தினக்குரல் நாளேடு, இலங்கை
நேர்கண்டவர் : பத்தனை வே.தினகரன்
மலேசியாவைச் சேர்ந்த யோகி சுறுசுறுப்பான இளம் ஊடகவியலாளர். எந்தச் சூழலோடும் தன்னைப் பொருத்திக்கொண்டு தனது பணியை செவ்வனே செய்துகொண்டு செல்பவர். கலகலப்பும், சுறுசுறுப்பும் இயல்பாக புதியவர்களிடம் பழகும் பாணியும் அவருக்குறியது. ஊடறு பெண்கள் அமைப்பும் மலையகப்பெண்களும் இணைந்து மலையகத்தில் நடத்திய பெண்ணிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் நிகழ்வுக்கு ‘மலேசியப் பெண்களின் இன்றைய சவால்கள்’ எனும் தலைப்பில் உரையாற்ற மலேசியாவிலிருந்து வருகை தந்திருந்த அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்புக்கிடைத்தது. இவர் ‘துடைக்கப்படாத ரத்தக் கறைகள்’ எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.
கேள்வி: மலேசியாவில் இளம் தமிழ்ச் சமூகத்தினரின் இன்றைய நிலை, நம்பிக்கையளிக்கிறதா?
யோகி: இந்தக் கேள்விக்கு எப்படிப் பதிலளித்தாலும் அதிலிருந்து வேறு கேள்விகளை உற்பத்தி செய்யலாம். அந்த அளவுக்குச் சிக்கலான கேள்வியாகவே இதைப் பார்க்கிறேன். மலேசியாவில் இன்று தமிழ்ச் சமூகத்தின் மக்கள் தொகை விழுக்காடு கணிசமாகக் குறைந்திருக்கிறது. தமிழ் மக்களின் பிறப்பு எண்ணிக்கை குறையும் அதே நேரம் மலாய்க்காரர்களின் பிறப்பு எண்ணிக்கை கூடியிருப்பது அதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
தற்போதைய இந்திய இளைய சமூகத்தினர் எப்படி இருக்கின்றனர் என்று ஆராயும்போது மூன்று வகையான சூழல் நிலவுகிறது.
1. கல்வியில் முன்னேற்றம்
2. குண்டர்க் கும்பலில் முதல் நிலை
3. அரசியலில் ஈடுபடுதல்
இந்த மூன்று விடயத்தையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு நகரமுடியாது. காரணம் மூன்றும் ஒவ்வொரு கோணத்தில் ஆராயும்போது, மிகமுக்கியமான அரசியலைப் பேசுபவையாக இருக்கின்றன.
கல்வியைப் பொறுத்தவரையில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கினாலும், அவர்களுக்கான மேற்கல்வி ஒதுக்கீடு மிகச் சொற்பமாகத்தான் ஒதுக்கப்படுகிறது. பூமிபுத்ராக்களுக்கு (மண்ணின் மைந்தர்கள், நேரடியாகச் சொன்னால் மலாய்க்காரர்கள்) 70 சதவிகிதத்திற்கு மேல் மேற்கல்வி இட ஒதுக்கீடும், சீனர்களுக்கு 10 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடும், இந்தியர்களுக்கு 10-க்கும் குறைவான இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் இன்னும் வேதனையான விஷயம் பலவேளைகளில் தாம் விரும்பித் தேந்தெடுத்த துறையில் படிக்க முடியாமல், அங்கு எஞ்சி இருக்கும் துறையை நிர்பந்தத்தில் தேர்ந்தெடுப்பதுதான். மலேசிய மண்ணில் பிறந்த நாங்களும் பூமிபுத்ராக்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். எங்களின் அடையாள அட்டையில் எங்கள் குடியுரிமை மலேசியர் என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது. சீனர்களுக்குச் சீனா என்றும் இந்தியர்களுக்கு இந்தியா என்றும் இன குடியேற்றம் குறித்த வரலாற்று பதிவும் அதில் உள்ளது. இதனால், நாட்டில் எங்களுக்குச் சலுகைகளும் பாகுபாடோடுதான் இன்றுவரை வழங்கப்படுகிறது என்பதையும் கூறிக்கொள்கிறேன்.
