Thursday, April 08, 2010

கோயில் இல்லா லண்டனில் குடியிருக்க வேண்டாம்

-கலையரசன்-
("லண்டன் உங்களை வரவேற்கிறது!" - நான்காம் பகுதி)


லண்டனுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்னும் அங்கீகரிக்கப்படாத அகதியாக காலம் தள்ளும் அந்த வாலிபர் விரக்தியின் விளிம்பில் காணப்பட்டார். தனது வழக்கறிஞர் இலகுவாக வெல்ல வேண்டிய வழக்கில் குளறுபடி செய்து விட்டதாக குறைப்பட்டார். லண்டனில் அகதியாக பதிந்த நாளில் இருந்து அந்த வழக்கறிஞருக்கு ஆயிரக்கணக்கில் பணம் கட்டியும் ஒரு பயனும் இல்லை. இறுதியில் தஞ்ச மனு நிராகரிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறும் நிலை வந்த சோகத்தை எண்ணி வருந்தினார். இத்தனைக்கும் அந்த அப்பாவி தமிழ் அகதியின் வழக்கறிஞரும் ஒரு தமிழர்.

லண்டனில் நிறைய தமிழ் வழக்கறிஞர்கள் தமிழ் வாடிக்கையாளர்களை நம்பியே தொழில் செய்கின்றனர். இங்கிலாந்து வரும் அனைவருக்கும் ஆங்கிலம் தெரிவதில்லை. தெரிந்தாலும் ஒரு தமிழ் வழக்கறிஞர் தமக்கு சாதகமாக வாதாடுவார் என்று எதிர்பார்க்கின்றனர். பல தடவை அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போகின்றது. தம்மிடம் வரும் அப்பாவி தமிழர்களை பணம் கறக்கும் காராம்பசுவாகவே வக்கீல்கள் கருதுகின்றனர். ஒரு வழக்கு வென்றாலும், தோற்றாலும் தனக்கு வருமானம், என்பதே பல வழக்கறிஞர்களின் நிலைப்பாடு. கரிசனையுடன் வழக்காடும் ஒரு சிலரை தவிர, மற்றவர்கள் ஏனோ, தானோ என்றே நடந்து கொள்கின்றனர். இதயசுத்தியுடன் நேர்மையாக தொழில் செய்பவர்கள் பாடுபட்டாலும் பலன் கிடைக்காதது வேறு விஷயம்.

தஞ்சம் கோரும் அகதிகளின் வழக்குச் செலவுகளை அரசு பொறுப்பேற்கிறது. பிரிட்டிஷ் அகதிகள் தொடர்பான சட்டம் வழங்கும் மனிதாபிமான சலுகைகளை பல தமிழ் அகதிகள் பயன்படுத்துவதாக தெரியவில்லை. லண்டன் வந்தவுடன் உறவினர், நண்பர்களுடன் தங்கிக் கொள்வது காரணமாக இருக்கலாம். "முதலாவது தலைமுறையை" சேர்ந்த அவர்களது உறவினர்களும் வந்தவுடன் வேலை தேடுவதிலேயே குறியாக இருந்திருப்பார்கள். தமது சட்ட உரிமைகளை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்திருக்காது. பெரும்பாலான தமிழர்களின் அறியாமையை பல தமிழ் வக்கீல்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஒரு அகதியின் சார்பாக மேன்முறையீடு செய்வதற்கு ஆகும் செலவை அரசே கொடுக்கின்றது. பிரிட்டனில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கான அரச நிதியில் இருந்து அந்தப் பணம் வழங்கப்படுகின்றது. பொதுவாகவே பணக்கார வாடிக்கையாளரை வைத்துக் கொள்ளுமளவு அதிர்ஷ்டமற்ற வக்கீல்களும், புதிதாக தொழில் முனைவோருமே அகதிகளுக்காக ஆஜராகின்றனர். இதனால் அப்படியானவர்களை ஊக்குவிக்கவும் சட்ட செலவுகளுக்கான அரச மானியம் பயன்படுகின்றது. ஆனால் எனக்கு பல அகதிகள் கூறிய கதைகள் திடுக்கிட வைத்தன. ஒரு பக்கம் வழக்குக்கு அரச நிதியை பெற்றுக் கொண்டே, மறு பக்கம் அகதியிடம் இருந்தும் குறைந்தது ஆயிரம் பவுனாவது அறவிட்டுள்ளனர். எப்பாடு பட்டாவது பிரிட்டனில் தங்குவதற்கு விசா கிடைக்க வேண்டும் என்பதற்காக, அகதிகளும் இரவாய்ப், பகலாய் பாடுபட்டு உழைத்த பணத்தை வக்கீலிடம் கொட்டுகின்றனர். அப்படி பணத்தை வாரியிறைத்து, எதுவும் கிடைக்காது ஏமாந்த அகதிகள் பலர்.

பிரிட்டனில் பத்துக்கும் மேற்பட்ட பெரிய நகரங்கள் இருந்த போதிலும், தமிழர்கள் லண்டனை தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் உண்டு. நான் பார்த்த அளவில் பிரிட்டன் வரும் பன்னாட்டு அகதிகள், அரசு வழங்கும் சமூக நலன் கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டு, முகாம்களில் வாழ்கின்றனர். ஆப்கானிஸ்தான், ரஷ்யா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் அகதிகள் பிரிட்டன் முழுவதும் காணப்படும் அகதி முகாம்களில் வசிக்கின்றனர். எங்கேயோ தொலை தூரத்தில், ஸ்கொட்லாந்து மலைகளில் கூட இந்த முகாம்கள் இருக்கலாம். ஆனால் அந்தப் பிரதேசங்களில் எல்லாம் வேலை வாய்ப்பு அரிது. மேலும் லண்டனில் வசிக்கும் உறவினர்களிடம் வருவதென்றால் நீண்ட நேரம் பிரயாணம் செய்ய வேண்டும். இன்னோரன்ன காரணங்களால் தமிழ் அகதிகள் அரச செலவில் முகாம்களில் இருக்க விரும்புவதில்லை. லண்டனில் ஒரு முகவரியை எடுத்துக் கொடுத்து விட்டு அங்கேயே தங்கி விடுகின்றனர்.

லண்டனில் தங்க விரும்புவதற்கு வேலை வாய்ப்பு மட்டும் காரணமல்ல. லண்டனில் வாழ்வதற்கு ஆங்கில அறிவு அவசியமில்லை. தாய்மொழியான தமிழிலேயே அனைத்துக் கருமங்களையும் ஆற்ற முடியும். தமிழ்க் கடையில் வேலை செய்வதற்கு தமிழ் தெரிந்தால் போதும். சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு தமிழ் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். நோய் வாய்ப்பட்டால் தமிழ் வைத்தியர்கள் இருக்கிறார்கள். ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்க தமிழ் தொலைக்காட்சி இருக்கிறது. அரட்டை அடிக்க தமிழ் வீட்டுக்கு பக்கத்திலே தமிழ் நண்பர்கள் வசிக்கிறார்கள். அப்படியும் வாழ்க்கையில் நிம்மதி இல்லையா? தமிழ்க் கோயில்கள் இருக்கின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று முன்னோர்கள் கூறிவிட்டார்களாம். அதனால் கோயில் இல்லாத லண்டனுக்கு வந்த தமிழர்கள், தமது இஷ்ட தெய்வங்களையும் இறக்குமதி செய்து கொண்டனர். லண்டனில் ஏற்கனவே வட இந்தியர்கள் கட்டிய இந்துக் கோயில்கள் இருக்கின்றன. இந்து மதத்தை சேர்ந்த தமிழர்கள் அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபடலாம், என்று யாருக்கும் தோன்றவில்லை. தென்னிந்திய கட்டிடக்கலையில் கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்தால் மட்டுமே, தமிழ் இந்துக்கள் முக்தி பேறடைவார்கள் என்றொரு ஐதீகம் போலும். லண்டனில் தமிழர்கள் பெருமளவில் செறிந்து வாழும் டூட்டிங், ஈஸ்ட்ஹாம், வெம்பிளி போன்ற புற நகர்களில் பத்துக்கும் குறையாத இந்து-தமிழ் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கோயில் கட்டினால் மட்டும் போதுமா? அக்கம் பக்கம் இருக்கும் வெள்ளையருக்கும், பிற இனத்தவர்களுக்கும் நமது மத கலாச்சாரத்தை அறிமுகப் படுத்த வேண்டாமா? லண்டன் தெருக்களில் தேர் இழுக்கும் ஊர்வலம் அனைவரையும் ஈர்க்கும்.

ஒரு இடத்தில் ஒரு கோயில் மட்டும் இருந்தால் போதுமா? சிவன் கோயில் இருந்தால், அதற்குப் போட்டியாக அம்மன் கோயில் வரும். ஏற்கனவே இரண்டும் இருக்கிறதா? புதிதாக முருகன் கோயில் கட்டப்படும். நல்ல வேளை, இந்து மதத்தில் தெய்வங்களுக்கு குறைவில்லை. எந்தத் தெய்வத்திடம் போனால் கூடுதல் அருள் கிடைக்கும் என்று தெரியாமல் பக்தர்கள் திண்டாடுகிறார்கள். பக்தர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு, மூலஸ்தானத்தில் ஒரு குறிப்பிட்ட தெய்வம் இருந்தால், அதை சுற்றி பிற தெய்வ சிலைகளையும் பிரதிஷ்டை செய்து விடுகிறார்கள். மறக்காமல் எல்லா தெய்வங்களுக்கும் முன்னால் ஒரு உண்டியலையும் வைத்து விடுகிறார்கள். உண்டியலுக்கு பக்கத்திலேயே ஒரு சிறிய அறிவிப்பு. "நீங்கள் போடும் பணத்திற்கு அரசிடம் வரிச் சலுகை பெற வேண்டுமா? இந்தப் படிவத்தை நிரப்புங்கள்."

"லண்டன் உங்களை வரவேற்கிறது!" பகுதி-5)


"நாம் தமிழர், நமது மொழி

-ஆங்கிலம் "- லண்டன் தமிழர்


-
கலையரசன்-


முன்னொரு காலத்தில் இலங்கையில் இருந்து வந்து லண்டனில் குடியேறிய மூத்த குடி தமிழர்களில் பலர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். இவர்களது புலம்பெயர் வரலாறு இலங்கை இனப்பிரச்சினையுடன் நேரடித் தொடர்பு கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கத்தோலிக்க தமிழ் சமூகம் கொழும்பில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தது. இவர்களில் பலர் உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். முன்னாள் ஆங்கிலேய காலனிய விசுவாசிகள். இன்றைய அரசியலில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள். சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில், சிங்கள பௌத்த மேலாதிக்கம் விஸ்வரூபம் எடுத்தது. தமிழருக்கு எதிரான இனக்கலவரங்களில் தமிழ் மேட்டுக்குடியினர் பெருமளவு சொத்துக்களை இழந்தனர். அப்போதும் "ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட கிறிஸ்தவர்களான" தங்களை ஏன் தாக்கினார்கள், என்பது தெரியாமல் விழித்தனர். எப்படியோ கலவரத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் இங்கிலாந்து வந்து நிரந்தரமாக தங்கி விட்டனர்.

கொழும்பு நகரில் வாழும் தங்கள் உறவினர்கள், "ஆங்கிலம் பேசும் அழகைப் பார்த்து, பிரிட்டிஷ் தூதுவராலய அதிகாரிகளே அசந்து விட்டனர்," என்று லண்டன் மேட்டுக்குடி தமிழர்கள் பெருமையடிக்கின்றனர். குடியேறிய பிரிட்டனில் வளரும், இவர்களது பிள்ளைகளுக்கு தமிழ் வாசமே அண்ட விடாது வளர்க்கின்றனர். தமது பிள்ளை வெள்ளையின நண்பர்களைக் கொண்டிருப்பதை விரும்புகின்றனர். இரண்டாவது தலைமுறையை சேர்ந்த பிள்ளைகள், குழந்தைகளாக இருக்கும் போதே பெற்றோர் தமிழ் கலக்காமல் ஆங்கிலம் பேசுகின்றனர். (இதே பெற்றோர் பிற தமிழருடன் கதைத்தால் ஆங்கிலம் கலக்காமல் பேச மாட்டார்கள்.) ஒரு முறை நான் விஜயம் செய்த வீட்டில் இருந்த 16 வயதுப் பையன் தமிழ் கற்க விரும்பினான். உடனே அங்கிருந்த தாய், "நீ தமிழ் பேச கிளம்பினால் உலகம் அழிந்து விடும் (?)." என்று ஆவலை அடக்கினார்.

இலங்கைத் தமிழ் கிறிஸ்தவர்கள் எப்போதுமே இரண்டு பெயர்கள் வைத்திருப்பார்கள். (தமிழ் கலாச்சாரப் படி) சம்ஸ்கிருத பாணிப் பெயர் ஒன்றும், அதே நேரம் (ஞானஸ்நானத்திற்கு பின்னர்) ஆங்கிலப் பெயர் ஒன்றும் சூட்டிக் கொள்வார்கள். ஞானஸ்நானத்தின் போது வைப்பது கிறிஸ்தவ மதம் சார்ந்த பெயர். ஆனால் எப்போதும் அப்படி இருப்பதில்லை. புழக்கத்தில் உள்ள பல ஆங்கிலப் பெயர்களுக்கும், கிறிஸ்தவ சமயத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற விடயம், உண்மையிலேயே அவர்களுக்கு தெரியாது. லண்டனில் வசிக்கும் தமிழ்க் கிறிஸ்தவர்கள், சில இடங்களில் பிரிட்டிஷ் சமூகத்தில் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். லண்டனில் ஒரு தமிழ்ப் பெண்ணின் அனுபவம் இது. அலுவலக வேலை ஒன்றுக்கு விண்ணப்பித்த அவரை, நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த வெள்ளையின நிர்வாகி நம்ப முடியாமல் கேட்டார். "விண்ணப்பித்தது நீங்கள் தானா? நான் வேறு யாரையோ எதிர்பார்த்தேன்." ஆங்கிலப் பெயரை சூட்டிக் கொண்டாலும், வெள்ளை நிறவெறி எம்மை சமமானவர்களாக பார்ப்பதில்லை, என்பதை அன்று உணர்ந்து கொண்டார்.

கொழும்பு மேட்டுக்குடி தமிழர்கள், பிற்காலத்தில் வந்த வட-கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழர்களிடம் இருந்து மாறுபட்ட அரசியலைக் கொண்டுள்ளனர். வட-கிழக்கு தமிழரில் பலர் சிங்களவரோடு எந்தவித இணக்கப்பாட்டையும் கொண்டிராத தீவிர தமிழ் தேசியவாதிகள். கொழும்பு மேட்டுக்குடி தமிழர்கள் சிங்கள இனத்தவருடன் நல்லுறவைப் பேண விரும்புகின்றனர், ஆனால் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை அறவே வெறுக்கிறார்கள். அவர்களின் குடும்பங்களை சேர்ந்த பலர், கொழும்பில் இருந்த காலங்களில் சிங்கள வழிக் கல்வியை பெற்றிருந்தனர். நான் சந்தித்த நண்பர் ஒருவரின் தந்தை, கொழும்பில் தேயிலை வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தவர். 1983 கலவரத்தில் களஞ்சியத்தில் இருந்த தேயிலை மூட்டைகள் யாவும் எரிந்து நாசமாகின. இதனால் அவரது தந்தை மாரடைப்பால் காலமானார். இவ்வளவு இழப்புகளை சந்தித்த போதிலும், தான் சிங்களவர்களை வெறுக்கவில்லை, என்றார் அந்த நண்பர். ஒருவருடைய பொருளாதார பின்னணி தான் அவரது அரசியலை தீர்மானிக்கிறது.

லண்டன் வாழ் கிறிஸ்தவ நண்பர்களுடன், ஒரு ஈஸ்டர் பெருநாளில் கத்தோலிக்க தேவாலயத்திற்கு செல்ல நேர்ந்தது. இங்கிலாந்து வெள்ளையர்களில் பெரும்பான்மையானோர் அன்க்லிக்கன் திருச்சபையை சேர்ந்தவர்கள். கத்தோலிக்க மதத்தவர்கள் மிகச் சிறுபான்மையினர். லண்டனில் குடியேறிய ஐரிஷ்காரர்களும், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்த மக்களும் கத்தோலிக்க தேவாலயத்திற்கு சமூகமளிப்பவர்கள். அதனால் பாதிரியாரும் பிரசங்கத்தில் சியாரா லியோன், இலங்கை ஆகிய நாடுகளில் சமாதானத்தின் தேவை பற்றி கவலை தெரிவிக்க மறக்கவில்லை.

மூன்றாமுலக குடியேறிகள், அகதிகளின் வரவு இல்லாவிட்டால், தேவாலயங்கள் இயங்க முடியாமல் வருமானத்திற்கு திண்டாடியிருக்கும். லண்டனில் பல தேவாலயங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. அவற்றில் சில இன்று மசூதிகளாக, இந்துக் கோயில்களாக மாறியுள்ளன. புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வது மத்திய கால ஐரோப்பிய பண்பாடு. இங்கிலாந்தின் தெற்கே உள்ள கத்தோலிக்க புனித ஸ்தலம் ஒன்றுக்கு வருடா வருடம் கத்தோலிக்க தமிழர்கள் யாத்திரை செல்கின்றனர். இதனால் சில தமிழ் பிரயாண முகவர்கள் போட்டி போட்டுக் கொண்டு "யாத்திரை வியாபாரத்தில்" குதித்துள்ளனர்.

லண்டனில் வசதியாக வாழும் தமிழருடன் பழகுவது ஒரு சுவையான அதே நேரம் கசப்பான அனுபவம். மாற்றிக் கட்டுவதற்கு உடையில்லாத, காலில் போடுவதற்கு செருப்பில்லாத நாட்டில் இருந்து வந்தவர்களின் வீடுகளில், நவநாகரீக ஆடைகளும், விதம்விதமான பாதணிகளும் குவிந்து கிடக்கின்றன. திருமண வீடுகளில் பகட்டுக் காட்டுவது பலருக்கு கைவந்த கலை. குறிப்பாக கலாச்சாரக் காவலர்களான பெண்களின் ரசனையே வேறு. ஒரு திருமண வீட்டுக்கு உடுத்திய சேலையை அடுத்த மாதம் வேறொரு திருமண விழாவில் உடுக்க மாட்டார்கள். அதற்கென்று புதிதாக இன்னொரு சேலை வாங்குவார்கள். (வர்ணத்தை மாற்றிக் கொள்வது இன்னும் சிறப்பு.) தப்பித்தவறி யாராவது முன்னர் ஒரு தடவை உடுத்ததையே போட்டு வந்தால், பிற பெண்களின் பரிகாசத்திற்கு ஆளாக நேரிடும். "இதே நீலக் கலர் புடவையை எங்கேயோ பார்த்தேனே...." என்று கூட்டத்தில் ஒரு பெண் சொல்லத் தொடங்கினால் போதும். அந்தோ பரிதாபம்! உடுத்தி இருப்பதை அவிழ்த்துப் போட்டு விட்டு ஓட வேண்டும் போலிருக்கும்.

சேலை மட்டும் தான் என்றில்லை. சினிமா ஹீரோயின்கள் பாடல் காட்சிகளில் உடுத்தும் கண்ணைக் கவரும் பல வர்ண ஆடைகள் எல்லாம் லண்டனில் கிடைக்கிறது. விலையை மட்டும் கேட்காதீர்கள். அதற்காகவே இன்னொரு வேலை செய்து சம்பாதிக்க வேண்டும். இருந்தாலும் என்ன? ஒவ்வொரு மாதமும் அழைக்கப்படும் விழாவுக்கு, புதிது புதிதாக வாங்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு திருமண விழாவில் உடுத்தியதை, அதற்குப் பிறகு எஞ்சிய வாழ்நாளில் அணிய மாட்டார்கள். அப்படி வாங்கிச் சேர்த்த ஆடைகளைக் கொண்டு ஒரு புடவைக் கடை போடலாம். புடவை மட்டுமல்ல, பாதணிகள், கைப்பைகள் என்பனவும் புதிது புதிதாக மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பொது இடத்தில் மரியாதை போய்விடும். இவ்வாறு மேற்கத்திய நுகர்பொருள் கலாச்சாரத்திற்கு தங்களை அறியாமலே அடிமையாகிக் கிடக்கின்றனர்.

நகைகளைப் பொறுத்த வரை, கடந்த இருபது வருடங்களுக்குள் லண்டன் வந்த தமிழர்களே அனேகமாக தங்கம் வாங்கிக் குவிப்பவர்கள். தாயகத்தில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். லண்டன் வந்து ஓரளவு காசு கையில் சேர்த்ததும், தங்க நகை வாங்கிக் குவிக்கத் தொடக்கி விடுவார்கள். நீண்ட காலமாக லண்டனில் 'செட்டில்' ஆகி விட்ட, தம்மை உயர் நடுத்தர வர்க்கமாக கருதிக் கொள்ளும் தமிழருக்கு தங்க நகை சேர்க்கும் ஆர்வமில்லை. ஆனால் அதற்குப் பதிலாக, தங்கத்தை விட விலை உயர்ந்த, வெள்ளைத் தங்கம், வைர நகைகள் போன்றவற்றை அணிவதிலே ஆர்வம் காட்டுகின்றனர். இவர்கள் வெள்ளையின மேல்தட்டு வர்க்கத்தைப் பார்த்து, சூடு போட்டுக் கொண்ட பூனைகள்.

(தொடரும்)



லண்டனை மீட்ட ஊர்காவல் படைகள்
(லண்டன் உங்களை வரவேற்கிறது! - தொடரின் இறுதிப் பகுதி)
-கலையரசன்-

லண்டன் நகரின் வாகன நெரிசல் அதிகமுள்ள வீதிகளில் ஒன்று. சிக்னல் தரிப்பிடத்தில் ஒரு கார் வந்து நிற்கிறது. அதற்கெனவே காத்து நின்றது போல, நடைபாதை ஓரமாக இருபது வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் ஓடி வருகின்றனர். அவர்களின் கைகளில் கூர்மையான ஆயுதங்கள். வெறியுடன் பாய்ந்து கார் கதவை திறந்து, உள்ளே இருந்தவனை வெளியே இழுத்துப் போட்டு... "சதக், சதக்"... மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கிடையில் காரில் வந்த இளைஞனின் உயிர் பிரிகிறது. பட்டப் பகலில் நடந்த அந்த கொலைச் சம்பவத்தில் கொன்றவர்களும், கொல்லப்பட்டவனும் தமிழர்கள். லண்டனில் வழக்கமாகிப் போன குழுச் சண்டையின் கோரக் காட்சி அது.

லண்டனில் பிறந்த வெள்ளையர்கள் தாம் பிறந்த மண்ணுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்களோ தெரியாது. ஆனால் புலம்பெயர்ந்து வந்து லண்டனில் குடியேறியவர்களின் "மண் பற்று" நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. லண்டன் மாநகரில் தமிழர் அதிகமாக வசிக்கும் பிரதேசமெங்கும் குழுக்கள் காணப்படுகின்றன. "டூட்டிங் குரூப்", "ஈஸ்ட்ஹாம் குரூப்" என்று பல்வேறு ஊர்காவல் படைகள் ரோந்து சுற்றுகின்றன. அந்தந்த ஏரியாக்கள் அவர்கள் கட்டுப்பாட்டில். வேறொரு ஏரியாவை சேர்ந்த குழு வந்து வாலாட்டினால், அவ்வளவுதான். சிறு பொறியே பெரும் மோதலுக்கு வழிவகுத்து விடும். காரணம் எதுவாகவும் இருக்கலாம். "....... நம்மூர் பொண்ணு மேலே கை வைச்சுட்டான், டோய்...?"

பிரிட்டன் எதிர்நோக்கும் முக்கியமான சமூக பிரச்சினைகளில் ஒன்று, இள வயது கிரிமினல் கும்பல்கள், அவர்களுக்கிடையே நடக்கும் கோஷ்டி மோதல்கள். முன்பு வெள்ளையின உழைக்கும் வர்க்க பிள்ளைகளிடையே காணப்பட்ட 'Gang ' கலாச்சாரம், தற்போது பிற இனத்தவர்கள் மத்தியில் பரவியுள்ளது. பெருமளவு உழைக்கும் வர்க்கத் தமிழர்கள் குடிபெயரத் தொடங்கிய அண்மைய இருபதாண்டுகள் குறிப்பிடத் தக்கவை. இவர்களது முதலாவது தலைமுறை கடின உழைப்பின் மூலம் பணக்காரராகலாம் என நம்பியிருந்தார்கள். வருடக்கணக்காக தினசரி 16 மணிநேரம் உழைத்து, சேமித்து; எதிர்கால வாழ்க்கைக்காக, நிகழ்காலத்தை அழித்துக் கொண்டார்கள். இரண்டாவது தலைமுறையிடம் அந்தளவு பொறுமை இல்லை. வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் இன்றே அனுபவிக்க வேண்டும். வருடக்கணக்காக காத்திருக்க முடியாது. அதற்கான குறுக்கு வழிகளை தேடியவர்கள், "Gang கலாச்சாரத்தை" கண்டுபிடித்தார்கள்.

ஆரம்ப காலங்களில் லண்டனில் பாகிஸ்தான், சீக்கிய இளைஞர்களின் குழுக்களுக்கு எதிர்வினையாக, தமிழ் குழுக்கள் உருவானதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார். அதாவது தாம் தமிழ் சமூகத்தின் காவலர்களாக காட்டிக் கொண்டனர். ஆனால் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களே பெரிதும் அவர்களுக்கு பயப்படுகிறார்கள். அதற்கு பின்வரும் சம்பவம் ஒன்றே போதும். ஒரு தமிழரின் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஒரு கார் பெட்ரோல் போட்டுக் கொண்டது. வாகன சாரதியான தமிழ் இளைஞர், கட்டணத்தை செலுத்த கொடுத்த கிரெடிட் கார்ட் போலியானது எனக் கண்டுபிடிக்கப் பட்டது. உடனே பெட்ரோல் நிலைய உரிமையாளர் போலிசுக்கு அறிவிக்க தொலைபேசியை தூக்கினார். அதற்கு சற்றும் பதற்றப்படாமல் அந்த இளைஞர்: "தாராளமாக போலிசுக்கு அறிவிக்கலாம். மாலை வீடு திரும்பும் போது மனைவி, பிள்ளைகள் உயிரோடு இருக்க மாட்டார்கள்!"

