Sunday, April 11, 2010




எரிக் பிராம்
-எஸ். தோதாத்ரி-

பொது உடைமைத் தத்துவம் தோன்றி வளர்ந்து வரும்பொழுது அதை எதிர்ப்பதற்கென்றே தோன்றியவர்கள் பலர் உண்டு. இவர்களில் ஒரு வகையினர் அதைப் பகிரங்கமாகவே எதிர்க்கிறார்கள். இவர்கள் பூர்சுவா முகாமின் பிற்போக்கான சிந்தனையாளர்கள். இவர்களது படைப்புகளில் உழைக்கும் மக்களது மாக்சிசம் கேலிக்குள்ளாக்கப்படுகின்றது@ அல்லது, பலத்த கண்டனத்துள்ளாக்கப்படுகின்றது. ஆனால் அதே சமயத்தில், பூர்சுவா முகாமில் பலர் முற்போக்கான சிந்தனை உள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் உழைக்கும் மக்களது நிலை பற்றிச் சிந்திக்கவும் செய்கிறார்கள். உழைக்கும் மக்களின் தத்துவமான மாக்சிசம் பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் பூர்சுவா எல்லைகளுக்குள் இருந்து கொண்டே மாக்சிசம் பற்றிப் பேசும்பொழுது மாக்சிசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சியில் அவர்கள் மாக்சிசத்தை எதிர்க்கிறார்கள். இப்படி முயற்சித்தவர்களில் ஒருவர்தான் எரிக் பிராம் என்ற அறிஞர். இவரது முயற்சியானது, மாக்சிசத்தின் உயிர் நாடியான அம்சங்களை சிதைப்பதில் வந்து முடிகிறது.

எரிக் பிராமின் கருத்துக்களை ஆராய்ந்தால், இது தெளிவாகத் தெரியும். எரிக் பிராம், ஜெர்மனியர். பிராய்டிசத்தில் அதிக ஆர்வம் உள்ளவர். அவருடைய நேரத்தில் பெரும் பகுதியை சமூக உளவியல்த்துறை ஆய்வில் கழித்தார். இதன் பின்னர் அவர் அமெரிக்காவின் பிராங்பர்ட் ஆய்வுக் குழுவுடன் தன்னை இணைத்துக்கொண்டார்.

எரிக் பிராம் உளவியல்த்துறையில் மிகப்பெரும் சிந்தனையாளராக விளங்கினார். அவர் பிராய்டிசத்தை ஆராய்ந்து அதன் துறைகளை நிவர்த்திக்க முயற்சித்தார். பிராய்ட் அவருடைய உளவியலில் தனி நபரை மையப்படுத்திய அறிஞர். மனித நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் சக்தியாக, மனிதனுக்கும், சமூகத்திற்கும் உள்ள உறவைத் தீர்மானிக்கும் சக்தியாக, அவர் நனவிலி மனதில் உருவமற்று அமுங்கிக் கிடக்கும் ´இட் அல்லது பால் உணர்வை முன்வைத்தார். மனிதனின் நடவடிக்கைகளுக்கு அவர் இந்த ´இட் அல்லது ´லிபிடினல்´ சக்தியை ஆதாரமாகக் காட்டினார். மனிதனது சமூக உறவுகளை அவர் தீர்மானிக்கும் சக்தியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, மனித கலாசாரத்தின் அடிப்படையே இந்த நனவிலி மனதில் உருவமற்றுக் கிடக்கும் பால் உறவு உணர்வுதான் என்று பிராய்ட் கூறினார். பல்வேறு சமூக இயக்கங்கள், கலாசார இயக்கங்கள் ஆகியவற்றிற்கு இந்த ´இட்´ டைத்தான் ஆதார சக்தியாக காட்டினார். படைப்பாளி ஒரு நரம்பு நோயாளி என்றே அவர் கருதினார். பிராய்டின் கருத்து இன்றும் கூட, கலை இலக்கிய உலகில் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை காண முடிகிறது.

அதே சமயத்தில் பிராய்டின் கருத்துக்களை ஆழமாகப் பயின்றவர்கள், அதில் உள்ள குறைகளையும் கண்டனர். அக்குறைகளை அவர்கள் களைய முற்பட்டனர். இவர்கள் புதிய பிராய்டிசவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களது முயற்சி, பிராய்டு புறக்கணித்த சமூக சிந்தனையை பிராய்டிசத்துடன் ஒன்று கலப்பதாக இருக்கின்றது. இவர்களில் முக்கியமானவர் எரிக் பிராம் ஆவார்.

எரிக் பிராமின் Escape from freedom என்ற புத்தகத்தில் அவருடைய கருத்துக்கள். மிகத் தெளிவாகக் காணப்படுகின்றன. எரிக் பிராமின் கருத்துப்படி, பிராய்ட்; சமூகம் பற்றி மிகவும் கொச்சையான கருத்து உள்ளவராகவே இருந்தார். சமூகப் பிரச்சினைகள் பற்றி பிராய்ட்; உளவியல் ரீதியாக கூறியவை யாவும் குழப்பமான முடிவுகளையே தந்துள்ள என்று பிராம் கருதினார்.

பிராய்டின் கருத்து அமைப்பில் Repression அல்லது உள்ளடக்குதல் ஒரு முக்கிய மான கருத்தாகும். பால் உறவு நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு பிராய்ட் இக் கருத்துப் படிமத்தை உருவாக்கினார். பால் உறவு நிகழ்ச்சிகளை மனிதன் வெளியே சொல்ல விரும்புவதில்லை. இவற்றை இரகசியமாகவே வைத்திருக்க விரும்புகிறான். அவற்றில் பெரும்பாலானவற்றை நனவு மனதில் இருந்து நனவிலி மனதிற்குள்ளாக அடக்கிவிடுகின்றான். இது வேண்டத்தகாத நிகழ்ச்சிகளை உள்ளடக்கும் இடத்திற்குச் சென்றுவிடுகிறது. இந்த உள்ளடக்குதல். என்பது, தனிநபர் மனதில் நிகழும் நிகழ்ச்சி: இந்த பால் உறவு நிகழ்ச்சிகளின் உள்ளடக்குதலை பிராய்ட் அவரது கருத்தமைப்பிற்கு அடிப்படையாக ஏற்றுக்கொண்டார்.

எரிக் பிராம் இக்கருத்தை மறுக்கிறார். ”உள்ளடக்கம்” என்பது இன்றைய சமூக அமைப்பில் செயலற்றதாகிவிட்டது. என்று அவர் கூறுகிறார். அதற்கு பதிலாக இன்றைய மனிதனை ஆட்டிப் படைப்பது ”அந்நிய மயமாதல்” இன்றைய தொழிற்சாலை அமைப்புள்ள சமூகத்தில் தனி மனிதன் தன்னை இனங்காண முடியாதவாறு விலகி நிற்கிறான். இந்த அந்நிய மயமாதல் என்ற பிரச்சினை மிக முக்கியமானது என்று பிராம் கருதுகிறார். உளப் பகுப்பாய்வியலில் பிராய்ட் இது பற்றிப் பேசவில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் உளப் பகுப்பாய்வியலில், இந்த அந்நிய மயமாதல் பற்றிக் காணுதல் வேண்டும்@ அது நனைவிலி மனதில் ஏற்படுத்தும் விளைவுகளைக் காண வேண்டும். மனிதனின் தேவைக்கு ஏற்ப சமூகத்தை மாற்றி அமைக்கும் முயற்சியினால் ஏற்படும் மன விளைவுகளை பிராய்டிசம் ஆராய வேண்டும் என்று பிராம் கூறினார். பழைய பிராய்டிசத்தில், சமூகம் மனதில் ஏற்படும் விளைவு பற்றிய ஆராய்ச்சி இல்லாமல் இருந்தும், அதை நிவர்த்திக்க பிராம் முயன்றார்.

விரும்பத் தகாதவற்றை உள்ளடக்குதல் என்பது பிராய்டை பொறுத்த மட்டிலும் அகவயமான ஒன்றாகும். அது ஒரு தனி நபர் மனதில் அகத்தே நிழக் கூடிய நிகழ்ச்சி. அதற்கும் சமூக நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு எதுவும் இல்லை. இவ்வாறு தான் பிராய்ட் கருதினார். எரிக் பிராமின் கூற்றுப்படி, உள்ளடக்குதல் என்பதை அகவயப்படுத்தப்பட்ட ஒன்று என்று கருதக் கூடாது. சமூக நிகழ்ச்சிகளின் தாக்கம்தான் அது என்று அவர் கருதினார். ஒவ்வொரு கால கட்டத்திலும் சமூகம் சில சிந்தனை முறைகளை, வகைகளை உருவாக்குகிறது. இந்த வகைகளுக்குத் தனி நபர் பதில் இறுக்க வேண்டியிருக்கிறது. இவற்றிக்கு முரண்படக் கூடிய உணர்வுகளை, எண்ணங்களை தனி நபர் உள்ளடக்குகிறான். இவ்வாறு பிராம் உள்ளடக்குதலுக்கு சமூக அமைப்பிலிருந்து காரணம் தேடினார். நனைவிலி மனதில் இடம் பெறும் உள்ளடக்குதல் என்ற நிகழ்ச்சிக்குச் சமூகக் காரணங்களைக் காண வேண்டும் என்பதை பிராம் எடுத்துக் காட்டினார். அது வெறும் பால் உறவு சம்பந்தமான விஷயம் அல்ல என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

பிராய்ட் தனி நபரை மையமாகக் கொண்டு, நனவிலி மனதை அணுகினார். ம நிகழ்ச்சிகளைத் தனிநபர் நடவடிக்கைகளின் சாராம்சமாகக் கண்டார். பிராம் அதே நனவிலி மனதை சமூக நிகழ்ச்சிகளிலிருந்து ஆராய முற்பட்டார். பிராய்ட் தனிநபர் நனவிலி மனது பற்றிப் பேசுகிறார். பிராம், சமூக நனவிலி மனது பற்றி ஆராய்கிறார். இந்தச் சமூக நனவிலி மனது என்பது, ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் உள்ள சமூக உறவுகளினால் உருவாக்கப்படும் மனிதனின் மனப் பகுதியைக் குறிக்கிறது. இது சமூகத் தன்மை மிகுந்தது. இந்தச் சமூக நனவிலி மனது, பொதுப்படையான பன்புகளை உடையது.

இந்தச் சமூக நனவிலி மனது என்பது, மனித சாராம்சத்தைக் குறிக்கிறது. இச் சாராம்சத்தில், மனிதனுடைய மூலாதாரமான மாற்ற முடியாத தேவைகள் அடங்கியுள்ளன. இத் தேவைகளைத் தீர்மானிப்பது மனிதனது இருப்பு எல்லாவற்றையும் கடந்த (பிறர், இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம்) ஒரு பொது நிலை ஆகியவற்றிக்கு இடையே உள்ள முரண்பாடு ஆகும்.

இந்த முரண்பாடு உளவியலில் இருப்பதை பிராம் ஆராய்ந்த பின்பு, இதன் காரணமாகத்தான் பெரும் புரட்சிகள் தோன்றுகின்றன என்று கருதினார்.
பிராய்டை இவ்வாறு பூர்த்தி செய்யும் முயற்சியில் இறங்கிய பிராம், ஒரு முழுமையான தத்துவத்தின் உருவாக்க முயற்சியை மேற்கொள்கையில் மார்க்சை ஆளமாகக் கற்றார். பிராமிற்கு மார்க்ஸ்மீது ஒரு பெரிய மரியாதை ஏற்படுகிறது. அதே சமயத்தில் மார்க்சிசம் குறைபாடு உடையது என்று கருதுகிறார். மார்க்சிசம் நடைமுறைப்படுத்தப்பட்ட முறைகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சோவியத் முறையுடன் அவர் முரண்படுகிறார். சோஷலிசக் கோட்பாடுகளிலிருந்து முற்றிலும் முரண்படும் ஒன்று என்று சோவியத் மார்க்சிசத்தை அவர் விமரிசனம் செய்கிறார். மார்க்சிசத்தைச் சிதைத்தற்கு லெனினையும், ஸ்டாலினையும் அவர் குற்றம் சாட்டுகிறார். தமது கடைசிக் காலத்தில் மார்க்சும், எங்கல்சும் குழம்பிவிட்டனர் என்று கூறுகிறார். பிராமின் கருத்துப்படி, மார்க்சிசத்தில் ஒரு பெரிய குறைபாடு உள்ளது. மார்க்ஸ் காலத்தில், பொருள்முதல்வாத அடிப்படையிலான உளவியல் என்பது வளர்ச்சி பெறவில்லை, மனப்பண்புகளைப் பற்றிய இன்று கிடைக்கும் விவரங்கள் அன்று அதிகமாக இல்லை: எனவே மார்க்சின் தத்துவம் உளவியலை முற்றிலுமாக புறக்கணித்த ஒன்றாகும். மார்க்ஸ் மனித உணர்ச்சிகளின் சிக்கலான, வலுவான தன்மைகளை குறைத்தே மதிப்பிட்டார் என்று பிராம் கூறுகிறார். மனிதன், சமூகப் பொருளாதாரக் காரணிகளால் மட்டும் உருவாக்கப்பட்டவன் அல்ல: மனப்பண்புகள் சமூகப் பொருளாதாரக் காரணிகளையும் கட்டுப்படுத்தும். இவற்றை மார்க்ஸ் ஆராயவில்லை என்று பிராம் கூறினார்.
இக்குறையை எவ்வாறு நிவர்த்திப்பது என்ற ஆராய்ச்சியில் பிராம் இறங்கினார். அதன் விளைவாக அவர் ஒரு முடிவிற்கு வந்தார். மார்க்சையும், பிராய்டையும் ஒன்று கலப்பது என்பது அந்த முடிவாகும். மார்க்சிசத்தில் உளவியல் அம்சங்கள் இல்லை. மார்க்சிசம் வெறும் பொருளாதார மனிதனை மட்டும்தான் உருவாக்குகிறது – அவனது மனப்பண்புகளைப் பற்றிய ஆராய்ச்சி அதில் இல்லை. அதே சமயத்தில் பிராய்டிசத்தில் சமூகக் காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. இந்த இரு அம்சங்களையும்; ஒன்று கலப்பதன் மூலம் இவற்றின் குறைகளைக் களையலாம் என பிராம் கருதினார். மார்க்சிசத்தின் சமூகவியல் பார்வையுடன் பிராய்டிசத்தின் உளப்பகுப்பாய்வு முறையை ஒன்று கலந்த ஒரு அமைப்பை அவர் உருவாக்கினார்.

மார்க்சிசத்தின் மையமான பகுதி சமூக நிகழ்ச்சிகளை எது தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது என்பதாகும். மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோர் உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்ற என்று கூறினார். பிராம் இந்த இரண்டினையும் இணைக்கும் பணியினை மேற்கொள்ளும் பொழுது சமூகப் பண்பு என்ற கோட்பாட்டினை உருவாக்கினார். மனித நடத்தை பற்றி பிராய்ட் உருவாக்கிய கூறுகளின் அபிவிருத்தி என்று இந்தக் கோட்பாட்டைப் பிராம் கூறுகிறார். பிராய்ட் காணும் மனிதன், பால் உறவு நாட்டத்தை, ஒரு குறிப்பிட்ட இலட்சியத்தினை நோக்கி திருப்புகின்றன. இந்தக் கண்ணோட்டத்தில் ஒரு மனிதனுக்கும், மற்றொரு மனிதனுக்கும் உள்ள உறவு, இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு ஆகியவற்றை விளக்கப்போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவேதான் மார்க்சிசத்தில் காணப்படும் சமூகச் சிந்தனையை இத்துடன் இணைத்து சமூக நடத்தை என்ற கோட்பாட்டினை பிராம் உருவாக்கினார்.

ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பின் பண்புகளை ஒரு மனிதன் தன் வயப்படுத்துவதில் பல சிரமங்கள் உள்ளன. சமூக அமைப்பிற்கும் பொருத்தமாகத் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படுகிறது. இவ்வாறு சமூக அமைப்பிற்கும் பொருத்தமாக மாறும் நடத்தையைத்தான் பிராம் சமூக நடத்தை என்கிறார். சோசலிச மனித நேயம் என்ற புத்தகத்தில் அவர் கூறுகிறார். அவன் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய விரும்புகிறான். சமூகம் உருவாக்கும் நிபந்தனைகளில் அவன் திருப்தி காண்கிறான். இதன் காரணமாக மனிதனுக்கும் சமூகத்திற்கும் ஒரு இசைவு தோன்றுகிறது.

இந்தச் சமூக நடத்தை என்ற கோட்பாட்டை மார்க்சிசத்துடன் இணைக்கிறார். இது மார்க்சிசத்தை அபிவிருத்தி செய்வதாகும் என்று பிராம் கருதுகிறார்.
மார்க்சிசத்தில் அடிப்படை மேற்கோப்பு என்ற கருத்துப்படிமம் பின்பற்றப்படுகிறது. சமூகம் (உற்பத்திக் கருவிகள், உறவுகள்) அடிப்படை@ அதற்கு சமமான சிந்தனை உலகம், மேற்கோப்பு எனப்படுகிறது. மார்க்சின் கருத்துப்படி அடிப்படையின் பிரதிபலிப்பு மேற்கோப்பு என்பதாகும். மேலும் அடிப்படைதான் மேற்கோப்பைத் தீர்மானிக்கிறது என்று மார்க்சிசம் கூறுகிறது.
பிராம் இந்த விளக்கத்தில் மார்க்ஸ் தவறு செய்துவிட்டார். என்று கருதுகிறார். மனதும், அதன் செயலுக்கும் இந்த விளக்கத்தில் இடமில்லை ஆதலால், பிராம் சமூக நடத்தை என்ற ஒரு புதிய கருத்தை அடிப்படை மேற்கோப்பு ஆகியவற்றிற்கு ஊடாக நுழைக்கிறார்.
சமூக அமைப்பு, சமூக நடத்தையை உருவாக்குகிறது. சமூக நடத்தை அதற்குச் சமமான சிந்தனை உலகத்தை தோற்றுவிக்கிறது. என்று புதிய விளக்கத்தை பிராம் கொடுத்தார்.
சமூக நடத்தை (சமூக மனது) என்ற இந்த விளக்கம் இல்லாததன் காரணமாக மாக்சிசம் குறைபாடு உடையது என்பது பிராமின் கருத்து.
உளவியல் காரணிகள் மட்டுமே பிராய்டிசத்தில் தீர்மானிக்கும் சக்தியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பொருளாதாரக் காரணிகள் மட்டுமே மாக்சிசத்தில் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இந்த இரண்டும் ஒன்று கலந்த ஒன்றுதான் பிராமின் சமூக நடத்தைக் கோட்பாடு.

இதை விளங்கிக் கொள்ள ஒரு உதாரணம் கூறலாம். பாசிசம் என்பது, ஜெர்மானிய கீழ்மட்ட மத்திய வர்க்கத்தினரின் கோட்பாடு. முதல் உலகப் போருக்குப் பின்னர் வளர்ந்த பணவீக்கம் ஏக போகங்களின் வளர்ச்சி ஆகியவற்றிக்கு மத்தியதர வர்க்கத்தினர் பதில் செயல் புரிந்ததன் விளைவே பாசிசம். இந்தப் பணவீக்கம் ஏக போகங்களின் வளர்ச்சி ஆகியவை இவ்வர்க்கத்தின் மன உணர்வுகளுடன் கலந்து, பல மாறுதல்களை அடைந்து பாசிசமாக வெளிப்படுகிறது. இந்த மன உணர்வுகளில் பல ஒன்றுக்கொன்று முட்டி, மோதி ஒரு சமநிலை அடையும்பொழுது அது பாசிசமாக அல்லது நாசிக் கருத்துகளாக வெளியாகிறது. இவ்வாறு பிராம் உலக நிகழ்ச்சிகளை விளக்க முற்பட்டார்.

பிராம் மார்க்சிசத்தில் மாறுதல் செய்ய விழையும் பொழுது இந்த முறையில் அடிப்படை, மேற்கோப்பு ஆகியவற்றிக்கு இடையே சமூக நடத்தை என்ற கருத்தை நுழைத்தார். அவர் கருத்துப்படி அடிப்படை சமூக நடத்தையைப் பாதிக்கிறது. அதாவது சமூக நனவிலி மனதினைத் தாக்குகிறது. இந்தச சமூக நடத்தை மேல் கோப்பினை உருவாக்குகிறது.

பிராம் புதிய இடதுசாரிகளுள் ஒருவர். புதிய இடதுசாரிகள் மாக்சிசத்தின் குறைகளைக் களையும் துப்பரவுப் பணியில் புதிய, வளர்ச்சி பெற்றுள்ள பூர்சுவா சமூகத்தில் முரண்பாடுகள் இல்லை என்று கூறுவதுதான். இதன் விளைவுதான் பிராமின் படைப்புகள்.

பிராமின் கருத்துக்கள் மாக்சியம் பற்றிப் பேசும்பொழுது புரட்சிகரமாகத் தோன்றினாலும், அதில் ஒரு தர்த்துவார்த்தப் பிழை இடம்பெறுகிறது. அவரது கருத்தின்படி, புரட்சி தேவையில்லை என்ற ஒரு முடிவு ஏற்படுகிறது. இன்று உள்ள தொழில் வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளில் மனிதர்கள் அந்நிய மயமாகி உள்ளார்கள் இவர்கள் வாழ்க்கையில் உள்ள வசதிகள் தாம் இதற்கு காரணம். இந்த அந்நியமயமாதல் உலகம் முழுவற்குமான ஒரு நிகழ்ச்சி@ இந்தச் சமூக விளைவை அகற்றுவதற்குச் சில சீர்திருத்தங்கள், சில மாறுதல்கள் ஆகியவற்றைச் செய்து கொண்டாலே போதும் அடிப்படையில் ஏற்படும் மாறுதல்கள் சமூக நடத்தையை தாக்கும் பொழுது, சமூக நடத்தையைச் சரி செய்து கொண்டால் அவற்றைச் சமாளிக்கலாம் என்ற முடிவு பிராமின் முடீவு ஆகும். இது மாக்சிசத்திற்கு முரண்பாடான ஒன்றாகும்.

பிராய்ட் உளவியலைப் பற்றித்தான் அதிகம் சிந்தித்தார். சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்பது ஆராய்வதற்குரிய கருத்து. இக்கட்டுரையில் அது பற்றி ஆராய முடியாது. மார்க்சின் சமூகச் சிந்தனையுடன் பிராய்டின் உளப்பகுப்பாய்வினை ஒன்று கலத்தல் என்ற பிராமின்; கருத்து, கேள்விக்குரிய ஒன்றாகும். மார்க்ஸ் அடிப்படையில் இயங்கியல் பொருள்முதல்வாதி. பிராய்ட் அடிப்படையில் கருத்து முதல்வாதி, இந்த இருவரது சிந்தனை அமைப்பின் சில அம்சங்களை ஒன்று கலப்பது என்பது மறுபடியும் கருத்து முதல்வாதத்திலேதான் முடிவடையும். கருத்து முதல்வாதிகள், பல கருத்துக்களை ஒன்று கலந்த ஒரு புதிய கருத்தை உருவாக்கிவிடுவாhர்கள். ஆனால் அவை எல்லாம் சாரம்சத்தில் கருத்து முதல்வாதத்தின் பல்வேறு வடிவங்களாகத்தான் இருக்க முடியும். மார்க்ஸ் கருத்து முதல்வாதியான கெகலின் இயங்கியல் முறையைப் பொருள்முதல்வாதத்திற்குப் பயன்படுத்தினார். இதனால் பல வியப்பான சமூகவியல் உண்மைகளை வெளிப்படுத்தினார். ஆனால் பிராம் இயங்கியல் பொருள்முதல்வாதக் கோட்பாட்டினைக் கருத்து முதல்வாதத்துடன் கலந்து ஒரு நடுப்பாதையை மேற்கொண்டார்.

இந்தப் பாதை என்பது, மாக்சியத்தை மறுக்கும் ஒருவகையான பாதையாகும் என்பதை வாசகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
(இனி இதழ்5)

No comments: