‘‘எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட்'' -ச.தமிழ்ச்செல்வன்-
நேர்கண்டவர் : பேராச்சி கண்ணன்
![]() |
| ச.தமிழ்ச்செல்வன் |
ச. தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்தவர். தற்போது மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இருளும் ஒளியும், அரசியல் எனக்கு பிடிக்கும் உட்பட முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கும் இவர், தமிழகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருப்பவர். தமுஎகச மற்றும் இடதுசாரிகளின் பங்களிப்புகள், முற்போக்கு எழுத்து உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பேராச்சி கண்ணனிடம் தெளிவாகப் பதிலளிக்கிறார்
தமிழின் நம்பிக்கை அளிக்கும் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர் நீங்கள். பிறகு முற்றிலும் களச்செயல்பாட்டாளராக மாறிவிட்டீர்கள். ஏன் இந்தத் தேர்வு?
எல்லா மனிதர்களுக்குமே புறச்சூழல் தான் அகத்தூண்டுதலைத் தீர்மானிக் கிறது. என்னுடைய வாழ்க்கையில் புறச்சூழல் தூண்டுதல்தான் எழுதக் காரணமானது. எழுத்து முக்கியம்தான். ஆனால் அதைவிட களப்பணி முக்கியமானதாக இருக்கிறது.