லண்டனில் பல அந்நிய நாட்டவர்கள் வாழ்கிறார்கள். தமிழர்கள், இந்தியர், பாகிஸ்தானியர், வங்காளிகள், துருக்கியர், ஜமைக்கர் இவ்வாறு பல்லின சமூகங்கள் லண்டனை வதிவிடமாக கொண்டுள்ளன. இந்த சமூகங்கள் அனைத்தும் தமக்குள்ளேயே நெருங்கிய தொடர்புகளை பேணுகின்றன. இதனால் பல்வேறு குற்றச் செயல்களும் அந்தந்த சமூகங்களுக்குள்ளேயே நடக்கின்றன. அப்படியான தருணங்களில் பெரும்பாலும் வெள்ளயினத்தவரைக் கொண்ட பிரிட்டிஷ் போலிஸ் தலையிடுவதில்லை.

தமிழ் சினிமாவில் வருவது போல, எல்லாம் முடிந்த பிறகு போலிஸ் வந்து குற்றப்பத்திரிகை பதிவு செய்து கொண்டு செல்லும். போலீசைப் பொறுத்த வரை, "இந்த அந்நியர்களே இப்படித்தான். தமக்குள் அடித்துக் கொள்வார்கள்..." என்று பாராமுகமாக இருக்கின்றனர். இதனால் வெளிநாட்டவர்களுக்கு போலிஸ் தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை அறவே இல்லை. அண்மைக்காலமாக பல குற்றவாளிகள் கைது செய்யப் பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது கூட, (கிரெடிட் கார்ட் மோசடியில்) பல வெள்ளையினத்தவர்கள் பாதிக்கப்பட்டதனால் எடுக்கப்பட்ட நடவடிக்கை.

வெளிநாட்டவர் செய்யும் குற்றச் செயல்கள் மீதான ஊடகங்களின் பார்வையானது இனவெறியை வளர்க்கப் பயன்படுகின்றது. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் முழு சமூகமும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றது. இதனால் பல வெள்ளையினத்தவர்கள் லண்டனை வெளிநாட்டு குற்றவாளிகளின் கூடாரமாக இனங்காணுகின்றனர். ஆங்கிலேய வெள்ளையர்கள், மொத்த லண்டன் சனத்தொகையில் அரைவாசிக்கும் குறைவாகவே உள்ளனர். அவர்கள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் லண்டன் நகரை விட்டு வெளியேறி வருவதால், அவர்களின் விகிதாசாரம் குறைந்து வருகின்றது. வசதியற்ற வெள்ளையர்கள் கூட, ஓய்வூதியம் பெறும் வயதிலாவது, சைப்ரஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வீடு வாங்கிக் குடியேறுகின்றனர். எங்காவது "கருப்பன் இல்லாத நாட்டில்" சென்று வாழ்வது அவர்களது குறிகோளாக உள்ளது.

இங்கிலாந்தில் 19 ம் நூற்றாண்டிலேயே சில கறுப்பினத்தவர்கள் வந்து குடியேறியுள்ளனர். பிரிட்டனின் காலனியாக இருந்த கரிபியன் தீவுகளில் இருந்தே அவர்கள் வந்திருந்தனர். காலனிகளுக்கான கப்பல் போக்குவரத்து இடம்பெற்ற லிவர்பூல் போன்ற துறைமுக நகரங்களில் இதற்கான சான்றுகள் உள்ளன. 20 ம் நூற்றாண்டு தொடக்கத்தில் பெருமளவு கறுப்பினத்தவர்கள் லண்டனை நோக்கி நகரத் தொடங்கினர். அப்போது அவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுப்பது கடினமாக இருந்தது. அந்தக் காலத்தில், வீடு வாடைக்கு விடுவதாக விளம்பரம் செய்தவர்கள், "கறுப்பர்களுக்கு கிடையாது" என்று குறிப்பிடத் தவறவில்லை.

சரித்திர காலம் தொட்டு இங்கிலாந்து ஒரு குடியேற்ற நாடாக திகழ்ந்துள்ளது. ஆங்கிலேயரின் முன்னோர்கள் ஜெர்மனியில் இருந்தும், நோர்வேயில் இருந்தும் வந்து குடியேறியவர்கள். அரச குடும்பத்தினர் பிரான்சில் இருந்து வந்து குடியேறியவர்கள். இதனால் ஆங்கில மொழியும், இம் மூன்று மொழிகளினதும் கூட்டுக் கலவையாக உள்ளது. அப்படி இருக்கையில் தாமே பிரிட்டனுக்கு சொந்தக்காரர்கள் என்று உரிமை கொண்டாடுவதும், குறிப்பிட்ட சமூகங்களை அந்நியர்கள் என்று வகைப் படுத்துவதும் விசித்திரமானது. ஐரோப்பிய நாடுகள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினை பிரிட்டனையும் வாட்டுகின்றது. நிற அடிப்படையிலான, இனவிகிதாசாரம் மாறுபடுமே என்ற அச்சம் ஒரு காரணம். கணிசமான வரியை செலுத்திக் கொண்டிருக்கும் (வெளிநாட்டு) உழைக்கும் வர்க்கத்தின் விழிப்புணர்வை மழுங்கடிப்பது இன்னொரு காரணம். இதனால் அரசு ஒரு பக்கம் அவர்களை நுகர்பொருள் கலாச்சாரத்தின் அடிமைகளாக வைத்திருக்க விரும்புகிறது. மறுபக்கம் அவர்களின் மீது "குற்றப் பரம்பரை" முத்திரை குத்தி ஒடுக்க நினைக்கிறது.

(முற்றும்)





Wednesday, April 07, 2010


ஸ்ரீலங்காவின் எழாவது பாராளுமன்றத்துக்கான
பொதுத் தேர்தல் (சிலதகவல்கள் )
-யாரது -


ஏழாவது பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் 08.04.2010 நடைபெறவுள்ளது. வாக்களிப்பு காலை 7 மணி முதல்பிற்பகல் 4 மணி வரை இடம்பெற உள்ளதோடு நேரகாலத்துடன் சென்றுவாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் சகல வாக்காளர்களையும்கேட்டுள்ளார்.

* காலை 7 முதல் மாலை 4 மணிவரை வாக்களிப்பு
* 196 பேரை தெரிவு செய்ய 7620 பேர் களத்தில்
* மோசடி, குழப்பம் நிரூபணமானால் வாக்கெடுப்பு இரத்து
* 58,700 பொலிஸ், அதிரடிப்படையினர் கடமையில்
போன்ற வாக்குறுதிகளும் தகவல்களும் தேர்தல் ஆணையத்தினால்வழங்கப்பட்டுள்ளது.

225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 196 உறுப்பினர்களை நேரடியாக தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது.
29
உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
கடந்த பெப்ரவரி ஒன்பதாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல்அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெப்ர
வரி 19ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரைவேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 36 அரசியல் கட்சிகளும் 301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவைகளின் சார்பாக 7620 பேர்போட்டியிடுகின்றனர். 2008 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் தேர்தல்நடைபெறுவதால் இம்முறை ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர்வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.


























நாடு
பூராவும் அமைக்கப்பட்டு
ள்ளவாக்களிப்புநிலையங்களில் வாக்களிப்புநடைபெற ஏற்பாடாகியுள்ளது. 11,875 வாக்குகளை எண்ணுவதற்காக 1,130வாக்குகள் எண்ணும்நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்திணைக்களம் தெரிவித்தது.


இடம்பெயர்ந்தோர்


இடம்பெயர்ந்தவர்கள்வாக்களிப்பதற்காக 48 வாக்களிப்பு நிலையங்கள்அமைக்கப் பட்டுள்ளன. இவர்களை வாக்களிப்புநிலையங்களுக்கு அழைத்துச்செல்வதற்காக 55 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் தினத்தன்று காலைமணிக்கு காமினி மகா வித்தியாலயத்தில் இருந்து மேற்படி பஸ்கள் புறப்படும்என்று அறிவிக்க ப்படுகிறது. தேர்தல் கடமைகளில் 3 இலட்சம் அரசாங்கஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இம்முறை கடந்த ஜனாதிபதித் தேர்தலைவிட 50 ஆயிரம் பேர் கூடுதலாக சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தேர்தல் கடமையில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்களும் பொலிஸாரும் நேற்றுமுதல் தமது வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லத்தொடங்கியுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.

தபால் மூல வாக்களிப்புகள் கடந்த 25 மற்றும் 26ஆம் திகதிகளில் நடைபெற்றன. தபால் மூலம் வாக்களிப்பதற்கு 4 இலட்சத்து 77,110 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 61,678 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால் 4 இலட்சத்து 15432 பேருக்கேதபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. தபால் மூல வாக்களிப்புதினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக மார்ச் 30, 31 ஆம் திகதிகளில்வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

6 06.04.2010
போலிஸ்மாதிபர் தகவல்

தேர்தலை
முன்னிட்டு 58,700 பொலிஸாரும் மற்றும் அதிரடிப்படையினரும்தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 19,500 முப்படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார். இதுதவிர நாடு முழுவதும் உள்ள 413 பொலிஸ் பிரிவுகளிலும் உள்ள பொலிஸார்தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வாக்குச்சாவடிகள், வாக்குகள் எண்ணும் நிலையங்கள், வாக்குப் பெட்டிகள் எடுத்துச்செல்லும் பஸ்கள் என்பவற்றுக்கு பாதுகாப்பு வழங்க விசேட பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும்வீதிகளில் வீதித் தடைகள், இடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளதோடுரோந்து நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல்நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினிநவரத்ன கூறினார். தீவிர கண்காணிப்புக்கென நியமிக்கப்பட்டுள்ள 2584 நடமாடும்பாதுகாப்புப் பிரிவுகளும் நேற்று முன்தினம் முதல் பாதுகாப்பு கடமைகளில்ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதனைமுறியடிப்பதற்காக துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கும் பொலிஸாருக்குஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸார் தேர்தலுக்கு மறுதினம் வரைபாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாடு பூராவும், சகல சட்டவிரோத கட்அவுட்கள், சுவரொட்டிகள்கொடிகள் என்பன அகற்றப்பட்டு வருவதாகவும் இதற்காக சிற்றூழியர்கள்ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காமினி நவரத்ன தெரிவித்தார். தேர்தல்பிரசாரங்கள் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் முடிவடைந்ததையடுத்து பிரதானகட்சிக் காரியாலயங்கள் தவிர்ந்த கட்சி காரியாலயங்கள் அகற்றப்படுவதாகவும்அவர் தெரிவித்தார்.

இதேவேளை வாக்களிப்பு நிலையமொன்றில் குழப்பங்களோ முறைகேடுகளோஇடம்பெற்றால் குறித்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்கெடுப்பை நிறுத்துமாறுதெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தல்வழங்கியுள்ளார். தேர்தல் தினத்தில் முறைகேடுகள் நடந்தால் அதனைகவனிப்பதற்காக சகல பிரதேசங்களிலும் இணைப்புக் காரியாலயங்கள்அமைக்கப்பட்டுள்ளதோடு இவை இன்று (7) முதல் இயங்கும் என்றும் தேர்தல்திணைக்களம் கூறியது.

இந்த பிரதேச கண்காணிப்புப் பிரிவுகளுக்கு ஒரு உதவித் தெரிவத்தாட்சி அதிகாரிஇரு பொலிஸார் மற்றும் மூன்று தேர்தல் அதிகாரிகள் வீதம்நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கான சகலஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது. சுதந்திரமாக தேர்தல்களை நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு சகல அரசியல்கட்சிகளையும் வேட்பாளர்களையும் தேர்தல் ஆணையாளர் கோரியுள்ளார்.

வாக்களிப்பு நடைபெறுவதற்கு முன்னர் வாக்குப் பெட்டிகளுக்குள் ஸ்ரிக்கர்கள்ஒட்டுவதற்கு கட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர்வாக்குப் பெட்டிகள் ‘சீல்’ வைக்கப்படும் எனத் தேர்தல் திணைக்களம் கூறுகிறது. இம்முறை தேர்தலில் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் சிலபகுதிகளுக்கு கூடுதலான வாக்குப் பெட்டிகள் அனுப்பப்பட உள்ளன. அத்தகையவாக்குச் சாவடிகளில் கூடுதலான அரச ஊழியர்களை ஈடுபடுத்தவும் உள்ளதாகதேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

திகாமடுல்ல மாவட்டத்தில் 18 கட்சிகளும் 48 சுயேச்சைக் குழுக்களும்போட்டியிடுவதால் மிக நீளமான வாக்குச் சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

தேர்தலை முன்னிட்டு 19 ஆயிரம் கண்காணிப்பாளர்களை தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்த தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் முடிவு செய்துள்ளன. பெப்ரல் அமைப்பு 9ஆயிரம் கண்காணிப்பாளர்களையும் கெபே அமைப்பு 6,500 கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த உள்ளன. இது தவிர நடமாடும் கண்காணிப்புக் குழுக்களையும் ஈடுபடுத்த அவை முடிவு செய்துள்ளன.
இதேவேளை முதலாவது பொதுத் தேர்தல் முடிவு நாளை 08.04.2010 நள்ளிரவு 12 மணியளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளைல் சகல முடிவுகளும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை தேர்தல்
முடிவடைந்து ஒரு வாரம் வரை ஊர்வலங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்றம் ஏப்ரல் 22 ஆம் திகதி கூடப்படவுள்ளது 09.04.2010

Saturday, April 03, 2010

செக்கு "நாடகம் "

செக்கு நாடகம் மக்கள் பார்வையில்
-
தர்ஷாயணீ லோகநாதன்-
பலரின் வேண்டுகோளுக்கிணங்க, "இருக்கிறம்" ( பங்குனி ) மாத இதழில் வெளிவந்த "செக்கு' நாடகத்தைப் பற்றிய பார்வை இங்கு பதிவிடப்படுகிறது. சிங்கள நாடகத்துறையின் முழுமையான பரிணாமத்தைக் காட்டும் இந்நாடகம் பற்றிய தகவல்கள் ,உபயோகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது
.

பொதுவாக நாடகங்களின் தன்மைக்கேட்பவே ரசனையாளர்கள் ஏற்படுகின்றார்கள், காலாகாலமாக நாடகங்கள் வீதிகளிலும்,அரங்குகளிலும் ஏறப்படுகிறபோது அவற்றினது கவர்ச்சித்தன்மையுடன் ஏதாவது ஒன்று மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்படுகிறது, இதன் அடிப்படியில் நாடகத்துக்கான தனிப்பட்ட ரசிகர்கள் குறைவடைகிரார்கள், பெரும்பாலும் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள், முற்போக்குக் கருத்துக் கொண்டவர்கள், மக்கள் ஸ்தாபனத்தைத் தாங்குபவர்கள், சமுதாயத்தினதும் அரசியலினதும் பார்வைக்குளிருப்போர் போன்றோரால் தான் முற்போக்கு நாடகங்கள் காலப்போக்கில் வரவேற்கப் படுகின்றன, இதன் காரணமோ என்னமோ நாடகத்தின் உட்பொருளும் இது சார்பாயே இருந்தது.

கிட்டத்தட்ட முறையான தமிழ் நாடகங்களையே காணக்கிடைக்காத இந்தக் காலகட்டத்திலே 'ஜனகரளிய' குழுவினரது 'செக்கு' நாடகம் அண்மையில் கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவையின் சிற்றரங்கிலே கடந்த ஞாயிறன்று காணக் கிடைத்தது. வெறுமனே நாடகம் என்று சொல்லிவிட்டால் அதனது பாண்டித்தியம் குறைந்து விடும், அல்லது அதன் வெளியீட்டுத் திறன் குறைத்து மதிப்பிடபட்டுவிடும். எனவே அரங்காடல் என்று விட்டால் அதன் உள்ளீட்டு அரங்கியலும் வெளிப்பட்டுவிடும் .


வழமையான ஐரோப்பிய "ப்ரோசீனியம்" மேடையமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டு திறந்த வெளிக் களரியமைப்புடன் பார்வையாளிக்கும் அரங்காடுபவருக்குமான இடைவெளியைக் குறைத்துக் கொண்ட யுக்தி அருமையானது , இடப்பற்றாக்குறையும் அதற்கொரு காரணமாகும், இருப்பினும் நாடகத்தின் பொருள் புதைந்து போன பார்வைக்குள் பார்வையாளர்களை இட்டுச் செல்ல நல்லதோர் வழி அதுவாகவிருந்தது.
சிங்கள நாடக வரலாற்றில் தனக்கென தனியான தடம் பதித்துக்கொண்ட திரு. பராக்கிரம நிரியெல்ல அவர்களது தயாரிப்பில் 1979ஆம் ஆண்டு சிங்கள மொழியிலே "செக்குவ" எனும் பெயரில் அரங்கேற்றப்பட்டு தேசிய நாடக விழாவிலே ஏழு தேசிய விருதுகளைப் பெற்றுக்கொண்ட பெருமைக்குரிய இந்நாடகம் தமிழிலே "செக்கு" எனும் பெயரில் அரங்காடப் பட்டது.
நாடகம் சுமார் ஆறரை மணியளவில் தொடங்கப்பட்டது, தயாரிப்பாளர் திரு. பராக்கிரம நிரிஎல்ல, அவர்களின் முன்னுரையை நம்மவருக்காக மொழிபெயர்த்துத் தந்த இரா .லோகானந்தனின் உரையுடன் ஆரம்பமானது.
கதைசொல்லியின் பொருளாதார வாழ்க்கைத்திறன் பாடலுடன் அரங்கம் ஒளிக்குள் பிரகாசிக்கிறது, சிறிய அரங்கம், சந்ததியான கூட்டம், அப்படியே அடங்கிப் போய் ஒன்றிவிடுகிறது சற்றைக்கெல்லாம்.
சம்பிரதாய பார்வையாளர்களைத்தருவிக்கத் தவறியதால் நிறைய நெறிகடந்தவர்களைக் காணமுடிந்தது, எனவே நாடகத்தின் உட்பொருள் அவரவர் பார்வைக்குள் திசைப்பட்டது. குறியீடுகளாலும் படிமங்களாலும் நவீனமாக்கப் பட்ட நாடகம் சாதாரண பார்வையாளனின் மனதை என்ன செய்திருக்கும் என்கிற கேள்வியையும் ஏற்படுத்தத் தொடங்கிற்று. நாடகத்தில வருகின்ற குறியீடுகள் குழப்பமும் மயக்கமும் மிகுந்து தெளிவில்லாமலிருந்தது.
குறியீடுகளில இருக்கிற இந்த மயக்க நிலை தெளிவின்மை, படைப்பாளி மக்களுக்குச் சொல்ல வருகின்ற செய்தியில் பார்வையாளனை லயிக்கச் செய்ததோ என்னமோ ? மறைபொருள் நிரம்பிய நாடகத்தின் குறியீடுகள் தற்கால சமூக நிலையையும்,அரசியல் கலாசாரத்தைக் குறிப்பதுமாக இருக்கலாம், அதன் காரணமாக சாடை கட்டப் படுகின்றதோ என்று பெரும்பாலானோர் எண்ணத் துணிந்தனர்.
நில ஒதுக்கீடு, முதலாளித்துவம், காலனியாதிக்கம், குடிமக்களின் தேசீயச் சுரண்டல்,அடிப்படை அரசியல் போன்ற அடிப்படப் பிரைச்சினைகளை வட்டங்காட்டுவதாக அமைந்திருந்தது, 1979ஆம் ஆண்டளவில் புனையப்பட்ட நாடகம் என்ற ரீதியில் அந்தக் காலகட்டத்து அரசியலமைப்பும் வெகுவாகப் பேசப்பட்டிருந்தது கண்கூடு, சிங்கள நாடகமொன்றை தமிழ் மொழிப்படுத்துதலின் போதான நெறி நீக்கல்கள் எதுவும் இங்கு இடம்பெறாமல் வெளிப்படையாக தந்திருந்தமை பாராட்டத்தக்கது. தமிழிலே இரா. லோகானந்தன் என்பவர் மொழிபெயர்த்திருந்தார், இவர் மக்கள் களரியமைப்பைச் சார்ந்தவர். நாடகத்தை நெறியாளகை செய்தவர்கள் தி. சிவநேசன் மற்றும் ரொனிக்கா சாமலி ஆகிய மக்கள் களரியங்கத்தவர்கள்.

"செக்கு" என்பதன் அர்த்தத்தை நாடகம் பார்க்கும் முதல், ஒருதடவை மனதில் அர்ப்பித்துக் கொண்டேன், ஒரு பொருளைப் பிழிந்து அதன் சாற்றை எடுக்கப் பயன்படும் உபகரணம், அவ்வளவுதான்.
ஆனால் நாடகத்தின் ஒவ்வொரு கட்டத்தின் இறுதிப்படிகளின் போதும் "செக்கு" என்பதன் அர்த்தத்தை நான் மாற்றிக் கொள்ளவேண்டியிருந்தது. செக்கினது பரிமாணம் அங்கு ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறாக நிலைப்படுத்தப் பட்டிருந்தது, ஒரு கடை பார்வையாளிக்கு இது எந்தளவில் சென்றடைந்திருக்கும் என்பதில் எனக்கும் ஐயமேட்டப்பது. நாடகம் முழுவதும் எளிய பேச்ச்சுவழக்குத்தமிழிலே எந்த ஒரு வட்டாரத்தையும் சாடுவாதாக அல்லாது அமைந்திருந்தது. ஆனால் குறியீடுகளாலும் படிமங்களாலும் நிறைந்து வழிந்தது. அரங்கத்தின் தொங்கலிலே திரையால் மூடப்பட்ட பொ(ய்)ம்மையுருவங்கள் கிடந்தன, திறந்த வெளியமைப்பிலே இடது ஓரத்தில் வார்த்தியக் குழுக்களும், குழுப்பாடகர்களும் அமர்ந்து கொண்டார்கள், இரண்டு பெரு (சிறு) வழியினூடு அரங்கத்தினுள் அரங்காடுபவர்கள் பிரவேசிக்கக் கூடியதாயிருந்தது.
கதையின் ஆரம்பத்திலேயே இது ஒரு 'சமுதாயப் பிரதிபலிப்பு' என்று சொல்லிவிடப்பட்டமையால் ஒவ்வொரு நாடகப் பிரதிநிதிகளையும் சமுதாயத்தின் பிரதான பொது உருவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கத்தோணுகிறது.
"கதை சொல்லி" வளமான சமுதாயப் பாடலுடன் மக்களை வரவேற்றபடி அறிமுகமாகிறார். (சிவப்புச்சட்டை அணிந்திருக்கிறார் (?) ) அவரது இயல்புத் தொணி ஒருவகை ஈர்ப்பைத் தருகிறது.
"சின்னா" என்கிற சாதாரண குடி மகனின் விவசாய நிலம் சாதுர்யத்தனமாக தனது "துரை" என்று சொல்லப்படும் முதலாளியால் கைப்பற்றப்பட்டு விடுகிறது, தனது நிலத்தை மீளப்பெற வழி தெரியாதவனும், அது அவனிடமிருந்து சுரண்டப்பட்டிருக்கிறது என்ற அடிப்படைப் புத்திசாலித்தனமும் இல்லாதவனான சின்னா ஊரை விட்டு எங்காவது ஒழிந்துவிடத் தீர்மானிக்கிறான், அவனது நண்பன் (கதைசொல்லி) அவனைத்தடுத்து நிறுத்தி அவனது உரிமையான அபகரிக்கப்பட்ட நிலத்தினை துரையிடம் கேட்டு மீட்கச் சொல்லி அறிவுறுத்துகிறான், இருவரும் கேட்கப் போகிறார்கள்.
"துரை", மற்றும் "எடுபிடி" என்கிற சுரண்டல்ச் சமுதாயத்தின் பிரதிநிதிகளை அவர்கள் சித்தரித்திருந்த விதம் அருமை. பிரித்தானியரின் வருகைக்குப் பின் அவர்களோடு ஒட்டிக்கொண்டு, அடிமைச்முதாயத்தை உருவாக்கத் துணிந்தவர்களும் கடைஞ்சல் நாகரிகத்தையும் கொண்டவர்க்களுமாவர். முறையே நீலம், பச்சை ஆடை கட்டியிருந்தனர்.நிலவுரிமையைப் பெற எத்தணிக்கிற சின்னாவை, நிலத்தைக் கொடுத்து பொதுவுடமைதாரராகாமல், அடிமையாக உபயோகிக்க திட்டமிடுகின்றனர் .முதலாளிகளின் பணக்காரத்திட்டங்களுக்கு செவிபோகிற சின்னாவின் நிலை சாதாரண ஒவ்வொரு குடிமகக்களும் தேர்தலின் பின்னரான அரசியலைச் சகிப்பது போன்ற அவலநியையாகும், அவனறியாமலேயே அடிமைப்படுத்தப்பட்ட சின்னா, செக்கிழுக்கும் தொழிலாளியாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமர்த்தப்படுகிறான், செக்கு இழுத்து எண்ணெய் பெறப்பட்டதும், அவனது நிலம் அவனுக்கே உரித்தாக்கப்ப்படுமாம், செக்கு இழுக்க இழுக்க எண்ணெய் வருகிறது, அதனை முதலாளிகளின் சேவகர்கள் கொண்டு போகிறார்கள், மறுபடியும் சின்னா செக்கிழுக்கிறான்,.....சேவகர்கள் கொண்டு போகிறார்கள்,......இது தொடர்கிறது.
தொடர்ந்து ஏமாறத் திராணி இல்லாத சின்னா, அவனது நண்பனும் கதைசொல்லியுமானவரையுங் கூட்டிக் கொண்டு துரையிடம் நியாயங்கேட்கப் போகிறான்.
சின்னாவிட்கு இந்திரலோகத்தில் இருந்து தருவிக்கப் பட்டதாகச்சொல்லி "சகடை" எனும் மாடு, செக்கிழுத்தலுக்குப் பயன்பட வழங்கப்படுகிறது, மீண்டும் தனது நிலம் கிடைத்துவிடும் என்கிற முழுநம்பிக்கையுடன் சின்னா மாட்டைக் கொண்டு செக்கிழுக்கிறான், மாடு அசைந்து கொடுக்கவில்லை, இந்திரலோகத்திலிருந்து தருவிக்கப்பட்ட குறியீட்டு மாட்டிற்கு உயர்ரக உணவும், சின்னாவிட்கு மீய்ந்த தவிட்டு ரொட்டியும் உணவாக வழங்கப்படுகிறது. மாடு பொதிசுமக்க மறுக்கிறது, மறுபடியும் சின்னா தன் நம்பிக்கையை இழக்கிறான், கதைசொல்லியும் சின்னாவும் மீண்டுமொருதடவை துரையிடம் நிலத்தைத் தரும்படிக் கேட்கப் போகிறார்கள்,
மறுபடியும் சின்னாவின் அதிஸ்டம் எனக்கூறி இந்திரலோகத்திலிருந்து "எடுபிடியால்" தருவிக்கப்பட்ட "செவிலி" எனும் இளங்காளை தருவிக்கப் படுகிறது. மறுபடியும் நிலம் தனக்கு உரிமையாகும் என்ற சிரத்தையோடு செவிலியைக் கொண்டு செக்கிழுக்கிறான் சின்னா, 'செவிலி' இந்திரலோகத்தில் நன்றாக தின்று குடித்த மாடு... செக்கிழுக்க மறுக்கின்றது, சின்னா ஒரேயடியாய்த் துவண்டு போகிறான்,
மாடுகள் செக்கிழுக்க மறுக்கும் ஒவ்வொரு பட்சத்திலும் அவனது நிலம் அவனிடமிருந்து தொலைந்து போகிறது, மறுபடியும் துரையிடம் மாடு பற்றி முறையிடும் போது, முதலில் மாடுகளுக்கு கவசம் வழங்கப்பட்டது, அவை செல்லுபடியற்றதாக, பின் செக்கிட்கு பாதுகாப்புக் கவசம் வழங்கப் படுகின்றது . அந்த இடத்தில் செக்காக கதை சொல்லி பாவிக்கப் படுகிறார்.
எல்லா நிலைகளிலும் சின்னா வஞ்சிக்கப்பட்டு இறுதியில் அவனது நிர்வாணத்தை மறைக்கத் துணியில்லாதவனாகிறான். அரங்காடலின் ஒவ்வொரு கட்டத்திலும் "துரை" மற்றும் அவரது "எடுபிடி" இருவரும் வர்ணக்கலவையிலான, உயர்ரக, ஆடைகட்டிக் கொண்டு வருகிறார்கள், ஒருகட்டத்தில் கதை சொல்லி கேட்கிறான்,
'உங்களுக்குக் கீழ் தினப்படி செக்கிழுத்து வேலை செய்த சாதாரண குடிமகனான சின்னா காலப்போக்கில் தனது நிர்வாணத்தை மறைக்கக் கூட துணியில்லதவனாக இருக்கும் போது, உங்களால் மட்டும் நேரத்துக்கொரு டாம்பீகமான துணியணிந்து கொள்ள முடிகிறதே என்று,.... .. சுரண்டல்ச் சமுதாயத்தின் திரையைக் கிழிக்கும் யாதவமான வார்த்தைகள்,
சின்னாவின் அடிப்படைத்தனத்தைப் பயன்படுத்தி அதாவது கழுதைத்தனத்தைப் பயன்படுத்தி, நிலத்தை உரிமையாக்கிவிட்ட துரைமார் அவனுக்குப் போக்குக் காட்டுவதை கதைசொல்லியும், சின்னாவும் இறுதியில் தான் உணருகின்றனர், இருப்பினும் அதிலிருந்து மீள வழி தெரியாத சின்னா முதலாளிகளுடன் இணைந்து, உலகமயமாகுதலின் விளைவாலே, அவர்களுக்கு சிங்கியடித்து குட்டி முதலாளியாக வேஷம் போட யனிக்கிறான். கதையின் ஆரம்பத்தில், நாட்டுப் பாங்கான உடையுடன் இருந்த சின்னா இறுதி நிலைகளில் "கோட்டு", "டை" முதலிய முதலாளிச்சின்னங்களை அணிந்து கொண்டு வருகிறான் . கதை சொல்லி மட்டும் அதிகார வர்க்கங்களைக் கடந்து மாற முடியாமல்த்தவிக்கின்றார், இறுதியில் எல்லா மக்களும் அடிமைக் கொள்கையிலிருந்து மீறமுடியாமல், நாகரிகமான முதலாளிகள் வேடம் அல்லது நாகரிகமான பூர்ஷ்வா வேடத்தைக் உலகமயமாக்குதல் அல்லது போதுச்சந்தைக்குத் தள்ளப் படுத்தல் போன்றதொரு கருத்தைக் கையில் எடுத்துக் கொள்ளுகிறார்கள் என்பதுடன் கதை முடிகிறது, கதை முடியும் போது அந்த போலி பொம்மைகளின் திரை அகற்றப் படுகிறது, அவையும் நாகரீகத்தின் மிகுதியின் வடிவமாய்க் காட்சி தருகின்றன. ஒரு கவிதையின் முடிபு போல இறுக்கமாகவிருக்கிறது முடிபு. இது கதைச்சுருக்கம், முழுக்கத்தை ஆகா.
நாடகத்தின் ஒவ்வொரு திருப்பங்களும் மிகுந்த நகைச்சுவையுடனும், குறியீட்டு பொறி முறையுடனும் லாவகமாக காட்சிப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு காட்சி முடிவின் போதும் எழுந்த கரகோஷங்கள் அதன் அத்தன்மையை தெளிவுபடுத்தியது.
கதையாடலின் காட்சிப்படுத்தலாகட்டும், நடிகர்களின் தேர்ந்த நடிப்பாகட்டும் குறை சொல்லும் விதத்தில் இருக்கவில்லை, உண்மையில் அருமை என்றே சொல்ல வேண்டும் . இடப்பற்றாக்குறையும், தொழிநுட்ப வசதிகளும் குறைவாக இருந்த போதிலும் நாடகத்தின் விறுவிருப்புக்குக் குறைவே இருக்கவில்லை.
நின்ற நிலையிலும் பார்வையாளர்கள் பலர் தொங்கித்தொங்கி இறுதிவரைக்கும் பார்த்துக் கொண்டேயிருந்தனர். பேச்சு வழக்குத் தமிழின் கொச்சை மொழியும், சில தவிர்க்கப்பட வேண்டிய மரபு தவறிய வார்த்தைகளையும் சேர்த்திருந்தமை கொஞ்சம் உறுத்தலாய் இருந்தது. பார்வைக்காக நேரஞ்செல்லச் செல்ல மாணவர்களும் வந்திருந்தார்கள், ஆகையால்.
தவிர நாடகத்தின் முக்கிய பாத்திரங்களாக அ. சாந்தகுமார், சோ. கிருஷாந்தன், தாஸன் சேம் போல், தினேஷ் குமார, ரனகிந்த் சுமித், இரா. லோகானந்தன், மற்றும் தி. சிவநேசன் ஆகியோர் நடித்திருந்தனர். அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய "எடுபிடி"ப் பாத்திரம் சகோதர மொழியைச் சேர்ந்த சுமித் தினால் தெளிவான தமிழ் வசனநடையுடன் , வியக்கும் படிக்காய் இருந்தது.
நாடகம் முழுவதும், ஹர்ஷ விக்ரமதுங்க, சிநேத் தேவிந்தி, தினேஷ் குமார, இரா. லோகானந்தன் மற்றும் இசுரு தயானந்த ஆகியோர் இசைவடிவம் தந்திருந்தனர். குறிப்பாக தாளவார்த்தியத்தினது மெட்டுக்கள் மாடுகளின் லாவணிய நர்த்தனத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய கட்டங்களில் ஓசையாகின பெரும்பாலான குரல்கள் சகோதரமொழிக்குரியவை, திருத்தமான் உச்சரிப்புடனே இனிமையாகவும் இருந்தது, ரொனிக்கா ஷாமலி, மஞ்சுல ரணசிங்க, செல்வராஜ் லீலாவதி, சுனேத் சாந்த பிரியந்த, நிஷாந்த குலரத்ன , பாலித அபேலால், தினேஷ் லிவேரா, அரோஷா தரங்கனி, மலிதி குமாரி, ஷாந்தனி மல்காந்தி, அகேல சதுரங்க, இரா. சத்தியப்பிரபா, இனோக்கா இலங்காபுர, அமிலேஷ் தினேஷ், புத்திக்க, மற்றும் சுரேஷ் அசங்க ஆகியோரே பங்கு பற்றிய பின்னணிப் பாடகர்கள் .
மேலும் அரங்கதுடனான ஒன்றிப்போன ஒளியமைப்பு,மற்றும் மேடையமைப்பினை இனோக்கா இலங்காபுர அமைத்திருந்தார். பாத்திரங்களின் ஆடையமைப்பாகட்டும், அரிதரமாகட்டும் பாத்திரங்களின் யதார்த்தத்தை உணர்சிகள் இல்லாமலேயே காட்டிக் கொள்ளக் கூடியதை இருந்தது.
(திரு. பராக்கிரம நிரிஎல்ல அவர்கள்.) நாடகத்தைப் பார்த்து விட்டு வந்ததும் ஒரு வித நீண்ட கால பெருமூச்சொன்று வெளியாகிப் போன இலகுத்தன்மை தெரிந்தது, நண்பரொருவர் கேட்டார், நாடகத்தின் ஒவ்வொரு குறியீடுகளும் சொன்னதை நீங்கள் எவ்வாறு விளங்கிக் கொண்டீர்களேன்று, குறியீடுகளின் விளக்கங்கள் தான் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் முறன்பட்டிருந்தனவே தவிர பொருளல்ல.
இந்தமாதிரியான நாடகங்களை ஒரு தடவை மட்டுந்தான் பார்க்கவே கிடைக்கிறது , சினமாப்படம் போல விளக்கம் தேவையான போதெல்லாம் காட்சிக்குள் நாடகங்களைக் கொண்டு வர இயலாமை கூட முற்போக்கு நாடகங்களின் கருத்தாழம் மக்களைச் சென்றடையாமைக்கொரு காரணமாயிருக்கிறது. நாடகத்தில் குறிக்கப்பட்ட, 'நிலவுரிமை' என்பது, பொருளாதாரம் என்றும் ,அது சாதாரண பொதுமக்களிடம் காணப்படுவதாயும் , ' சின்னா' - சாதாரண குடிமக்களின் தோற்றமாயும் பொருளாதரமானது காலனிய முதலாளிகளினால் பறிக்கப் படுகிறதாயும்
'செக்கு'- காலனிய முதலாளித்துவத்தின் சுரண்டலின் பெரும் பொருளாதார வடிவமாயும் சித்தரிக்கப் பட்டிருந்தது. (அது கால மாற்றத்திற்கு ஏற்ப வித விதமான மாற்றங்களுடன் மக்களின் உழைப்பை சுரண்ட பயன்பட்டது) மாடுகள் (சகடை, செவிலி) , இலாபத்தை கூட்டும் வெளி நாட்டு முதலாளிகளின் பூர்ஷ்வா திட்டங்களாயும் முறையே எமது உள்ளூர் அடிமட்டத் தொழிலாளிகளின் உழைப்பாகவும் வருவது குழப்பம். நாடகம் தமிழ்ப்படுத்தப் பட்ட பின்னும், துரை, எடுபிடி ஆகியோரின் வாகனத்திலுள்ள 'ஸ்ரீ' எழுத்துக்கள் சிங்களத்திலேயே இருந்தமை, எழுபதுகளின் தீவிர நிலைமையை அப்பட்டமாகக் காட்டும் போது, அரசியலின் ஆதிக்கம் தானோ முழு நாடகமும் என்றும் எண்ணத் தோணுகிறது.
இறுதியில் செக்கின் தலையைக் காக்கப் பயன்படுத்தும் கவசம் கதை சொல்லியைச் செக்காகப் பாவித்து தலையில் சூட்டப் படுகிறது, அந்தக் கவசம் கூட காலனியத்தின் பின் முதிர்ந்த உலகமையமாதலில் அடக்கப் பட்ட நாடுகளின் அடிமட்டத்தைக் காட்டுகிறது. கடைசியில் காலப் போக்கின் புதிய காலனியம், எல்லாவற்றையும் அப்படியே மாற்றுகிறது. செக்கின் இடத்தை வேறேதோ சுரண்டல்
சாதனம் எடுத்துக் கொள்கிறது. மக்கள் அதன் விசித்திர மாயைக்குட்பட்டு தங்கள் மன சாட்சியை கொன்று வாழப் பழகுகிறார்கள். சின்னாவும் மாறுகிறான்.
தேர்தல் வைத்து மாட்டினைத் தெரிவு செய்வதும் , மாடுகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதும், அரசியலின் கட்சி மோதல்களை ஞாபகப் படுத்தியது. மாடுகளின் பச்சை, நீலக் கொம்புகள் அதைப் பறை சாற்றின, கதை சொல்லியினது சிவப்பு நிற ஆடையும் குடியானவனின் தோற்றமால்லாத, தலைக்கட்டும் புரட்சிகரமான கம்யூனிசத்தை கொண்டு சேர்த்தது.
இந்த மாதிரியான மக்களின் பொது அறிவுக்கு எட்டாத பலவற்றை ஒருங்கே சேர்த்துக் குழப்ப நிலையை உண்டு பண்ணியிருந்தாலும், உரையாடல்களின் தெளிவு கதையாழத்திப் புரிந்து கொள்ளக் கூடியதாயிருந்தது.
இறுதியில் நவ யுகத்தின் உலகமயமாதலின் போததன் காட்சிகளிலே, நாகரீகத்தின் உச்சபட்சக் காட்சிகளைக் கூறி அவ்வளவு நேரமும் பேசப்பட்ட மக்களப்ப்ரச்சினையை பார்வையாளனை மறந்துவிடச் செய்திருந்தமை கூட ஒரு யுக்தியோ என்று தோணுகிறது, ஏனென்றால் பேசப்பட்டது மறைபொருள் அரசியல்.
இந்த மாதிரியான உத்வேகமான, நாடகத்தை தமிழ் பேசும் சமுதாயத்தைப் பொறுத்தவரையில் பொதுஅரங்கில் போடப்பட முடியாமை ஒரு வருத்தமாக இருந்த போதிலும், சகோதர மொழித் தயாரிப்பாளர்களால் எமக்கு மாற்றமின்றித் தந்ததை பெருமையாகக் கொள்ளவேண்டும்.
பார்வையாளர்களைப் பொறுத்தவரையில் நீண்ட நாட்களின் பின் கருத்துச் செறிவு மிக்க நாடகமொன்றைப் பார்க்கக் கிடைத்த மகிழ்ச்சி, அதுவும் இலவசம் எம்மை வாரி அழைத்திருந்தது. எனவே இலவசம் தந்த சொகுசில் நாடகத்தின் புரிதல் தன்மையுடன் அதிகம் முரண்படக் கூடாது, அரங்காடலின் மொத்த வடிவமும் நகைச்சுவையும் சிந்திக்கத் தக்கதுமான மேற்கோள் வடிவமாயே இருந்தது.
அரங்கம் முடிவுற்ற பொழுதுகளில், கலைஞர்களின் அறிமுகமும், அதைத்தொடர்ந்து நன்றியுரையும் தயாரிப்பாளர் திரு. பராக்கிரம நிரிஎல்ல அவர்களால் சிங்களத்திலும், தமிழிலும் வழங்கப்பட்டது.

மக்கள் களரி எனும் அமைப்பினது 'ஜனகரளிய' செயத்திட்டத்தினது முழு முயற்சியே இந்த வெளியீடு. மக்கள் களரி அங்கத்தினரின் பதட்டமில்லாத கைதேர்ந்த நடிப்பாற்றலும், தெளிவும் கூட , பார்த்துக் கொண்டிருப்பதற்கு ரம்மியமாகத்தான் இருந்தது. நாடெங்கிலும் இவ்வகையான நாடகங்களை அவர்கள் தொடர்ந்தும் பலவருடங்களாக அரங்கேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது, அதிலும் அனைத்து அங்கத்தவர்களும் துடிப்புள்ள இளைஞர் யுவதிகள்.
இந்த அரங்கேற்றத்தை தொடர்ந்து இவ்வாறான நாடகங்களை பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் மக்களின் முன் வருகை நாடகத்தின் வெற்றியைக் குறிக்கின்றது. மறை பொருளை விளங்கிக் கொண்டால்த்தான் முழு நாடகமும் விளங்கும் என்ற நிலை இல்லைஎன்பதும் அதன் வெற்றியைக் குறிக்கிறது.
மொத்தத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகான தமிழ் நாடகம், பார்த்ததைப் பற்றிக் கதைப்பதற்கான களமாயிருந்தது.

லண்டன் உங்களை வரவேற்கிறது

லண்டன் உங்களை வரவேற்கிறது
-கலையரசன்
-

"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்." பாட்டி காலத்து பழமொழியில் வரும் "சீமை" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், என்று எமது தமிழ் வாத்தியார் சொல்லித் தந்திருக்கிறார். அந்தப் பழமொழி எல்லாம் பிரிட்டிஷ் காலனிக் காலத்து சமாச்சாரம் என்று தான் அப்போதெல்லாம் நினைத்திருந்தேன். நானும் ஏதோ விதிவசத்தால் லண்டன் மாநகரில் தங்கியிருந்த காலத்தில், அது இன்றைக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொன்மொழி என்று தெரிந்து கொண்டேன். முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளின் இன்றைய இளந்தலைமுறை லண்டனை தமது தலைநகரமாக வரித்துக் கொண்டு விட்டார்கள். தாய் எந்த மொழி பேசினாலும், சேயின் மொழி ஆங்கிலமாக இருக்கும் காலம் இது. தப்பித் தவறி வேற்று மொழி பேசும் நாட்டில் திரவியம் தேட சென்று தங்கி விட்டவர்களும், "என் பிள்ளை ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்" என்று கூறிக் கொண்டு இங்கிலாந்து சென்று குடியேறுகிறார்கள்.

அடியேனுக்கு அப்படியொரு பிறவிப் பெரும்பயனைக் கடைத்தேறும் பாக்கியம் பல காலமாக கிட்டவில்லை. அதனால் ஒரு வருத்தமும் இல்லை. இருப்பினும் பாழாய்ப் போன பொருளாதார நெருக்கடியும், அதைத் தொடர்ந்த வேலை இழப்பும், என்னையும் லண்டன் சென்று வேலை தேட உந்தித் தள்ளியது. நானும் தப்பித்தவறி ஐரோப்பிய ஒன்றிய பிரஜை ஆகிவிட்டதால், இன்னொரு ஐரோப்பிய நாட்டில் தொழில் தேடும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றும் தமக்கென மொழியை கொண்டிருப்பதால், நெதர்லாந்தை தவிர்த்து இங்கிலாந்து சிறந்த தெரிவாகப் பட்டது. முதலாம் வகுப்பில் இருந்து, இரண்டாம் மொழி என்ற பெயரில் திணிக்கப்பட்ட ஆங்கிலம் உதவலாம், என்று நண்பர்களும் ஆலோசனை கூறினார்கள்.
நான் லண்டன் செல்வது இதுவே முதல் தடவை அல்ல. இருப்பினும் இம்முறை வேலை தேடி "செட்டில்" ஆகி விடும் யோசனை இருந்ததால், அதற்கான தயார் படுத்தல்களுடன் சென்றேன்.

லண்டன், ஹீத்ரூ விமான நிலையத்தில் வந்திறங்கியதுமே குடியேற்ற இலாகாவின் போலிஸ் கெடுபிடி வழமையை விட அதிகமாக இருந்தது. எனக்கு முன்னால் போன வெள்ளையின பயணிகள் எந்தவித தாமதமும் இன்றி பரிசோதித்து அனுப்பப்பட்டனர். எனது முறை வந்ததும், சுமார் பத்து நிமிடங்கள் காக்க வைத்தனர். எனது நெதர்லாந்து பாஸ்போர்ட்டை பிய்த்து எடுக்காத குறை. அந்த அதிகாரி தனக்கு தெரிந்த வழியில் எல்லாம் பாஸ்போர்ட்டை சோதித்துப் பார்த்து விட்டுக் கேட்டாரே ஒரு கேள்வி. "யாழ்ப்பாணத்தில் பிறந்த உனக்கு எவ்வாறு நெதர்லாந்து பாஸ்போர்ட் கிடைத்தது?" என்ன செய்வது? எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலும், எமது தோல் நிறத்தைக் கண்டவுடன், திருடனைப் போலப் பார்க்கும் அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு தான் எல்லைகளைக் கடக்க வேண்டியுள்ளது. லண்டன் உங்களை வரவேற்கிறது!

நீண்ட காலமாக பிரிட்டனில் "உலகில் சிறந்த சுதந்திர சமூகம்" இருந்தது. வங்கியில் கணக்குத் திறப்பது என்றாலும் ஒருவரிடம் அடையாள அட்டை கேட்க மாட்டார்கள். ஏனெனில் அது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்குமாம். இதனால் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள், அடையாள அட்டை இல்லாமலே (அல்லது விசா இன்றி) வேலை செய்து பிழைக்க முடிந்தது. சில ஆசாமிகள் இரண்டு, மூன்று வங்கிகளில் கணக்கை திறந்து விட்டு, கணிசமான தொகையை கடனாகப் பெற்று கம்பி நீட்டி விடுவார்கள். "தமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்" என்ற ஒரே காரணத்தால் லண்டன் வந்ததாக கூறிக் கொள்பவர்கள் கூட, சட்டவிரோத செயல்களுக்கு வாய்ப்பு இருப்பதாலேயே வருகின்றனர். இதனால் பலரிடம் கருப்புப்பணம் தாராளமாக புழங்குகின்றது.

ஜனநாயகம், சுதந்திரம் என்றெல்லாம் உலகத்திற்கு பவிசு காட்டப் போக, அதனை குற்றச் செயல் புரிவோர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். பிரிட்டிஷ் அரசு அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கையில், ஒசாமா பின்லாடன் வடிவில் எதிர்பாராத உதவி கிடைத்தது. 2001 செப்டம்பர் 11 க்குப் பிறகு, பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த ஆரம்பித்தார்கள். அப்போதும் "இதெல்லாம் அமெரிக்க சமாச்சாரம், நமக்கு சரிப்பட்டு வராது", என்று யாராவது சொல்லிக் கொண்டிருந்தார்கள். லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு அவர்கள் வாயை அடைத்தது. தனிநபர் சுதந்திரங்கள் மெல்ல மெல்ல கட்டுப்படுத்தப் பட்டன. தற்போதைய லேபர் கட்சி பிரதமர் பிரவுனின் ஆட்சி, கன்சர்வேடிவ் தாட்சரின் கொடுங்கோல் ஆட்சியை நினைவுபடுத்துவதாக வெகுஜன பத்திரிகைகளே புலம்புகின்றன.

பிரிட்டிஷ் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது படிவத்தில் காணப்படும் கேள்விக் கொத்து, அரசு எவ்வளவு கண்காணிப்பாக இருக்கிறது என்பதை தெரிவிக்கும் முதல் படி. "நீங்கள் கடந்த காலத்தில் பயங்கரவாத அமைப்பில் சம்பந்தப் பட்டிருந்தீர்களா?", "பயங்கரவாதத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தீர்களா?" இப்படிப் பல. பிரிட்டிஷ் அரசு அறிவித்த பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை அவதானித்தால், அவற்றில் முக்கால் வாசி மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்திருக்கும். இங்கிலாந்தில் தெற்காசிய சமூகத்தவர்கள் கல்வியில் சிறந்தவர்கள், உயர் பதவிகளை அலங்கரிப்பவர்கள் என்பதெல்லாம் இனிமேலும் சாத்தியப்படுமா தெரியவில்லை. குறிப்பாக தெற்காசிய முஸ்லிம் பிரிட்டிஷ் இளைஞர்கள் விமான சேவை போன்ற துறைகளில் இருந்தால் சந்தேகிக்கப் படுகின்றனர். பிரிட்டிஷ் எயர்வேஸ் வாடிக்கையாளர் சேவையில் வேலைக்கு விண்ணப்பித்த காரணத்தாலேயே, ஒரு பங்களாதேஷ் இளைஞர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். ஆரம்பப் பாடசாலைகளில் "குட்டிப் பயங்கரவாதிகளை" இனம் காணுவது எப்படி என்று, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.

இதைப் பற்றி எல்லாம் அக்கறைப்படாமல் உதிரிப் பாட்டாளிகளின் வர்க்கம் ஒன்று லண்டன் செழிப்பின் கீழே இயங்கிக் கொண்டிருக்கிறது. முதன் முதலாக கையில் காசில்லாமல் லண்டன் வரும் எல்லோரும், இந்த அடிமட்ட பொருளாதார இயந்திரத்திற்கு எண்ணை வார்த்திருப்பார்கள். அகதிகள், மாணவர்கள், சட்டவிரோத குடியேறிகள்... இப்படி அவர்களை எந்த வகையில் அடக்கினாலும், அவர்களின் குறிக்கோள் பொருளாதார சுபீட்சத்திற்கு தேவையான பணத்தை தேடுவது. இதனால் முதலாளிகளின், முகவர்களின் உழைப்புச் சுரண்டலுக்கு இலகுவாக ஆட்படுகின்றனர். மணித்தியாலத்திற்கு மூன்று பவுனுக்கும் (அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச கூலி 5.80 பவுன்கள்) தமது உழைப்பை விலை பேசும் வெளிநாட்டுப் பாட்டாளிகளின் படை மட்டும் இல்லையென்றால், இங்கிலாந்து எப்போதோ திவாலாகி இருக்கும்.

கனவுகளோடு லண்டன் வரும் இளவயதினர், எத்தனை கஷ்டப்பட்டு பவுண்களை சம்பாதிக்கின்றனர், என்பதை ஏற்கனவே பலர் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் உபரி உழைப்பு, எத்தனை பேரின் ஆடம்பரக் கார்களாகவும், சொகுசு பங்களாவாகவும் மாற்றமடைந்துள்ளது, என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்களா தெரியவில்லை. தனது சொந்த இனச் சகோதரர்களின் முதுகில் சவாரி செய்து கொண்டே, "நான் உழைப்பால் உயர்ந்தவன்" என்று மார் தட்டுவோரை லண்டனில் தரிசிக்கலாம். சுரண்டலால் கிடைத்த லாபத்தில் ஒரு பங்கை கோயில் உண்டியலில் போட்டு விட்டு, தர்ம காரியத்திற்கு செலவிட்டதாக அரசிடம் வரிச்சலுகை பெறும் "புண்ணியாத்மாக்கள்" பலர் உண்டு.

உழைப்பால் உலர்ந்த லண்டன் தமிழர்கள்

(லண்டன் உங்களை வரவேற்கிறது! - இரண்டாம் பகுதி)

"Londinium" என்று ரோமர்கள் வைத்த பெயர், இன்று லண்டனாக திரிபடைந்து உலகப் பெரும் நகரங்களில் ஒன்றாக திகழ்கின்றது. இங்கிலாந்து என்று அறியப்படும் பிரதேசத்தை கைப்பற்றிய ரோமர்கள், அதை பாதுகாக்க ஜெர்மன் இனக்குழுக்களை குடியேற வைத்தார்கள். தேம்ஸ் நதிக்கரையில் உருவான பண்டைய ஆங்கிலேய (ஜெர்மன் இனக்குழு ஒன்றின் பெயர்) குடியேற்றங்களில் ஒன்று "ஸ்டேனா" (கல் என்ற அர்த்தம் வரும் பழைய ஆங்கிலச் சொல்.)

இன்று அந்த இடம் ஹீத்ரூ விமான நிலையம் அருகில், லண்டன் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த பகுதியாக உள்ளது. ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம், எனது தற்காலிக வதிவிடமாக அமைந்தது. வெளிநாட்டவர்களால் நிரம்பி வழியும் லண்டன் புறநகர்ப் பகுதிகளைப் போலன்றி, வெள்ளயினத்தவர்களை பெரும்பான்மையாக கொண்டது. அங்கிருந்து சில மைல் தொலைவில் "வின்சர் கோட்டை" அமைந்துள்ளது. இன்று பிரபல சுற்றுலாத் தலமாக இருந்த போதிலும், வின்சர் கோட்டை பெறுமதி மிக்க அரச வம்ச சொத்துகளில் ஒன்று.

நான் குறிப்பிடும் சுற்று வட்டாரத்தில், உலகை மாற்றிய மாபெரும் வரலாற்று நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. பிற நாடுகளைப் போல லண்டனிலும் அரசன் கையில் அனைத்து அதிகாரங்களும் குவிந்திருந்தன. அரசனுக்கு அடுத்ததாக அரசியல் செல்வாக்கு மிக்க நிலப்பிரபுக்கள், அரச அதிகாரத்தில் பங்கு கேட்டு போராடினார்கள். இந்த இரண்டு அதிகார மையங்களும் இறுதியில் "மக்னா கார்ட்டா" என்ற பெயரிலான ஒப்பந்தம் மூலம் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டனர். பிற்காலத்தில் வந்த அரச அமைப்பு சட்டங்களின் முன்னோடியாக, மக்னா கார்ட்டா கருதப்படுகின்றது. அந்த ஒப்பந்தம் கைச் சாத்திட்ட இடத்தில் தற்போது ஒரு ஆடம்பர ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு/வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வின்சர் கோட்டை செல்லும் வழியில், அந்த ஹோட்டலில் தங்கி உணவருந்தி விட்டு செல்வது வழக்கம்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில், குறைந்தது இருபது தமிழர்களாவது வேலை செய்கின்றனர். அவர்களோடு ஒரு சில சிங்கள இளைஞர்களும் பணியாற்றுகின்றனர். அனைவரும் ஹோட்டல் அறைகளை சுத்தமாக்குவது, சமையலறையில் பாத்திரங்களை கழுவுவது போன்ற துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைத் தவிர, போலந்து நாட்டுக்காரர்கள் சமையல் உதவியாளராகவும், உணவு உபசாரகர்களாகவும் பணியாற்றுகின்றனர். அவர்கள் எல்லோரும் சந்திக்கும் இடமாக, ஹோட்டலின் மையப் பகுதியான சமையலறை உள்ளது. எனக்கும் அவ்விடத்தில் ஒரு சில நாட்கள் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இருபதுக்குமதிகமான தமிழர்கள் வருடக்கணக்காக வேலை செய்து கொண்டிருப்பதால், அங்கே ஆங்கிலத்துக்கு அடுத்த இரண்டாவது மொழியாக தமிழ் உள்ளது! ஹோட்டலில் பணி புரியும் வேற்றினத்தவர்களும், தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளை எல்லாம் சிரத்தையோடு கற்றுக் கொண்டிருக்கிறார்கள். தேமதுரத் தமிழோசை லண்டனிலும் ஒலிக்கின்றது. தமிழ் தொழிலாளர்கள் அனைவரும் 18 ல் இருந்து 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வேலை செய்த அனைவரும் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்தவர்கள். வேறு எங்கேயும் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு இல்லை என்பதால், ரெஸ்டாரன்ட் வேலை ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால் அண்மைக்கால போலிஸ் கெடுபிடி காரணமாக, அப்படியானவர்களை வைத்திருக்க தொழில் வழங்குனர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

பெருமளவு உல்லாசப் பிரயாணிகளை கவரும் மேற்கு ஐரோப்பிய நகரங்களில் உள்ள ஹோட்டல், ரெஸ்டாரன்ட் தொழிற்துறை யாவும் வெளிநாட்டுத் தொழிலாளரின் உழைப்பில் தங்கி இருக்கின்றன. லண்டனும் அதற்கு விதிவிலக்கல்ல. வேலை தேடித்தரும் முகவர்களும் இடைத்தரகர்களாக தொழில் சந்தையில் குதித்துள்ளனர். பிற வணிக நிறுவனங்களைப் போல உணவு விடுதிகளும் தமக்கு தேவையான தொழிலாளருக்கு முகவர்களை நாடுகின்றன. பெரும்பாலும் அந்நாட்டு வெள்ளையர்களே நடத்தும் முகவர் நிலையங்கள் தெற்காசிய சமூகங்களுக்குள் ஊடுருவ முடிவதில்லை. மொழிப்பிரச்சினை, சரியான தொடர்புகள் இன்மை போன்ற இன்னோரன்ன காரணங்களால் அந்தந்த சமூகங்களை சேர்ந்த முகவர்களை நாடுகின்றனர்.

இங்கிலாந்துக்கு புதிதாக வரும் சீனர்களை, சீன உணவுவிடுதிகளில் அடிமை வேலைகளில் ஈடுபடுத்தும் சீன மாபியாக்கள் பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் அக்கறை காட்டுகின்றன. மாபியா ஆட்கடத்தல்காரர்கள், சீனாவில் இருந்து கிளம்ப பயணச் செலவுக்கு லட்சக்கணக்கில் கடனாக அள்ளிக் கொடுப்பார். பின்னர் ஏதாவதொரு லண்டன் ரெஸ்டாரன்ட் ஒன்றில் வேலை எடுத்துக் கொடுத்து, அந்தப் பணத்தை வட்டியுடன் திருப்பி அறவிடுகின்றனர். கிட்டத்தட்ட அதே மாதிரியான நிலையில் இருந்த இந்தியத் தமிழ் இளைஞரை சந்திக்க நேர்ந்தது. அவரின் பிரயாணத்திற்கு ஒழுங்கு செய்த ஆட்கடத்தல்கார கும்பல், ஈஸ்ட்ஹமில் (லண்டன் புறநகர்) தமிழருக்கு சொந்தமான கடை ஒன்றில் வேலை எடுத்துக் கொடுத்திருந்தது. ஊரில் வறுமையான பின்னணியில் இருந்து வந்த அந்த நபர், வருடக்கணக்காக வேலை செய்து கடனை அடைக்க வேண்டும். இந்த எழுதாத சட்டத்தை மீறி எங்கே தப்பி ஓடினாலும், எப்படி பிடிப்பது என்பது அவர்களுக்கு தெரியும்.

மாபியாக்களைப் போல, வெளிநாட்டுத் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தா விட்டாலும், அவர்களின் உழைப்பை சட்டபூர்வமாக சுரண்டும் முகவர்களும் இருக்கிறார்கள். அநேகமாக மதிப்பு மிக்க பிரிட்டிஷ் ஹோட்டல், ரெஸ்டாரன்ட் நிர்வாகங்கள் சட்டபூர்வ முகவர்களின் உதவியை நாடுகின்றன. ஒரு தொழிலாளிக்கு இவ்வளவு காசு என்று, மனிதர்களுக்கு விலை பேசுகின்றன. குறைந்த விலைக்கு ஆள் பிடித்து தருவதாக ஒப்பந்தம் செய்யும், தெற்காசிய சமூகத்தை சேர்ந்த முகவர் ஒருவர், தனது இனத்தை சேர்ந்த தொழிலாளர்களை வாடகைக்கு அமர்த்துகின்றார். இதனால் தொழிலாளர் நல காப்புறுதிகளை கட்டாமல் நிறுவனங்கள் மிச்சம் பிடிக்கின்றன. அவர்களுக்கு வழங்கப்படும் செலவினம் சம்பளமாக கருதப்படாமல், வெளியாரின் சேவைக்கு வழங்கப்பட்ட விலையாக கருதப்படுவதால், வரிச் சலுகை கிடைக்கிறது.

தொழிலாளர்களை விநியோகம் செய்யும் முகவர் எந்த அளவு குறைந்த டெண்டருக்கு எடுத்திருந்தாலும், ஒரு தலைக்கான விலை, எப்படியும் அடிப்படை சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். வெள்ளையின ஆங்கிலேய முகவர்கள் நடத்தும் நிலையங்களைப் பற்றி இங்கே குறிப்பிடவில்லை. அவர்களுக்கு எப்படியும் சராசரி சம்பள தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகவே பணம் கிடைக்கிறது. வேலை நேரம், ஓவர் டைம் எல்லாவற்றையும் சரியாக கணித்துக் கொள்கின்றனர். தமது தொழிலாளருக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் கொடுக்கின்றனர். ஆனால் தமிழ் அல்லது ஆசிய முகவர்கள் அப்படி அல்ல. இவர்கள் தொழிலாளிக்கு ஒரு கணக்கும், ஹோட்டலுக்கு இன்னொரு கணக்கும், அரசாங்கத்திற்கு வேறொரு கணக்கும் காட்டுகின்றனர்.

பிரிட்டனில் வேலை செய்யும் அடிமட்ட தொழிலாளிக்கும் அடிப்படை சம்பளம் ஒன்றை அரசு நிர்ணயித்திருக்கிறது. ஒருவர் என்ன வேலை செய்தாலும், மணித்தியாலம் 5.80 பவுன் கூலி கொடுக்க வேண்டும் என்பது அரசு போட்ட சட்டம். அது கூட ஒரு சராசரி வாழ்க்கை செலவுக்கு தேவையானதை விட குறைவாகவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. தொழில் முறை ஒப்பந்தம் செய்து கொள்ளும் முதலாளி அதற்கு குறைவான சம்பளத்தை பதிந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் வெள்ளையின முதலாளிகளே, பெரும்பாலும் ஒப்பந்தப் படி பேசிய கூலியை கொடுக்கின்றனர். தமிழ் தொழிலாளிகளை பணியில் ஈடுபடுத்தும் தமிழ் முதலாளியோ, அல்லது முகவரோ தாமாகவே ஒரு சந்தை விலையை தீர்மானிக்கின்றனர்.

ஒரு மணி நேர உழைப்புக்கு நான்கு பவுன் என்பது, தமிழரின் உழைப்புக்கு தமிழ் முதலாளிகள் நிர்ணயிக்கும் சராசரி விலை. (சில இடங்களில் மூன்று பவுன் கொடுக்கிறார்கள்.) கவனிக்கவும்: சட்டப்படி ஒப்பந்தம் செய்தாலும் அதிலே 5.80 பவுன்கள் என்று தான் குறிப்பிடுகிறார்கள். ஆனால் கையில் கொடுப்பது 4 பவுன். இதனால் ஒரு அப்பாவி தொழிலாளியின் 1.80 பவுன் பெறுமதியான உழைப்பை திருடுகின்றனர். நான் சென்று பார்த்த ஹோட்டலில் எடுத்த அண்ணளவான கணிப்பின் படி, மாதம் 7500 பவுன்கள் இவ்வாறு ஒரு முகவரின் பைக்குள் செல்கின்றது. விசா இன்றி சட்டவிரோதமாக வேலை செய்யும் தொழிலாளர்கள் அதையே சம்பளமாக ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் மாணவர்கள் போன்ற, தொழில் அனுமதிப் பத்திரம் பெற்றவர்களும் அதை ஏற்றுக் கொள்வது ஆச்சரியமானது. பலர் இந்த திருட்டை பற்றி தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆயினும் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டமும், போட்டியும் அவர்களின் வாயை மூட வைக்கிறது.

மணித்தியாலம் 4 பவுனுக்கு வேலை செய்வதால், மாத முடிவில் சொற்ப தொகையே சம்பளமாகக் கிடைக்கிறது. (அதைக் கூட மாத முடிவில் கொடுப்பதில்லை. இரண்டாவது மாதமே கிடைக்கிறது.) இதனால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் "ஓவர் டைம்" வேலை செய்கிறனர். பிரிட்டிஷ் சட்டப்படி, மேலதிக வேலை நேரத்திற்கு உரிமையான பிரத்தியேக கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை. (ஆனால் ஹோட்டல் நிர்வாகம் கொடுத்து விடுகின்றது.) நான் அவதானித்த அளவில், ஒரு தொழிலாளி சராசரி ஒரு நாளைக்கு குறைந்தது 12 மணி நேரம் வேலை செய்கிறார். ஹோட்டல்களில் "ஷிப்ட்" முறை உள்ளதால், அட்டவணைப் படி ஓய்வு நாள் கிடைக்கிறது. ஆனால் கடைகளில் சிப்பந்திகளாக பணியாற்றுபவர்கள் தினசரி வேலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
இலங்கை, இந்தியாவில் இருந்து லண்டன் வந்த பலர், காணியை, நகையை அடவு வைத்து கடன் எடுத்து வந்திருப்பார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை. கடனை அடைக்க வேண்டுமென்றால், உழைப்புச் சுரண்டலை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அவர்களின் கையறு நிலையை தமிழ் முதலாளிகளும், முகவர்களும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அப்பாவிகளின் உழைப்பை சுரண்டி, லண்டனில் வசதியான வீடு, மெர்செடெஸ் கார் என்று வாங்கித் தள்ளுகின்றனர். இறுதியில் தமிழ் தொழிலாளர்களின் உழைப்பு உற்பத்தி செய்து குவித்த பணம், பிரிட்டிஷ்காரர்களின் கஜானாவை சென்று நிரப்புகின்றது.


பிரிட்டனில் கடை போட்ட தமிழ்வள்ளல்கள்
-கலையரசன் -

( லண்டன் உங்களை வரவேற்கின்றது! - மூன்றாம் பகுதி)

வீட்டு வாடகை உச்சத்தில் இருக்கும் நகரங்களில் லண்டனும் ஒன்று. செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கக் கூடிய மைய நகர்ப் பகுதியை விட்டு விடுவோம், புறநகர்ப் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் சராசரி 800 பவுன் தேவை. அந்த விலைக்கும் வீடு எடுக்க ஆள் இருக்கிறது என்பதால் அங்கே ஒரு நாளும் வாடகை குறையாது. லண்டனைத் தவிர்ந்த வேறு பிரிட்டிஷ் நகரங்களில் வாடகை குறைவு. ஆனால் சர்வதேச சமூகங்களும் கலந்து வாழும் நகரில் வேலை வாய்ப்பு அதிகம் என்பதால், தமிழர்கள் பெரும்பாலும் லண்டனில் வசிக்க விரும்புகின்றனர்.

சட்டப்படி பதிந்து வேலை செய்யும் ஒருவரின் அடிப்படை சம்பளமே 1000 பவுனுக்கு மேலே செல்லாது. இதனால் வருமானம் குறைந்த மக்களுக்காக வாடகையின் பெரும் பகுதியை அரசாங்கம் சமூக நல கொடுப்பனவின் மூலம் ஈடுகட்டுகின்றது. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் வெள்ளையர்கள் பயன்படுத்தும் சலுகையை, தமிழர்கள் பலர் அனுபவிப்பதில்லை. அதற்கான காரணங்களாவன: அரசின் சமூகக் கொடுப்பனவுகளைப் பெற்று தம்மை வசதியற்றவர்களாக காட்டிக் கொள்ள பலர் வெட்கப்படுவது. பாரம்பரிய நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தின் படி, கஷ்டம் வரும் நேரம் உறவினர், நம்பர்களின் உதவியில் தங்கியிருத்தல். அரசாங்கத்தின் சமூக நலன்புரி திட்டங்கள் குறித்த அறிவின்மை என்பதாகும்.

அதே நேரம், புதிதாக லண்டன் வருபவர்கள், வதிவிட அனுமதிப் பத்திரத்திற்காகவோ, அன்றேல் அகதி அந்தஸ்து பெறுவதற்கோ நீண்ட காலம் காத்திருக்க வேண்டியேற்படுகிறது. காத்திருக்கும் காலத்தில் கிடைக்கும் தற்காலிக தொழில் அனுமதிப் பத்திரத்தை எடுத்தவுடன் (தற்போது அதை நிறுத்தி விட்டார்கள்) வேலை தேடக் கிளம்பி விடுவார்கள். லண்டன் நகரில் தெரிந்த உறவினர், நண்பர் வீட்டில் தங்கி இருந்து கொண்டு எங்காவது வேலை செய்கின்றனர். அவருக்கு இடம் கொடுக்கும் வீட்டுக்கடன் கட்டுபவர்களும், வாடகை கட்டுவோரும் தமது செலவை பங்கிட்டுக் கொள்கின்றனர்.

சிலநேரம் வேலை செய்யும் இடம் வெகு தூரத்தில் இருக்கலாம். அப்படியான தருணத்தில் வேலை செய்யும் இடத்திற்கு அருகாமையில் வதிவிடம் இருப்பது அவசியம். (அதி விரைவு சுரங்க ரயில் பயணமே சில நேரம் இரண்டு மணித்தியாலம் எடுக்கும்.) ஹோட்டல், ரெஸ்டாரன்ட் வேலைக்கு தமிழ் தொழிலாளர்களை எடுத்துக் கொடுக்கும் முகவர்கள், தாமே வதிவிடத்தை ஒழுங்கு பண்ணிக் கொடுக்கின்றனர். அப்படியான "தொழிலாளர் விடுதி" ஒன்றை காண நேர்ந்தது. ஒரு குறிப்பிட்ட ஹோட்டலில் வேலை செய்யும் தமிழ் தொழிலாளர்கள் அனைவரும் அந்த வீட்டில் தங்கி இருந்தனர். நான்கு படுக்கை அறைகளை கொண்ட வீட்டில் 10 பேர் தங்கியிருக்கின்றனர்.

அங்கு வசிப்பவர்கள் குறிப்பிட்ட வீட்டை "அகதி முகாம்" என்று பட்டப் பெயரால் அழைக்கின்றனர். அவர்களை ஹோட்டலுக்கு வேலைக்கு அனுப்பும் முகவருக்கு சொந்தமானது அந்த வீடு. வீட்டில் வசிக்கும் தொழிலாளிகளுக்கு கொடுக்கும் சொற்ப சம்பளப் பணத்திலேயே வாடகையை கழித்துக் கொள்கிறார். வீட்டை அடமானம் வைத்து வாங்கியிருந்த அந்த முகவர், கூடிய சீக்கிரமே வீட்டுக் கடனை அடைத்து விடும் நம்பிக்கையில் இருக்கிறார். அதற்கு காரணம், அங்கே தங்கி இருக்கும் ஒவ்வொருவரிடமும் 200 பவுன்கள் வாடகை அறவிடுகிறார். இன்னொருவனின் உழைப்பில் ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் யாருக்கு வரும்?

புதிதாக பிரிட்டன் வரும் பலருக்கு வேலை வழங்கும் இன்னொரு துறை, தமிழர் கடைகள். புலம்பெயர் மண்ணில் தமிழ் கலாச்சாரத்தை காப்பற்றும் திருப்பணியை சிரமேற்கொண்டு, இந்திய,இலங்கை இறக்குமதிப் பொருட்களுடன் பல கடைகள் காணப்படுகின்றன. லண்டன் வாழ் தமிழ் சமூகத்திற்கு சேவை செய்வதற்கு தேவையான மனித உழைப்பையும் அந்த சமூகத்தில் இருந்தே பெற்றுக் கொள்கின்றனர். ஒரு கடையில் ஐந்து பேர் வேலை செய்தால், ஒருவரை மட்டும் சட்டப்படி பதிந்து வைத்திருப்பார்கள். (வேலைக்கு எடுக்கும் ஒவ்வொரு நபருக்கும் அரசுக்கு வரி கட்ட வேண்டும்.) முன்னர் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களை வேலைக்கு அமர்த்த விரும்பினார்கள். (அப்போது தானே விரும்பிய படி சுரண்டலாம்.) தற்போது போலிஸ் கெடுபிடி காரணமாக, மாணவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். அவர்களுக்கும் சட்டப்படி வாரம் 20 மணித்தியாலங்களே வேலை செய்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேலதிகமாக வாரம் 30 மணித்தியாலங்களாவது சட்டவிரோதமாக வேலை செய்கின்றனர்.

லண்டன் மாநகரத்தின் சில பகுதிகள் குட்டி சென்னை, குட்டி யாழ்ப்பாணம், என்று குறிப்பிடுமளவிற்கு தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர். இதனால் தமிழ்க் கடைகளுக்கிடயிலான போட்டி காரணமாக அடிக்கடி மலிவு விற்பனை அறிவிப்புகள் காணப்படும். மலிவு விற்பனையில் குறைக்கப்படும் விலையானது, சட்டவிரோதமாக சுரண்டப்பட்ட கடைச் சிப்பந்திகளின் உழைப்பு என்பதால் வியாபாரிகளுக்கும் கவலையில்லை. இதைவிட மேலதிக விற்பனை வரியில் குளறுபடி செய்வது மட்டுமல்ல, பிற வரி ஏய்ப்புகளுக்கு கணக்கு போட்டுக் கொடுப்பதற்கு தமிழ் கணக்காளர்கள் இருக்கிறார்கள். தமிழ்க் கடைகளுக்கு கணக்கு சரி பார்க்கும் அக்கவுண்டட் ஒருவர் "பணக்கார ஏரியா" எனக் கருதப்படும் லண்டன் வட்டாரமொன்றில் வசிக்கிறார். இவர் தனது சொந்த வீட்டை மட்டுமல்லாது, சின்ன வீட்டு செலவுகளையும் சிறப்பாகவே பராமரித்து வந்துள்ளார். எனக்குத் தெரிந்த வரை, தனது வைப்பாட்டிக்கு மாத்திரம் மாதம் 2000 பவுன் செலவிடும் அளவிற்கு சுரண்டலில் பங்கெடுத்துள்ளார்.

பிரிட்டனில் தமிழ் முதலாளிகள் தமிழ்க் கடைகள் மட்டுமல்ல, "ஆங்கிலக் கடைகளையும்" நடத்தி வருகின்றனர். பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் மேலும் மேலும் வளர்ந்து வரும் ஒரு நாட்டில், தனியொரு நபர் நடத்தும் சிறு கடைகள் நிலைத்து நிற்க முடிவதில்லை. சிறு வணிக முயற்சிகளை ஆதரிக்கும் அக்கறையும் அரசுக்கு இல்லை. அதிலும் குறிப்பாக நகரங்களில் உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் பகுதிகளில் எந்தவொரு வர்த்தக முயற்சியும் வீண் விரயமாகும். அப்படியான இடங்களில் நஷ்டத்தில் நடக்கும் கடைகளை, தமிழர்கள் வாங்குகின்றனர். அவற்றில் 4 பவுன் கூலிக்கு தமிழ் இளைஞர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டு வியாபாரம் செய்கின்றனர். அது தான் வெள்ளையின கடை முதலாளிகளுக்கு "தெரியாத வியாபார சூட்சுமம்".

பிரிட்டனில் ஒரு "பெட்டிக்கடை" வைத்திருப்பவர்கள், தம்மை ஒரு பெரிய கம்பனியை நிர்வகிக்கும் தொழில் அதிபர் போல பாவனை செய்து கொள்கின்றனர். வெள்ளையின மேலாதிக்கம் நிலவும் பிரிட்டிஷ் தொழிலகங்களில் வேலை செய்வதை விட, சுய மரியாதையுடன் சொந்தமாக வியாபாரம் செய்வதாக ஒரு கடை முதலாளி தெரிவித்தார். அப்படியானவர்கள் தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளரின் சுய மரியாதை பற்றி சிந்திப்பதில்லை. எடுபிடிகளாக நடத்துவதற்கு வசதியாக, இளம்பராய மாணவர்களை பணியில் அமர்த்துகின்றனர். 4 பவுன் கொடுத்து தினசரி வேலை வாங்குவதால் வெறுத்துப் போன கடைச் சிப்பந்திகள், சில்லறைத் திருட்டுகளையும் கண்டு கொள்வதில்லை. வர்க்க ஒற்றுமையில் இருந்து வெளிப்படும் உணர்வு அது. "எனது முதலாளி திருடுவதை விட அதிகமாக இந்த அற்பர்கள் எடுத்துச் செல்லப் போவதில்லை." என்று நியாயம் கற்பித்தார் எனது நண்பர் ஒருவர்.

உழைக்கும் வர்க்க குடியிருப்புகளில் வாழும் வெள்ளையின சிறுவர்கள், வறுமை காரணமாக சிறு திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். ஒரு பவுனும் பெறுமதியில்லாத சாக்லேட், சிப்ஸ் பக்கட் போன்றவற்றை தான் தூக்கிச் செல்கின்றனர். பாடசாலை விடும் நேரம் கூட்டமாக நுழையும் சிறுவர்களே சில்லறைத் திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். சில கடை உரிமையாளர்கள் திருட்டு முயற்சிகளை தடுப்பதில் வரம்பு மீறுகின்றனர். (சாக்லேட் திருடிய வெள்ளையின சிறுவனை நிலத்தில் தள்ளி வீழ்த்தி அடிக்கப் போனதாக ஒரு கடை உரிமையாளர் தெரிவித்தார்.) இது சில நேரம் இனங்களுக்கிடையிலான பகை உணர்ச்சியை கிளறி விடுகிறது. மேலும் வேலையற்ற வெள்ளையின மக்கள் மத்தியில், தெற்காசிய சமூகத்தை சேர்ந்தவர்களின் செல்வச் செழிப்பு பொறாமைத் தீயை மூட்டுகின்றது. இப்படியான சந்தர்ப்பங்களில், BNP போன்ற பிரிட்டிஷ் இனவாதக் கட்சிகள் வெள்ளையின உழைக்கும் வர்க்க குடியிருப்புகளில் வாக்கு வேட்டையாடுகின்றன.

(தொடரும்)