-மல்லியப்பு சந்தி திலகர்-
தேர்தல் முறைமாற்றம் தொடர்பில் ' 20வது அரசியலமைப்புத்
திருத்தமும் மலையகமும்' எனும்
கட்டுரையை கடந்த வாரம் ஞாயிறு தினக்குரல், நமதுமலையகம்.கொம், அததெரண தமிழ் இணைத்தளம்
மற்றும் கருடன்நிவ்ஸ் போன்றன 'சிறப்புக்கட்டுரையாக' வெளியிட்டிருந்தன.
கட்டுரையை வாசித்த பலரும் தொலைபேசி மூலமும் நேரடியாகவும் உள்பெட்டி செய்தியாகவும்
வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். குறிப்பாக சரளமான
மொழிநடையில் அதனை எழுதியிருக்கிறேன் என்பது பலரது அபிப்பிராயமாக இருந்தது.
இந்த தேர்தல் முறைமாற்ற விடயம் மக்களுக்கு சரள மொழியில்
எடுத்துச் சொல்லப்படல் வேண்டும் எனும் ஆர்வம் எனக்குள் அதிகமாகவே இருக்கிறது.
காரணம் சமூகத்தின் எதிர்கால இருப்பைத் தீர்மானிக்கும் அடிப்படை உரிமையான வாக்குகள்
அது அளிக்கப்படும் முறை அதன் மூலம் பிரதிநிதிகள் தெரிவாகும் முறை போன்றவற்றை
தீர்மானிக்கும் திருத்தமாக இந்த '20வது திருத்தம்' அமைகிறது.
இதனால்
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல்வேறு உரையாடல்கள், செயலமர்வுகள், கூட்டங்களில்
கலந்துகொண்டு கற்று வருகிறேன். அவற்றையே கட்டுரை வடிவிலும் இத்தகைய பதிவுகள்
ஊடாகவும் பதிவு செய்து வருகிறேன். நேற்றைய நாளிலும் 'தேர்தல் திணைக்களம்' ஒழுங்குசெய்திருந்த
செயலமர்வு ஒன்றில் பங்குகொண்டேன். அப்போதெல்லாம் விளக்கமளிக்கும் வளவாளர்கள்
(கட்சி சாராத) நிபுணர்கள் உரையாற்றும்போது, விளக்கமளிக்கும்போது
என்னையறியாமல் ஒரு கவலை எனக்குள் வருகிறது.
