Friday, March 04, 2011

உலகின் அழகிய முதல் பெண்


முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு
ஈழக்கவிதை நூல்

சொல் -கவிதை -வரலாறு


தொகுப்பாசிரியர் : குட்டி ரேவதி

மதிப்புரை : லீனா மணிமேகலை

நன்றி புத்தகம் பேசுது மார்ச் 2011

"வரலாற்றை உருவாக்குபவன் ஒடுக்குமுறையாளன்தான். அவன் எழுதுகின்ற வரலாறு அவனால் ஒடுக்கப்படவர்களின் வரலாறாக இருப்பதில்லை. அது சூறையாடுகின்ற, வன்புணர்ச்சி செய்கின்ற, வறுமையை உருவாக்குகின்ற அவனது சொந்த வரலாறே. இதற்கு மாறாக ஒடுக்கப்பட்டவர்களால் வேறொரு வரலாறு உருவாக்கப்படுகிறது.ஆனால் இந்த வரலாற்றை உருவாக்குபவர்கள் நாவலாசிரியர்களும் கவிஞர்களும்தானே தவிர தொழில்ரீதியான அல்லது கல்வித்துறை சார்ந்த வரலாற்றாளர்களல்ல" என்று ஃபிரான்ஸ் ஃபனான் குறிப்பிடுவார். சமூகத்தின் நெருக்கடியை முதலில் உணர்ந்துக் கொள்வது கவிதையாகத் தான் இருக்கிறது. ஆதிக்கமயமாக்கலுக்கும், சட்டங்களுக்கும் தணிக்கைகளுக்கும் வெளியே சதா தன்னிலையைப் பேசி மிச்சமிருக்கும் நம்பிக்கைகளைத் திரட்டிக் கொண்டேயிருக்கிறது.

கவிஞர் குட்டி ரேவதி தொகுத்து, ஆழி பதிப்பகத்தால் வெளி வந்துள்ள “முள்ளி வாய்க்காலுக்குப் பின்” கவிதை தொகுதி ஒரு மாபரும் இன அழிப்பிற்குப் பின்னான வாழ்வுறுதியை கூட்டு நினைவுகளின் முன்மொழிதலாக வைக்கின்றது. கவிஞர்கள் கி.பி.அரவிந்தன், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், திருமாவளவன், செழியன், சிவசேகரம், மாதுமை, கனகலதா எனறு தொடங்கி தீபச்செல்வன், அனார், பஹீமா ஜஹான், ரிஷான் ஷெரீஃப் ஊடாக விரியும் இத்தொகுதியின் வார்த்தைப் படலங்களின் பின்னால் கசிகிறது படுகொலைகளின் ரத்தக் கவுச்சி நாற்றம். கவிஞர் விநோதினி எழுதிச்செல்வது போல, நாம் காரிருளில், விமானச் சத்தங்களுக்கு நடுவே, வெடி மணத்தோடு, கைகளில், பசித்த மென் வயிறுகளில், தலைகளில், நீண்ட பின்னல்களில், பாதங்களில், தடுக்கி விழுந்து நடந்தபடி கவிதைகளைக் கடக்கவியலாது வாசித்து கிடப்பது உயிர் துடிக்க துடிக்க பிரேதப் பரிசோதனை செய்துக் கொள்வதற்கு ஒப்பானது.



தலைமுறை தாண்டியும் சொற்களில் தான் உறையுமோ முள்ளிவாய்க்கால் வதையின் கதை என்ற கி.பி.அரவிந்தனின் வரிகளில் அலறத் தொடங்கும் மனம் சாம்பலை உதறியபடிக்கு இடிபாடுகளை விலக்கிக் கொண்டு உயிர்த்தெழுகிறது வாழ்வு என்ற வ.ஐ.ச ஜெயபாலனின் எழுச்சியில் சிறிது ஆசுவாசம் அடைகிறது. அரசாங்கங்களுக்கு கவிதை புரியாது தான். ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்ட, பத்திரிகைகள் வெளியேற்றப்பட்ட, பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்ட யுத்த நிலத்தின் காட்சிகளை, உயிர் பிரியும் வலியுடன் விவரணை செய்யும் இத்தொகுப்பின் கவிதைகள், இந்நூற்றாண்டின் மாபெரும் இன அழிப்பின், மனித உரிமை மீறல்களின், போர்க்குற்றங்களின் அழிக்க முடியா சாட்சிகள். விடுவிக்கப்பட்டவர்களின் இரகசிய வாக்குமூலம் என்ற தமிழ்நதியின் கவிதை திரையை உண்மையால் எரிக்கும் காட்சி கூடிய ஒரு ஆவணப்படம்.


சொல்லின் மீதான வேட்கை என்பதும், ஒருவகை மறுப்பின் மீதான வேட்கை தான். தம்மீதான தொடர்ந்த ஒடுக்குமுறைகளுக்கெதிரான ஒரு மூர்க்கமான எதிர்ப்பு, சொல்லாக, கவிதையாக மாறுகிறது. எதிர்ப்பை பற்றிய கவிதை எதிர்ப்பைக் காட்டிலும் ஒரு படி மேலோங்கியதாக இருக்கவேண்டும் என்ற மஹ்மூத் தர்வீஷின் கூற்றுக்கு கட்டியம் கூறுகின்றன சேரனின் கவிதைகள். கண்ணீரின் சுவடுகளால் முகக் கோலம அழிந்தாலும் இன்னொரு முகம் பன்முகமாக விரியக் கண்டேன் என்று முடியும் அவரின் ’தலைமுறை’ கவிதை, கவிதைக்கும் எதிர்ப்புக்கும் இடையே இருக்கும் சமத்துவமில்லாத உறவை வெளிப்படுத்துகின்றது.



ஏன் செய்தாய் எனக் கேட்க முடியாத அடக்குமுறையில் காலம் சிக்கியிருந்தது என்று எழுதும் பஹீமா ஜஹான், அடிமையாக இருப்பதையும் விடக் கொடுமையானது அகதியாக இருத்தல் என வெதும்பும் சுலோசனா தேவராஜா, மரணத்துள் வாழத் தலைப்படும் சுல்பிகா, புத்தனை-யேசுவை-அல்லாவை- சில்லறைப்பயல்களா என ஏசும் கவிதா, வரலாறு மதுவிலும், குருதியிலும் பிறழ்ந்துக் கிடக்கிறது என விசனப்படும் கனகலதா, பெரும் சூறாவளிக்குத் தப்பிய பரிசுப் பொருளின் சிதையாத பாகமாய் கிடைக்கின்ற தூக்கத்தை அணைக்கும் அனார் என்று தொகுதியில் தனித்து நிற்கும் பெண் குரல்கள் வாழ்வின் மீதான பெரும் காமத்தை வெளிப்படுத்துபவை.பன்றிகள் கிளறியெறிந்த வீதியில், அந்த பூவரச மரத்தினடியில் கிடக்கிறது நான் உன்னை சந்திக்கிற பொழுதுகள் என நீளும் தீபச்செல்வனின் கவிதைகள் கொடுங்கனவினூடே உன்னத வாழ்வை சதா தேடியலையும் ஆன்மாவின் ஓலங்கள்.



உதவுங் கரங்கள்/வடக்கினின்று நீளுமெனக் காவலிருந்தார்கள்/ மேற்கினின்று ரட்சகர்கள் வருவரென தவங்கிடந்தார்கள்/கிழக்கு ஒளி மங்கி கிடந்தது/தென் திசையின் தெய்வம்/தூதர்களைத் துரிதமாகவே அனுப்பி வைத்தது என்னும் சிவசேகரத்தின் கவிதை வாசிக்கும் மனசாட்சிகளைக் கொல்லும். அடையாள மின்மை, மிச்ச்மிருக்கும் கனவுகளைப் பற்றிய அரற்றுதல், இழப்பை நம்பிக்கையாக மாற்றும் அக்கறை, துர்க்கனவைத் துரத்தும் அலறல் என்று இந்த தொகுப்பின் கவிதைகள் நம்மை தீயிலிறக்கி நீராக்குபவை. ”முள்ளிவாய்க்கால்” என்ற திருமாவளவனின் கவிதையை வாசித்து முடிக்கும்போது “கூத்து முடிந்தது” என்ற வரியில் உறைய மறுக்கிறது காலம். எதிர்காலம் குறித்த ஒரு சொல்லை ஏற்க முடியாத வீரத்தின்/முன்னே/நான் எறிவேன்/நாயின் மலத்தை/இந்த வரலாற்றின் விதி முன்னே என்ற கருணாகரன் வசந்தியின் வரிகள் முள்ளிவாய்க்காலோடு தமிழீழம் முடிந்துவிடாது என்ற அறைகூவலை வைக்கிறது.



எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள் எழுதும் எம்.ரிஷான் ஷெரீப், ரட்சகர் எவருமில்லை என்று முறையிடும் காருண்யன், ஒரு நூற்றாண்டின் கொடுமையை சிறு பாடலில் மட்டுமா பதிவது என வினவும் த.மலர்ச்செல்வன், புதிய குருஷேத்திரத்தை வரையும் மு.புஷ்பராஜன், அட பிணம் தின்னி – நீ உனக்கு மட்டுமே எனச் சொல்கிற இந்த நாடு ஒரு நாள் இந்து சமுத்திரத்தில் பிணமாக மிதக்கும் என்று சாபமிடும் தேவ அபிரா, இறுதிக்கணங்களாலான கவிதையை எழுதும் சிமோன்தி,மந்தைகள் வெறுந்தரை தின்னுகையில் மேய்ப்பனின் மந்தை ஓட்டும் தடியில் எந்தக் களிப்பிற்காக கொடி பறந்துக் கொண்டிருந்தது என்று விடுபட்டுப் போன காலத்தின் வார்த்தைகளாய் ததும்பும் சித்தாந்தன், மனைவி முத்தமிடும் போதும் காது வெளியில் தான் நீட்டிக் கொண்டிருக்கிறது என்று நுட்பமாக விவரிக்கும் இளைய அப்துல்லாஹ், விடியலைத் தேடும் வினாக்குறிகள் என்று அகதிவாழ்வை எழுதும் வெலிகம ரிம்ஸா முகம்மத் என எல்லோரும்,பல்லாயிரம் மக்கள் செத்து மடிந்திருந்தாலும்  மொழி இன்னும் செத்துவிட வில்லை என்று கன்னம் அறைகிறார்கள்.



ஆனாலும் மொத்தமாக வாசித்து முடிக்கும்போது போதாமையே மிஞ்சுகிறது. தொகுப்பாசிரியர் குட்டி ரேவதியின் தேர்வின் அரசியல் சில பிரதிநிதித்துவங்களை, நுண்ணரசியல் களன்களை விலக்கிவைக்கின்றது. இந்த தொகுதியின் இஸ்லாமியக் கவிஞர்களின் கவிதை தேர்வு அதற்கொரு உதாரணம். முன்னுரையில் தொகுப்பாசிரியர் முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்று சண்டையிட்ட இருதரப்பு போராளிகளின் பார்வைகளாக கவிதைகள் ஆகி நிற்கின்றன என்கிறார். இருதரப்பென்றால் யாரைச் சொல்கிறார்? இலங்கை ராணுவத்தைப் போராளிகள் என்கிறாரா? அல்லது இருதரப்புமே ராணுவம் என்பதால் ஒரு தட்டில் வைக்கிறாரா? தெளிவாய் இல்லை.

சாதியம், இந்திய தேசியம், தமிழ்த் தேசியம் எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்து அதன் நுட்பமான கோணங்களை விரித்துப்பேச வேண்டியிருக்கிறது என்று குறிப்பிடும் குட்டி ரேவதி தமிழ்த் தேசியம், ஈழத் தமிழ்தேசியம், சாதியம் குறித்த தன் கருத்தை குழப்பமான முறையில் வரையறுக்கிறார். தமிழ்நாட்டில் பார்ப்பனீயத்தை தவிர்த்து, தமிழ்த் தேசியத்திற்கு பெரும் பங்காற்றியிருப்பது வெள்ளாளக் கருத்தியல் தான். பெரியாருக்குப்பின் பார்ப்பனர் அல்லாதோர் அரசியலில் முதலியார்களும், வெள்ளாளர்களுமிணைந்த அரசியலதிகாரம் உருவாகியது. 1930 களிலேயே தனிநாடு, சுயநிர்ணய உரிமை, மாநிலத்திற்கு அதிக அதிகாரம் போன்றவற்றைப் பேசி இந்திய ஒருமைப்பாட்டுக்கு வெளியே பிராந்திய அரசியலை தங்களுக்கென்று வரித்துக் கொண்டன. தமிழ்த்தேசியத்திற்கு தமிழக தலித்துகள் மற்றும் அடித்தட்டு மக்கள் உடன்படுவது கூட, அரசியல் அதிகாரத்தில் தங்களுக்கான பங்கிற்கும், தமிழகத்திலிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஊடாக தங்கள் ஆதிக்கத்தை சாதித்துக் கொண்டிருக்கும் சக்திகளுடன் கூட்டாக இருப்பதற்காகவும் தான். மற்றபடி தலித்துகள் திராவிட அரசியலுக்கு கீழ் நின்று தான் தமிழ்த் தேசியம் பேசிக் கொள்ள முடியும்.அதிகாரத்தில் இருப்பவர்கள் தேசியம் பேசுவதும், இல்லதவர்கள் சாதியம் பேசுவதும் தான் இங்கு மெய்யியல். ஈழத்தமிழ் தேசியம் என்பதைப் பொறுத்தவரை அது ஒரு கற்பிதம் தான். கற்பிதமாக இருந்ததால் தான் அப்பாவி தமிழ் மக்கள் பலியிடப்பட்டார்கள். பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்டதும் தற்செயலானதல்ல.



ஈழம் கருத்து நிலம் என்கிறார் தொகுப்பாசிரியர். உணமை தான். நவகாலனித்துவ, பன்னாட்டு மூலதனம் இவற்றைப் பற்றிப் பேசாமல் முள்ளிவாய்க்காலை எப்படி விளங்கிக் கொள்வது. பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் அபரிதமான மூலதனத்தின் வழியே ஒரு தேசிய அரசாங்கத்தை ஊடுறுவும்போது, பெரும்பான்மை இனம் அதிகாரத்தின் உள் முரண்களோடு கூடிய சிறுபான்மை இனத்தைக் கொன்றொழித்து தன் விசுவாசத்தை மூலதனத்திற்கு நிரூபித்துக் கொள்ளும். இதுதான் இலங்கையில் நடந்தது. ராஜபக்சே அதற்கொரு கருவி தான்.கூடவே யுத்தத்தினிடையே இலங்கையின் உற்பத்தி உறவும், வர்க்க ரீதியிலான பிரச்சினைகளும் என்னவாயிற்று என்ற கேள்வியையும் கேட்டுப் பார்த்தால் இன்னும் கூட தெளிவானப் புரிந்துணர்வு ஏற்படும்,.


முள்ளிவாய்க்காலுக்குப்பின் என்ற இந்த தொகுப்பைத் தந்ததன் மூலம் குட்டி ரேவதி விவாதிப்பதற்கான பல திற்வுகோல்களையும் சேர்த்தே தருகிறார். செழியன் தன் கவிதையில் சொல்வது போல நெஞ்சில் வாழ்வு அச்சமின்றி குடை விரிக்கட்டும். போராட்டங்களை விட ஆகப் பெரியது வாழ்வு.

நூல் பிரதிக்கு ஆழி பதிப்பகத்தை அணுகவும்

No comments: