Sunday, April 24, 2016

இருள் இன்னும் முற்றாக விலகவில்லை

(இது புனைகதை அன்று உண்மை)
இக்கதை நிகழ்ந்த காலம் 2007
-சி மௌனகுரு -


சந்திரகுப்த தேனுவர இலங்கையின் நவீன பாணி ஓவியர்களுள் புகழ் பெற்ற ஒருவர். தனக்கென ஓவியத்தில் ஒரு பாணியைத் தோற்றுவித்ததுடன் தனக்கென ஒரு மாணவ பரம்பரையையும் கொண்டவர். சிங்கள மக்கள் மத்தியில் கௌரவத்துடன் கணிக்கப்படுவர். கொழும்பிலுள்ள கட்புல அவைக் காற்றுக் கலைப் பல்கலைக்கழகத்தில் (University of Visual and Performing Arts ) கட்புலக்கலைத் துறைத் தலைவர் நெருக்கமான என் நண்பர்களுள் ஒருவர்.விடுமுறையைக் கழிக்க அவர் தன் மனைவி குமுதினியையும் ஒன்பது வயது மகனான சாருதத்தனையும் மட்டக்களப்பிற்கு அனுப்பி வைத்தார். “ஆட்கடத்தல்கள், கொலைகள், அடக்குமுறைகள் மலிந்திருக்கும் இடம் என்றும் ஊடகங்களால் வர்ணிகக்கப்படும் மட்டக்களப்புக்கு இப்போது போகத்தான் வேண்டுமா” என்ற கொழும்புச் சிங்கள நண்பர்களின் பயமுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாது ஒரு அதிகாலையில் மட்டக்களப்பு ரெயிலில் தன் மகனுடன் எம் வீட்டுக்கு வந்தார் குமுதினி. இரண்டு நாட்களும் மிக அருமையாகக் கழிந்தன. என் மனைவி சித்திரலேகாவும் நானும் அவர்களை மட்டக்களப்பின் இயற்கை வளம் நிறைந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றோம்.மட்டக்களப்பு வாவி (ஆறு) கடலோடு கலக்கும் கழிமுகமான முகத்துவாரம், அதனருகே நிறைந்து கிடந்த மிருதுவான வெண்மணல், எழுவான் கரைத் தீவும் அதன் கடல் அழகும், டச்சுபாரின் அழகிய கடற்கரை, மட்டக்களப்பு வாவியின் இருபுறமும் மதாளித்து வளர்ந்து காற்றிலே அசைந்து நின்ற இளம் தென்னைகள் கண்ணாப் பத்தைகள்,
சத்துருக்கொண்டானில் நின்று பார்க்கும் போது முன்னே விரிந்து கிடக்கும் வாவியின் அகண்ட இன்னொரு பக்கம், மறுபக்கம் தெரியும் வயல் நிறைந்த படுவான்கரைப் பிரதேசம் பச்சைப் பசேலென வளர்ந்து நின்ற நெல்வயலின் நடுவே அமர்ந்திருந்த கொத்துக் குளத்து மாரியம்மன் கோயிலின் அழகிய பின்னணி, தூரத்தில் மேகங்களுக்குள் நிமிர்ந்து தெரிந்த குடும்பிமலை சரணாலயம் தேடி வரும் பறவைக் கூட்டங்கள், என மட்டக்களப்பின் இயற்கை அழகில் இரண்டு நாட்கள்  தாயும் மகனும் மயங்கிக் கிடந்தனர். மட்டக்களப்புச் சாப்பாடுவேறு அவர்களுக்குப் பிடித்துக் கொண்டது.
ஆற்று மீன் குழம்பு, இறால்ப் பொரியல், கத்தரிக்காயுடன் கலந்த கூனிகறி
கத்தரிக்காயுடன் கலந்த கூனிக்கறி, திராய்ச் சுண்டல், மட்டக்களப்புப் பால் அப்பம், கட்டித் தயிர், அதனோடு கலந்த தேன் என மட்டக்களப்பின் சாப்பாட்டுச் சுவையை நன்கு அனுபவித்தனர். சுவைத்துச் சுவைத்துச் சாப்பிட்டனர். சுத்தமான காற்றும் இன்னும் சிதைக்கப்படாத இயற்கைச் சூழலும், அன்பு பொழிந்த அயல் வீட்டு மக்களும் என்ற சுத்தமான சூழல் சந்தடியும் பரபரப்பும் மிக்க கொழும்பு நகரில் வாழும் அவர்கட்கு வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்க வேண்டும் “எத்தனை அழகிய பிரதேசம்” என பல தடைவகளுக்கு மேல் குமுதினி வாய்விட்டுக் கூறிவிட்டார். சாருதத்தன் சுறுசுறுப்பான ஒன்பது வயதுப் பையன் அமைதியானவன், ஆழமானவன், கம்பியூட்டருக் குள்ளேயே எப்போதும் வாழும் இளைய தலைமுறையின் உதாரண புருஷன்
எனக்குத் தெரியாத அதிக விடயங்களைக் கம்பியூட்டர் சம்பந்தமான அந்த இளம் குருத்து கூறியது. கம்பியூட்டருக்குள்ளேயே வாழ்கிறான் என்று குமுதினிக்கு அவனைப் பற்றிய வருத்தம் உண்டு. இரண்டு நாட்களும் கம்பியூட்டரை அவன் மறந்திருந்தான்.  மழையில் நனைந்தான், எங்கள் முற்றத்து  மாமரத்தில் ஏறி இறங்கினான், எம் வீட்டு நாய் ஜெனியுடன் ஓடி விளையாடினான் கல்லடிப் பாலத்தையும் மட்டக்களப்பு வாவியினையும் ரசித்தான், நன்றாகச் சாப்பிட்டான், இராணுவ வீரர்களை அடிக்கொருதடவை துப்பாக்கியுடன் சந்தித்த போது சற்றுச் சங்கடப்பட்டான். கொழும்பில் அப்படியானவர்களை அவன் கண்டிருந்தாலும் அந்த அனுபவம் வேறு இந்த அனுபவம் வேறு. எனது TVS மோட்டார் சைக்கிளின் முன்னால் ஏறி இருந்து கொண்டான். தானே அதை இயக்குவது போன்று நினைவு அவனுக்கு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பைச் சுற்றிய எம்மைப் அடிக்கடி இராணுவ வீரர்கள் நிறுத்தி அடையாளம் கேட்பதும், சோதனையிடுவதும், அவனுக்குப் புதிது. அதிகம் பேசாது அளந்தே பேசும் அப்பையன் இராணுவ வீரர்களைத் தொடர்ச்சியாகத் துப்பாக்கியுடன் கண்ட அலுப்பில் “ இவர்களுக்கெல்லாம் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்தால் நன்றாக இருக்குமே”என்று பகிடியாகக் கூறினான். ஏன் அப்படிச் சொன்னான் என்று எனக்குப் புரிய வில்லை. கம்பியூட்டர் அல்லது தொலைக்காட்சிகளில் பார்க்கும் மூவிகளில் அப்படியான ஒரு காட்சியை அவன் கண்டிருக்கக் கூடும். அயல் வீட்டுப் பிள்ளைகளான கிஷோபாவும்(10 வயது) அருணனும்(6 வயது) சாருதத்தனுடன் விளையாட வந்தார்கள் அவர்களுக்குச் சிங்களம் தெரியாது இவனுக்கோ தமிழ் தெரியாது கொஞ்ச நேரத்திற்குள் நண்பர்களாகி விட்டார்கள். அட்டகாசமான சத்தங்களும் சிரிப்புக்களும் தான் கேட்டன. மொழி அவர்களைப் பிரிக்க வில்லை. சிறு பிள்ளைகளின் உணர்வுகள் மொழியையும் கடந்து அவர்களை இணைத்து விட்டன. இரண்டு நாட்கள் தான் தங்க வந்தனர். இன்னும் ஒருவாரம் நின்று செல்லலாமே என்று கூறி அடம்பிடித்தான் சாருதத்தன். குமுதினிக்கு பொலநறுவையில் ஒரு கருத்தரங்கு எனவே புறப்பட வேண்டியதாயிற்று. எனக்கும் கொழும்பில் அலுவல் நானும் அவர்களுடன் புறப்பட வேண்டியதாயிற்று. பொலநறுவை வரைக்கும் பிரத்தியேகமாக வேன் ஒன்று ஒழுங்கு செய்தோம். அயல் வீட்டு நண்பர்கள் கையசைக்க ஜெனி வாலாட்டிக் குரைத்து தன் அன்பு தெரிவிக்க அனைவரிடமிருந்தும் விடைபெற்றுப் புறப்பட்டான் சாருதத்தன். மன்னம்பிட்டி செக்பொயின்ரில் இரு சாராருமே ஒரே விதத்தில் பரிசோதனைக் குட்படுத்தப் பட்டோம். மூட்டை முடிச்சுகளைப் பரிசோதனை செய்தது மாத்திரமன்றி உடற் பரிசோதனையும் செய்தனர். வேனுக்குள் நித்திரை கொண்டிருந்த சாருதத்தன் திருதிருவென விழித்தபடி வெளியில் குதித்துச் சூழலைப் பார்த்தான். சூட்சுமமான புத்திசாலிப் பையன் அவன் அடி மனதில் என்னென்ன உறைத்தனவோ? யார் அறிவார்? மாலை 3.30 மணிக்கு பொலநறுவை விருந்தினர் விடுதியை அடைந்தோம். பொலனறுவை இளைப்பாற்று விடுதி எலிஸபெத் மகாராணியார் இலங்கை வந்த போது அவர் பொலநறுவைக்கும் வர இருந்தாராம்அவர் சிறிது நேரம் இளைப்பாறக் கட்டிய விடுதி அது. அந்த விடுதியின் முன்னால் பராக்கிரம சமுத்திரம் பரந்து விரிந்து கிடக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தளதளத்தபடி குளத்தை நிறைத்து நிற்கும் நீலநிறத் தண்ணீரும் மேலே விரிந்து கிடக்கும் அழகிய வானும் மனதை நிறைக்கின்றன. நீருக்குள்ளேயே இருப்பது போல விடுதி அமைக்கப் பட்டிருக்கின்றது. அற்புதமான சூழல். எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைகூட சமுத்திரத்தை ஒட்டியே இருந்தது. மிகமிக வசதியான அறைகள், படுக்கைகள்.
அமைதி அமைதி எங்கும் அமைதி.மென்மையான இளம் காற்றும் அதன் ஓசையும் சூழலை நிறைத்திருந்தன. ரம்மியமான சூழல்.மாலை 4.00 மணியிலிருந்து 7.00 மணிவரை அவ்விடுதியில் ஒரு கருத்தரங்கு.அதில் பங்கு கொள்ளத்தான் குமுதினி வந்திருந்தார். குமுதினி அக்கருத்தரங்கிற்குப் புறப்பட நான் சாருதத்தனைப் பொறுப்பேற்றுக் கொண்டேன். பொலநறுவைப் புராதன நகரையும் அதன் இடிபாடுகளையும் அவனுக்குக் காட்டி விளங்கப்படுத்துவது எனக்கு ஒப்படைக்கப்பட்ட வேலை. மகிழ்சியோடு ஏற்றுக் கொண்டேன். குழந்தைகளுடன் குதூகலமாக அலையும் இன்பம் இருக்கிறதே; அது அலாதியானது. சாருதத்தனும் நானும் ஹோட்டலை  விட்டு வெளியே வந்தோம். பராக்கிரம சமுத்திர அணைக்கட்டில் கொஞ்ச தூரம் காலாற நடந்தோம். அச்சமுத்திரம் பற்றி அவன் ஏற்கனவே
மிகச் சிறிதாய் அறிந்திருந்தான். “ஒருதுளி மழைநீர் தானும் கடலுக்குள் செல்லாமல் மக்களுக்குப் பயன்பட வேண்டும்” என்று நினைத்தே அச்ச முத்திரத்தை பராக்கிரமபாகு மன்னன் கட்டினான். ஆம் மாமன்னனின் மக்கள் நலநாட்டத்தையும் அவ்வணையை உருவாக்க உதவிய நம் நாட்டு வெளிநாட்டுத் தொழினுட்பத் திறனையும் அப்பிஞ்சு உள்ளத்திற்கு மிக எளிமையாக விளக்கினேன். இதனைக் கட்ட எத்தனை பல்வேறு இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் தம் உடலுறுப்பை நல்கியிருப்பார்கள்  என்பதையும் அச்சமுத்திரத்தில் கடுவுள்ள குளத்துத் தண்ணீரும், கிரித்தலைக் குளத்துத் தண்ணீரும், தோப்பாவ குளத்துத் தண்ணீரும் வந்து கலப்பதால் அது பெரும் சமுத்திரமாகக் காட்சி தருகிறது என்றும் பல தினமும் இணைப்பிலேதான் பராக்கிரம சமுத்திரம் உருவானது என்றும் அதுவே பன்மையின் வலிமை என்றும் விளக்கினேன். பொலநறுவை இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான பங்கு பெறும் ஓர் இடமாகும். அங்கு புராதன மக்கள் வாழ்ந்தமை
, பின்னால் அது அரசாக மாறியமை, சிங்கள அரசர்கள் ஆண்டமை, அதன் பின்னர் தமிழர்களான சோழர் ஆண்டமை, பின் விஜயபாகு, பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் ஆட்சி செய்தமை, அதன் பின் இந்தியரின் ஒரிஸா மாநிலத்தில் இருந்து வந்த கலிங்கரின் ஆட்சி நிலவியமை என்பதனை வரலாற்று ரீதியாக கூறி மத்தியிலே நகரமும், சூழ மக்கள் குடியிருப்புக்களும் இருந்தன, நகரிலும் மக்கள் குடியிருப்புக்களிலும் தமிழ், சிங்கள, இஸ்லாமிய மக்களுடன் புராதன குடிகளும் பர்மா, சியம் போன்ற நாடுகளுடன் பௌத்த மதம் கொண்ட உறவால் வந்து சேர்ந்த மக்களும் வாழ்ந்தனர்.

 அங்கு புராதன வணக்கம் (ஆவி, யக்க வணக்கம்) இந்து மத வணக்கம், பௌத்த மத வணக்கம்,
இஸ்லாமிய வணக்கம் போன்ற வணக்க முறைகளும் வழக்கிலிருந்ததுடன்
பௌத்த விகாரைகள், சிவாலயங்கள் என்பன இருந்தன. இவ்வகையில் சிங்கள, தமிழ், கலிங்க, பர்மிய பண்பாடுகள் இணைந்த சிறப்புத்தான் பொலநறுவையின் சிறப்பு. நமது பாரம்பரியத்தின் சிறப்பும் அதுதான். அதுவே. பன்மையின் வலிமை என்று அவனுக்கு விளங்கக் கூடிய விதத்தில் விளக்கிக்கொண்டு வந்தேன். எந்தளவுக்கு என் கருத்துக்களை உள் வாங்கினானோ தெரியாது தலையை யாட்டியபடி கேட்டுக் கொண்டே வந்தான். பராக்கிரம சமுத்திரத்திற் கூடாக வந்து கொதித்துப் புரண்டு நுரையோடு பாயும் கால்வாய்த் தண்ணீரைக் கண்டு இருவருமே குதூகலித்தோம்.“இதற்குள் பாயலாமா?” என்று கேட்டான். “தப்ப முடியுமானால் பாய்” என்றேன். பாய்ந்து விடுவானோ என்று ஆயத்தமாகவும் நின்று கொண்டேன். நல்ல வேளை அவன் பாயவில்லை நானும் தப்பிக் கொண்டேன். அதன் பின்னர் அவனை அழைத்துக் கொண்டு அரும் பொருட் காட்சியகத்திற்குச் சென்றேன். அதனைக் கலாசார முக்கோணம்(Cultural trangle) என அழைப்பர். UNESCO வினுடைய உதவியுடன் இலங்கையிலிருந்த துறைபோன தொல்பொருளியலாளர்களதும், வெளிநாட்டுத் தொல்பொருளியலாளரும் ஆலோசனைகளுடன் திட்டமிட்டு விஞ்ஞான பூர்வமாக அமைக்கப்பட்ட அரும்பொருட் காட்சியகமது. அதை அமைத்தவர்களுள் முக்கியமானவர் பேராசிரியர் சேனக பண்டாரநாயக்க.
இளம் வயதில் மாக்ஸிஸ சிந்தனையினால் கவரப்பட்டு “மாவத்த” என்ற இலக்கியப் பத்திரிகை நடத்தியவர். களனிப் பல்கலைக்கழக உபவேந்தராகவும் இந்தியாவிலும், பரிஸிலும் இலங்கையின் தூதுவராகவும் (ஸ்தானிகர்) பணிபுரிந்தார். தமிழ் சிங்கள உறவுகளில் அதிக அக்கறை கொண்டவர்.அவர் மனைவி மானல் பிரிட்டிஸ்காரி. அவரைப் போன்ற கொள்கையினர். நூலகராக கடமை புரிந்தவர்.  இருவரும் நீண்ட காலமாக எமது நெருங்கிய நண்பர்கள். பேராசிரியர் சேனக பண்டாரநாயகாவின் மேற்பார்வையில் உருவாகிய கலாசார முக்கோணக் தொல்பொருட் காட்சி சாலை அற்புதமாக உருவாக்கப்பட்டிருந்தது. மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இதன் ஒரு பகுதி, பொலநறுவையின் புராதான காலத்தையும், அன்று அங்கு வாழ்ந்த மக்கள் பாவித்த பாவனைப் பொருட்களையும், தொழினுட்பச் சாதனங்களையும் (அறுவைச் சிகிச்சைக்குப் பாவித்த கருவிகள்) நினைவுபடுத்துகின்றன. இன்னொரு பகுதி பொலநறுவையில் சோழர் ஆட்சிக் காலத்தில் உருவான திராவிட கட்டிட சிற்பக் கலைகளையும், இந்துப் பண்பாட்டையும், இலங்கைப் பண்பாட்டினுள் அது இணைந்தமையும் காட்டுகிறது. மற்றொரு பகுதி பௌத்தப் பண்பாட்டையும் சிங்கள பௌத்த மன்னர்களால் கட்டப் பட்ட விகாரைகள், மாளிகைகள், நீச்சல் குளங்கள், கல் புத்தகங்கள் என்பனவற்றை காட்டுகின்றது. இடைக்கிடை பர்மிய, சீன முறையில் அமைக்கப்பட்ட விகாரைகள், புத்த கோயில்களின் மாதிரி உருவங்களும் காணப்படுகின்றன. பரந்த மனதுடன் பார்க்கும் ஒருவருக்கு
புராதன இலங்கைப் பண்பாட்டையும்  அதனுடன் கலந்த சிங்கள, தமிழ், பர்மிய, கலிங்க பண்பாடுகளையும் காட்டுவதாகவும் இவ்வனைத்தின் இணைப்பினிலும் வீறுமிக்கதாக மேலெழுந்த இலங்கைப் பண்பாட்டைக் காட்டுவதாகவும் அக்கலாசார முக்கோணம் அமைக்கப்பட்டிருப்பது எளிதிற் புலனாகும். ஆம் பன்மையின் வலிமையை அக்கலாசார முக்கோணம் பறைசாற்றி நிற்கிறது. வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பொருளின் கீழும் மூன்று மொழிகளிலும் விளக்கம் தரப்பட்டுள்ளன. சாருதத்தன் அவ்வரலாறுகளை நான் கூறக் கூறக் கேட்டுக் கொண்டே வந்தான். இடையிடையே அங்கும் இங்கும் ஓடினான். ஆடும் சிவன் சிலையையும் அருகில் சென்று பார்த்தான். புத்தர் பாதி கண் மூடியபடி அமைதியாக அமர்ந்திருக்கிறார். சிவன் கைகள் வீசி கால் தூக்கி கண்திறந்து ஆர்ப்பாட்டமாக ஆடுகிறான். “உனக்கு எது பிடிக்கும்? அம்ர்ந்திருக்கும் புத்தரா? ஆடுகின்ற சிவனா?” நான் சாருதத்தனிடம் கேட்டேன் அவன் சட்டெனச் சிவனைக் காட்டினான். நான் அமர்ந்திருக்கும் புத்தரைக் காட்டி “எனக்கு அவரைத்தான் பிடிக்கும்” என்றேன். “இரண்டும் சேர்ந்துதான் வாழ்வு ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் இவை” என்றேன். அவனுக்கு அது புரிந்திராது கொஞ்ச நேரத்திற்குள் அவன் அலுத்து விட்டான். மூன்று பகுதியைப் பார்த்து முடித்த பின்னர் அதன் அடுத்த பகுதி என்று கருதப்படும் நூல் நிலையத்திற்கு வந்தோம். பொலநறுவை பற்றிய நூல்கள் விற்பனைக்கு இருந்தன. காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தன. அலுமாரிக்குள்ளும் இருந்தன. ஏறத்தாழ நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள். நூல்களை மேலேட்டமாகத் துழாவினேன் குறிப்பிடத்தக்க வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய நூல் எதனையும் காணவில்லை. பெரும்பாலான நூல்கள் மாணவர்களையும் வெகுஜனசரனை நூல்களாகவே தென்பட்டன. தேடித் தேடிப் பார்த்தேன் ஒரேயொரு தமிழ் நூல்தான் அகப்பட்டது. “நன்றிக்கடன் வழங்கிய கீர்த்தி குமாரன்” என்ற நூல் சரிசமன் விஜயதுங்க எழுதியது. மடுளுகிரிய விஜேரத்தின மொழிபெயர்த்தது. சோழ ஆட்சிக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்று சோழர்களைப் பொலநறுவையிலிருந்து துரத்திய விஜயபாகு பற்றியது. அவன் தன் படைவீரன் ஒருவனுக்குக் கொடுத்து செப்புப்பட்டயம் பற்றியதான கதை அது.
நான் நூலகரிடம் “தமிழ் பாடசாலைகள், முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து எல்லாம் மாணவர்கள் வருவார்கள் தானே தமிழிலே பொலநறுவை பற்றிய புத்தகங்கள் வைத்தால் நல்லதுதானே” என்று கேட்டேன் ஆங்கிலத்தில். “ஆம் நல்லதுதான்” சிங்களத்தில் மறு மொழி கூறிய அவர் என்னை வினோதமாகப் பார்த்தார். சாருதத்தன் அவற்றுள் இருந்து இரண்டு ஆங்கில நூல்களை எடுத்துக் கொண்டான். The glory of Polanaruwa ;என்று W.Jeyasinghe Balasuriya எழுதிய நூலொன்று Worlad Heritage side என்று WW David Athulkorala எழுதிய நூலொன்று.
. P.L Prematilaka வும்; L.K. Karunaratna வும் சேர்ந்து எழுதிய Polanaruwa எனும் நூலை நான் வாங்கிக் கொண்டேன். தொல் பொருட்காட்சிசாலையை விட்டு இருவரும் வெளியே வந்தோம். வெளியே ஒரு உல்லாசப் பிரயாண வழிகாட்டி அழிந்து கிடந்த இடங்களைக் காட்டி தன்னைச் சூழநின்ற மாணவர்கட்கும், உல்லாசப் பிரயாணிகளுக்கும் ஏதோ சொல்லிக் கொண்டு வந்தான். அவர்கள் எல்லாம் அவனின் பின்னால்பிரயாணிகள் கூட்டம் இது சோழர்களால் அழிக்கப்பட்ட விகாரை இது சோழர்களால் அழிக்கப்பட்ட அரண்மனை இது சோழர்களால் அழிக்கப்பட்ட மடம் இது சோழர்களால் அழிக்கப்பட்ட சிலை.
சோழர்கள் தமிழர்கள் அவர்களே இவற்றை அழித்தனர் தன் கற்பனையெல்லம் கலந்து புது வரலாற்றை அவர்களுக்குக் கூறிக்கொண்டு வந்தான் வழிகாட்டி, பிழையான வழிகாட்டி. நாங்கள் இருவரும் அறைக்குத் திரும்பினோம். சூரியன் மறைந்து கொண்டிருந்தான். இருள் பராக்கிரம சமுத்திரத்தையும் பொலநறுவையையும் மெல்ல மெல்ல மூடிக் கொண்டு வந்தது. மனது கனத்துப் போயிருந்தது. 7.00 மணிக்கு அறைக்குள் வந்த நான் 
குளித்து விட்டு 8.00 மணி வரை வாங்கிக் கொண்டு வந்த புத்தகங்களைத் தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.அனைத்துப் புத்தகங்களும் சோழர்களை ஒரு அந்நியர்களாகவும், ஆக்கிரமிப்பாளர்களாகவும் எழுதியிருந்ததுடன்
பொலநறுவை அரசர்களின் ஆட்சிக்காலத்தை 1110இலிருந்து அதாவது 1ம் விஜயபாகுவின் ஆட்சிக்காலத்திலிருந்து தொடங்கியிருந்தன. பொலநறுவையைப் பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும், கட்டிட சிற்பக்கலைகளிலும் வளப்படுத்திய சோழர் பற்றி எதுவும் இல்லை. அவர்களை ஓர் ஆக்கிரமிப்பாளராகவும்  சிங்கள மக்களுக்கு எதிரானவர்களாகவுமே சித்தரித்திருந்தன. சைவமதம், சிவாலயம், ஆடுகின்ற நடராஜனின் அற்புதச் சிலைகள், திராவிடக் கட்டிடக்கலை, காரைக்காலம் மையார் தாளம் போட்டபடி இருக்கும் அற்புதமான கலைநுட்பம் வாய்ந்த சிலை என்பன அந்நூல்களில் கணக்கில் எடுக்கப்படவேயில்லை. இலங்கையை வளப்படுத்திய ஒரு பெரும் பண்பாடு புறக்கணிக்கப்பட்டு இருந்தது.  மனம் கனக்காமல் என்ன செய்யும். இரவு 8.00 மணிக்கு இரவுச் சாப்பாட்டுக்காக மேசையில் அமர்ந்தோம். கருத்தரங்குக்கு வந்திருந்த சேபாலி கொத்தகொட கைகூப்பி “ஆயுபோவன், வணக்கம்” என்று இரண்டு மொழிகளிலும் வரவேற்றார். ஏற்கனவே எனக்குப் பழக்கமானவர் மாத்திரமன்று எங்கள் குடும்ப நண்பரும் கூட. அமெரிக்காவில் கலாநிதிப் பட்டம் பெற்று வந்த அவர் பெண்கள் சம்பந்தமான விடயங்களில் தீவிர உழைப்பாளி. அவர் கணவர் லக்ஸ்மன் ஒரு புகழ் பெற்ற ஊடகவியளாளர். Sunday Observer பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இரண்டு வருடங்களுக்கு முன் விடுமுறையைத் தம் பிள்ளைகளான ஸ்கந்தா, இந்திரா, அகிலாவுடன் வந்து மட்டக்களப்பில் இன்பமாகக் களித்துச் சென்றவர்கள். என்னை லக்ஷ்ஸ்மன் அண்ணா என்றே அழைப்பார். சேபாலி எப்போதும் கிண்டலாகவும் சாதுரியமாகவும் பேசும் பெண். பேசும் போதும் விடயங்களை எடுத்துரைக்கும் போதும் அவருடைய தொனியும், முக பாவங்களும் பெரும் ரசிப்பிற்குரியதாயிருக்கும். சேபாலி கொத்த கொட என்னிடம் மட்டக்களப்பு நிலவரங்களை ஓரிரு வார்த்தைகளில் விசாரித்த பின் தன் அருகில் இருந்த றொமீஸையும் அவர் மகள் தாராவையும் அறிமுகம் செய்து வைத்தனர். “தாயும் மகளும்” என்று எனக்கு அவர்கள் அவர்களை அறிமுகம் செய்தாலும் அவர்கள் இருவரும் அக்காவும் தங்கையும் போலத்தான் எனக்குத் தெரிந்தனர்.
றோமிஸ் அஸாமிலிருந்து அந்தக் கருத்தரங்கிற்காக வந்திருந்தார். அவருடைய மகளான தாரா பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் ஓவியம் படித்தவர். தாயாருடன் கூடவே வந்திருந்தார். எங்கள் கதை அரசியல், பண்பாடு, கலைகள் என்று சுற்றி வந்து சரித்திரத்தின் பக்கம் திரும்பியது. ஊரையாடலில் நான் றொமிஸிடம் கலாசார முக்கோணம் பற்றியும் அது அமைக்கப்பட்டதன் பின்னணியையும், அமைத்தோரின் நோக்கையும் அதன் சிறப்பையும் அமைத்த விதத்தையும் அங்கு விற்கும் புத்தகங்களையும் அவற்றின் போக்குகளையும் அன்றைய என் மன ஆதங்கத்தையும் பற்றிக் கூறினேன். றோமிஸ் தனது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
“பொலநறுவை பற்றி நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். அழிந்த பொலநறுவை நகரைப் பார்க்க காலையில் நானும் மகளும் சென்றோம்.வழிகாட்டி அழிந்து கிடக்கும் ஒவ்வொரு கட்டிடத்தையும் காட்டிக் காட்டி இது தமிழர் படை எடுப்பால் அழிந்தது, அழிக்கப்பட்டது என்ற வகையில் பொலநறுவையின் அழிவுக்கு சோழர்களான தமிழர் படை எடுப்பே காரணம் என்ற வகையில் எனக்குக் கூறிக்கொண்டே வந்தார். எனக்கு வரலாறும்(History) வரலாற்றியலும் (Histriography) தெரியும் என்பதால் நான் வழிகாட்டியின் புதிய வியாக்கியானங்களை இன்றைய அரசியல் நிலையோடு ஒப்பிட்டு அவரின் ஒவ்வொரு சொல்லையும் கட்டவிழ்த்துப் (Deconstruct) பார்த்துக்கொண்டே வந்தேன்".  சற்றுத் துயரத்துடன் றொமீஸ் வார்த்தைகள் ஆறுதலாக வெளிவந்தன. சோழர் ஆக்கிரமிப்பைத் தமிழர் ஆக்கிரமிப்பு என்றும் விஜயபாகுவின் படை எடுப்பை சிங்களவர்களின் படை எடுப்புஎன்றும்
வியாக்கியானம் செய்கிற ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லாள மன்னன் படையில் சிங்கள வீரர்களும் துட்ட கைமுனு மன்னன் படையில் தமிழர்களும் இருந்த வரலாற்று உண்மை பலருக்குத் தெரியாது. சண்டையிட்டவர்கள் மன்னர்களேயொழிய மக்களில்லை. மன்னர்கள் நாடு பிடித்தனர். மக்களோ கருவிகளாயினர் அவ்வளவே. அந்தச் சரித்திர உண்மைகளை விளக்கும் சரித்திர ஆசிரியர்கள் நம்மிடம் இல்லை. அனைவரையும் இனவாதப் பேரலைகள் அடித்துச் சென்றுவிட்டன. சரித்திர நூல்கள் வாயிலாக நம் மாணவர்கட்குப் பிரிவினைகள்தான் ஊட்டப்படுகின்றனவேயொழிய அதற்குள் காணும் ஒற்றுமைகளை விதந்துரைக்கும் பண்பு காணப்படவேயில்லை. சுதர்சன் செனவிரத்ன, லெஸ்லி குணவர்த்தன, சேனக பண்டாரநாயக்கா இந்திர பாலா
போன்ற நிதானமான சரித்திர ஆசிரியர்களின் ஆய்வுகளும் முடிவுகளும் பிரதான சரித்திர நீரோட்டத்தில் இப்போது எடுபடுவதேயில்லை. போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் இலங்கையை ஆக்கிரமித்தவர்கள் தான். இந்த நாட்டுப் பண்பாட்டைத் துவம்சம் செய்து நம் நாட்டின் செல்வத்தை அள்ளிக்கொண்டு சென்றவர்கள்தான். அவர்கள் மீது இல்லாத வெறுப்பு சோழர்கள் மீது ஏற்படக் காரணம் சமகால அரசியலா? சோழ அரசர்களை வெற்றி கண்ட விஜயபாகு ஏன் சோழர் நிறுவிய சிவாலயங்களைத் தரைமட்டமாக்கவில்லை? பொலநறுவையின் புகழ் பூத்த மன்னனாக ஆட்சி செய்த மகாபராக்கிரமபாகு ஏன் சோழர்கள் கொணர்ந்த அல்லது சோழச் சிற்பிகள் இங்கு உருவாக்கிய சிவன் சிலைகளையும் சிவகாம சௌந்தரி சிலைகளையும் நாயன்மார் சிலைகளையும் சிவலிங்கங்களையும் மடுத்தோண்டிப் புதைக்கவில்லை? அம்மன்னர்களிடம் தூரநோக்கும் அகண்ட மனமும் இருந்தன. அனைத்து இனமும், அனைத்துப் பண்பாடும் இங்கு உள்ளன என்பதை அவர்கள் அனுபவ பூர்வமாக அறிந்திருக்கக்கூடும்;. அல்லது அவர்களுக்கு நல்ல ஆலோசனைகள் கிடைத்திருக்கக் கூடும். சாப்பிட்டுவிட்டுப் படுக்கும் போது மனம் மேலும் கனத்திருந்தது. பாட நூல் வழிகாட்டிகளும் உல்லாசப் பிரயாண வழிகாட்டிகளும் தம்மை நம்பி வருவோரைப் பிழையாக வழிகாட்டுகின்றனர் போல எனக்குப்பட்டது. ஆம் பிழையான வழிகாட்டிகள். அதிகாலையில் கண் விழித்தேன்.  மனம் சற்று லேசாக இருந்தது. மழை தூறிக்கொண்டிருந்தது. மெல்ல மெல்ல இருள் விலகிக்கொண்டிருந்தது. ஒரு தேநீர் கொண்டுவரச் சொல்லிவிட்டு வெளியே வந்திருந்து பராக்கிரம சமுத்திரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். நீண்டு தெரிந்த பராக்கிரம சமுத்திரம் பல ஏரிகளின் தண்ணீரினால் நிரம்பித் தளதளத்து நிறைந்து நீர்ப்பாசன பாரம்பரியத்தின் சின்னமாக நிமிர்ந்து நின்றது.
அருகிலே இருந்த கலாசார முக்கோணத் தொல்பொருட் காட்சியகம் பல பண்பாடுகளின் வருகையினால் பொலிந்து நிறைந்து பண்பாட்டுப் பாரம்பரியத்தின் சின்னமாக ஒளிர்ந்து தெரிந்தது. பராக்கிரம சமுத்திரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஏதோ ஓர் உணர்வு எனக்குள் சுரந்தது எழுதத் தொடங்கினேன். அது கவிதையா? அல்லது கவிதை போன்ற ஒன்றா? எதுவாயினும் அவை அப்போதைய என்னுணர்வுகள். பச்சையான உணர்வுகள்
எழுதி முடிந்ததும் மனம் ஓரளவு சமநிலைக்கு வந்தது போன்ற உணர்வு. எழுதிய நோட் புத்தகத்தை மூடிவைத்தேன். மனதின் பாரம் குறைந்திருந்தது. எனினும் ஏதோ ஒன்று மனதை அழுத்திக் கொண்டிருந்தது. வேன் வந்தது. மூட்டை முடிச்சுக்களுடன் எல்லோரும் ஏறிக் கொண்டோம். நான் முன் சீற்றில். என்னருகே சாருதத்தன் ஏறி உட்கார்ந்து கொண்டு என்னைப் பார்த்து
அழகாகச் சிரித்தான். பின்னால் குமுதினி, சேபாலி, றொமிஸ், தாரா அனைவரும் ஏறிக் கொண்டனர். வேனை ஓட்டிக் கொண்டு கொழும்பிலிருந்து வந்தவர் அபயவர்த்தனா. அவருக்கு தமிழ் தெரியாது. ஆனால் அழகாகச் சிரிப்பார். அதுதான் அவர் எம்முடன் தொடர்பு கொள்ளும் மொழி. வேன் உல்லாச விடுதியைவிட்டுப் புறப்பட்டது. பராக்கிரம சமுத்திரமும் உல்லாச விடுதியும் தூரச் சென்று கொண்டு இருந்தன. வேன் மெயின் றோட்டுக்கு வந்து கொழும்பு நோக்கிச் செல்லத் தொடங்கியது. வலது புரம் புராதன சின்னங்கள் மலிந்த புராதன பொலநறுவை நகர். இடது புறம் நீண்டு கிடக்கும் பராக்கிரம சமுத்திரம். இரண்டையும் ஊடறுத்து வேன் எங்களை சுமந்து சென்று கொண்டிருந்தது. காலை இளம் காற்று திறந்திருந்த ஜன்னலுக்கூடாக பாய்ந்து உடலையும் மனதையும் வருடிச் சென்றது. நான் சாருதத்தனிடம் இடது புறத்தில் கிடந்த பராக்கிரம சமுத்திரத்தின் விரிவையும் வலது புறம் தெரிந்த அழிந்த கட்டிடங்களையும் காட்டிக் கொண்டு வந்தேன். “இவற்றின் மாதிரி உருவங்களைத்தான் நேற்று நாம் தொல் பொருட் காட்சியகத்தில் கண்டோம்”
என்றேன். அமைதி பொலிந்தும் இடிந்தும் கிடந்த புராதன பொலநறுவை நகரக் கட்டிடங்களையும் அது அமைந்திருந்த பெரும் சோலை வளாகத்தையும் காட்டினேன். இதுதான் அரண்மனை. இதுதான் பெரிய கோயில். அது சபா மண்டபம். இற்றைக்கு ஆயிரம் வருடங்கட்கு முன்னர் இங்கு எத்தனை குதிரைகள் சென்றிருக்கும். எத்தனை பல்லக்குகள் சென்றிருக்கும். எத்தனை யானைகள் சென்றிருக்கும். ஏவலாட்கள், படைவீரர்கள், மேளமடிப்போர், நடனமாடுவோர் முன்செல்ல எத்தனை மன்னர்கள் ஊர்வலம் சென்றிருப்பர்.
அமைதியாகக் காட்சி தரும் இப்பகுதி அன்று எத்தனை ஆர்ப்பாட்டமாகவும், கலகலப்பாகவும் இருந்திருக்கும். என்றெல்லாம் பொதுவாகப் பேசிக் கொண்டே வந்தேன். சாருதத்தன் கேட்டுக் கொண்டே வந்தான். அவன் முகத்தைப் பார்த்தேன். அவன் பெருவிருப்போடு என்பேச்சினைக் கேட்டதாகத் தெரியவில்லை. அவன் வாய் திறந்தான் “அடுத்த விடுமுறைக்கு நான் மட்டக்களப்பிற்கு வந்து நீண்ட நாட்கள் நிற்க வேண்டும். அங்கிள்” வேன் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
முற்றும்.

No comments: