Sunday, October 24, 2010

“கமலாதாஸ்” என்னும் எழுத்து

கவியாளுமைகள் – “கமலாதாஸ்” என்னும் எழுத்து


- செந்தமிழ்மாரி(இந்தியா)
கவிதைகள் எழுதுவது என்பது ஒரு தவத்தைப் போன்றது. ஒரு அறிஞர் சொல்கிறார் குழந்தைகளுக்கும் கவிஞர்களுக்கும்தான் வாழ்வு இனிமையாக இருக்கிறது என்று. அதைப்போல காண முடியாத அல்லது எண்ண முடியாத பாதையைக் கண்டடைந்து அதில் ஊறித் திளைக்கும் கவிஞர்களுக்கு வாழ்வு பெரும் அர்த்தத்துடன்தான் விளங்குகிறது. அன்று முதல் இன்றுவரை கவிதையைக் கண்டடைந்தவர்கள் ஏராளம் பேர்.பெரிதும் அறியப்பட்டவர்கள் ஆண்பாற் புலவர்களே. தொடக்க காலம் முதலே பெண் கவிஞர்கள் உருவாவதை இருட்டடிப்பு செய்துள்ளனர் என்பதை நாம் அறியும் சங்ககாலக் கவிதை தொடங்கி அறிந்துகொள்ள முடிகிறது. அதையும் மீறி மிகுந்த சிரமங்களுக்கிடையில்  சங்ககால பெண் கவிஞர்களான காரைக்காலம்மையார், வெள்ளிவீதியார், ஒளவையார், ஆண்டாள் போன்ற ஒரு சிலர் மட்டுமே அறியப்பட்டு கொண்டாடப்பட்டுள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் பெண்களின் எழுத்தையே அதிகமாகக் காண முடிந்தது. அதிலும் 1990க்குப் பிறகான காலத்தில்தான் பெண் கவிஞர்களின் வரவு அதிகரித்ததன என்று கூறலாம். அப்படி வந்த கவிஞர்களும் அவர்களுக்குள்ள கட்டுப்பாடுகளோடு இறைவனையும், அழகையும் வர்ணித்தே கவிதையெழுதினர். புதுமைக் கவிஞர்களுக்கு பிறகு பின் நவீனத்துவ காலக் கவிஞர்கள் 1990களின் கடைசியில் வந்து, இன்றைக்கு ஆண் கவிஞர்களின் எண்ணிக்கையோடு மட்டுமல்ல கவிதைத் திறனோடும் போட்டி போடும் அளவுக்கு அவர்களின் நிலை வளர்ந்துள்ளது. ஒரு பெண் கல்வி பெற்றால் அந்தக் குடும்பமே கல்வியில் சிறந்து விளங்கும் என்பதைப் போல்தான் பெண் கவிஞர்களின் வரவு எதிர்கால சந்ததியினருக்கும் சமூகத்துக்கும் உதவும் வகையில் அவர்களின் ஆளுமைத்திறனும் சுதந்திரங்களை அடையும் குணங்களும் வித்திடுகிறது.
எனவே இது வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வு. இன்று அவர்கள் பல பொருள்களில் தனிமனித சுதந்திரம், அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட சமூகக் கட்டமைப்புகள், பெண் உடலின் மீது செலுத்தும் ஆதிக்கம், மனதிலேற்படுத்தும் ஆதிக்கங்கள் போன்றவற்றைத் தகர்த்து கவிதை புனைந்து வருகின்றனர். இருந்தாலும் ஆண் கவிஞர்களின் உடல் சார்ந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டு இச்சையூறும் இச்சமூகம் பெண்களின் உணர்வுகளை, உள்ளக் குமுறல்களைக் கவிதையாக்கிக் கொணரும்போது மறுக்கும் நிலைதான் நீடிக்கிறது. இது இச்சமூகம் வளர்வதற்கான சூழல்தானா என்ற கேள்வியை எழுப்பத் தவறியதில்லை. இருப்பினும் இவற்றையெல்லாம் எதிர்கொண்டு பெண்கள் தங்கள் கருத்துக்களை ஆணித்தரமாகக் கவிதை மூலம் செயல்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
  
எத்தகைய அடக்குதல்கள் வந்தாலும் பெண்கவிகள் அவர்களுக்கான பங்களிப்பை கவிதைகளால் மட்டுமல்ல பெண் சுதந்திரம், பெண்களின் தனித்த வளர்ச்சி, தனித்த ஆளுமை இன்னும் பிறவற்றால் இந்தச் சமூகத்தில் தங்களாலான மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டுதானிருக்கிறார்கள். அத்தகைய பெண் கவிஞர்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்தான் இந்த ‘கவியாளுமைகள் ‘
 கமலாதாஸ் என்னும் எழுத்து  
 senthamzmari6கமலாதாஸ் இன்று மரணமடைந்துவிட்டாலும் அவர் எழுதிய எழுத்துக்கள், கவிதைகள் அனைத்தும் சமூக அளவீடுகள், மதிப்பீடுகளை மறுத்தும் கேள்வ 
கேட்கவும் செய்யும் காத்திரமான படைப்புக்களாகவே இருந்துவருகின்றன. இவர் வாழும் காலத்திலேயே பலவிதமான விமர்சனங்களால் அலைக்கழிக்கப்பட்டும், இறப்புக்குப் பின்னரும் பலவிதமான விமர்சனங்களுக்கும் ஆட்பட்டார். இருந்தும் அவர் வாழும்வரை இழக்கமுடியாத எழுத்தாகவே வாழ்ந்தார் என்பதுதான் உண்மை.
1934ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள், கேரளத்திலுள்ள திருச்சூர் அருகிலுள்ள நாலாப்பட்டு தறவாட்டில், மலையாள பத்திரிகையான மாத்ருபூமி நாளேட்டின் நிர்வாக ஆசிரியரான வி.எம்.நாயர் என்பவருக்கும், உலகெங்கும் கவிதையால் அறியப்பட்ட கவிஞர்
பாலாமணியம்மாவிற்கும் மகளாகப் பிறந்தவர். கருவிலேயே கவிதையைக் கண்டடைந்தவர். அதனால்தான் கவிதையில் இவ்வளவு ஜொலிக்க முடிந்ததோ? சிறுவயதில் ஆமி என்ற பெயரால் அழைக்கப்பட்ட கமலாதாஸ் மலையாளத்தில் மாதவிக்குட்டியாகவும் ஆங்கிலத்தில் கமலாதாஸாகவும் பெரிதும் அவருடைய எழுத்துக்களால் அறியப்பட்டவர்.
senthamzmari2
தன்னுடைய 14ஆம் வயதில் மாதவ தாஸுக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது. எழுத ஆரம்பித்தபோது அவரது கணவர் அதற்கு பெரும் உதவியாக இருந்தார் என்பதை அவரே குறிப்பிட்டுள்ளார். முதல் கவிதைத் தொகுப்பான ‘சம்மர் இன் கல்கத்தா’ (Summer in Calcutta) என்ற ஆங்கில நூல் ஆசியாவுக்கான கவிதைப் பரிசினை பெற்றதே அவருடைய எழுத்தின் வீர்யத்துக்கு உதாரணம். அந்தப் பரிசு வழங்கப்பட்டபோது அவருக்கு வயது 31 (1965ஆம் ஆண்டு).
1976ஆம் ஆண்டு வெளியான இவருடைய ‘என் கதை’ என்ற தன்வரலாற்று நூல் இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனையானது. இந்தப் புத்தகம் கற்பு, கலாச்சாரம் போன்றவற்றைப் பற்றி அதிகமாகப் பேசுவதாகவும் நமது ஆச்சாரவாதிகளால் மிகையான பாலியலைப் பேசியதாகவும் கண்டனம் எழுப்பப்பட்டாலும் வெகுசன வாசகர்களால் வாசிக்கப்படும் குமுதம் வார இதழில் தொடராக வந்து வரவேற்பைப் பெற்றதே அந்த நூலின் மதிப்பைக் கூட்டுகிறது.
ஆச்சாரவாதிகளால் அந்நூலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டபோது அவரிடம் ‘என் கதையைப் படித்து பலரும் அதிர்ந்துபோனதாகச் சொல்லப்படுகிறதே…’ என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, ‘அதிர்ந்து போனதுபோல பாசாங்கு செய்தனர்’ என்று துணிச்சலாகக் கூறி அனைவரையும் திணறடித்தார். அந்த பதில் அவரது ஆன்மாவின் அடியாழத்திலிருந்து வந்த பதிலாகவே அமைந்திருந்தது என்றே கூறலாம். இதிலிருந்து ‘நாம் புனிதமானவர்கள், கண்ணுக்குத் தெரியாத வரையறைகளுக்குக் கட்டுப்பட விதிக்கப்பட்டவர்கள்’ போன்ற பொய்மைகளைத் துகிலுரிந்து காட்டினார்.
எழுதுவதைப் பற்றிப் பேசும்போது “என் வாழ்வின் இரகசியங்கள் எல்லாவற்றையும் எழுதி என்னைக் காலி உடம்பாக ஆக்கிவிடவேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்” என்றார். இதிலிருந்துதான் அவரது கவிமனம் எதைக் காண அல்லது எவற்றை அடைய கவிதையையும் எழுத்தையும் தேடுகிறது என்பது புரிகிறது. உடலாகட்டும் இன்னபிறவாகட்டும் எதுவாக இருந்தாலும் தான் எழுத நினைத்த யாதொரு கருத்தையும் எழுதி முடிக்கவே அவரது உள்ளம் நாடுவதாக இருந்தது. இதனால் கமலாதாஸ் அன்று முதல் அவரது இறுதிக் காலம்வரை குழப்பவாதியாகவும், தத்தளிக்கும் மனோநிலையுடையவராகவுமே சித்தரிக்கப்பட்டார்
senthamzmari1“என் வாழ்வின் இரகசியங்கள் எல்லாவற்றையும் எழுதி என்னைக் காலி உடம்பாக ஆக்கிவிடவேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்” என்றார். இதிலிருந்துதான் அவரது கவிமனம் எதைக் காண அல்லது எவற்றை அடைய கவிதையையும் எழுத்தையும் தேடுகிறது என்பது புரிகிறது. உடலாகட்டும் இன்னபிறவாகட்டும் எதுவாக இருந்தாலும் தான் எழுத நினைத்த யாதொரு கருத்தையும் எழுதி முடிக்கவே அவரது உள்ளம் நாடுவதாக இருந்தது. இதனால் கமலாதாஸ் அன்று முதல் அவரது இறுதிக் காலம்வரை குழப்பவாதியாகவும், தத்தளிக்கும் மனோநிலையுடையவராகவுமே சித்தரிக்கப்பட்டார்.
  • ஆணுலகைச் சார்ந்து செயல்படும் சமூக பிற்போக்குகளை எதிர்த்தும் பெண் குறித்த கருத்தாக்கங்களைக் கேள்விக்குட்படுத்தியும் எழுதும் அவரது படைப்புகளை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆண்களால் கட்டமைக்கப்பட்ட பெண் சார்ந்த மரபுகளை எதிர்த்துப் பேசுவதும், எழுதுவதும், நடந்துகொள்வதும் என்றிருந்த  அவர் ஒரு கலக்ககாரியாக அறியப்பட்டார். இதனால் தாம் பிறந்த மண்ணைவிட்டு வெளியேறும் நிலைக்கும்கூடத் தள்ளப்பட்டார்.
  • 1999ஆம் ஆண்டு இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அவர் தனிமையில் வெகுகாலம் இருந்தபோது அன்பைத் தேடி சந்தித்த நபரின் அன்பைத் தேடியே மதம் மாறியதாகக் கூறினார். அந்த நபர் தன்னளவுக்கு துணிச்சலற்றவராக இருந்தது தெரிந்தும் அந்த மதத்திலேயே கடைசிவரையிலும் நீடித்தார். அன்பில்லாத மதங்களின் தன்மைகள் சலித்துப்போய் ‘கிருஷ்ணராக இருக்கட்டும், இஸ்லாத் ஆக இருக்கட்டும் எல்லாக் கடவுளும் ஒன்றே’, ‘மனித அன்பு ஒன்றே சிறந்தது‘ என்றும் உணர்ந்து அறிவித்தார்.
senthamzmari3
1984ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான பட்டியலில் டோரிஸ் லெஸ்ஸிங் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களோடு இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஆசியாவுக்கான கவிதைப் பரிசு, கென்ட் அவார்டு, அசான் உலகப் பரிசு, எழுத்தச்சன் புரஸ்கரம் விருது, சாகித்ய அகாடமி விருது மற்றும் கேரள சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை இவரது எழுத்துக்கள் பெற்றிருக்கிறது.
கமலாதாஸ் என்னும் அந்த எழுத்து ஒரு கவிஞராக, எழுத்தாளராக மட்டுமல்லமல் ஒரு தேர்ந்த ஓவியருமாகயிருந்தார். அவர் வரைந்த ஓவியங்கள் அனைத்தும் பெண்ணின் அடுத்தகட்ட அல்லது தன்னுணர்வை நோக்கிப் பயணிப்பதை தெள்ளன விளக்குவதாகவும் மிகுந்த அழகியலோடும் அறியப்பட்டது. அதேபோல் ஆண்சார்ந்த ஓவியங்களையும் தீட்டியுமுள்ளார்.
அதில் ஓர் ஓவியத்துடன் அவர்,
senthamzmari4
எழுதியுள்ள படைப்புக்கள்…
English
1964: The Sirens (Asian Poetry Prize winner)
1965: Summer in Calcutta (poetry; Kent’s Award winner)
1967: The Descendants (poetry)
1973: The Old Playhouse and Other Poems (poetry)
1976: My Story (autobiography)
1977: Alphabet of Lust (novel)
1985: The Anamalai Poems (poetry)
1992: Padmavati the Harlot and Other Stories (collection of short stories)
1996: Only the Soul Knows How to Sing (poetry)
2001: Yaa Allah (collection of poems)
Malayalam
1964: Pakshiyude Manam (short stories)
1966: Naricheerukal Parakkumbol (short stories)
1968: Thanuppu (short story, Sahitya Academi award)
1987: Balyakala Smaranakal (Childhood Memories)
1989: Varshangalkku Mumbu (Years Before)
1990: Palayan (novel)
1991: Neypayasam (short story)
1992: Dayarikkurippukal (novel)
1994: Neermathalam Pootha Kalam (novel,
Vayalar Award)
1996: Chekkerunna Pakshikal (short stories)
1998: Nashtapetta Neelambari (short stories)
2005: Chandana Marangal (Novel)
2005: Madhavikkuttiyude Unmakkadhakal (short stories)2x
2005: Vandikkalakal (novel)
தொடர்ந்து இயங்கி வந்த அவரது எழுத்தாளுமை கடந்த மே மாதம் 31ஆம் தேதி, எழுபத்தைந்தாவது வயதில் புனே மருத்துவமனையில் ஓய்ந்தது. இலக்கிய உலகத்துக்கே ஓர் இழக்கக் கூடாத இழப்பு. அவர் மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் என்றென்றும் நம்மோடு பேசிக்கொண்டுதான் இருக்கும்.
 
கமலாதாஸ் கவிதை…
மொழியாக்கம்: எஸ்.வி.வி.வேணுகோபாலன்

அரசியல் தெரியாது எனக்கு
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின்
பெயர்கள் தெரியும் எனக்கு.
நேருவில் துவங்கி
வரிசையாக ஒப்புவிக்கவும்முடியும் என்னால்
கிழமைகளை, மாதங்களைச் சொல்வதுபோல.
நான் ஓர் இந்தியர்
நிறம் மிகவும் பழுப்பு
மலபாரில் பிறந்தவள்
பேசுகிறேன் மூன்று மொழிகளில்
எழுதுகிறேன் இரண்டில்
கனவில் ஆழ்கிறேன் ஒன்றில்.
அவர்கள் சொன்னார்கள்
‘ஆங்கிலத்தில் எழுதாதே
ஆங்கிலம் உனது தாய்மொழியன்று.’
என்னை ஏன் தனிமையில் விடக்கூடாது?
விமர்சகர்களே, நண்பர்களே, சந்திக்கவரும்சொந்தங்களே
உங்கள் ஒவ்வொருவரையும்தான் கேட்கிறேன்.
எனக்குப் பிடித்தமான எந்தவொரு மொழியிலும்
என்னைப் பேசவிடுங்களேன்.
நான் பேசுகிற மொழி எனதாகிறது.
அதன் பிறழ்வுகள், அசாதாரணப் பிரயோகங்கள் எல்லாம்
என்னுடையவை
என்னுடையவை மட்டுமே.
அது அரை ஆங்கிலம்
அரை இந்தியம்
ஒருவேளை நகைப்பிற்குரியதும்கூட.
ஆனாலும் அது நேர்மையானது
உங்களால் பார்க்கமுடியவில்லையா?
நான் எவ்வளவு மனுஷத்தனம் கொண்டவளோ
அவ்வளவு மனிதத்தன்மை அதற்குமிருக்கிறது.
அது பேசுகிறது
எனது குதூகலங்களை, எனது விழைவுகளை, எனதுநம்பிக்கைகளை.
அது எனக்குப் பயன்படுகிறது
காகத்திற்கு அதன் கரைதலைப் போல
சிங்கத்திற்கு அதன் கர்ஜனையைப் போல
அது மனிதப் பேச்சு
இங்கிருக்கிற, அங்கு இல்லாத மனத்தின் பேச்சு.
பார்க்கிற, கேட்கிற எல்லாம் அறிகிற ஒரு மனத்தின்பேச்சு.
செவியற்ற விழிகளற்ற பேச்சல்ல
புயலில் சிக்கிய மரங்களின் -
பருவமழையைச் சுமக்கும் மேகங்களின் -
மழையின் -
தொடர்பற்ற முணுமுணுப்புகளைச் செய்தவாறு
கொழுந்துவிட்டெரியும் சிதை நெருப்பின் பேச்சு அது.
நான் குழந்தையாக இருந்தேன்
பிறிதொருநாள் அவர்கள் சொன்னார்கள்
நான் வளர்ந்துவிட்டேனென்று
ஏனெனில் நான் உயரமாகிவிட்டேன்
எனது உடல் பெரிதாகிவிட்டது
ஒன்றிரண்டு இடங்களில் முடிவளரத்துவங்கிவிட்டது.
நான் காதலைக் கேட்டபோது
அவன் ஒரு பதினாறு வயது யௌவனத்தை
எனது படுக்கையறைக்குள் தள்ளிவிட்டுக் கதவைச்சாத்தினான்.
அவன் என்னை அடிக்கவில்லை
ஆனால் வருத்தமுற்ற என் பெண் மேனி
அடிவாங்கியதாக உணர்ந்தது.
எனது மார்பகங்களின் பளுவும், கருப்பையும்
அழுத்திய அழுத்தத்தில்
பரிதாபகரமாக நான் சுருங்கிப்போனேன்.
பிறகு ஒரு சட்டையையும்
எனது சகோதரனின் கால்சட்டையையும் அணிந்தேன்.
தலைமுடியைக் குட்டையாகக்கத்தரித்துக்கொண்டேன்.
எனது பெண்மையைப் புறக்கணித்தேன்.
அவர்கள் சொன்னார்கள்
சேலைகளை அணி
பெண்ணாய் இலட்சணமாய் இரு
மனைவியாய் இரு
தையல் வேலையைச் செய்துகொண்டிரு
சமையல்காரியாய் இரு
சண்டை போட்டுக்கொண்டிரு
வேலையாட்களுடன் பொருந்தி இரு
ஒட்டிக்கொண்டிரு
என்றனர் வகைப்படுத்துநர்கள்.
சுவரின் மீது உட்காராதே
மெல்லிய திரைச்சீலைகள் தொங்கும்
எங்கள் சன்னல்கள் வழியாகப் பார்க்காதே
ஆமியாய் இரு கமலாவாய் இரு
மாதவிக்குட்டியாய் இருந்தால் இன்னும் நல்லது.
இதுவே சரியான தருணம்
ஒரு பெயரைத் தேர்வுசெய்துகொள்ள.
கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் வேண்டாம்
மனநோயாளியோடு விளையாடாதே
திருப்தியுறாத ஆளாயிராதே
காதல் முறிவின்போது சங்கடப்படுத்தும்படி
ஓவென்று இரையாதே….
ஒரு மனிதனைச் சந்தித்தேன்
காதல்வயப்பட்டேன்
எந்தப் பெயரிட்டும் அழைக்கவேண்டாம் அவனை
ஒரு பெண்ணை நாடும் எவனோ ஒரு ஆண்தான் அவனும்.
காதலை நாடும் எவளோ ஒரு பெண்ணாகிய என்னைப்போலவே
அவனுள்…. நதிகளைப் போலவே ஒரு பசியின் வேகம்
என்னுள்…சமுத்திரங்களின் களைப்பில்லாதகாத்திருத்தல்.
உங்கள் ஒவ்வொருவரையும் கேட்கிறேன் “யார் நீ?”
“அது நானே”என்பதே விடை.
எங்கும் எல்லா இடங்களிலும் காண்கிறேன்
தன்னை நான் என்று அழைத்துக்கொள்பவரை.
உறைக்குள் செருகப்பட்டிருக்கும் வாளைப்போல்
இறுக்கமாக அவன் திணிக்கப்பட்டிருக்கிறான்
இந்த உலகத்தினுள்.
தனிமையில் குடிப்பது நான்தான்
புதிய நகரங்களின் விடுதிகளில்
நடுநிசி பன்னிரண்டு மணிக்குக் குடிப்பவள்நான்தான்.
பிறகு வெட்கத்திலாழ்ந்து செத்துக் கிடக்கிறேன்
தொண்டை விக்கி.
நான் ஒரு பாவி
நான் ஒரு ரிஷி
நேசிக்கப்படுபவள் நான்
வஞ்சிக்கப்படுபவளும் நான்தான்.
உங்களுக்கில்லாத குதூகலங்கள் எதுவும்எனக்குமில்லை
நானும் அழைத்துக்கொள்கிறேன் என்னை
நான் என்று. 

நன்றி : ஊடறு 

No comments: