ்வொரு மாதமும் அழைக்கப்படும் விழாவுக்கு, புதிது புதிதாக வாங்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு திருமண விழாவில் உடுத்தியதை, அதற்குப் பிறகு எஞ்சிய வாழ்நாளில் அணிய மாட்டார்கள். அப்படி வாங்கிச் சேர்த்த ஆடைகளைக் கொண்டு ஒரு புடவைக் கடை போடலாம். புடவை மட்டுமல்ல, பாதணிகள், கைப்பைகள் என்பனவும் புதிது புதிதாக மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பொது இடத்தில் மரியாதை போய்விடும். இவ்வாறு மேற்கத்திய நுகர்பொருள் கலாச்சாரத்திற்கு தங்களை அறியாமலே அடிமையாகிக் கிடக்கின்றனர்.

நகைகளைப் பொறுத்த வரை, கடந்த இருபது வருடங்களுக்குள் லண்டன் வந்த தமிழர்களே அனேகமாக தங்கம் வாங்கிக் குவிப்பவர்கள். தாயகத்தில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். லண்டன் வந்து ஓரளவு காசு கையில் சேர்த்ததும், தங்க நகை வாங்கிக் குவிக்கத் தொடக்கி விடுவார்கள். நீண்ட காலமாக லண்டனில் 'செட்டில்' ஆகி விட்ட, தம்மை உயர் நடுத்தர வர்க்கமாக கருதிக் கொள்ளும் தமிழருக்கு தங்க நகை சேர்க்கும் ஆர்வமில்லை. ஆனால் அதற்குப் பதிலாக, தங்கத்தை விட விலை உயர்ந்த, வெள்ளைத் தங்கம், வைர நகைகள் போன்றவற்றை அணிவதிலே ஆர்வம் காட்டுகின்றனர். இவர்கள் வெள்ளையின மேல்தட்டு வர்க்கத்தைப் பார்த்து, சூடு போட்டுக் கொண்ட பூனைகள்.

(தொடரும்)



லண்டனை மீட்ட ஊர்காவல் படைகள்
(லண்டன் உங்களை வரவேற்கிறது! - தொடரின் இறுதிப் பகுதி)
-கலையரசன்-

லண்டன் நகரின் வாகன நெரிசல் அதிகமுள்ள வீதிகளில் ஒன்று. சிக்னல் தரிப்பிடத்தில் ஒரு கார் வந்து நிற்கிறது. அதற்கெனவே காத்து நின்றது போல, நடைபாதை ஓரமாக இருபது வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் ஓடி வருகின்றனர். அவர்களின் கைகளில் கூர்மையான ஆயுதங்கள். வெறியுடன் பாய்ந்து கார் கதவை திறந்து, உள்ளே இருந்தவனை வெளியே இழுத்துப் போட்டு... "சதக், சதக்"... மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கிடையில் காரில் வந்த இளைஞனின் உயிர் பிரிகிறது. பட்டப் பகலில் நடந்த அந்த கொலைச் சம்பவத்தில் கொன்றவர்களும், கொல்லப்பட்டவனும் தமிழர்கள். லண்டனில் வழக்கமாகிப் போன குழுச் சண்டையின் கோரக் காட்சி அது.

லண்டனில் பிறந்த வெள்ளையர்கள் தாம் பிறந்த மண்ணுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்களோ தெரியாது. ஆனால் புலம்பெயர்ந்து வந்து லண்டனில் குடியேறியவர்களின் "மண் பற்று" நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. லண்டன் மாநகரில் தமிழர் அதிகமாக வசிக்கும் பிரதேசமெங்கும் குழுக்கள் காணப்படுகின்றன. "டூட்டிங் குரூப்", "ஈஸ்ட்ஹாம் குரூப்" என்று பல்வேறு ஊர்காவல் படைகள் ரோந்து சுற்றுகின்றன. அந்தந்த ஏரியாக்கள் அவர்கள் கட்டுப்பாட்டில். வேறொரு ஏரியாவை சேர்ந்த குழு வந்து வாலாட்டினால், அவ்வளவுதான். சிறு பொறியே பெரும் மோதலுக்கு வழிவகுத்து விடும். காரணம் எதுவாகவும் இருக்கலாம். "....... நம்மூர் பொண்ணு மேலே கை வைச்சுட்டான், டோய்...?"

பிரிட்டன் எதிர்நோக்கும் முக்கியமான சமூக பிரச்சினைகளில் ஒன்று, இள வயது கிரிமினல் கும்பல்கள், அவர்களுக்கிடையே நடக்கும் கோஷ்டி மோதல்கள். முன்பு வெள்ளையின உழைக்கும் வர்க்க பிள்ளைகளிடையே காணப்பட்ட 'Gang ' கலாச்சாரம், தற்போது பிற இனத்தவர்கள் மத்தியில் பரவியுள்ளது. பெருமளவு உழைக்கும் வர்க்கத் தமிழர்கள் குடிபெயரத் தொடங்கிய அண்மைய இருபதாண்டுகள் குறிப்பிடத் தக்கவை. இவர்களது முதலாவது தலைமுறை கடின உழைப்பின் மூலம் பணக்காரராகலாம் என நம்பியிருந்தார்கள். வருடக்கணக்காக தினசரி 16 மணிநேரம் உழைத்து, சேமித்து; எதிர்கால வாழ்க்கைக்காக, நிகழ்காலத்தை அழித்துக் கொண்டார்கள். இரண்டாவது தலைமுறையிடம் அந்தளவு பொறுமை இல்லை. வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் இன்றே அனுபவிக்க வேண்டும். வருடக்கணக்காக காத்திருக்க முடியாது. அதற்கான குறுக்கு வழிகளை தேடியவர்கள், "Gang கலாச்சாரத்தை" கண்டுபிடித்தார்கள்.

ஆரம்ப காலங்களில் லண்டனில் பாகிஸ்தான், சீக்கிய இளைஞர்களின் குழுக்களுக்கு எதிர்வினையாக, தமிழ் குழுக்கள் உருவானதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார். அதாவது தாம் தமிழ் சமூகத்தின் காவலர்களாக காட்டிக் கொண்டனர். ஆனால் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களே பெரிதும் அவர்களுக்கு பயப்படுகிறார்கள். அதற்கு பின்வரும் சம்பவம் ஒன்றே போதும். ஒரு தமிழரின் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஒரு கார் பெட்ரோல் போட்டுக் கொண்டது. வாகன சாரதியான தமிழ் இளைஞர், கட்டணத்தை செலுத்த கொடுத்த கிரெடிட் கார்ட் போலியானது எனக் கண்டுபிடிக்கப் பட்டது. உடனே பெட்ரோல் நிலைய உரிமையாளர் போலிசுக்கு அறிவிக்க தொலைபேசியை தூக்கினார். அதற்கு சற்றும் பதற்றப்படாமல் அந்த இளைஞர்: "தாராளமாக போலிசுக்கு அறிவிக்கலாம். மாலை வீடு திரும்பும் போது மனைவி, பிள்ளைகள் உயிரோடு இருக்க மாட்டார்கள்!"

லண்டனில் பல அந்நிய நாட்டவர்கள் வாழ்கிறார்கள். தமிழர்கள், இந்தியர், பாகிஸ்தானியர், வங்காளிகள், துருக்கியர், ஜமைக்கர் இவ்வாறு பல்லின சமூகங்கள் லண்டனை வதிவிடமாக கொண்டுள்ளன. இந்த சமூகங்கள் அனைத்தும் தமக்குள்ளேயே நெருங்கிய தொடர்புகளை பேணுகின்றன. இதனால் பல்வேறு குற்றச் செயல்களும் அந்தந்த சமூகங்களுக்குள்ளேயே நடக்கின்றன. அப்படியான தருணங்களில் பெரும்பாலும் வெள்ளயினத்தவரைக் கொண்ட பிரிட்டிஷ் போலிஸ் தலையிடுவதில்லை.

தமிழ் சினிமாவில் வருவது போல, எல்லாம் முடிந்த பிறகு போலிஸ் வந்து குற்றப்பத்திரிகை பதிவு செய்து கொண்டு செல்லும். போலீசைப் பொறுத்த வரை, "இந்த அந்நியர்களே இப்படித்தான். தமக்குள் அடித்துக் கொள்வார்கள்..." என்று பாராமுகமாக இருக்கின்றனர். இதனால் வெளிநாட்டவர்களுக்கு போலிஸ் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை அறவே இல்லை. அண்மைக்காலமாக பல குற்றவாளிகள் கைது செய்யப் பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது கூட, (கிரெடிட் கார்ட் மோசடியில்) பல வெள்ளையினத்தவர்கள் பாதிக்கப்பட்டதனால் எடுக்கப்பட்ட நடவடிக்கை.

வெளிநாட்டவர் செய்யும் குற்றச் செயல்கள் மீதான ஊடகங்களின் பார்வையானது இனவெறியை வளர்க்கப் பயன்படுகின்றது. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் முழு சமூகமும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றது. இதனால் பல வெள்ளையினத்தவர்கள் லண்டனை வெளிநாட்டு குற்றவாளிகளின் கூடாரமாக இனங்காணுகின்றனர். ஆங்கிலேய வெள்ளையர்கள், மொத்த லண்டன் சனத்தொகையில் அரைவாசிக்கும் குறைவாகவே உள்ளனர். அவர்கள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் லண்டன் நகரை விட்டு வெளியேறி வருவதால், அவர்களின் விகிதாசாரம் குறைந்து வருகின்றது. வசதியற்ற வெள்ளையர்கள் கூட, ஓய்வூதியம் பெறும் வயதிலாவது, சைப்ரஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வீடு வாங்கிக் குடியேறுகின்றனர். எங்காவது "கருப்பன் இல்லாத நாட்டில்" சென்று வாழ்வது அவர்களது குறிகோளாக உள்ளது.

இங்கிலாந்தில் 19 ம் நூற்றாண்டிலேயே சில கறுப்பினத்தவர்கள் வந்து குடியேறியுள்ளனர். பிரிட்டனின் காலனியாக இருந்த கரிபியன் தீவுகளில் இருந்தே அவர்கள் வந்திருந்தனர். காலனிகளுக்கான கப்பல் போக்குவரத்து இடம்பெற்ற லிவர்பூல் போன்ற துறைமுக நகரங்களில் இதற்கான சான்றுகள் உள்ளன. 20 ம் நூற்றாண்டு தொடக்கத்தில் பெருமளவு கறுப்பினத்தவர்கள் லண்டனை நோக்கி நகரத் தொடங்கினர். அப்போது அவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுப்பது கடினமாக இருந்தது. அந்தக் காலத்தில், வீடு வாடைக்கு விடுவதாக விளம்பரம் செய்தவர்கள், "கறுப்பர்களுக்கு கிடையாது" என்று குறிப்பிடத் தவறவில்லை.

சரித்திர காலம் தொட்டு இங்கிலாந்து ஒரு குடியேற்ற நாடாக திகழ்ந்துள்ளது. ஆங்கிலேயரின் முன்னோர்கள் ஜெர்மனியில் இருந்தும், நோர்வேயில் இருந்தும் வந்து குடியேறியவர்கள். அரச குடும்பத்தினர் பிரான்சில் இருந்து வந்து குடியேறியவர்கள். இதனால் ஆங்கில மொழியும், இம் மூன்று மொழிகளினதும் கூட்டுக் கலவையாக உள்ளது. அப்படி இருக்கையில் தாமே பிரிட்டனுக்கு சொந்தக்காரர்கள் என்று உரிமை கொண்டாடுவதும், குறிப்பிட்ட சமூகங்களை அந்நியர்கள் என்று வகைப் படுத்துவதும் விசித்திரமானது. ஐரோப்பிய நாடுகள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினை பிரிட்டனையும் வாட்டுகின்றது. நிற அடிப்படையிலான, இனவிகிதாசாரம் மாறுபடுமே என்ற அச்சம் ஒரு காரணம். கணிசமான வரியை செலுத்திக் கொண்டிருக்கும் (வெளிநாட்டு) உழைக்கும் வர்க்கத்தின் விழிப்புணர்வை மழுங்கடிப்பது இன்னொரு காரணம். இதனால் அரசு ஒரு பக்கம் அவர்களை நுகர்பொருள் கலாச்சாரத்தின் அடிமைகளாக வைத்திருக்க விரும்புகிறது. மறுபக்கம் அவர்களின் மீது "குற்றப் பரம்பரை" முத்திரை குத்தி ஒடுக்க நினைக்கிறது.

(முற்றும்)





No comments: