Saturday, February 18, 2012

ஹோமாய் - இந்தியாவின் முதல் பெண் போட்டோ ஜெர்னளிஸ்ட்

-கவின்மலர்-
குடியரசுத்தலைவர் மாளிகையில் அரசு நிகழ்வு ஒன்றில்..பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் குழுமியிருந்த அந்த அரங்கில் அந்தப் பெண், நிகழ்ச்சியின்  ஒவ்வொரு கணத்தையும் தன் கேமிராவுக்குள்  அடக்கிக்கொண்டிருந்தார். கையினால் தைக்கப்பட்ட அவரது ப்ளவுஸின் கைப்பகுதி அவருக்குத் தொல்லை தந்தது. அவர் நினைத்தபடி சரியான கோணத்தில் படமெடுக்க கையை உயர்த்திய வேளையில் அவரது கைப்பகுதியில் ப்ளவுஸ் துணி கிழிந்தது. அங்கிருந்த ஒரு சில பெண்களின் முணுமுணுப்பைப் பொருட்படுத்தாமல், சட்டென்று தனது இரண்டு கைப்பகுதி துணிகளையும் வெட்டி எடுத்து ஹேண்ட்பேக்கில் வைத்துக்கொண்டு, படமெடுக்கும் வேலையைத் தொடர்ந்தார். இந்த நிகழ்வுக்குப் பின் அவர் சல்வார் கமீஸ் அணியத் தொடங்கினார். அவர் ஹோமாய் வியாரவல்லா. இந்தியாவின் முதல் பெண் போட்டோ ஜர்னலிஸ்ட்.


இன்று அவர் நம்மிடையே இல்லை. வீட்டுப் படுக்கையிலிருந்து தவறி விழுந்த அவரை நெடுநேரம் கழித்துப் பார்த்து அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்க்க, அங்கே அவருக்கு மூச்சுக் கோளாறு ஏற்பட்டு காலமானார். 98 வயதில் ஒரு பெண் தனியாக வாழ்ந்து வந்தார் என்றால் அவரது தன்னம்பிக்கை எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்! 1969ல் அவரது கணவர் இறந்துவிட, அதன்பின் தன் மகனுடன் குஜராத் மாநிலம் வடோதராவில் வசித்துவந்தார். அவரது மகனும் புற்றுநோய் தாக்கி 1989ல் இறந்துவிட, தனிமரமானார் ஹோமாய். இறுதி வரை வேலைக்குக் கூட ஆள்  வைத்துக்கொள்ளாமல் ஹோமாய் தன் வேலைகளைத் தானே செய்து வந்தார். ‘’என் சமையலறைதான் என்னுடைய மருத்துவமனை.  எந்த நோயும் அண்டாத அளவுக்கு என் உணவுப் பழக்கத்தை வைத்துள்ளேன்” என்று ஒரு பேட்டியில் ஹோமாய் கூறினார்.

1938ல் தனது முதல் புகைப்படம், ‘பாம்பே கிரானிக்கிள்” பத்திரிகையில் வெளியானதையொட்டி துறையில் காலடி எடுத்து வைத்த ஹோமாய்க்கு அதன்பின் வரிசையாய் வெற்றிகள்தான். அமர்நாத்துக்கு சுற்றுலா சென்றபோது தன்னுடன் வந்த சக பெண்களை அவர் எடுத்த படம்தான் முதன்முதலில் வெளியான படம். சுதந்திர இந்தியாவில், செங்கோட்டையில் நடந்த முதல்  கொடியேற்றத்தைப் படம் பிடித்தவர் ஹோமாய். இந்திரா காந்தி தன் தந்தை நேருவுடன் இருந்த தருணங்கள், நேரு மற்றும் லால்பகதூர் சாஸ்திரியின் இறுதி நிகழ்வுகள், இரண்டாம் உலகப் போருக்கான தயாரிப்புகள், ஜாக்குலின் கென்னடியின் இந்திய வருகை, 1956ல் தலாய் லாமாவின் முதல் இந்திய வருகை, பாகிஸ்தான் பிரிவினைக்கு ஒப்புதல் அளித்த காங்கிரஸ் கூட்டம், மவுண்ட் பேட்டன் கவர்னர் ஜெனரலாக பதவியேற்ற தருணம், பிரதமர் பதவியேற்றபின் நேரு நிகழ்த்திய உரை, வெளிநாட்டுத் தலைவர்களின் இந்திய வருகை என்று இவர் பல வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியாய் இருந்து தனது ரோலிஃப்ளெக்ஸ் கேமிராவில் படம்பிடித்திருக்கிறார். இவரது புகைப்படங்களின் நேர்த்தி பிரமிக்க வைப்பவை. இவருடைய கறுப்பு-வெள்ளை படங்களில் நேருவே பிரதான கதாநாயகனாக இருந்தார். நேருவை படமெடுப்பது என்றால் ஹோமாய்க்கு மிகவும் இஷ்டம். பிரிட்டிஷ் ஹைகமிஷனரின் மனைவிக்கு சிகரெட் பற்றவைக்க உதவும் நேருவின் புகைப்படம் ஹோமாயின் பிரபலமான படங்களில் ஒன்று. தரையில் படுத்துக்கொண்டு படம் எடுத்தது போன்ற புகைப்படக் கோணம் ஹோமாயின் படங்களின் சிறப்பியல்பாக இருந்தது. ”நேருவும் பாகிஸ்தான் அதிபர் அய்யூப்கானும்p ஒன்றாக இருந்த நிகழ்வு ஒன்றில் தரையில் படுத்துக்கொண்டு நான் படம் எடுத்தேன். அங்கிருந்த புகைப்படக்காரர்களின் கால்களுக்குப் பின்னாலிருந்து இருவரின் கால்களுக்கு இடையேயான இடைவெளியில் நான் படமெடுக்க முயல, அய்யூப்கான்  நேருவிடம் இதைச் சுட்டிக்காட்டி, ’இந்த ஆண்கள் இந்தப்பெண்ணை படமெடுக்க அனுமதிக்கவில்லை போலிருக்கிறது. அவருக்கு வழிவிடச் சொல்லுங்கள்’ என்று கோபப்பட...இப்படிப் படமெடுப்பது ஹோமாயின் ஸ்டைல் என்று அவருக்கு விஷயத்தை விளக்கினார் நேரு” என்று தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார் ஹோமாய்

பெண்களைப் பள்ளிக்குக் கூட அனுப்பாத அந்தக் காலத்திலேயே ஹோமாய், மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஜே.ஜே.காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் பெயிண்டிங்கில் பட்டயப்படிப்பை முடித்தார். தனது படிப்பை முடிக்கும்வரை அவருக்கு தனக்கு புகைப்படம் எடுக்க வரும் என்பது கூடத் தெரியாது.

ஹோமாய் காதலித்து மணந்த மானெக்‌ஷா ஒரு புகைப்படக் கலைஞர். ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் பணியாற்றி வந்தார். இந்தியாவில் முதன்முதலில் படங்களால் நிகழ்வுகளைச் சொல்லும் முறையை பத்திரிகைகளில் அறிமுகப்படுத்தியவர். ஒரு நிகழ்வில் இவர் எடுத்த படங்கள், இவர் எழுதிய குறிப்புகளுடன் வெளியாகும். இவை நாளிதழில் ஒரு பக்கம் முழுவதும் கூட வெளியிடப்பட்டன. ஹோமாய் எடுத்த படங்களை மானெக்‌ஷாதான் முதலில் பார்த்து வியப்பவர். இருவரும் ஒரே கேமிராவை பயன்படுத்தினர். அவர்தான் பத்திரிகைக்கு அனுப்பச் சொல்லி ஹோமாயை ஊக்கப்படுத்தியவர். அதன் பின் ஹோமாய் பிரிட்டிஷ் இன்ஃபர்மேஷன் சர்வீஸஸ் நிறுவனத்துக்கு புகைப்படக்காரராய் பணியாற்றினார். ‘இல்லஸ்ட்ரேட்ட் வீக்லி ஆஃப் இந்தியா’வில் அவரது படங்கள் தொடர்ந்து வெளிவந்தன. “மானெக்‌ஷா எனக்கு கணவர் மட்டுமல்ல. புகைப்படமெடுக்கும் கலையில் அவர்தான் எனக்கு குரு” என்று ஹோமாய் தனது பல பேட்டிகளில் சிலாகித்திருக்கிறார்.

காந்தியின் இறுதிநொடிகளை படம் பிடிக்க இயலாமல் போனது ஹோமாய்க்கு வாழ்நாள் வருத்தமாக மாறிப்போனது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30, 1948 அன்று காலை அவரது ஆசிரமக் கூட்டத்தை பதிவு செய்யும்பொருட்டு கிளம்பி பாதி தூரம் வந்துவிட்ட அவரை, தூதுவரை அனுப்பி திரும்பி வரச்செய்த மானெக்‌ஷா, மறுநாள் இருவரும் சேர்ந்துபோய் ஒருவர் வீடியோவும், ஒருவர் நிழற்படமும் எடுக்கலாம் என்று யோசனை சொல்ல இவரும் ஒப்புக்கொண்டு இருந்துவிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் காந்தியின் மரணச் செய்தி வெளியானது. ‘’என் குருவைப் போலிருந்த கணவரை மீறி அன்றைக்கு நான் போகவில்லை. நாளை போய்க்கொள்ளலாம் என்றிருந்த நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். அன்றைக்கு உள்நாட்டு – வெளிநாட்டுப் புகைப்படக்காரர் என்று ஒருவர் கூட காந்தியின் இறுதி நொடிகளை படம் எடுக்க அவர் அருகில் இல்லை. நான் அங்கே இருந்திருக்க வேண்டியவள். அந்த வாய்ப்பைத் தவறவிட்டேன்” என்கிறார் தனது வாழ்க்கை வரலாற்று நூலில். ஹோமாய் அங்கே இல்லாதது வரலாற்றின் இழப்பாகி விட்டது.
ஆனால் அதை ஈடுசெய்யும் வண்ணம், காந்தியின் அஸ்தியை கரைப்பதற்காக ரயிலில் கொண்டு சென்றபோது அவர் எடுத்த படங்கள் சாகாவரம் பெற்றவை. ரயிலில் மற்றப் புகைப்படக்காரர்கள் எல்லாம் ஏ.சி. கோச்சில் வெளியில் நடப்பது தெரியாமல் பயணப்பட்டபோது இவர் மட்டும் மூன்றாம் வகுப்பில் பயணித்து, மக்களின் உணர்வுகளை படம்பிடித்தார். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் காந்தியின் அஸ்தியைக் காணக் குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தைப் படமெடுத்தார். அந்தப் படங்கள் இன்றைக்கும் பேசப்படுகின்றன; பேசுகின்றன!

ஹோமாயின் தந்தை பார்ஸி - உருது நாடகங்களில் பங்கெடுக்கும் அரங்கக் கலைஞர். ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து நாடகங்கள் போடும் ஒரு நாடகக்காரராக இருந்ததால் ஹோமாய் ஆறாவது வயது வரை தன் தந்தை சென்ற இடத்துக்கெல்லாம் சென்றவண்ணம் இருந்தார். ஹோமாயின் படிப்புக்காக மும்பையில் வீடு பார்த்து குடிவைத்துவிட்டு, தந்தை மட்டும் பயணத்தைத் தொடர்ந்தார். பகத் சிங்கையும் அவரது தோழர்களையும் பிரிட்டிஷ் அரசாங்கம் தேடியபோது கொஞ்ச காலம் தலைமறைவாய் அடைக்கலம் புகுந்து இருந்தது இவரது வீட்டில்தான். அப்போது ஹோமாய் சிறுமியாய் இருந்தார்.

ஹோமாயின் தாய் அவரை பிற பெண்களைப் போல திருமணம் செய்து கொடுத்துவிடாமல் படிக்க வைக்கவேண்டும் என்பதில் குறியாய் இருந்து தன் பெண்ணை படிக்க வைத்தார். சிறுவயதிலிருந்தே இருபாலார் பயிலும் பள்ளியில் படித்ததாலோ என்னவோ ஆண்களிடம் பேசுவதிலும், பழகுவதிலும் ஹோமாய்க்கு ஒருபோதும் சிக்கல் இருந்ததில்லை. தனது தொழிலில் பல ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண்ணாக அவர் வேலை செய்தார். ஆண்களின் ஆதிக்கம் மிகுந்த துறையில் ஒரு பெண்ணாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் பல சிக்கல்கள் உண்டு. சில சமயங்களில் பெண் எடுத்த படம் என்றால் வெளியிட முடியாது என்று பத்திரிகைகள் மறுத்த சந்தர்ப்பங்களில் தன் கணவர் மானெக்‌ஷா பெயரில் தன்னுடைய படங்களை பத்திரிகைகளில் வரவைத்தவர் ஹோமாய. ‘’வீட்டில் என் கணவரும் நானும் சரிபாதியாக வேலைகளைப் பகிர்ந்து கொள்வோம். என் தொழிலைப் பொறுத்தவரை, நான் ஓர் ஆணாதிக்கமான பழமைவாத சமூகத்தில் வாழ்கிறேன் என்பதை நான் மறக்கவில்லை. அதனால் நான் உண்டு என் வேலையுண்டு என்றிருப்பேன். சில சமயம் நான் படமெடுப்பவர்களிடம் ஒரு வாழ்த்து கூட சொல்ல மாட்டேன். அது ஒருவேளை தவறாக யாராவது புரிந்துகொள்ள வழி ஏற்படுத்திவிடுமோ என்று தவிர்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் என்னை பெரும்பாலும் மறக்காமல் அடுத்த முறை பார்க்கும்போது அடையாளம் கண்டு பேசுவார்கள். என்னை சக புகைப்படக்காரர்கள் ஒரு பெண்ணாகப் பார்த்ததில்லை. நானும் அவர்கள் மத்தியில் ஒரு பெண்ணாக உணர்ந்ததில்லை. அந்தளவுக்கு இயல்பாகப் பழகுவோம். ஆனால் ஒரு சிலர் மட்டும் நான் சைக்கிளில் டில்லியில் வலம் வருவது, கண்ட நேரத்திலும் படம் எடுக்கச் செல்வது என்றிருப்பதை எச்சரிப்பார்கள். எப்போதும் என்னிடம் இரண்டு பைகள் இருக்கும். அவற்றில் என் கேமிராவையும், அதற்கான உபகரணங்களை வைத்திருப்பேன். இரண்டு பெட்டிகள் என்னோடு எப்போதும் இருக்கும். ஃபிளாஷ் பல்புகள் ஒன்றிலும், இன்னொரு பெட்டியில் பியூஸ் போன பல்புகளையும் வைத்திருப்பேன். என்னை எல்லோரும் விநோதமாகப் பார்ப்பார்கள்” - இவை ஹோமாயின் வார்த்தைகள்.

இந்தியாவின் முதல் பெண் ஃபோட்டோ ஜர்னலிஸ்ட் என்னும் ஒளிவட்டத்தோடு அவர் வாழவில்லை. மிக எளிமையாகவே வாழ்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது வாழ்க்கை வரலாற்று நூல் ‘’India in Focus: Camera Chronicles of Homai Vyarawalla” என்கிற தலைப்பில் வெளியானபோதுதான் அவர் மீது ஊடக வெளிச்சம் விழுந்தது. அதன்பின்தான் சென்ற ஆண்டு மத்திய அரசு அவருக்கு ‘பத்ம விபூஷன்’  விருது கொடுத்து கௌரவித்தது. பெரும்பாலும் தனியாகவே பொழுதைக் கழித்த அவர் வாழ்ந்த வடோதரா நகரில் ஒன்றிரண்டு பக்கத்து வீட்டாரைத் தவிர, அவரை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. நண்பர்கள் அற்றுப் போன ஒரு வாழ்க்கையில், யாருக்காக, எதற்காக இவற்றையெல்லாம் சேர்த்துவைக்க வேண்டும் என்றெண்ணி  தனது மூவி கேமிராக்களால் எடுத்த பல நிகழ்வுகள் குறித்த படங்களையெல்லாம் வீசியெறிந்து விட்டார். தனது இறுதிக்காலத்தில் அதுகுறித்து மிகவும் வருந்தினார் ஹோமாய்.

நியூஸ் கேமிராமேன் அசோசியோஷனை உருவாக்கியவர்களில் ஒருவர் ஹோமாய். 1973க்குப் பிறகு தன் தொழிலைக் கைவிட்டார்  ”எங்கள் காலத்தில் இருந்தது போல தொழில்நேர்மை இல்லாததால், அவர்களோடு சேர்ந்து நானும் வேலை செய்வது மனதுக்கு ஒப்பவில்லை. அதனால் தொழிலை கைவிட்டேன்.  அய்யூப்கானும் நேருவும் ஒருவர் மீது ஒருவர் தோளில் கைபோட்டுக்கொண்டு கைகளை விலக்கிய வேளையில் ஒரு படம் பிடித்தேன். அந்தப் படம் பார்க்க வேடிக்கையாக இருக்கும். நேரு அய்யூப்கானின் தாடியைப் பிடித்து இழுப்பது போல் தெரியும். ஆனால் நான் அந்தப் படத்தை ஒருவரிடம் கூட காண்பித்ததில்லை. 50 ஆண்டுகள் கழித்துத்தான் அந்தப் படத்தை என்னுடைய கண்காட்சியில் வைத்தேன். யாரைப் படமெடுக்கிறோமோ அவர்கள் மனம் புண்படும்படியோ அவர்களது பிம்பத்துக்கு பங்கம் வரும் வகையிலோ நாம் படங்களை வெளியிடக்கூடாது என்பதை என் கொள்கையாக வைத்திருந்தேன். இது போன்ற என் கொள்கைகளுக்கு பங்கம் வரும் என்கிற நிலைமை வந்தபோது எனக்கு வேலை செய்யவிருப்பமில்லை. அதனால் வெளியேறி விட்டேன்” என்று கம்பீரமாய்ச் சொன்ன ஹோமாய் வியாரவல்லா இப்போது நம்மிடையே இல்லை.

பலருக்கு முன்னோடியாய் வாழ்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை சரியான முறையில் பதிவு செய்யாமல் விட்டுவிட்ட குற்றவுணர்வு நம் ஒவ்வொருவருக்கும் இருந்தால்தான், மகத்தான பணிகளைச் செய்த மனிதர்களை அனாதையாய்ச் சாகவிட்டு, யார் யாரையோ கொண்டாடும் நம் சமூகத்தை நாம் கேள்வி கேட்க முடியும். ”தனியாக வாழ நான் பழகிக்கொண்டேன். எவரையும் சார்ந்திருக்காமல் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. நான் இப்போதெல்லாம் பேசுவதில்லை. பெரும்பாலும் மௌனம்தான். சில சமயம் 3 வாரங்கள் வரை கூட ஒருவரிடமும் பேசாமல் இருந்திருக்கிறேன். பேசக்கூடாது என்றில்லை. பேசுவதற்கு ஆட்களோ, அதற்கான தேவையோ இல்லாமல் அப்படி இருந்திருக்கிறேன்” என்று தனது நூலில் கூறியிருக்கிறார் ஹோமாய். நிரந்தரமானதொரு மௌனத்தை தனதாக்கிக்கொண்ட ஹோமாய் இனி ஒருபோதும் பேசப்போவதில்லை!!

No comments: