Thursday, September 16, 2010

கியூபர்கள் சோசலிசத்தில் நம்பிக்கை இழந்துவிட்டார்களா?
-கலையரசன்-
பிடல் காஸ்ட்ரோ அண்மையில் வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்து பல வதந்திகளை கிளப்பி விட்டது. கியூபாவின் சோஷலிச மாதிரியில் காஸ்ட்ரோவுக்கு நம்பிக்கை இல்லை என்ற தலைப்புச் செய்தி அநேகமான உலக ஊடகங்களில் பவனி வந்தது. ஓரிரு நாட்களின் பின்னர், கியூபாவில் அரை மில்லியன் அரசாங்க ஊழியர்களை பணி நீக்கம் செய்யவிருக்கும் செய்தியும், எதிர்பார்ப்பை அதிகரித்தது. வழக்கமாகவே வெறும் வாய் மென்று கொண்டிருந்த கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு, இந்த செய்திகள் அவல் கிடைத்தது போலானது. பிறகென்ன? "கடைசியாக காஸ்ட்ரோ கூட சோஷலிசம் குறைபாடுடையது, அது கியூபர்களுக்கு உதவவில்லை." என்று கூறி விட்டார். கியூபா இனி முதலாளித்துவ பொருளாதாரத்தை தழுவிக் கொள்ளும். இவ்வாறு எல்லாம் கனவு கண்டிருப்பார்கள். அது எவ்வளவு தவறானது என்பது காஸ்ட்ரோவை நேர்கண்ட "அட்லாண்டிக்" பத்திரிகை நிருபரே எழுதுகின்றார். " கியூபாவில் யாரும் ரியல் எஸ்டேட் வாங்கலாம் சட்டம் வருகிறது. ஆனால் அமெரிக்கர்கள் மட்டும் வாங்க முடியாது. அமெரிக்கர்களை வாங்க விடாமல் தடுப்பது கியூப சட்டமல்ல, மாறாக முட்டாள்தனமான அமெரிக்க அரசு."(Fidel: 'Cuban Model Doesn't Even Work For Us Anymore')

பிடல் காஸ்ட்ரோ கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு வருவோம். "கியூப மாதிரி இப்போதும் ஏற்றுமதி செய்யப் படக் கூடியதா?" என்பது பத்திரிகையாளரின் கேள்வி. "கியூப மாதிரி எங்களுக்கே செயல்படுவதில்லை." என்று பிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளார். முதலில் கியூபாவில், "மாதிரி (Model)" என்ற சொல்லை பயன்படுத்துவதில்லை. எப்போதும் "சமூகத் திட்டமிடல்", அல்லது " சமூக விஞ்ஞானம்" போன்ற சொற்களையே பயன்படுத்துவார்கள். நீண்ட காலமாக கியூபா, புரட்சியை ஏற்றுமதி செய்வது வந்துள்ளமை ஒன்றும் இரகசியமல்ல. அமெரிக்காவில் அதனை "கியூப மாதிரி புரட்சி" என்று தான் அழைப்பார்கள். மேலும் முதலாளித்துவ கல்விக்கழகங்களில் கற்பவர்களுக்கு ஒரு "மாதிரி" தான் சிந்திக்கத் தோன்றும். இவையெல்லாம் காஸ்ட்ரோ அறியாததல்ல. தான் கூறிய அர்த்தத்தை திரிபுபடுத்தி வெளியிட்டதாக காஸ்ட்ரோ பின்னர் தெரிவித்தார்.(Castro 'misinterpreted' on Cuba economic model quote) அட்லாண்டிக் பத்திரிகை நிருபரை அழைத்துச் சென்ற Julia Sweig இன்னொரு விதமாக மொழிபெயர்க்கிறார். இன்றைய ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக பிடல் காஸ்ட்ரோ அவ்வாறு கூறியிருக்கலாம் என்கிறார். எது எப்படியிருப்பினும், "கியூபா சோஷலிசத்தை கைவிடுகின்றது" என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஒரு சாதாரண பத்திரிகை நிருபருடனான உரையாடலில் வெளிப்படுத்தியிருக்க முடியாது. அத்தகைய அறிவிப்புகளுக்கு வேறு இடங்களும், நிகழ்வுகளும் இருக்கின்றன.

இருப்பினும், பிடல் காஸ்ட்ரோவின் கொள்கையுடன் முரண்படும் கருத்துகள் சில, ராஜதந்திர நோக்கங்களுக்காக தெரிவித்திருக்கலாம். இரண்டு மாதங்களுக்கு முன்னர், கியூபாவில் அரச எதிர்ப்பாளர்கள் சிலர் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பான உலகச் செய்தியாகியது. அதே நேரம் பெருமளவு சந்தேக நபர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அந்த செய்தி மட்டும் எந்தவொரு ஊடக நிர்வாகியின் கண்ணுக்கும் புலப்படவில்லை.(Cuba's Prisoner Release) அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள், கியூபாவில் மனித உரிமைகள் மேம்பட வேண்டுமென்றும், பொருளாதாரம் தனியார்மயமாக்கப் படவேண்டும் என்றும் பிரச்சாரம் செய்கின்றன. அப்போது தான் கியூபாவுக்கு சர்வதேச சமூகத்தில் சம அந்தஸ்து வழங்குவார்கள். இந்த பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையிலேயே, கியூபாவின் அண்மைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன. காஸ்ட்ரோ ஒரு முதலாளித்துவ நலன் சார்ந்த அமெரிக்க பத்திரிகையாளருக்கு வழங்கிய பேட்டியையும் அந்த வெளிச்சத்தின் கீழ் தான் பார்க்க வேண்டும். கியூபாவின் உத்தியோகபூர்வ கொள்கைக்கு மாறாக, காஸ்ட்ரோ ஈரான் அதிபர் அஹ்மதிநிஜாத் மீதும் விமர்சனங்களை வைத்துள்ளார். இஸ்ரேலின் இருப்பிற்கு நியாயம் இருப்பதாகவும், அஹ்மதிநிஜாத் யூதர்களை அவதூறு செய்வது சரியல்ல என்றும் காஸ்ட்ரோ கூறியுள்ளார். (Fidel to Ahmadinejad: 'Stop Slandering the Jews') அமெரிக்காவை சேர்ந்த அட்லாண்டிக் பத்திரிகையாளர் ஏற்கனவே இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை பற்றி நூல் ஒன்றை எழுதியுள்ளார். ஒரு ஊடகவியாளரின் பின்புலம் குறித்து அறியாமல், காஸ்ட்ரோ உரையாடியிருக்க வாய்ப்பில்லை. ஆகவே, நான் கூற வருவது இதைத்தான். கியூபா மேற்குலக நலன்களுக்கு இடையூறாக நிற்கவில்லை என்று பிடல் காஸ்ட்ரோ சமிக்ஞை கொடுத்திருக்கலாம்.

விரைவில் அமெரிக்கா இஸ்ரேலை பயன்படுத்தி ஈரான் மீது படையெடுக்க இருப்பதாக அனல் பறக்கும் உரையாற்றிய காஸ்ட்ரோ, தீர்க்கதரிசனத்துடன் கியூபாவுக்கு வரவிருக்கும் ஆபத்தை தவிர்க்க நினைத்திருக்கலாம். அமெரிக்கா ஈராக் மீது படையெடுப்பதற்கு தயார் செய்து கொண்டிருந்த காலத்தில், லிபியா இது போன்ற ராஜதந்திர அணுகுமுறையை கடைப்பிடித்தது. "பயங்கரவாத்திற்கு எதிரான போரில் லிபியாவும் பங்குபற்றுவதாக" பகிரங்கமாக அறிவித்த கடாபி, அதன் மூலம் லிபியா மீதான பொருளாதார தடைகளை அகற்றிக் கொண்டார். வெறி கொண்ட காளை மாடொன்று தெருவில் போவோர் வருவோரை எல்லாம் இடிக்கிறது என்றால், நாமாக ஒதுங்கிக் கொள்வோம். அமெரிக்கா என்ற இராணுவ பலம் வாய்ந்த ராட்சதனோடு நேரடியாக மோத முடியாது. சமயத்தில் ஒதுங்கிக் கொள்வது புத்திசாலித்தனம்.

கியூபா அடுத்த வருடம் அரை மில்லியன் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என்று மேற்குலக ஊடகங்கள் சிலாகித்து பேசுகின்றன. அதிலும் குறிப்பாக பணி நீக்கம் செய்யப்படும் அரச ஊழியர்கள் தாமாகவே வர்த்தக முயற்சியில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டும். கடின உழைப்பாளிகளுக்கு தகுதிக்கேற்ப அதிக சம்பளம் வழங்கப்படும். ஒரு வர்த்தக நிறுவனம் தொடங்குவதற்கு இலகுவாக சட்டங்கள் மாற்றப்படும். இதை எல்லாம் கேள்விப்படும் போது, கியூபா சோஷலிசத்தை கைவிட்டு விட்டது போலத் தோன்றும். முதலாளித்துவமே சிறந்தது என்று தெரிவு செய்து விட்டதாக சிலர் சந்தோஷப்படுவார்கள். ஆனால் இந்த கருதுகோள்கள் எதுவுமே உண்மையல்ல. முதலாவதாக கியூப அரசு அடுத்த ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த பொருளாதார திட்டத்தை அறிவித்துள்ளது. இரண்டாவதாக, கியூபாவின் அரச சார்பு தொழிற்சங்கம் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை நியாயப் படுத்தியுள்ளது.

சீனாவில், வியட்நாமில் நடந்ததைப் போன்ற பொருளாதார மாற்றங்கள் கியூபாவில் இடம்பெறும் என்று பலர் எதிர்வுகூறினார்கள். ஒரு வகையில், அண்மைய அறிவிப்பு அந்த நாடுகளின் அனுபவங்களை கவனமாக ஆராய்ந்த பின்பே வெளியாகியுள்ளது. ஒரு வகையில் கியூபப் பொருளாதாரம் அந்தப் பாதையில் பயணப்படுவதாக இருந்தாலும், தீய விளைவுகள் கவனமாக தவிர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீனாவில் அனைத்து தொழிலாளர்களும் பெரிய நிறுவனங்களின் தயவில் விடப்பட்டனர். தொழிலாளர் நலப் பாதுகாப்பில் அரசாங்கத்தின் பொறுப்பு குறைக்கப்பட்டது. ஆனால் கியூபாவில் நடைபெறப் போவது அதுவல்ல. தொழிலாளர்கள் கட்டம்கட்டமாக பணி நீக்கம் செய்யப் படுவர். அவர்கள் தாமாகவே வர்த்தக முயற்சியில் ஈடுபட அரசாங்கமே ஊக்குவிக்கும். ஊழியர் சேம நிதியத்தில் இருந்தோ, அல்லது வங்கிக் கடனாகவோ கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு கம்பெனி தொடங்கலாம். ஆனால் வர்த்தக முயற்சியில் அனைவரும் வெற்றி பெறப் போவதில்லை. எப்படியும் என்பது வீதமானோர் அனைத்தையும் இழந்து வந்து நிற்பார்கள். அப்படியானவர்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அதை விட பணிநீக்கம் செய்யப்பட்டாலும் வர்த்தக முயற்சியில் இறங்க விரும்பாதவர்களுக்கு, அரசே வேறு தொழில் தேடித் தர வேண்டும். ஏற்கனவே உள்ள தங்குவிடுதிகள் போன்ற தனியார் துறையிலும் வேலை தேடலாம்.

உண்மையில் கியூப அரசு, சீனாவை பின்பற்றுவதை விட, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மாதிரியை பின்பற்றுவதாகவே தோன்றுகின்றது. கடந்த வருடம் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மில்லியன் கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தன. பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்த பொருளாதார நெருக்கடி, இன்றுள்ள கியூப நிலையை விட மோசமாக இருந்தது. இருப்பினும் பணி நீக்கம் செய்யப் பட்டவர்களுக்கு அரசாங்க கொடுப்பனவு வழங்குவது பல குறைபாடுகளை கொண்டிருந்தது. முன்பு மாதிரி வேலையற்ற அனைவருக்கும் படியளந்த காலம் மலையேறி விட்டது. வேலையில்லாமல், வருமானமில்லாமல், (தற்காலிகமாக) அரசின் உதவியும் கிடைக்காமல் வறுமையில் வாடிய குடும்பங்கள் அதிகம். அத்தகைய பிரச்சினைகளை மேற்கு ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு சமாளித்து முன்னேறின? வேலையிழந்த மக்கள் சக்தியை, பொருளாதாரத்திற்கு புத்துயிர்ப்பு ஊட்ட எப்படி பயன்படுத்தினார்கள்? கியூபா அதிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடொன்றில், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற பலருக்கு, கியூபாவில் நடைபெறும் மாற்றம் புதுமையாக தெரியவில்லை. இங்கே என்ன நடந்ததோ, அது தான் அங்கேயும் நடக்கின்றது.(Cuba lay-offs reveal evolving communism)

மேற்கு ஐரோப்பாவில் நூறு வீத முதலாளித்துவம் நிலவவில்லை. தவிர்க்கவியலாது சில சோஷலிசக் கூறுகளைக் கொண்டுள்ளன. எத்தனை வீதம் சோஷலிசம் என்பது, நாடுகளைப் பொறுத்து கூடலாம், அல்லது குறையலாம். உதாரணத்திற்கு சுவீடனின் சோஷலிசத்தின் அளவு பிற நாடுகளை விட அதிகம். இவ்வாறு முதலாளித்துவ நாடுகள் என்று பேரெடுத்த நாடுகள், சோஷலிச பரிசோதனை செய்வதை யாரும் தவறாக எடுக்கவில்லை. "ஆஹா, பார்த்தீர்களா! அவர்கள் முதலாளித்துவத்தில் நம்பிக்கை இழந்து விட்டார்கள்." என்று சந்தோஷப்படவில்லை. மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் அசைக்க முடியாத இடத்தில் வைக்கப் பட்டுள்ளது. அதே நேரம் உழைப்பாளரின் வசதிவாய்ப்புகள் அதிகரிக்கும் வண்ணம் செல்வம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளன. இதை புரிந்து கொள்ள நீங்கள் பொருளாதார சூத்திரம் எதையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டியதில்லை. கியூபாவிலும் அதே மாதிரியான பொருளாதார மாற்றமே நடந்து கொண்டிருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரம் அப்படியே இருக்கும். மார்க்சிச-லெனினிசம் அரச கொள்கையாக தொடர்ந்திருக்கும். அத்தியாவசிய பொருளாதார நிறுவனங்கள் அரசாங்கத்திடம் இருக்கும். ஏற்கனவே தொழில்நுட்ப அறிவு தேவைப்படும் துறைகளில், அரசு வெளிநாட்டு நிறுவனங்களுடன் Joint Venture ஒப்பந்தங்கள் போட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச மூலதனத்தை நிர்வகிக்கும் ஸ்தாபனங்களுக்கு கட்டுப்பாடு உள்ளது. சிறு வணிகர்களைக் கொண்ட தனியார்துறை ஒரு நாளும் அரசுக்கு போட்டியாக மாற முடியாது. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. சிறு வணிகர்கள், அரசுக்கு வரி கட்டியே தேய்ந்து போவார்கள். பெருமளவு பணம் சேர்த்து பெரிய முதலாளி ஆகும் கனவு ஒரு நாளும் பலிக்கப் போவதில்லை. "எல்லையற்ற பணம் சேர்க்க சுதந்திரம் கொடுக்கும்" முதலாளித்துவ நாடுகளிலேயே அது தான் நிலைமை.

No comments: