Wednesday, October 29, 2014

எல்லோரும் ஏகலைவர் தாமோ

-கலாநிதி சி.ஜெயசங்கர்- 

நுண்கலைத்துறை கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. 

ஏகலைவன் தொன்மோடிக் கூத்துப் பிரதிக்கு வழங்கிய முன்னுரை. 
னது சிறுபராயத்தில் ஏகலைவன் எனக்கு அறிமுகமாகின்றான். அந்த அறிமுகம் எனக்கு துயரத்தைத் தந்தது. அத்துடன் தர்மம், அதர்மம் பற்றிய வகுப்பறைக் கற்பித்தல்கள், கதாப்பிரசங்கிகளின் கதையாடல்கள், நியாயப் படுத்தல்கள் எல்லாவற்றிலும் சந்தேகம் இழையோடத் தொடங்கிவிட்டிருந்தது.


சத்திரியருக்குச் சேவகம் செய்யும் பார்ப்பனத் துரோணரிடம் வேடர் குலத்தவனான ஏகலைவன் ஏன் வந்தான்? கட்டை விரலை வெட்டிக் குருதட்சணையாகத் துரோணரிடம் கொடுத்த கதை ஏன் பாடப் புத்தகங்களுள் உள்ளடக்கப்பட்டது? குருபக்தியின் பெயரில் ஏகலைவன் ஏன் பெருமைப் படுத்தப்படுகிறான்? என்ற கேள்விகள் என்னுடன் வளரத்தொடங்கிற்று.

ஆயினும் ஏகலைவனின் குருபக்தி பற்றிய அதே கதைகள் எங்கும் எதிலும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றன. ஆங்காங்கே இந்தப் போக்கிரித்தனம் பற்றிய கேள்விகளும், பார்வைகளும் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இவற்றில் எல்லாம் கடவுளும் கலந்திருப்பதால் பக்தியும், பயமும், சேர்ந்து இக்கேள்விகளை மழுங்கடித்து வருவதாகவும் இருக்கின்றது. பொதுப்புத்திக்கும் பயபக்திக்குமான போராட்டத்தில் பயபத்தியின் ஆதிக்கம் எதிர்கொள்ளப்பட வேண்டியது.

இந்த பயபக்திக்குள் நாங்கள் எவ்வாறு ஆட்படுத்தப்பட்டோம்? ஏனெனில் எங்களது உள்ளூர் சடங்கு வழிபாடுகள் கடவுளரை “அம்மா”, “தாயே”, “நீ” என நெருக்கமாகவும், உரிமையாகவும் அன்பாக வேண்டுவதாகவும், அதட்டுவதாகவும், இருக்கும். “கட்டு”, “வாக்கு” என்ற பெயர்களால் கடவுளருடன் நேரடியான உரையாடலிருக்கும். சொர்க்கம், நரகம் பற்றிய மகிழ்சியோ அச்சமோ இங்கிருப்பதில்லை. இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்வது உள்ளூர் வழிபாட்டு முறைகளின் அடிப்படை.

கண்ணுக்குப் புலனாகா வகையில் எமக்கு காவலாக இருந்து வரும் எமது மூதாதையரின், சூழலில் எல்லா உயிர்களுடனும், சூழலுடனும் ஒத்திசைந்து வாழ்வது உள்ளூர் வழிபாட்டு முறையின் சாரம்சமாகும்.
இந்த இடத்தில் இரு  விடயங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்”, “நாரதர் கலகம் நன்மையில் முடியும்” என்ற எமது அன்றாட உரையாடல்களில் தொக்கி நிற்கும் அர்த்தங்கள் ஆழ்ந்த புரிதலுக்குரியவை. நாரதர் கலகம் யாருக்கு நன்மையில் முடிந்திருக்கிறது? தருப்பைப் புல்லைக் கையில் வைத்தே பார்ப்பனக் கருத்தாக்கத்துள் மூழ்கடித்துள்ள வல்லபங்கள் யாருடையவை?
இந்த பின்னணியில் தான் இளையோருக்கான அரங்காக உருவாக்கப்பட்ட தமயந்தியின் ஏகலைவன் தென்மோடிக் கூத்தைப் பார்க்கவேண்டிருக்கிறது.

கூத்துக்களில் பாரத, இராமாயணக் கதைகள் மட்டுமல்ல உள்ளூர்க் கதைகள், வரலாறுகள், கற்பனைக் கதைகள் என பல பனுவல்களை புலவர்கள் பாடி வைத்துள்ளனர். அண்ணாவிமார் அவற்றைக் கூத்தர் துணை கொண்டு ஆடவைத்துள்ளனர். இது இற்றைவரை வற்றாத பெருநதியாகப் பெருக்கெடுத்துப் பாய்ந்துவருகிறது. ஈழக்கூத்தரங்கு எனும் நதியின் ஓட்டம் பாரம்பரிய எல்லைகள் கடந்து  இடம்பெயர் முகாம்கள், சிறைச்சாலைகள், புலம்பெயர் தேசங்கள் என பரந்து விரிந்து செல்கின்றது.
தமயந்தயின் ஏகலைவன்;    “வாழவேண்டும் தர்மம் நீதி
  வையம் உள்ள காலம் மட்டும்
                    ஆளவேண்டும் நாளை உலகை
  ஐயம் இல்லா நேயம்” 

என்ற அடிப்படை அரசியல் நோக்கமும் ஏக்கமும் கொண்டதாக இருக்கிறது.
  
“ஆளவேண்டும் என்றும் உலகை 
ஐயம் இல்லா நேயம்”  
  
நீதியானதும் நியாயமானதுமான உலகம் இன்றைய தேவை. நீதியான நியாயமான உலகம் இன்றைய மனிதருக்கு உரித்தானது.
தமயந்தியின் ஏகலைவன் கூத்தின் கட்டியனைப் பார்த்துக் கூறுவது போல் “சற்றுப் பொறுங்கள் கட்டியரே, இந்த ஏகலைவனையும் அறியட்டும் மக்கள்.
ஏகலைவன் பாடுகிறான்,      “சங்கைக்குரிய என் 
  குருவே உம் எண்ணமும் - எந்தன்
சாக்காட்டில் போகும் வரை
ஈடேறா தறியுங்கள்
வித்தை நாம் கற்றிட
மறுத்திடல் நியாயமோ? 
கற்றிட்ட வித்தையை 
           பறித்திடல் நீதியோ
      கண்டு கொண்டேன்……………..”
இவன்தான் தமயந்தியின் ஏகலைவன்.

ஏகலைவன் உரை:- “குருவே கட்டை விரலென்ன, உயிரினையும் ஈயவும் சித்தமாயுள்ளேன். ஆனால் உங்கள் உள்ளெண்ணம் குரோதமானது. சதி நிறைந்தது. வரலாறு உங்கள் குரோத்தை இழித்துரைக்கும். என்னையும் மூடனென நகைத்துரைக்கும். நான் தரும் குரு காணிக்கையால் இந்த இரண்டு தவறும் நிகழவேண்டாம். நீங்கள் சென்று வருக” 
தமயந்தியின் ஏகலைவன் தன்னையும் காப்பாற்றி அவன் குரு என அழைக்கும் துரோணரையும் காப்பாற்றி இருக்கின்றான்.

ஏகலைவன் பற்றிய பல்வேறு மீள்வாசிப்புக்களில், தமயந்தியின் மீள்வாசிப்பு கல்வி மறுப்புப் பற்றிய சமுதாயப் பிரச்சனையுடன் தொடர்புபட்டதாக இருக்கிறது.   

இக்கூத்து குறுகிய நேர அளவில் நயக்கக் கூடியதும் சிந்திக்கத் தூண்டுவதுமான படைப்பாக, குறிப்பாக இளையோருக்குப் பொருத்தமான வகையில் படைக்கப்பட்டிருக்கிறது.


ஈழச்சூழலில் புரிந்து கொள்ளக் கூடியதும் கூத்துக் கலைக்கேயான மொழிப்பாவனை கொண்டதாக இருப்பது இதன்பலம். ஆயினும் புலம்பெயர் சூழலின் இளையோர் மத்தியில் இக்கூத்தின் மொழிப் பயன்பாடு எந்த அளவிற்குத் தொடர்புபடும் என்பது பரீட்சார்த்தத்திற்குறியது.
மேலும் புலம்பெயர் இளையோரது விளக்கமும் வியாக்கியானமும் அறியப்படுவதும் மிகவும் முக்கியமானது. ஏனெனில் முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியை பாரிய கொடைவள்ளல் எனப்பதிந்திருந்த புத்தியில் புலம்பெயர் சிறுசொன்றின் கூற்று புரட்டில் போட்டு விட்டிருக்கிறது.
ஒரு தடியை நாட்டிவிட மன்னருக்குப் புத்தி வரவில்லையா? மக்களது வரிப்பணத்தில் செய்த தேரை எப்படித் தன்னிச்சையாக முட்டாள்த்தனம் பண்ணமுடியும்? இதுபோன்ற கேள்விகள் சமூகப் பண்பாட்டு மீள்வாசிப்பிற்கு அடிப்படையானவை. எனவே தமயந்தி போன்ற கலைஞர்கள் அவற்றையும் வெளிக்கொண்டு வருவதில் பங்காற்ற வேண்டும்.

மேலும் மன்னர்களது ஆதிக்கங்களும், சுரண்டல்களும் பெருமிதங்கள் நிறைந்த வரலாறுகளாக எமக்குத் தந்துவிடப்பட்டிருக்கின்ற சூல்நிலையில் ஏகலைவன் கதை அதற்கப்பாலான மனிதர்கள் அவர்களது வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்பார்ப்புக்கள் என்பவற்றையும் அறியத் தருகிறது.

வேடர் குலத்தவனான ஏகலைவன் ஆதிக்கம் கட்டமைந்திருக்கும் நிறுவனத்துள் கற்கவிளைவதாக வனையப்பட்டிருக்கும் கதையுள் ஒழிந்திருக்கும் அரசியல்தான் என்ன?  இது ஆழ்ந்த உரையாடலுக்குரியது.
வேடர்களின் விற்பயிற்சி வாழ்வாதாரத் தேடலுக்கானது, தற்காப்பிற்கும் தேவைப்படும் பட்சங்களில் தாக்குதல்களுக்குமானது. ஆனால் சத்திரியர்களது விற்பயிற்சி போருக்கானது, வெல்லும் வகையில் கொல்லும் நோக்குடையது.

ஆதிக்க நோக்குடையது, கொள்ளைக்கும் சுரண்டலுக்குமானது.
ஏகலைவன் எத்தகைய அறிவையும் திறனையும் பெற்றுக் கொள்ள துரோணரிடம் வருகின்றான் என்பதும் சிந்திக்கப்பட வேண்டியது.
சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் ஆதிக்க சாதிக் கோவில்களிற்குள் புகுவதற்கு மாற்றாக ஒடுக்கப்பட்ட சாதியரது கடவுளருக்குரிய சடங்குகளும், விழாக்களும், வேள்விகளும், பொங்கல்களும், படையல்களும், மடைகளும், காவியங்களுடன், வல்லியப்பரும், பெரியதம்பிரானும் முறையே ஆழ்வாரகவும் தக்கயாகேசுவரராகவும், முகம்மாறாமல் பெருமிதம் கொண்டிருப்பின் ஈழத்தமிழர்தம் சமூகப்பண்பாட்டு வரலாறு எத்தகைய பரிமாணங்கள் கொண்டிருக்கும்?

காலனித்துவம், நவகாலனித்துவம , உலகமயமாக்கம் என ஆதிக்கங்களுள் விரும்பி அள்ளுண்டு செல்லும் எல்லோரும் ஏகலைவர் தாமோ?

கலாநிதி சி.ஜெயசங்கர் 
நுண்கலைத்துறை கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. 
Dr.S.Jeyasankar, Dept. of Fine Arts, Eastern University Sri Lanka 

வெளியீடு: உயிர்மெய் பதிப்பகம்
முகப்போவியம்: மகா

No comments: