Wednesday, October 20, 2010

வெளியிடப்படாமல் போன முன்னுரை

எல்லோர்க்கும் பெய்யும் மழை

-சேரன்-
’தாமதமாக வந்தவன்/நிலையருகில் நிற்கின்றேன்’-என எழுதிச் செல்கிறார் ரவிக்குமார். இந்தத் தொகுதியிலுள்ள இருபத்தைந்தாவது கவிதை அது. எனனுடைய இருபத்தைந்தாவது வயதில், ‘காற்றில் கரைந்து சென்று விட்ட என்னுடைய கால் நூற்றாண்டுக் கவிதை வாழ்வு பற்றி நெடுங்கவிதைச் சுய புராணம் ஒன்றை முன்பொருதரம் எழுத ஆரம்பித்தாலும், பின்னர், வெட்கம் காரணமாக அதனை நிறுத்திவிட்டேன். கவிதையைப் பொறுத்தவரையில் முன்பு வந்தவர், தாமதமாக வந்தவர் என்பதிலெல்லாம் பெரிய திணை மயக்கங்கள் இருக்கத் தேவையில்லை. அகத்தில் தொடர்ந்தும் எரிகிற கவிதை வேட்கை, சீரிய முறையில் தன்னைத் தொடர்ச்சியாகக் கவிதைகளாக வெளியே படைத்தளித்து வருகிறதா என்பதே நமது கவனிப்புக்கு உரிய கேள்வியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
நீண்டகாலமாகத் தீவிரமான இலக்கிய வாசகர்களாகவும் உபாசகர்களாகவும் இருந்து வந்த பல நண்பர்கள் கவிஞர்களாகவும் நாவலாசிரியர்களாகவும் திடீரென மாறிவிடுகிற மந்திர வனப்பை நான் முன்னரும் சந்தித்திருக்கிறேன், தாமதமாக வந்தாலும் சரி, முன்னவராக அமைந்தவரானாலும் சரி. ஏராளமான நல்ல கவிதைகளைத் தனது ரகசியப் பெட்டகங்களில் பூட்டி வைத்திருக்கின்ற பல நண்பர்களையும் நான் அறிவேன். கவிஞர்களைச் சூழ்ந்திருக்கும் மர்மங்களைவிட இந்த ரகசியப் பெட்டகங்களில் உறைந்திருக்கும் மர்மங்கள் அளப்பரிய ஆர்வத்தைத் தூண்டுபவை.
கடந்த ஆண்டு திடீர் திடீரென, இனிய தாக்குதல்கள் போலத் தனது கவிதைகளை ரவிக்குமார் அனுப்பி வைத்தபோது, இந்த ரகசியப் பெட்டகங்களின் எண்ணம் மறுபடியும் எழுந்தது. கடந்த ஆண்டு நமக்குப் பெருவலி எழுப்பிய ஆண்டு. ஊழியும் ஊழிக்குப் பின்பும் என நமது வாழ்வையும் கனவுகளையும் நிலத்தையும் ஈவிரக்கமற்றுச் சிதைத்த ஆண்டு. இந்தச் சிதைவிற்கு இந்தியாவும் அயல்நாடுகளும் அனைத்துலக சமூகமும் மட்டும்தான் பொறுப்பா அல்லது நாமும் நமது அரசியல் குறும்பார்வைகளும் காரணமா என்பதெல்லாம் காலங் கடந்த விவாதம். என்றாலும், அந்த நாட்களின் அவலம் இன்றைக்கும் மூளாத் தீ போல உள்ளே கனல்கிறது. முந்நூறு, நானூறு என நூற்றுக்கணக்கிலும் பின்னர் ஆயிரக்கணக்கிலும் மக்கள் கொல்லப்படுவது ஒவ்வொரு நாளும் மாறி மாறிக் கணினித் திரைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பதிவு செய்யப்பட்ட பித்துப் பிடித்த மனநிலையில் தெருத்தெருவாக எதிர்ப்புப் போராட்டங்களில் அலைக்கழிந்தபோது அவ்வப்போது மனதிற்கு ஒத்தடமாக அமைந்தவை கவிதைகள்தான்.
நண்பர் ரவிக்குமார் இடையிடையே தொலை பேசுவார். எனினும் அவருடைய கவிதைகள் அந்த நேரம் வாசிக்கத் கிடைத்தமை அற்புதமான மருந்தாக இருந்தன. நெய்தல் நிலத்துக்குரிய இரங்கலை அவருடைய கவிதைகள் வேறொரு உணர்வுத்தளத்தில் எழுப்பினாலும் நமது ஒட்டுமொத்தமான பேரிழப்புகளுக்கு எதிரொலியான இரங்கலையும் அவருடைய குரலுக்கூடாக நான் கேட்கிறேன். தாங்க முடியாத பெருவலியிலிருந்து என்னை விடுவித்து விடு’ என்று நான் திருப்பித் திருப்பி அரற்றிக் கொண்டிருந்தபோது, ‘என்னுடைய உயிரையாவது எடுத்துக்கொள், என்னுடைய காலத்தை எடுத்துக் கொள் என்று உணர்வுத் தோழமையுடன் ஒலிக்கிறது ரவிக்குமாரின் கவிதைக்குரல். கூட்டுப் பெருந்துயரின் நடுவிலும் தனிமையின் ஆவேசம் கிளர்த்தக்கூடிய நுண்ணுணர்வுகளை ரவிக்குமாரின் கவிதைகளில் இனம் காண முடிவது நிறைவு தருகிறது.

காதலா, காதலில் ஆழ்வதா அல்லது காதலை வாழ்வதா என்கிற கேள்விகளுக்கு அப்பால் சொற்களால் உருப்பெறாத கேவல்கள் வலியின் துணையுடன் கவிதைகளாக மின்னித் தெறிப்பதை ரவிக்குமார் காட்டுகிறார். எல்லாக் கவிகளும் எல்லா நேரமும் ஒரே பாடுபொருளைப் பற்றி எழுதுவதானால் அது காதலாகத்தான் இருக்க முடியும். அதற்கான காரணம் காதலின் நொய்ம்மையா அல்லது கவிகளின் நொய்ம்மையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அத்தனை கவிகளாலும் பாடல் பெற்ற பொருளாக இருந்தாலும் அதன் புதுமையும் உயிர்ப்பும் பெருகும் சிறகடிப்பும் காதலில் தங்கியிருப்பதல்ல, ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தில் தங்கியிருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.
ரவிக்குமாரின் கவிதைகளில் பிறக்கின்ற நிழல் பறவைகளில் பறந்து செல்லும் குழந்தைகளும், தனிமையின் வெஞ்சினத்தில் நாம் எளிமையாகக் கடந்து விட முடிகிற மொழியின் எல்லைகளும், தம் குரலால் காற்றையும் மழையையும் தீண்டும் மரங்களும் துடிக்கும் நாவில் கிள்ளி வைக்கப்பட்ட இதயம் எழுதிய கவிதைகளாக மலர்கின்றன. தகிக்கும் வெய்யிலில் கானல் தொடரப் போய்க் கொண்டிருப்பது கவிதையா, கவிஞனா அல்லது நமது காலமா என்ற மந்திரக் கேள்வி புகைமூட்டத்துள் கலங்கலாகத் தெரிகிறது. அந்தக் கேள்விக்கு மறுமொழி நமக்கு ஒருபோதுமே கிடைக்கப் போவதில்லை.
( மழை மரம் தொகுப்புக்கு எழுதப்பட்டு வெளியிடப்படாமல் போன முன்னுரை)

       மழைமரம்
-       ரவிக்குமார் கவிதைகள்
-       க்ரியா வெளியீடு
-       விலை ரூ 65/-

No comments: