Thursday, May 21, 2015

தேர்தல் முறைமாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் - ஒரு கவலை

-மல்லியப்பு சந்தி திலகர்-
தேர்தல் முறைமாற்றம் தொடர்பில் ' 20வது அரசியலமைப்புத் திருத்தமும் மலையகமும்' எனும் கட்டுரையை கடந்த வாரம் ஞாயிறு தினக்குரல், நமதுமலையகம்.கொம், அததெரண தமிழ் இணைத்தளம் மற்றும் கருடன்நிவ்ஸ் போன்றன 'சிறப்புக்கட்டுரையாக' வெளியிட்டிருந்தன. கட்டுரையை வாசித்த பலரும் தொலைபேசி மூலமும் நேரடியாகவும் உள்பெட்டி செய்தியாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். குறிப்பாக சரளமான மொழிநடையில் அதனை எழுதியிருக்கிறேன் என்பது பலரது அபிப்பிராயமாக இருந்தது.
இந்த தேர்தல் முறைமாற்ற விடயம் மக்களுக்கு சரள மொழியில் எடுத்துச் சொல்லப்படல் வேண்டும் எனும் ஆர்வம் எனக்குள் அதிகமாகவே இருக்கிறது. காரணம் சமூகத்தின் எதிர்கால இருப்பைத் தீர்மானிக்கும் அடிப்படை உரிமையான வாக்குகள் அது அளிக்கப்படும் முறை அதன் மூலம் பிரதிநிதிகள் தெரிவாகும் முறை போன்றவற்றை தீர்மானிக்கும் திருத்தமாக இந்த '20வது திருத்தம்' அமைகிறது.
இதனால் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல்வேறு உரையாடல்கள், செயலமர்வுகள், கூட்டங்களில் கலந்துகொண்டு கற்று வருகிறேன். அவற்றையே கட்டுரை வடிவிலும் இத்தகைய பதிவுகள் ஊடாகவும் பதிவு  செய்து வருகிறேன். நேற்றைய நாளிலும் 'தேர்தல் திணைக்களம்' ஒழுங்குசெய்திருந்த செயலமர்வு ஒன்றில் பங்குகொண்டேன். அப்போதெல்லாம் விளக்கமளிக்கும் வளவாளர்கள் (கட்சி சாராத) நிபுணர்கள் உரையாற்றும்போது, விளக்கமளிக்கும்போது என்னையறியாமல் ஒரு கவலை எனக்குள் வருகிறது.

சமூக அக்கறையோடு அல்லது நாட்டின் எதிர்காலம் குறித்த அக்கறையோடு சகோதர சிங்கள மொழிபேசும் கல்வியாளர்கள், நிபுணர்கள் இதில் காட்டி வருகின்ற அக்கறை மற்றும் ஈடுபாடு போன்று தமிழ், முஸ்லிம் சமூகங்களில் இருந்து கல்வியாளர்கள், நிபுணர்களை இங்குக் காணக்கிடைப்பதில்லை. அரசியலுடன் தொடர்புடையவர்கள் கட்சி என்கிற கோதாவில் அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கின்றமை நடைபெற்றுகொண்டுதான் இருக்கிறது. அவை அரசியல் கோரிக்கைககளாக அமைகின்றன. குறிப்பாக மலையக மக்கள் சார்பாக மக்கள் முன்னணி செயலாளர் அ.லோரன்ஸ் மற்றும் பாராளுமன்ற உறப்பினர் ஆர்.யோகராஜன், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். தவிர புள்ளிவிபரங்களோடு விடயஞானத்தோடும் வளவாளர்களாளக, நிபுணர்களாக நமது தேவைப்பாடு குறித்து விவாதிக்கும் 'படித்தவர்கள்' நம்மில் இல்லையா அல்லது 'முன்வருகிறார்கள்' இல்லையா என்பதுதான் எனது கவலையாக இருக்கிறது.
நேற்றைய (மே 20) நாளில் தனது அளிக்கையினை வழங்கிய கலாநிதி சுஜாதா கமகே அவர்கள் தாங்கள் பல்வேறு ஆய்வுகளை இது குறித்து விவாதித்து வருவதாகவும் சமூகவலைத்தளங்களில் பல்வேறு இளம் ஆய்வாளர்கள் வெளியிடும் கருத்துக்கள் புள்ளிவிபரங்கள் தொழிநுட்பப் பார்வைகள் தன்னை ஆச்சரியப்படவைப்பதாகக் கூறி அவ்வாறு முகமறியா ஒரு இளம் (வைத்தியபீட மாணவர்) ஆய்வாளர் அல்லது சமூக அக்கறையாளர் ஒருவரின் (சாமல் கெலம்பி) பெயரையும் தன்னுடைய பெயருடன் இணைத்து தனது அறிக்கையில் வெளியிட்டிருந்தார். அந்த பெருந்தன்மையும் ஊக்குவிப்பும் என்னை ஆச்சரியப்படவைத்தது. அதேநேரம் பொறியியலாளரான அசோக்க அபயகுணவர்தன (இவரே இந்த விடயத்தில் ஜனாபதிக்கும் ஆலோசகராக உள்ளார்), சட்டத்தரணி ரொஹான் எதிரிசிங்க, பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, கலாநிதி சுசந்த லியனகே போன்றோர் ஒவ்வொரு கலந்துரையாடலிலும் தங்களை இற்றைப்படுத்திக்கொண்டு அளிக்கைகளை செய்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. இவர்களிடையே ஒரு கூட்டுச் செயற்பாடாகவும் தனித்த முயற்சியாகவும் இது இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகின்றது.

அதேநேரம் மலையக மக்கள் முன்னணியும் தொழிலாளர் தேசிய முன்னணியும் மலையக சிவில் சமூகத்தவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு ' நடைமுறை நாட்களில்' தேவைக்கு ஏற்றவாறான ஒரு முன்மொழிவினை தயாரித்துள்ளது. இதனைத் தயாரிப்பதில் மலையக மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் அ.லோரன்ஸ் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் ம.திலகராஜா ஆகியோரின் முன்னெடுப்பில் மலையக சிவில் சமூக பிரதிநிதிகளான பி.பி.தேவராஜ் (முன்னாள் இராஜாங்க அமைச்சர்) , எம்.வாமதேவன் (முன்னாள் அமைச்சு செயலாளர்) , பெ.முத்துலிங்கம் (சமூக ஆய்வாளர்), எஸ்.விஜயச்சந்திரன் (பல்கலைக்கழக விரிவுரையாளர்) ஆகியோருடன் ஆலோசனைகளையம் பெற்றுக்கொண்டு இந்த முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் வீ.புத்திரசிகாமணியும் பங்கேற்றுக்கொண்டார். ஏப்பிரல் 23ம் திகதி தயாரிக்கப்பட்ட இந்த முன்மொழிவுப்பத்திரம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரச உயர்பீடத்திற்கும் தேர்தல் ஆணையாளருக்கும் சமர்ப்பிக்கப்பட்டு அது இப்போது அமைச்சரவை உபகுழுவிலும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் தயாரித்த அடுத் நாளே (ஏப்பிரல் 24ம் திகதி மாலை) அவசரமாக இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பங்ககொள்ளும் வாய்ப்புகிடைத்தபோது உத்தியயோகபூர்வமற்ற வகையில் நேரடியாகவே ஜனாதிபதியின் கையில் அதனை கையளித்தேன்.

இந்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பொதுச்செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, உறுப்பினர்கள் மகிந்த சமரசிங்க, பைசர் முஸ்தபா, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொதுச்செயலாளர் கபீர் ஹாசீம், எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜாதிக்க ஹெல உறுமய பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எம்.சமந்திரன், மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர் தினேஸ் குணவர்தன, சமசமாஜகட்சி சார்பில் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, இடதுசாரி முன்னணி சார்பில் வாசதேவ நாணயக்கார, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் செயலாளர் வை.எஸ்.எல் ஹமீது, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ மற்றும் சட்டத்தரணி ஜயம்பத்தி விக்கிரமரட்ன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். தொழிலாளர் தேசிய முன்னணி சார்பில் அதன் தலைவர் திகாம்பரம் அவர்களுக்கு பதிலாக நான் கலந்துகொண்டேன். ஜனாதிபதியிடம் மேற்கூறிய முன்மொழிவு ஆவணத்தை கையளித்ததுடன் அந்தக் கூட்டத்தில் பின்வருமாறு எனது கருத்தினையும் பதிவுசெய்தேன்.
'தொகுதிவாரி முறை மாத்திரம் நடைமுறையில் இருந்த 1977 வரையான காலப்பகுதியில் வாக்குகளை கேட்பதற்கு அல்ல வாக்குகளை அளிப்பதற்கே உரிமையற்றவர்களாக வாழ்ந்த மலையக இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைநாட்டில் 'விகிதாசார விருப்புவாக்கு முறை' நடைமுறையில் இருந்த காலத்திலேயே மாவட்ட மட்டத்தில் தம்மை தயார் செய்துகொண்டு குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தி ஏதாவது ஒரு வகையில் பெற்றுக்கொண்ட தமது பிரதிநிதித்துவத்தை மற்றைய மாவட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்குமாக சேர்த்ததாக தேசிய மடட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினர். எனினும் இன்று தேசிய மட்டத்தில் விருப்பு வாக்கு முறை மாற்றப்படவேண்டும் கொள்கைக்கு உடன்பட்டு அதனை இல்லாமலாக்க நாமும் இணங்கிக்கொண்டுள்ளோம். எனினும், வரப்போகின்ற புதிய முறை இன்னும் முடிவாகாத நிலையில் தொகுதி வாரி முறையின் கீழும் தனித் தொகுதிகளும் (நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியை நான்காக பிரிப்பது) மற்றும் மலையக மாவட்டங்களில் பல் அங்கத்தவர்கள் தொகுதிகளை உருவாக்குவதன் மூலம் மலையக மக்கள் தமது பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள இங்கே கூடியிருக்கும் அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும் இந்த தகவலை முன்மொழிகின்றேன்'
எனது இந்தக் கருத்தை மேற்சொன்ன கட்சித்தலைவர்கள் தலையசைப்பின் மூலம் ஏற்றுக்கொண்ட அதேநேரம் ஜாதிக்க ஹெல உறுமய செயலாளர் சம்பிக்க ரணவக்க விமர்சனத்துடனும் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க நியாயபூர்வமான கருத்தை எடுத்துச்சொல்லி எனது கருத்தை ஆதரித்தும் ஏற்றுக்கொண்டனர்.

எது எவ்வாறாயினும் பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டு தீர்மானம் எடுக்கும் மட்டத்தினருக்கு நமது முன்மொழிவுகளை காலதாமதமின்றி தயாரித்து ஒப்படைத்து மலையக மக்களின் எதிர்கால அரசியல் இருப்பை உறுதிப்படுத்த வேண்டியது மலையகத்தவர் ஒவ்வொருவருக்கும் உள்ள பாரிய வரலாற்றுக்கடமை என்பதை இங்க நினைவுப்படுத்த வேண்டியுள்ளது.
24ம்திகதி ஏப்பிரல் 2015 அன்று மாலை ஜனாதிபதியின் விஜேராம இல்லத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் எனது கருத்தைத் தெரிவித்ததன் பின்னர் இறுதியாக இவ்வாறு விடைபெற்றுக்கொண்டேன். 'இந்த கூட்டத்திற்கு ஒரு கட்சியின் சார்பாக வருகை தந்திருந்தாலும் இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த பதினைந்து லட்சம் மலையக மக்களின் கோரிக்கையாக இதனை ஜனாபதி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் ஏற்கவேண்டும் என தயவுடன் வேண்டிக்கொள்கிறேன்'.



No comments: