Wednesday, April 21, 2010

தொடர வேண்டிய போராட்டம்


தொடர வேண்டிய போராட்டம்

- கலாநிதி. சி.சிவசேகரம்.. -


சாதி முறை என்பது தென்னாசியாவுக்கே உரிய ஒரு சாபக்கேடு. இந்து தருமம் என்கிற பேரில் அதற்குத் தெய்வங்களின் ஆசி வழங்கப்பட்டுள்ளது. எனினும் சாதியம் என்பது இந்து மதங்களால் உருவாக்கப்பட்டதல்ல. அவற்றால் அது நியாயப்படுத்தப்பட்டது. ஏற்கெனவே இருந்து வந்த சாதிமுறைகளுடன் ஆரிய வருண முறை இணைந்தே இந்தியாவின் இறுக்கமான சாதியமைப்பு உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் வலுவானவை. சாதி முறை என்பது முழுத் துணைக்கண்டத்திலும் ஒரே விதமான அதிகார அடுக்குக்களைக் கொண்டதல்ல ஒவ்வொரு தேசிய இனமும், பிரதேசமும், சிலசமயங்களில் ஊர்களும், தங்களுக்கேயுரிய நடைமுறைகளைப் பேணிவந்துள்ளன. சமூகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக சாதிப்படி அடுக்கில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சாதிகள் இணைந்துள்ளன. புதிய சாதிகள் உருவாகியுள்ளன. சாதிகளின் தொழில் அடையாளங்கள் மாறியுள்ளன. இனக்கலப்பு பெருமளவில் நடைபெற்ற ஒரு துணைக்கண்டத்தில் சாதிக் கலப்பு பல்வேறு சூழ்நிலைகளிலும் பல்வேறு காரணங்களுக்காக நடைபெற்றிருப்பதை யாரும் மறுக்க இயலாது. என்றாலும் பொருளாதார மாற்றங்களால் ஏற்பட்ட சமூக மேல்நிலையாக்கங்களும் இனக்கலப்பும் சாதிக்கலப்பும் சாதிமுறையை ஏற்காத மதங்களின் தோற்றமும் வருகையும் சாதியத்தை முறியடிக்கவில்லை. பௌத்தமும் அதற்கு முன்னரே சமணமும் சாதியத்துடன் சமரசம் செய்து கொண்டன. அவற்றின் நிலைப்பிற்கு எப்போது அவை நிலவுடமை அரசுகளது துணையை நாடினவோ அப்போதே அத்தகைய சமரசம் அவசியமாகிவிட்டது. கிறிஸ்துவத்தின் பல்வேறு கிளைகளும் சீக்கிய மதமுங் கூடச் சாதிமுறையை உள்வாங்கியே தம்மை நிலை நிறுத்திக்கொண்டன. இஸ்லாம் மட்டுமே சாதியத்துடன் சமரசம் செய்யாமல் மதமாற்றத்தை மேற்கொண்டது. எனினும் முஸ்லீம்களிடையிலும் சாதிப்பாகுபாடு முற்றாக ஒழிந்து விடவில்லை. எவ்வாறாயினும் மற்ற மதங்களின் உள்ளே இருக்குமளவுக்குச் சாதிப்பாகுபாடு முஸ்லீம்களிடையே தீவிரமாக இல்லை. எவ்வாறியினும் மதத்தின் பேரால் சாதியத்தை நியாயப்படுத்தும்;;;;;;;;;; வாய்ப்பு இந்து மதங்களிடை மட்டுமே உள்ளது. சாதி முறையை நிராகரித்துக் கர்நாடகத்தில் உருவான வீரசைவம், பல்வேறு சாதிப்பிரிவினரையும் உள்வாங்கியது. தம்மை இந்துக்கள் என்று அழைப்பதை லிங்காயத்துக்கள் எனப்படும் வீரசைவர்கள் இன்றுவரை மறுத்து வந்துள்ளனர். எனினும் இன்று லிங்காயத்துக்கள் ஒரு தனியான சமூகமாக, ஏறத்தாழ ஒரு சாதியைப்போல ஆகியுள்ளனர். இந்து மதங்களுக்குள் சாதியத்தை முறியடிக்கிற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராமனுஜர் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குப் பூனூல் அணிவித்து வைணவர்களாக்கி அவர்கள் எல்லோரும் பிராமணர் என்று பிரகடனஞ் செய்தார். அதைவிடத் தீவிரமான ஒரு செயல் பக்தி இயக்கத்தின்போது தமிழ்நாட்டில் நடந்ததில்லை. எனினும் இந்து என்ற அடையாளத்தை ஏற்ற எந்த மதத்தாலும் சாதிமுறை என்ற மதிலைத் தாண்ட இயலவில்லை. சாதியத்திற்குள்ள மத அங்கீகாரத்துக்கும் மேலாக சாதி முறை துணைக்கண்டத்தின் வர்க்க அமைப்புடனும், உற்பத்தி முறையுடனும், உற்பத்தி உறவுகளுடனும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்து இருந்ததாலே அது மொழி, மதம் என்கிற சமூக அடையாளங்கட்குச் சமாந்தரமாகவும், சில சமயங்களில் அவற்றை விட வலுவாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. அகமணமுறை அதனை மேலும் உறுதிப்படுத்தியது. ஆணையே குடும்ப முதல்வனாகக் கொண்ட ஒரு சமுதாயச் சூழலில் கலப்புத் திருமணங்கள் பெண்ணின் சாதி அடையாளத்தை ஆணின் அடையாளமாக மாற்றுவதே வழமையாகயிருந்தபோதும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை உயர்நிலைச் சாதி ஆண் மணந்தால், ஆண் தனது சாதியிலிருந்து நீக்கப்படுவதும் உண்டு. இது இரு சாதிகளிடையே பெரும் ஏற்றத்தாழ்வு உள்ளபோது ஏற்படக்கூடியது. சாதிகள் வௌ;வேறு சமூகங்களாக இருந்து வந்துள்ள ஒரு சூழலில் கலப்புத் திருமணங்கள் சாதிகளின் கலப்பாவதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. இந்தியத் துணைக்கண்டத்திற் கொலனி ஆட்சி சாதியத்தை மேலும் இறுக்கமாக்கியதே ஒழிய நெகிழ்விக்கவோ இல்லாதொழிக்கவோ எதுவுஞ் செய்யவில்லை.
எவ்வாறாயினும் நவீன உற்பத்தி முறைகளின் வரவும் தொழிலாளி வர்க்கத்தின் உருவாக்கமும் நகரங்களின் பெருக்கமும், சாதிக்கலப்புக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகளின் நீக்கத்திற்கும் சாதகமான சூழ்நிiலையை உருவாக்கின. சாதிப்பாகுபாடுகட்கும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கட்கும் இப் புதிய சூழல் வாய்ப்புக்களை ஏற்படுத்தியது. பல போராட்ங்கள் வெற்றிபெற்றுள்ளன. எனினும் சாதிமுறையை இன்னமுந் தகர்க்க இயலவில்லை. நகரங்களின் பொது இடங்களிற் தீண்டாமையை கடைப்பிடிப்பது மேலும் இயலாமலாகி வருகிறது. பொது இடங்களிற் சாதித்துவேஷம் பாராட்டுவது பல இடங்களிற் சட்டப்படியும் சமூகத்தினுள்ளும் ஏற்கப்படாததாகியுள்ளது. அனைத்திலும் முக்கியமாகத் தாழ்த்தப்பட்ட சாதியினர் தங்கள் உரிமைக்காகப் போராடவும் அஞ்சாது துணிந்து பேசவும் முடிகிறது. இவற்றில் எதுவுமே தாமாக நிகழ்ந்தவையல்ல. பலவாறான போராட்டங்கள் மூலமே ஒவ்வொன்றும் வெல்லப்பட்டுள்ளது.
அத்தனை வெற்றிகட்குப் பிறகும் தாழ்தப்பட்ட சாதியினரது குடியிருப்புக்கள் தீமூட்டப்படுகின்றன. கலப்புத்திருமணத்திற்கு தண்டனையாகவும் கல்வி கற்று உயர்பதவி பெற்றதற்காகவும் முழுக்குடும்பங்கள் கொல்லப்பட்டுள்ளன. ஊராட்சிகட்குத் தெரிவு செய்யப்பட்டோர் பதவி ஏற்க இயலாத விதமாகப் பலவிதமான வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில் கவனிக்கத்தக்கது ஏதெனில், நாம் அறிய வருகிற வன்முறைகளிற் பெரும் பகுதி சாதி அமைப்பின் உச்சங்கிளையில் அமைந்திருக்கும் பார்ப்பனர்களே. அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள உயர் சாதியினரோ செய்வன அல்ல. ஒப்பிடுகையிற் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களே தமக்கு கீழுள்ள தாழ்தப்பட்ட சாதியனர் மீது வன்முறையைப் பிரயோகிக்கின்றனர். இது ஏன்?
அது மட்டுமன்றி குஜராத்தில் நடந்த வன்முறையிற் தாழ்தப்பட்ட சாதியினரும் பழங்குடியினருமே முஸ்லீம்கட்கு எதிரான வன்முறையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதைப் பற்றிப் பேசப் பலர் தயங்குகின்றனர். குஜராத்தின் முதல்வரான இந்துத்துவ பாசிசவாதி நரேந்திர மோடி, உயர் சாதியினரல்ல. ஆனால் பார்ப்பனிய இந்துத்துவ நிறுவனமான பாரதிய ஜனதா கட்சியின் தூணாக இருக்கிறார். எனவே சாதிமுறையையும் சாதியத்தையும் சமூகத்தில் அவை ஆழ வேரூன்றியுள்ளமையையும் மிகையாக எளிமைப்படுத்துவது, தவறான முடிவுகட்கே இட்டுச்செல்லும்.
ஒரு குறிப்பிட்ட வகையான கொடுமைக்கு உட்பட்ட எந்தவொரு சமூகமோ, சமூகப்பிரிவோ அந்தக் கொடுமைக்கும் அதையொத்த கொடுமைகட்கும் எதிராக ஒன்று திரண்டு போராடுவது சரியானது. கொடுமையின் அடிப்படை எதுவோ, அதற்கு எதிரான போராட்டமும் அந்த அடிப்படையிலேயே அமையும். அது சரியானது. ஆனால் ஒவ்வொரு வகையான கொடுமைக்கு எதிரான போராட்டமும் தன்னை நீதிக்கான பிற போராட்டங்களினின்று தனிமைப்படுத்துவது தவறானதும் தன்னையும் பிற போராட்டங்களையும் பலவீனப்படுத்தக் கூடியதுமாகும். இதையே பின்நவீனத்துவம் என்ற பேரில் ஏகாதிபத்திய வாதிகள் தமது என்.ஜீ.ஓ. முகவர்களுடாக ஒவ்வொரு மூன்றாம் மண்டல நாட்டிலுஞ் செய்து வருகிறார்கள்.
தேசி இனப் பிரச்சினையிலிருந்தோ மத அடிப்படையிலான ஒடுக்குமுறையிலிருந்தோ நிறவாதத்திலிருந்தோ வர்க்கப்பரிமானத்தை விலக்கிவிடும்போது, முரண்பாடுகள் இனங்களிடையிலான பகைமையாகவும் மதங்களிடையிலான பகைமையாகவும் வௌ;வேறு நிறத்தவரிடையிலான பகைமையாகவும் உருப்பெறுகின்றன. இவ்வாறான முரண்பாடுகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் பிளவுபடுகின்றனர். ஒடுக்குமுறைக்கான வசதியாக இன, மத, நிற வேறுபாடுகள் உள்ளனவே ஒழிய, அவையே ஒடுக்குமுறையின் அடிப்படைகளல்ல. எனவே தான் சமூகநீதிக்கான போராட்டத்தில் ஒடுக்கிற தேசிய இனம், மதம், நிறம் என்ற அடையாளங்களைக் கொண்ட சமூகப்பிரிவினர் எல்லாருமே ஒடுக்குமுறைக்கு உடன்பாடானவர்களல்லர். அதைவிடவும் அவர்கள் நடுவிலிருந்து ஒடுக்கப்பட்டோருக்காகக் குரல்கொடுப்போர் மட்டுமல்லாது ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களின் முன்வரிசையில் நின்றோரும் வந்துள்ளனர்.
அதேவேளை ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குள்ளே ஒடுக்குமுறையை ஏற்போர் மட்டுமன்றி அதைவலிந்து நியாயப்படுத்துவோர் கூட இருந்துள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களிற் பெரும்பாலனவர்கள் தமது ஒடுக்கப்பட்ட நிலை பற்றிப் போதிய தெளிவுடனும் விடுதலைப் போராட்ட உணர்வுடனும் இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை. ஆனால் அது மாற்ற இயலாத ஒரு நிலை அல்ல. எனினும் போராட்டங்களைத் தனிமைப்படுத்தி நோக்குவதும் ஒரு முழுமையின் பகுதியாக விளங்கிக்கொள்ள மறுப்பதும், எவ்வகையிலும், ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றுபடுத்தவோ அவர்களது போராட்டங்களை வலுப்படுத்தவோ உதவப்போவதில்லை.
தமிழ்நாட்டில் சாதியத்திற்கெதிரான போராட்டங்களை நீண்டகாலமாக இடதுசாரிகள் முன்னெடுத்து வந்துள்ளனர். வர்க்கச் சுரண்டலும் சாதிக் கொடுமையும் இணைந்த கிராமச் சூழல்களில் எத்தனையோ போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்றுங்கூடச் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களி;ல் இடதுசாரிகளின் பங்கு முதன்மையானது. ஆயினும் எத்தகைய இடதுசாரிகள் என்ற கேள்வி எழுகிறது. தங்களது சாதி அடையாளங்கட்கும் மேலாக உயர்ந்து சமூகநீதி என்ற நிலைப்பாட்டில் நோக்குகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சந்தர்ப்பவாhத அரசியலிற் சிக்குண்டு போகிறபோது, அவர்களால் தங்கள் நியாய உணர்வை அதன் தர்க்கரீதியான எல்லைவரை கொண்டுசெல்ல முடியாமற் போகிறது. இவ்வாறான தவறுகள் ஒரு போராட்டத்தின் போக்கால் மட்டுமே திருத்தக் கூடியவை.
ஈ.வெ.ரா. அவர்களது சாதிய விரோத நிலைப்பாட்டிற் குறைபாடுகள் இருந்திருக்கலாம். ஆனாற் சாதிமுறையை அவர் மனமார வெறுத்து நிராகரித்தவர். அவருக்குப் பின்னால் வந்த திராவிட இயக்கத்தை அவருடைய பாதையிற் போக இயலாமற் தடுத்தவற்றுள் அதிகார மோகம் பிடித்த சந்தர்ப்பவாத அரசி;யற் தலைமைகள் முக்கியமானவை.
சாதியத்திற்கெதிரான போராட்டத்தை அதனால் பாதிக்கப்பட்டவர்களே முன்னெடுக்க வேண்டும் என்ற பார்வை தவறான கண்ணோட்டத்துடன் முன்னெடுக்கப்பட்டதனால் இரண்டு முக்கியமான இழப்புகள் நேர்ந்தன. ஒன்று சாதியத்தாற் பெரிதும் பாதிக்கப்படாது இருந்தபோதும் அதைத் தவறானது என்று உணர்ந்து போராட முற்பட்டவர்களை ஒதுக்கியும் வலிந்து பகைத்தும் சிலர் நடந்து கொண்டதனாற் போராட்டம் பல நேச சக்திகளை இழந்தது. இரண்டாவது சாதியப் பிரச்சினையைத் தலித்துக்கள் எனப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் பிறருக்கும் இடையிலான மோதலாக நோக்குகிற போக்கு சாதியத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தை அடையாளங்காண இயலாமற் தடுத்தது.
இவற்றை ஒத்த தவறுகள் ஒவ்வொருவகையான விடுதலைப் போராட்டத்திலும்; நேர்ந்துள்ளன. மாக்சிய லெனினிய வாதிகள் அவற்றைப் பற்றி ஒவ்வொரு தருணத்திலும் எச்சரித்துள்ளதோடு அவற்றைத் தவிர்க்கவும், திருத்தவும் உதவியுள்ளனர். இலங்கையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமே, அவ்விடயத்தில் மிக முக்கியமான முன்னுதாரணமாகும். அப்போராட்டத்தின்போது, தாழ்த்தப்பட்ட சாதியனராயிருந்து சிறிது சமூகமேம்பாடு கண்டவர்கள் சிலர் சாதி மேலாதிக்கம் பேணிய தமிழரசுக்கட்சி போன்றவற்றுடன் சேர்ந்து போராட்டத்தை நிராகரித்ததையும் நாம் அறிவோம். அதேவேளை உயர்சாதியினர் எனப்பட்டவர்களிற் கணிசமானோர் போராட்டத்திற் பல்வேறு தளங்களிலும் பங்கேற்றுள்ளனர்.
தலித்தியம் என்ற பேரிற் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட இயக்கம் தாழத்தப்பட்ட சாதியினரை ஒன்றுபடுத்தத் தவறியது ஏன்? வர்க்கப் போராட்டத்தை எதிர்த்து, வர்க்க அடையாளத்தை ஏற்பது தலித் அடையாளத்தை மறுக்கும் என்று சிலர் தொடர்ந்து வாதித்து வருவது ஏன்? தமிழகத்தின் சாதிக்கட்சிகள் தாழ்த்தப்பட்ட மக்களிடையே உருவாகக் காரணம் என்ன? தலித்தியத்தை என்.ஜீ.ஓக்கள் ஊக்கிவிப்ப ஏன்? இவ்வாறான பல கேள்விகள் நம்மை எதிர் நோக்குகின்றன. வெறுங் கோஷங்களாலும் தனிப்பட்ட அவதூறுகளாலும் நேர்மையற்ற வாதங்களாலும் உண்மைகளை மூடிமறைப்பது என்றென்றைக்கும் இயலுமானதல்ல.
தமிழ்த் தேசியவாதிகளும் நடுத்தரவர்க்கப் பெண்ணியவாதிகளும் மாக்சியத்தை எதிர்க்கப் பயன்படுத்திய அணுகுமுறைகளை 'தலித்தியவாதிகள்” எனப்படுவோர் பயன்படுத்துவதை நாம் காண்கிறோம். அவற்றின் விளைவுகளையும் நாம் அறிவோம். எனவே தான், தேசிய ஒடுக்குமுறை என்பதோ, பால் அடிப்படையிலான ஒடுக்குமுறை என்பதோ, குறிப்பிட்ட ஒரு இனத்திற்கும் குறிப்பிட்ட வர்க்கப்பிரிவு ஒன்றுக்கும்; வரையறுக்கக் கூடியதல்ல. எவ்வாறு பாட்டாளி வர்க்க அணுகுமுறை தன்னை வர்க்கப்போராட்டம் என்ற பேரில் தேசியஇனம், பால், சாதி என்கின்ற அடிப்படையிலான போராட்டங்களின்று விலக்கிக்கொள்ள இயலாதோ, அவ்வாறே சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் தன்னைத் தனிமைப்படுத்தாது தனது தளத்தை விரிவு படுத்த வேண்டும்
பல தனிமனிதர்களும் சில சாதிப்பிரிவுகளும், தங்களது சமூகமேம்பாட்டுடன், சாதியத்திற்கெதிரான போராட்டத்தை மறந்துவிடுகின்றனர். சாதியமைப்பும் சாதியமும் முழு சமூகத்தையும் பீடித்துள்ள ஒரு நோய். அதற்கெதிரான போராட்டம் பல்வேறு தளங்களிலும் தளராது முன்னெடுக்கப்பட வேண்டும். குறுகிய நோக்கங்களும் சுயலாபத்துக்கான இலக்குகளும் நிராகரிக்கப்பட்டுப் பரந்துபட்ட அளவிலான மானிட விடுதலைப் போராட்டத்தில் சாதியத்திற்கும் சாதி முறைக்கும் எதிரான போராட்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்க இயலும் அதற்கான வழிமுறைகளை நாம் தேட வேண்டும்……
(இனி இதழ் ஐந்திலிருந்து )

No comments: