Thursday, April 07, 2016

அமரர் சி.சண்முகநாதன்!

-மா.சித்திவிநாயகம்-

மாவோயிஸ்டுகள் வர்க்கம் பற்றி மாத்திரம் சிந்திக்கவில்லை; தேசியம் குறித்தும் சிந்தித்தார்கள் என்பதற்கு தோழர் சி.சண்முகநாதன் மகத்தான உதாரணம்


நெடுந்தீவு தந்த தன்னேரில்லா முற்போக்குச் சிந்தையாளர் தோழர் சி. சண்முகநாதன் அவர்கள் இன்று கனடாவில் இயற்கையெய்தினார் என்கின்ற துயரச் செய்தியை துயரத்தோடு பதிவிடுகின்றேன்.தன் இளவயது முதல் சக மனிதர்களின் நலனுக்காய் குரல்கொடுத்து மக்களை மலினப்படுத்தும் அனைத்து அடக்கு முறைகளுக்கும் எதிராகப் போராடி வந்த கம்யூனிசச் சிந்தாந்தவாதிகளுள் முதன்மையானவர் இவர்.சாதியத்தின் கொடூர அடக்குமுறைக்கு ஆட்பட்டிருந்த குடாநாட்டுத் தமிழர்களின் வாழ்வில் தீண்டாமை ஒழிப்பு,பெண்ணுரிமை போன்றவற்றின் முக்கியத்துவங்களைத் தொடர்ந்து பேசியவர் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டவர் அதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் போராடியவர். அண்மையில்தான் அவர் கனடாவிற்குப் புலம் பெயர்ந்திருந்தார். மிகச் சிறந்த மானிட நேயனை இழந்த துயர் நெஞ்சத்தைத் தின்கின்றது .

ஒப்பாரி புலம்பல் ஓயாத அழுகை ஒலி என
எப்போதும் இழவே எம் தமிழர் விதி எனினும் 
பத்தோடு ஒன்றா இவர் பாதியிலே போவதற்கு 
வித்தல்லோ ஊரை உறவுகளை 
வேரை விழுதுகளை ஒன்றிணைக்கப் பாடுபட்ட 
சொத்தல்லோ 
வல்ல உழைப்பால் வளமார் தமிழினத்தை 
வாழவைக்கப் பாடுபட்ட நல்ல மனிதரை -நந்தினி சேவியர்-  அனுபவக்குறிப்பு

1971 இல் யாழ் / தொழில் நுட்பக்கல்லூரியில் நான் வணிகத்துறையில் ஒரு மாணவன். எனது சகமாணவன் நெடுந்தீவில் இருந்து வந்த சண்முகநாதன்.!.
இடதுசாரி சிந்தனயால் நாம் இருவரும் ஒன்று பட்டோம்.
அம் முறை தொழில் நுட்பக்கல்லூரி வணிக மாணவர் மன்ற தேர்தலில் தலைவர் செயலாளர், பொருளாளர் பதவிக்கான வாக்கெடுப்பு.. உடனடியாக ஆட்களின் பெயர் பிரேரித்து வழி மொழியப்பட்டு கைகள் உயர்த்தி வாக்கு எண்ணப்படும் தலைவர் பொருளார் பதவிகளுக்கு பெயர்கள் ஏகமனதாகத் தெரிவிக்கப் பட்டுவிட்டன.
நான் எதிர்பாராதவண்ணம் சண்முகநாதன்.!எனது பெயரை செயலர் பதவிக்கு முன் மொழிந்து விட்டான். “நயினை நாக.பஞ்சாட்சரம்” என்னும் தமிழ் அபிமானியை செயலாளராக்குவதாக உள்ளூர தீர்மானிக்கப் பட்டிருந்தது அதிலும் முதலாண்டு மாணவர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என்கின்ற எழுதாச்சட்டமும் இருந்து..
எனது பெயர் முன் மொழியப்பட்டு பத்து நிமிடங்கள் வழி மொழிய யாரும் முன் வரவில்லை. அப்போது நான் ஈழநாடு நாவல் போட்டியில் பரிசு பெற்று எனது வகுப்பு மாணவர்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தேன். சடுதிஎன எனது வகுப்பு மாணவி ஒருவர் (ராஜிவி) எழுந்து என்னை வழி மொழிந்தார்....வாக்கெடுப்பு நடந்தது.
190 வாக்குகள் எனக்கும் 10 வாக்குகள் நயினை நாக.பஞ்சாட்சரம் அவர்களுக்கும் கிடைத்தது.(முழு பெண் வாக்குகளுமேஎனக்குத்தான் கிடைத்தது எனது அபிமானத்தினால் அல்ல ராஜீவிக்காக கிடைத்தது ) . முடிவை அறிவித்ததும்.....வணிகப் பகுதி பொறுப்பாளர் ஒரு வேண்டுகோளை என்னிடம் பகிரங்கமாக விடுத்தார்.
“முதலாம் ஆண்டு மாணவர்கள் இந்த பதவிகளுக்கு போட்டியிடக்கூடாது
என்கிற எழுதா விதிக்கமைய “சேவியர்” இபோட்டியில் இருந்து விலகி மற்றைய போட்டியாளருக்கு இடம் வழங்குமாறு கேட்டுகொள்ளுகிறேன்..”
ஒலிவாங்கி என்னிடம் தரப்பட்டது. நான் பேசத்தொடங்கினேன்.....
அனைவருக்கும் வணக்கம் ! உண்மையில் இந்த பதவிக்கு போட்டியிடும் எண்ணம் எனக்கு கிஞ்சித்தும் இருக்கவில்லை. நயினை நாக.பஞ்சாட்சரம்..என்து நல்ல நண்பர். வணிகப் பகுதி பொறுப்பாளரின் கருத்து நியாயமானதுதான்......அனால் இந்தப் பதவிக்கு என்னை முன் மொழிந்த சண்முகநாதனையும், வழி மொழிந்த ராஜீவியையும்....எனக்கு வாக்களித்த 190 சகோதர சகோதரிகளையும் ஒரு கணம் நினைத்துப் பார்கிறேன்...நான் வாபஸ் பெறுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு தலைக் குனிவை ஏற்படுத்த நான் விரும்பவில்லை..எனவே இப்பதவியை நான் ஏற்றுக்கொண்டு செயல்ப் படுவேன் என்றேன்.
கைதட்டலால் மண்டபம் அதிர்ந்தது.
பின்நாட்களில் . வணிக மன்ற செயல் பாடுகளில் நான் பலவித நெருக்கடிகளை அனுபவித்தேன் சண்முகநாதன் எனக்கு உறுதுணையாக இருந்தான்.. இன்று அவனது மரணச் செய்தி எனக்குக பழைய நினைவை கிளறி விட்டது.
அவனும் நானும் இருவேறு அணிகளாக அரசியலில் இறங்கினோம்...மிக நீண்ட பிரிவு..... அவன் எங்கோ.....நான் எங்கோ....இன்று தான் அவன் கனடாவில் வாழ்ந்தான் இறந்தான் என அறிகிறேன்..
.கனடாவில் எனது “நந்தினி சேவியர் படைப்புகள்” நூலை அவன் வாங்கி இருக்கலாம்..வாசித்தும் இருக்கலாம் ...
அவனுக்கு எனது மௌன அஞ்சலி.! அவனது குடும்பத்தாருக்கு என்ஆழ்ந்த அனுதாபங்கள்!!

No comments: